Showing posts with label விநாயகர் புராணம். Show all posts
Showing posts with label விநாயகர் புராணம். Show all posts

கரும்பு தின்ற பிள்ளையார்

 
சாளை இப்படி அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கையில் முனியன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். அவனருகே மலர்களால் நிறைந்த விநாயக விக்கிரகம் இருந்தது. எங்கும் கரும்புச் சாறு சிந்தி நிலம் சதுப்பாக ஆகிவிட்டது.

காவலாளிகளைக் கேட்டபோது "நேற்று நள்ளிரவின்போது ஒரு யானை பிளிறிடும் குரல் கேட்டு அரைத் தூக்கத்தில் இருந்த நாங்கள் கண் விழித்துப் பார்த்தோம். முனி யன் தூங்கிக் கொண்டிருந்தான். ஒரு வெள்ளை யானை கரும்பை எல்லாம் எடுத்து ஒடித்து மென்று தின்று சக்கையை உமிழ்ந்துகொண்டே இருந்தது. அதுகண்டு பயந்து ஓடி விட்டோம்," என்று கூறினார்கள்.

பண்ணையாருக்கு மனம் ஒரேயடியாக அப்போது மாறிவிட்டது. முனியனிடம் உள்ள தெய்வீக சக்தியை உணர்ந்தார்.
தாம் அவனைத் துன்புறுத்தியது எவ்வளவு தவறு என்பதும் அவருக்குத் தெரிந்தது. கண்ணீர் மல்க தாம் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதுபோல அப்படியே அடியற்ற மரம் போல முனியனின் கால்களில் விழுந்து அவர் வணங்கினார்.

அப்போதுதான் முனியன் கண் விழித்துப் பார்த்தான். தன் எஜமானன் தன் காலில் விழுந்து வணங்குவது கண்டு திடுக்கிட்டான்.

பண்ணையார் அருகே இருந்த விநாயக விக்கிரகத்தையும் வணங்கி "சுவாமி! இப்போது எங்களுக்கு அருள் புரிந்தீர்கள். நாங்கள் புனிதர்களானோம்," என்று சொல்லி நடந்ததை எல்லாம் முனியனிடம் கூறினார். இதற்குள் மக்கள் கூட்டம் அங்கு சேர்ந்து விட்டது.
 முனியனும் தன் மனைவி மக் களுடன் தன்னருகே இருந்த விநாயக விக்கிரகத்தை வணங்கி "சிறுவயது முதல் உங்களை நான் மனதிலேயே வழிபட்டு வருகிறேன். ஆடம்பரமாக மலர் கொண்டு அலங்கரித்துப் பூசிக்கவில்லை. ஆனால் எனக்காக இவ்வளவு கரும்பையும் தின்று சிரமப்பட்டீர்களா? வெள்ளை யானை உருவில் தாங்கள் எல்லோருக்கும் தரிசனம் தந்தீர்கள். ஆனால் நான் மட்டும் உங்களைக் காணாத மடை யனாகிவிட்டேன். எனக்குக் காட்சி தர மாட்டீர்களா?" எனக் கதறி வேண்டினான்.

அப்போது விநாயகர் தம் துதிக்கையில் ஒரு கரும்புத் துண்டைப் பற்றியவாறே முனியனின் முன் தோன்றினார். முனியனின் மகன் வைத்திருந்த கரும்புத் துண்டுதான் அது. விநாயகர் தம் துதிக்கையால் முனியனைத் தன்னருகே இழுத்து நிறுத்தி அவன் தலை மீது துதிக்கையை வைத்து ஆசீர்வதித்தார்.

அவர் முனியனிடம் "முனியா! ஜாதி, இனம் என்றெல்லாம் நான் வகுத்து வைக்கவில்லை. இவற்றை மனிதர்களே உண்டாக்கினார்கள். உயர்வு, தாழ்வு என்றெல்லாம் என் சன்னதியில் கிடையாது. எனக்கு எல்லோரும் சமமே. அதனால் தான் இப்போது உனக்குக் காட்சி அளிக்கிறேன்," என்று கூறினார்.

முனியனோடு அங்கு கூடியிருந்த எல்லோருமே விநாயகரை தரிசித்தார்கள். அங்கே கரும்பு ஏந்திய விநாயகரைக் கொண்ட ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது.

பாவனமிசிரர் இவ்வாறு பல சிற்பங்களைப் பற்றிய கதைகளைக் கூறினார். தலைவாசலில் செதுக்கப்பட்ட சிலையை தினமும் வெகு நேரம் வரை நின்று பார்த்து வந்த ஒரு வாலிபன் பாவனமிசிரரின் கால்களில் விழுந்து வணங்கி "ஐயனே! இக்கோவிலின் தலைவாசலில் உள்ள சிற்பத்தை யார் செதுக்கினார்? அவரைப் பற்றிக் கூறுங்கள்!" என வேண்டினான்.

பாவனமிசிரரும் பரிவுடன் அவனைப் பார்த்து "அப்பனே! உன்னைப் பார்த்தால் ஒரு சிற்பி போல தெரிகிறது. தலைவாசலில் உள்ள சிலை எனக்கும் மிகவும் பிடித்தமானதே. அந்த சிலையை செதுக்கிய சிற்பி யைப் பற்றி கூறுகிறேன், கேள்!" எனக் கூறி கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.
 "வாதாபி நகரத்திற்கு சாது சன்னியாசிகளின் கூட்டம் வந்து போய்க் கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தோடு வந்த பதினான்கு வயது வாலிபன் ஒருவன் இந்த வாதாபி கணபதியின் ஆலயத்திலேயே தங்கிவிட்டான். அவன் பெயர் என்னவோ, ஊர் எதுவோ அவனுக்கே தெரியாது. அவனது நெற்றியில் பெரிய காயம் இருந்ததால் பலத்த அடிபட்டு மூளையே கலங்கிவிட்டதெனப் பலர் நினைத்துக் கொண்டார்கள். அவன் ஊமை போலப் பேசாமல் இருந்தான். அவன் கடவுளின் திருஉருவங்களை வரைந்துகொண்டே இருப்பான். அப்போதெல்லாம் அவன் முகம் மலர்ச்சியுடன் காணப்படும். அவன் வரையும் உருவங்கள் எல்லாம் விநாயகருடையதே. அவனது இந்த விசித்திரப் போக்கால் யாவரும் அவனை விசித்திரன் என அழைத்து வந்தனர்.

அப்போது கஜானன பண்டிதர் படுகிழவராகிவிட்டார். தினமும் மாலையில் தன் வீட்டில் சிறுவர் சிறுமியரைக் கூட்டி விநாயகரைப் பற்றிய கதைகள் கூறி வந்தார்.

விசித்திரனும் அவரது வீட்டு வாசலில் உட்கார்ந்துகொண்டு அவர் கூறும் கதைகளை கவனமாகக் கேட்கலானான். முதல் நாள் கேட்ட கதையின் ஆதாரத்தில் மறுநாள் அவன் ஏதாவது ஒரு சுவரில் சித்திரம் வரைந்து வந்தான்.
கஜானன பண்டிதருக்கு விசித்திரன் மீது அலாதியான பிரியம். வீட்டிற்குள் வந்து கதையைக் கேட்குமாறு அவர் கூறினாலும் அவன் வாசலில் அமர்ந்தே தான் கேட்டு வந்தான். அவன் வரையும் விநாயகரின் உருவங்களைக் கண்டு வியந்து மகிழ்ந்து பல புதிய கதைகளை அவனுக்குச் சொல்லி வந்தார்.

பகலெல்லாம் விசித்திரன் இவ்வாறு படங்களை வரைந்து இரவில் ஊரின் ஒதுக்குப்புறமாக உள்ள இடத்தில் தூங்குவான்.

அவனது நண்பர்கள் குயவர்களும் தோல் தைப்பவர்களும் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களும் ஆவர். இரவில் எவ்வளவு நேரம் கழித்து அவன் வந்தாலும் அவனுக்காகத் தாம் சாப்பிடும் உணவில் கொஞ்சம் வைத்தே இருப்பார்கள். இப்படியாக விசித்திரன் வளர்ந்து வரலானான். தான் இன்னாரென என விசித்திரன் அறியாதபோதிலும் அவனுக்குத் தாய் தந்தையரும், அண்ணன் மார்களும் இருந்தனர்.
 வாதாபி நகரிலிருந்து கொஞ்ச தூரத்திலுள்ள ஒரு ஊரில் ஒரு நடுத்தர குடும்பத்தில் விசித்திரன் பிறந்தான். தன் தந்தையைப் போல அவன் சித்திரங்கள் வரையலானான். அவன் புத்தி வேறு எதிலும் செல்லவில்லை.

அவனது அண்ணன்களும், அண்ணிகளும் அவனை வேலையில்லாதவன் என்று கூறி வீட்டைவிட்டே துரத்திவிட்டார்கள். அவனுக்கு விநாயகர் என்றால் மிகவும் பிடிக்கும். அவன் வாதாபி நகருக்குக் கிளம்பிச் சென்றான். வழியில் பசியாலும் தாகத்தாலும் வாடி ஒரு கருங்கல் பாறை மீது நினைவிழந்து அவன் விழுந்துவிட்டான்.

அடிபட்டு காயமுற்ற அவனை சன்னியாசிகளின் கூட்டம் ஒன்று கண்டது. அவர்கள் அவன் மீது இரக்கம் கொண்டனர். யாரோ அனாதை கவனிப்பாரற்றுக் கிடக்கிறான் என எண்ணி அவனது மயக்கத்தைப் போக்கித் தம்மோடு அழைத்துக் கொண்டு வந்து வாதாபி நகரில் சேர்த்தனர்.

அந்த வருட விநாயக சதுர்த்தியின் போது ஒரு கண்காட்சி நடத்தப்பட்டது. அழகிய விநாயக உருவங்களை அக்கண்காட்சியில் வைக்கலாம் என அறிவிக்கப்பட்டதால் வண்ண வண்ண விநாயகர் பொம்மைகள் பல வந்தன.
அவற்றில் மிக அழகானதைக் கண்காட்சி நடத்துவோர் ஆயிரம் பவுன்கள் கொடுத்து வாங்கிக் கொள்வதாகவும் அறிவித்திருந்தார்கள். அந்தப் பொம்மையைச் செய்தவனுக்கு நவரத்தினங்கள் பதித்த தங்கத்தோடு போடுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

விசித்திரனும் தன் குயவ நண்பன் ஒருவனிடம் கூறி விநாயகர் பொம்மையைத் தன் கற்பனைப்படி செய்ய வைத்தான் அதற்கு சுண்ணாம்பும், மையும், மஞ்சளும், பச்சிலைச் சாறும் பூசி பலவண்ணங்களில் தோன்றச் செய்தான்.

அவன் அந்த பொம்மையைக் கண்காட்சியில் வைக்கச் சென்ற போது அதனை நடத்துபவர்கள் அனுமதி கொடுக்கவில்லை.
அவன் தனக்குப் பரிசு எதுவும் வேண்டாம் என்றும் தன் பொம்மையை மற்றவர்கள் பார்த்தால் போதும் எனக் கூறி அவர்களிடம் கெஞ்சினான். அப்போது அவர்கள் "ஊர், பேர் தெரியாத நீ தாழ்த்தப்பட்டோரின் மத்தியில் வாழ்ந்து வருகிறாய். இப் படிப்பட்டவனின் பொம்மையை மற்ற உயர்குலத்தவர் செய்த பொம்மைகளோடு சேர்த்து வைப்பதா? முடியாது. அந்தத் தகுதி உன் பொம்மைக்கு இல்லை!" என்று கூறி விட்டார்கள்.

அதுகேட்டு விசித்திரன் மனம் ஒடிந்து போனான். அப்போது அவனது குயவ நண்பன் அவனிடம், "கவலைப்படாதே. இங்கே இல்லாவிட்டால் நமது பொம்மையை வேறு ஏதாவது ஓர் இடத்தில் வைத்து மக்கள் பார்க்கும்படி செய்தால் போயிற்று," எனக் கூறினான்.

பிறகு கண்காட்சி நடக்கும் இடத்திலிருந்து சற்று தூரத்தில் உள்ள ஒரு வாழைமரத்தடியில் வைத்து அவர்கள் இருவரும் அதன் பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டார்கள்.

கண்காட்சியில் பொம்மைகளைப் பார்த்து வந்தவர்கள் அவற்றிற்கு தீட்டப்பட்ட வண்ணத்தின் தரம் விலை முதலியவற்றை விசாரிக்கலானார்கள். அவற்றைச் செய்தவர்கள் பெயர் பெற்ற கலைஞர்களா எனக் கேட்டார்கள்.

ஆனால் சிறுவர்களோ விசித்திரன் செய்து வைத்த விநாயக பொம்மையைச் சுற்றிக் கூட்டமாக நின்றனர். அப்போது ஆகாயத்தில் பளிச்சென மின்னியது. அதிலிருந்து இரு அழகிய பெண்கள் இறங்கிக் கண்காட்சி நடக்கும் இடத்திற்கு வந்தார்கள். அவர்கள் அணிந்திருந்த நகைகள் கண்களைப் பறித்தன.

மக்கள் அவர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். அப்போது அந்த இருவரில் பெரியவள், "எங்கள் ஊர் கலாநகரம் என்பது. எங்களுக்குப் பிடித்தமான விநாயகர் பொம்மையை பத்தாயிரம் பவுன்கள் கொடுத்து வாங்கப் போகிறோம். அதற்காகவே ஊர் ஊராகச் சுற்றிப் பார்த்து வருகிறோம்," எனக் கூறி கால் சலங்கைகள் ‘கலகல’வென ஒலிக்க நடந்தாள்.

உடனே கண்காட்சியிலிருந்த கலைஞர்கள் அந்த பெண்கள் தம் பொம்மைகளைக் காண வருவார்களென எதிர்பார்த்து தம் பொம்மைகளின் பக்கம் போய் நின்றார்கள்.

அப்போது இளையவள் "என் தமக்கை பிரசன்னவதனி நன்கு பாடக் கூடியவள். ரசித்து சாப்பிடுவாள். நன்கு சாப்பிட்ட பிறகே பாடுவாள்," எனக் கூறிப் புன்னகை புரிந்தாள்.

மூத்தவளும் "என் தங்கை மோகனா நன்கு நாட்டியம் ஆடுவாள். அவளைப் போல வேறு யாராலும் நாட்டியம் ஆட முடியாது," என்றாள்.

அப்போது மோகனா, "எங்களைப் பாட வைக்கவும் ஆட வைக்கவும் இந்திரனாலும் குபேரனாலும் கூட முடியாது. ஆனால் எங்களுக்குப் பிடித்தமான விநாயக உருவம் மட்டும் கிடைத்துவிட்டால் அதன் முன்பாக நாங்கள் ஆடிப் பாடுவோம்," என்றாள். அதைக் கேட்ட மக்கள் யாவரும் அதிசயத்தோடு அந்த இரு பெண்களையும் பார்த்தார்கள். பிறகு அவர்கள் விநாயகர் பொம்மைகளைக் காண வழிவிட்டு நின்றார்கள்.            (தொடரும்)

விநாயகர் -22


ஔவையார் ஒருநாள் பழங்கள் நிறைந்த மரங்கள் கொண்ட வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது அழகிய சிறுவன் ஒருவன் ஒரு மரத்தின் மீது அமர்ந்து பாடுவது அவருக்குக் கேட்டது. அம்மரத்தில் பழுத்த பழங்கள் ஏராளமாகத் தொங்கிக் கொண்டிருந்தன.

அவர் அச்சிறுவனிடம் "சிறுவனே! ஒரு பழம் பறித்து எனக்குப் போடுகிறாயா?" என்று கேட்டார். சிறு வனும் சிரித்தவாறே "பாட்டி! எந்த மாதிரிப் பழம் வேண்டும்? உன் முதுமையைப் போக்கும் பழமா? மரணத்தை வெல்லும் பழமா? செல்வத்தைக் கொடுக்கும் பழமா? ஞானப் பழமா?" என்று கேட்டான்.

அப்போது ஔவையாருக்கு அந்தச் சிறுவன் முருகக் கடவுளே என்று தெரிந்துவிட்டது. அவர் அவனைக் கைகூப்பி வணங்கி "முருகா! ஞான பண்டிதா! எனக்கு ஞானப்பழத்தையே அளி!" என வேண்டினார்.

சிறுவன் மறுவிநாடியே குமரக் கடவுளாக மாறினான். மயில் வாகனத்தோடு காட்சியளித்த கந்தனை ஔவை வணங்க முருகபிரானும் தம் கையால் அவரது தலையைத் தொட்டார். அப்போது ஔவைக்கு ஓங்காரப் பிரணவத்தின் தத்துவமும் பிரம்மஞானமும் முக்திக்கான மார்க்கமும் தெளிவாகத் தெரிந்தது.

முருகபிரான் தம் ஆசிகளை அவருக்கு அளித்துவிட்டு உடனேயே மாயமானார். எனவே தம் அறிவுரைகளை ஆத்திச்சூடி, மூதுரை போன்ற செய்யுள்களாகக் கூறினார் ஒளவையார். அவர் கூறிய எளிய சொற்கள் எல்லோருக்கும் புரிந்தன. அவை என்றென்றும் நிலைத்தும் விட்டன.
 ஔவையார் ஊர்ஊராகப் சென்றார். ஒருநாள் இருட்டும் வேளைக்கு ஒரு காட்டு வழியே சென்று கொண்டிருந்தார். வானத்தில் கருமேகங்கள் சூழ, மின்னல் அவ்வப்போது வெட்டிக் கொண்டிருந்தது. மழை வேறு பெய்ய ஆரம்பித்தது. ஔவையார் கால் இடறிக் கீழே விழுந்துவிட்டார். அவரது ஊன்றுகோல் அவர் விழுந்த இடத்திலிருந்து சற்று தூரத்தில் போய் விழுந்தது.

அப்போது யாரோ நடந்து வரும் காலடி சத்தம் அவருக்குக் கேட்டது. அவர் மின்னல் வெளிச்சம் ஆன போது தலை நிமிர்ந்து பார்த்தார். அழகாய், பருமனாய் தொந்தியும் தொப்பையுமாக உள்ள ஒரு சிறுவனை அவர் கண்டார். அவன் ஔவையாரைக் கை பிடித்துத் தூக்கி நிறுத்தி அவரது ஊன்றுகோலையும் எடுத்துக் கொடுத்தான்.

ஔவையார் ஊன்றுகோலின் உதவியால் நின்று அந்தச் சிறுவனைப் பலமாகப் பற்றிக் கொண்டார். அவனும் "பாட்டி! நீ எங்கே போகிறாய்?" என்றுகேட்டான். ஔவையும் "எங்கே என்று சொல்வது? இந்த உலகில் எல்லா ஊரும் என் ஊர் தான். ஆனால் நான் அடைய விரும்பும் ஊர் இந்த உலகில் இல்லை. அதற்கு என்ன வழி என்றுதான் தேடிக் கொண்டிருக்கிறேன். ஆமாம், நீ யார்? ஜன நடமாட்டம் இல்லாத இந்தக் காட்டில் இருட்டில் வந்திருக்கிறாயே!" என்று கேட்டார்.

அவனும் "ஔவையே! நான் உன் சிறுவயதிலிருந்து உன் நண்பனாக இருந்து வருகிறேன். காடு, இருட்டு என்றெல்லாம் கவலைப்படாதவன். நீ ஏதோ ஊருக்குப் போய்ச் சேர வேண்டும் என்றாயே, அதன் பெயரைச் சொல்லவில்லையே!" என்று கேட்டான். ஔவையாரும் "உன்னிடம் சொன்னால் என்னை அங்கே அழைத்துச் செல்லவா போகிறாய்? அதுதான் சிவனாரின் இருப்பிடமாகிய கைலாசம்," என்றார்.

அதுகேட்டு சிறுவனும் "பூ! இதுதானா? உன் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு அங்கே போகி றேன்," என்று கூறி ஔவையாரின் கையைப் பிடித்துக் கொண்டு நடக்கலானான்.

 ஔவையார் இரண்டடி எடுத்து வைத்ததுமே ‘பளிச்’சென மின்னல் மின்னியது. அப்போது துதிக்கையால் விநாயகர் தன்னைப் பிடித்து நடத்திக் கொண்டு போவதை அவர் கண்டார். உடனே அவர் "விநாயகா! எனக்கு சிறுவயது முதல் நீதான் வழிகாட்டி!" எனக் கூறித் துதித்தார். விநாயகரோ அவரைப் படிப்படியாக ஏற வைத்து முடிவில் "ஔவையே! இதோ கைலாசத்தை அடைந்து விட்டாய்!" என்றார். ஔவையாரும் கண்ணைத் திறந்து பார்த்தார்.

ஒரே ஒளிமயமான இடம் அது. அதன் கீழே வெகுதூரத்தில் பல நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன. பல சூரியர்களும், வால் நட்சத்திரங்களும், வாயு உருவில் சுற்றி வந்து எரியும் ஜோதிகளும் தெரிந்தன.

விநாயகர் ஔவையின் கைகளை விட்டுவிட்டு "ஔவையே! நீ கைலாசம் வந்துவிட்டாய். இங்கு காலம் என்பதும் அழிவு என்பதும் இல்லை. இது சிருஷ்டிக்கு அப்பாற்பட்ட சிவசன்னிதானம். அகிலாண்டகோடி நாயகரான சிவனாரை நீ எப்போதும் தரிசித்துக் கொண்டே இருக்கலாம்," எனக் கூறி மறைந்தார்.

ஔவையார் லிங்க வடிவில் எங்கும் பரவியுள்ள ஜோதி வடிவைக் கண்டார். அதில் சிவகணங்களும், நந்திதேவரும், பார்வதி தேவியும், குமரக் கடவுளும், விநாயகரும், சிவனாரும் இருப்பதை அவர் கண்டு களித்தார். சிவனாரும் தன் அபயக் கரம் அளித்து ஔவையாரைத் தன் ஜோதியில் சேர்த்துக் கொண்டார்.

மண்டபத்தில் கரும்பை பற்றிய விநாயகரை ஒரு குடியானவன் கண்டு கொண்டிருக்கும் சிற்பத்தைப் பார்த்து பாவனமிசிரர் அதை விவரிக்கும் கதையைக் கூறலானார்.

மிகப்பெரிய பண்ணையார் ஒருவர் விநாயக பக்தர். அவர் விநாயகருக்குப் பூஜை, திருவிழா எனப் பிரமாதமாகக் கொண்டாடி வந்தார். அவருக்குப் பல நெல் வயல்களும் கரும்புத் தோட்டங்களும் இருந்தன. இந்த வயல்களின் விளைச்சல்களை அமோகமாக்கிக் கொண்டிருந்தவன் அவரிடம் வேலை செய்த முனியன் என்பவன். அவன் பண்ணையாரைப் போல ஆர்ப்பாட்டத்துடன் விநாய கரை வழிபடாவிட்டாலும் மனதிலேயே தியானித்து வந்தான். வருடாவருடம் பயிர் செய்யும்போது விநாயகரைத் தொழுத பிறகே வயலில் வேலை செய்ய இறங்குவான்.
 முனியனுக்கு மனைவியும், மகன் ஒருவனும் இருந்தனர். அவர்கள் இருவரும் வயல்களில் முனியனுக்கு உதவியாக வேலை செய்து வந்தார்கள். ஆனால் அவர்களுக்குப் பண்ணையார் குறைந்த கூலியே கொடுத்து வந்தார்.

பண்ணையாரின் மனைவியோ தாராளமனம் படைத்தவள். அவள் தன் கணவரிடம் முனியனுக்கும் அவன் குடும்பத்தவருக்கும் கொடுக்கும் கூலி மிகக் குறைவு என்றும் அது அநியாயம் என்றும் கூறிப் பார்த்தாள்.
அவரோ, "இப்படி பணத்தை அள்ளிக் கொடுத்துவிட்டால் விநாயகருக்குப் பூஜையும் விழாவும் எப்படி செய்ய முடியும்? இந்த மாதிரி மீதம் பிடித்துத்தான் இந்தப் பூஜை எல்லாம் செய்ய முடியும்," என்றார்.

அதற்கு அவர் மனைவி "இப்படி ஏழைகளின் வயிற்றில் அடித்த காசில் பூஜை ஏன் செய்ய வேண்டும்?" எனக் கூறி "விநாயகா! நீதான் இவருக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும்," என்று வேண்டிக் கொள்வாள்.

அந்த வருடம் கரும்பு நன்கு விளைந்தது. முனியனும் அவனது குடும்பத்தினரும் கரும்பை வெட்டி சாளையில் கொண்டுபோய் போட்டனர். முனியனின் மகன் ஆசையாக ஒரு கரும்பை எடுத்துக் கொண்டு தன் வீட்டிற்குக் கிளம்பினான்.

இந்தச் சிறுவனும் விநாயக பக்தனே. பண்ணையார் நடத்தும் பூஜைகளுக்கும் விழாக்களுக்கும் பக்தி சிரத்தையுடன் மலர்களைச் சேகரித்துக் கொண்டு வருவான். அவன் ஒரு கரும்போடு செல்வதைப் பண்ணையார் கவனித்துவிட்டார். அவனைக் கூப்பிட்டு அவர் "இதென்னடா கொள்ளை? இப்படித்தான் தினமும் கொண்டு போகிறாயா?" என்று அதட்டிக் கேட்டார்.

அச்சிறுவனும் "இல்லை. நாளை விநாயக சதுர்த்தி. எங்கள் வீட்டிலும் விநாயகரை வைத்துப் பூசிக்கலாம் என்று இதை எடுத்துச் செல்கிறேன்," என்று பணிவுடன் சொன்னான்.

அதுகேட்டு அவர் "டேய், என்ன திமிர் உனக்கு? உயர் குலத்தவராக நாங்கள் பூஜை செய்வதுபோல நீயும் பூஜை செய்ய ஆசைப்படுகிறாயா?" என்று கூறி அவனைச் சாட்டையால் சுளீர்சுளீரெனப் பல அடிகள் அடித்து விட்டார். அவரது செயலை யாரும் தடுக்க முன்வரவில்லை.

ஏனெனில் அவரது பணபலம் மற்ற வேலைக்காரர்களை ஊமையாக்கிவிட்டது. முனியனோ தன் மகன் அடி தாங்க முடியாமல் துடிப்பது கண்டு "ஐயா! கடவுளைத் தொழ குலம், மதம் என்றெல்லாம் வேறுபாடு இல்லையே. எல்லோருக்கும் கடவுளிடம் பக்தி கொண்டு பூஜை செய்ய உரிமை உண்டல்லவா?" என்று பண்ணையாரிடம் பணிவோடு கூறினான்.

அதைக் கேட்ட பண்ணையார் எரிந்து விழுந்து "உன் லட்சணத்திற்கு பக்தி ஒரு கேடா? நீ பெரிய பக்தனோ? என்னைவிட விநாயக பக்தியில் உயர்ந்தவனோ?" என்று சவால் விட்டார். முனியனும் "உங்களை விட அதிக பக்தி உள்ளவன் என்பது எல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் நானும் என் குடும்பத்தவரும் விநாயக பக்தி பூண்டவர்கள்," என்றான்.

 அப்போது பண்ணையார் ஏளனமாக "அடே பக்தனே! இன்று இரவிற்குள் இந்தக் கரும்புகள்  எல்லாவற்றையும் சாப்பிட்டு அதன் சக்கையைத் துப்பிக் குவித்துவிட வேண்டும். அப்போதுதான் உன் பக்தி உண்மையானது என நான் நம்புவேன். இப்படிச் செய்யாவிட்டால் உனக்கு நூறு கசையடி கொடுப்பேன்," எனக் கூறிவிட்டு அவனை அந்த சாளையிலேயே இருக்கச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
ஏனெனில் அவரது பணபலம் மற்ற வேலைக்காரர்களை ஊமையாக்கிவிட்டது. முனியனோ தன் மகன் அடி தாங்க முடியாமல் துடிப்பது கண்டு "ஐயா! கடவுளைத் தொழ குலம், மதம் என்றெல்லாம் வேறுபாடு இல்லையே. எல்லோருக்கும் கடவுளிடம் பக்தி கொண்டு பூஜை செய்ய உரிமை உண்டல்லவா?" என்று பண்ணையாரிடம் பணிவோடு கூறினான்.

அதைக் கேட்ட பண்ணையார் எரிந்து விழுந்து "உன் லட்சணத்திற்கு பக்தி ஒரு கேடா? நீ பெரிய பக்தனோ? என்னைவிட விநாயக பக்தியில் உயர்ந்தவனோ?" என்று சவால் விட்டார். முனியனும் "உங்களை விட அதிக பக்தி உள்ளவன் என்பது எல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் நானும் என் குடும்பத்தவரும் விநாயக பக்தி பூண்டவர்கள்," என்றான்.
முனியனுக்கும் அவ்வளவு கரும்பையும் எப்படி ஒரே இரவில் சாப்பிடுவது எனத் தெரியவில்லை. அவன் விநாயகரை தியானம் செய்தவாறே அந்த சாளையிலேயே படுத்துத் தூங்கிவிட்டான்.

விடிந்ததும் பண்ணையார் முனியன் இருந்த சாளைக்கு வந்தார். அங்கு அவர் ஓரிடத்தில் கரும்புச் சக்கை மலையாகக் குவிந்து கிடப்பதையும் ஒரு கரும்புகூட மீதம் இல்லாமல் இருப்பதையும் கண்டு திகைத்துப் போய் ஆவென கத்தினார்.

அப்போது அவர் தன்னோடு வந்த தன் மனைவியிடம் "ஐயோ! இந்த வருடக் கரும்புப் பயிர் எல்லாம் இப்படிப் பாழாகிவிட்டதே! ஒரு கரும்புத் துண்டு கூட இல்லையே. இவ்வளவையும் சாப்பிட்ட இந்த முனியன் மனிதன்தானா அல்லது பூதமா?" என்று ஆத்திரத்தோடு கேட்டார்.

அவரது மனைவியோ அமைதியாக "நேற்றிரவு நான் நம் வீட்டு ஜன்னல் வழியாகப் பார்த்தேன். இங்கே பெரிய யானை ஒன்று வந்து புகுந்து இந்தக் கரும்பை எல்லாம் சாப்பிட்டுச் சக்கையைத் துப்பிக் குவித்துக் கொண்டிருந்தது. முனியன் விநாயக பக்தன். அவர் அவனைக் கைவிடவில்லை. எல்லாம் சாப்பிட்டு முடித்தபின் அது மாயமாய் மறைந்து போயிற்று. அப்படி வந்தவர் விநாயகராகத்தான் இருக்க வேண்டும்," என்றாள்.

பண்ணையாரோ, "இதென்ன! யானையாவது, வந்து எல்லாம் சாப்பிடுவதாவது! நம்ப முடியவில் லையே. முனியன் அவ்வளவு பெரிய பக்தனா?" என்று கூறிக் கொண்டிருக்கும்போதே அவரது சில வேலையாட்கள் ஓடி வந்து "ஐயா! நேற்றிரவு பந்தல் போட்டு இன்று பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த விநாயக விக்கிரகம் காணவில்லை," என்றனர்.
பிறகு அவர்கள் சாளையைப் பார்த்தவாறே "இதோ! இங்கே இருக்கிறதே!" என ஆச்சரியத்துடன் கூவினார்கள்.                                                                                                                                                                         



 

 

விநாயகர் 21

 
ஹோமத் தீயிலிருந்து வெளிவந்த பயங்கர உருவம் மறைந்த உடனே காலன் ராட்சஸ உருவை எடுத்து பாசக் கயிறை விட்டெறிந்தான். அது கிர்கிர்ரென்று சுழன்று மாபெரும் பிரளயமே ஏற்பட்டது போன்ற நிலையை உருவாக்கியது.

அபிநந்தன் அதனைப் பிடித்து அறுத்துவிட முயன்று தோல்வியுற் றான். கால பாசம் மேலும் தீவிரமாகி ஜீவராசிகளை நாசமாக்கவே, வசிஷ்டர் முதலிய ஏழு முனிவர்களும் பல ரிஷிகளும் ஒன்றுகூடி விநாயகரை வேண்டினார்கள்.

விநாயகரும் சுவஸ்திகா பீடத்தில் அமர்ந்து அவர்களின் முன் தோன்றினார். தன் கையிலிருந்த பாசத்தை விடவே, அது காலனைப் பிடித்து இழுத்துக் கொண்டுவந்து அவர்முன் போட்டது. காலனோ தோல்வி அடைந்ததால் மேலும் ஆத்திரப்பட்டு பயங்கர உருவில் தன் கதையை எடுத்து வீசினான். விநாயகர் தம் அங்குசத்தை எடுத்து எறியவே அது காலனின் கதையைத் தகர்த்து அவனது உடலில் பாய்ந்தது. அதனால் அவன் துடிதுடித்து அங்கும் இங்கும் ஓடி முடிவில் விநாயகரின் கால்களில் வீழ்ந்தான். அவர் அவனை தம் இரு கால்களால் பலமாக அமுக்கினார்.

விநாயகரும், "காலா! பிறர் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் தானே செய்துவிட முடியும் என எண்ணிச் செயல்படுவது என்றுமே ஆபத்தானது. உன் கடமையை நீ சரிவரச் செய்து வா. அது போதும்," என்றார்.
காலனும் தன் இரு காதுகளையும் பிடித்துக் கொண்டு மூன்று தோப்புக் கரணங்கள் போட்டு "எனக்கு புத்தி வந்தது பிள்ளையாரே! அந்த இந்திரனின் பேச்சைக் கேட்டு மதி மயங்கிப் போனேன். இனி உங்களை நம்பி இருப்பவர்களிடம் என் சக்தியைக் காட்ட மாட்டேன்," எனக் கூறி விடைபெற்றுக் கொண்டு சென்றான்.
 அதுமுதல் யாரும் எந்தவொரு நல்ல வேலையை ஆரம்பிக்கும் போது கோலம் போடும் இடத்தில் சுவஸ்திகா சின்னத்தை பொறிக்க லானார்கள். விநாயகரை மஞ்சளில் உருவாக்கி மங்களகரமாய் எல்லாம் முடிய வேண்டும் எனப் பிரார்த்தனை செய்யலானார்கள்.

"காலனையே தன் காலடியில விழச் செய்து விநாயகர் தம் கால் களின் கீழே சின்னமாக இருக்குமாறு செய்தார். இப்படிப்பட்டவரை நம்பி வழிபட்டு அவரது நல்லாசிகளைப் பெறுபவர்கள் காலத்தையே கூட வென்று வெற்றி பெறுவார்கள்," எனப் பாவனமிசிரர் கூறிக் கதையை முடித்தார்.

ஒருநாள் ஒரு சிறுமி பாவனமிசிர ரின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அவரை ஓர் ஓவியத்தின் முன் கொண்டுபோய் நிறுத்தினாள். அப்படத்தில் ஓர் அழகான பெண் விநாயகரின் சிலை முன் அமர்ந்து வேண்டிக் கொண்டிருப்பதுபோல வரையப்பட்டிருந்தது. ஆனால் இளமைத் தோற்றத்தில் உள்ள அவளது தலையின் கேசம் மட்டும் வெள்ளைவெளேரென இருந்தது. அதைக் காட்டி அச்சிறுமி "இது மட்டும் இப்படி இருக்க என்ன காரணம்?" என்று கேட்டாள். அதற்கு பாவனமிசிரர் அதற்கான கதையைக் கூறலானார்.

ஒருமுறை ஒரு தம்பதிகள் விநா யகரை வேண்டிக் கொண்டதன் பேரில் அழகான பெண் குழந்தையை மகளாக அடைந்தார்கள். அவர் களுக்குப் பிறந்த அக்குழந்தை பிறக்கும்பொழுதே தன் கண்களை அகல விரித்து பிரசவ அறையில் வைக்கப்பட்டிருந்த விநாயகரின் பதுமையைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தது.

அந்தப் பெண் குழந்தைக்கு சுந்தரி என்று பெயர் வைத்தார்கள். அவளும் வளர்ந்து பெரியவளாகி மிகவும் அழகானவளாய் விவாக வயதை அடைந்துவிட்டாள். அவள் அழகு டன் நல்ல அறிவும் பெற்றிருந்தாள்.
 சுந்தரியின் அழகு பற்றி எல்லா ஊர்களிலும் பேசிக் கொண்டனர். அவளை மணக்க பல கோடீஸ்வரன்களின் புதல்வர்களும், அதிகாரத்தில் உள்ளவர்களும் விரும்பி அவளது தாய், தந்தையருக்கு ஆட்களை அனுப்பினார்கள்.
அந்நாட்டு மன்னனே அவளது அழகைக் கேள்விப்பட்டு அவளைத் தன் பட்டத்து ராணியாக ஆக்கிக் கொள்ள விரும்பினான். அவன் தன் வீரர்கள் புடைசூழக் கிளம்பி சுந்தரியின் ஊருக்கு வந்து கொண்டிருந்தான். இந்தச் செய்தியும் அவ்வூராருக்குத் தெரிந்தது.

சுந்தரி தினமும் தன் ஊரிலுள்ள ஆற்றங்கரைப் பிள்ளையாரை வணங்கி ஆராதித்து வந்தாள். அந் நாட்டு மன்னன் வரும் செய்தி கேட்ட அவள் தன் இஷ்ட தெய்வமான விநாயகர் முன் அமர்ந்து வணங்கி "விநாயகா! குழந்தைப் பருவத்தில் இருந்தே நான் உம்மை வணங்கி வழிபட்டு வருகிறேன். சம்சார சாக ரத்தில் வாழ்க்கை நடத்த விரும்ப வில்லை. என்னை ஒரு கிழவியாக ஆக்கிவிடு. நல்ல அறிவு எனக்கு இருக்கட்டும். நான் பிறந்ததற்குப் பிறருக்கு உதவும் நற்பயன் கிட் டட்டும்," என வேண்டினாள்.

மறுநிமிடமே அவளது கருத்து அடர்ந்து வளர்ந்திருந்த கூந்தல் வெள்ளைவெளேரென்று ஆகி வெள்ளி இழைகள்போல மின்னின. மாம்பழக் கதுப்புகள் போல இருந்த கன்னங்கள் வற்றிச் சுருங்கி அதுக்கல் விழுந்தது போலாயின. நேற்றியில் பல சுருக்கங்கள் விழுந்தன.

அப்போது ஆற்றில் குளிக்க வந்தவர்கள் எல்லோரும் சுந்தரி அவ்வாறு மாறிப் போனது கண்டு திகைத்துப் போனார்கள். தன் மகளை அந்தக் கோலத்தில் கண்டு சுந்தரியின் பெற்றோர்கள் "ஐயோ! என்னம்மா இது? திடீரென உன் உருவில் ஏன் இப்படி மாற்றம் ஏற்பட்டது?" என்று கேட்டார்கள்.

அவளும் "கவலைப்படாதீர்கள். இனி நான் இளம்பெண் அல்ல. அழகியும் அல்ல. முதுமை அடைந் தவள். கிழவி. ஆனால் நீங்கள் கொடுத்த பிறப்பைப் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள விநாயகர் அளித்த வரப்பிரசாதம் இது," எனக் கூறி அவர்களை வணங்கினாள்.

அவள் அருகில் இருந்த ஒரு மரக்கிளையை ஒடித்து ஊன்றுகோல் போல வைத்து நிமிர்ந்து எழுந்து நிற்கையில் அந்த நாட்டு மன்னனும் அங்கு வந்து சேர்ந்தான்.

 அவனைப் பார்த்து அவள் "மன்னா! இளம் பெண்களைக் காக்க வேண்டிய பொறுப்பு உன்னுடையதாக இருக்கையில் அவர்களில் ஒருத்தியை மணந்து கொள்வதா? இது என்ன நியாயம்?" எனக் கேட்டாள். வெட்கத்தால் தலைகுனிந்த மன்னன் தலை மீதிருந்த கிரிடத்தையும் இடை வாளையும் கீழே வைத்து கிழவியாக மாறிய சுந்தரியின் கால்களில் விழுந்து வணங்கி "மாபெரும் அறி ஞர் திலகமே! உங்கள் தரிசனத்தால் என் அறியாமையே அகன்றது. இனி நானும் அரசன் என்ற அகந்தையை விட்டு மக்களின் ஊழியனாக பணிபுரிவேன்," என்று கூறினான்.
மூதாட்டி ஊன்றுகோலை ஊன் றியவாறே தன் வழியில் சென்றாள். அறிவுக்கு உறைவிடமாகக் கருதப் படும் ஒரு மடத்தை அடைந்து அதன் தலைவரிடம் அவள் தனக்கு ஞானோ பதேசம் செய்யும்படி வேண்டினாள். அவரோ, "அம்மணி, நீங்களோ பெண் இனம். நீங்கள் உபதேசம் பெற்று என்ன செய்யப் போகிறீர் கள்?" என்று கேட்டார்.

அப்போது மூதாட்டி "நீரும் நேருப்பும் ஆண்களுக்குத்தான் பயன்படுகின்றனவா? பெண்களுக்கும் இல்லையா? அவர்களும் அவற்றைப் பயன்படுத்துவது இல்லையா? குருடன் கையில் விளக்கு இருந்தாலும் அது மற்றவர்களுக்கு வெளிச்சம் அளித்து வழி காட்டும் அல்லவா? இவை எல்லாம் ஆண் பெண் ஆகிய இருபாலருக்கும் சொந்தமே. இதில் ஆண் பெண் என்ற பாகுபாடு எதற்கு?" என்று கேட்டாள். அப்போது அந்த ஞானபீட அதிபதி "ஆ! மாபெரும் மேதையே. இந்த ஆசனத்தை அலங்கரிக்க வேண்டியது தாங்களே. நான் அல்ல," என்று தழுதழுத்த குரலில் கூறி நின்றார்.

மூதாட்டியும் "பீடம், மடம் என்று தனிப்படுத்துவானேன்? மக்களை அணுகி அவர்களருகே இருந்து அறிவுரை கூறுவதே சிறந்தது," என்றாள்.

அந்த ஞான பீடத்தின் அதிபதி மூதாட்டியின் கால்களில் விழுந்து "அம்மணி, நானும் இனி தாங்கள் கடைப்பிடிக்கும் வழியையே பின்பற்றுகிறேன்," எனக் கூறினார்.

ஒருமுறை அந்த மூதாட்டி ஒரு கிணற்றங்கரை அருகே சென்றபோது அங்கு தண்ணீர் எடுக்க வந்த பெண்கள் பேசிக் கொண்டது அவளது காதில் விழுந்தது.
ஒருத்தி மட்டும் "யார் முன்னால் வந்திருந்தாலும் கவலை இல்லை. நான்தான் முதலில் தண்ணீர் இழுத்துக் கொள்வேன். பிறகு தான் மற்றவர்களுக்கு" என்று கூறி ஒவ்வொருவருக்கும் முறை போட்டாள்.

அப்போது சற்று தூரத்தில் நின்ற ஒரு சிறுமி "அம்மா! தாகமாக இருக்கிறது. கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் ஊற்றுங்கள்," என்று கெஞ்சினாள். ஆனால் அந்த பெண்களோ "போ, போ. விலகிப் போ, வராதே! நீங்கள் எல்லாம் இந்த கிணற்றின் பக்கமே வரக் கூடாது," என்று கூறினார்கள். சிறுமியோ வெகுதூரம் நடந்து வந்து களைத்துப் போனதால் மயக்கம் போட்டுக் கீழே விழுந்து விட்டாள்.

 அப்போது மூதாட்டி அச்சிறுமி யின் அருகில் போய் தன் செம்பி லிருந்த நீரை எடுத்து அவள் வாயில் விட்டுக் குடிக்கச் செய்தாள். மீத முள்ள நீரை அந்த மூதாட்டி குடித்தாள். அதைக் கண்டு கிணற்றங் கரையில் இருந்த பெண்கள் "பாட்டி! இதென்ன? அந்தப் பெண் தீண்டத் தகாதவள். அவளைப் போய்த் தொட்டுக் குடிக்கத் தண்ணீர் ஊற்றினாயே!" என்று கூறினார்கள்.
அந்த மூதாட்டியோ, "பெண் களே! உலகில் ஜாதி என்பது ஏது? இப்பெண்ணின் உடலில் ஓடும் ரத்தம் போலத்தான் என் உடலிலும் ஓடுகிறது. உங்கள் உடல்களில் வேறு ஏதாவது உயர்ந்த பாலோ ஓடுகிறதா? அப்படி ஓடினால் உங்களுக்கு நீர் எதற்கு? இது குடிக்கும் நீர். எங்களைப் போன்றவர்களைக் குடிக்க விடுங்கள். உங்கள் உடலில் பால் ஓடுவதானால் அதோடு திருப்தி அடையுங்கள்," என்றாள்.

அதுகேட்டு அந்த பெண்கள் வாயடைத்துப் போனார்கள். மூதாட்டி கூறிய அறிவுரை அவர்களுக்குப் புரிந்தது. அவர்கள் மூதாட்டியைப் பணிவுடன் வணங்கி வழி அனுப்பி வைத்தார்கள்.

ஓர் ஊரில் அந்த மூதாட்டி ஒரு கோயிலில் மிருகங்களைப் பலியிடப் போவதைக் கண்டாள். அந்த பலி அம்மனின் கோபத்தைத் தணிக்கத் தான் என்று வேறு அவர்கள் கூறி னார்கள். அதைக் கேட்ட மூதாட்டி "கடவுள் படைத்த உயிரினங்களைக் கொன்று அவற்றின் மாமிசத்தை உண்டு உங்கள் உடல்களை வளர்ப்பதா? தன் குழந்தைகளையே கொல்வதையா அம்மன் விரும்புகிறாள்? இல்லை. இல்லவே இல்லை," என்றாள்.

அங்கு கூடி இருந்தவர்கள் "ஐயோ! இப்படிப் பேசுவது அம் மனுக்குச் செய்யும் அபசாரம். அம்மனுக்குக் கோபம் வந்தால் எல்லாவற்றையும் சுட்டு எரித்துச் சாம்பலாக்கிவிடுவாள். தெரியுமா?" என்றார்கள்.

அப்போது மூதாட்டி, "ஆ! அம்மனின் கோபத்தைத் தணிக்க இந்த மிருக பலியை லஞ்சம் கொடுப்பது போலக் கொடுக்கிறீர்களா? இப்படி பயப்பட்டா பக்தியைக் காட்டுவது? நீங்கள் நினைப் பதையெல்லாம் அம்மன் விரும்பு வதாக ஏன் சொல்லித் திரிகிறீர்கள்? உண்மையிலேயே அம்மன் மீது நீங்கள் பக்தி கொண்டிருந்தால் உங்கள் மனதில் பயமும் இராது. உங்களுக்கு எந்தத் தீங்கும் நேராது," எனக் கூறி அவர்கள் புரிந்து கொள்ளும்விதமாய் பக்தி மார்க்கத்தை உபதேசித்தாள்.

 

விநாயகர் 20

 
கஜானன பண்டிதரின் வீட்டில் நல்ல கறவை மாடு இருந்தது. நந்தன் என்பவன் அதனை மேயவிட்டு நன்கு கவனித்து வந்தான். அதன் பாலைக் கறந்து பண்டிதருக்குக் கொடுத்து வந்தான். சுவரகேசரி இந்த நந்தனைத் தன் கைக்குள் போட்டுக் கொண்டு அவன் செய்ய வேண்டியதைக் கூறினான்.

கணேச நவராத்திரி பூசைக்காக தன் மகளையும், மாப்பிள்ளையையும், பேரன் கணேசபட்டனையும் அழைத்துவர பண்டிதரின் மனைவி கல்யாணி நகருக்குப் போயிருந்தாள். அவர்கள் வந்து சேர ஏனோ தாமதமாகிக் கொண்டிருந்தது.

கஜானன பண்டிதரின் இனிய கானத்தைக் கேட்டு இன்புற ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வாதாபி நகருக்கு வந்து சேரலாயினர். விழாவின் ஆரம்ப நாள் அது. சதுர்த்தியன்று ஆரம்பமாகும் அவ்விழாவில் முதலில் பாட வேண்டியவர் கஜானன பண்டிதரே. அன்று நந்தன், சுவரகேசரி ஒரு குவளையில் கொடுத்த நீர் கலந்த பாலை பண்டிதரிடம் கொடுத்தான்.

பண்டிதர் பாலில் நீர் கலந்திருப்பது கண்டு "நந்தா! ஒருநாளும் இல்லாமல் இன்று பாலில் தண்ணீர் விட்டு ஏன் கொண்டு வந்திருக்கிறாய்?" என்று கேட்டார்.

நந்தனோ, "கடவுள் சாட்சியாக நான் பாலில் தண்ணீர் விடவில்லை!" என்று கூறி மாய்மாலம் செய்தான். இதுவரை உரக்கப் பேசாத நந்தன் அப்படிக் கத்துவது கேட்டு சில பேர் அங்கு வந்து கூடிவிட்டார்கள்.


 அவர்களில் சுவரகேசரியும் ஒருவன். அவன் சற்று தூரத்தில் நின்று சிரித்த வாறே வேடிக்கை பார்க்கலானான்.

கஜானன பண்டிதரும் "நந்தா! இந்த அற்ப விஷயத்திற்குக் கடவுள் சாட்சியாக என்கிறாயா? அப்படி யானால் தூய மனதோடு சத்தியம் செய், பார்க்கலாம்!" என்றார் கோபத்தோடு.

நந்தனுக்கும் கொஞ்சம் துணிவு ஏற்பட்டது. அவன் எதிர் அறையில் இருந்த விநாயகரின் முன்பக்கம் போய் நின்று நடுநடுங்கும் குரலில் "நான் மட்டும் இந்தப் பாலில் தண்ணீர் கலந்திருந்தால் என் இரண்டு கைகளும் துண்டித்து விழட்டும். அப்படி இல்லாமல் என் மீது குற்றம் சாட்டப்பட்டது பொய்யானால் அந்தக் குரலே மீண்டும் பேச முடியாமல் போய்விடட்டும்," எனக் கூறி சத்தியம் செய்து எரிந்து கொண்டிருந்த விளக்கை அணைத்தான்.

கஜானன பண்டிதர் திடுக்கிட்டார். திடீரென தம் தொண்டை அடைத்துக் கொண்டதை உணர்ந்தார். உண்மை நிலையை அறிந்த சிலர் "ஐயோ! இதென்ன?" என மனவேதனைப் பட்டனர். சுவரகேசரியோ, "பின் என்னவாம்? சத்தியம் செய்வது என்பது விளையாட்டா?" என்றான்.


நந்தன் தன் கைகள் வேறுபட்டு விழாமல் போனது கண்டு மகிழ்ந்து சுவரகேசரியின் அருகே போய் நின்றான். இதே சமயம் பண்டிதரின் பேரன் கணேசபட்டன் ஓடோடி வந்து "தாத்தா! வண்டியிலிருந்து இறங்கி எல்லோருக்கும் முன் நான் ஓடி வந்துவிட்டேன். பின்னாலேயே பாட்டியும் அம்மாவும் அப்பாவும் வந்து கொண்டிருக்கிறார்கள்," என்றான். ஆனால் அவர் எதுவும் பேசாமல் இருப்பது கண்டு திடுக்கிட்டான்.

அப்போது நடந்ததைச் சிலர் சொல்ல கணேசபட்டன் "ஏய் நந்தா! எங்கே போகிறாய்? வா இங்கே!" என்றான்.
சுவரகேசரியுடன் கிளம்பிச் செல்ல முயன்ற நந்தன் எதிர் அறைக்குள் விநாயகரின் முன் விளக்கு பளிச்சென எரிந்து கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டான். கணேசபட்டனோ, "நீ சரியாகச் சத்தியம் செய்யவில்லை. அதோ பார். விளக்கு இன்னமும் எரிந்து கொண்டே இருக்கிறதே. சரியாகச் சத்தியம் செய்," என்றான். கணேசபட்டனும் "இதோ பார்!
எனக்குத் தெரிந்து நான் தண்ணீர் கலந்த பாலைக் கொடுக்கவில்லை. இது சத்தியம். இது உண்மையாக இல்லாவிட்டால் என் கைகள் துண்டித்து விழட்டும் என்று சொல்லி விளக்கை அணைத்து சத்தியம் செய்!" என்றான்.

நந்தனுக்கு கைகால் நடுக்கம் ஏற்பட்டுவிட்டது. அவன் "ஐயோ! நான் இந்த மாதிரி சத்தியம் செய்ய முடியாது. சுவரகேசரி பாலில் தண்ணீர் கலந்து என்னிடம் கொடுத்தது எனக்குத் தெரியுமே. நான் பாலில் தண்ணீர் விடவில்லை என்று தானே சத்தியம் செய்தேன். என்னை மன்னித்துவிடுங்கள்," என்று கூறிவிட்டு உள்ளே போய் சொம்பில் இருந்த நல்ல பாலை எடுத்து வந்து கணேசபட்டனிடம் கொடுத்து அவன் காலில் விழுந்து வணங்கினான்.

அங்குள்ளவர்கள் "ஆ! இதுவா விஷயம்?" எனக் கைதட்டிச் சிரித்தார்கள். சுவரகேசரி மெதுவாக நழுவலானான். சிலர் அவனைப் பிடித்து நிறுத்தினர்.

கணேசபட்டனும் "பார்த்தீர்களா எப்படி மோசடி வேலை நடந்திருக்கிறது என்று?" என்று அங்கு சுற்றிலும் நின்றவர்களைப் பார்த்துக் கேட்டான்.

எல்லோரும் "ஆமாம்! அப்பாவி நந்தனைக் கொண்டு என்ன வேலை செய்துவிட்டான் இந்தப் பாவிப் பயல்!" என்றனர்.



அப்போது கஜானன பண்டிதரின் குரலும் முன்போலச் சரியாகி விட்டது. எல்லோரும் கணேச பட்டனைப் பாராட்டிக் கொண்டு இருக்கும்போதே வீட்டு வாசலில் வண்டி வந்து நின்றது.

அப்போது வண்டியிலிருந்து இன்னொரு கணேசபட்டன் குதித்து வருவது கண்டு ஆச்சரியப்பட்டு பண்டிதர் தம் அருகில் நின்ற சிறுவனைப் பார்த்தார். ஆனால் அவன் அங்கே இருக்கவில்லை. மாயமாய் மறைந்துவிட்டான். கஜானன பண்டிதரின் முகம் தாமரை போல் மலர்ந்து "விநாயகா! நீயே வந்து என் கண்களைத் திறந்தாயே!" என அவர் துதி செய்து பாடலானார்.

கணேசபட்டன் ‘தாத்தா’ எனக் கூவிக் கொண்டு வரவே பண்டிதரும் "வாப்பா கணேசா!" எனக் கூறித் தம் இரு கைகளை நீட்டி அவனைத் தூக்கி வாரி அணைத்துக் கொண்டார்.  பின்னர் அவர் "விநாயகரின் அருள் நமக்குக் கிட்டிவிட்டது. சற்றுமுன் அவர் உன்னைப் போல உருவம் எடுத்து நம் வீட்டிற்கு வந்து இதனைப் புனிதமாக்கினார். இது அவரது ஆலயம்," என்று கூறிச் சிறுவன் போல ஆடிக் களித்தார்.

விநாயகரின் மீதான கீர்த்தனைகளைத் தம் இனிய குரலில் பாடலானார். அந்த கான மழை பொழிவதைக் கேட்ட மக்கள் அங்கு வந்து கூடி "ஆகா! என்ன இனிமை!" என ரசிக்கலாயினர்.

சுவரகேசரியும் அந்த கானத்தைக் கேட்டு ஓடோடி வந்து கஜானன பண்டிதரின் கால்களில் `விழுந்து "என்னை மன்னித்ததாகக் கூறினாலே தங்களது பாதங்களை விடுவேன்," எனக் கூறி அவரது கால்களை இறுகப் பிடித்துக் கொண்டு வேண்டினான். கஜானன பண்டிதர் திகைத்துப் போனார்.

சுவரகேசரியை கைலாகு கொடுத்துத் தூக்கி நிறுத்தி "சுவரகேசரி! எனக்கு எதற்குத் தங்க விக்கிரகம்? நீயே சுவர்ண கணேச விக்கிரகத்தை அடைந்து கொள். எனக்கு அந்த மரியாதை வேண்டாம். இனிமேல் நான் இம்மாதிரிக் கூட்டங்களில் பாடவும் போக மாட்டேன்," என்றார்.

அப்போது சிறுவன் கணேச பட்டன், "தாத்தா! நீங்கள் உங்கள் திருப்திக்காக வீட்டிற்குள்ளேயே இருந்து பாடினால் மட்டும் போதாது. பக்தியுடன் பிறர் மனம் மகிழ வைத்து அவர்களை ரசிக்குமாறும் செய்தாலே உங்கள் திறமைக்கு மதிப்பு," என்றான்.

கஜானன பண்டிதர் கை எடுத்துக் கும்பிட்டு "விநாயகரே! நீங்கள் சொல்ல வேண்டியதை இந்தச் சிறுவன் வாயிலாகச் சொல்ல வைத்து எனக்கு அறிவுரை கூறுகிறீர்களா? ஆகா! நீங்கள் கூறுவது போலவே செய்கிறேன். ஆனால் என்னை யாரும் சிறப்பாக கௌரவிக்காமல் இருக்குமாறு மட்டும் செய்துவிடுங்கள்," என வேண்டினார்.


அப்போது அதைக் கேட்டுக் கொண்டு நின்ற சுவரகேசரி "குரு தேவா! நீங்கள் இயற்றிப் பாடிய கீர்த்தனைகளை மற்றவர்களும் பாடினால் சுவர்ண கணேச விக்கிரகம் கிடைக்கப் பெற்று மரியாதையை அடைகிறார்கள். இதுபோன்ற பக்தியை நான் தங்களிடமும் காட்டி அதிர்ஷ்டம் அடையுமாறு அனுக்கிரகிக்க வேண்டுகிறேன்," என்றான்.
கஜானன பண்டிதருக்கு அறுபது ஆண்டுகள் நிறையவே அவரது சஷ்டியப்தப் பூர்த்தி விமரிசையாக கொண்டாடப்பட்டது.

அன்று மாலை வாதாபி கணபதி ஆலயப் பிரகாரத்தில் மாபெரும் கூட்டம் நடந்தது. அவர் கழுத்தில் மலர் மாலைகள் போடப்பட்டு மலை போல குவிந்தன.

அப்போது பல ராகங்களில் அவர் விநாயகரின் மீது பக்திப் பாடல்களைப் பாடினார். அன்று அந்தக் கீர்த்தனைகளைக் கேட்ட ஒவ்வொருவரின் உள்ளத்திலும் விநாயகர் குடி கொண்டு மனம் மகிழச் செய்தார். வாதாபி நகர வரலாற்றில் கஜானன பண்டிதர் நிலையான இடத்தைப் பெற்றுவிட்டார்.

இவ்வாறு பாவனமிசிரர் கூறிய கதையைச் சிறுவர்களும் வயதானவர்களும் கேட்டு ரசித்தார்கள். ஒருநாள் ஆலயத்தில் ஒரு விசித்திரமான ஓவியம் வரையப்பட்டிருப்பது கண்டு எல்லோரும் அதையே பார்க்கக் கூடிவிட்டனர். அது ஒரு விசித்திரமான பூத உருவம். அந்த சமயம் பாவனமிசிரர் அங்கு வரவே சிறுவர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். அவரும் அதன் கதையை அவர்களுக்குச் சொல்லலானார்.

இந்திரன் சகர மன்னனின் யாகக் குதிரையை எங்கோ ஒளித்து வைத்து விட்டான். பிருது சக்கரவர்த்தியின் யாகமும் நிறைவேறாமல் இருக்கவும் அவரது யாகக் குதிரையையும் திருடிக் கொண்டும் போனான்.

இப்படியாக பல அக்கிரமச் செயல்களை அவன் புரிந்தான். பிருது சக்கரவர்த்தியின் வம்சத்தில் பிறந்த அபிநந்தன் என்ற மன்னன் அச்சமயம் ஒரு யாகத்தைச் செய்யலானான். அதில் இந்திரனுக்கு அவிர் பாகம் அளிக்கபட மாட்டாது எனவும் அவன் அறிவித்துவிட்டான். இதனால் இந்திரன் கோபமும் ஆத்திரமும் கொண்டு காலன் என்பவனுக்கு மது, மங்கை முதலிய ஆசைகளைக் காட்டி பிருது மன்னனின் யாகத்தை நடக்கவிடாமல் நாசம் செய்து வருமாறு கூறி அனுப்பினான்.

காலன் மரணத்திற்கு அப்பாற்பட்டவன். எல்லா ஜீவராசிகளும் உயிர் வாழவும் இறக்கவும் அவனே காரணமாவான். அவனைக் கால தர்மன் என்றும் கால யமன் என்றும் கூட அழைப்பது உண்டு. காலன் அந்த மன்னனின் யாகத் தீயிலிருந்து பயங்கர உருவம் ஒன்றை வெளிவரும்படிச் செய்தான். அது கண்டு யாகம் செய்து கொண்டிருந்த முனிவர்கள் பயந்து ஓடலானார்கள். யாகசாலையே நாசமாகிவிட்டது.

அபிநந்தன் விநாயகரின் பரம பக்தன். அவனது குரு வசிஷ்டரும், "இந்த மாதிரி ஏதாவது நிகழக் கூடும் என எதிர்பார்த்து நான் யாக பீடத்தின் எதிரே சுவஸ்திக கணேசரைப் பிரதிஷ்டை செய்திருக்கிறேன். அங்கு மஞ்சளால் பிள்ளையாரைப் பிடித்து வைத்து வணங்கு. அவர் அவதரித்து இந்த பயங்கர உருவத்தை அழிப்பார்," என்றார். மன்னனும் அவ்வாறே செய்தான்.

அந்த சுவஸ்திகா சின்னத்தில் இருந்து இனிய நாதம் கேட்டது. அணுக்கள் ஒன்று சேர்ந்து மாபெரும் பூதம் ஒன்று உருவாகியது. அது பெரிதாகி எலிகளாக மாறின. அந்தச் சுண்டெலிகள் பயங்கர உருவத்தின் மீது எறும்புகள் மொய்ப்பதுபோல மொய்த்துப் பிடுங்கிக் குதறி குற்றுயிராக்கி அதனை விழச் செய்தன. அதுவும் கீழே விழுந்து சட்டென மாயமாய் மறைந்தது.

விநாயகர் - 19

 

குகை வாயிலில் இருந்த பெரும் பாறையை ஒரு சிறு கல்லைத் தூக்கி எறிவது போலத் தன் துதிக்கையால் தூக்கிப் போட்டுவிட்டு யானை அதற்குள் போயிற்று. பிறகு ரத்தினங்கள் பதித்த தங்க நகைகளை பல கட்டுகளாகக் கட்டி அது குகைக்கு வெளியே கொண்டு வந்து சௌதாமினியிடம் கொடுத்தது. பல தங்க மாலைகளைத் தன் கழுத்து நிறையப் போட்டு மற்றவற்றை எடுத்துக் கொண்டு போகும்படியும் அந்த யானை அவளுக்கு சைகை செய்து ஆசீர்வதித்தது.

அவளும் நகைகளை அணிந்து மிகுந்ததை மூட்டையாகக் கட்டி எடுத்துக் கொண்டபின் யானை அவளைத் தன் முதுகின் மீது ஏற்றிக் கொண்டு கல்யாணி நகரத்தின் எல்லையில் கொண்டு போய் விட்டு விட்டுத் திரும்பிக் காட்டிற்குள் சென்றது.

கண்ணைப் பறிக்கும் நகைகளோடு தங்கச் சிலையே அசைந்து ஆடி வருவது போல சௌதாமினி வந்தது கண்டு அவளது மாமியார் கலககண்டி திகைத்துப் போனாள். பிறகு ஒருவாறாகச் சமாளித்துக் கொண்டு அந்த நகைகள் எல்லாம் அவளுக்கு எப்படிக் கிடைத்தன என்று கேட்டாள்.

சௌதாமினி கூறியதையெல்லாம் கேட்டுவிட்டு அவள் "ஓ! யானைக்கு விளாம்பழம் என்றால் மிகவும் பிடிக்குமா? சரி, சரி" என்று கூறி உடனே ஒரு பெரிய கூடையை எடுத்துக் கொண்டு சந்தைக்குப் போனாள். அது நிறைய விளாம்பழங்களை வாங்கிக்கொண்டு அவள் வீடு திரும்பினாள்.
 பிறகு ஒரு பெரிய சாக்குப் பை எடுத்து விளாம்பழக் கூடை மீது போட்டு அதனை எடுத்துக் கொண்டு கலககண்டி தன் மருமகள் கூறிய இடத்திற்குப் போய் "யானையே, யானையே! ஓடோடி வா, யான் மகிழ நகைகளைக் கொண்டோடி வா!" என்று பாட்டுப் பாடினாள்.

யானை வரவில்லை. ஆனால் காடே அதிரும்படி ஏதோ ஒரு மிருகம் உறுமும் சத்தம் கேட்டது. கலககண்டி தலை நிமிர்ந்து பார்த்தபோது ஒரு புலி குதித்து ஓடி வருவதைக் கண்டாள். பையைக் கீழே போட்டு விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கலககண்டி எடுத்தாள் ஓட்டம்.

ஓடி ஓடி அவள் ஓரிடத்தில் போய் பொத்தென்று விழுந்தாள். அதுதான் சௌதாமினி கூறிய குகை. அதுகண்டு அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
குகை திறந்துதான் இருந்தது. அவள் எழுந்து கிடுகிடுவென்று குகைக்குள் போனாள்.

அக்குகைக்குள் எங்கு பார்த்தாலும் நகைகள் குவியல்குவியலாக இருப்பது கண்டு பைத்தியம் பிடித்தவள் போலக் கத்திக் குதித்தாள். கழுத் திலும் கைகளிலும் இடுப்பிலும் கால்களிலும் எவ்வளவு நகைகளை அணிந்து கொள்ள முடியுமோ அவ்வளவுக்கும் எடுத்து அணிந்து கொண்டாள். பிறகு தான் கொண்டு வந்த சாக்குப் பை நிறையும்வரை நகைகளை அள்ளி அள்ளி எடுத்துப் போட்டுக் கொண்டாள்.

அந்த மூட்டையை கலககண்டி தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்தபோது குகை வாசல் மூடப் பட்டிருப்பதைக் கண்டு திகைத்தாள். அங்கு அனல் போன்ற கண்களோடும் அரிவாள் போன்ற கோரைப் பற் களோடும் பயங்கரச் சிரிப்பு சிரித்துக் கொண்டு நிற்கும் பிரம்மராட்சஸி யைக் கண்டு பயந்து நின்றாள்.

பிரம்மராட்சஸியும் "ஓ! கலக கண்டியா! நீ உன் மருமகளை ஆட்டி வைத்தவள் அல்லவா? நான் என் மாமியாரையே சித்திரவதை செய்த மருமகள். தெரியுமா என் கதை?" என்று கூறிக் கதை சொல்லலாயிற்று.
ஒரு காலத்தில் நான் மிக அழகாக இருந்தேன். எனக்கு கலஹம்சி என்ற பெயர் வைக்கப்பட்டாலும் கணவன் வீட்டிற்குப் போனதும் என் வாயாடித்தனத்தைக் கண்டு கலகதுந்துபி என்ற பெயரை வைத்துவிட்டார்கள்!

 நீ எவ்வளவு கெட்ட மாமியாராக இருந்தாயோ அவ்வளவுக்கு என் மாமியார் மிகவும் நல்லவராக இருந்தார். பரம சாது.

நான் குடித்தனம் செய்ய வந்த மறுவருடமே என் கணவர் என் குணம் கண்டு சகிக்க முடியாமல் சொல்லிக் கொள்ளாமலேயே எங்கோ ஓடிவிட்டார். எனக்கோ நகைகள் என்றால் கொள்ளை ஆசை! நல்ல நெல்வயல்களை விற்று நகைகளைச் செய்து போட்டுக் கொண்டேன். என் மாமியாரும் தனக்கு ஒரு மூக்குத்தி கூட வைத்துக் கொள்ளாமல் தன் நகைகளை எல்லாம் எனக்கே கொடுத்துவிட்டார். அப்படியிருந்தும் நான் அவருக்குச் சரியாக சாப்பாடுகூடப் போடவில்லை. வீட்டு வேலைகளை எல்லாம் அவர் தலை மீதே சுமத்தினேன்.

பாவம்! இளைத்துப் போய் அவர் கடைசி காலத்தில் காசிக்குப் போயாவது கடவுளை தரிசித்துவிட்டு கங்கையில் உயிரைவிடலாம் என எண்ணி ஒரு மூட்டையை எடுத்துக் கொண்டு கிளம்பினார். என் மாமனாரும் தன் மனைவியோடு கிளம்பிவிட்டார். என் மாமியார் ஏதோ மூட்டைகளைக் கொண்டு போவது கண்டு கோபப்பட்டு அதை நான் வெடுக்கெனப் பிடுங்கிக் கொண்டேன். நான் இழுத்த இழுப்பில் நிலைதடுமாறி என் மாமியார் கீழே விழுந்து உயிரை விட்டுவிட்டார். அதுகண்டு மாமனாரும் தன் மனைவியின் பிரிவு தாங்காமல் உயிரை விட்டுவிட்டார். இப்படியாக இருவரும் இறந்து கிடந்தார்கள்.

அந்த சமயம் தாடிக்காரப் பேர்வழி ஒருவர் அங்கு வந்தார். அவர் என்னைப் பார்த்து, "நீ பிரம்மராட்சஸி யாகித்திரி," என்று சபித்துவிட்டு இறந்து கிடந்த இருவரது உடல்களுக்கும் தகனக் கிரியைகளைச் செய்தார். அவர் தான் என்னைவிட்டுப் போன என் கணவர். என் அழகைக் கண்டு என்னை மணந்த அவர் என்னை இப்படியாகும்படி சபித்தார். அப்போதும் என் நகைப் பைத்தியம் என்னைவிட்டுப் போகவில்லை. கொள்ளைக்காரர்களுடன் கூட்டு சேர்ந்தேன். கொள்ளைக்கார ராட்சஸி என்ற பெயரும் பெற்றேன்.
 இந்த குகையில் தான் கொள்ளைக்காரர்கள் தாம் கொள்ளை அடித்த நகைகளைச் சேர்த்து வைத்து வந்தார்கள். இவற்றை எல்லாம் நானே அடைய எல்லாக் கொள்ளைக்காரர்களுக்கும் உணவில் விஷத்தைக் கலந்து கொடுத்தேன். அவர்கள் இறக்குமுன் என்னை இந்த குகைக்குள் வைத்து இதன் வாயிலைப் பெரிய பாறாங்கல்லால் மூடிவிட்டே செத்தார்கள்.
கலககண்டி! என்னால் இந்த நகைகளைக் காவல் காக்கத்தான் முடிந்தது, போட்டுக் கொண்டு எங்கேயும் போக முடியவில்லை. உனக்கு நல்ல புத்தி வரும்படி செய்தால் எனக்கு சாப விமோசனம் ஏற்படும் என்று இந்த குகைக்குள் வந்த யானை கூறியது.

யானை உன் மருமகளுக்கு கொடுத்த நகைகள் எல்லாம் அசல் தங்க நகைகளே. ஆனால் நீ அள்ளி எடுத்துக் கொண்டவைகள் எல்லாம் என்ன என்று மூட்டையை அவிழ்த் துப் பார்!" இவ்வாறு பிரம்மராட்சஸி கூறியதும் கலககண்டி தன் தலை மீதிருந்த மூட்டையை இறக்கி அவிழ்த்துக் கொட்டினாள். பாம்புகளும் தேள்களும் நட்டுவாக்காளிகளுமே அதிலிருந்து வெளி வந்து ஊர்ந்து குகையின் நாலாபுறமும் சென்றன.
அதுமட்டுமல்ல கலககண்டி அணிந்திருந்த நகைகளும் பாம்பு களாகவும் தேள்களாகவும் மாறி அவளது உடலைக் கொட்டின. வலி தாங்க முடியாது கலககண்டி குகையே எதிரொலிக்கக் கத்தினாள்.

பிரம்மாராட்சஸி பலமாகச் சிரித்து "நீ உன் மருமகளைக் கொடுமைப்படுத்தினாய். நான் என் மாமியாரைக் கொடுமைப்படுத்தினேன். நம் போன்றவர்கள் பெண் குலத்திற்கே அவமானச் சின்னமாகும். உத்தமமான உன் மருமகளை நீ நல்ல விதமாக நடத்தப் போகிறாயா அல் லது இந்த குகையில் என்னைப் போல பிரம்மராட்சஸியாக ஆகி வாழ்நாள் முழுவதும் கழிக்கப் போகிறாயா? என்ன சொல்கிறாய்?" என்று கேட்டது.
கலககண்டித் தன் கன்னத்தில் போட்டுக் கொண்டு "எனக்கு புத்தி வந்தது. இனிமேல் என் மருமகளிடம் அன்புடன் நடந்து கொள்வேன். நான் இந்த குகையிலிருந்து வெளியே போனால் போதும். அதற்கு நீ வழி செய்.
நீ சொன்னபடி எல்லாம் கேட்கிறேன்," என்று பிரம்மராட்சஸியிடம் கெஞ்சினாள்.பிரம்மராட்சஸியும் கலககண்டியை குகையிலிருந்து வெளியே அழைத்துப் போய் காட்டைத் தாண்டி கல்யாணி நகர எல்லைக்குக் கொண்டு போய்விட்டாள்.

பிறகு அவள் "எச்சரிக்கிறேன். ஜாக்கிரதை! நீ மட்டும் நான் சொன்னபடி நடந்து கொள்ளாவிட்டால் மறுபடியும் அந்த குகைக்குள் போய் பிரம்மராட்சஸியாகத் தான் இருக்க வேண்டி வரும். நினைவில் வைத்துக் கொள்!" என்று கூறி அனுப்பினாள்.

கலககண்டியும் தப்பினேன் பிழைத்தேன் என்று தன் வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தாள். அவள் சௌதாமினியின் கால்களில் வீழ்ந்து, "அம்மா சௌதாமினி! என்னை மன்னித்துவிடு. நீயும் உன் கணவனும் சந்தோஷமாக வாழ்வதைவிட வேறு என்ன எனக்கு வேண்டும்? நான் செய்த கொடுமைகளை எல்லாம் மறந்து என்னை மன்னித்து விடு!" என வேண்டினாள். தன் மாமியார் இப்படி மாற விநாயகரே காரணம் என்பது சௌதாமினிக்குத் தெரிந்துவிட்டது.

பாவனமிசிரர் இந்தக் கதையைக் கூறி "அந்த குகையின் யானை யார் தெரியுமா?" என்று கேட்க, சிறுவர்கள் எல்லோரும் ஒரே குரலில் "விநாயகர் தாம். வேறு யாராக இருக்க முடியும்?" என்றார்கள். இப்படியே அவர் பல கதைகளைக் கூறி சிறுவர்களின் மனதில் விநாயகர் மீது பக்தி ஏற்படும்படிச் செய்தார்.

 
ஒருமுறை ஒரு சங்கீத ரசிகர் ஒரு கோயிலில் உள்ள சித்திரத்தைக் காட்டி "இதில் வீணை ஒருவர் வாசிக்க விநாயகர் களிநடம் புரிவதாக இருக்கிறதே. இதற்கு ஏதாவது கதை உண்டா?" என்று பாவன மிசிரரிடம் கேட்டார். அவரும் "ஆமாம். உள்ளது கூறுகிறேன்," எனக் கூறிக் கதையை ஆரம்பித்தார்.

வாதாபி நகரம் கலைகளில் சிறந்து விளங்கியது. இசை, ஓவியக் கலைஞர்கள் இங்கு தோன்றினர். கஜானன பண்டிதர் நகரில் முதலிடம் பெறுபவர். நல்ல அறிஞர். இசை ஞானம் அவருக்கு அபாரம். நன்கு பாடுவார். அவரது குரலே பிறரைக் கவர்ந்து இழுத்துவிடும் சக்தி பெற்றிருந்தது.

வாதாபி கணபதியின் மீது அவரே பல பாடல்களை இயற்றிப் பாடி இருக்கிறார். அவரது பேரன் பால கணேச பட்டன் அவர் பாடுவதற்குத் தக்கபடி தாளம் போட்டு வந்தான்.

கஜானன பண்டிதர் பல ராகங்களில் விநாகயரைப் புகழ்ந்து கீர்த்தனைகளை இயற்றிப் பாடி வரலானார். அவர் தனக்கு மதிப்பு, கௌரவம் முதலியன வேண்டும் என்று சற்றும் எதிர்பாராதபோதிலும் ஒவ்வொரு ஆண்டிலும் முதலில் தங்க கணபதி விக்கிரகம் அவரது இல்லத்திற்கே வரும். இதனால் வாதாபி நகரில் உள்ள ஒரு சிலருக்கு அவர் மீது பொறாமை ஏற்பட்டது. இவர்களில் ஸ்வரகேசரி என்ற பாடகர் ஒருவர்.


அவர் எப்போது பார்த்தாலும் கஜானன பண்டிதர் பாடுவதில் ராகம் தப்பு, தாளம் தவறு என்று ஏதாவது ஒரு குறையைச் சொல்லி வந்தார். அவர் தம் குரலைப் பலவிதத்திலும் திருப்பி வேகவேகமாக ஸ்வரம் போட்டுத் தாம் பெரிய வித்வான் எனக் காட்டிக் கொள்ள முயல்வார்.
ஒருமுறை ஸ்வரகேசரி "இந்த ஆண்டு தங்க விநாயகர் விக்கிரகம் கஜானன பண்டிதர் வீட்டிற்குப் போகாமல் செய்துவிடுகிறேன் பார்!" என எண்ணி அதற்கான ஒரு திட்டத் தையும் கூட போட்டு வைத்துக் கொண்டார்.     (தொடரும்)

விநாயகர் -18

 
சத்துருஞ்ஜயன் எலியோடு சளுக வர்மனை தூரத்திலுள்ள சிறிய வீட்டிற்கு விரட்டி "நீ எங்களோடு இருக்க வேண்டியவன் அல்ல. எலியை வாகனமாகக் கொண்ட விநாயகர் மீது அளவு கடந்த பக்தி கொண்டதால் அந்த எலியின் இனத்தைச் சேர்ந்தவள் தான் உனக்கு மனைவியாகத் தகுந்தவள். உன் மனைவியும் அவள் தோழிகளும் யார் கண்ணிலும் படாமல் அந்தப்புரத்தில் வளைகளுள் இருப்பார்கள்," எனக் கூறி ஏளனம் செய்தான்.

சளுகன் உயரிய நூல்களைப் படிக்கும்போது சளுக்கி அவனுடன் இருந்து கேட்பாள். அவன் பூஜைகள் செய்யும்போது வாயில் மலர்களைக் கவ்வி எடுத்துக் கொண்டு வந்து கொடுப்பாள். சளுகன் உண்ட பிறகே மீதமானதை அவள் உண்பாள். இப்படியாக நாட்கள் கழிந்து விநாயக சதுர்த்தியும் வந்தது.

எல்லோர் வீட்டிலும் தானியங்கள் புடைக்கப்பட்டு குவிக்கப்பட்டன. அப்போது சளுக்கி இரவோடு இரவாக எலிகளை கூப்பிட்டு தன் வீட்டையும் வெள்ளை அடித்து அவற்றைக் கொண்டு தானியத்தையும் புடைத்து வைத்தாள்.

விநாயக சதுர்த்தியன்று சளுக்கியின் அண்ணிகள் நதியில் நீராடி விட்டுக் குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து கொண்டிருந்தனர். அதுகண்டு சளுகனின் முகம் கறுத்தது. உடனே சளுக்கி சட்டென ஒரு குடத்துள் புகுந்து அதை உருட்டிக் கொண்டே ஆற்றிற்குச் சென்றாள். அங்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது, கண்டு சளுக்கி "எப்படிக் குடத்தில் நீர் நிரப்பமுடியும்? அதனை எப்படித் தூக்கிச் செல்வது? குடத்தை எப்படியோ இதுவரை கொண்டு வந்துவிட்டேன்," என்று கவலைப்பட்டாள்.
 அப்போது விநாயகர் அவள்முன் தோன்றி அந்த எலியைத் தடவிக் கொடுத்தார். எலி உருவில் இருந்த கல்யாண கிங்கிணி பழைய தேவ கன்னிகையின் உருவை அடைந்தாள். அவள் விநாயகரை வணங்கித் துதிக்க அவரும் அவளை ஆசீர்வதித்துவிட்டு மறைந்தார்.

கல்யாண கிங்கிணி தலையில் குடத்தை வைத்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்புகையில் அவளைக் கண்டவர்கள் எல்லாம், "யார் இந்த தேவகன்னிகை? யார் வீட்டிற்குப் போகிறாள்?" என்று அதிசயப்பட்டு பார்க்கலாயினர். கல்யாண கிங்கிணியின் அண்ணிகள் அவள் சளுகனின் வீட்டில் நுழைவது கண்டு பிரமித்துப் போனார்கள். சத்துருஞ்ஜயன் தன் செய்கைக்காகத் தலைகுனிந்து பச்சாதாபப்பட்டு சளுகனையும் அவன் மனைவியையும் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான்.

சளுகனின் அண்ணன்மார்கள் சத்துருஞ்ஜயனிடம் தமக்கும் ஏன் அதுமாதிரி எலியை கல்யாணம் செய்து வைத்து தேவ கன்னிகையான மனைவிகள் கிடைக்கச் செய்யவில்லை என்று சண்டை போடலானார்கள். சத்துருஞ்ஜயனோ இப்படிப் பட்டவர்களுக்காகவா நான் இந்த நாட்டை வைத்திருக்கிறேன் என எண்ணி மனம் உடைந்து தவம் செய்யக் காட்டிற்குச் சென்றுவிட்டான்.

சளுகனின் தமையன்மார்கள் ஒருவருக்கொருவர் பொறாமையால் அடித்துக் கொண்டனர். அதில் அனைவரும் மடிய சளுகவர்மனையே மக்கள் தம் மன்னனாகத் தேர்ந்து எடுத்தார்கள். அவனது ஆட்சியில் மக்கள் சுகமாக வாழ்ந்தனர்.

சளுகன் கல்யாண கிங்கிணியின் பெயரில் இன்னொரு நகரை நிர்மாணித்து அதற்கு கல்யாணி என்ற பெயரை வைத்தான். அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன. அவர்கள் சாளுக்கியர்கள் என அழைக்கப்பட்டார்கள். இப்படியாக சளுகவர்மன் சாளுக்கவர்மனாகி சாளுக்கிய வம்ச மன்னர்களின் மூல புருஷனானான்.

அவன் காலத்தில் வாதாபி நகரம் பல கோயில்களோடு அழகுடன் விளங்கியது.


 கலைகளின் இருப்பிடமாயும் பண்டிதர்கள் வாழும் பட்டணமாயும் பூலோக சொர்க்கமாக அது திகழ்ந்தது. நகரின் பிரதான தெய்வமாக விநாயகரே வழிபடப்பட்டார். அவர் கோயில் கொண்ட ஆலயச் சிற்ப வேலைப்பாட்டைக் காணப் பல நாடுகளிலிருந்தும் அரசர்கள் முதல் சாமானியர்கள் வரை வந்தனர்.

சாளுக்கியர்களின் நாடு பரவிக் கிடந்தது. அந்த வம்ச மன்னர்கள் நாட்டின் பல பகுதிகளுக்குப் போய் பல நாடுகளை நிறுவினார்கள். வாதாபியை ஆண்டவர்கள் வாதாபி சாளுக்கியர்கள். கல்யாணியை ஆண்டவர்கள் கல்யாணி சாளுக்கியர்கள். வெங்கி நாட்டை ஆண்டவர்கள் வெங்கி சாளுக்கியர்கள். கீழச் சாளுக்கியர்கள், சௌராஷ்டிரச் சாளுக்கியர்கள் எனவும் பல சாளுக்கியர்கள் இருந்தனர். வாதாபி நகரம் பாதாமி எனவும் அழைக்கப்பட்டது.

வாதாபி கணபதி என்ற பெயர் பெற்ற விநாயகரின் புகழ் பல நாடுகளில் பரவியது. அப்போது பாவன மிசிரர் என்ற பண்டிதர் மாலை வேளைகளில் வாதாபி கணபதி ஆலய மண்டபத்தில் அமர்ந்து குழந்தைகளுக்கு விநாயகரைப் பற்றிய பல கதைகளைக் கூறி வந்தார். சிறுவர்களோடு சேர்ந்து பெரியவர்களும் அக்கதைகளைக் கேட்டு மகிழ்ந்து வந்தார்கள்.

அந்த ஆலயச் சுவர்களில் விநாயகரின் கதைகள் சித்திர வடிவில் பொறிக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு விசித்திரமான படத்தை ஒரு சிறுவன் பாவனமிசிரரிடம் காட்டி அதைப் பற்றிய கதையைக் கூறும்படி வேண்டினான். அவரும் கதை கூறலானார்.

ஒரு நகரில் சத்தியசர்மனும் லோப குப்தனும் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்தார்கள். சத்திய சர்மன் விநாயகர் ஆலயத்துள் போய் முத லில் அவரை தரிசித்துவிட்டுப் பிறகு சிவனை தரிசிக்கச் செல்வார். லோப குப்தனோ நேராக சிவலிங்கத்தின் முன் விழுந்து தனக்கு நிறைய லாபம் கிடைக்கச் செய்யுமாறு வேண்டி வந்தான்.

ஒருநாள் சத்தியசர்மன் சிவனை தரிசிக்கப் போனார். அப்போது லோபகுப்தனும் வந்து கொண்டிருந்தான். அப்போது நந்தி விநாயகரிடம், "விநாயகரே! உமது பக்தன் சத்திய சர்மன் பணமுடையில் இருக்கிறானே.

 உம்மிடம் எதுவும் கேட்கவில்லையா?" எனக் கேட்டது. அதற்கு விநாயகர், "ஆமாம். இன்று மாலை அவனுக்கு ஆயிரம் வராகன் கிடைக்கச் செய்கிறேன்," என்றார். நந்தியும் விநாயகரும் பேசியதை லோபகுப்தன் கேட்டு விட்டான். உடனே அவன் சத்திய சர்மனின் வீட்டிற்குப் போய், "சர்மா! உங்களுக்குப் பணம் தேவையாமே. ஐநூறு வராகன்கள் கொடுக்கிறேன்," எனக் கூறிவிட்டு வீட்டிற்குப் போய் பணம் கொண்டு வந்தான்.

அப்போது சத்தியசர்மா "நேற்று தானே நான் உங்கள் கடனைத் தீர்க்கவில்லை என்று வீட்டைக் காலி செய்து கொடுக்கும்படிச் சொன்னீர்களே. இப்போது கொடுக்கப் போகும் கடனையும் சேர்த்து முழுக் கடனை எப்படி என்னால் தீர்க்க முடியும்?" என்று கேட்டான்.

அதற்கு லோபகுப்தன், "இந்தப் பணத்தை நீ இப்போது வாங்கிக் கொள். இன்று மாலையில் உனக்குக் கிடைக்கும் பணம் முழுவதையும் கொடுத்துவிடு. நீ எனக்குக் கொடுக்க வேண்டிய முழுக் கடனும் தீர்ந்து விட்டதாக நினைத்துக் கொள்கிறேன்," என்றான்.

சர்மா திகைத்துப் போகவே அவரது மனைவி லோபகுப்தன் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டாள். அப்போது சர்மாவின் பெண்ணைக் கேட்க மாப்பிள்ளை வீட்டார் வந்திருந்தார்கள். அந்தக் கல்யாணமும் நிச்சயமாகியது. பிள்ளை வீட்டார் ஐநூறு வராகன்கள் பெறுமான நகைகளைப் பெண்ணுக்குப்போட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்க அவரும் ஒப்புக் கொண்டார்.

லோபகுப்தன் எப்போது மாலைப் பொழுது வரும், யார் பணப் பையோடு வரப் போகிறான் என்று காத்திருந்தான். வெகுநேரமாகியும் யாரும் வராததால் அவன் மனம் கலங்கி கோயிலுக்குப் போய் விநாயக விக்கிரகத்தின் துதிக்கையைப் பிடித்து இழுத்து "என்னய்யா விநாயகா! சத்தியசர்மாவுக்கு ஆயிரம் வராகன்கள் இன்று மாலைக்குள் கிடைக்கச் செய்வதாகச் சொன்னாயே. அதை அனுப்பு!" என்று கூறியபோதே அவனது கை விநாயக சிலையின் துதிக்கையில் சிக்கிக் கொண்டுவிட்டது. அவனால் கையை எடுக்க முடியவில்லை.

விநாயகரின் துதிக்கை அவனது கையை மேலும் அழுத்த அவனது கை வலிக்கலாயிற்று.


லோபகுப்தன் வலி பொறுக்காமல் ‘ஓ’வெனக் கதறினான். அப்போது விநாயகர், "நீ எவ்வளவு விரைவில் சத்தியசர்மாவுக்கு ஆயிரம் வராகன்கள் அனுப்பி வைக்கிறாயோ அப்போதுதான் உனக்கு விடுதலை," என்றார்.
அதுகேட்டு லோபகுப்தன் தன் தலையில் அடித்துக் கொண்டு "இது அநியாயம். நான் ஏற்கனவே அவருக்கு ஐநூறு வராகன்கள் வேறு கொடுத்திருக்கிறேனே!" என்றான்.

அப்போது விநாயகர் "ஓ! ஐநூறு வராகன்களைக் கொடுத்துவிட்டு ஆயிரம் வராகன்களை அவரிடம் இருந்து தட்டிக் கொண்டு போய் விடலாம் என்று தானே திட்டம் போட்டாய்? இந்தப் பேராசைக்காக நீ இன்னும் ஐநூறு வராகன்களை சர்மாவுக்குக் கொடுத்தே தீர வேண்டும். அது மட்டுமல்ல. உனக்கு அவர் கொடுக்க வேண்டிய கடன் தீர்ந்து விட்டதாகக் கூறி அவரது மகளின் திருமணச் செலவு முழுவதையும் நீதான் ஏற்க வேண்டும். தெரிந்ததா!

 இப்படிச் செய்வதானால் தான் உனக்கு விடுதலை," என்றார். லோபகுப்தன் உடனே தன் வீட்டாருக்குத் தகவல் சொல்லி அனுப்பினான். அவர்கள் வந்ததும் ஐநூறு வராகன்களை உடனே சர்மாவிடம் சேர்ப்பிக்கும்படி கூறி, அவரது எல்லாக் கடனும் தீர்ந்து விட்டதாயும் அவரது மகளின் கல்யாணத்திற்கு ஆகும் செலவைத்தானே ஏற்கப் போவதாயும் சொல்லும்படி ஆளை அனுப்பிச் சொன்னான்.தன் பிறகே அவனது கை விநாயகர் விக்கிரகத்திலிருந்து விடுபட்டது. லோபகுப்தனும் சர்மாவின் மகளின் கல்யாணத்தைத் தன் சொந்த மகளின் திருமணம் போல நடத்திக் கொடுத்து, மிகவும் நல்லவன் என்ற பெயரும் புகழும் பெற்றான். இந்தக் கதையைக் கேட்ட சிறுவர்களும் பெரியவர்களும் மகிழ்ந்து போனார்கள். அடுத்து இன்னொரு கதையை அவர் கூறினார்.

கல்யாணி நகரில் கலககண்டி என்பவள் தன் மருமகள் பிறந்த வீட்டிலிருந்து நிறைய நகைகள் கொண்டு வராத காரணத்தால் கொடுமைப் படுத்தி அவளை வீட்டை விட்டே துரத்திவிட்டாள். அவளது மருமகள் சௌதாமினி தன் பிறந்த வீட்டிற்குக் கிளம்பி ஒரு காட்டு வழியே போய் ஒரு விளாமரத்தடியே களைப்பால் விழுந்துவிட்டாள்.
தன் பிறந்த வீட்டிற்குப் போயும் பயனில்லையே என எண்ணிய போது அந்த மரத்திலிருந்து விளாம்பழம் விழுந்து உருண்டு அவள் பக்கம் வந்தது. அவள் அதை எடுத்த போது ஒரு யானை வேகமாக ஓடி வருவதை அவள் கண்டாள்.

சௌதாமினி சிறுவயது முதல் விநாயகரை வழிபடுபவள். எனவே அந்த யானையின் காலடியில் விழுந்து மிதிபட்டுத் தன் உயிரைப் போக்கித் தன் பிரச்சினைக்கு முடிவு காண்பது என்ற தீர்மானத்தோடு அதனருகே சென்றாள். யானையோ உடனே நின்றுவிட்டது.

அது சௌதாமினியின் கையில் இருந்த விளாம்பழத்தை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு அவளை ஆசீர்வதிப்பதுபோல துதிக்கையை உயர்த்தி விட்டு, பின்னர் அவளது கைகளைப் பற்றி அழைத்துக் கொண்டு ஒரு பெரிய குகையின் பக்கம் சென்றது. அதுகண்டு சௌதாமினி ஆச்சரியப்பட்டாள். ஆனால் சற்றும் பயப்படவில்லை. யானை விநாயகர் தாம் என அவள் எண்ணி அதனோடு நடந்து சென்றாள்.

  

விநாயகர் - 17

  


விநாயகர் சிலையைக் கண்டு மெய்மறந்து துதிபாடி நின்ற அகத்தியர், "வாதாபி கணபதியே, நீ தானே இப்பாறையிலிருந்து வெளி வந்தாய்... இந்த மாதிரி உருவச் சிலையை யாராலும் வடிக்க முடியாது" எனக் கூறி ஆனந்த கண்ணீர் வடித்தார்.

அப்போது சிலையிலிருந்து, "அகத்தியரே! இதை நான் எனக்காக சிருஷ்டித்துக் கொள்ளவில்லை. நீர் திருப்திப்பட வேண்டும் என்பதற்காக உமது விருப்பத்தை நிறைவேற்றினேன். எனவே இந்த மாபெரும் சிலை கொஞ்ச காலத்திற்கே இருக்கும். பின்னர் மறைந்துவிடும். துவாபர யுகத்தில் தருமர் அசுவமேத யாகம் செய்யும்போது மற்றொரு சிலை தோன்றும்," என விநாயகரின் குரல் ஒலித்தது. இவ்வாறு தௌம்யர் அர்ஜுனனிடம் கூறி, "அந்தச் சிலையைத் தான் நாம் இப்போது காண்கிறோம்," என்றார். அர்ஜுனனும் அந்தச் சிலையை பயபக்தியுடன் வணங்கினான்.

அவன் தௌம்யரிடம், "ஆசார்யரே! இவ்வளவு அழகான சிலைகளைப் பெற்று மிகவும் உயர்ந்து விளங்கிய வாதாபி நகரம், இப்போது ஏன் இந்த நிலையை அடைந்துள்ளது?" என்றான். தௌம்யரும் விவரமாகக் கூறலானார்: அகத்தியர் லோபாமுத்திரை கூறியபடி தமது செல்வத்தை எல்லாம் தானம் செய்தார். எல்லாம் கொடுத்த பின் கானக வாழ்க்கையை மேற்கொள்ள அவர் லோபா முத்திரையுடன் தம் ஆசிரமத்திற்குப் போய்ச் சேர்ந்தார்.
 வாதாபி நகர மக்களும் விநாயகரையே தம் மன்னர் போலக் கருதி ஆட்சி நடத்தி சுக வாழ்வு வாழலானார்கள். நாட்கள் கழியலாயின. வாதாபி நகரைப் பற்றியும் அதன் ஆட்சி முறை பற்றியும் எங்கும் யாவரும் புகழத் தொடங்கினார்கள். அதன் புகழ் பல நாடுகளிலும் பரவியது.
அகத்தியர் தன்னைக் கொன்று விடுவாரோ எனப் பயந்து ஓடிய இல்வலன் விந்தியமலைக் காடுகளில் திரிந்தான். அப்போது வாதாபியின் புகழைக் கேட்டு அந்நகருக்குப் போகத் தீர்மானித்துக் கொண்டான். அகத்தியர் அந்நகரில் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டு அவன் மக்களின் பணியிலேயே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மகான் போல உருமாறி, வாதாபி நகருக்கும் போய் மக்களோடு சேர்ந்து வாழ ஆரம்பித்தான்.

வாதாபி மக்கள் முதலில் நல்ல எண்ணத்தோடு சமஉரிமை பெற்று வாழ்ந்தார்கள் என்றாலும் நாளா வட்டத்தில் அவர்களைச் சுயநலம் பற்றிக் கொண்டது. இதனால் போட்டியும் பொறாமையும் ஏற்பட்டு சண்டை, சச்சரவு, பூசல்கள் என்று ஏற்படலாயின. அறிவு படைத்தவர்கள் அறிவற்றவர்களை ஏமாற்றிப் பிழைக்கலானார்கள்.

இப்படிப்பட்ட நிலை இல்வலனுக்கு மிகவும் அனுகூலமாகியது. அவன் ஒரு தலைவனாகிவிட்டான். தன் மந்திர தந்திர இந்திரஜால வித்தைகளால் பலரது மனதைக் கவர்ந்துவிட்டான்.

அந்நகரின் நடுவே அகத்தியர் நிறுவிய விநாயக விக்கிரகம் இருக்கும் வரையில் மக்கள் அகத்தியரையும் அவரது நற்போதனைகளையும் மறக்க மாட்டார்கள் என்பது அவனுக்கு நன்கு தெரியும். எனவே தன் வித்தைகளைக் காட்டியவாறே அவன் மக்களிடையே மதுவை அருந்தும் பழக்கம் ஏற்படும்படிச் செய்தான்.

அகத்தியர் வகுத்த ஆட்சிமுறை மெதுவாக ஆட்டம் காணலாயிற்று. அகத்தியர் கூறியதெல்லாம் சரியல்ல என இல்வலன் கூறி மக்கள் ஒருவரையொருவர் எப்படி ஏமாற்றி வாழலாம் எனக் கூறலானான். யோகி போல வாழ்வது வாழ்க்கைக்கு ஏற்றது அல்ல என்றும் சகல போகங்களையும் அனுபவிப்பதே வாழ்க்கை என்றும் அவன் கூறி மக்களின் மனதை மயக்கலானான்.



 அவனது சீடர்களாகப் பல ராட்சஸர்களும் மனிதர்களைப் போல உருமாறி அவன் கூறியதை நகரின் பல பகுதி களிலும் கூறி வந்தார்கள். இப்போது இல்வலன் மாபெரும் தலைவனாகிவிட்டான். மக்கள் அவனைக் கண்டு பயந்து அவன் கூறியபடி நடக்க வேண்டியதாயிற்று.

இல்வலன் நகரின் நடுவே உள்ள மாபெரும் விநாயக விக்கிரகத்தை இடித்துத் தள்ளித் தரைமட்டமாக்கி விட வேண்டும் எனத் துடித்தான். அதற்கான ஏற்பாடுகளையும் செய் தான். அந்தச் சிலையை அடியோடு பெயர்த்துத் தள்ள முயன்றபோது ஓர் அற்புதம் நிகழ்ந்தது. திடீரென நெருப்புக் கட்டிகள் அதனைச் சுற்றி நின்றவர்கள் மீது விழுந்த வண்ணம் இருந்தன. அந்தத் தீப்பிழம்பில் அம்முயற்சியில் ஈடுபட்ட அனைவரும் அழிந்தனர்.

இல்வலனுக்கோ உடலில் பல இடங்களில் தீப்புண்கள் ஏற்பட்டன. ஒரு காலையும் கையை யும் இழந்து அவன் கீழே விழுந்து துடிதுடித்த போது, சிலையிலிருந்து ஒரு குரல் கூறியது. "அடே இல்வலா! இப்படியே கையையும் காலையும் இழந்தவனாய் உன் வாழ்நாள் முழு வதும் கஷ்டப்படு, போ. இதுதான் உனக்கு ஏற்ற தண்டனை."

அது விநாயகரின் சாபமே. ஆனால் வாதாபி நகரம் களை இழந்து போயிற்று. அங்கு ஒரு சில மக்களே நகரை விட்டு இன்னமும் போகாமல் இருந்தனர். இப்படியாக இந்த நகரம் பாழடைந்தது. இவ்வாறு தௌம்யர் கூறியதை கேட்ட அர்ஜுனனின் ஆச்சரியத்திற்கு எல்லையே இல்லை. அவன் அங்கு சுற்றிலும் பார்த்தான். விநாயக விக்கிரகம் தென்படவில்லை.

அப்போது தௌம்யர், "அர்ஜுனா! ஏன் இப்படி திகைத்துப் போய் நிற்கிறாய்?" என்றார். அப்போது ஒரு முட்புதரில் இருந்து ஒரு கிழவன் வெளியே வந்தான். அவனுக்கு ஒரு கையும் ஒரு காலும் இருக்கவில்லை. நடக்க முடியாததால் உடலால் தரையில் ஊர்ந்தவாறே அவன் அந்த மாபெரும் சிலை இருந்த இடத்திற்கு வந்தான்.
 
  அவன் அங்கு வணங்கிய போது அவனது உடல் கிடுகிடுவென ஆட்டம் கண்டது. மறுவிநாடி அப்படியே விழுந்து இறந்து போனான். இக்காட்சியைக் கண்ட அர்ஜுனன் தௌம்யரிடம், "குரு தேவரே! இவன் தானே இல்வலன்?" எனக் கேட்டான். அவரும், "ஆமாம். துஷ்டர்களுக்கும் போக்கிரிகளுக் கும் இந்த மாதிரி தான் முடிவு ஏற்படும்," என்றார். அர்ஜுனனும் உடனே சிலரை அனுப்பி தருமரை வாதாபி நகருக்கு வரும்படி தகவல் அனுப்பினான்.

தருமரும் பீமன், நகுலன், சகா தேவன் ஆகியோருடன் விரைவிலேயே வாதாபி நகருக்கு வந்து சேர்ந்தார். அன்றிரவு அவர் விநாயகர் சிலை திடீரென மறைந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டு "என் தம்பி தங்களது மாபெரும் விக்கிரகத்தை தரிசிக்கும் பாக்கியம் பெற்றான். எனக்கு அது கிடையாதா? இப்படிப்பட்ட மாபெரும் விக்கிரகத்தை இனி யாரால் அமைக்க முடியுமா? ஆயினும் தங்களது சிலை ஒன்றைப் பிரதிஷ்டை செய்யும் பாக்கியத்தை எனக்கு அளியுங்கள்," என விநாயகரை வேண்டியவாறே தியானத்தில் அமர்ந்துவிட்டார்.

அப்போது அவரது காதில், "தருமா! தேவ சிற்பியான விசுவகர்மாவும், மயனும் சேர்ந்து விக்கிரகத்தை உருவாக்கப் போகிறார்கள். அந்த விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டதும் உன் அசுவமேத யாகக் குதிரை இங்கிருந்து செல்லும். உன் அசுவமேத யாகமும் வெற்றிகரமாக முடியும். வாதாபி நகரை நீ மீண்டும் நன்கு அமைத்து விடு. உனது சந்திர வம்சத்து மன்னர்கள் இதை நீண்ட காலத்திற்கு ஆண்டு வருவார்கள்," என்ற குரல் ஒலித்தது. தருமர் கண் திறந்து பார்த்தார். ஒரு கணம் அவர் முன் விநாயகரின் மாபெரும் விக்கிரகம் தோன்றிப் பின்னர் சட்டென மறைந்தது.

மறுநாள் காலை இருவர் அந்த வழியில் உள்ள ஒரு வெள்ளை நிறக் கல்லைப் பார்த்து ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் யார் என்பதை ஊகித்து தருமர் அவர்களை வணங்கித் தக்க மரியாதைகளையும் செய்தார். அந்த கல்லைப் பெயர்த்து எடுக்கும்போது அதனடியிலிருந்து பெரும் புதையல் கிடைத்தது. ஆம்!

அதை இல்வலன் தான் புதைத்து வைத்திருந்தான். தருமர் அந்தப் பணத்தை வாதாபி நகரப் புனரமைப்பிற்காகச் செலவு செய்தார்.
இரு சிற்பிகளும் அழகான விநாயக விக்கிரகத்தைச் செய்து முடித்தார்கள். பிறகு முன்பு மாபெரும் விக்கிரகம் இருந்து மறைந்து போன இடத்தில் ஒரு பெரிய கோயிலைக் கட்டினார்கள். அதில் ஒரு பெரிய மண்டபமும் தயாராகியது.

விசுவகர்மாவும் மயனும் சேர்ந்து அமைத்த விக்கிரகத்தின் வாயிலாக ஒரு புதிய பாணி சிற்பக் கலையில் ஆரம்பமாகியது. தம் வேலை முடிந்ததும் அந்த இரு சிற்பிகளும் தாம் எப்படி வந்தார்களோ அப்படியே மாயமாய் மறைந்தும் போனார்கள்.

அந்த ஆலயத்தில் தருமர் அந்த விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்தார். அதன் பின்னர் அங்கே வந்து நின்ற அசுவமேத யாகக் குதிரை அங்கிருந்து வேகமாக ஓடலாயிற்று. பீமனும் அர்ஜுனனும் அதன் பின்னால் சென்றனர். அர்ஜுனன் அசுவமேதக் குதிரையோடு பல நாடுகளுக்குப் போய் வெற்றிக் கொடி நாட்டிவிட்டு ஹஸ்தினாபுரத்திற்கு திரும்பிச் சென்றான்.

அசுவமேத யாகத்தையும் அதன் பின்னர் தருமர் சிறப்பாகச் செய்தார். வாதாபியை ஆண்ட சந்திர வம்ச மன்னர்களுள் சத்துருஞ்ஜயன் என்பவன் நாடுகளைக் கைப்பற்றி ஆள ஆசை கொண்டவன். அவன் வாதாபி சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தான். தன் ராணுவத்தைப் பெரிதாக்கிக் கொள்ள மக்கள் மீது கடுமையான வரிகளை விதித்தான். அவனை மக்கள் மற்றொரு இல்வலன் என்றே குறிப்பிட ஆரம்பித்தனர்.

அவனது புதல்வர்களில் கடைசி மகனான சளுகவர்மன் மிகவும் நல்லவன். அகத்தியரின் ஆட்சிமுறைகளே சிறந்தது எனக் கருதியவன். விநாயகரை பயபக்தியுடன் வழிபடுபவன். அதனால் மக்களின் அன்பை அவன் அடைந்தான். சத்துருஞ்ஜயன் நாடுகளை வெல்லத் தன் புதல்வர்களை அழைத்தபோது சளுகவர்மன், "வீணாக மக்களை ஏன் கொல்ல வேண்டும்? இப்படிக் கொன்றா நாட்டைப் பெரிதாக்கிக் கொள்ள வேண்டும்?" என ஆட்சேபித்துத் தன் தந்தையோடு போக மறுத்துவிட்டான்.

அதனால் கோபம் கொண்ட சத்துருஞ்ஜயன் ஓர் எலியைப் பிடித்து அதற்கு சளுகை எனப்பெயரிட்டு அதற்கும் சளுகவர்மனுக்கும் கல்யாணம் நடக்கப் போவதாக அறிவித் தான். இப்படியாகத் தன் மகனை அவமானப்படுத்த முயன்றான்.

சளுகன் இதனால் மனம் தளர்ந்து விடவில்லை. தன் தந்தை செய்வது அக்கிரமமான செயல் என்பது அவனுக்குத் தெரியும். அக்கிரமம் புரிபவர்கள் முடிவில் அழிந்துதான் போவார்கள் என்பதும் அவன் நன்கு அறிந்ததே. அதனால் சத்துருஞ்ஜயனின் அடாத செயல்களைப் பற்றிக் கவலைப்படாமல் தனக்கு விநாயகர் எப்போதும் துணை இருப்பார் என உறுதியாக நம்பினான்.
சளுகையின் உண்மைப் பெயர் கல்யாண கிங்கிணி. இந்திரனின் சாபத்தால் ஓர் அப்ஸரப் பெண் அம்மாதிரி எலியாகப் பிறந்திருந்தாள். திருமணத்திற்கு வந்திருந்த எல்லோரும் மணப் பந்தலில் சளுக வர்மனைக் கேலியும் கிண்டலும் செய்வார்கள் என சத்துருஞ்ஜயன் நினைத்தான்.

அப்போது சளுகன், "இந்த மன்னன் ஓர் எலியைத் தன் மருமகள் ஆக்கிக் கொள்ள வேண்டும் என விநாயகர் நினைத்திருக்கிறார். ஆனால் அதே விநாயகர் இதனை ஓர் அழகிய பெண்ணாக மாற்றிவிடுவார். நீங்கள் எல்லோரும் பார்த்துப் பரவசம் அடையத்தான் போகிறீர்கள் பாருங்களேன்," என்றான். 

(தொடரும்)

விநாயகர் - 16

 
வாதாபி நகரின் நடுவே உள்ள பாறை விநாயகர் உருவத்தை அடைய வேண்டும் என அகஸ்தியர் விரும்பினார். லோபாமுத்திரை சித்திரக் கலையில் தேர்ந்தவள். அவள் அங்கு வந்து அந்தப் பாறையைப் பார்த்தாள். பிறகு அந்தப் பாறையில் எப்படி விநாயகரின் திருவடிவத்தை வடிக்க வேண்டும் என்பதற்கான படத்தையும் வரைந்தாள்.
 
ஆனால் அந்தப் படத்தின்படி விநாயகரின் திருவுருவத்தை அக்கல்லில் செதுக்கத்தக்க சிற்பி கிடைக்கவில்லை. பலர் வந்து முயன்றும் முடியவும் இல்லை. அகஸ்தியரோ அந்தப் பாறையின் முன் உட்கார்ந்து அதனையும் லோபாமுத்திரை வரைந்த விநாயகர் படத்தையும் மாறிமாறிப் பார்த்தவாறே இருக்கலானார்.
 
வந்த சிற்பிகள் எல்லோரும் "இப்படிப்பட்ட உருவத்தை எங்களால் வடித்துத் தர முடியாது. இதை தேவ சிற்பியான விசுவகர்மாவோ அல்லது மயனோ தான் வந்து செதுக்க வேண்டும்," எனக் கூறினார்கள். வேறு சிலர், "இந்தப் பாறையில் செதுக்க சாதாரண உளியால் முடியாது. தெய்வீக சக்தி வாய்ந்த உளி தேவை," என்றார்கள்.
 
இந்த சமயம் பார்த்து தேவ சிற்பியான விசுவகர்மாவும் மயனும் எங்கேயோ சென்றுவிட்டனர். இதனால் அகஸ்தியருக்கு அந்த விநாயகர் சிலை வடிக்கச் செய்வது ஒரு பெரும் பிரச்னையாக ஆகிவிட்டது.
அவர் அன்ன ஆகாரம் இன்றி அந்த பாறை முன் அமர்ந்து "விநாயகரே! என் விருப்பம் என்றாவது நிறை வேறுமா? இதனை நிறைவேற்றி வைப்பது உன் பொறுப்பு!" எனக் கூறியவாறே இருக்கலானார். ஒருநாள் மாலை ஒரு மலைச் சாதி சிறுவன் அவர் இருந்த இடத்திற்கு வந்தான். அவன் கையில் ஒரு உளி இருந்தது. அவனைப் பார்த்ததும் ஒரு சிற்பியோ என்ற சந்தேகம் அகஸ்தியருக்கு ஏற்பட்டது.
 
அவர் அவனது கையிலுள்ள உளியைப் பார்த்தவாறே இருந்தார். அச்சிறுவனோ, "முனிவர் போலுள்ள தாங்கள் இந்த பாறையின் முன் உட்கார்ந்திருக்கிறீர்களே! இங்கே ஏதாவது கல் வேலை கிடைக்குமா என்றே வந்தேன்," என்றான்.
 
அகஸ்தியரும், "வாப்பா வா. இந்தப் பாறையை விநாயகர் வடிவமாக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால் இதுவரை சரியான சிற்பி கிடைக்கவில்லை," என்றார்.
 
சிறுவனும், "எனக்கு இரண்டு வேலைகள் மட்டுமே தெரியும். ஒன்று நன்றாக வயிறு நிறையச் சாப்பிடுவது. மற்றது சிற்பவேலை," என்றான். அது கேட்டு அகஸ்தியர் சிரித்து, "இந்த மாபெரும் பாறையை மாபெரும் விநாயகர் வடிவமாக்கித் தரும் மாபெரும் சிற்பி யாராவது வருவார்களா என்றுதான் நான் காத்துக் கிடக்கிறேன். நீயோ சிற்பி எனக் கூறிக் கொள்கிறாய். மிகச் சிறியவனாகவும் இருக்கிறாய். இது உயரமான கடினமான பாறை. இதில் உன்னால் எங்கே விநாயகரின் வடிவைச் செதுக்க முடியும்?" என்று கூறினார்.
 
சிறுவனான சிற்பி சிரித்துக் கொண்டே, "நான் வயதிலும் உருவத்திலும் சிறிய சிற்பி என்பதால் என் வேலையின் தரம் குறைந்து இருக்கும் என எண்ணிவிட்டீர்களா? உருவம் பெரிதாக இருந்துவிட்டால் மட்டும் போதுமா? திறமை வேண்டாமா?" எனக் கூறியவாறே தந்தப்பிடி போடப்பட்ட தன் உளியை அவர் முன் ஆட்டிக் காட்டினான்.
 
அகஸ்தியர் அதனைக் கண்கொட்டாமல் பார்த்தார். அப்போது அச்சிறுவன் அதனை எடுத்து அப்பாறையின் மீது விட்டெறிந்தான். உளியின் முனை பாறை மீது பட்டதும் மின்னல் போலப் பளிச்சென வெளிச்சம் ஏற்பட்டது. இடிஇடிப்பதுபோன்ற சத்தமும் கேட்டது. அந்தப் பாறையில் ஒரு துவாரம் ஏற்பட்டது.
சிறுவன் "இதுதான் விநாயகரின் தொப்புள். இனி பாருங்கள் விநாயகரின் வடிவம் விரைவில் அமைந்து விடும்" என்று கூறி ‘ஸ்ரீகணநாத' எனப் பாட ஆரம்பித்தான். பிறகு அவன் "இந்தப் பாறையில் காந்த சக்தி உள்ளது. அதனால் உளி இதன் மீது படும்போது ஒளி ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அதனால் இந்த வேலை முடியும் வரை இந்தப் பகுதிக்கு யாரும் வரக் கூடாது. இடி இடிப்பது போன்ற சத்தம் ஏற்படும். அதனால் யாரும் பயந்துவிடவும் வேண்டாம். அகஸ்திய மாமுனிவரே! இனி கவலையைவிட்டு நீங்கள் செல்லுங்கள். நாளை காலையில் வந்து பாருங்கள். நீங்கள் விரும்பியபடி விக்கிரகம் தயாராக இருக்கும்," என்றான்.
 
அகஸ்தியரின் ஆச்சரியத்திற்கு அளவே இல்லை. அவர் லோபா முத்திரை வரைந்த படத்தை எடுத்து அச்சிறுவனிடம் கொடுக்கப் போனார். அச்சிறுவனும், "இதை தான் நீங்கள் நான் இங்கே வந்த போதே காட்டினீர்களே! நான் ஒரு முறை பார்த்து விட்டால் போதும், பிறகு மறக்கவே மாட்டேன். அடிக்கடி அதைப் பார்க்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. நான் என் வேலையை முடித்துவிடு கிறேன். பிறகு படம் எழுதியவர் வந்து பார்த்து ஏதாவது குறை இருந்தால் சொல்லட்டும். நீங்கள் இந்தப் படம் வரைய எவ்வளவு கொடுத்தீர்கள் என்பது தெரியாது. ஆனால் என் வேலை முடிந்ததும் எனக்கு எவ்வளவு கொடுக்கப் போகிறீர்கள் என்று பார்க்கிறேன்," என்றான்.
 
அதைக் கேட்ட அகஸ்தியர் திகைத்தார். அவர் லோபாமுத்திரகை்குக் கொடுக்க வேண்டிய பணத்தைத் தனியாக எடுத்து வைத்திருந்ததால் அவரிடம் வேறு பணம் எதுவும் இருக்கவில்லை. ஏதோ இருக்கும் கொஞ்சம் பணத்தைத்தான் கொடுக்க முடியும். இப்படி யோசித்தவாறே அகஸ்தியர் அங்கிருந்து சென்றார்.
 
அப்போது எதிரே வந்த லோபா முத்திரையின் முகம் சந்தோஷத்துடன் இருப்பது கண்டு அவர் "என்ன விஷயம்?" என்று கேட்டார்.
 
அவளும் "நான் உங்களிடம் நல்ல ஆடைகளும் தங்க நகைகளும் வேண்டும் என்று ஏன் கேட்டேன் என்று நினைத்து இப்போது வெட்கப்படுகிறேன். ரிஷிபத்தினி ரிஷியின் வாழ்க்கைக்கு ஏற்ப இருக்க வேண்டும்.
நான் உங்களை அதை எல்லாம் கேட்டது ஏதோ ஒரு கைங்கரியத்திற்காக உதவத் தான் போலும். ஏதோ ஒரு சக்திதான் என்னை அப்படிக் கேட்கச் சொல்லி இருக்கிறது. அதெல்லாம் எனக்கு வேண்டவே வேண்டாம்," என்றாள்.
 
அதுகேட்டு அகஸ்தியர் உள்ளூர மகிழ்ந்து போனார். அவர் "ஒரு சிற்பி கிடைத்துவிட்டான். விடிவதற்குள் சிலையைச் செய்துவிடுவானாம்!" என்றார். அத்துடன், அச்சிறுவனுக்கு என்ன கொடுப்பது என்பது தெரியாமல் விழிப்பதாகவும் கவலை தெரிவித்தார்.
 
அவளும், "எனக்காக நீங்கள் சேர்த்து வைத்த பணம் மற்றும் நகைகள் எல்லாம் உள்ளனவே. அவை போதாதா?" என்று கேட்டாள். அகஸ்தியரும் "அதுபற்றி காலையில் யோசிக்கலாம்," எனக் கூறினார். இரவுப் பொழுது கழியலாயிற்று. ஆனால் அவருக்குத் தூக்கமே வரவில்லை. பாறையருகே என்ன நடக்கிறது என்ற ஆவல் அவர் மனதில் ஏற்படவே எழுந்து அங்கு சென்றார்.
 
அவர் பாறை அருகே சென்றபோது ஆயிரக்கணக்கான உளிகள் பாறை மீது ‘டங்' ‘டங்'கென மோதும் சத்தத்தைக் கேட்டார். மின் பொறிகள் பாறையிலிருந்து தெரித்து வெளி வந்தன. அது கனவா நனவா என அவர் தம் கண்களை ஒருமுறை கசக்கிக் கொண்டு பார்த்தார். அவருக்குத் தலையே சுற்றுவது போல் இருந்தது. அப்படியே மயங்கி கீழே விழுந்துவிட்டார்.
 
யாரோ தன்னைத் தட்டி எழுப்புவது உணர்ந்து அகஸ்தியர் கண் விழித்துப் பார்த்தார்.
அப்போது நன்கு விடிந்து விட்டது. அச்சிறுவனான சிற்பிதான் அவரை தட்டி எழுப்பியவன். "விக்கிரகம் தயாராகி விட்டது. படம் வரைந்து கொடுத்த வரை அழைத்து வாருங்கள். அவர் வரைந்தது போல இது இருக்கிறதா என்று பார்க்கட்டும்!" என்றான்.
 
அன்று விநாயகர் சதுர்த்தி என்பதால், லோபாமுத்திரை ஓர் பாத்திரம் நிறைய மோதகங்களையும் இட்டிலிகளையும், மற்றொரு குடத்தில் நீரும் புஷ்பங்களும் எடுத்து கொண்டு அங்கே வந்து சேர்ந்தாள்.
 
அகஸ்தியரோ படிகம் போலப் ‘பளபள'வென மின்னும் விநாயக விக்கிரகத்தைக் கண்டு திகைத்து நின்று கொண்டிருந்தார். சிறுவனோ, "இதற்குக் கூலியாக என்ன கொடுக்கப் போகிறீர்கள்?" என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.
 
அகஸ்தியரோ, "சிற்ப சிரோண்மணியே! உனக்கு என்ன கொடுத்தாலும் தகும். ஆனால் என்னிடம் ஏதோ கொஞ்சம் பணம் உள்ளது. அதை எல்லாம் உனக்கே கொடுத்துவிடுகிறேன். ஏற்றுக் கொள்!" என்றார்.
 
அப்போது அச்சிறுவன், "அது சரி. அந்தப் படம் வரைய என்ன கொடுத்தீர்கள் என்று இன்னமும் சொல்லவில்லையே. அது அருமையான கலைத்திறன் நிரம்பிய படம். அதைப் போல விக்கிரகம் செய்வது மிகவும் கடினமான வேலையே!" என்றான்.அப்போது அகஸ்தியர், "ஐயா சிற்பி யாரே! அந்தப் படத்தை வரைந்தவருக்கு நான் எதுவுமே கொடுக்கவில்லை. ஏனெனில் அந்த படத்தை வரைந்தது என் மனைவியேதான்," எனக் கூறினார். லோபாமுத்திரையோ தியானத்தில் நின்றாள்.
 
அப்போது அந்த சிறுவன், "மகரிஷியே! நான் மட்டும் அந்தப் படத்தை வரையச் சொல்லி இருந்தால் இப்படி அழகாக வரைந்தவருக்கு ஒரு மாபெரும் நகரத்தை நிர்மாணிக்க எவ்வளவு பணம் பிடிக்குமோ அதனைக் கொடுத்து அந்த ஓவியரை கௌரவிப்பேன். அவ்வளவு பணம் இந்தப் பெண்மணிக்கு சேர வேண்டும்," என்றான்.
 
அகஸ்தியரும் "ஆமாம். நானும் அவ்வளவு பணம் அவளுக்காகச் சேர்த்து வைத்திருக்கிறேன்" என்றார்.
 
சிறுவனும், "ஓ! அப்படியா? உங்கள் மனைவிக்காக எடுத்து வைத்த பணத்தையா எனக்குக் கொடுக்கப்போகிறீர்கள்? அதை நான் வாங்கிக் கொள்வது மாபெரும் பாவம். அதில் இருந்து ஒரு செப்புக் காசு கூட எனக்கு வேண்டாம்," என்று கூறினான். பிறகு அவன் லோபாமுத்திரையை பார்த்து "அம்மா! தங்கள் கையால் எனக்கு ஒரு விள்ளல் இட்லி கொடுங்கள். அதுதான் நான் உங்களிடம் கேட்கும் கூலி," என்றான்.
 
அதைக் கேட்ட லோபாமுத்திரை இட்லிப் பாத்திரத்தையே எடுத்து அந்தச் சிறுவனின் முன் வைத்து அவன் கால்களில் விழுந்து வணங்கி, "விநாயகரே! உங்களைக் கண்டு இந்த ஜென்மம் சாபல்யம் அடைந்தது," எனக் கூறினாள். அப்போதே அந்த சிறுவனும் அங்கிருந்து மாயமாய் மறைந்து போனான்.
 
அப்போது தான் அகஸ்தியரின் கண்களை மறைத்திருந்த மாயை அகன்றது. அவர் அந்த விநாயக விக்கிரகத்தின் முன் நின்று வணங்கி "மூஷிக வாகனனே, விநாயகா! நான் தவவலிமை பெற்றவன், மாபெரும் யோகி என்றெல்லாம் கர்வப்பட்டு கொண்டிருந்தேன். ஆனால் உன் முன் நான் எம்மாத்திரம்?" என்று கூறினார். விநாயகத் தோத்திரம் அப்போது அவரது காதில் ஒலிக்க, அகஸ்தியரும் லோபா முத்திரையும் விழுந்து வணங்கினர்.
 
 
 

விநாயகர் - 15

 
பாண்டவர்கள் நாரதர் கூறியபடி கணேச விரதத்தைத் தம் புரோகிதரான தௌம்யரைக் கொண்டு நடத்தி, தம் அஞ்ஞாத வாசத்தை விராட மன்னனின் நாட்டில் வெற்றிகரமாக முடித்தார்கள். பின்னர் அவர்கள் கௌரவர்களோடு போர் புரிந்து வெற்றி பெற்றுத் தம் நாட்டை திரும்பப் பெற்றார்கள். தருமரின் பட்டாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
 
பிறகு தருமர் அசுவமேதயாகம் செய்ய ஏற்பாடுகளைச் செய்யலானார். அர்ஜுனன் யாகக் குதிரையின் பின்னால் பெருத்த படையோடு பல நாடுகளுக்குச் சென்றான். தௌம்யரும் அவனோடு சென்றார். யாகக் குதிரை சென்ற நாடுகளில் இருந்த மன்னர்கள் எல்லாம் தருமரின் கீழ் சிற்றரசர்களாக இருக்கச் சம்மதித்தார்கள். யாகக் குதிரை இப்படியே போய் ஓரிடத்தில் நின்று விட்டது. அங்கிருந்து அது நகரவே இல்லை.
 
அதுகண்டு அர்ஜுனன் ஆச்சரியப்பட்டு தௌம்யரிடம் அதற்கு என்ன காரணம் என்று கேட்டான். அவரும் அருகிலிருந்த நகருக்கு அழைத்துப் போய் ஒரு விநாயகரின் சிலையைக் காட்டினார். அது ஒரு பாறையில் இருந்து உருவாகி இருந்தது. பார்க்க மிகவும் அழகாக இருந்தது.
 
தௌம்யர் அர்ஜுனனிடம், "அர்ஜுனா! இந்த விநாயகரை வணங்கிப் பூஜை செய். இவருக்கு வாதாபி கணபதி என்ற பெயர்.
இவரைப் பற்றியும் இந்த வாதாபி நகரம் பற்றியும் விவரமாகக் கூறுகிறேன்," என்றார். அர்ஜுனனும் பூஜையை முடித்துவிட்டு அந்த நகரைச் சுற்றிப் பார்த்தான்.
 
ஒரு காலத்தில் அந்நகர் அழகாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்போதோ பாழடைந்து கிடந்தது. ஏதோ பெயரளவில் ஒரு சிலர் சில வீடுகளில் வசித்தனர். அவர்கள் அர்ஜுனனைக் கண்டு மகிழ்ந்து வரவேற்றுப் பழங்களை அளித்து தம் நகரை மீண்டும் நிர்மாணித்துத் தருமாறு வேண்டினார்கள்.
 
தௌம்யரும் "அர்ஜுனா! இது வாதாபி நகரம். அகஸ்தியர் இந்த விநாயகர் சிலையை உருவாக்கி இங்கு வைத்தார். கங்காதேவி கவேரர் என்ற ராஜரிஷியின் கமண்டலத்தில் விழுந்து காவேரியாகி அவரது ஆசிரமத்தில் வளர்ந்து வந்தாள். அகஸ்தியர் அந்தப் பெண்ணைப் பார்த்ததும் தாம் அவளை விவாகம் செய்து கொள்வதாக கவேரரிடம் கூறினார்.
 
கவேரரும் "எனக்கு சம்மதமே. ஆனால் காவேரியின் அபிப்பிராயத்தையும் தெரிந்து கொள்வது நல்லது," என்றார். அகஸ்தியரும் ‘சரி' எனக் கூறிக் காவேரியிடம் சுமுகமாகப் பேசிப் பழகலானார். ஒருநாள் அவள் அகஸ்தியரிடம் "நாம் சஹ்ய மலைமீதுள்ள காடுகளைப் பார்த்து வருவோம்," எனவே அவரும் அவளை அழைத்துக் கொண்டு அங்கு சென்றார்.
 
அப்பகுதியில் சுற்றி வரும்போது ஒரு நீர் மடுவில் அழகான தாமரை மலர் இருப்பதைக் காவேரி கண்டு அதனைப் பறிக்க அதனுள் இறங்கினாள். ஆனால் அந்த மடுவின் நீர் அவள் மீது பட்டதுமே அவள் தண்ணீராக மாறிப் பெருக்கெடுத்து சஹ்யமலை உச்சியிலிருந்து கீழ் நோக்கிப் பாய்ந்து செல்லலானாள். அவள் காவேரி நதியாக மாறி விட்டாள்.
 
அகஸ்தியர் காவேரியை வெகு நாட்கள் வரை நினைத்துக் கொண்டே இருந்தார். பின்னர் விரக்தி அடைந்து அவர் கடுந்தவம் புரிந்து மனதை அடக்கி மாபெரும் முனிவர் என்ற பெயரும் பெற்றார். ஒருநாள் அவர் ஒரு மரக்கிளையில் தொங்கும் பித்ரு தேவதைகளைக் கண்டு, "நீங்கள் யார்? ஏன் இப்படித் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்.
அவர்களும் "எங்கள் வம்சத்தில் தோன்றிய அகஸ்தியன் குடும்பஸ்தனாக ஆகிவிட்டால் எங்களுக்கு விமோசனம் ஏற்பட்டு இந்த நிலை மாறிவிடும். அவன் அப்படிச் செய்யும்வரை நாங்கள் இப்படித்தான் இருந்தாக வேண்டும்," என்றார்கள்.
 
அப்போது அகஸ்தியர் ஞான திருஷ்டியால் பார்த்தார். தாம் விரும்பிய காவேரி மறுபிறப்பில் விதர்ப்ப மன்னனின் புதல்வி லோபாமுத்திரையாகப் பிறந்திருப்பது தெரிந்தது. அவர் விதர்ப்ப மன்னனிடம் போய் லோபாமுத்திரையைத் தனக்கு மணம் செய்து வைக்கும்படிக் கேட்டார்.
 
காய் கனி கிழங்குகளைச் சாப்பிட்டு காஷாயம் அணிந்து கானகத்தில் திரியும் ஒருவனுக்கு அரச குமாரியை யாராவது கொடுக்க இசைவார்களா? ஆனால் அப்படிக் கொடுக்காவிட்டால் முனிவர் தன்னை சபித்து விடுவாரோ என்ற பயம் விதர்ப்ப மன்னனுக்கு ஏற்பட்டது. அதனால் அவன் கவலையில் மூழ்கி விட்டான். அதைக் கண்ட லோபா முத்திரை விஷயத்தைத் தெரிந்து கொண்டு தன் தந்தையிடம் தன்னை அகஸ்தியருக்கே மணம் செய்து வைக்கும்படிக் கூறினாள். விதர்ப்ப மன்னனும் லோபாமுத்திரையை அகஸ்தியருக்கு திருமணம் செய்து வைத்து அனுப்பி வைத்தான்.
 
அகஸ்தியர் லோபாமுத்திரையுடன் தம் ஆசிரமத்திற்கு வந்தார். அவர் அவளிடம் "என் பித்ருக்கள் நரக வேதனையிலிருந்து விடுபட நமக்குக் குழந்தைகள் பிறக்க வேண்டும். அதற்காகவே நான் உன்னைத் திருமணம் செய்து கொண்டேன்," என்றார்.
 
அப்போது லோபாமுத்திரை தன் அழுக்கடைந்து நைந்து போன புடவையைக் காட்டி, "நான் அரச குமாரியாகப் பிறந்தவள். எனக்கு இந்த மாதிரிப் புடவை இல்லாமல் நல்ல பட்டுப் புடவைகளாயும் நகைகளாகவும் கொண்டு வந்து கொடுக்க வேண்டியது உங்கள் கடமை. அதற்கு வேண்டிய பணம் சம்பாதித்துக் கொண்டு வாருங்கள்!" என்று கூறினாள். அகஸ்தியர் அவள் கூறுவதில் உண்மை உள்ளது என நினைத்து பணம் சம்பாதித்து வரக் கிளம்பினார். அவர் பல அரசர்களைக் கண்டு அவர்களிடம் உபரியாக உள்ள பணத்தை தமக்குக் கொடுக்கும்படிக் கேட்டார்.ஆனால் எல்லா அரசர்களும் தம்மிடம் உபரியாகப் பணம் இல்லை என்று கூறி அனுப்பிவிட்டார்கள்.
 
அகஸ்தியர் மனம் ஒடிந்து போய் போய்க் கொண்டிருக்கையில் ஓரிடத்தில் ஒரு பாறையைக் கண்டார். அந்தப் பாறை விநாயகர் வடிவில் உள்ளது கண்டு அவர் அதனை வணங்கி "விநாயகரே! தவத்தை தவிர, வேறு எதைப் பற்றியும் நினையாத நான் பணம் சம்பாதிக்கக் கிளம்பினேன். ஆனால் அதை அடைய வழி தெரியவில்லை. எனக்குப் பணம் எப்படிக் கிடைக்கும் என்று வழி காட்டுங்கள்," என வேண்டினார்.
 
அப்போது விநாயகரே அவர் முன் தோன்றி, "சற்று நேரத்தில் இல்வலன் என்பவன் வந்து உங்களைத் தன் வீட்டில் சாப்பிடக் கூப்பிடுவான். நீங்கள் போய் அவனிடம் இருக்கும் கணக்கில் அடங்காத பணத்தை அடையுங்கள். அங்கு உங்களால் ஒரு முக்கியமான வேலையும் ஆக வேண்டியது இருக்கிறது," என்றார்.
 
அப்போது அகஸ்தியர் "விநாயகரே! இந்தப் பாறை உங்களது விக்கிரகம் போல இருந்தது. எனவே இது தானே முளைத்து வந்தது போலத் தோன்றச் செய்ய வேண்டுகிறேன்,"
 
என்றார். விநாயகரும் அப்படியே ஆகட்டும் என கூறி மறைந்தார். அகஸ்தியர் மிகவும் களைத்துப் போயிருந்தார். அந்தப் பாறையருகிலேயே உட்கார்ந்து விட்டார். அப்போது இல்வலன் சிலரை அழைத்துக் கொண்டு வருவதை அவர் கண்டார். அகஸ்தியருக்கு அவனை பற்றிய விவரம் உடனே தெரிந்தது.
 
அப்பகுதியில் வாதாபி, இல்வலன் என்ற இரு ராட்சஸர்களும், அவ்வழியே வரும் முனிவர்களையும், பயணிகளையும் கொன்று சாப்பிட்டுவிட்டு அவர்கள் வைத்திருக்கும் பணத்தைச் சேர்த்துவைப்பதை அறிந்தார். அத்துடன், இல்வலன் தான தர்மம் செய்யும் மன்னன் போல வேஷம் போட்டு அவ்வழியே வருபவர்களைத் தன் வீட்டிற்குச் சாப்பிட வருமாறு கூறி அழைத்துச் செல்வான்.
 
அங்கு வாதாபியை கொழுத்த ஆடாக மாற்றி அதனை வெட்டி சமைத்து, அந்த மாமிசடுத்தை விருந்துண்பவர்களுக்குக் கொடுத்து, அதன் பின் "வாதாபி, வா வெளியே!" என்பான். மறுநிமிடமே வாதாபி விருந்து சாப்பிட்டவர்களின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வருவான். பிறகு அந்த நர மாமிசத்தை இல்வலனும் வாதாபியும் சாப்பிட்டுவிடுவார்கள். இந்த ரகசியத்தை அகஸ்தியர் தெரிந்துகொண்டார்.
 
இல்வலன் அகஸ்தியரை அணுகி அவரைத் தன் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுப் போகுமாறு வேண்டினான். அகஸ்தியரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தவர் போல அவனோடு சென்றார்.
 
அவர் இல்வலனிடம் "எனக்கு ரொம்பப் பசி. ஆட்டு மாமிசம் சாப்பிட்டு பழக்கப்படுத்திக் கொண்டுவிட்டேன். எனவே எனக்கு முதலில் விருந்து போட்டு அனுப்பு!" என்றார். இல்வலனும் வாதாபியான ஆட்டை வெட்டி, நெருப்பில் வாட்டி அகஸ்தியருக்கு உண்ணக் கொடுத்தான்
அகஸ்தியர் அந்த ஆட்டு மாமிசத்தை நன்கு அரைத்துச் சாப்பிட்டார். அதன் பின் பானை நிறைய மது கேட்டார்.
 
 இல்வலனும், "சரி, அதை இப்பொழுதே கொண்டுவரச் சொல்கிறேன். வாதாபி, வா இங்கே!" என்று உரக்கக் கூவினான். அகஸ்தியர் மெதுவாகத் தன் வயிற்றைத் தடவிக் கொண்டே, "வாதாபியா? இனிமேல் அவன் எங்கே வரப் போகிறான்? அவன்தான் ஜீரணமாகிவிட்டானே. வாதாபி ஜீர்ணம்! வாதாபி ஜீர்ணம்!! வாதாபி ஜீர்ணம்!!!" என்று மூன்று முறை கூறினார்.
 
இல்வலன் அதுகேட்டு திடுக்கிட்டான். வாதாபியும் வழக்கம் போல் விருந்தாளியின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வராமல் போகவே அவன் பயந்து ஓடியே போய்விட்டான். இப்படியாக அந்த இரு அரக்கர்கள் வழிப்போக்கர்களுக்குக் கொடுத்து வந்த தொல்லை ஒழிந்தது.
 
அகஸ்தியர் அங்கு இல்வலனும் வாதாபியும் பயணிகளிடமிருந்து பறித்து வைத்திருந்த பணத்தையும் பொருள்களையும் தனக்கு வேண்டிய அளவிற்கு எடுத்துக் கொண்டார். மீதம் இருந்ததைக் கொண்டு ஒரு பெரிய நகரத்தை அவர் அங்கே நிர்மாணித்தார். அதில் ஆயிரக்கணக்கான மக்களைக் குடிபுகச் செய்தார்.
 
அகஸ்தியர் கண்ட பாறையைச் சுற்றித்தான் இந்த நகரம் அமைந்தது. வாதாபி இறந்ததால் ஏற்பட்ட நகரமாதலால் அகஸ்தியர் அதற்கு வாதாபி எனப் பெயரிட்டார். ஆட்சி முறை பற்றி அவர் அந்தப் பாறையிலேயே செதுக்கி வைத்தார். மக்களே அந்த நகரை அவர் வகுத்துக் கொடுத்த முறையைப் பின்பற்றி ஆண்டு வந்தார்கள்.
 

Flag Counter