Showing posts with label நீதி கதைகள். Show all posts
Showing posts with label நீதி கதைகள். Show all posts

வலிமை

சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. ஒரு நாள் சிங்கம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கைக் கேட்டது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம்.

கழுதைப்புலியோ "நீ ஏன் குடலைக் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்குதானே நமக்கு உரியது?" என்று கேட்டது. குட்டி கழுதைப்புலி சொல்லியது: "நான் சின்னப்பயல். பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வரமுடியும். நான் எப்படி சிங்ஙத்தோடு விவாதிக்க முடியும்" அதைக்கேட்ட கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது.

சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. கழுதைப்புலி வந்ததைக் கண்டு கண்களை அச்சமூட்டும் வகையில் வைத்திருந்தது. "ஏன் இங்கே வந்தாய்?" கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது. பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி தற்போது தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு பேசியது: "ராஜ சிங்கமே ! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம்."

குடலை சிங்கத்திடம் கொடுத்து விட்டு திரும்பிய கழுதைப்புலியிடம் குட்டி கேட்டது. பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் குடலையும் கொடுத்து விட்டு வருகிறீர்களே? "மகனே... சிங்கம் மிகக் கொடூரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கி விட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டி விட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக" என்றது தாய் கழுதைப்புலி.

நீதி : நம்மை விட வலிமையானவர்களைக் கோபப்படுத்துவதை விட அவர்களை சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது.

துன்பம்

அது பல படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனை.   அவற்றில் ஒரு அறையில் இரு தீவிர  நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை. இருவருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர். ஒருவர் படுக்கை சன்னல் அருகில். இன்னொருவருக்கு சன்னல் கிடையாது. எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர தனிமை.. தனிமை.. தனிமை..!

சன்னல் படுக்கை நோயாளிக்கு புற்றுநோய். இன்னொருவர் கடும் எலும்பு முறிவு நோயாளி.  நாளடைவில் நட்பாகிவிட்டனர். ஒருமுறை எலும்பு நோயாளி சன்னல் நோயாளியிடம் சொன்னார்..

உனக்காவது பொழுது போக்க, ஒரு சன்னல் இருக்கிறது.. எனக்கு அதுகூட இல்லை..!” கவலைப்படாதே நண்பா.. நான் சன்னலூடே என்னென்ன காண்கிறேனோ, அவ்வளவையும் உன்னிடம் விவரிக்கிறேன். இதை ஒரு ஒப்பந்தமாகவே கடைப்பிடிப்பேன்..!

அன்று முதல் சன்னல் நோயாளி, தான் கண்ட காட்சிகளை சுவைபட தன் நண்பனுக்குக் கூறலானார்..  நண்பா.. சன்னலுக்கு வெளியே ஒரு பெரிய ஏரி.. நடுவில் சிறு தீவு.. ஏரியில் படகுகள் மிதக்கின்றன.. ஏரிக்கரையில் அழகான பூங்கா..! காதலர்கள் தன்னை மறந்து கதைகள் பேசுகின்றனர்..!”

எலும்பு நோயாளிக்கு அப்படியே காட்சிகள் மனக்கண்ணில் விரியும்.. சன்னல் நோயாளி இன்னொரு நாள் சொல்வார்..

ஏரிக்கரை ஓரமாக ஒரு சாலை.. அதில் மணப்பெண் அழைப்பு ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது.. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஓடித் திரிகின்றன. மணப்பெண்ணிடம் தோழி ஏதோ சொல்கிறாள்.. மணப்பெண் முகத்தில் அப்படி ஒரு வெட்கம்..!”

ஊர்வல அரவங்கள் எதுவும் எலும்பு நோயாளிக்கு கேட்கவில்லையாயினும் நாதசுரமும், தவிலும் ஒலிக்க ஊர்வலம் போகும் காட்சியை நன்கு அனுபவிப்பார்..

ஒருநாள் சன்னல் நோயாளி செத்துப்போனார்..

மீண்டும் எலும்பு நோயாளிக்கு வெறுமை  ஒருநாள் செவிலி வந்தபோது, தன் படுக்கையை சன்னல் ஓரமாக மாற்றித்தரும்படி கேட்டுக்கொள்ள, அவ்வாறே செய்யப்பட்டது.

இனி எனக்கு நன்கு பொழுது போகும் என்று எண்ணியவாறே.. தன் எலும்பு முறிவு வலியையும் பொருட்படுத்தாமல் மெல்ல தன் உடலை உயர்த்தி சன்னல் வழியே நோக்க. அங்கே பெரிய சுவர்..! வேறு எதுவுமே இல்லை..!

அப்படியானால் சன்னல் நோயாளி சொன்ன கதைகள்?

மறுநாள் செவிலி வந்தவுடன், நடந்தவற்றை எலும்பு நோயாளி கூறினார்..செவிலி, எலும்பு நோயாளிக்கு ஊசி மூலம் மருந்தை ஏற்றியபடியே சொன்னாள்..

நீங்கள் பார்க்கும் சுவர் கூட அவருக்கு தெரிந்திருக்காது.. புற்றுநோயின் தாக்கத்தால் அவர் பார்வையை எப்போதோ இழந்துவிட்டிருந்தார்..!”

நீதி : தன் துன்பங்களை மறைத்துக்கொண்டு மற்றவர்களை உற்சாகப்படுத்தும் மிகச்சில மனிதர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்..  அவர்களைப் போற்றாவிட்டாலும் பரவாயில்லை.. குறைகூறாதீர்கள்..!

மனத்திருப்தி


ஒரு கோவிலில் கல்தச்சர்களின் முயற்சியால் சிற்பங்கள், சிலைகள், விக்ரகங்கள் வடிவமைக்கப் பட்டுக்கொண்டு இருந்தன.


ஒரு கல்தச்சர் ஒரு சிலையை உருவாக்கிக்கொண்டு இருந்தார். அவரின் அருகில் ஒரே மாதிரியான இரண்டு சிலைகள் இருந்தன. எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரியாக இருந்தன.
 
அதைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர்,  ஒரே விக்ரகத்திற்கு இரண்டு சிலைகளை உருவாக்குகிறீர்களா அய்யா?என்றார்.

கல்தச்சர் சொன்னார், “எங்களுக்கு ஒரே ஒரு சிலையே போதுமானது. ஆனால் முதலில் செய்யப்பட்ட சிலையில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதனால் இரண்டாவது சிலையை உருவாக்குகிறேன்.

வழிப்போக்கர் நன்றாக இரண்டு சிலைகளையும் உற்றுக் கவனித்துவிட்டுச் சொன்னார் எந்த சேதமும் எனது கண்ணுக்குத் தெரியவில்லையே”.

தனது வேலையில் கவனத்துடன் இருந்த கல்தச்சர் சொன்னார் அந்தச்சிலையின் மூக்கின் அருகில் ஒரு சிறிய சேதமுள்ளது.” என்றார்.

“இந்தச் சிலையை எங்கே நிர்மாணிக்கவிருக்கிறீர்கள்?” என்றார் வழிப்போக்கர்.

50 அடி உயரத்தில் மேலே நிர்மாணிக்க இருக்கிறோம் என்றார் கல்தச்சர்.

அதற்கு ஐம்பதடி உயரத்தில் இருக்கப்போகிற சிலையின் மூக்கினருகில் இருக்கும் இந்தச் சிரிய சேதத்தை யார் கவனிக்கப் போகிறார்கள்?என்றார் வழிப்போக்கர்.

தனது வேலையை சற்று நிறுத்திவிட்டு வழிப்போக்கரிடம் புன்னகையுடன் கல்தச்சர், சொன்னார்யார் கவனிக்கப் போகிறார்கள்? எனக் கேட்கிறீர்கள்வேறு யாருக்கும் அந்தச் சேதம் தெரிவதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.

எனது கடமையில் இப்படி ஒரு சேதத்தை நான் உருவாக்கியதை அடுத்தவரிடம் மறைப்பது எனக்குப் பிடிக்கவில்லை. சேதம் சிரியதா? பெரியதா? என்பது பற்றிக் கவலையில்லை. செய்யும் தொழிலில் பிழையேற்படலாம். ஆனால் பிழையை மறைக்காமல் வெளிப்படையாக இருக்கவே விரும்புகிறேன்.

நீதி: உயர்ந்த தரம் என்பது அடுத்தவரின் பார்வையில் இருந்து வரவேண்டியது இல்லை. அது தனக்குள்ளேயே இருந்து வரவேண்டும். அடுத்தவருக்காக வேலைசெய்வதில் கிடைக்கும் இன்பத்தை விட தன் மனத்திருப்திக்காக வேலைசெய்வதில் கிடைக்கும் மகிழ்ச்சி அதிகம்.

நேர்மை!

மரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர் பணத்தாசைப் பிடித்தவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சரியான கூலி கொடுக்கமாட்டார்.

ஒரு முறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கும் வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார்.

வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப்பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பி தள்ளினார். மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் முதல் அனைவரையும் கேட்டு பார்த்து கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார். அப்போ அவரது மனைவியார்உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்க, கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க" என்றார்.

ஆகா இது நல்ல திட்டமாக இருக்கிறதே என்று நினைத்து அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். ஊர் மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து சன்மானம் வாங்கலாம் என்று நினைத்தார்கள். அப்படி தேடி பார்த்தும் யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை.

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இருந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர்.

அவர் விவசாயம் செய்த நிலத்தில் நிலத்தடி நீர் கிடைக்காததால் விவசாயம் சரியாக செய்யமுடியவில்லை, வேறு தொழில் செய்யவோ தன்னிடம் பணமும் அனுபவமும் இல்லை என்பதால் பக்கத்து ஊருக்கு சென்று ஏதாவது வேலை செய்து, சம்பாதித்து பின்னர் தொழில் தொடங்க நினைத்து வந்தார். போகிற வழியில் காட்டுப்பாதையில் இருந்த அம்மன் கோயிலுக்கு போய் வேண்டிக் கொண்டார்.

அப்படி காட்டுவழியில் போகும் போது அங்கே ஒரு புறா அடிப்பட்டு கீழே கிடந்தது, அதை பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்த புறாவை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு கொண்டு சென்று தண்ணீரை எடுத்து அந்த புறாவின் வாயில் ஊற்றினார், பின்னர் அந்த புறாவை அருகில் இருந்த மரக்கிழையில் வைத்துவிட்டு வந்தார்.  

அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதை கண்டார், அது ஒரு பை. அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன் பணப்பையை விட்டு விட்டு போயிட்டாங்க, அப்படி தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என்று ஊருக்கு விரைந்தார்.

அப்போ ஊருக்குள் சென்ற போது அங்கே இருந்த கடையில் விசாரித்த போது கடைக்காரர் சோமனைப் பற்றி சொல்லி, அவர் தான் தொலைத்தவர், நீங்க இதை கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார்.

உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொன்னார், சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. உடனே அந்த பணப்பையை வாங்கிக் கொண்டார், அதே நேரம் அவரது கெட்ட எண்ணமும் வெளிப்படத் தொடங்கியது. பணப்பை கிடைத்து விட்டது, பணமும் சரியாக இருக்குது, இப்போ ஏன் இவனுக்கு சன்மானம் கொடுக்க வேண்டும், சன்மானம் கொடுக்காமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் சோமன்.

கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்துநீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய், நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை, மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன் என்று கத்தினான்.

பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒருவேளை இவர் சொன்னது போல் வைர மோதிரம் இருந்து தொலைந்து போயிருக்குமா, நாம் தான் எடுக்கவில்லையே, இவரிடம் சன்மானம் வாங்குவதை விட பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தார்.

சோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார், பூபாலன் பணப்பை கொண்டு வந்த செய்தியை ஊராருக்கு சொன்ன கடைக்காரர், கஞ்சப்பயல் சோமன் அப்படி என்னத்தான் பரிசு கொடுக்கப் போறான் என்று பார்ப்போம் என்று அனைவரையும் அழைத்து வந்தார். வந்த இடத்தில் பூபாலன் குற்றவாளி போல் நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சனையை மரியாதை ராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள்.

சிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர் மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். சோமன் தான் பணப்பையும், அதில் இருந்த வைர மோதிரம் தொலைத்த கதையையும், பூபாலன் தான் பணப்பை கண்டுபிடித்த கதையையும் சொன்னார்கள்.

ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும், அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்தது தான்.

ஆக மொத்தம் சோமன் ஏமாற்றுகிறான் என்பதை புரிந்துக் கொண்ட மரியாதை ராமன், சோமனுக்கு சரியான தண்டனை கொடுக்க நினைத்து இவ்வாறாக தீர்ப்பு கூறினார்சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார். இப்போ பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது, ஆக இது சோமனின் பையே இல்லை, வேற யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊர் வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன் கோயில் செலவுக்கு கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக் கொள்ளலாம், ஆக பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்து வைத்துக் கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம்.

மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது. பூபாலன் கிடைத்த பணத்தில் 10 சதவிதம் அம்மன் கோயிலுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்து வந்தார்.
 
நீதி : ஏமாற்ற நினைபவர்கள் இறுதியில் தாமே ஏமாந்து போவார்கள் . பிறருக்கு நன்மை செய்து நேர்மையாய் வாழ்பவர்களை இறைவன் என்றும் கைவிடமாட்டான் .

Flag Counter