Showing posts with label இராமாயணம். Show all posts
Showing posts with label இராமாயணம். Show all posts

உத்தரகாண்டம் - 5


 



இராமர் சம்புகனைக் கொன்றுவிட்டு அயோத்திக்குத் திரும்பினார். வந்ததும் பரதனையும், இலட்சுமணனையும் வரவழைத்து அவர்களிடம் "தம்பிகளே, எல்லாப் பாவங்களையும் போக்கும் இராஜசூயமென்ற யாகத்தை நான் செய்ய எண்ணியுள்ளேன். உங்கள் அபிப்பிராயம் என்ன?" எனக்கேட்டார்.

அப்போது பரதன் "அண்ணா, உங்களது நீதிக்கும், நேர்மைக்கும் இணை ஏது? இந்த யாகத்தைச் செய்வதால் பல அரசர்கள் தாம் மடிய நேரிடும். சிலர் வீண் பிடிவாதத்தால் உங்களை எதிர்த்து தோற்று உயிரை இழப்பார்கள். எனவே, பல உயிர்களைப் போக்கும் இந்த யாகத்தைச் செய்ய வேண்டாம்" என்றான்.
அதைக் கேட்டு இராமர் மகிழ்ந்து போனார். அப்போது இலட்சுமணன் "அண்ணா, எல்லாப் பாவங்களையும் போக்கிக் கொள்ளச் செய்யப்படும் யாகம் அசுவமேதம். முன்பு இந்திரன்கூட தன் பாவங்களை போக்கிக் கொள்ள பிரகஸ்பதியின் உதவியால் அசுவமேத யாகம் செய்தான்" எனக் கூறி அது பற்றி சொல்லலானான்.


பிருத்திரன் என்றொரு அரக்கன் இருந்தான். அவன் மிகவும் நேர்மையாக நடப்பவன். சிறந்த அறிவாளி. மூன்று உலகங்களையும் சரி சமமாகக் கருதி நீதி வழுவாமல் ஆட்சி செய்தான். அவனது ஆட்சியில் பூமாதேவி எல்லாற்றையும் தாராளமாக வழங்கினாள்.


இப்படியெல்லாம் இருந்தும் அவனுக்குத் தவம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எனவே, நாட்டின் ஆட்சியைத் தன் மகனிடம் ஒப்படைத்து விட்டு காட்டிற்குப் போய் கடுந்தவம் புரியலானான்.


 
அத்தவத்தைக் கண்டு இந்திரன் பயந்து விட்டான். அவன் விஷ்ணுவிடம் போய் "பிருத்திரன் இப்போதே மூவுலகங்களையும் ஆண்டு வருகிறான். இப்போது கடுந்தவம் செய்து அதனை முடித்தும் விட்டால் அவனை யாராலும் வெல்ல முடியாது. எனவே, அவனை எப்படி ஒழிப்பது?" எனக் கேட்டான்.

அதுகேட்டு விஷ்ணு "பிருத்திரன் எனக்கு மிகவும் வேண்டியவன். நான் அவனைக் கொல்ல முடியாது. நீயோ தேவர்களின் பொருட்டு அவனது அழிவை விரும்புகிறாய் அது நியாயமாகவே தானிருக்கிறது. இதற்கு ஒரு வழி செய்கிறேன். எனது சக்தியை மூன்று பாகங்களாக்கி ஒரு பாகத்தை உன்னிலும் மற்றொரு பாகத்தை உன் வச்சிராயுதத்திலும் எஞ்சிய பாகத்தை பூமியிலும் இருக்கச் செய்கிறேன். அப்போது நீ பிருத்திரனை எளிதில் கொல்ல முடியும்" என்றார்.

இதைக் கேட்டு இந்திரன் மகிழ்ந்து போனான். அவன் தேவர்களுடன் பிருத்திரன் தவம் புரியும் காட்டை அடைந்தான். தவ வலிமையால் ஜோதி போல் விளங்கும் பிருத்திரனை அவர்கள் யாவரும் கண்டனர். இந்திரன் தன் வச்சிராயுதத்தைத் தன் இருகைகளாலும் பிடித்து உயரத் தூக்கி அதனை பிருத்திரனின் தலைமீது ஓங்கி அடித்தான்.

பிருத்திரனின் தலை துண்டிக்கப்பட்டது. ஆனால், இந்திரனை பிரம்மஹத்தி என்ற பாவம் சூழ்ந்து கொண்டது. இந்திரன் இதனால் மிகவும் வருத்தப்பட்டான். அப்போது தேவர்கள் விஷ்ணுவிடம் போய் "பிரபுவே, உங்கள் சக்தியால் இந்திரன் பிருத்திரனைக் கொன்றாலும் உண்மையில் நீங்கள்தாம் அவனைக் கொன்றீர்கள். ஆனால், பாவமோ இந்திரனைப் பற்றிக் கொண்டது. இதைப் போக்க ஒரு வழி கூறுங்கள்" என்றனர்.

விஷ்ணுவும் "அசுவமேதயாகம் செய்தால் அவனது பாவம் போய்விடும். எப்போதும் போல இந்திரன் விளங்குவான்" என்றார். இதைக்கேட்டு தேவர்கள் பிரகஸ்பதியையும் மற்ற மாபெரும் முனிவர்களையும் அழைத்துக் கொண்டு இந்திரன் இருக்குமிடத்திற்குச் சென்றனர். அங்கு  இந்திரனைக் கொண்டு அசுவமேதயாகம் செய்ய வைத்து அவனது பாவம் போகும்படிச் செய்தனர்.

இலட்சுமணன் இதைக் கூற இராமரும் முழுவதையும் கேட்டுவிட்டு, அவனிடம் அசுவமேதயாகத்தின் மேன்மையைப் பற்றிய கதை கூறலானார். முன்பு கர்தம பிரஜாபதியின் மகனான இலன் என்பவன் பாஹுலிக நாட்டை ஆண்டு வந்தான். அவன் பெயரைக் கேட்டாலே தேவர்களும், அரக்கர்களும், நாகர்களும், யட்சர்களும் மிகவும் மரியாதையுடன் நடந்து கொள்வார்கள்.

ஒருமுறை சித்திரை மாதத்தில் இலன் வேட்டையாடத் தன் ஆட்களோடு காட்டிற்குச் சென்றான். பல மிருகங்களைக் கொன்று குவித்த போதிலும் வேட்டையாடும் வேட்கை தணியவில்லை. எனவே, மிருகங்களை அடித்து வீழ்த்தியவாறே குமரக் கடவுளின் பிறப்பிடத்தை அடைத்தான். அங்கு பார்வதியும், பரமசிவனும் அவரது கணங்களும் இருந்தனர். அங்கு மரம், செடி, கொடிகள் மிருகங்கள் எல்லாமே பெண் தன்மை கொண்டவை. அப்பகுதியின் தனிச்சிறப்பும் அதுவே.

இலனும் அவனது ஆட்களும் அப்பகுதியில் அடி எடுத்து வைத்ததும் பெண்களாக மாறி விட்டனர். இது கண்டு இலன் பயந்து போய் பரமசிவனின் கால்களில் வீழ்ந்தான். அப்போது சிவன் "இந்தப் பெண்மையை போக்கிக் கொள்வதைத் தவிர வேறு எது வேண்டுமானாலும் கேள்" என்றார்.
இலன் சிவனிடம் எதுவும் கேளாமல் பார்வதியை வேண்டலானான். அப்போது பார்வதி தேவி "நீ ஒரு மாதம் ஆணாக இருந்தால், மறுமாதம் பெண்ணாக இருப்பாய். இப்படியே மாறி, மாறி இருந்து கொண்டே வா. பெண்ணாக இருந்தபோது, நடந்தது எல்லாம் நீ ஆணாக இருக்கும்போது உன் நினைவில் இருக்காது. அது போலவே ஆணாக நீ இருந்த போது, நடந்ததெல்லாம் பெண்ணாக மாறிய பின் உன் நினைவில் இராது" எனக் கூறினாள்.

இலன் அப்போது இலையம்மை ஆனான். அவனது ஆட்கள் கூட பெண்களாகி இருந்தனர். அவர்கள் யாவரும் அக்காட்டுப் பகுதியிலேயே அலைந்து திரியலாயினர். அக்காட்டுப் பகுதிக்கு அருகிலுள்ள மலையடிவாரத்தில் ஒரு குளம் இருந்தது. அங்கே புதன் ஒரு ஆசிரமத்தைக் கட்டிக் கொண்டு தவம் செய்து வந்தான்.  
இலையம்மையும் பெண்ணாக மாறிய மற்றவர்களும் அக்குளத்தில் குளித்து நீரைக் கலக்கலாயினர். சத்தம் கேட்டு வந்த  புதன் இலையம்மையைக் கண்டு அவள் மீது மோகம் கொண்டான். எனவே, அங்கிருந்த சில பெண்களை கூப்பிட்டு இலையம்மையைப் பற்றி விசாரித்தான்.
அவர்களும் "அவர் எம் தலைவி. அவருக்கு கணவன் இல்லை. எங்களை அழைத்துக் கொண்டு இந்தக் காடு எல்லாம் சுற்றி வருகிறார்" என்றனர். அப்போது "நீங்கள் இந்த ஆசிரமத்தில் உள்ள காய்கனிகளைப் புசித்து இங்குள்ள ஆடவர்களை மணந்து கொள்ளுங்கள்" என்று கூறி அனுப்பினார்.

அதன் பிறகு அவர் இலையம்மை இடம் "நான் சந்திரனின் மகன் புதன். நீ என்னோடு இதே ஆசிரமத்தில் இரு" என்றார். அவளும் அதற்குச் சம்மதித்தாள். இருவரும் மிகவும் சந்தோஷமாக இருக்கலாயினர்.

ஒரு மாதமாயிற்று. இலையம்மை இலனாக மாறி விட்டான். அவனுக்கு அதற்கு முன் நடந்ததெல்லாம் நினைவில் இல்லை. அப்போது புதன் குளக்கரையில் தவம் செய்து கொண்டு இருந்தார். அவரிடம் அவன் "ஐயா, நானும் என் ஆட்களும் வேட்டை ஆடிவாறே இங்கே வந்தோம். அவர்களைக் காணவில்லை. நீங்கள் யாரையாவது அங்கு பார்த்தீர்களா?" என்று கேட்டான். அதற்கு புதன் "உன் ஆட்கள் அழிந்து போயினர். நீ கவலைப்படாதே இங்கே என் ஆசிரமத்தில் சுகமாக இரு" என்றார். அது கேட்டு அவன் "ஐயா, என் ஆட்கள் அழிந்து போனபின் நான் நாட்டை ஆள விரும்பவில்ல. என் மகனுக்கே பட்டம் கட்டிவிட்டு இங்கே திரும்பி வந்து விடுகிறேன்" என்றான்.
அதற்கு புதன் "மன்னா, நீ இங்கே ஒரு வருடக்காலம் இரு உனக்கு நன்மையே ஏற்படும்" என்றார். இலனும் அதற்கு சம்மதித்தான். ஒரு மாதகாலம் பெண்ணாகி புதனோடு வாழ்ந்து விட்டு மறுமாதம் ஆணாகி இலன் முன் மாதம் நடந்ததையெல்லாம் மறந்து விடுவான். இப்படியாக ஒரு வருடகாலம் கழிந்தது.

இலன் இலையம்மையாக இருக்கையில் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தான். அப்போது புதன் சியவனர், பிரமோதர், துர்வாசர், சம்வர்த்தனர் போன்ற முனிவர்களை அழைத்து அவர்களிடம் இலனின் கதையைக் கூறினார். இதேசமயம் இலனின் தந்தையும் வேறு சிலரும் அங்கு வந்தனர்.

யார், யாரோ என்னென்னவோ சொன்னார்கள். ஆனால், கர்தமன் தன் மகனின் சாப விமோசத்திற்கு அசுவமேதயாகம் செய்வதே சரியெனக் கூறினான். அதன்படி யாவரும் அசுவமேதயாகம் செய்தனர். இலனுக்கு மாறி, மாறி கிடைத்து வந்த பெண்மை போயிற்று. யாகம் முடிவுற்ற போது பரமசிவனே வந்து இலன் எப்போதும் உள்ளது போல இருக்க அருள் புரிந்து விட்டுப் போனார்.

இலன் பாஹுலிக நாட்டிற்குச் செல்லாது மத்திய தேசத்திற்குப் போய் அதனை ஆண்டு வரலானான். அவனது மகன் சசிபிந்தன் பாஹுலிக நாட்டை ஆண்டு வந்தான். இலனுக்கும், புதனுக்கும் பிறந்தவன் புரூருவன். இலவனுக்குப் பிறகு மத்திய தேசத்தை அவன் ஆண்டு வரலானான். இராமர் இதனைக் கூறிவிட்டு அசுவமேத யாகத்திற்கு ஏற்பாடு செய்யக் கூறினார்.

நைமிச வனத்தில் கோமதி நதிக்கரையில் பெரிய யாகசாலை அமைக்கப்பட்டது. நவதானியங்கள் குவியலாயின. தங்கம் பல இடங்களிலிருந்து வந்து சேரலாயிற்று. உணவு தயாரிக்கப் பலர் வந்தனர். மக்களைக் களிப்பிக்க இசைக் கலைஞர்களும் வந்து சேர்ந்தனர்.
இராமர் தன் தாய்மார்களுடன் யாகசாலையை அடைந்தார். சீதைக்கு பதிலாக பொன்னால் செய்யப்பட்ட சீதையின் உருவம் இராமரருகே வைக்கப்பட்டது. யாகத்திற்கு வந்தவர்களுக்கெல்லாம் எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. இராமர் ஒரு கருப்புக் குதிரையை நாடெங்கும் சுற்றிவர அனுப்பி அதன் பின்னால் இலட்சுமணனை அனுப்பி வைத்தார். வந்த அரசர்களையெல்லாம் பரதனும், சத்துருக்கனனும் நன்கு கவனித்து உபசரித்தனர். அவர்களும் இராமர் முன் பல பொருள்களைக் காணிக்கையாகச் சமர்ப்பித்தனர். ரிஷிகளை விபீஷணும், அந்தணர்களை சுக்கிரீவனும் கவனித்துக் கொண்டனர்.

யாகம் நன்றாக நடக்கலாயிற்று. யாருக்கும் எவ்விதக் குறையும் இருக்கவில்லை. அந்தமாதிரி யாகம் இந்திரன்கூட செய்ததில்லையென எல்லோரும் ஒன்று போலக் கூறினர். இப்படியாக ஒரு குறையுமின்றி அந்த யாகம் ஒரு வருடகாலம் நடந்தது. 

 

உத்தரகாண்டம் - 4

மறுநாள் பொழுது விடிந்ததும் லவணன் தன் உணவிற்காக மதுபுரத்திற்கும் அப்பால் சென்றான். அப்போது சத்துருக்கனன் யமுனை நதியைக் கடந்து மதுபுரத்தலை வாயிலை அடைந்தான்.

உச்சிவேளைக்கு லவணன் தான் வேட்டையாடிய மிருகங்களோடு மதுபுரத்திற்குத் திரும்பி வந்தான். அங்கு தலைவாசலில் சத்துருக்கனன் இருப்பதைக் கண்டு "அடே மானிடனே. எனக்கு இரையாகவா இங்கே வந்தாய்?" என்றான்.

அது கேட்டு சத்துருக்கனன் "அடே, உன்னோடு போர் புரிந்து உன்னைக் கொல்லவே நான் வந்திருக்கிறேன். நான் இராமனின் தம்பி சத்துருக்கனன்" என்றான். அதைக் கேட்டு லவணன் பலமாகச் சிரித்து "அப்படியா? சரி. உன்னைக் கொன்று விடுகிறேன். இதோ போய் என் ஆயுதங்களை எடுத்து வருகிறேன்" எனக் கிளம்ப முயன்றான்.


அப்போது சத்துருக்கனன் "என் கையில் அகப்பட்ட உன்னை நான் எங்கும் போக விடமாட்டேன். இப்படியே சண்டையிடு" என்றான். அரக்கனும், ஆத்திரத்தோடு மரங்களைப் பிடுங்கி சத்துருக்கனனை அடிக்கலானான். அதனையெல்லாம் சமாளித்த போதிலும் ஒரு அடியால் சத்துருக்கனன் சற்று நினைவிழந்து விழுந்தான். சத்துருக்கனன் இறந்து விட்டானென லவணன் எண்ணி சந்தோஷப்பட்டான். 
 
இதனால் தன் சக்தி வாய்ந்த சூலத்தை எடுத்து வர எண்ணவே இல்லை. அவன்தான் வேட்டையாடிய மிருகங்களோடு கிளம்பலானான். அப்போது சத்துருக்கனன் மூர்ச்சை தெளிந்து எழுந்து வாசலில் நின்று வழிமறித்தான். பின்னர், இராமர் தனக்குக் கொடுத்த பாணத்தை அந்த அரக்கன்மீது விடவே அது நெருப்பைக் கக்கிக்கொண்டு லவணனின் மார்பைத் துளைத்தது. அவனிடமிருந்து திரிசூலம் பரமசிவனிடம் போய்ச் சேர்ந்து விட்டது.


அதன்பிறகு, சத்துருக்கனன் தன் சேனையை வரவழைத்து மதுபுரத்தை ஆக்கிரமித்துக்கொண்டு அதன் அரசனானான். பனிரெண்டு வருடங்கள் கழிந்தன. அப்போது அவனுக்கு இராமரைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. எனவே, ஒரு சிறிய சேனையோடு கிளம்பி அயோத்திக்குச் செல்லும் வழியில் வால்மீகி ஆசிரமத்தை வந்தடைந்தான்.
வால்மீகி அவனையும் அவனது படையினரையும் தக்கபடி உபசரித்து உணவளித்தார். சாப்பிட்ட பிறகு வால்மீகி முனிவர் இயற்றி இராம கதையை இசையோடு பாடக்கேட்டு அவர்கள் யாவரும் இன்புற்றனர். மறுநாள் சத்துருக்கனன் வால்மீகி முனிவரிடம் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பி அயோத்தியை அடைந்தான்.

அவன் இராமரைக் கண்டு "அண்ணா, உங்களை இந்தப் பனிரெண்டு ஆண்டுகளாக விட்டுப்பிரிந்திருந்ததால் மிகவும் ஏக்கம் ஏற்பட்டு விட்டது. எனவே, தங்களை காணவே வந்தேன்" என்றான். அப்போது இராமர் "அரசன் நாட்டை ஆள்வதில்தானே கவனம் செலுத்த வேண்டும். எனவே, நீ உன் நாட்டை ஆள முழுகவனமும் செலுத்தினாய்" எனக் கூறினார்.
பின்னர், சத்துருக்கனன் இராமரது உபதேசப்படி தன் நாட்டிற்குக் கிளம்பவே பரதனும், இலட்சுமணனும் அவனை வழியனுப்பிவிட்டு வந்தனர்.

சில நாட்களுக்குப் பிறகு ஒரு கிராமத்திலிருந்து ஒரு அந்தணன் தன் இறந்துபோன குழந்தையை எடுத்துக் கொண்டு வந்து அரண்மனை வாசலில் நின்று அழலானான். தன் ஒரே மகன் திடீரென இறந்ததால் அரசனின் ஆட்சி சரியில்லை. என்றுதானே பொருளென அவன் கூறி இராமரது ஆட்சியைப் பற்றி குறை கூறினான்.

இதுகேட்டு இராமர் தன் மந்திரிகளையும், வசிஷ்டரையும் மற்றும் பல அந்தணர்களையும் அழைத்து அந்த பிராம்மணனின் துயரத்தைக் கூறினர். அப்போது நாரதர் "யாரோ தவம் செய்ய உரிமை பெற்றிராத ஒருவன் செய்து கொண்டு இருப்பதாலேயே இப்படி அகால மரணம் ஏற்பட்டுள்ளது" என இராமரிடம் கூறினார்.
 
இராமர் இலட்சுமணனை அழைத்து "நீ போய் அந்த பிராம்மணனுக்கு ஆறுதல் கூறு. அந்தக் குழந்தையின் உடலை எண்ணெயிலிட்டு பத்திரமாக வைத்திரு" எனக்கூறிவிட்டு புஷ்பக விமானம் ஏறி நாலபக்கமும் சென்று பார்க்கலானார்.

அப்போது தென் திசையில் ஒருவன் தவம் செய்வது கண்டு அவர் விமானத்தோடு கீழே இறங்கி அவனிடம் சென்றார். அவனிடம் அவர் "நான் இராமன். நீ யார்? ஏன் இப்படித் தவம் புரிகிறாய்? நீ தவம் செய்ய உரிமை பெற்றவனா?" எனக் கேட்டார்.


அப்போது தலைகீழாக நின்று தவம் செய்யும் அவன் "நான் பிறப்பால் தவம் செய்ய உரிமை பெற்றவனல்லன். என் பெயர் சம்பூகன். இந்த பூதஉடலோடு சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதற்காக தவம் செய்கிறேன்" என்றான். அப்போது இராமர் தன் வாளை உருவி அவன் தலையை வெட்டினார்.
உடனே, இராமர் மீது மலர்மாரி பொழியலாயிற்று. தேவர்கள் துந்துபி முழக்கம் செய்தனர். அவர்கள் "இப்படிச் செய்ததற்கு பிரதியாக நாங்கள் ஏதாவது வரம் கொடுக்கிறோம்" என்றனர்.

அப்போது இராமர் "என் நாட்டில் இறந்துபோன அந்தணனின் குழந்தை உயிர் பெறுமாறு செய்யுங்கள்" என்றார். தேவர்களும் "சம்பூகனின் தலை துண்டிக்கப்பட்டதுமே அக்குழந்தைக்கு உயிர் வந்து விட்டது" எனக்கூறி விட்டுச் சென்றனர்.

இராமர் அங்கிருந்து அகத்திய முனிவரது ஆசிரமத்திற்குச் சென்றார். அங்கு முனிவரும் அவரை உபசரித்து ஒரு அழகிய ஆபரணத்தைக் கொடுத்து அது தனக்கு கிடைத்த விதத்தைக் கூறலானார்.


ஒரு பெரிய காட்டில் ஒரு பெரிய குளம் இருந்தது. ஆனால், அக்காட்டில் ஒரு மிருகமோ அல்லது பறவையோ வசிக்கவில்லை. அக்குளக்கரையில் ஒரு ஆசிரமம் இருக்கவே அகத்தியர் அங்கு சென்றார். அன்றைய இரவுப் பொழுதை அதில் கழித்துவிட்டு மறுநாள் காலையில் அவர் குளத்தில் குளிக்கச் சென்றார். அப்போது அதன் கரையில் உயிரற்ற உடல் ஒன்று கிடந்தது.

அந்த மனினின் உயிர் எப்படிப் போயிற்றென அகத்தியர் யோசித்துக் கொண்டிருக்கையில் ஆகாயத்திலிருந்த ஒரு விமானம் அங்கு வந்து இறங்கியது. அதில் ஒரு தேவனும் அவனோடு பல அப்சரஸ்திரீகளும் இருந்தனர். சிலர் பாட, வேறு சிலர் ஆடிக்கொண்டு இருந்தனர்.

அந்த தேவன் விமானத்திலிருந்து வந்து கரையில் கிடந்த பிணத்தைச் சாப்பிட்டுவிட்டு குளத்தில் கைகால்களை அலம்பிக் கொண்ட திரும்பினான். அப்போது அகத்தியர் "யாரப்பா நீ? நீ ஏன் பிணத்தைத் தின்கிறாய்? பார்த்தால் உயர் குலத்தைச் சேர்ந்தவன் போலக் காணப்படுகிறாய்" எனக் கேட்டார்.

அதற்கு அவனும் "நான் விதர்ப்ப மன்னனான சுதேவனின் மகன். என் பெயர் சுவேதன். சுதேவனுக்கு இரண்டு மனைவிமார்கள். அவர்களில் மூத்த ராணிக்குப் பிறந்தவன் நான். இளைய ராணிக்குப் பிறந்தவன் சுரதன். நான் என் தந்தைக்குப் பிறகு வெகு காலம் நாட்டை ஆண்டு என் தம்பிக்குப் பட்டாபிஷேகம் செய்துவிட்டு தவம் செய்யக் காட்டிற்கு வந்தேன். கடுந்தவம் புரிந்து பிரம்மலோகத்தையும் அடைந்தேன். ஆனால், அங்கு எனக்குப் பசி ஏற்பட்டது. பிரம்மாவிடம் போய் என் பசியைக் கூறி "இங்கு வந்தும் எனக்குப் பசி எடுக்க நான் ஏதாவது தப்பிதம் செய்தேனா?" எனக் கேட்டேன்" என்று கூறி மேலும் தன் கதையைத் தொடர்ந்தான்.

பிரம்மாவும் "பிராணிகளே இல்லாத காட்டில் இருந்தும் அதிதிகளுக்கு நீ உணவிடாமலும் கடுந்தவம் செய்தாய். யாருக்குமே பசி தீர்க்க உணவு கொடாததால் உனக்கு இந்தத் தீராப்பசி ஏற்பட்டுள்ளது. காட்டில் உன் பூத உடல் உள்ளது. நீ தினமும் அதனைத் தின்று உன் பசியைத் தீர்த்துக்கொள். அப்போது அகத்திய முனிவர் வந்து தம் மகிமையால் உன் பசியை முழுவதுமாக போக்குவார்" எனக் கூறினார்.

சுவேதன் தன் கதையைக் கூறிவிட்டு தன் முன் வந்திருப்பவர் அகத்தியரென அறிந்து கொண்டு, "சுவாமி, என் பசியைப் போக்குங்கள். அதற்குப் பிரதியாக நான் இந்த திவ்விய ஆபரணத்தைத் தங்களுக்குக் காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன். இதை வைத்திருப்போருக்கு தினமும் தங்கமும், நவரத்தினங்களும், ஆடைகளும், உணவுப் பொருள்களும், ஆபரணங்களுமாகக் கொடுத்துக் கொண்டே இருக்கும்" என்றான். 

அகத்தியரும் அதனை ஏற்றுக்கொண்டு அவனது தீராப் பசியைத் தீர்த்து வைத்தார். சுவேதனும் பசி தீர்ந்தவனாக சொர்க்கலோகத்திற்குச் சென்றான்.

அப்போது இராமர் "சுவேதன் தவம் செய்த காட்டில் ஏன் ஒரு ஜீவராசி கூட இருக்கவில்லை?" என அகத்தியரிடம் கேட்க அவரும் கூறலானார்.


கிருதயுகத்தில் மனுசக்கரவர்த்தி இக்ஷ்வாகுவிற்கு பட்டம் கட்டிவிட்டு அரசியல் பற்றி விளக்கிக் கூறிவிட்டு பிரம்மலோகத்திற்குச் சென்றுவிட்டார். இக்ஷ்வாகுவிற்கு நூறு புதல்வர்கள் பிறந்தனர். அவர்களில் கடைசி மகன் தண்டன். அவன் சற்று மந்த புத்தி உடையவன். அவனுக்கு இக்ஷ்வகு விந்திய மலைப்பகுதியில் ஒரு நாட்டைக் கொடுத்திருந்தார். அவன் அங்கு மதுமந்தம் என்னும் நகரை அமைத்து சுக்கிராச்சாரியாரைத் தன் குருவாக இருக்கச் செய்தான்


 அந்த சுக்கிரருக்கு அரஜை என்னும் அழகிய பெண்ணொருத்தி இருந்தாள். ஒருநாள் காட்டில் தண்டன் அரஜையைக் கண்டு அவளைத் தான் அடைய விரும்புவதாக அவன் கூறவே அரஜையும் "நான் சுக்கிரரின் புதல்வி. நீங்கள் என் தந்தையின் கோபத்திற்கு ஆளாகி சாபம் பெற வேண்டாம்" என எச்சரித்தாள்.

ஆனால், தண்டன் அவளை மீண்டும் வற்புறுத்தலானான். அவளது விருப்பத்திற்கு மாறாக அவளை கட்டித் தழுவினான். இது சுக்கிரருக்குத் தெரிந்து விட்டது. தண்டன் மதுமந்த நகரை அடைந்தபோது ஏழுநாட்கள் இடைவிடாது புழுதிமாரி வீசி அங்கு எதுவுமே இல்லாமல் நாசமாகி விட்டது. இது சுக்கிரரின் சாபம். இந்த சாபத்தைப் பற்றி கேட்டதுமே ஜீவராசிகள் மதுமந்தத்தைச் சுற்றி நூறு யோசனை தூரம் விலகியே இருந்தன. யாரும் அப்பட்டணத்திற்குப் போக துணியவில்லை. இதுதான் அப்பகுதியில் ஜீவராசி இல்லாது போனதற்குக் காரணம்.


அகத்தியர் கூறிய இக்கதைகளை எல்லாம் கேட்ட பிறகு இராமர் அவரிடம் விடை பெற்றக் கொண்டு அயோத்திற்குத் திரும்பிச் சென்றார்.



உத்தரகாண்டம் - 3

 

இராமர் தன் சபையில் வீற்று இருக்கையில் வெளி வாசலில் ஒரு நாய் நன்று பலமாகக் குரைத்தது. அது கண்டு இலட்சுமணன் அது ஏதோ சொல்ல விரும்புவதாக எண்ணினான். இராமரும் அவனைப் பார்த்து அதனை சபைக்குள் அழைத்து வரச் சொன்னார்.

உள்ளே வந்த நாயின் தலை உடைப்பட்டிருந்தது. அதைக் கண்டு இராமர் "யார் உன்னை இப்படி அடித்தது?" எனக்கேட்கவே அது "சர்வார்த்தசித்தி என்னும் இப்படி அடித்து விட்டார். நான் அவருக்கு எவ்விதத் தீங்கும் இழைக்கவில்லை" என்றது.

இராமரும் அந்த சாதுவை அழைத்து விசாக்கவே அவரும் "நான் வீடு, வீடாக அலைந்து பிச்சை கிடைக்காது திண்டாடி வருகையில் இந்த நாய் குறுக்கே வந்து நன்றது. எவ்வளவு மிரட்டி, அதட்டியும் வழி விடாமற் போகவே நான் இதன் தலைமீது அடித்தேன். இதற்கு நீங்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறேன்" என்றார்.

அவருக்கு என்ன தண்டனை விதிப்பதுதென இராமர் சபையோர் இடம் கேட்டார். யாரும் ஒன்றுமே கூறவில்லை. அப்போது அந்த நாயே "நான் கூறும் தண்டனையை விதியுங்கள். காலஞ்சரமென்னும் இடத்தின் குலபதியான இவரை நயமித்து விடுங்கள்" என்றது.


   இராமரும் அவ்விதமே நயமித்து அந்த சாதுவை ஒரு யானை மீதேற்றி அனுப்பினார். சாதுவும் ஒரேடியாக மகிழ்ந்து போனார். சாது சென்ற பிறகு இராமரும், மற்றவர்களும் நாயிடம் "நீ ஏன் இவருக்கு இத்தகைய பதவியைக் கொடுக்கச் சொன்னாய்?" என்றனர்.

அதற்கு நாயும் "நான் ற்பிறப்பில் அந்த இடத்தின் குலபதியாக இருந்தேன். எல்லா வசதியும் இருந்தன. நில்லவனென்றும் நான் பெயர் எடுத்தேன். தேவர்களையும், அந்தணர்களையும் பூசித்து வந்தேன். ஆனால், அப்பதவியில் இருந்ததால் நான் நாயாக இந்தப் பிறப்பில் பிறக்க வேண்டியதாயிற்று. முன் கோபம், இரக்கமில்லா நெஞ்சம் கொண்ட அந்த சாது அப்பதவியிலிருந்தால் பல பிறப்புகள் நாயாகவே பிறந்து கொண்டிருப்பார்" என்றது.

நாய் போன பிறகு, ஒரு கழுகும், ஆந்தையும் இராமடம் ஒரு வழக்கைக் கூற வந்தன. இரண்டும் ஒரே காட்டில் வசித்தன. அவை வசிக்கும் இடம் பற்றிய உமைத் தகராறு ஏற்படவே அவ்வழக்கைத் தீர்த்து வைக்க இராமர் தம் மந்திகளோடு புஷ்பக விமானத்தில் ஏறிக்கொண்டு அவை வசித்து வந்த இடத்தை அடைந்தார்.

கழுகோ பூமியில் மானிடர்கள் பிறந்தபோதே தான் அங்கு தன் வீட்டைக் கட்டியதாகக் கூறியது. ஆந்தையோ பூமியில் மரஞ்செடிகள் தோன்றியபோதே தான் அங்கு தன் இல்லத்தை அமைத்ததாகக் கூறியது. இதைக்கேட்டபின் யாவரும் "சிருஷ்டியில் முன்னதாகத் தோன்றியது தாவரங்களே. எனவே, ஆந்தைக்கே அவ்வீடு  சொந்தம்" என்று ஒருமனதாகத் தீர்ப்பளித்தனர். இராமர் கழுகிற்கு தண்டனை அளிக்க விரும்பினார்.

அப்போது ஒரு அசரீர வாக்கு "இராமா. இந்தக் கழுகு ஏற்கனவே சாபம் பெற்றுள்ளது. இது இதற்குன் பிரம்மதத்தனென்னும் அரசனாகும். அந்த மன்னன் மிகவும் பராக்கிரமசாலி. ஏராளமாகப் பணம் படைத்தவன். நேர்மை தவறாதவன். இவனது இல்லத்தில் கௌதமர் விருந்தாளியாக வந்தார். அவருக்கு அரசனே உபசத்து பல நாட்கள் விருந்தளித்தான். ஒரு நாளைய சாப்பாட்டில் ஒரு மாமிசத்துண்டு எப்படியோ கலந்து விட்டது. இதனை அரசன் கவனிக்கவில்லை. கௌதமர் சாப்பிடும்போது அதனைக் கண்டு கோபம் கொண்டு மன்னனைக் கழுகாகும்படி சபித்தார். பின்னர், சினம் தணிந்து இக்ஷ்வாகு வம்சத்தில் இராமர் பிறந்து அதனைத் தொட்டால் முன்போலாவாரென சாபவிமோசனம் அளித்தார்" என்றது.

  அதைக் கேட்ட இராமர் அந்த கழுகைத் தொடவே அதுவும் ஒரு அழகிய மானிடனாக மாறியது. அவன் இராமரை வணங்கி விடை பெற்றுச் சென்றான். யமுனை நிதிக்கரையில் வசிக்கும் நூறு முனிவர்கள் ஒரு தடவை இராமரை தரிசிக்க வந்தனர். அவர்கள் பல கலசங்களில் நீரையும், பலவிதப் பழங்களையும் கொடுக்கவே இராமரும் அவற்றை ஏற்றுக்கொண்டு அவர்கள் சிரமபரிகாரம் செய்து கொள்ளச் செய்தார். பின்னர், அவர்கள் வந்த வேலை யாதோ என்று கேட்டார்.
அவர்களும் தம்மை லவணாசுரன் என்பவன் தொல்லைகளுக்கு காளாக்குவதாயும் அவனிடமிருந்து தாங்களைக் காக்க வேண்டுமென முறையிட்டனர். லவணாசுரன் என்பவன் மது என்னும் அரக்கனின் மகன். மது சிவபெருமானைக் குறித்து நீண்ட காலம் தவம் செய்து அவர் மனதைக் களிப்பித்தான். அவரும் தன் திரிசூலத்திலிருந்து வேறொரு சூலம் வரச்செய்து அதனை மதுவிடம் கொடுத்து ‘இது உன்னிடம் இருக்கும்வரை யாரும் உன்னை எதுவும் செய்ய முடியாது" எனக் கூறினார்.
அப்போது அவன் அந்த சூலம் தன் குடும்பத்தவரிடம் என்றென்றும் இருக்க அருளவேண்டுமெனக் கேட்கவே சிவனும் "இது உன்னிடம் இருக்கும்.

அதற்குப் பிறகு உன் மகனிடம் மட்டும் இருக்கும்படி செய்கிறேன்" எனக்கூறி மறைந்தார். மது இராவணனுக்குத் தங்கை முறையான கும்பினசையை அவன் மணந்தான். அவர்களுக்குப் பிறந்தவன் லவணன். சிறுவயது முதல் அவன் பாவங்களையே செய்து வந்தான். மது வருணலோகத்திற்குச் செல்லும்போது சிவபிரான் கொடுத்த சூலத்தைத் தன் மகனிடம் கொடுத்தான். அதன் சக்தியை அறிந்திருந்த லவணன் மேலும், கர்வப்பட்டு யாவரையும் துன்புறுத்தலானான்.

இவ்விதமாக முனிவர்கள் லவணனது வரலாற்றை இராமடம் கூறவே அவரும் "அவனை நான் அழிக்கிறேன். நீங்கள் கவலைப்படாதீர்கள்" எனக்கூறிவிட்டு தன் தம்பிகளிடம் "உங்களில் யார் லவணனைக் கொல்லப் போகிறீர்கள்?" எனக் கேட்டார்.

  பரதனும், சத்துருக்கனனும் அவனைக் கொல்ல முன் வந்தனர். இராமர், சத்துருக்கனனைத் தேர்ந்து எடுத்து மதுபுரத்தின் மன்னனாக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்.

பட்டாபிஷேக வைபவம் முடிந்ததும் இராமர் ஒரு பாணத்தை எடுத்து சத்துருக்கனனிடம்  கொடுத்து "இது மது, கைடபன் ஆகிய இருவரையும் கொன்ற பாணம். இதனை நான் இராவணன்மீது கூட எய்யவில்லை. இதனால் நீ லவணனைக் கொன்று வா. அவனிடம் பரமசிவன் கொடுத்த சக்தி வாய்ந்த சூலம் ஒன்று இருக்கிறது. அது அவன் கையில் இருக்கும்வரை அவனை யாராலும் வெல்ல முடியாது. எனவே, சூலம் இல்லாத சமயமாகப் பார்த்து அவனைத் தாக்கு. அவனது நிகரைச் சுற்றி முற்றுகையிட்டு அவன் நிகரத்திற்குள் நுழையாதபடி செய். அப்போது அவனை எளிதில் கொல்ல முடியும்" என்றார்.

சத்துருக்கனன் ஒரு படையை முன்னதாக அனுப்பி பின்னால் அவன் செல்ல வேண்டும் என்று கோடையில் கங்கை கடந்து படைகள் செல்ல மாகாலத்தில் சத்துருக்கனன் அந்த அரக்கனைத் தாக்க வேண்டும் என்றும் இராமர் யோசனைச் சொல்லி அனுப்பினார். அதன்படியே அவன் தன் படைகளை முன்னதாக அனுப்பிவிட்டு ஒரு மாதகாலத்திற்குப் பின்னரே அவன் சென்றான். வழியில் அவன் வால்மீகி முனிவரது ஆசிரமத்தில் தங்கி அவரது உபசரிப்பை ஏற்றான். அப்போது அந்த ஆசிரமம் ரகு வம்சத்தவரதே எனக் கூறி வால்மீகி அது பற்றிக் கூறலானார்.

ரகு வம்சத்தில் சுதாசன் என்பவன் இருந்தான். அவன் மைந்தன் வீரசகன். ஒருநாள் அவன் காட்டில் வேட்டைஆடிக் கொண்டிருந்தபோது இரு அரக்கர்களைக் கண்டான். அவர்கள் புலியுருவில் திரிந்து காட்டு மிருகங்களைக் கொன்று தின்று வந்தனர். இதனால் காட்டில் மிருகங்களே இல்லாது போயிற்று.வீரசகன் அப்புலிகளில் ஒன்றைக் கொன்று விட்டான். அதனால் கோபம் அடைந்த மற்ற அரக்கன் "என் தோழனைக் கொன்ற உன்னை என்ன செய்கிறேன் பார்" எனக் கூறி திடீரென மாயமாக மறைந்து போனான். கொஞ்ச காலத்திற்குப் பின் அம்மன்னன் இந்த ஆசிரமத்தில் ஒரு பெரிய அசுவமேத யாகத்தை வசிஷ்டரைக் கொண்டு செய்தான்.

யாகம் முடிவடையும்போது அந்த அரசன் மீது பகைமை கொண்ட அரக்கன் வசிஷ்டர்போல உருவம் எடுத்து வந்து "அரசே, யாகம் முடிந்து விட்டது. எனவே, எனக்கு மாமிச உணவு கொடு" என்றான். தைக்கேட்டு அரசன் தன் சமையல்காரனைக் கூப்பிட்டு "குருவின் விருப்பப்படி ருசியான மாமிச உணவைத் தயாரி" எனக் கட்டளையிட்டான். இதன் பிறகு அந்த அரக்கன் சமையல்காரனைப் போல உருவெடுத்து மனிதமாமிசம் கொண்டு உணவு தயாரித்து அரசனிடம் போய் "நீங்கள் கூறியபடி உணவு தயாரித்து விட்டேன்" என்றான்.

அரசனும் தன் மனைவியின் கையால் வசிஷ்டருக்கு அந்த உணவைப் பரிமாறச் செய்தான். தனக்குக் கொடுக்கப்படுவது மனிதமாமிசம் எனக் கண்டு கொண்ட வசிஷ்டர் கோபம் கொண்டு "நீ மனிதர்களைக் கொன்று தின்பவனாகப் போ" எனச் சபித்தார். அரசனும், வசிஷ்டரைச் சபிக்க நீரை எடுத்தான். இதற்குள் அவன் மனைவி குறுக்கிட்டு "குரு நமக்கு தெய்வம் போலாவார். அவரை சபிக்கக் கூடாது" என்றாள். அவன் தான் எடுத்த நீரைத் தன் காலில் தெளித்துக் கொள்ள அவனது பாதங்களில் ஊனம் ஏற்பட்டது.
வசிஷ்டருக்கும் உண்மையில் நடந்தது என்ன என்பது தெரிந்து போயிற்று. அதனால் சாபம் பனிரெண்டு ஆண்டுகள் மட்டுமே இருக்கச் செய்தார். அதன் பிறகு, அம்மன்னன் மீண்டும் முன் போலாகி நாட்டை ஆண்டு வந்தான். ந்தக் கதையை வால்மீகியிடம் இருந்து சத்துருக்கனன் கேட்டுக் கொண்டிருக்கும்போதுதான் சீதை இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்.

உத்தரகாண்டம் - 2

 
இலட்சுமணன் சீதையை வால்மீகி முனிவரது ஆசிரமத்தருகே விட்டுவிட்டுச் சென்றானல்லவா? சீதையோ சற்றுநேரம் வரை அவன் செல்வதையே பார்த்துக் கொண்டே இருந்தாள் அவளது கண்களில் நீர் நிரம்பி விட்டது. துக்கம் தாங்காது விசித்து, விசித்து அழலானாள்.

அவளது அழுகுரல் கேட்டு சற்று தூரத்தில் சென்று கொண்டிருந்த முனிவர்களின் புதல்வர்கள் ஓடோடி வால்மீகி முனிவரிடம் "சுவாமி, நமது ஆசிரமத்திற்கருகே யாரோ ஒரு ஸ்திரீ ஏனோ அழுது கொண்டிருக்கிறாள். அவளைப் பார்த்தால் தேவலோகத்தில் இருந்து வந்தவள் போலத் தெரிகிறது. அவளைச் சுற்றிலும் யாருமே காணோம். நீங்கள் சற்றுச் சென்று பாருங்கள்" என்றனர்.

வால்மீகி முனிவரும் அவர்கள் கூறியதை கவனமாகக் கேட்டார். அப்படி அந்தக் காட்டில் தன்னந்தனியாக இருந்து புலம்பும் பெண் யாரென எண்ணமிடலானார். அவருக்கு ஞான திருஷ்டியால் எல்லாம் தெரிந்து விட்டது.

வால்மீகி முனிவரும் தம் சீடர்களோடு புறப்பட்டு சீதை இருக்கும் இடத்தை அடைந்தார். அவர் "இவள் தசரத மன்னனின் மருமகள் சீதை. வாம்மா, நீ இங்கு எந்த நிலையில் வந்திருக்கிறாயென்பதெல்லாம் எனக்குத் தெரியும்.

 
 என் ஞான திருஷ்டி அதனைக் கூறிவிட்டது. எவ்வித பயமுமில்லாது தபஸ்வினிகளோடு நீ என் ஆசிரமத்திலிலேயே இருக்கலாம். கவலைப்படாதே" என ஆறுதல் கூறினார்.
சீதையும் அவரை நமஸ்கரித்து அவரது ஆசிரமத்தை அடைந்தாள். வால்மீகியும் அவளை முனிவர்களது மனைவியரிடம் ஒப்படைத்து அவளைத் தக்கபடி உபசரித்து கௌரவிக்குமாறு கூறினார். அவர்களும் அவ்விதமே செய்யலாயினர்.

சீதையை கானகத்தில் விட்டு விட்டு அயோதிக்குத் திரும்பும்போது இலட்சுமணன் சுமந்திரனிடம் "சுமந்திரா, தமையனாருக்கு சீதையின் பிரிவால் எவ்வளவு துயரம் ஏற்பட்டு உள்ளது என்பதை நேரிலேயே கண்டாய் அல்லவா? ஒரு குற்றமுமில்லாத சீதைக்குத்தான் எவ்வளவு கஷ்டம்?" என்றான்.

இலட்சுமணன் கூறியது போல இராமருக்கு ஏற்பட்ட மனத்துயரம் சுமத்திரனுக்குத் தெரியாமலிருக்கவில்லை. அதன் காரணமும் அவனுக்குத் தெரிந்ததுதானே. எனவே, அதனை இலட்சுமணனிடம் அவன் கூற நிச்சயித்துக் கொண்டான்.

சுமந்திரனும் "இலட்சுமணா, இந்தமாதிரி விரகதாபத்தால் இராமர் வாடுவாரென பல முனிவர்கள் கூறி இருக்கிறார்கள். இதன் காரணம் எல்லாம் என்ன என்று நான் கூறுகிறேன். இதுபற்றி உங்களில் யாருக்கும் விவரமாகத் தெரிந்திருக்க நியாயம் இல்லைதான்" எனக்கூறி பின்வருமாறு உரைத்தான்.
ஒருமுறை வசிஷ்டரது ஆசிரமத்திற்குச் சென்றபோது தசரதர் அத்திரி முனிவரின் புதல்வரான துர்வாசரைக் கண்டார். அவரிடம் "என் குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்? குறிப்பாக இராமர் எவ்வளவு காலம் இருப்பான்? அவனுக்கு குழந்தைகள் எத்தனை பிறக்கும்?" என்று கேட்டார்.

அதற்கு துர்வாசர் "இந்த விருந்தாந்தத்தைக் கேள். ஒருமுறை தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நேர்ந்த போரில் அசுரர்கள் தோற்றுப்போய் பிருகு மகாமுனிவரின் மனைவியைச் சரணடைந்தனர். அவளும் அவர்களுக்குப் புகலிடம் கொடுத்தாள். இதைக்கண்ட விஷ்ணு கோபம் கொண்டு பிருகுவின் மனைவியின் தலையைத் தன் சக்கிரா ஆயுதத்தால் துண்டித்தார். 

அதைக்கண்டு பிருகு கோபமடைந்து விஷ்ணுவை பூவுலகில் மானிடனாகப் பிறந்து மனைவியைப் விட்டுப் பிரிந்து வாடுமாறு சபித்தார். அந்த சாபத்தின்படி விஷ்ணு இராமனாக அவதரித்தார்" என்றார்.

 அதைக் கேட்ட தசரதர் "அப்படியா சமாசாரம்? விஷ்ணுவா இராமராக அவதரித்திருக்கிறார்? அப்படியானால் என் இராமன் மகாவிஷ்ணுவின் அவதாரமா? ஆனால், மானிடர்களைப் போலக் கஷ்டப்படத்தான் வேண்டுமா?" என்று அவரிடம் கேட்டார். துர்வாசரும் "இராமர், பிருகு முனிவரின் சாபப்படி விரகதாபத்தால் வாடியே இருந்ததாக வேண்டும். அவர்பதினோராயிரம் ஆண்டுகள் அயோத்தியை ஆண்டு, பல அசுவமேத யாகங்கள் செய்து பிரம்ம லோகத்தை அடைவார். அவருக்கு இரு புதல்வர்கள் பிறப்பார்கள். ஆனால், அயோத்தியில் பிறக்க மாட்டார்கள். அவர்களுக்கு இராமர் பட்டாபிஷேகம் செய்து வைப்பார்" என்றார்.

சுமந்திரன் இந்த விவரங்களை இலட்சுமணனிடம் கூறினான். இதற்குள் மாலைப் பொழுதாகி விடவே இருவரும் கௌமதி என்னும் இடத்திற்குருகே தங்கி இரவுப் பொழுதைக் கழித்துவிட்டு மறுநாள் அயோத்தியை அடைந்தனர்.
இரதத்தில் அமர்ந்து வந்து கொண்டு இருந்த இலட்சுமணனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இராமரைச் சந்தித்து என்ன பேசுவது என்று தோன்றவில்லை. சீதையைப் பற்றி என்ன கூறுவது என்று யோசிக்கலானான். அப்போது, இரதம் அயோத்திக்குள் வந்து விட்டது.


 
 இலட்சுமணன் இரதத்தை விட்டிறங்கி இராமரது மாளிகைக்குள் சென்றான். அவரிடம் என்ன சொல்வது எனத் தெரியவில்லை. ஒருவாறாக அவன் தன் மனதைதிடப்படுத்திக் கொண்டு "அண்ணா உங்களது கட்டளைப்படியே வால்மீகி முனிவரது ஆசிரமத்தருகே சீதாதேவியைக் கொண்டு போய்விட்டுவிட்டுத் திரும்பி வந்து விட்டேன்" எனக் கண்ணீர் உகுத்தவாறே கூறினான்.
அதுகேட்டு இராமர் "பேஷ். நீ என் கட்டளையை நிறைவேற்றி விட்டாய். அது போதும்" என்றார். அவர் இந்த இடைக்காலமாகிய நான்கு நாட்கள் சரிவர ஆட்சியில் கவனம் செலுத்தவில்லை. அதனை அவர் இலட்சுமணனிடம் கூறி நிருக மன்னனின் வரலாற்றைச் சொன்னார்.
ஒருமுறை நிருக மன்னன் பல பசுக்களைத் தானமளித்தான். அவர் ஒரு பிராம்மணனுக்கு அளித்த பசுக்களில் ஒன்று எப்படியோ திரும்பி அரண்மனை வந்து மற்ற பசுக்களோடு சேர்ந்து விட்டது. அது தெரியாது அந்தப் பசுவை வேறொரு பிராம்மணனுக்கு இன்னும் சில பசுக்களோடு சேர்த்துக்கொடுத்துவிட்டான்.

முதலில் தானம் பெற்ற பிராம்மணன் தன் பசுவைக் காணாது தேடியவாறே இரண்டாவது முறை பசுவைதானம் பெற்ற பிராம்மணனின் இருப்பிடத்தை அடைந்தான். அந்த பிராம்மணனிடம் தன் பசு இருப்பதைக் கண்டு அதனை அழைக்கவே அது பழக்கப்பட்ட குரல் கேட்டு அப்பிராம்மணனிடம் ஓடி வந்தது.
அப்பசு தன்னுடையதே என்றும் தனக்கே நிருக மன்னன் தானம் கொடுத்ததாயும்  இருவரும் மாறி மாறிச் சச்சரவிடலாயினர். இருவரும் அதற்கு முடிவுகாண நிருக மன்னன் இடமே சென்றனர். ஆனால், அவர்களால் அரசனை பேட்டி காண முடியவில்லை. பல நாட்கள் அரண்மனை வாசலில் காத்திருந்துவிட்டு முடிவில் மனம் நொந்து போய் அவன் யார் கண்ணுக்கும் புலப்படாத வனாகி அலைந்து திரிந்து முடிவில் யாதவ வம்சத்தில் பிறக்கும் கிருஷ்ண பகவானால் சாப விமோசனம் பெறட்டுமென அவர்கள் சபித்துவிட்டுப் போயினர். நிருக மன்னனும் தன் மகனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்து சாபப்படி யார் கண்ணிலும் படாதபடி வசிக்க ஓரிடத்தில் தக்க ஏற்பாடுகளைச் செய்துகொண்டு போய்விட்டான்.

 இராமர் இக்கதையைக் கூறிவிட்டு இலட்சுமணனுக்கு நிமி என்பவனின் வரலாற்றையும் கூறலானார்.நிமி இட்சுவாகு மன்னனின் பனிரெண்டாவது மைந்தன். அவன் வைஜயந்தமென்ற அழகிய நகரை நிர்மாணித்தான். தந்தையைத் திருப்தி செய்ய அவன் ஒரு யாகம் செய்ய எண்ணி வசிஷ்டரை குருவாக இருக்க வேண்டினான். அவர் இந்திரனின் யாகத்தை முடித்து வைத்துவிட்டு வந்து அந்த யாகத்தை தொடங்குவதாகக் கூறிச் சென்றார்.
நிமியோ யாகத்தை உடனேயே செய்துவிட வேண்டுமெனத் துடித்தான். வசிஷ்டரோ இந்திரனின் யாகத்திற்குச் சென்றுவிட்டார். அது முடிய எவ்வளவு நாட்களாகுமோ? எனவே, அவன் வேறு ஒரு முனிவரின் உதவியால் யாகத்தை நடத்தி விடுவது என்று தீர்மானித்துக் கொண்டான்.


எனவே, நிமி கௌதமரின் உதவியால் யாகத்தை ஆரம்பித்து முடித்து விட்டான். வசிஷ்டர் திரும்பி வந்து யாகம் முடிந்து போனதைக் கண்டார். தன்னை நிமி அவமானப்படுத்தி விட்டதாக அவர் எண்ணி "உன் உடல் உணர்வற்றுப் போகக் கடவது" எனச் சபித்து விட்டார். வசிஷ்டர் வந்தது கூட நிமிக்குத் தெரியாது. ஆனால், அவரிட்ட சாபத்தை அறிந்த நிமி "நான் எதையும் அறியாதபோது என்னை வசிஷ்டர் சபித்ததால் அவரது உடலும் உணர்விழந்து ஒன்றுமில்லாது போகட்டும்" என எதிர் சாபமிட்டான்.

இப்படியாக ஒருவரையொருவர் சபித்துக் கொள்ளவே வசிஷ்டர் வாயு உருவில் தன் தந்தையிடம் போய் "நிமியின் சாபத்தால் என் உடலே பயனற்று விட்டது. எனவே, எனக்கு வேறொரு உடல் கொடுங்கள்" என்றார். பிரம்மாவும் வசிஷ்டரை வருணன், மித்திரன் ஆகியவர்களின் தயவை நாடச் சென்னார். அவர்களைக் நாடியதால் வசிஷ்டர் நல்லதான மற்றொரு உடலை அடைந்தார். அந்த உடலோடுதான் வசிஷ்டர் இட்சுவாகு வம்ச குருவானார்.

நிமி தன் உடலின் உணர்வை இழந்தபோதிலும் அவனது உயிரெல்லாம் கண்களில் இருக்குமாறு தேவர்கள் வரம் கொடுத்தனர். அவனது உடலில் இருந்து ஒரு மகன் பிறக்கச் செய்தனர். அவன் பெயரில் மதிலாபுரி ஏற்பட்டது. அவனுக்கு ஜனகமன்னனென்ற மற்றொரு பெயரும்கூட உண்டு. இராமர் கூறிய வரலாற்றைக் கேட்டு இலட்சுமணன் "அண்ணா, நிமியும், வசிஷ்டரும் மகா சக்தி வாய்ந்த மேதாவிகளாக இருந்தும் ஏன் பொறுமை இல்லாது போயினர்" எனக் கேட்டான்.


அதற்கு இராமர் "மேதாவிகளும் தவறு செய்பவர்களே". இதற்கு யயாதியின் கதையைக் கூறுகிறேன். யயாதிக்கு சர்மிஷ்டை, தேவயானி என இருமனைவியர் இருந்தனர். சர்மிஷ்டை அசுர மன்னனான விருஷபர்வனின் மகள். தேவயானி அசுர குருவான சுக்கிராச்சாரியாரின் புதல்வி. இருவருக்கும் குழந்தைகள் உண்டு. யயாதி சர்மிஷ்டையின் புத்வனான புருவிடம் அதிக வாஞ்சை கொண்டிருந்தான். அது போலவே சர்மிஷ்டையிடந்தான் அதிக அன்பு கொண்டிருந்தான்.

தேவயானி இதுபற்றி தன் தந்தையிடம் போய்க் கூறவே சுக்கிராச்சாரியாரும் யயாதிக்கு முதுமை வந்து விடட்டுமென சபித்தார். இது கண்டு யயாதி அவரிடம் தன் தவறுகளை ஒப்புக் கொண்டு சாபமாற்றை வேண்டவே அவரும் "உன் புதல்வர்களில் யாராவது ஒருவன் உன் முதுமையை ஏற்றால் நீ அவனது வாலிபத்தைப் பெறலாம். நீ விரும்பும்போது வாலிபத்தை அவனிடம் கொடுத்து உன் முதுமையைப் பெற்றுக் கொள்" எனக் கூறி அனுப்பி விட்டார். யயாதியின் முதுமையை அவரது புதல்வர்களில் ஒருவனைத் தவிர மற்றவர்கள் எல்லாம் ஏற்க மறுத்தனர். அவனது பிரியமான மகனான புருதான் தன் தந்தைக்குத் தன் வாலிபத்தைக் கொடுத்தான். யயாதியும் தன் முதுமையை புருவுக்குக் கொடுத்துவிட்டு அவனது வாலிபத்தை வாங்கிக் கொண்டு சுகபோகங்களை அனுபவித்தான். பல வருடங்களான பின்னர் தன் முதுமையைத் தன் மைந்தனிடமிருந்து பெற்றுக் கொண்டு அவனது வாலிபத்தை அவனுக்கே கொடுத்தான். பின்னர், புருவையே நாட்டின் மன்னன் ஆக்கினான். புருவும் நன்கு ஆண்டு வரலானான்.

இப்படியாக இராமர், இலட்சுமணனுக்கு கதைகள் கூறினார். அன்றைய இரவுப் பொழுதும் கழிய மறுநாள் பொழுதும் புலர்ந்தது.


உத்தரகாண்டம் - 1



 
இராமருடைய பட்டாபிஷேகம் வெகுசிறப்பாக அயோத்தியில் நடந்து முடிந்தது. பட்டாபிஷேகத்திற்கு வந்திருந்த ஏராளமான உறவினர்களும், நண்பர்களும் ஒவ்வொருவராக விடைப் பெற்றுக்கொண்டு திரும்பஆயினர்.
ஒவ்வொருவரிடமும் தன் நன்றியறிதலைத் தெரிவித்த இராமர், அவர்களுக்குத் தக்க வெகுமதிகள் கொடுத்து, மரியாதை செய்து வழி அனுப்பினர். சீதாப்பிராட்டியின் தந்தையான ஜனகரை பரதன் திரும்ப அழைத்துச் சென்று அவர் ராஜ்யம் வரை கொண்டு சென்றுவிட, கைகேய ராஜனுடன் இலட்சுமணன் சென்றான்.

சுக்ரீவனுடன் சேர்ந்து வந்திருந்த இலட்சக்கணக்கான வானரங்கள் அரண்மனை விருந்தாளிகளாக ஆர அமர இரண்டு மாதம் தங்கியிருந்தபின் கிஷ்கிந்தை திரும்ப, அவ்வாறே விபீஷணனுடன் வந்திருந்த ராட்சஸர்களும் இலங்கை திரும்பினர். கடைசியாக சுக்ரீவன், அங்கதன், விபீஷணன் ஆகியோரும் விடை பெற்றனர். அவர்களை இராமர் இராஜமரியாதை செய்து பிரியா விடை கொடுத்தனுப்பினார்.

ஒருவாறு பட்டாபிஷேகக் கோலாகலங்கள் முடிந்து அயோத்தியில் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பியது. இராமர் அயோத்தியை ஆட்சி புரிவதில் கவனம் செலுத்தத் தொடங்கினார். விரைவிலேயே அவருக்கு மிக்க மகிழ்ச்சியான ஒரு தகவல் கிடைத்தது. சீதை கர்ப்பமுற்றிருக்கிறாள் என்ற செய்தியை தன் தாய்மார்களிடமிருந்து தெரிந்து கொண்ட இராமர் அடைந்த குதூகலத்திற்கு எல்லையே இல்லை. தனிமையில் சீதையை அழைத்து அவளிடம் அன்பு வார்த்தைகளை பிரபாகமாகக் கொட்டி அவளை வெட்கி தலைகுனியச் செய்தாள்.

 பின்னர் சீதையிடம், "என் அன்புக்குரியவளே! பெண்கள் கர்ப்பமுற்றிருக்கும்போது அவர்கள் ஆசைப்படுவது எதுவாயினும் அவள் கணவன் அதைத் தர வேண்டும் உனக்கு என்ன விருப்பமோ கேள்! எதுவாயினும் அதை உன் காலடியில் சேர்ப்பிக்கிறேன்" என்றார்.

சீதை வெட்கப் புன்னகையுடன், "சுவாமி! எனக்கு மறுபடியும் கங்கைக் கரையிலுள்ள ரிஷிகளின் ஆசிரமங்களுக்குச் சென்று சற்றுநேரம் பொழுது போக்க வேண்டுமெனத் தோன்றுகிறது" என்றாள்.
"இவ்வளவுதானே! நாளைக்கே நான் அதற்கு ஏற்பாடு செய்கிறேன்" என்று இராமர் சொல்லிவிட்டுச் சென்றார். அவருக்காக மந்திராலோசனை அறையில் பத்திரன் காத்துக் கொண்டிருந்தான். அவர் அவனிடம், "பத்திரா! பொது மக்கள் ஆங்காங்கே என்ன பேசிக் கொண்டு இருக்கிறார்கள் என உன்னை கவனிக்கச் சொன்னேனே! கவனித்தாயா? மக்கள் தங்களுக்குள் என்ன பேசிக் கொள்கிறார்கள்? மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? என்று கேட்டார்.

அதற்கு பத்திரன், "பிரபு! எங்கு சென்றாலும் தங்களுடைய வீர, தீர பராக்கிராமங்களைப் பற்றியே புகழ் பாடுகின்றனர்" என்று தயங்கியவாறு சொன்னார். அவன் எதையோ சொல்ல மறைப்பது போல் இராமருக்குத் தோன்றவே, "பத்திரா! தினமும் நல்ல விஷயங்களை மட்டுமே சொல்கிறாய். ஏதாவது, அதற்கு மாறாக இருந்தாலும் கூறிவிடு! ஏனெனில், மக்களின் உண்மையான உணர்ச்சிகளை நான் அறிய வேண்டும்" என்றார்.
மிகவும் தயங்கிய பத்திரன் கடைசியில் சொல்லவே விருப்பம் இன்றி மென்று விழுங்கிக் கொண்டே, "மகாராஜா! நான் அதை எப்படிச் சொல்வேன்? ஒரு சிலர் அபாண்டமாகத் தங்கள் மீது பழி சுமத்துகின்றனர். அந்நியன் ஒருவன் வசம் இருந்த மனைவியை நம் ராஜா எப்படி முழுமனதுடன் ஏற்றுக் கொண்டார் என்ற அவதூருகப் பேசுகின்றனர்" என்று சொல்லி முடித்தான்.

 அதைக் கேட்ட இராமர் இடியால் தாக்குண்டவர் போல் ஆனார். அவர் உடலெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு நடுங்கியது. கொல்லனின் உலைக்களம் போல் இதயம் கொதித்துப் பொங்கியது. திக்பிரமை பிடித்து வெகுநேரம் அப்படியே சிலையாக உறைத்து போனார். நீண்ட நேரம் கழித்து ஒரு முடிவுக்கு வந்தவராய், தன் சகோதரர்களைத் தன்னிடம் தனிமையில் அழைத்தார். அவர்களிடம் தான் பத்திரன் வாயிலாகக் கேள்விப்பட்டதைக் கூறும்போதே குரல் தழுதழுத்துக் கண்கள் வெள்ளமாய் கண்ணீரைப் பெருக்க, சொல்லி முடித்து விம்மினார்.

"என் சீதை களங்கமற்றவள் என்பது எனக்குத் தெரியும். லட்சுமணா! என்னுடன் நிழலாக இருந்தவன் நீ! ஆகவே, அது உனக்கும் தெரியும். ஆனால், இந்த உலகம் இன்னும் அதை நம்ப மறுக்கிறது. என்ன செய்வேன்? நான் ஒரு சாதாரணப் பிரஜையாக இருந்தால், மற்றவர்களின் கருத்தைப் பொருட்படுத்த மாட்டேன். ஆனால், நான் ஒரு ராஜா!

மக்களுக்காகவே வாழ்பவன்! அவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பவன்! எனக்கென்று குடும்பம், மனைவி, மக்கள் இருந்தாலும், என்னுடைய உண்மையான குடும்பம் குடிமக்களே! அதனால் நான் அவர்களுக்காகத்தான் வாழ வேண்டும். அதனால் லட்சுமணா! நாளை நீ உன் அண்ணியை அழைத்துச் சென்று கங்கைக் கரையில் விட்டுவிட்டுத் திரும்பி விடு! இதைப்பற்றி அவளுக்கு எதுவும் சொல்லமாட்டேன் என்று சபதமிடு! ரிஷிகளின் ஆசிரமத்திற்குச் செல்ல அவள் ஆசைப்பட்டாள்! அவள் ஆசையை நிறைவேற்றுவதாக மட்டுமே சொல்! அவளை விட்டு நான் பிரியப் போவதை சொல்ல வேண்டாம்" என்று சொல்லிய இராமர் துக்கம் தாங்காமல் கதறியழுதார்.

 புறப்படும்போது இருந்த குதூகலம் சீதையிடம் சுத்தமாக இல்லை. ஏதோ விபரீதமான விஷயத்தை இலட்சுமணன் மறைக்கிறான் என்பது மட்டும் தெளிவாகப் புரிய,  அவனைக் கண்களில் நீர் மல்க உண்மையைச் சொல்லும்படி இறைஞ்சினாள்.

"என் வாயினால் எப்படிச் சொல்வேன் தாயே! அந்த மகாப்பாவச் செயலை, கொடூரமான, ஈவிரக்கமற்ற செயலை என்னிடம் ஒப்படைத்ததற்கு பதிலாக உங்கள் கணவர் என்னைக் கொன்று போட்டிருக்கலாம்" என்று இலட்சுமணன் தேம்பியழுதான். அப்படி என்னதான் இராமர் சொல்லி இருப்பார் என்று ஊகிக்க முடியாமல் சீதை திகைத்தாள்.

"தாயே! என் வாயினால் அதை எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. அக்கினியைப் போல் பரிசுத்தமான உங்களைப் பற்றி பொது மக்களில் சிலர் அபவாதம் கூறினார்களாம்! இராவணன் வசம் பல மாதங்கள் இருந்த உங்களை இராமர் ஏற்றுக் கொண்டது தவறு என்று வாய்கூசாமல் சில மகாப்பாவிகள் வம்பளந்தார்களாம். அதனால் குடிமக்களின் கருத்தை ஆதரித்து, உங்களைப் பிரிய தீர்மானித்து விட்டார் என் அண்ணன்! உங்களை இங்கேயே விட்டுவிடும்படி எனக்குக் கட்டளை இட்டிருக்கிறார் தாயே!" என்ற இலட்சுமணன் தான் சொன்ன நஞ்சினும் கொடிய சொற்களின் கடுமையைத்தானே தாங்க முடியாமல் வேரற்ற மரம் போல் கீழே விழுந்து கதறியழ, சீதை ஆயிரம் இடிகளினால் ஒரே நேரத்தில் தாக்குண்டவள் போல் உறைந்து போனாள். அவளால் பேசவே முடியவில்லை கண்கள் மட்டும் தாரை, தாரையாய் கண்ணிரைப் பெருக்கின.

கடைசியில் மனத்தை திடப்படுத்திக் கொண்டு, "அழாதே லட்சுமணா! அழவேண்டியவள் நான்தான்! கஷ்டப்படுவதற்கென்றே பிறந்தவள் நான் என்று தோன்றுகிறது. நான் எந்த நேரத்தில் பெண்ணாய் பிறந்தேனோ தெரியவில்லை, என்னை அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக தாக்கிக் கொண்டேயிருக்கின்றன. அவரைப் பிரிந்திருந்த காலத்தில் நான் வேதனையில் துடித்தது எனக்குதான் தெரியும். இலங்கையில் யுத்தம் முடிந்த பிறகு, எனக்கு விடிவு காலம் வந்து விட்டதென்றும், இனி என் கணவர் உடன் சேர்ந்து காலமெல்லாம் ஆனந்தமாக வாழப் போகிறேன் என்று கனவு கண்டேன். என் கனவுகள் கானல் நீராக மாறப் போகின்றன. போன பிறவியில் என்ன பாவம் செய்தேனோ இப்போது இத்தனை கஷ்டங்களை சுமக்க!

லட்சுமணா! நீ இப்போது கூறிய சொற்களைக் கேட்டதும் அப்படியே கங்கையிலிருந்து விழுந்து உயிரை மாய்த்துக் கொள்ளலாமா என்று தோன்றுகிறது. ஆனால், அப்படிச் செய்தால் ரகுவமிசத்திற்கு மீண்டும் என்னால் அபவாதம் உண்டாகும். தவிர, என் வயிற்றில் வளரும் மழலைகளின் உயிரைப் பறிக்க எனக்கு அதிகாரமில்லை. லட்சுமணா!
என் தலைவிதியை நான் அநுபவிக்கிறேன். உன் அண்ணனின்ஆணையை நீ நிறைவேற்று! திரும்பிச் சென்று அவரிடம் என்னைப் பற்றி சொல் அவர் மீது எனக்கு வருத்தமோ, கோபமோ  இல்லையென்று சொல்! இந்த நிலையிலும் அவருடைய நலமும், சந்தோஷமுமே நான் முக்கியமாகக் கருதுகிறேன் என்று சொல் என்னைப் பற்றி நினைத்து வருந்த வேண்டாமென்று சொல்!" என்று சீதை தெளிவாகச் சொல்ல, இலட்சுமணன் துக்கம் தாளாமல் கதறிக் கதறியழுதான். சீதையின் பாதங்களில் வீழ்ந்து அவற்றைத் தன் கண்ணீரினால் நனைத்தான்.

 பிறகு, திரும்பிச் சென்று படகில் ஏறி, கங்கையைக் கடக்கத் தொடங்கினான். தன் அண்ணியின் முகம் தெரியும் வரை குலுங்கிக் குலுங்கியழுதான். சற்று நேரத்தில் படகு கங்கையில் வெகுதூரம் வந்து விட, சீதையின் முகம் தெரியவில்லை. இலட்சுமணன் உருவம் மறைந்தபின், அதுவரை சிலையாய் நின்றிருந்த சீதை விக்கி, விக்கியழுதாள். அவள் அழுகை ஒலி நாற்திசையிலும் எதிரொலித்தது.


 

யுத்த காண்டம் - 14

 
விபீஷணன் புஷ்பக விமானத்தைக் கொண்டுவந்தான். அது தங்கத்தாலும், வைரங்களாலும் இழைக்கப்பட்டு மின்னியது. பார்ப்போர் கண்ணைப் பறித்தது. அதை இராமர் முன் வைத்து "இன்னும் தங்களுக்கு நான் என்ன கொண்டுவர வேண்டும்?" எனக் கேட்டான்.

அப்போது இராமர் "இந்த வானரர்கள் ஓர் அரிய சாதனையைச் செய்தனர். இவர்களுக்குப் பரிசுகள் கொடுத்து திருப்திபடுத்து. இதனால் உன் புகழ் ஓங்கும்" என்றார். பின்னர் அவர் இலட்சுமணனோடும், சீதையோடும் புஷ்பகவிமானத்தில் ஏறிக்கொண்டார்.

அவர் விபீஷணனிடமும், சுக்ரீவனிடமும், மற்றவர்களிடமும் விடைபெற்றக் கொள்ளும்போது அவர்கள் "நாங்களும் உங்களோடு வந்து உங்களது பட்டாபிஷேக வைபவத்தைக் காண விரும்புகிறோம்" என்று கூறினர். அதைக் கேட்ட இராமர் அவர்களையும் புஷ்பக விமானத்தில் ஏற்றிக் கொண்டார். விமானம் ஏறியவர்கள் யாவருக்கும் இடமளித்தது.

விமானம் செல்லும்போது இராமர் சீதைக்கு போர்க்களத்தில் நடந்த போரையும் பிறகு, கடலில் கட்டிய அணையையும், விபீஷணன் தன்னைச் சந்தித்த இடத்தையும் காட்டினார். கிஷ்கிந்தாபுரியை அணுகும்போது சீதை சுக்ரீவனின் மனைவியான தாரையையும் மற்றுமுள்ள மனைவியரை அழைத்துச் செல்லலாம் என ராமரிடம் கூறினார். உடனே ராமரும் அதற்கு சம்மதித்தார். ஆகையால், புஷ்பக விமானம் அங்கு இறங்கியது.
 
 சுக்கிரீவன் அந்தப்புரத்திற்குப் போய் தாரையையும் மற்றவர்களையும் அயோத்திக்கு வருமாறு கூறினான். வானர ஸ்திரீகளும் தம்மை நன்கு அலங்கரித்துக் கொண்டு சீதையைக் காண ஆவலோடு வேகமாக ஓடோடி வந்தனர்.

அவர்களை எல்லாம் விமானத்தில் ஏற்றிக்கொண்டு யாவரும் அயோத்தியை நோக்கிச் சென்றனர். இராமர் தாம் சுக்ரீவனைச் சந்தித்த ரிஸ்யமுக பர்வதத்தை சீதைக்குக் காட்டினார்.
இதுபோலவே சபரி, ஜடாயு முதலியோரைக் கண்ட இடங்களையும் காட்டி ஜனஸ்தானத்தில் தாம் அமைத்த ஆசிரமப் பகுதிகளையும் காட்டினார். விமானமும் அயோத்தியை சமீபிக்கலாயிற்று. யாவரும் சற்றுத் தொலைவிலுள்ள அயோத்தியைக் கண்டனர். ஆனால், விமானம் நேராக அயோத்திக்குச் செல்லாது பரத்துவாஜ முனிவரது ஆசிரமத்தில் இறங்கியது. இராமர் முனிவரை வணங்கி அவரிடமிருந்து பரதனது நலனையும் தன் தாய்மார்களைப் பற்றியும் விவரங்களை அறிந்து கொண்டார்.

அவர் பரத்துவாஜ ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தபோது சரியாக அயோத்தியை விட்டு அவர் கிளம்பி பதிநான்கு வருடங்கள் முடிந்துவிட்டன. பரத்துவாஜர் இராமர் அங்கு தங்கி தன் உபசரிப்பை ஏற்று மறுநாள் அயோத்திக்குப் புறப்படுமாறு இராமரிடம் சொன்னார்.

இராமரும் உடனே அனுமாரை அழைத்து "நீர் அயோத்திக்கு முன்னதாகச் செல்லும். வழியில் சிருங்கபேரிபுரத்தில் குகனைச் சந்தித்து அவனது நலனைப்பற்றி நான் கேட்டதாகச் சொல்லவும். அவன் மூலமாக பரதனைப் பற்றிய தகவல் கிடைக்கும். குகனும் நான் திரும்பி வருவது கேட்டு மகிழ்ச்சி அடைவான். நீரும் அதன்பிறகு அயோத்திற்குப் போய் பரதனைச்  சந்தித்து என்னைப்பற்றி விவரமாக எடுத்துரைக்கவும். நான் வெற்றிபெற்றது கேட்டு பரதன்

முகம் எப்படி மாறுகிறதென கவனிக்கவும்.

 
 தான் இவ்வளவு நாள்களாக ஆண்ட நாடு கைவிட்டுப் போகிறதேயென்ற கவலை அவனுக்கு சிறிதும் ஏற்படக் கூடாது. அவ்வித ஆசை அவனுக்கு இருந்தால் அவனே தொடர்ந்து நாட்டை ஆண்டு வரட்டும். நீ இத்தகவலை எனக்கு அயோத்திக்கு நான் வந்து சேருமுன்னரே வந்து என்னிடம் சொல்லவும்" என்று கூறினார்.
அனுமாரும் மானிட உருவம் எடுத்துக் கொண்டு காற்றிலும் கடிதாகச் சென்றார். 

சிருங்கபேரிபுரத்தில் குகனைச் சந்தித்து இராமர் மறுநாள் பரத்துவாஜரது அசிரமத்திலிருந்து வரும் செய்தியைக் கூறினார். பின்னர், பரதனைப் பற்றி அறிந்து அயோத்திக்குச் சற்றுமுன் இருக்கும் நந்திக்கிராமத்தை அடைந்தார்.
அங்கு பரதன் ஓர் ஆசிரமத்தை அமைத்துக் கொண்டு தவக்கோலத்தில் இருந்தான். பதிநான்கு ஆண்டுகள் முடிந்தும் இன்னும் இராமர் வரவில்லையே என ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே இருந்தான். அனுமார் அவனை அணுகி "மன்னரே, ஒரு நற்செய்தி கொண்டு வந்திருக்கிறேன். இராமர், இராவணனைக் கொன்று, சிறைப்பட்டுக் கிடந்த சீதையை மீட்டு மிகவும் பலசாலிகளான சுக்ரீவன், விபீஷணன் போன்ற தன் நண்பர்களோடு வந்து கொண்டு இருக்கிறார். அவர்களோடு இலட்சுமணனும் கூட இருக்கிறார்" என்று கூறினார்.

இதைக்கேட்ட உடனேயே பரதன் ஒரேயடியாக மகிழ்ந்து போனான். அனுமாரை அவன் அப்படியே கட்டித் தழுவிக்கொண்டு "ஆகா, இந்த நற்செய்தியைக் கொண்டு வந்த நீங்கள் யாராயிருந்தாலும் உங்களுக்கு லட்சம் பசுக்களையும், நூறு கிராமங்களையும் எனது பரிசாக அளிக்கிறேன். நீங்கள் தயவு செய்து மறுப்பேதும் கூறாமல்  ஏற்றுக்கொள்ளுங்கள்" என்றான்.
அனுமாரும், அதற்கு இணங்கி, பரதனிடம் இராமரைப் பற்றிய விவரங்களை எல்லாம் கூறினார். பரதனும், இராமர் வனவாசம் செய்த காலத்தில் அனுபவித்த கஷ்டங்களையும் மற்ற அனுபவங்களையும் சிரத்தையாகக் கேட்டான். பின்னர், சத்துருக்னனிடம் ஊரெல்லாம் அலங்கரிக்கும்படி அவன் உத்திரவு இட்டான். இராமரை எதிர்கொண்டு அழைக்க மேள தாளங்களையும் நட்டுவப்பெண்மணிகளையும் ஏற்பாடு செய்தான்.
 
 நந்திக்கிராமத்திற்கும், அயோத்திக்குமிடையே உள்ள பாதை சிறப்பான முறையில் அலங்கரிக்கப்பட்டது. ஆங்காங்கு தோரணங்களும், மலர் மாலைகளும் கட்டப்பட்டன. வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டன. இராமரை எதிர்கொண்டு அழைக்க மக்கள் அனைவரும்  கூட்டம், கூட்டமாகக்  கிளம்பி வந்தனர்.

யானைகள், குதிரைகள், இரதங்கள் எல்லாம் அலங்கரிக்கப்பட்டன. கௌசல்யை, கைகேயி, சுமத்திரை முதலானோர் பல்லக்குகளில் ஏறிக்கொண்டு சென்றனர். யாவரும் நந்திக்கிராமத்தை அடைந்து இராமரது வருகைக்காக மிகவும் ஆவலுடன் காத்து நின்றனர்.

நேரமாக ஆக பரதன் பொறுமையை இழக்கலானான். இராமர் இன்னமும் வரவில்லையே என கவலைப்பட்டவாறே, ஒருவேளை அனுமார் கூறியது உண்மை இல்லையோ எனவும் சந்தேகப்படலானான். ஆனால், அவ்வாறு அவன் கவலைப்பட்டுக் கொண்டிருந்த சமயம் புஷ்பக விமானம் தென்பட்டது. அது மெதுவாக நந்திக்கிராமத்தில் வந்து இறங்கியது.

பரதன் ஓடிப்போய் இராமரது பாதங்களில் விழுந்து வணங்கினான். இராமர் அவனை அப்படியே கட்டித் தழுவிக்கொண்டார். வானர வீரர்கள் எல்லாம் மானிட உருவில் இருந்தனர். பரதன் அவர்களை எல்லாம் வரவேற்றவாறே சுக்ரீவனிடம் "சுக்ரீவா, இதுவரை நாங்கள் நால்வராக இருந்தோம். இப்போது நீயும் சேர்ந்ததால் ஐந்து சகோதரனாகி விட்டோம்" என்றான். அவன் விபீஷணனையும் பாராட்டி அவன் செய்த உதவியையும் புகழலானான்.
இராமர் தன் தாய்மார்களுக்கும் அங்கிருந்த மற்ற பெரியவர்களுக்கும் வசிஷ்டருக்கும் நமஸ்காரம் செய்தார். பரதன் இராமரது பாதுகைகளைக் கொண்டு வந்து அவரது காலடியில் வைத்து "இனி நீங்கள் ஆட்சியை ஏற்க வேண்டும். இதனை ஒப்படைக்கும் நாளை நான் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன். கடைசியில் அது வந்தேவிட்டது" எனக்கூறி நாட்டின் பொருள்வளத்தையும், படைபலத்தையும் சொன்னான்.
 
 இராமர் அவற்றை ஏற்றார். புஷ்பக விமானம் குபேரனிடம் திரும்ப அனுப்பப்பட்டது. பரதன் இராமரிடம் "அண்ணா, என் தாய் கேட்டு வாங்கிய நாட்டை நானே உங்களிடம் ஒப்படைக்கிறேன். எனக்கு நாடாளும் திறமை தங்களைவிட அதிகமில்லை. அதனை ஆளவேண்டும் என்ற ஆசையும் எனக்கு இல்லை" என்றான்.
இதன் பிறகு பரதனும், இலட்சுமணனும், சுக்ரீவனும் இராமருக்குப் புனிதநீராட்டினர். தலைமுடியை சரிப்படுத்தி, உடல் எல்லாம் வாசனை திரவியங்களைப் பூசி அழகிய பட்டாடைகளை உடுத்தச் செய்தனர். இதுபோலவே தசரதரின் மனைவிமார்கள் சீதையையும் அலங்கரித்தனர்.

சுமந்திரன் அழகிய குதிரைகள் பூட்டப்பட்ட இரதத்தைக் கொண்டுவந்து நிறுத்தினான். அதில் இராமர் ஏறி அமர்ந்து கொண்டார். சுக்ரீவன், விபீஷணன் முதலியோரும் நீராடி நல்லாடை தரித்து அந்த இரதத்தின் பின்னால் சென்றனர்.

வசிஷ்டர் தசரதரின் மந்திரிகளோடு முன்னதாக அயோத்திக்குப் போய் பட்டாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளைஎல்லாம் செய்யலானார். அதன்பிறகு நகர எல்லையில் மந்திரிகளெல்லாம் வந்திருந்து இராமரது வருகைக்காக் காத்திருந்தனர்.


இராமர் ஏறிய இரதத்தை பரதன் ஓட்டிவர, சத்துருக்னன் குடைபிடிக்க, இலட்சுமணனும் விபீஷணனும் வெண்சாமரங்களை வீசலாயினர். சுக்ரீவன் ஒரு யானை மீதேறி ஊர்வலத்தை நடத்திச் சென்றான். பலவகையான வாத்திய கோஷங்கள் எங்கும் முழங்கின.

இராமர் அயோத்தியை அடைந்தபோது ஒவ்வொரு வீட்டின் வாசலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இராமர் தசரதரின் மாளிகையை அடைந்ததும் பரதனிடம் சுக்ரீவன் தங்குவதற்காகத் தனியான ஒரு மாளிகையை ஏற்பாடு செய்யச் சொன்னார்.

சுக்ரீவன் தன் விடுதியை அடைந்ததும் நான்கு பொற்குடங்களை நான்கு வானரப் பிரமுகர்களிடம் கொடுத்து அவற்றில் கடல்நீரைக் கொண்டுவரச் சொன்னான். அவர்களும் மறுநாள் பொழுது புலர்வதற்குள் நீரைக்கொண்டு வந்தனர். அப்படிச்சென்றவர்களுள் அனுமாரும் ஜாம்பவந்தனும் இருந்தனர்.

இராமரது பட்டாபிஷேகம் இனிது நடைபெற்றது. இராமரும் சீதையும் தங்க அரியணைமீது அமர்ந்தனர். பல ரிஷிகளும், முனிவர்களும், பிராம்மணர்களும், மந்திரிகளும், நகர மக்களும் அவர்களை நீராடச் செய்தனர். சத்துருக்னன் வெண்குடை பிடிக்க சுக்ரீவனும், விபீஷணனும் வெண்சாமரம் வீசினர். தேவேந்திரன் அனுப்பிய அழகிய மலர் மாலையை இராமர் அணிந்திருந்தார்.

இராமர், பிராம்மணர்களுக்கு பல லட்சம் பசுக்களையும், குதிரைகளையும் தானமளித்தார். முப்பதுகோடி தங்க நாணயங்கள், ஆடைகள், பல கிராமங்கள் மான்யங்களாகக் கொடுக்கப்பட்டன. இராமர் கொடுத்த ஓர் அழகிய முத்து மாலையை சீதை தனக்கு மிகவும் மகிழ்ச்சியையூட்டிய அனுமாருக்குப் பரிசாக அளித்தாள். அனுமாரும் அதனை பக்தியோடு ஏற்று அணிந்து கொண்டார்.

இராமர் மற்ற வானரர்களுக்கும் பரிசளிக்க யாவரும் அவற்றைப் பெற்றுக் கொண்டனர். சுக்ரீவன் தன் படையோடு இராமரிடம் விடைப் பெற்றுக் கொண்டு கிஷ்கிந்தைக்கு கிளம்பினான். விபீஷணனும் இலங்கைக்குத் திரும்பினான்.

இராமரது ஆட்சியின் பாரத்தில் பாதியை இலட்சுமணன் வகித்தான். அவர் நூறு அசுவமேத யாகங்கள் செய்தார்.


இராமரது ஆட்சியில் மக்களுக்கு எவ்வித குறையும் இல்லை. அகாலமரணம் ஏற்படவில்லை. இராமராஜ்யம் என்பது மக்கள் சுகப்படும் ஆட்சி என்ற பொருள் இவ்வுலகில் எக்காலத்திலும் நிலைக்கும்படி ஏற்பட்டுவிட்டது.



( யுத்த காண்டம் முடிவுற்றது)

யுத்த காண்டம் - 13

 
இராமர் அனுமாரை அழைத்து "அனுமாரே, நீர் அரக்கர்களின் அரசனான விபீஷணனிடம் அனுமதி பெற்று இலங்கைக்குப் போய் சீதையைக் கண்டு வரவேண்டும். நான் இங்கு இலட்சுமணனோடும், சுக்கிரிவனோடும் சௌக்கியமாக இருப்பதாகவும் அவளை இதுகாறும் சிறையில் வைத்திருந்த இராவணன் இறந்து விட்டானென்றும்கூறி அவள் என்ன சொல்கிறாளெனக் கேட்டு வாரும்" எனக் கூறி அனுப்பினார்.

அனுமாரும் இராமர் கூறியபடி சீதாதேவியைக் கண்டு "தேவி, இராமர் தம் தம்பியான இலட்சுமணருடனும் வானர மன்னனான சுக்கிரிவனுடனும் சுகமாக இருக்கிறார். அவர் வானரசேனையின் உதவியால் எதிகளை வென்று இராவணனைக் கொன்றார். இராவணனது தம்பியான விபீஷணன் இலங்கைக்கு மன்னனானான். இப்போது நீங்கள் விபீஷணனின் மாளிகையில் இருக்கிறீர்கள். அவனால் உங்களுக்கு எவ்விதத் தீங்கும் நேராது" எனக் கூறினார்.

அதைக்கேட்ட சீதை மிகவும் மகிழ்ந்து போனாள். அவள் சற்றுநேரம் வரை பேசாதிருந்து, பிறகு "நற்செய்தி கொண்டுவந்த உமக்கு நான் பசு அளிக்கும் நிலையில்கூட  இப்போது இல்லையே" என்றாள்.
அது கேட்டு அனுமார் "ஆகா! இராமருக்கு ஏற்ற மனைவியாகவே இருக்கிறீர்கள். இனி நான் விடை பெற்றுக்கொள்கிறேன். இராமரிடம் நான் என்ன சொல்வது?" எனக் கேட்டார். அதற்கு சீதை "நான் அவரைப் பார்க்க வேண்டும்" என்றாள்.

 அனுமார் "இதைப்போய் அவரிடம் தெரிவிக்கிறேன்" எனக்கூறி விட்டு அங்கிருந்து இராமர் இருக்கும் இடத்திற்குப் போனார். அவர் இராமரிடம் "தேவி உங்களுக்கு வெற்றி கிடைத்தது கேட்டு மகிழ்ந்து போய் இருக்கிறார். அவர் உங்களைக் காண விரும்புகிறார்" என்றார். இராமரது கண்களில் கண்ணீர் பெருகுகிறது. அவர் சற்று யோசிக்கலானார். சீதை மகா உத்தமி. மாசற்றவள். அவளை ஏற்க அவர் தயார். ஆனால், இராவணனிடம் சிறைப்பட்டுக்கிடந்த அவளை ஏற்றால் உலகம் என்ன எண்ணும்? எனவே, அது விஷயமாக அவர் ஒரு முடிவுக்கு வந்தார்.
அவர் விபீஷணனிடம் "விபீஷணா, நீ சீதாதேவியை இங்கே அழைத்து வா" எனக் கட்டளை இட்டார். விபீஷணனும் அவ்விதமே செய்வதாகக் கூறி மாளிகைக்குக் சென்றான்.

அவன் சில பெண்களின் முலம் சீதைக்கு ஸ்நானத்திற்கும், ஆடைகளுக்குமான ஏற்பாடுகளையும் செய்தான். சீதை குளித்து வாசனை திரவியங்களைப் பூசிக்கொண்டு நல்ல ஆடைகளைக் கட்டிக்கொண்டும் நகைகளை அணிந்து கொண்டும் அங்கிருந்து இராமரைக் காண ஒரு பல்லக்கில் அமர்ந்து சென்றாள். விபீஷணன் தலிய அரக்க பிரமுகர்களும் உடன் சென்றனர்.

இராமர் ‘சீதை மிகவும் நற்குணடையவள். அப்பழுக்கு சொல்ல முடியாது. இதை நான் நன்கு அறிவேன். ஆயினும் சட்டென நான் அவளை ஏற்றால் எல்லாரும் என்ன நினைப்பார்கள்? இராவணனிடம் சிறைப்பட்டுக் கிடந்தவளை அப்படியே ஏற்றுக் கொண்டானே இந்த இராமன் என ஒரு படி தாழ்வாகவே கருதுவார்கள். இதற்கு இடம் தரக்கூடாது’ என எண்ணமிட்டவாறே இருந்தார். விபீஷணன் சீதை வந்து இருப்பதை அறிவித்ததும் அவளைத் தன் ன் அழைத்து வருமாறு கூறினார்.
விபீஷணன் சீதையை இராமர் முன் அழைத்து வந்தான். சீதையும் குனிந்த தலை நிமிராது தன் கத்தைப் புடைவையின் தலைப்பால் மறைத்தவாறே இராமன் முன்பாக வந்து நின்றாள்.

 அப்போது இராமர் தன் குரலைக் கடினமாக்கிக் கொண்டு "சீதையே, உன்னை நான் சிறை மீட்க இராவணனோடு போராடினேன். பல கஷ்டங்களை அனுபவித்து அவன் எனக்கு உண்டாக்கிய அவமானத்தைப் போக்கிக் கொண்டேன். இதெல்லாம் தன்மானம் என்பதைக் காக்கவே நான் செய்தது. என் வம்சத்திற்கு எவ்வித களங்கம் ஏற்படக்கூடாது என்பதற்காக இப்போரை நடத்தி வெற்றி பெற்றேன். இராவணனைக் கொன்றேன். இனி நீ யாரிடம் சிறைப்பட்டிருக்கவில்லை.
உன்னை விடுதலை செய்து விட்டேன். இவ்வளவு நாள்களாக இராவணனிடம் சிறைப்பட்டுக் கிடந்த நீ விடுதலை பெற்றதால் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்" என்றார்.
சீதை இதனையா கேட்க இவ்வளவு காலம் சிறைப்பட்டு வாடி வதங்கினாள்!! அவளுக்கு இது பெருத்த இடிபோல் ஆயிற்று. இராமரா இப்படி கூறினார்? அப்படியானால் ஒவ்வொரு சொல்லும் எவ்வளவு மதிப்புள்ளது? ஆம் அதற்குய மதிப்பைக் கொடுத்தே ஆக வேண்டும்.

சீதையும் "பிரபுவே, நீங்கள் இவ்வளவு கொடிய வார்த்தைகளைக் கூறியே இருக்க வேண்டாம். உங்களது சொற்களிலிருந்து நான் ஏதோ குற்றம் செய்து விட்டவளென்பது தொனிக்கிறது. நான் எவ்விதக் குற்றம் புரியாதவள். மனத்தால்கூட நான் உங்களைத் தவிர வேறுயாரையும் எண்ணியதே கிடையாது. நீங்களோ என்னை ஏற்க இயலாது எனக் கூறும்போது எனக்கு விட்டவழி கணவனால் கைவிடப்பட்ட ஸ்திரீ தேர்ந்தெடுக்கும் ஒரே வழி. அதையே நானும் தேர்ந்தெடுக்கிறேன். இலட்சுமணா, உடனே நீ மரக்கட்டைகளைக் கொண்டு வந்து தீ முட்டு. நான் தீக்குளித்து விடுகிறேன்" என்றாள்.

இலட்சுமணன் என்ன செய்வது எனத் தெரியாது இராமரைப் பார்க்கலானான். இராமர் எவ்வித ஆட்சேபணையும் கூறாது இருப்பது கண்டு உடனேயே அவன் மரக்கட்டைகளை எல்லாம் கொண்டு வந்து போட்டு தீயை ரிட்டினான்.
இராமர் தலை குனிந்தவாறே மௌனமாக அத்தீயைப் பார்த்து கொண்டு இருந்தார்.

 சீதை இராமரை ம்றை வலம் வந்து வணங்கிவிட்டு ஆகாயத்தையும், பூமியையும் வணங்கினாள். அதனால் தேவர்களையும், பிராம்மணோத்தமர்களையும் வணங்கியதாக திருப்தி அடைந்து அவள் அக்கினியினருகே போய் "நான் என் கணவரைத் தவிர வேறு யாரையும் மனத்தால்கூட எண்ணியதில்லை. நான் குற்றம் அற்றவளளென்பது உண்மையானால் இந்த அக்கினியே அதற்கு சாட்சி கூறட்டும்" எனக் கூறியவாறே தீயினுள் நுழைந்து விட்டாள்.

இதைக்கண்ட வானரர்களும், அரக்கர்களும் ‘ஆ’ வெனக் கூறியவாறே நின்றனர். இராமரது கண்களோ கண்ணீர்த் துளிகளை உகுத்தன. அதே சமயம் பிரம்மனும், சிவனும், இந்திரனும், யமனும், வருணனும், குபேரணும் மற்றும் பல தேவர்களும் அங்கு வந்து சேர்ந்தார்கள்.

"உலகை காக்கும் நீங்கள் சீதா தேவி அக்கினியுள் நுழைவதைக் கண்டு மௌனம் வகிக்கலாமா?" எனக் கேட்டார் பிரம்மா. அப்போது இராமர் "நான் இப்போது தசரத மன்னனின் புதல்வன். முன் பிறப்பில் யார் என்பதைக் கூறுங்கள்" என்றார். பிரம்மாவும் "நீங்கள் காத்தலென்னும் தொழிலைப் புரியும் விஷ்ணுவன்றோ? சீதை லட்சுமிதேவி. இராவணனை ஒழிக்கவே நீங்கள் இராமராக அவதாரம் எடுத்தீர்கள். நீங்கள் அவதாரம் எடுத்த வேலை இத்துடன் முடிந்து விட்டது. இனி வைகுண்டத்திற்கு வரலாம்" என்றார்.

இதேசமயம் அக்கினியும் அங்கு வரவே சீதை புகுந்த தீ அணைந்து விட்டது. சீதையை இராமடம் ஒப்படைத்து அவன் "தேவியார் மாசற்றவரென்பதை நானா உங்களுக்கு எடுத்துக் கூறவேண்டும்?" இவரது உள்ளம் உங்களுக்குத் தெரியாதா? இவரை எக்கும் சக்தி எனக்கு ஏது?" எனக்கூறி தேவியாரை ஏற்க வேண்டினான். அப்போது இராமர் சீதையிடம் "சீதையே உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா? பிறர் சொல்லித்தான் நான் தெரிந்து கொள்ள வேண்டுமா? உன்போன்ற கற்புக்கரசியைக் கூட நான் கொடுஞ் சொற்களைக் கொண்டு மனம் நோகச் செய்துவிட்டேன். ஆனால், அதைச் செய்ததாலேயே யாவரும் உன் மகிமையைத் தெரிந்து கொண்டனர்.


 நெருப்பே உன்னைத் தகிக்க முடியாதபடி அவ்வளவு சற்குணவதி என்பதை யாவருக்கும் உணர்த்தி இராவணன் உன்னை அணுகக் கூட முடியாது என்பதை எடுத்துக்காட்டவே இப்படி நான் நிடந்து கொண்டேன். இனி உன்னை நான் ஏற்க எவ்விதத் தடையும் இல்லை" என்றார்.
அப்போது பரமசிவன் "இராமா, உன் தந்தை சொர்க்கத்திலிருந்து வந்திருக்கிறார். நீ அவரது வார்த்தைகளை உண்மையாக்கியதனால் அவருக்கு இந்திரலோகம் கிடைத்துள்ளது" என்றார். அதே சமயம் தசரதரும் ஒரு விமானத்தில் வந்து இறங்கினார்.

இராமரும், இலட்சுமணரும் தம் தந்தையைக் கண்டு ஆனந்தம் அடைந்தனர். அவரை வணங்கினர். தசரதரும் அவரைக் கட்டித் தழுவியவாறே "இராமா, உன்னைக் காட்டில் தவிக்க விட்டு விட்டு எனக்கு சொர்க்கலோகத்தில் சுகம் ஏது? உன்னை காட்டிற்கு அனுப்ப கைகேயிக்கு வரம் கொடுத்தேனே என்பதை எண்ணி எண்ணி இப்போதும் என் மனம் ஏங்குகிறது. ஆனால், உன் பட்டாபிஷேகத்தைத் தடுத்து நறுத்தியது தேவர்கள். நீ இராவணனைக் கொல்ல வேண்டும் என்பதற்காக காட்டிற்குச் செல்ல வேண்டியதாயிற்று. பதிநான்கு ஆண்டுகள் முடிந்ததும் நீ அயோத்திக்குப் போய் பட்டாபிஷேகம் செய்து கொள். உன்னை உன் தாயார் கௌசல்யை கண்டு மகிழ்ந்து போவாள்" என்றார்.

அதன் பின்னர் அவர் இலட்சுமணனிடம், சீதையிடம் பேசி அவர்களுக்கு சில புத்திமதிகளைக் கூறினார். இந்திரனும், இராமரை ஆசீர்வதித்துவிட்டு "உங்களுக்கு ஏதாவது வேண்டுமானால் கேளுங்கள்" என்றார். இராமரும் "எனக்காகப் போட்டு மடிந்த வானரங்களும் கரடிகளும் மீண்டும் உயிர் பெற்று எழுந்தால் அதுவே போதும்" என்றார். இந்திரனும் அவ்விதமே செய்துவிட்டு மற்ற தேவர்களுடன் மறைந்தான். இறந்துபோன வானரர்கள் மீண்டும் உயிர்பெற்று வந்தது கண்டு எல்லாரும் மகிழ்ந்தனர். அன்றைய இரவு யாவரும் சுகமாகத் தூங்கினர். மறுநாள் விபீஷணன் இராமரிடம் வந்து "நீங்கள் என் மாளிகைக்கு வந்து உடைகளை மாற்றி விருந்துண்ண வேண்டும்" என அழைத்தான்.

அதற்கு இராமர் "இதையெல்லாம் சுக்கிரிவனும் மற்றவர்களும் ஏற்கட்டும். நான் பதிநான்கு ஆண்டுகள் கழிந்ததும் உடனேயே தம்பி பரதனைச் சந்திப்பதாக வாக்களித்திருக்கிறேன். நான் குறிப்பிட்ட நாளன்று அயோத்தி போய்ச் சேராவிட்டால் பரதன் தீ வளர்த்து அதில் குதித்து விடுவான். எனவே, நான் சற்று தாமதியாது அயோத்திக்குத் திரும்பிச் செல்ல வேண்டும்" என்று அவனிடம் கூறினார். அதற்கு விபீஷணன் "இங்கேதான் குபேரனின் புஷ்பக விமானம் இருக்கிறதே. அதை நான் குபேரனிடம் கொடுக்கவில்லை. உங்களை அது ஒரே நாளில் அயோத்திக்கு கொண்டு போய் சேர்த்துவிடும். எனவே, நான் இடும் விருந்தை ஏற்கவேண்டும்" என்றான்.

அப்போது இராமர் "நீ புஷ்பக விமானம் கொடுப்பதே பெரிய விருந்து இட்டதற்குச் சமம். உன் பக்தியே போதும். வேறு எதுவும் கொடுத்து என்னை உபசரிக்க வேண்டாமே" எனக் கூறி மறுத்து விட்டார்.

யுத்த காண்டம் - 12

 
இராமர் இலட்சுமணன் விழுந்து கிடந்த இடத்திலேயே இருந்தார். இந்த சமயமும் அனுமாரே மூலிகையைக் கொண்டுவரச் சென்றார். அவர் அந்த மலையை அடைந்ததும் எந்த மூலிகையைப் பறித்துச் செல்வது என்ற ஐயம் பிறந்தது.

அவர் அதற்காக யோசனை செய்து கொண்டிருக்கவில்லை. அந்தக் குன்றையே பெயர்த்து எடுத்துக் கொண்டு இலங்கைக்கு வந்து சேர்ந்தார். சுசேனனும் அந்தக் குன்றிலிருந்து தனக்கு வேண்டிய மூலிகைகளை எடுத்துக்கொண்டு இலட்சுமணனுக்குக் கொடுப்பதற்கான மருந்தைத் தயாரித்து அதைக் கொடுக்கலானான். மூலிகைகளின் சாறு இலட்சுமணனின் மூக்கில் பட்டதும் அவனது மயக்கம் போவிட்டது. அவன் மெதுவாக எழுந்து உட்காரவே இராமரும் அவனைக் கட்டித்தழுவிக் கொண்டு "தம்பி, மரணத்தின் வாயில் அகப்பட்ட நீ எனக்கு மீண்டும் அதிர்ஷ்டவசத்தினால் கிடைத்து விட்டாய். நீயும் இல்லாமல் சீதை கிடைத்தும் நான் உயிர் வாழ முடியுமா? போரில் வெற்றி கிடைத்தாலும் எனக்கு அதனால் என்ன பயன்?" எனக்கூறினார்.


அதைக்கேட்ட இலட்சுமணன் "அண்ணா, நீங்கள் இப்படியெல்லாம் மனம் தளர்ந்து போ பேசலாமா? இராவணனைக் கொன்று விட்டு அவனது தம்பி விபீஷணனுக்கு நீங்கள் முடிசூட்டுவதாகக் கொடுத்த வாக்கு என்ன ஆவது? இனியும் என்னைப் பற்றிய கவலை வேண்டாமே. இனி இராவணனைக் கொல்வதில் முயல்வோம்" என்றான்.

 இதைக்கேட்ட இராமர் உற்சாகம் கொண்டு எழுந்தார். இதே சமயம் போர்களத்தினின்று ஓடிய இராவணன் மீண்டும் ஒரு ரதத்தின் மீதமர்ந்து வந்து கொண்டிருந்தான். அவனை இராமர் தரைமீது நின்றவாறே எதிர்க்கலானார்.
இதைக்கண்ட இந்திரனின் தேரோட்டியான மாதலி என்பவன் தேவலோகத்திலிருந்து ஓர் அழகிய ரதத்தையும், கவசத்தையும், வில் அம்புகளையும் கொண்டு வந்து இராமரிடம் கொடுத்தவாறே "இவற்றை தேவேந்திரன் உங்களுக்குக் கொடுக்கும்படி சொன்னார்" என்றான். இராமரும் அவற்றை ஏற்று அத்தேரை வலம் வந்து அதில் ஏறி உட்கார்ந்து கொண்டார்.


இராமருக்கும் இராவணனுக்கும் இடையே கடும்போர் மூண்டது. ஒருவர் எய்யும் அஸ்திரம் மற்றவரது எதிர்த்தாக்குதலால் பயனற்றுப் போகலாயிற்று. இராவணன் போர் புரிவதில் சளைத்தவனா என்ன? இராமரை திக்குமுக்காட வைத்தான்.


இதன் பிறகு இராமரின் தாக்குதல் கடுமையாகியது. இராவணன் நிலைதடுமாறலானான். அவனது உயிருக்கே ஆபத்து என்னும் நிலையும் ஏற்பட்டது. அப்போது அவனது தேரோட்டி தேரை யுத்த களத்தில் இருந்து வேகமாக ஓட்டிக் கொண்டு வேறு புறம் செல்லலானான்.


இதைக்கண்டு இராவணனுக்கு தன் தேரோட்டியின் மீது கோபம் வந்து விட்டது. அவனைப் பார்த்து "என்னடா இது? என்னை நீ போர் புரியத் தெரியாதவனென்றா எண்ணி விட்டா? உடனேயே ரதத்தைப் போர்க்களத்திற்குக் கொண்டு போ" எனக் கூறினான்.


அப்போது தேரோட்டியும் "மகாராஜா, நான் போர் விதிகளின்படியே தேரைச் சற்று விலக்கி ஓட்டினேயல்லாது வேறு எந்த வகையான தீய எண்ணமும் கொண்டு இவ்விதம் செய்யவில்லை. இனி நீங்கள் என்ன கூறினாலும் அப்படியே செய்கிறேன்" என்றான். அது கேட்டு இராவணனது கோபம் தணிந்தது. அவன் தன் தேரோட்டியிடம் "இந்த இராமனது தாக்குதல் சற்று கடுமையாகத்தான் இருந்தது. ஆயினும் இப்போது தேரை இராமனிருக்கும் இடத்திற்கே ஓட்டிச் செல்" எனக் கூறினான்.

 இந்த சமயத்தில் இராமரும் களைத்துப் போயிருந்தார். அதுசமயம் அங்கே வந்த அகத்தியர் "இராமா, நீ ஆதித்திய இருதயம் என்ற மந்திரத்தை இப்போது கூறு. அதனால் உனக்கு புதிய சக்தியும், உற்சாகமும் ஏற்படும்" எனக்கூறி அவர் ஒருமுறை அம்மந்திரத்தைச் சோன்னார். இராமரும் அம்மந்திரத்தை மும்முறை உச்சரித்தார். அப்போது அவரது சோர்வு நீங்கியது. உற்சாகம் மிகுந்தவராக இராவணன் உடன் போர் புரிய அவர் சென்றார்.

தன் தேரை ஓட்டும் மாதலியிடம் அவர் "நான் இம்முறை இராவணனைக் கொல்லப் போகிறேன். நீ மட்டும் தேரைக் கவனமாக ஓட்டு" எனக் கூறினார். இராமரது தேரை அவன் வேகமாகச் செலுத்தினான். தேர் சென்ற வேகத்தில் தூசிப்படலம் கிளம்பி இராவணனது தேரைச் சூழ்ந்து மறைத்தது. இராவணன் ஆத்திரம் கொண்டு இராமரிருக்கும் திசையை நோக்கி அம்புகளை எய்தான். இராமர் அவற்றையெல்லாம் இந்திரன் கொடுத்தனுப்பிய அம்புகளைக் கொண்டு எதிர்த்து பயனற்றதாகப் போகச் செய்தார்.


இந்த இருவருடைய போரைப் பார்க்க யாவரும் நின்றனர். வானத்திலும் தேவர்கள் கூடி விட்டனர். இராமரும் இராவணனும் கடுமையாகப் போர் புரிந்தது அதுவே போரின் இறுதி நிலை என்பதை யாவருக்கும் எடுத்துக்காட்டுவது போல இருந்தது.

 இராமர் விட்ட கூரிய அம்பு ஒன்று விர்ரெனப் பாந்து இராவணனது தலையைத் துண்டித்தது. ஆனால், என்ன ஆச்சரியம்! தலை வெட்டுண்டு போனாலும் அவனது கழுத்தின் மீது இன்னொரு தலை வந்தது. அதனையும் இராமர் ஓர் அம்பினால் துண்டித்தார். அப்போதும் அந்தத் தலை உடலிலிருந்து வேறுபட்டு விழுந்தாலும் வேறொரு புதிய தலை அவனது கழுத்தின்மீது வந்தது.

இப்படியாக இராமர் அவனது தலையை வெட்டி வீழ்த்தியபோது எல்லாம் ஒவ்வொரு புதிய தலையாகத் தோன்றலாயிற்று. இப்படியாகப் போர் ஒரு முடிவு இல்லாது போவதைக் கண்ட மாதலி இராமரிடம் "இவனது தலையைத் துண்டிப்பதால் பயன் ஏதும் இல்லை. இவனது உயிரைப் போக்க நீங்கள் பிரம்மாஸ்திரத்தை உபயோகியுங்கள்" என்றான்.

இதைக்கேட்டு இராமர் கொடிய பாம்பு போலத் தோற்றமளிக்கும் ஓர் அம்பை எடுத்தார். அதனை பிரம்மா தேவேந்திரனுக்காக ஒரு முறை தயாரித்துக் கொடுத்திருந்தார். அது கண்ணைப் பறிப்பது போல பிரகாசித்தது. அதனை வில்லின்மீது வைத்து இராமர் மந்திரத்ததை உச்சரித்து இராவணனது மார்ப்பிற்குக் குறி வைத்து எய்தார்.


அது வெகுவேகமாகப் பாய்ந்து இராவணனது மார்பைத் துளைத்துக்கொண்டு முதுகுப்புறமாக அப்பால் போனது. இராவணனது கையிலிருந்த வில்லும் அம்பும் கீழே விழுந்தது. அவனது சடலம் சாய்ந்தது. ஆவி பிரிந்தது. இதைக் கண்ட  அரக்கர்கள் ஓட்டமெடுத்தனர். வானரர்களோ வெற்றி முழக்கம் செய்தனர். ஓடும் அரக்கர்களைத் துரத்தினர். இதே சமயம் தேவர்கள் துந்துபி நாதம் முழக்கினர். மலர்களை வானிலிருந்து சொரிந்தனர்.


இராமரும், சுக்கிரீவனும் அங்கதனும் மகிழ்ச்சியுற்றனர். தாம் இலங்கைக்கு வந்த நோக்கம் கை கூடியதற்காக சந்தோஷமடைந்தனர். அனுமார், விபீஷணன் முதலானோர் இராமரையும் இலட்சுமணனையும் சூழ்ந்து நின்று அவர்களைப் போற்றிப் புகழ்ந்தனர்.

 விபீஷணனுக்குத் தன் அண்ணனை இழந்தது துக்கத்தையே அளித்தது. சீதையைக் கவர்ந்து வந்ததுதான் இராவணன் செய்த ஒரு குற்றம். சற்று யோசித்துப் பார்த்தால் இராவணன் மிகவும் நீதிதவறாதவனென்றும் நன்கு படித்தவனென்றும் தெரியவரும். அது மட்டுமா? மாபெரும் வீரனல்லவா?

இராமர் விபீஷணனுக்கு ஆறுதல் கூறலானார். "விபீஷணா, இராவணன் எல்லாரையும் போலவா இறந்தான்? போர் புரிந்து கடைசிவரை எதிர்த்து நின்று போர்க்களத்திலேயே உயிர் துறந்தான். போரில் வெற்றி தோல்வி என்பது ஏற்படக்கூடியதுதான். இராவணன் வீர சொர்க்கத்தையே அடைந்துவிட்டான். எனவே நீ கவலைப்பட்டுக் கண் கலங்காதே" இதனைக் கேட்ட விபீஷணன் ஆறுதல் அடைந்து இராவணனுக்கான ஈமச்சடங்குகளைச் செய்ய ஏற்பாடு செயலானான். இராமரும் அவனை அவ்விதம் செய்யுமாறு கூறினார்.


இராவணன் இறந்த செய்தி கேட்டதும் அவனது மனைவியர் போர்க்களத்திற்கு அழுது கொண்டே வந்தனர். அவனது உடலைக் கண்டதும் கண்ணீர் பெருக்கியவாறே "விபீஷணன் புத்திமதி கூறியது போல இவர் சீதையை இராமரிடம் ஒப்படைத்திருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்காதே. மூவுலகங்களையும் வென்ற இவர் முடிவில் ஒரு மானிடரின் கையால் மடிய வேண்டியதாயிற்றே" எனக்கூறி புலம்பினார்.


இராமர் விபீஷணனைத் தம்மருகே அழைத்து "நீ இவர்களையெல்லாம் மாளிகைக்கு அனுப்பி விடு" என்றார். விபீஷணனும் அவ்விதமே செய்தான்.


சந்தனக் கட்டைகளை அடுக்கி அதன் மீது விரிப்பு விரித்து இராவணனது உடலை அதன் மீது கிடத்தினர். பின்னர் விபீஷணனே அதற்கு நெருப்பு மூட்டினான். ஈரத்துணியோடு ஜலதர்ப்பணம் செய்து முறைப்படி செய்ய வேண்டியது எல்லாம் செய்தான். இராவணனது உடல்பிடி சாம்பலாகியது. போரைக் கண்ட தேவர்களும், கந்தர்வர்களும் இராமரது திறமையையும் பராக்கிரமத்தையும் பற்றி புகழ்ந்து பேசியவாறே தத்தம் இருப்பிடங்களுக்குச் சென்றனர்.

இராமரும் மாதலியைத் தக்கபடி கௌரவித்து அவனைத் தேரோடு தேவலோகத்திற்கு அனுப்பி வைத்தார்.
இதன் பிறகு அவர் சுக்கிரீவனோடு பலவாறு பேசித் தன் நன்றியைத் தெரிவித்தவாறே தாம் முகாம் செய்திருந்த இடத்தை அடைந்தார். இலட்சுமணனும் அவர்களோடு சென்றான். அப்போது இராமர் "தம்பீ, இனி நாம் செய்ய வேண்டிய வேலை விபீஷணனை இலங்கையின் அரசனாக ஆக்குவதே. எனவே, அதற்கான ஏற்பாடுகளை கவனி" என்றார்.


இலட்சுமணன் வானரர்களைக் கொண்டு தங்கக் குடங்களில் சமுத்திர நீரைக் கொண்டு வரச் செய்தான். விபீஷணனை அரியாசனத்தில் அமர்த்தி அந்த நீரால் அபிஷேகம் செய்தான். விபீஷணனின் மந்திரிகள் அவனுக்கு உறுதுணையாக இருப்பதாகக் கூறினர்.


விபீஷணனும் யாவர் மனமும் மகிழும்படி இன்சொல் கூறி ஆட்சியை ஏற்றான். அவனுக்கு அர்க்கர்கள் பல பொருள்களைக் காணிக்கையாகச் செலுத்தினர். அவன் அவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டு இராமருக்கும் தன் காணிக்கையாகப் பல பொருள்களை அளித்தான்.


யுத்த காண்டம் - 11

 
இராமரிடம் விபீஷணன் "இந்திரஜித் நிகும்பலையில் யாகம் செய்யும்போது யார் அவனை எதிர்த்துப் போரிடுகிறானோ அவனே இந்திரஜித்தைக் கொல்லமுடியும் என்று சாபம் இருக்கிறது" என்றான். உடனே, இலட்சுமணன் இராமரிடம் விடைப்பெற்றுக் கொண்டு சுக்கிரீவன், அனுமார், விபீஷணன் முதலியவர்களோடு வானர வீரர்களையும் அழைத்துக் கொண்டு நிகும்பலைக்குச் சென்றான். அந்த ஹோமம் நடைபெறாது தடுத்து அவனைக் கொல்வதே இலட்சுமணனின் நோக்கம்.

நிகும்பலைக்குப் போகுமுன் பெரிய அரக்கர் படையை எதிர்க்க வேண்டியிருந்தது. அதனை ஒழித்தாலே இந்திரஜித்தோடு போர் புரிய முடியுமென விபீஷணன் இலட்சுமணனிடம் கூறவே அவனும் அரக்கர்களைத் தாக்கும்படி வானரர்களுக்குக் கட்டளையிட்டான். அரக்கர்படை அழியலாயிற்று.


இதைக்கண்ட இந்திரஜித் யாகத்தை முடிக்காமலே போரிட எழுந்து வந்தான். வானரர்கள் அவனது தேரைச் சூழ்ந்து கொண்டு தாக்கலாயினர். அனுமார் மரங்களை வேரோடு பிடுங்கி வந்து அரக்கர்களை அழிக்கலானார். அரக்கர்களும், அனுமாரைத் தாக்கலாயினர். அனுமாரோ சற்றும் சளைக்காது அவர்களையெல்லாம் எமனுக்கு இரையாக்கிக் கொண்டே போனார். இதைக்கண்ட இந்திரஜித் தன் தேரை அனுமார் இருந்த பக்கமாக செலுத்தலானான். அவன் விட்ட பாணம் அனுமாரைத் தாக்கி காயப்படுத்தியது.

 அதைக்கண்ட விபீஷணன் இலட்சுமணனிடம் "நீ போய் இந்திரஜித்தை தாக்கு" என்றான். இலட்சுமணன் விபீஷணனுடன் நிகும்பலை யாகம் நடக்குமிடத்தை அடைந்தான். அங்கிருந்துதான் இந்திரஜித் போருக்குப் புறப்படுமுன் பலியிட்டாக வேண்டும்.

விபீஷணன் இலட்சுமணனிடம் "இப்போது நீ இந்திரஜித்தையும் அவனது தேர்ப்பாகனையும் கொல். அவன் இந்த யாகத்தை முடிக்காமல் இறந்து ஒழிவான்" என்றான். இலட்சுமணனும், விபீஷணன் குறிப்பிட்ட இடத்தில் நின்றுகொண்டு இந்திரஜித்தைத் தன்னோடு போர்புரிய வரும்படி அழைத்தான்.


இந்திரஜித் இலட்சுமணனைப் பார்த்து எதுவும் பேசாமல் விபீஷணனிடம் "நீ குலத்தையே கெடுக்க வந்தாயே. சிறிது கூட இந்த வம்ச ரத்தமே ஓடவில்லையா? நம் வம்சத்து விரோதியே கதி என்று கிடக்கிறாயே. உன் மூளை மழுங்கிவிட்டதா? உன் யோசனையால் தானே இந்த யாகம் தடைப்பட்டு விட்டது" என்றான்.


அதற்கு விபீஷணன் "என்னை பற்றித்தான் உனக்கு நன்றாகத் தெரியுமே. நான் அரக்க இயல்பு கொண்டவனல்ல நேர்மையை விரும்புபவன். அதனால்தானே சொந்த அண்ணனையே விரோதித்துக் கொண்டு இவர்களோடு நட்பு கொண்டேன். நட்பு நம்பிக்கையின் அடிப்படையில் பிறந்தது. பிறர் பொருளைக் கவர்ந்தவன் என்றுமே வாழ்க்கையில் உருப்படமாட்டான். நீ இராவணனுக்காக போர் புரிகிறாய். எனவே, நீயும் அழிய வேண்டியவனே" என்றான்.


அதுகேட்டு இந்திரஜித் மிகவும் கோபம் அடைந்தான். அவன் இலட்சுமணனிடம் "நேற்றிரவு உன்னையும், உன் அண்ணனையும் அடித்து நினைவிழக்கச் செய்தேனே. அதை நீ மறந்துவிட்டு இப்போது என் கையால் இறக்கவா வந்திருக்கிறாய்?" எனக் கேட்டான். இலட்சுமணனோ "ஆகா! அழகுச்சொல் வீரனே! என்னைக் கொல்வதாக ஏன் பயமுறுத்துகிறாய்? செயலில் காட்ட முடியாது வீண் ஜம்பம் அடிக்கிறாய். திருடனைப்போல ஓடி மறைந்து தாக்குகிறாய். இதுவா  வீரனின் லட்சணம்? வா நேருக்கு நேர் போர் புரியலாம்" என்றான்.

 மறுநிமிடமே இலட்சுமணன் மீது இந்திரஜித் பாணங்களைத் தீவிரமாக எய்யலானான். ஆனால், இலட்சுமணன் அவற்றையெல்லாம் தடுத்ததோடு இந்திரஜித்தையே கடுமையாகத் தாக்கலானான். விபீஷணனும் இலட்சுமணனுக்கு உற்சாகமூட்டி சட்டென இந்திரஜித்தைக் கொல்லுமாறு யோசனை கூறினான்.

இந்திரஜித்தால் இலட்சுமணனின் தாக்குதலைச் சமாளிக்க முடியவில்லை. ஆயினும், அவன் கடுமையாகவே போர் புரியலானான். விபீஷணனும் போரில் இறங்கி அரக்கர்களை அழித்தவாறே "வானரர்களே, அரக்கர்களை அழியுங்கள். இராவணனுக்கு இந்த இந்திரஜித் ஒருவனே மாவீரன். மற்றவர்களெல்லாம் அழிந்து போயினர். இவனைக் கொல்வது இலட்சுமணனின் பொறுப்பு. எனவே, இவனுக்கு உதவி புரியும் படையை நாம் அழிப்போம்" என வானரர்களிடம் கூறினான்.


இதே சமயம் இலட்சுமணன் இந்திரஜித்தின் தேர்ப்பாகனைக் கொன்றான். அதனால் இந்திரஜித் தானே தேரை ஓட்டிக் கொண்டு போர் புரியலானான். வானர வீரர்களில் சிலர் அவனது தேரை முறித்தனர். இந்திரஜித் தரை மீது நின்று போர் புரியலானான்.


இதே சமயம் அவன் சில அரக்கர்களிடம் "இப்போது நீங்கள் என்னை மறைத்து நின்று போர் புரியுங்கள். நான் இலங்கைக்குப் போய் வேறொரு தேரில் ஏறிக் கொண்டு வந்து விடுகிறேன்" என்றான். அவர்களும் அவ்விதமே செய்ய இந்திரஜித் வானரர்களின் கண்ணில் படாமல் இலங்கைக்குள் போய் ஒரு தேரில் ஏறிக்கொண்டு போர்க்களத்திற்குத் திரும்பி வந்தான்.


அது கண்டு யாவரும் ஆச்சரியப்பட்டனர். இலட்சுமணனோ இந்திரஜித்தை மேலும் கடுமையாகத் தாக்கலானான். மீண்டும் தேர்ப்பாகனைக் கொன்றான். ஆனால், அத்தேரின் குதிரைகளோ தேர்ப்பாகன் இல்லாமலேயே ரதத்தை லாவகமாகச் செலுத்திச் சென்றன. இந்திரஜித் இலட்சுமணனையும், விபீஷணனையும் தாக்கலானான்.

 விபீஷணனோ கோபமுற்று அவனது தேரை முறித்து குதிரைகளைக் கொன்றான். மீண்டும் இந்திரஜித் தரைமீது நின்று போரிட வேண்டியதாயிற்று. அவன் சக்தி ஆயுதமொன்றை எடுத்து விபீஷணனின்மீது எறிந்தான். இலட்சுமணன் தன் பாணத்தால் அதனை பிசுபிசுத்துப் போகச் செய்தான். அது கண்டு இந்திரஜித் இலட்சுமணனுடன் கடும் போர் புரியலானான்.

அவர்கள் விட்ட பாணங்கள் ஒன்றையொன்று தாக்கி நெருப்புப் பொறிகளைக் கக்கின. அடர்ந்த புகை கிளம்பியது. கடைசியில், இலட்சுமணன் விட்ட சக்திவாய்ந்த ஓர் அம்பு இந்திரஜித்தின் தலையைத் துண்டித்துக் கீழே வீழ்த்தியது.
இதைக்கண்டு விபீஷணன் ஆர்ப்பரித்தான். வானரர்கள் மகிழ்ச்சிஆரவாரம் புரிந்தனர். அரக்கர்களோ அஞ்சி ஓடினர். இலட்சுமணன், விபீஷணன், சுக்கிரீவன், அனுமார் முதலானோர் இராமரிடம் போய் இந்திரஜித் இறந்தானென்று கூறினர்.


அது கேட்டு இராமர் இலட்சுமணனைக் கட்டித் தழுவிக்கொண்டு "இனி இராவணனுக்கு யார் இருக்கிறார்கள்? அவனது முடிவு காலம் வந்து விட்டது" எனக்கூறி தன் மன உணர்ச்சியை வெளியிட்டார். இலட்சுமணனுக்கும், விபீஷணனுக்கும் ஏற்பட்ட காயங்களைக் கழுவி சுசேனன் தக்க சிகிச்சை அளித்தான். இவ்விதமாக வானரர்கள் இந்திரஜித் இறந்ததால் கவலையை ஒழித்துக் களிப்பெய்தனர்.


இந்திரனையே வென்ற இந்திரஜித்தை இலட்சுமணன் கொன்றுவிட்டானென்ற செய்தியைக் கேட்டதுமே இராவணன் மூர்ச்சையடைந்தான். அவன் தன் நினைவைப் பெற்றதும் "ஆகா! இதெல்லாம், சீதையால் வந்த வினைதானே. இப்போதே அவளைக் கொன்று விடுகிறேன்" என எண்ணியவாறே வாளை உருவிக்கொண்டு சீதை இருக்குமிடத்தை நோக்கிச் சென்றான்.


அவனைத் தடுத்து நிறுத்த அவனது மந்திரிகளும், மனைவிமார்களும் முயன்றனர். ஆனால், இராவணன் ‘வீர்’ரென சீதை இருக்குமிடத்திற்குப் போய்ச் சேர்ந்தான். இராவணன் வந்து கொண்டிருக்கும் வேகத்தைக் கண்டு சீதை இனி தான் உயிர் தப்பப்போவது இல்லை என்று தீர்மானித்துக் கொண்டாள்.

 இதற்குள் சுபார்சுவன் என்ற மந்திரி இராவணனைத் தடுத்து "இதென்ன. ஒரு பெண்ணையா கொல்வது? சீதையை நீங்கள் அடைய முயல்வதுதான் நல்லது. அதை விட்டு விட்டு அவளைக் கொல்ல முயல்வது சரியல்ல. கோபமும், ஆத்திரமும் வந்தால் அதை இராமனிடம் காட்டவேண்டும். இன்று சதுர்த்தசி. நாளையதினம் அமாவாசை. இன்று போருக்குத் தயாராகி நாளை இராமனோடும், இலட்சுமணனோடும் போர் புரியுங்கள்" எனக் கூறினான்.

தன் மந்திரி கூறியதைக் கேட்டு இராவணன் திரும்பிச் சென்றான். தனது சேனாதிபதிகளிடம் "இப்போது நீங்கள் போய் போரிடுங்கள். நாளைய தினம் நான் இராமனையும், இலட்சுமணனையும் கொன்று விடுகிறேன்" என்றான். அரக்கர்படை வானரர்களின் மீது மிகவும் கடுமையான தாக்குதலை ஆரம்பித்தது.


இராமர் தனது பாணங்களால் அரக்கர் படையை அழிக்கலானார். இலங்கையைச் சுற்றிலும் அரக்கர்களின் உடல்களே விழுந்து கிடந்தன. அரக்கிகள் போரில் தம் கணவர்கள் இறந்துபோனதற்காக ஓவெனக் கதறி அழுதனர். இலங்கையே ஒரு பெரிய மயானம் போலக் காட்சி அளித்தது. தன் சேனாதிபதிகளை அனுப்பிவிட்டு இராவணன் சற்று காலதாமதம் செய்யவில்லை. உடனேயே போர்க்களத்திற்கு புறப்பட்டான்.

 இராவணன் தேரில் ஏறிக்கொண்டு இராமருடனும், இலட்சுமணனுடனும் போர் புரிய வந்தான். அவனோடு மகாபார்சுவன், மகோதரன், விரூபாட்சன் முதலியவர்களும் வந்தனர். எல்லாருமாக இராமர் இருக்கும் வடக்கு வாசலை நோக்கிச் சென்றனர்.

அரக்கர்கள் போருக்குத் தயாராகி வருவது கண்ட வானரர்களும் போருக்குப் புறப்பட்டனர். இராவணன் தன் அம்புகளால் வானரர்களை அழித்தவாறே இராமரை நோக்கிச் சென்றான். அதைக்கண்ட சுக்கிரீவன் வானரப்படையோடு அரக்கர்களைத் தாக்கலானான். அப்போது விரூபாட்சன் ஒரு யானைமீதேறிக்கொண்டு சுக்கிரீவனை எதிர்க்கலானான். சுக்கிரீவனோ அவனோடு போரிட்டு முதலில் அவனது யானையைக் கொன்றான். பிறகு, அவனையே கொன்று விட்டான்.


இதைக்கண்டு இராவணன் தனது தாக்குதலைக் கடுமையாக்கினான். அரக்கர்கள் அழிய அழிய அவன் கோபம் அதிகரித்தது. இம்முறை மகோதரன் சுக்கிரீவனோடு போர் புரியலானான். சுக்கிரீவனோடு அவனும்  வெகுநேரம் கடுமையாக போர் புரிந்துவிட்டு இறந்து போனான். வானரர்கள் மகிழ்ச்சியாரவாரம் புரிந்தனர்.


இதற்குள் மகாபார்சுவன் அங்கதனின் படைமீது தாக்குதலை ஆரம்பித்தான். அங்கதன் அவனது தாக்குதலை முறியடித்து அவனோடு போர் புரிந்து அவனைக் கொன்றான். தன்னோடு வந்த மூன்று மந்திரிகளும் இறந்தது கண்டு இராவணன் கோபம் கொண்டான். அவன் இராமரைக் கடுமையாகத் தாக்கலானான். இராமரும் கொடிய அஸ்திரங்களைப் பிரயோகித்தார். இப்படியாக கடுமையான போர் நிகழ்ந்தது.


இராமர் இராவணனைத் தாக்கி சற்று நேரமானபின், இலட்சுமணன் தாக்குதலை ஆரம்பித்து இராமரைச் சற்று ஓய்வு கொள்ளச் செய்தான். அவன் இராவணது வில்லை முறித்து தேர்க்கொடியை அறுத்துத் தள்ளினான். விபீஷணன் இராவணனது தேர்க்குதிரைகளைக் கொன்றான். கீழே நின்ற இராவணன் விபீஷணன்மீது சக்தி ஒன்றை பிரயோகித்தான்.

இலட்சுமணன் அதனைத் தடுத்து பயனற்றுப் போகச் செய்தான். இதைக் கண்ட இராவணன் ஆத்திரமடைந்து இன்னொரு சக்தியை விபீஷணனின்மீது விட முயன்றான். ஆனால், இலட்சுமணன் பாணங்களை எய்து இராவணனைத் துன்புறுத்துவே அச்சக்தியை இராவணன் இலட்சுமணன் மீதே விட்டான்.

அது இலட்சுமணனின் மார்பைத் தாக்கவே இலட்சுமணன் கீழே விழுந்து விட்டான். இதைக் கண்டு இராமர் தனது பாணங்களால் இராவணனைத் தாக்கவே அவற்றைத் தாங்க முடியாது இராவணன் ஓடி விட்டான். இலட்சுமணன் விழுந்ததைத் கண்டு இராமர் கலங்கிவிட்டார். என்ன செய்வதென அவர் திகைத்து நிற்கையில் விபீஷணன் "நீங்கள் கவலைப்பட வேண்டாம். அனுமார் இருக்கிறாரே அவர் சஞ்சீவினி மூலிகையைக் கொண்டு வந்து விடுவார்" என்றான்.

அனுமாரும், இலட்சுமணன் விழுந்ததைக் கண்டார். அவருக்கு உடனேயே தான் முன்பு கொண்டு வந்த மூலிகையின் நினைவு வந்தது. மீண்டும் அதனைக் கொண்டு வருவது எனத் தீர்மானித்துக் கொண்டார். முன்பு ஒருமுறை அவர் இமயமலைக்குச் சென்றது போலவே இப்போதும் விரைவில் சென்றாக வேண்டும்.


Flag Counter