Showing posts with label நாட்டுப்புறக் கதைகள். Show all posts
Showing posts with label நாட்டுப்புறக் கதைகள். Show all posts

அதிசயமான நோய்

 
சாரங்கபுரியில், அண்ணாமலையின் நகைக்கடை மிகப் பிரபலமானதாக இருந்தது. அவர் பரம்பரை வியாபாரி அல்ல! சிறு வயதிலேயே தாய் தந்தையரை இழந்த அண்ணாமலை ஒரு நகைக் கடையில் பணியாளராக வேலைக்குச் சேர்ந்தார். தனது கடின உழைப்பினாலும், ஆர்வத்தினாலும் அவர் நகை வியாபாரத்தின் சகல நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டார்.
 
சில ஆண்டுகளுக்குப் பின்னர், அவர் வேலையை விட்டுவிட்டு, சாரங்கபுரிக்கு வந்து ஒரு நகைக்கடையைத் தொடங்கினார். அந்த நகரிலிருந்த சில கை தேர்ந்த தொழிலாளிகளை வலை வீசிக் கண்டு பிடித்துத் தன்னிடம் வேலைக்கு அமர்த்திக் கொண்டார். விரைவிலேயே, அவருடைய கடை மிகவும் உகந்ததாகக் கருதப்பட வியாபாரம் பிரமாதமாக நடந்தது.
 
அவருடைய திறமையைக் கண்டு வியந்த நகரத்தின் செல்வர் ஒருவர் தன் புதல்வி நாகேஸ்வரியை அவருக்குத் திருமணம் செய்து வைத்தார். திருமணத்தின் மூலம் அவருக்கு ஏராளமான சீர் கிடைத்தது. ஆனால், இயல்பாகவே பொருளில் ஆசை கொண்டிருந்த நாகேஸ்வரிக்கு ஏற்கெனவே இருந்த செல்வம் போதவில்லை. அதனால், அவள் மேலும் மேலும் செல்வத்தைப் பெருக்க முயன்றாள்.
 
தன் கணவர் தன்னுடன் இருப்பதைவிட, முழுநேரமும் கடையிலே தங்கி வியாபாரம் செய்து வருமானத்தைப் பெருக்க வேண்டும் என்று விரும்பினாள். அவருக்கு வேண்டிய உணவு, தேநீர் ஆகிய அனைத்தையும் கடைக்கு அனுப்பி விடுவாள். தவிர, அவள் கணவர் பணியாளர்களை நம்பி வேலையை ஒப்படைப்பதை அறவே விரும்பவில்லை.
ஆகையால் அது குறித்து அடிக்கடி அறிவுரை கூறுவாள். முதலில், தன்னிடமும், வியாபாரத்தின் மீதும் உள்ள அக்கறையினால்தான் அவள் இவ்வாறு கூறுகிறாள் என்று அண்ணாமலை கருதினார். ஆனால் காலப்போக்கில் அவள் பணம், பணம் என்று பேயாய் அலைவதையும், யாரையும் நம்பாமல் தூற்றுவதையும் கண்டு அவருக்கு சலிப்பு ஏற்பட்டது. ஆனால் அவளைக் கண்டித்து பேச அவருக்கு மனம் இல்லை. நாளடைவில் அண்ணாமலைக்கு மன உளைச்சலில் உடலிலும் தளர்ச்சி ஏற்பட்டது. அதைப்பற்றி அவர் நாகேஸ்வரியிடம் குறிப்பிட்டபோது, அவள், அதைப் பொருட்படுத்தவில்லை.
 
இவ்வாறு அண்ணாமலை அவதிப்படும் போது, சாரங்கபுரிக்கு ஒரு யோகி விஜயம் செய்தார். அண்ணாமலை அவரை தனிமையில் சந்தித்து, "சுவாமி! என் மனத்தில் நிம்மதி இல்லை. அதனால் என் உடலும் தளர்ந்து விட்டது. நான் என் வாழ்வில் இழந்த நிம்மதியை திரும்பப் பெறுவது எவ்வாறு?" என்று வினவினார்.
 
"மகனே! இளவயதில் உன் மனத்தில் வியாபாரத்தைப் பெருக்க வேண்டும் என்ற லட்சியம் இருந்தது. அதை நீ எட்டிப் பிடித்து விட்டாய். அதனால், இப்போது உன்னிடம் குறிக்கோள் என்று ஒன்றும்இல்லாததால் வாழ்க்கை சூனியமாகக் காட்சிஅளிக்கிறது. இனி, மற்றவர்களுக்கு உதவி செய்து அதில் ஆனந்தம் காண முயற்சிப்பாய்!" என்றார்.
 
"சுவாமி! மற்றவர்களுக்கு உதவி செய்வது என்றுமே எனக்குப் பிடித்த விஷயம்! ஆனால் அதைச் செய்யவிடாமல் என் மனைவி என்னைத் தடுக்கிறாள். மேலும் மேலும் செல்வம் திரட்டச் சொல்லி அவள் நச்சரிப்பதால்தான் என் வாழ்வின் நிம்மதி பறி போய்விட்டது!" என்று அண்ணாமலை புலம்பினார்.
 
அதைக் கேட்ட யோகி புன்னகைத்துக் கொண்டே, "செல்வம் ஒன்றுதான் வாழ்வில் மகிழ்ச்சியைத் தரும் என்று உன் மனைவி தவறான கருத்து கொண்டிருக்கிறாள். நன்கு யோசனை செய்தால், அவள் மனத்தை மாற்ற ஏதாவது வழி பிறக்கும். அவளுடைய மனத்தை மாற்றினால், நீ இழந்த நிம்மதி உன்னை மீண்டும் தானே தேடி வரும்!" என்றார்.
"அப்படியே முயற்சிக்கிறேன்!" என்று சொல்லி அண்ணாமலை வீடு திரும்பினார். அன்றிரவு தூக்கம் பிடிக்காமல் அண்ணாமலை தீவிரமாக யோசித்துக் கொண்டேயிருந்தார். மறுநாள் அவர் படுக்கையிலிருந்து எழுந்து இருக்கவில்லை. தன் மனைவியை அழைத்து, தான் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், எழுந்திருக்கவே முடியவில்லைஎன்றும் கூறினார்.
 
கலவரமடைந்த நாகேஸ்வரி உடனே மருத்துவரை வரவழைத்தாள். அண்ணாமலையை சோதித்த மருத்துவர் அவரை ஏதோ ஒரு நோய் பற்றிஇருக்கிறதென்றும், ஆனால் அது என்ன நோய் என்று தன்னால் கண்டு பிடிக்க முடியவில்லை என்றும் கூறினார். எந்த ஒரு மருத்துவராலும் அவரைப் பீடித்துள்ள நோய் என்னவென்றே கண்டு பிடிக்க முடியவில்லை என்று கூறினர். அண்ணாமலை கடைக்குச் செல்வதையே நிறுத்தி விட்டு, எந்தநேரமும் படுக்கையிலேயே கிடந்தார்.
 
சில மாதங்கள் கழித்து வீட்டிற்கு வருகை தந்த நாகேஸ்வரியின் உறவினர் ஒருவர் அவர்கள் இருவரையும் தம்பதி சமேதராக தல யாத்திரை செல்லும்படி அறிவுரை வழங்கினார். உடல் சரிஇல்லாத கணவரால் எப்படி பயணம் மேற்கொள்ள முடியும் என்று நாகேஸ்வரி கவலையில் ஆழ்ந்தாள்.
 
ஆனால் அண்ணாமலை அவளுக்கு தைரியம் கூறினார். ஆகையால் ஒரு வேலைக்காரனைத் துணைக்குஅழைத்துக் கொண்டு இருவரும் புனிதப் பயணம் மேற்கொண்டனர். அவ்வாறு செல்வதற்குமுன் அண்ணா மலையின் யோசனைப்படி வியாபாரப் பொறுப்பை நரசிம்மன் என்னும் பணியாளரிடம் ஒப்படைத்தாள்.
மூன்று மாதங்களாக, பல தலங்களையும் தன் கணவருடன் சேர்ந்து தரிசித்த நாகேஸ்வரியின் மனத்தில் மாற்றம் உண்டாகியது. அவள் மனத்தை முழுமையாக ஆக்கிரமத்திருந்த பண ஆசையை அகற்றி சக்தியை உண்டாக்கியது. தனது கணவரின் உடல்நிலையும் படிப்படியாகத் தேறுவதைக் கண்டு, தனது செல்வத்தால் அடைய முடியாதது இறைவன்அருளினால் கைகூடுவதைக் கண்டு செல்வத்தை விடச் சிறந்தது இறையருளே என்று உணர்ந்தாள்.
 
பயணம் முடிந்து வீடு திரும்பிய பின், தங்களுடைய வியாபாரம் முன்போலவே சிறப்பாக நடை பெறுவதைக் கண்டு வியந்தாள். பணியாளர்களை திருடர்கள் என்றும், அவர்களுக்கு உதவி செய்யக்கூடாது என்றும் தான் முன்பு கணவனிடம் கூறியது நினைத்து வெட்கினாள். "நான் இதுவரை செல்வம்தான் வாழ்வில் மிக முக்கியம் என்று நினைத்தது தவறு! வாழ்க்கையின் உண்மையான ஆனந்தம் இறைவன் வழிபாட்டிலும், மற்றவர்களுக்கு செய்யும் பரோபகாரத்திலும் தான் இருக்கிறது என்று உணர்ந்து கொண்டேன்!" என்று தன்னிடம் கூறிய நாகேஸ்வரியின் சொற்களைக் கேட்டு அண்ணாமலை வியப்பிலும், மகிழ்ச்சியிலும் மூழ்கினார்.
 
தொடர்ந்து நாகேஸ்வரி அவரிடம், "ஏதோ ஒரு அதிசய நோய் உங்களை மட்டும் பீடித்திருக்கிறது என்று நான் இன்று வரை தவறாக எண்ணிஇருந்தேன். ஆனால், உண்மையில் என்னையும் பண ஆசை என்ற நோய் இத்தனை நாள் வாட்டி வதைத்தது. தலயாத்திரை சென்று வந்த பின் என்னுடைய நோயும் அகன்று விட்டது!" என்றாள்.
 
மனைவியின் மன மாற்றத்தைக் கண்டு மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினார் அண்ணாமலை. தான் நோயாளி போல் நடித்ததை அவளிடம் சொல்லாமல் மறைத்து விட்டார்.
 

பொன்னாக்கும் வித்தை

 
சந்திரன் அவனுடைய பெற்றோருக்கு ஒரே பிள்ளை! அவனுடைய தந்தை ராமராஜன் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். வியாபாரத்தில் ஒரு முறை பெரிய நஷ்டம் ஏற்பட, அந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் ராமராஜன் இறந்து போனார். அவனுடைய தாய் பார்கவி தங்கள் வீடு, நிலபுலன்கள் யாவையும் விற்றுக் கடனை அடைத்தாள். அதன்பின் ஒரு குடிசையமைத்து அதில் தன் பிள்ளையுடன் வசிக்கத் தொடங்கினாள். பார்கவி, வயிற்றுப் பிழைப்புக்காகப் பல வீடுகளில் வேலை செய்யத் தொடங்கினாள்.
 
அந்த நிலையிலும் தன் பிள்ளையை ஒழுங்காக வளர்க்க எண்ணிய அவள் சந்திரனை ஓர் அரசுப் பள்ளியில் சேர்த்தாள். தொடக்கத்தில் சந்திரனும் ஒழுங்காகப் படித்தான். ஆனால் அவன் பெரியவனாகி பதினைந்து பிராயத்தை எட்டியபோது, தங்கள் குடும்பத்தின் ஏழைமை அவன் மனத்தை உறுத்த ஆரம்பித்தது. கிராமத்தில் மற்ற பணக்காரர்களைக் காணும்போது, தானும் அவர்களைப் போல் ஆக ஆசைப்பட்டான். ஆனால் பள்ளியில் படித்து முடித்து ஒரு சாதாரண வேலையில் சேர்ந்தால் தன் ஆசை நிறைவேறாது என்றும் உணர்ந்தான்.
 
ஒருநாள், இரும்பைத் தங்கமாக்க முடியும் என்றும், அந்த ரகசிய வித்தை சாமியார்களுக்குத் தெரியும் என்றும் சிலர் பேசிக்கொண்டுஇருப்பதைத் தற்செயலாகக் கேட்டபின், சந்திரனுக்குப் படிப்பில் ஆர்வம் குன்றி விட்டது. தொட்டதெல்லாம் பொன்னாக்கும் வித்தையை உடனேக் கற்றுக் கொள்ளத் துடித்தான். ஊரில் எந்த சாமியார் தென்பட்டாலும், அவர்களைச் சுற்றியலைந்து அந்த வித்தையைத் தனக்குக் கற்றுத்தரச் சொல்லி வற்புறுத்தினான்.
ஆனால் அவன் சந்தித்த சாமியார்களில் சிலர் தாங்கள் பொருள் ஆசையை அறவே துறந்து விட்டதனால் பொன்னாக்கும் வித்தையைப் பற்றி தெரியாது என்றனர். ஆனால் சந்திரன் மனம் தளரவில்லை. தொட்டதெல்லாம் பொன்னாக்கும் வித்தை தெரிந்த சாமியார் ஒருவரை என்றாவது சந்திப்போம் என்று உறுதியாக நம்பினான். தன் பிள்ளையின் போக்கைக் கண்டு பதறிப்போன பார்கவி அவனுக்கு அறிவுரை கூறித் திருத்த முயன்று தோல்வியுற்றாள்.
 
ஒருநாள் இரவு அவனுக்கு உணவு பரிமாறுகையில் பார்கவி, "நீ இப்போதெல்லாம் அடிக்கடி பள்ளிக்கு வருவதில்லை என்று உன் ஆசிரியர் என்னிடம் சொன்னார். நீ பள்ளிக்குச் செல்லாமல் வேறு எங்கே போகிறாய்?" என்று கேட்க, சந்திரன் அவளிடம் உண்மை சொல்ல மறுத்தான். தாயார் அவனை வற்புறுத்தவும், கோபங்கொண்ட சந்திரன் பாதி சாப்பாட்டிலேயே வீட்டை விட்டுச் சென்று விட்டான். கால் போன போக்கில் வெகு நேரம் சுற்றிய பிறகு, களைத்துப் போய் அம்மன் கோயிலை அடைந்து அங்கு சென்று அமர்ந்து ஓய்வெடுக்க ஆரம்பித்தான்.
 
நடு இரவில் விழித்துக் கொண்டவன், தனக்கருகில் ஒரு சாமியார் பத்மாசனம் போட்டு அமர்ந்து ஏதோ மந்திரம் உச்சரித்துக் கொண்டிருந்ததைக் கண்டான். உடனே அவனுடைய ஆர்வம் மீண்டும் கொழுந்து விட்டெரிய, அவன் அவரை அணுகினான்.
 
கண் விழித்து அவனை நோக்கிய சாமியார் "உன் பெயர் சந்திரன் தானே!" என்று கேட்டதும் வியப்புற்றான். "சாமி! என் பெயர் உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று அவன் ஆவலுடன் கேட்க, அவர், "எனக்கு எல்லா வித்தைகளும் தெரியும். அதனால் உன் பெயரைக் கண்டு பிடிப்பது அவ்வளவு ஒன்றும் சிரமமில்லை!" என்றார்.
 
"அப்படியானால் உங்களுக்குத் தொட்டதையெல்லாம் பொன்ஆக்கும் வித்தை தெரியுமா?" என்று சந்திரன் ஆவலுடன் கேட்க, அவர் தெரியுமென்றார். உடனே, அவருடைய பாதங்களில் விழுந்து வணங்கிய சந்திரன், "சாமி! தயவு செய்து அந்த வித்தையை எனக்குக் கற்றுத் தாருங்கள்!" என்று கெஞ்சினான். "மகனே! அந்த வித்தையை உனக்குக் கற்றுத்தர வேண்டுமானால், அதற்குரிய தகுதிகளை நீ பெற வேண்டும்! உன்னால் முடியுமா?" என்றார் சாமியார்.
எதுவானாலும் சொல்லுங்கள்! நான் செய்வேன்!" என்றான் சந்திரன். "முதலில், உன் பள்ளிப் படிப்பை ஒழுங்காக முடிக்க வேண்டும். உன் தாய் சொல்கிறபடி கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். உன்னால் வாழ்க்கையில் உயர முடியும் என்ற தன்னம்பிக்கை உன்னுள் வளர வேண்டும். இவ்வாறு கல்வி, நற்குணம், தன்னம்பிக்கை ஆகிய மூன்றிலும் சிறந்து விளங்கினால்தான், அந்த வித்தையை கற்க முடியும். நாளை முதல் நீ அவ்வாறு நடக்க முயற்சி செய்! ஓராண்டிற்குப்பின் உன்னை சந்திப்பேன். நீ உண்மையாகவே மாறியிருந்தால், அந்த வித்தையை உனக்குக் கற்றுத் தருவேன்!" என்றார்.
 
"அப்படியே செய்வேன். ஓராண்டினில் நீங்களே வியக்கும்படி நான் மாறிக் காட்டுகிறேன்!" என்று சூளுரைத்து விட்டு, சந்திரன் பொழுது விடிந்ததும் வீடு சென்றான். கோபத்தில் வெளியேறிய மகன் வீடு திரும்பியது கண்டு பார்கவி நிம்மதியடைந்தாள்.
 
அன்று முதல், அவள் தன் மகனிடம் வியக்கத்தகு மாறுதலைக் கண்டாள். முன்பெல்லாம் படிக்காமல் கனவுஉலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவன், அன்றுமுதல் படிப்பில் மிகுந்த அக்கறை காட்டத் தொடங்கினான். அவளுக்கு உதவி செய்ய ஆரம்பித்தான். பள்ளிக்கு ஒழுங்காகச் செல்ல ஆரம்பித்தான். படிப்பில் அவனுடைய ஆர்வம் வளர்ந்தது.
 
நல்ல மதிப்பெண்கள் பெறத் தொடங்கினான். அவனுடைய தன்னம்பிக்கை அதிகரித்தது. அவனுடைய மாறுதலைக் கண்டு பார்கவி மிகவும் மகிழ்ந்தாள். இவ்வாறு ஓராண்டு சென்றது. ஒருநாள் திடீரென அதே சாமியார் சந்திரன் வீடு தேடி வந்தார். "மகனே! என்னை நினைவிருக்கிறதா? நீ கேட்ட வித்தையைக் கற்றுத்தர நான் வந்துஉள்ளேன்!" என்றார்.
 
"சாமி! மன்னிக்க வேண்டும்! எனக்கு இப்போது அந்த வித்தையைக் கற்றுக் கொள்வதில் ஆர்வமில்லை!" என்று சந்திரன் கூறியதும், சாமியார் ஆச்சரியப்பட்டார். "என்னப்பா? ஏன் இந்த திடீர் மாறுதல்?" என்று கேட்டார்.
 
"இப்போது எனக்கு அதில் ஆசை போய் விட்டது! என்று நான் படிப்பில் அக்கறை காட்ட ஆரம்பித்தேனோ, அன்றுமுதல் இதில் ஆர்வம் குன்றிவிட்டது!" என்றான். அவன் கேட்டதைக் கேட்டுப் புன்னகைத்த சாமியார், "மகனே! இந்த பதிலைத்தான் நான் உன்னிடம்இருந்து எதிர்பார்த்தேன். கல்விதான் உண்மையான செல்வம் என்பதை நீ இப்போது புரிந்து கொண்டு விட்டாய். உன்னுடைய தன்னம்பிக்கையும், அறிவும் வளர வளர செல்வத்தைப் பற்றி நீ கொண்டிருந்த தவறான கருத்துகள் உன்னிடமிருந்து விலகி விட்டன. உழைத்து சம்பாதிக்கும் செல்வம்தான் நிலைக்கும். குறுக்கு வழியில் வரும் செல்வம் வந்தது போலவே மறைந்து விடும். இதுதான் எனக்குத் தெரிந்த தொட்டதெல்லாம் பொன்னாக்கும் வித்தை!" என்றார்.
 
தொடர்ந்து, "நான் உன் தந்தையின் நண்பன் நாராயணன். உன்னை மாற்றுவதற்காக சாமியார் வேடம் போட்டு நடித்தேன்!" என்று கூறியவாறே, தன் போலி தாடியைக் களைத்தார்.
 
அவரை சந்திரன் வியப்புடன் நோக்கியபோது, அங்கு வந்த பார்கவி தன்னுடைய கணவரின் நண்பரை வரவேற்று தன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தாள். சந்திரனும் அவருக்குத் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டான்.
 

துளசி

 
தனது கணவன் ராமனை இழந்து விதவையான துளசிக்கு வயதான காலத்தில் உழைத்து சம்பாதிக்க நேரிட்டது. தனது கிராமத்தை விட்டுப் பக்கத்து கிராமமான ராமாபுரத்தை அடைந்த துளசி, அங்கு பள்ளிக்கூடத்தின் முன்னால் சிறிய கடையை அமைத்துக் கொண்டாள்.
 
அந்தக் கிராமத்திற்கு அவள் வந்து மூன்றே மாதங்கள் ஆகியிருந்த போது, திடீரென அங்கு காலரா பரவியது. பள்ளிக் குழந்தைகளின் இடையே மிக அதிகமாகப் பரவியதால், பள்ளியையே மூடவேண்டிய நிலை ஏற்பட்டது. பெரியவர்களும் அந்த நோயால் பீடிக்கப் பட்டனர். இது மாரியம்மனின் கோபத்தினால்தான் நடக்கிறது என்று மக்கள் நம்பினர்.
 
பள்ளிக்கருகில், முத்தம்மா என்பவளும் ஒரு கடை நடத்தி வந்தாள். துளசியின் கடையில் கிடைக்கும் தின்பண்டங்கள் மிகச் சுவையாக இருந்ததால், பள்ளி மாணவர்கள் முத்தம்மாவின் கடையை விட்டுவிட்டு துளசியின் கடையிலேயே தின்பண்டங்கள் வாங்கத் தொடங்கினர். இதனால் கோபம் அடைந்த முத்தம்மா துளசியை எப்படியாவது ஊரை விட்டு விரட்டிவிட எண்ணினாள். அதற்கான ஒரு திட்டமும் தயாரித்தாள்.
 
கிராமத்தினர் அனைவரும் மாரியம்மனுக்கு விசேஷ பூஜை செய்து பிரார்த்தனை செய்தனர். அப்போது, கோயில் பூசாரியின் மீது சாமி வந்து, மக்களிடம், "கிராம மக்களே! நான் மாரியாத்தா பேசுகிறேன்! எனக்கு உங்கள் மீது கோபமில்லை. காலரா நோய் வர நான் காரணமில்லை. இந்தக் கிராமத்தில் பள்ளிக்கருகே புதிதாக வியாபாரம் தொடங்கி இருக்கிறாளே ஒரு கிழவி! அவள்தான் காரணம்!
அவள் கடையிலுள்ளதின்பண்டங்களைத் தின்றதால்தான் குழந்தைகளுக்குக் காலரா ஏற்பட்டு ஊர் முழுவதும் பரவியது" என்று கூறினான். உடனே, ஆவேசமடைந்த கிராம மக்கள் திரண்டு வந்து துளசியின் கடையை சூறையாடினர். அத்தோடு நில்லாமல் அவள் மீது கல்வீசி எறிந்து அவளைக் கிராமத்தை விட்டுத் துரத்த முயன்றனர். துளசியின் தலையில் கல்பட்டு இரத்தம் வழியத் தொடங்கியது. இதைக் கண்டு மனம் பொறுக்காத, பள்ளி ஆசிரியர் ஒருவர் அவர்களைத் தடுத்து "அட முட்டாள் மக்களே! இந்த கிழவி மீது ஏன் கல் வீசி எறிகிறீர்கள்?" என்றார்.
 
"குறுக்கே பேசாதே! இவள்தான் காலரா உண்டாகக் காரணம் என்று கோயில் பூசாரியே சொல்லிவிட்டார்!" என்றனர் அவர்கள். "பூசாரி சொன்னால் அதை உடனே உண்மையென்று நம்புவதா? பூசாரியை அவ்வாறு சொல்லத் தூண்டியவள் முத்தம்மா! பூசாரிக்கு அவள் பணம் கொடுத்துத் தூண்டிவிட்டதை நான் என் கண்ணால் பார்த்தேன். காலரா நோய் உண்டாக மக்களாகிய நீங்கள் அனைவரும் தான் காரணம்!
 
ஊரில் உள்ளது ஒரேயொரு ஏரி! அதிலிருந்து
தான் தண்ணீர் எடுத்துக்குடிக்கிறோம். ஆனால், சமீப காலமாக அதில் மாடுகளைக்குளுப்பாட்டியும், துணிகளைத் துவைத்தும், ஏரியை அசுத்தப் படுத்தி விட்டீர்கள். அசுத்த நீரினால்தான் காலரா உண்டாகியிருக்கிறது. அதற்கு இந்தக் கிழவி மீது ஏன் பழி சுமத்துகிறீர்கள்? காலராவைக் குணப்படுத்துவதற்கு நாம் நகரத்திலிருந்து மருந்துகள் வரவழைக்க வேண்டும். எதிர்காலத்தில் அது வராமல் தடுக்க, நமது ஏரியை சுத்தப்படுத்துவதுடன், அதை என்றும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்" என்று ஆசிரியர் கூறி முடித்தார். அவர் சொன்னது முற்றிலும் சரியென உணர்ந்த கிராமத்தினர் துளசியிடம் மன்னிப்புக் கேட்டனர். பிறகு காலராவை குணமாக்கவும், எதிர்காலத்தில் வராமல் தடுக்கவும் எல்லாரும் முனைந்து செயற்பட்டனர்.
 

மரணத்தின் தலைவாயிலில்...

பல நூற்றாண்டுகளுக்குமுன் ஒருநாள் ஔரங்கசீப் மார்வார் மன்னராக (தற்போது ஜோத்பூர்) ஜஸ்வந்த் சிங்கை தன் மாளிகைக்கு விருந்தினராக அழைத்து திருந்தார். இருவரும் அரண்மனை நந்தவனத்தில் உலவிக் கொண்டுஇருந்தபோது, அங்கே ஒரு கூண்டில் அடைக்கப்பட்டிருந்த பயங்கரமான ஒரு புலியைக் காட்டி, "ஜஸ்வந்த்! இதுபோன்ற ஒரு புலியை நீங்கள் பார்த்ததுண்டா?" என்று ஔரங்கசீப் கேட்டார்.
 
அதற்கு ஜஸ்வந்த் சிங், "எங்கள் ராஜபுத்திர வமிசத்தில், சிறுவர்கள், புலிகளுடன் விளையாடுவது வழக்கம்!" என்று கிண்டலாகக் கூறியதோடு நிற்காமல், தன்னுடன் இருந்த தனது மகன் பிருத்விசிங்கைக் கூண்டினுள் நுழைந்து புலியுடன் சண்டையிடச் சொன்னார். பதினாறே வயதான அந்தச் சிறுவன் மிகவும் தைரியமாகக் கூண்டினுள் நுழைந்து, புலியுடன் சண்டையிடத் தொடங்கினான். புலிக்கு சரிக்குச் சரியாக மல்யுத்தம் புரிய, புலியும், பிருத்விசிங்கும் கட்டிப் புரண்டனர். இறுதியில், தன் இடையில்இருந்த கத்தியை உருவி, அவன் புலியின் மார்பில் பாய்ச்ச, புலி துடிதுடித்து சுருண்டு விழுந்து இறந்தது. அதைக்கண்ட ஔரங்கசீப்பினால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. இந்தச் சிறுவனே புலியைக் கொல்லும்அளவிற்கு வீரன் எனில், அவனுடைய தந்தை எத்தகைய மகாவீரனாக இருப்பார் என்று நினைத்து பயந்தார்.
 
ஜஸ்வந்த் சிங்க் ஆண்டு வந்த மார்வார் ராஜ்யம் ராஜஸ்தானில் தார் பாலைவனத்திற்கு அருகிலிருந்தது. மிகவும் வறண்ட பூமியான அங்கு எப்போதும் தண்ணீருக்குப் பஞ்சம், ஆதலால் வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் மார்வார் நாட்டு ராஜபுத்திரர்கள் வீரத்திற்குப் புகழ் பெற்றவர்கள். தங்கள் தாய் நாட்டினை உயிருக்கும் மேலாக நேசிப்பவர்கள்! தங்கள் தாய் மண்ணைக் காக்க உயிரையும் திரணமாக மதிப்பவர்கள்!
 
அந்த வமிசத்தில் உதித்த ஜஸ்வந்த் சிங் வலிமையிலும், வீரத்திலும் சிறந்து விளங்கியதில் வியப்புஇல்லை. தனக்கு எதிர்காலத்தில் ஜஸ்வந்த்சிங் போட்டியாக வரக்கூடும் என்று எண்ணிய ஔரங்கசீப் அவரை முளையிலேயே கிள்ளியெறிய விரும்பினார்.
 
ஆனால் அவருடைய எண்ணம் நிறைவேறவில்லை. ஜஸ்வந்த் சிங்கை போரில் தோற்கடிக்க ஔரங்கசீப் எடுத்த முயற்சிகள் யாவும் தோல்வியுற்றன. அதற்கு முக்கிய காரணமாயிருந்தவன் முகுந்த தாஸ்! மன்னரின் நம்பிக்கைக்கு மிக்க பாத்திரமாக இருந்த அவனுடைய சாமர்த்தியத்தினால், ஔரங்கசீப் ஜஸ்வந்த் சிங்கைக் கொல்ல எடுத்த முயற்சிகள் எதுவும் வெற்றி பெறவில்லை.
 
ஆகவே, முதலில் முகுந்த தாசை ஒழித்துக் கட்ட விரும்பிய ஔரங்கசீப் ஒருமுறை அவனை தன் தர்பாருக்கு வரவழைத்தார். ஜஸ்வந்த் சிங்கைக் கொல்ல அவர் முகுந்த தாசைத் தன்னுடன் ஒத்துழைக்கக் கோரினார். அதற்கு ஒப்புக் கொள்ள மறுத்த தாசை கடுமையாக தண்டிக்க எண்ணிய ஔரங்கசீப் அவனை ஒரு புலியின் கூண்டினுள் பிடித்துத் தள்ளி விட்டார். பசியுடனிருந்த புலி அவன் மீது பாய முயன்ற போது முகுந்ததாஸ் அதன் கண்களை உற்று நோக்கி, "ஔரங்கசீப்பின் புலியே! ஜஸ்வந்த் சிங்கின் வளர்ப்புப் புலியுடன் மோதிப்பார்! வா!" என்று சவால்விட, முகுந்த தாசின் பார்வையின் தீவிரத்தைப் பொறுக்க முடியாமல், புலி பின் வாங்கிவிட்டது.
 
ஔரங்கசீப் அவனுடைய வீரத்தைக் கண்டு வியந்து போனார். முகுந்ததாசின் துணிச்சலைப் பாராட்டி அவனுக்குப் பரிசுகள் அளித்து அனுப்பி வைத்தார். ஜஸ்வந்த் சிங்கின் நண்பர்களைத் தன் பக்கம் சேர்த்துக் கொண்டு அவரை அழிக்க முயல்வது வீண் என்று அறிந்த ஔரங்கசீப், நட்புக்கரம் நீட்டி அவரை அழிக்க முயன்றார். அதனால், ஜஸ்வந்தசிங்குடன் சமரசப் பேச்சுவார்த்தைகள் நடத்தி, அவரைத் தன் நண்பராக்கிக் கொண்டதுடன், அவரைத் தன் தளபதிகளில் ஒருவராக ஆக்கினார்.
 
பிறகு, ஆப்கானிஸ்தான் நாட்டுப் புரட்சியாளர்களை ஒடுக்க, ஜஸ்வந்த்சிங் தலைமையில் ஒரு பெரும் முகலாயப் படையை காபூலுக்கு அனுப்பினார். ஔரங்கசீப்பின் நயவஞ்சகத் திட்டங்களில் அதுவும் ஒன்று என்ற அறியாத ஜஸ்வந்த் சிங் தனது மனைவியுடனும், இரு புதல்வர்களுடனும், நூற்றுக்கணக்கான ராஜபுத்திர வீரர்களுடனும் காபூலூக்குச் சென்றார்.
 
தனது வலிமை மிக்க எதிரியை நட்பின் போர்வையில் வஞ்சகமாக காபூல் அனுப்பிய பிறகு, ஔரங்கசீப் ஜஸ்வந்த் சிங்கின் மூத்த மகன் பிருத்விசிங்கை தனது தர்பாருக்கு வரவழைத்து, விருந்தினனாக சில நாள்கள் உபசரித்தபின், அவனுக்கு ஒரு பொன்னாடையைப் பரிசளித்துப் போர்த்தினார்.
அதைப் போர்த்திக் கொண்ட சில நிமிடங்களிலேயே, உடலெங்கும் தீப்பிடித்ததுபோல் பற்றி எரிந்து கொப்புளங்கள் உண்டாகி, பிருத்விசிங் துடிதுடித்து இறந்து போனான். அந்தப் பொன்னாடையில் கடுமையான விஷம் பூசப்பட்டிருந்தது.
 
தன் மூத்த மகன் இறந்த செய்தி கேட்டு, காபூலிலிருந்த ஜஸ்வந்த் சிங் துடித்துப் போனார். காபூலில் புரட்சியாளர்களுடன் நிகழ்ந்த போரில், அவருடைய மற்ற இரு புதல்வர்களும் கொல்லப்பட்டனர். இவ்வாறு தன் பிள்ளைகள் அனைவரையும் இழந்த சோகத்தில், ஜஸ்வந்த் சிங் காபூலிலேயே இறந்தார். ஔரங்கசீப்பின் திட்டம் முழுமையாக நிறைவேறியது. மார்வார் மீது ஔரங்கசீப் படையெடுத்து, அதைத் தன் வசம் கொண்டு வந்து விட்டார்.
 
ஆனால், அவருடைய நிம்மதியைக் குலைக்கும் வண்ணம் ஒரு தகவல் அவர் செவிகளை எட்டியது. ஜஸ்வந்த் சிங் காபூலில் இறந்த சமயம், அவரது மனைவி கர்ப்பமாயிருந்தாள். சில மாதங்களுக்குப்பின் அவளுக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது. ராணி தன் குழந்தை அஜீத் சிங்குடன் மார்வார் திரும்பி வருவதாகத் தகவல் கிடைத்தது. ஜஸ்வந்த் சிங்குடன் சென்ற ஆயிரக்கணக்கான ராஜபுத்திர வீரர்களும் நாடு திரும்புவதாக செய்தி கிடைத்தது. ஜஸ்வந்த் குடும்பத்தை ஆண் வாரிசே இல்லாமல் அழித்து விட்டதாக எண்ணிய ஔரங்கசீப்பிற்கு இந்தச் செய்தி கவலையளித்தது. பிறந்த குழந்தை அஜீத் சிங்கையும் கொன்று விடத் திட்டம் தீட்டினார்.
 
காபூலிலிருந்து திரும்பியவர்களை தன் தர்பாருக்கு அழைத்து அவர்களுக்கு நட்புக்கரம் நீட்டிய ஔரங்கசீப் அவர்களை விருந்தினர் மாளிகையில் தங்க வைத்து உபசரித்தார். போர்வீரர்களுக்குத் தலைமை தாங்கிய ராஜபுத்திர தளபதி துர்காதாசை தன்னிடம் அழைத்து ஔரங்சீப், அவர்களுக்கு மார்வார் ராஜ்யத்தைத் திருப்பித் தருவதாக வாக்களித்தார். பதிலுக்கு, அவர்கள் குழந்தை அஜீத்சிங்கைத் தன்னிடம் ஒப்படைத்து விடவேண்டுமென்று நிபந்தனை விதித்தார். ஔரங்கசீப்பின் வஞ்சகத்தை அறிந்த துர்காதாஸ் அதற்கு ஒப்பவில்லை.
 
இனி அங்கு விருந்தாளியாகத் தங்கினால், குழந்தை அஜீத் சிங்கின் உயிருக்கு ஆபத்து என்று அறிந்து கொண்ட துர்காதாஸ், இளவரசனை அங்கிருந்து வெளியேற்றத் திட்டம் தீட்டினார்.
அதன்படி கோராதாயி என்ற ஆயா குழந்தை அஜீத் சிங்கை எடுத்துக் கொண்டு ரகசியமாக வெளியேறினாள். அதற்குப் பதில் தன் குழந்தையை விட்டுவிட்டுச் சென்று விட்டாள். இதை அறிந்து கடுங்கோபம் கொண்ட ஔரங்கசீப் அவர்களைப் பிடிக்கத் தன் படைவீரர்களை ஏவினார். முகலாய வீரர்கள் இளவரசன் அஜீத் சிங்கை கைப்பற்றுவதைத் தடுக்க, துர்காதாஸ் எஞ்சிய முந்நூறு ராஜபுத்திர வீரர்களுடன் அவர்களை எதிர்த்து சண்டையிட்டார். அவர்களுடைய மனைவிமார்கள் முகலாய வீரர்களிடம் சிக்காமல் தங்கள் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள தீக்குளித்தனர்.
 
கடல் அலைபோல் திரண்டு வந்த முகலாய வீரர்களை, எண்ணிக்கையில் மிகவும் குறைவாக இருந்த ராஜபுத்திர வீரர்களினால் சமாளிக்க முடியவில்லை. அப்படியிருந்தும், தங்கள் இளவரசர் அவர்களிடம் சிக்கக் கூடாது என்ற ஒரே நோக்கத்துடன், இரத்தம் சிந்திப் போரிட்டனர். அவ்வாறு எதிர்த்து சண்டையிட்டவர்களில் ராணியும் ஒருத்தி. ஆனால், நாற்புறமும் முகலாய வீரர்கள் ராஜபுத்திரர்களை சூழ்ந்து கொள்ள, அவர்களிடம் சிக்க விரும்பாத ராணி தன் மார்பில் வாளைப் பாய்ச்சிக் கொண்டு போர்க்களத்தில் இறந்தாள்.
 
ராஜபுத்திரர்கள் அனைவரும் போரில் கொல்லப்பட்டனர். உயிருடன் மிஞ்சியது ஏழு பேர் மட்டுமே! ஆனால் அவர்களுடைய அரும்முயற்சியினால், கோராதாயி இளவரசரை பத்திரமாக எடுத்துச் சென்று தப்பி விட்டாள்.
 
கோராதாயி கண்காணாத ஒரு மலைப் பிரதேசத்திற்கு இளவரசன் அஜீத்சிங்கை எடுத்துச் சென்று வளர்த்தாள். பல ஆண்டுகள் தான் யார் என்பதே தெரியாமல் வளர்ந்த அஜீத் சிங், பெரியவனான பிறகே தன்னைப் பற்றி அறிந்து கொண்டான். அதற்குள் மார்வார் நாட்டு மக்களுக்குத் தங்கள் இளவரசரைப் பற்றிய தகவல் தெரிந்து விட, அவனை ராஜமரியாதையுடன் அழைத்து வந்தனர். வளர்ந்து வாலிபனான பிறகு, அஜீத் சிங் ராஜபுத்திர வீரர்களைத் திரட்டி, இழந்த தன் ராஜ்யத்தை முகலாயர்களிடமிருந்து மீட்க ஏற்பாடுகள் செய்தான்.
 
வயோதிகத்தை அடைந்த ஔரங்கசீப் இறுதியில் 1707ஆம் ஆண்டில் உயிர் நீத்தார். அதன்பின், முகலாயர்களின் சேனையும் வீரர்களும் பலவீனம் அடைந்தனர். இதை அறிந்த அஜீத் சிங் அவர்களுடன் போராடி, தன்னுடைய முன்னோர்கள் இழந்த தன் மார்வார் ராஜ்யத்தைத் திரும்பப் பெற்றான்.

நிலாவில் தெரியும் முயல்

பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன், மிருகங்களால் மனிதர்களைப் போல் பேச முடிந்தது. அப்படிப்பட்ட அந்தக் காலத்தில், ஒரு காட்டில் ஒரு முயல், ஓர் ஓநாய், ஒரு கீரிப்பிள்ளை, ஒரு குரங்கு ஆகிய நான்கும் நேருங்கிய நண்பர்களாக இருந்தன.
 
ஒவ்வொரு மாலைப் பொழுதிலும், நான்கு மிருகங்களும் சேர்ந்து உட்கார்ந்து, அன்று நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி உரையாடுவதுண்டு. நால்வருள் முயல் மிகவும் அறிவாளியாகவும், குணசாலியாகவும் விளங்கியது. மனிதர்களின் அறிவுத்திறனைப் பற்றி நன்கு அறிந்திருந்த முயல், மனிதர்களைப் பற்றிய விஷயங்களைத் தன் நண்பர்களிடம் விவரமாக எடுத்துச் சொல்வது வழக்கம்!
 
ஒருநாள் இரவு நேரத்தில் வானில் பிரகாசித்த நிலவை முயல் உற்றுப் பார்த்தது. நிலவைக் கூர்ந்து கவனித்த முயல், "நாளைக்கு மனித குலத்தினர் விரதம் இருப்பார்கள். சூரியன் அஸ்தமனம் ஆகியபிறகே உணவு உண்பார்கள். பகற்பொழுதில் ஏழை, எளியவர்களுக்கு தான, தருமங்கள் செய்வார்கள். நாமும் மனிதர்களைப் போல் நாளை விரதம் இருப்போம்! தானதருமம் செய்வோம்!" என்றது.
 
மற்ற நண்பர்களும் சம்மதித்தனர். மறுநாள் பொழுது புலர்ந்ததும், கண் விழித்த கீரிப்பிள்ளை காலை ஆகாரத்தை உண்ண முயற்சிக்கையில், விரதத்தைப் பற்றி ஞாபகம் வந்தது. "பகல் முழுவதும் உண்ணாமல் இருந்தால், இரவு மிகவும் பசிக்கும்.
 
அதனால், இரவுக்கான உணவை இப்போதே தேடிக் கொள்கிறேன்" என்று எண்ணிக் கொண்டே, நதியை நோக்கிச் சென்றது. அங்கு, ஒரு மீனவன் தான் அதிகாலையில் பிடித்த மீன்களை மணலில் புதைத்து வைப்பதைப் பார்த்தது. விரதநாளன்று திருடக்கூடாது என்பதனால், அவற்றைத் திருட்டுத் தனமாகத் தின்ன முயலவில்லை.
அதற்குப் பதிலாக, மீனவன் அந்த இடத்தை விட்டு அகலும் வரை காத்திருந்தது. அவன் சென்ற பிறகு, "இந்த மீன்களை இங்கே வைத்து இருப்பது யார்?" என்று உரக்கக் கூவியது. யாருமே அதற்குப் பதில் அளிக்காததால், அவை தனக்கே சொந்தம் என்று சாமர்த்தியமாக முடிவு செய்து, அந்த மீன்களை தன் விட்டிற்கு எடுத்துச் சென்று பதுக்கி ஒளித்தது. பிறகு தான, தருமம் பற்றி மறந்து விட்டு, நாள் முழுவதும் தூங்கிக் கழித்தது.
 
குரங்கும், ஓநாயும் கீரிப்பிள்ளை போலவே நினைத்தன. இரவு மிகவும் பசிக்கும் என்பதால், அதற்குத் தேவையான உணவைத் தேடுவதில் முனைந்தன. ஓநாய் ஓரிடத்திலிருந்து சிறிது மாமிசத்தைத் திருடி மறைவிடத்தில் பதுக்கி வைத்துக் கொண்டது. குரங்கு ஒரு மாமரத்திலேறி, மாம்பழங்களைப் பறித்து ஓரிடத்தில் ஒளித்து வைத்தது. பிறகு, ஓநாயும் குரங்கும் நாள்முழுவதும் சோம்பேறித்தனமாகப் படுத்துத் தூங்கின.
 
அதிகாலையில் விழித்துக் கொண்ட முயல் முதன்முதலில் பனியில் நனைந்து, சூரிய ஒளியில் மின்னிக் கொண்டிருந்த புற்களைப் பார்த்தது. "இரவு நேரமான பிறகு புல் தின்னுவோம்! பகற்பொழுதில் விரதம் காப்போம்!" என்று சொல்லிக் கொண்டது.
 
"ஆனால், விரதமுறைப்படி யாராவது எளியவர்களுக்கு தானம் அளிக்க வேண்டுமே! என்னைத் தேடி யாராவது மனிதன் வந்தால், அவனுக்கு தானம் அளிக்க என்னிடம் புல்லைத் தவிர ஒன்றுமேயில்லையே! என்ன செய்வது?" என்று சிந்தனையில் ஆழ்ந்தது.
பிறகு, "யாராவது என்னிடம் வந்தால், அவனுக்கு என்னையே உணவாகத் தந்து விடுகிறேன். மனிதர்களுக்கு முயல் மாமிசம் மிகவும் பிடிக்கும் என்று கேள்விப் பட்டுஇருக்கிறேன்!" என்று தீர்மானித்த பிறகு, மற்ற வேலைகளை கவனிக்கச் சென்றது.
 
முயல் மனத்தில் நினைத்ததை சாக்கா என்ற தேவதை அறிந்து கொண்டது. அந்த தேவதை வசிக்கும்இடம் மேகங்கள்! "முயல் உண்மையாகத் தான் கூறுகிறதா? சோதித்துப் பார்க்கலாம்!" என்று தேவதை தனக்குள் சொல்லிக் கொண்டது.
 
மாலையில், முயலை நாடிவந்த தேவதை, ஒரு முனிவரைப் போல் உருவம் எடுத்துக் கொண்டது. "முயலே! நான் இன்று முழுவதும் விரதம் இருந்ததால் மிகப் பசியாக இருக்கிறேன். எனக்கு ஏதாவது தின்னத் தருவாயா?" என்று கேட்டது. "கட்டாயம் தருகிறேன். உங்களுக்கு முயலின் மாமிசம் பிடிக்கும் என்று நான் கேள்விப் பட்டிருக்கிறேன். அது உண்மையா?" என்றது. "ஆமாம்!" என்றார் முனிவர்.
 
"அப்படியானால், என்னையே கொன்று தின்று பசியாறி விடுங்கள். உங்களுக்குத் தர வேறு எதுவும் என்னிடத்தில் இல்லை!" என்றது முயல். "நான் ஒரு முனிவர்! விரதநாளன்று, ஓர் உயிரைக் கொலை செய்யமாட்டேன்" என்று முனிவர் கூறினார்.
 
"அப்படியானால், உலர்ந்த குச்சிகளை சேகரித்துத் தீ மூட்டுங்கள். தீயினுள் நான் குதிக்கிறேன். பிறகு வறுபட்ட என் உடலை நீங்கள் தின்னலாம்!" என்றது முயல். முயலின் சொற்களைக் கேட்டு பிரமித்தார் முனிவர்! ஆனால், அவருக்கு அப்போதும் அதன் சொற்களில் முழுநம்பிக்கை உண்டாகவில்லை.
அதனால் அதை சோதிக்க, காய்ந்த சருகுகளில் தீ மூட்டினார். அவர் சற்றும் எதிர்பாராதபடி, எந்தவிதத் தயக்கமுமின்றி முயல் தீக்குள் பாய்ந்து விட்டது. ஆனால், உடலைச் சுற்றி தீ எரிந்த போதிலும், அதனுடைய தோல் கருகவில்லை. சொல்லப்போனால், குளிர்ச்சியாக இருந்தது. சற்றுநேரத்தில் தீ அணைந்துவிட, முயல் தான் பச்சைப் பசேல் என்ற புல்தரையில் உட்கார்ந்து இருப்பதைக் கண்டு வியப்படைந்தது. அதன் முன்னால் முனிவரைக் காணவில்லை. அவர் இருந்த இடத்தில், சாக்கா தேவதை நின்று கொண்டு இருந்தது.
 
"நான்தான் சாக்கா தேவதை! நீ சொன்னபடியே மிக சிரத்தையுடன் விரதம் காத்தாய்! மற்றவர் பசி தீர்க்க, உன்னையே பலியிடவும் நீ தயங்கவில்லை. ஆகவே, நீ ஒரு தெய்வப்பிறவி! உன்னுடைய தியாகத்தை மெச்சி உனக்கு சாகாவரம் அளிக்கிறேன்" என்று அறிவித்த தேவதை தான் கையை நீட்டி மலையைத் தொட்டு அதிலிருந்து ஏதோ ஒரு மர்மப் பொருளையெடுத்து நிலவை நோக்கி வீசியெறிய, அது நிலவின் பரப்பில் ஒரு முயலாகத் தோற்றம்அளித்தது.
 
"இன்று முதல் உன் உருவம் நிலாவில் தெரியும். நிலாவைப் பார்க்கும் மனிதர்கள் அதில் ‘மற்றவர்களுக்கு மனமார அளித்தால், கடவுள் அதை உனக்குத் திருப்பித் தருவார்' என்ற நீதியை உன் உருவம் அவர்களுக்கு நினைவூட்டும்" என்று சாக்கா தேவதை கூறியது.

வடிகட்டிய முட்டாள்!

சத்தியானந்தர் நடத்தி வந்த குருகுலம் மிகப் புகழ் பெற்றிருந்தது. அதில் பயில பல ராஜ்யங்களில்
இருந்தும் மாணவர்கள் வருவதுண்டு. குருகுலத்தில் பயிலும் மாணவர்களில் ஏழைகளும் உண்டு! இளவரசர்களும் உண்டு! பொதுவாக, குருகுலத்தில் மாணவர்கள் ஐந்து ஆண்டுகள் பயில்வது வழக்கம்! கற்க வேண்டியதை எல்லாம் அந்த ஐந்து ஆண்டுகளில் கற்றுக் கொண்டபின், அவர்கள் வீடு திரும்புவர்! அப்போது சத்தியானந்தர் யாராவது ஒரு மாணவனை தன்னுடன் அழைத்துக் கொண்டு நீண்ட யாத்திரை செய்வது வழக்கம்!
 
ஒருமுறை, சத்தியானந்தர் பிரதாபன் என்ற இளவரசனைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு யாத்திரையைத் தொடங்கினார். பயணத்தில் கால்நடையாகச் செல்லும்போது, குரு பேசுவதில்லை. வழியில் தென்படும் காட்சிகளையும், மனிதர்களையும் பிரதாபன் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றும், இடையிடையே ஓய்வெடுக்கும்போது அவன் தன் சந்தேகங்களை குருவிடம் கேட்டு விளக்கம் பெறலாம் என்றும் சத்தியானந்தர் அவனிடம் ஏற்கெனவே சொல்லியிருந்தார்.
 
ஏதாவது ஒரு கோயிலுக்குச் சென்று இறைவனை தரிசித்தப் பிறகு, அவர்கள் இருவரும் அந்த கிராமத்தில் ஓரிரு நாள்கள் தங்கி, கிராமத்தினர் அளிக்கும் உபசரிப்பை ஏற்றுக் கொள்வர். ராஜ்யமாளும் மன்னரை சந்திக்க நேர்ந்தால், சத்தியானந்தர் மன்னரோடு நாட்டு நடப்புகளைப் பற்றி உரையாடி விட்டு, ஆட்சி செவ்வனே நடைபெற ஆலோசனைகளைக் கூறுவார்.
 
இவ்வாறு, பல ஊர்களையும், கோயில்களையும் தாண்டிச் சென்ற பிறகு, ஒருநாள் இருவரும் போதபுரி என்ற ராஜ்யத்தின் தலைநகரை அடைந்தனர்.
போதபுரியை ஆண்டுவந்த மன்னனைப் பற்றி அவர்கள் கேள்விப்பட்ட விவரங்கள் அவர்களை கவலைக்குள்ளாக்கின. அவன் ஒரு மதியற்ற மன்னன் என்றும், தாறுமாறாக ஆட்சி புரிந்து குடிமக்களை மிகவும் அல்லலுக்குள்ளாக்குவதாகவும் கேள்விப்பட்டனர். அவனுடைய அமைச்சர்கள் அவனைப் போலவே முட்டாள்களாக இருந்தனர். மன்னனுடைய கட்டளையின்படி, வியாபாரிகள் தானியங்களிலிருந்து விலையுயர்ந்த தங்கம், வைரம் வரை அனைத்துப் பொருட்களையும் ஒரே விலையில் விற்குமாறு கட்டாயப் படுத்தப் பட்டனர். அதனால் அத்தியாவசியமான பொருட்களும் அதிக விலைக்கு விற்றன. வேலை செய்ய முடியாத கிழவர்கள், நோயாளிகள் ஆகியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
 
இவ்வாறு போதபுரி ராஜ்யத்தில் எல்லாமே தலைகீழாக முறைகேடான வழிகளில் நடப்பதைக் கேட்ட பிரதாபன் தன் குருவிடம் அந்த மதியற்ற மன்னனைச் சந்திக்கவே வேண்டாம் என்று கூறினான்.
 
ஆனால் சத்தியானந்தர் "நாம் காதால் கேட்பதை மட்டும் வைத்து மன்னனை முட்டாள் என்று மதிப்பிடக் கூடாது. நேரில் சென்று சந்தித்தால் உண்மை தெரியும்!" என்றார்.
 
பிறகு, இருவரும் அரண்மனையை அடைந்து, வாயிற்காவலர்களிடம் மன்னனை சந்திக்க அனுமதி வேண்டினர். மன்னர் சபையில் இருப்பதாகத் தெரிவித்த காவலர்கள் அவர்களை சபைக்குச் செல்ல அனுமதித்தனர். சபைக்குள் இருவரும் நுழைந்தபோது, மன்னன் ஒரு விசாரனையில் ஈடுபட்டு இருந்தான்.
 
மன்னன் முன் இரு பெண்கள் தலைவிரி கோலமாக நின்று கொண்டு அழுது புலம்பிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருத்தி, "மன்னா! எங்கள் இருவரின் கணவர்களும் திருடர்கள்! வீடுகளில் புகுந்து, சுவரில் கன்னம் வைத்து உள்ளே நுழைந்து திருடுவது அவர்கள் தொழில்! நேற்றிரவு, அவர்கள் வியாபாரி தனபாலரின் கடைச் சுவரில் ஓட்டை போட்டு உள்ளே புக முயன்றபோது, சுவர் இடிந்து அவர்கள் மீது விழுந்தது. இருவரும் இறந்து விட்டனர்...!" என்று சொல்லிக் கொண்டே ‘ஓ' என்று கதறினாள். மற்றொருத்தி, "வியாபாரி கடையை ஒழுங்காகக் கட்டவில்லை.
அதனால்தான் ஓட்டை போட்டவுடன் சுவர் இடிந்து விழுந்து எங்கள் கணவர்களின் உயிரைப் பறித்தது. வியாபாரி தன் கடையின் கட்டட வேலையை சரியாக செய்யாததால் இந்த விபத்து நிகழ்ந்தது. அதனால் அவர் எங்களுக்கு நஷ்டஈடு தர வேண்டும்!" என்று ஆவேசத்துடன் கூறினாள். உடனே, மன்னன் குற்றவாளியான வியாபாரியை அழைத்து வரச்சொன்னான்.
 
உடனே, வியாபாரி தனபாலன் மன்னன் முன் இழுத்தவரப்பட, அவன், "மன்னா! சுவர் இடிந்து விழுந்தது என் தவறல்ல! கொத்தனாரின் தவறு! ஆகவே அவரைத் தண்டிக்க வேண்டும்!" என்று வாதாட, உடனே, "குற்றவாளியான கொத்தனார் எங்கே? அவனை உடனடியாக அழைத்து வாருங்கள்" என்று மன்னன் கூறினான். கொத்தனார் சபைக்கு இழுத்து வரப்பட்டான். அவன் மன்னரை வணங்கிவிட்டு, "மன்னா! நான் இல்லாதபோது சித்தாள் தண்ணீரை அதிகமாக சுண்ணாம்பில் கொட்டி விட்டாள். அதனால் அவளைத்தான் தண்டிக்க வேண்டும்!" என்றான்.
 
"நீ சொல்வது சரி! சித்தாள் தான் குற்றவாளி! அவளை அழைத்து வாருங்கள்!" என்று மன்னன் கட்டளை இட்டான். உடனே சித்தாள் அழைத்துவரப்பட, அவள் ‘ஓ' எனக் கதறிக் கொண்டே "ஐயோ! நான் தண்ணீரைக் கொட்டவில்லை!" என்று அழுதனர்.
 
"இப்படி ஒவ்வொருவரும் சமாதானம் கூறினால், நான் யாரைத்தான் தண்டிப்பது? சித்தாளான நீதான் குற்றவாளி! உன்னைத் தூக்கிலிட உத்தரவிடுகிறேன்!" என்று மன்னன் தீர்ப்பு வழங்கினான்.
 
மன்னனுடைய கிறுக்குத்தனமான தீர்ப்பைக் கேட்டவுடன் பிரதாபன், "குருதேவா! இந்த மன்னனின் முட்டாள்தனத்திற்கு எல்லையே இல்லை! இத்தகைய முட்டாளுக்கு நீங்கள் என்ன புத்திமதி கூற முடியும்? பேசாமல் திரும்பிச் சென்றுவிடலாம்!" என்று கிசுகிசுத்தான். ஆனால் சத்தியானந்தர் அதைக் கேட்காமல் மன்னனை அணுகினார். "மன்னா! இந்த வழக்கு விசாரணையை நானும் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். நீங்கள் வழங்கிய தீர்ப்பு முற்றிலும் தவறானது.
சித்தாள் குற்றமற்றவள்!" என்று குரு கூறியதும், மன்னனுக்குப் பயங்கர கோபம் ஏற்பட்டது. "நீ யார் எனக்கு புத்தி சொல்ல! என்ன தைரியம் உனக்கிருந்தால் என் தீர்ப்பு தவறு என்று சொல்லுவாய்? சித்தாளுக்கு பதிலாக உன்னைத் தூக்கிலிடுகிறேன் என்று சீறி விழுந்த மன்னன் சத்தியானந்தரை உடனே தூக்கிலிட உத்தரவு பிறப்பித்தான்.
 
உடனே, மன்னனின் காவலர்கள் சத்தியானந்தரைத் தூக்கிலிட தூக்குமேடைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். பிரதாபன் தன் குருவின் செவிகளில் ரகசியமாக ஒரு யோசனை கூறினான். உடனே, மன்னனை நோக்கித் திரும்பிய சத்தியானந்தர், "மன்னா, இறக்குமுன் என் கடைசி ஆசையை நிறைவேற்றுவீர்களா?" என்று கேட்டார்.
 
"என்ன அது?" என்று மன்னன் கேட்க, "என் சிஷ்யனுக்கு ஞானதிருஷ்டியில் கடவுள் சற்றுமுன் தோன்றினார். உன்னுடைய குரு நிரபராதி! ஆகவே, அவரை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல நானே நேரில் தங்கத் தேரில் வருகிறேன்' என்று சொன்னாராம்! அதனால் சீக்கிரமே என்னைத் தூக்கிலிடுங்கள்" என்றார் சத்தியானந்தர்.
 
"மன்னன் நான் இருக்கும்போது, கடவுள் உன்னை ஏன், சொர்க்கத்திற்கு அழைத்துப் போக வர வேண்டும்? நானே தூக்கில் தொங்குகிறேன்! என்னை அவர் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லட்டும்!" என்று கூறிய மன்னன் தானே தூக்கு மேடைக்குச் சென்றான்.
 
தூக்கு மேடையில் மன்னன் ஏறியவுடன், தூக்கிலிடுபவன் வெலவெலத்துப் போனான். "மகாராஜா! தூக்குக் கயிறின் சுருக்கு மிகவும் சிறியதாக இருப்பதால் உங்கள் தலை இதற்குள் நுழையாதே!" என்றான். "அடடா! சொர்க்கத்திற்குச் செல்லும் வாய்ப்பு வீணாகி விட்டது!" என்று மன்னன் திரும்ப அரண்மனைக்குச் சென்றான்.
 
தன் சிஷ்யனின் பக்கம் திரும்பிய குரு, "நீ சரியாகச் சொன்னாய்! இந்த மன்னன் ஒரு வடிகட்டிய முட்டாள்! இவனைத் திருத்த யாராலும் முடியாது. முதலில் இந்த ராஜ்யத்தை விட்டு தப்பியோடுவோம்!" என்று சொல்ல, இருவரும் அங்கிருந்து அகன்றனர்.

தேவையற்றக் கேள்விகள்

 
வேங்கடபுரியில் வசித்து வந்த பிரசாத் புத்திசாலியான இளைஞன்! ஆனால் வடிகட்டிய சோம்பேறி! அதுமட்டும் இல்லாமல் பார்ப்பவர்களைத் தேவையற்றக் கேள்விகளைக் கேட்டுத் துளைத்து விடுவான். அதனால் அவன் தலையைக் கண்டதுமே, கிராமத்து ஆட்கள் ஓடி ஒளிந்தனர். அவனது தந்தையும் அவனுக்குப் பலமுறை புத்தி சொல்லி அலுத்து விட்டார்.
 
ஒருநாள் அவன் தன் வேலைக்காரன் லட்சுமணனை அழைத்துக் கொண்டு பக்கத்து கிராமத்து சந்தைக்குச் சென்றான். சந்தையில் இருந்து ஊர் திரும்ப நேரமாகிவிட்டது. நன்கு இருட்டிய பிறகும், அவர்களால் தங்கள் கிராமத்திற்குத் திரும்ப முடியவில்லை. போதாக் குறைக்கு, இருட்டில் கிராமத்திற்குச் செல்லும் வழியும் தெரியவில்லை.
 
இரவில் எங்கு தங்குவது என்று குழம்பிய அவர்களுக்கு நேடுஞ்சாலையிலிருந்து தொலைவில் ஒரு குடிசை தென்பட்டது. இருவரும் அங்கு சென்றனர். குடிசையில் ஒரு சாமியார் தனியாக உட்கார்ந்திருந்தார். அவரை சந்தித்து அன்று இரவு அவருடைய குடிசையில் தங்க முடியுமா என்று வேலைக்காரன் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, பிரசாத் "சாமியாரே! தன்னந்தனியாக இந்தக் குடிசையில் ஏன் வசிக்கிறீர்கள்? சாப்பாட்டிற்கு என்ன செய்வீர்கள்? சமைத்து சாப்பிடுகிறீர்களா அல்லது பிச்சையெடுத்து சாப்பிடுகிறீர்களா?
 
நீங்கள் உண்மையான சாமியாரா அல்லது போலிச்சாமியாரா?" என்று ஏடாகூடமாகக் கேள்விகள் கேட்டான். வேறு ஒருவராக இருந்தால், அவனுடைய கேள்விகளினால் மிகவும் கோபமடைந்து இருப்பார்கள்.
ஆனால், சாந்தமே உருவான சாமியார் புன்னகைத்துக் கொண்டே, "தம்பி! நீ களைத்துப் போய் வந்திருக்கிறாய் என்று தோன்றுகிறது. முதலில் நான் தரும் பழங்களைச் சாப்பிட்டு படுத்துத் தூங்கு! விடிவதற்குள் உன் கேள்விகளுக்குத் தானாகவே பதில் கிடைத்து விடும்!" என்றார்.
 
உண்மையிலேயே பிரசாதுக்குப் பசியாக இருந்ததால், அத்துடன் தன் கேள்விகளை நிறுத்திவிட்டு, சாமியார் கொடுத்தப் பழங்களைத் தின்றான். அவனுடைய வேலைக்காரனும் பழங்கள் சாப்பிட்டான். பிறகு இருவரும் குடிசையின் ஒரு மூலையில் படுத்து உறங்கினர்.
 
சிறிது நேரத்தில், பிரசாத் எங்கோ பறப்பது போல் உணர்ந்தான். திடுக்கிட்டுக் கண் விழித்ததும், அவன் ஒரு பெரிய தோப்பினுள் இருப்பதைக் கண்டான். திடீரென, இரவு போய், பகலாகிவிட்டது. தோப்பிலிருந்த மரங்கள் மிகவும் உயரமாகவும், அடர்த்தியாகவும் இருந்தன. அவன் அந்த மரங்களை அண்ணாந்துப் பார்த்துக் கொண்டுடிருக்கையில், திடீரென அந்த மரங்களிலிருந்து மனிதர்கள் குதித்தனர்.
 
அந்த மனிதர்களும் மிக உயரமாக இருந்தனர். அவர்களில் ஒருவன் பிரசாத் முன் வந்து, "ஐயா! இந்தக் கிராமத்திற்கு விசித்திரபுரி என்று பெயர்! என் பெயர் மாரி! நான்தான் கிராமத்தலைவன்! எங்கள் கிராமத்திற்கு விருந்தாளியாக வந்துள்ள உங்களை நான் மனமார வரவேற்கிறேன்" என்றான்.
 
உடனே பிரசாத், "நீங்கள் ஏன் மரங்களிலிருந்து கீழே இறங்கி வந்தீர்கள்? நீங்கள் மரங்களிலேயே வசிப்பவர்களா?" என்றான். "ஐயா! எங்கள் விடுகள் மரங்களின் உச்சியில் உள்ளன!" என்றான் மாரி. "அதிருக்கட்டும்! சற்றுமுன் தான் இரவாக இருந்தது. இங்கு நான் வந்ததும் திடீரென பகற்பொழுது எப்படி உண்டாயிற்று?" என்று கேட்டான் பிரசாத்.
 
"எங்கள் கிராமத்தில் சூரியன் அஸ்தமனம் ஆவதில்லை. நாங்கள் விருந்தாளிகளை நன்கு உபசரித்து விருந்தளிக்க வேண்டும். இல்லையேல், இங்கு நிரந்தரமாக இருட்டாகிவிடும். விருந்தாளிகளுக்கான வீடும் மரத்தின் உச்சியில்தான் இருக்கிறது. வாருங்கள்!" என்றான் மாரி.

"எனக்கு மரமேறத் தெரியாதே!" என்றான் பிரசாத். இரு சக்கரங்களை மாரி அவன் கால்களில் கட்டி விட்டு, "இந்த சக்கரங்களின் உதவியினால் நீங்கள் பறக்க முடியும்! உங்கள் மாளிகைக்குப் பறந்து வாருங்கள்!" என்றான் மாரி.
 
உடனே, பிரசாத்தும் பறந்து சென்று விருந்தினர் மாளிகையை அடைந்தான். கூடவே, மாரியும் அவனுடைய ஆட்களும் வந்தனர். மரத்தின் உச்சியில் கட்டப்பட்டிருந்த அந்த வீடு விசாலமாக இருந்தது. ஆனால் அந்த வீட்டிற்குள் சில கறுப்புப் பூனைகள் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்தன.
 
"இந்தப் பூனைகளும் உங்கள் விருந்தாளிகளா?" என்று பிரசாத் கிண்டலாகக் கேட்டான். "இவர்கள் ஒரு காலத்தில் விருந்தாளிகளாக இருந்தார்கள். ஆனால் விருந்தும், மருந்தும் சில நாள்களுக்குத்தான்! பிறகு இங்கே வருபவர்கள் கடினமாக உழைத்து வேலை செய்ய வேண்டும். இல்லை என்றால் பூனைகளாக மாற்றி விடுவோம்" என்றான் மாரி! அதைக் கேட்டதும் பிரசாத் திடுக்கிட்டான்.
 
அப்போது கீழே ஒரு பெரிய நடனக் குழுவினர் பாட்டுப் பாடிக் கொண்டே நடனமாடத் தொடங்கினர். "உங்களை மகிழ்விப்பதற்காகத்தான் இவர்கள் கேளிக்கை நிகழ்த்துகின்றனர்!" என்றான் மாரி. "அப்படியானால், நான் கீழே இறங்கி நின்று பார்க்கிறேன்!" என்று சொல்லிவிட்டு பிரசாத் பறந்து சென்று கீழே போனான். மாரியும், அவனுடைய ஆட்களும் அவனைத் தொடர்ந்து கீழே இறங்கினர். கீழே நடனமாடிக் கொண்டிருந்தவர்கள் தங்கள் கைகளில் கோப்பையேந்தி இடைஇடையே ரசித்துக் குடித்தனர். கோப்பை காலியானதும், அங்கு ஓரத்தில் நின்று கெண்டிருந்த ஒரு ஆள் அவர்களுடைய கோப்பையை நிரப்பிக் கொண்டிருந்தான்.
 
"ஐயோ பாவம்! அவன் மட்டும் ஏன் நடனம் ஆடாமல் மற்றவர்களின் கோப்பைகளை நிரப்புகிறான்? அவன் யார்? அவர்கள் என்ன குடிக்கின்றனர்?" என்று கேட்டான் பிரசாத். "அவர்கள் குடிப்பது சோமபானம் என்ற மது! அதை நிரப்புபவன்தான் மதுவைத் தயாரித்தவன்! அவன் உன்னைப்போல் ஒரு காலத்தில் விருந்தாளியாக வந்தவன்! மற்றவர்களை ஓயாமல் தொணதொண என்று கேள்விகள் கேட்டுக் கொண்டேஇருந்ததால், அவனுக்கு இந்த தண்டனை கொடுத்து விட்டோம்" என்றான் மாரி!"ஐயையோ!" என்று அலறினான் பிரசாத். தன் கதியும் அப்படித்தான் ஆகப்போகிறது என்று புரிந்து கொண்டு, அங்கிருந்து ஓட முயற்சித்தான். உடனே, அந்தப் பிரதேசம்எங்கும் நேருப்பு மழைக் கொட்டத் தொடங்கியது. "எங்களுக்கு நேருப்பு மழை பிடிக்கும். உன்னால்தான் இந்த பாக்கியம் கிடைத்தது. விருந்தாளியான உனக்குப் பரிசு தர விரும்புகிறோம்! சொல்! என்ன வேண்டும்?" என்று கேட்டான் மாரி.
 
"ஆளை விடு சாமி! என்னை என் ஊருக்கேத் திருப்பி அனுப்பி விடுங்கள்!" என்று பிரசாத் கூற, மாரி "தாராளமாகப் போ!" என்று கூறிவிட்டு அவனை அலாக்காகத் தூக்கி எறிய, பிரசாத் "ஐயோ!" என்று அலறினான். "என்ன ஆயிற்று எசமான்?" என்று வேலைக்காரன் தூக்கத்திலிருந்து பதறியெழ, அப்போதுதான் தான் இதுவரை கண்டதெல்லாம் கனவு என்ற உண்மை பிரசாத்திற்குப் புலப்பட்டது.
 
அதற்குள் பொழுது விடிந்து இருந்தது. குடிசையை விட்டு வெளியே வந்த பிரசாத், அங்கு சாமியார் தியானத்தில் ஆழ்ந்து இருப்பதைக் கண்டான். சாமியார் கண்களைத் திறந்து அவனை நோக்க, அவன் அவர் கால்களில் வீழ்ந்து வணங்கினான்.
 
"என்னப்பா? உன் கேள்விகளுக்கு விடை கிடைத்தா?" என்று கேட்டார். "ஆம்!" என்று பிரசாத் தலையை ஆட்டினான். "மகனே! தேவையற்றக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டு இனியாவது உன் நேரத்தை வீணாக்காமல் இரு!" என்றார். அவரிடம் விடைபெற்றுக் கொண்டு வீடு திரும்பிய பிரசாத் அன்றுமுதல் தேவையற்றக் கேள்விகளைக் கேட்காமல் தந்தையுடன் வயலுக்குச் சென்று அவருடைய வேலைகளில் உதவி செய்யத் தொடங்கினான்.
 

ரிஷபராஜா

சில நூற்றாண்டுகளுக்குமுன் நடந்த நிகழ்ச்சி இது! சரக்குகளை ஏந்திய ஒரு வணிகக் கப்பல் வங்கக்கடலில் மெதுவாக ஊர்ந்து சென்று கொண்டுஇருந்தது. திடீரென, எங்கிருந்தோ நூற்றுக்கணக்கான ஓடங்கள் வந்து மின்னல் வேகத்தில் விற்பனைப் பொருட்களை ஒன்று விடாமல் கொள்ளையடித்துச் சென்றனர்.சரக்குக் கப்பலை ஓட்டி வந்த மாலுமிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
 
பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, ஆங்கிலேயர்கள் தங்கள் கிழக்கிந்திய கம்பெனியின் வணிக மையங்களில் ஒன்றாக கலிங்கத்தைத் (ஒரிசா)தேர்ந்தெடுத்துஇருந்தனர். வங்கக் கடலின் வழியாக அவர்களுடைய சரக்குக் கப்பல்கள் இந்தியாவிலிருந்து பொருட்களை எடுத்துக் கொண்டு மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றன. கிழக்குக் கடற்கரை ராஜ்யம் ஒன்றில் ஆட்சி செலுத்தி வந்த கலிங்க மன்னர்களில் ஒருவனுக்கு இவைப் பிடிக்கவில்லை. ஆகையால் அவன், தன் ஆட்களு க்குப் பயிற்சி அளித்து, அவர்களைக் கடல் கொள்ளைக்காரர்களாக மாற்றி ஆங்கிலேயக் கப்பல்களை நடுக் கடலில் சூறையாடத் தொடங் கினான். தங்களுடைய வியாபாரம் பெரிதும் பாதிக்கப்படுவதை கிழக்கிந்திய கம்பெனியினால் பொறுக்க முடிய வில்லை. ஆகையால் கலிங்க மன்னனைச் சிறைப்பிடிக்க நினைத்தனர். ஆனால் அந்த மன்னன் யார் என்று தெரிந்து கொள்ளவே அவர்களுக்குப் பல ஆண்டுகள் சென்றன.
 
கலிங்கத்தில், கடற்கரையருகே பரதீப் என்ற ஒரு அழகான நகரம் இருந்தது. அடர்ந்த காடுகளினால் சூழப்பட்டிருந்த பரதீப் குஜாங்க் ராஜ்யத்தின் தலைநகராக விளங்கியது. குஜாங்கின் மன்னனான சந்திரத்வஜன் தான் ஆங்கி லேயர்களின் வியாபாரத்திற்குப் பெருத்த சேதத்தை விளைவித்து வந்தவன். அவனுக்கு ஷாந்த ராஜா (ரிஷபராஜா) என்ற பட்டப்பெயரும் இருந்தது.
அவனுக்கு மட்டுமன்றி, அவன் வமிசத்தில் தோன்றிய அனைவருக்குமே அந்தப் பட்டப் பெயர் இருந்தது. அதற்கான ஒரு வரலாறும் உள்ளது.
 
ஒருமுறை, குஜாங்க் மன்னர் ஒருவர் பூரி ஜெகந்நாதர் கோயிலுக்கு விஜயம் செய்தார். செல்லும் வழியில், கோயில் காளை ஒன்று அவரை நோக்கி சீறிப் பாய்ந்தது. மன்னனுடன் வந்த ஆட்கள் சீறிவரும் காளையைக் கண்டு பயந்து போய் சிதறி ஓடி விட்டனர். குஜாங்க் மன்னருடன் வந்த ஆட்களில் அரச குலத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவனும் இருந்தான். அவன் மன்னரை தன் தந்தையைப் போல் கருதி வந்தவன். மன்னருடைய ஆபத்தான நிலையை உணர்ந்த அந்த இளைஞன் சற்றும் அஞ்சாமல் அந்த முரட்டுக்காளையின் கொம்புகளைத் தன் இரு கைகளினாலும் இறுகப் பற்றிக் கொண்டு, அதைத் தன் பலங்கொண்ட மட்டும் தள்ளி விட்டான். அந்தக் காளை ஒரு புதரில் சென்று விழுந்தது.
 
அந்தக் காட்சியைத் தன் மாளிகையின் மாடியில் இருந்து கவனித்துக்கொண்டிருந்த பூரி மன்னர் அந்த இளைஞனுடைய அசாதாரணமான துணிச்சலையும், வலிமையையும் கண்டு பிரமித்து அவனுக்கு ஷாந்தராஜா (ரிஷபராஜா) என்ற பட்டப் பெயரைச் சூட்டினார். குஜாங்க் மன்னருக்கு சந்ததியில்லை! தன் உயிரைக் காப்பாற்றிய அந்த இளைஞனையே தன் புதல்வனாக தத்து எடுத்துக் கொண்டார். அவருக்குப் பிறகு, ரிஷபராஜா குஜாங்க் ராஜ்ய மன்னன் ஆனான். அன்று தொடங்கி அவனுடைய சந்ததியினர் அனை வருக்கும் ரிஷபராஜா என்ற பட்டப் பெயர் நிலைத்தது.
 
அந்த வமிசத்தில் தோன்றியவன் தான் சந்திரத்வஜன்! ஒருவாறாக, ஆங்கிலேயர்கள் தங்களுக்குத் தீராத தலைவலியாக இருப்பது சந்திரத்வஜன்தான் என்று கண்டு பிடித்தனர். அன்றுமுதல் அவனை சிறைப்பிடிக்கப் பல முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தனர்.
 
சந்திரத்வஜன் ஆன்மீகத்திலும் நாட்டமுடையவனாக இருந்தான். அதிகாலையிலும், இரவினிலும் அவன் அடர்ந்த காட்டினில் தனியே அமர்ந்து பல மணி நேரங்கள் தியானத்தில் செலவிடுவதுண்டு. அவன் எங்கு சென்று தனியாக தியானம் செய்கிறான் என்பது அவனுடைய நேருங்கிய நண்பர்களில் சிலருக்கு மட்டுமே தெரியும்.
ஆனால் அவனுடைய நண்பர்களில் ஒருவனே அவனுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய, ஒருநாள் அவன் தனியே அமர்ந்து தியானம் செய்யும்போது, ஆங்கிலேயர்கள் அவனை சிறைப்பிடித்து விட்டனர்.
 
சந்திரத்வஜனைப் பற்றி, ஆங்கி லேய சரித்திர நிபுணரான டோயன் பீ தனது ‘எ ஸ்கெட்ச் ஆஃப் ஹிஸ்டரி ஆஃப் ஒரிசா' என்ற நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: "ஒரிசாவின் மூன்று முக்கிய நகரங்களை நாங்கள் கைப்பற்றினோம். நமது வீரர்களின் அணி மேஜர் ஃபோர்ப்ஸ் தலைமையில் சந்திரத்வஜனைப் பிடிக்க பார்முல் சென்றது. முதலில் சந்திரத்வஜன் யாரிடமும் சிக்காமல் தப்பினாலும், பின்னர் அவன் பிடிபட்டான். அவன் வசமிருந்த போர்க்கருவிகள் அனைத்தும் ஆங்கிலேயர்களுடையவை! அவற்றை சந்திரத்வஜன் ஏதாவது உடைந்த கப்பலிலிருந்தோ அல்லது சரக்குக் கப்பலைக் கொள்ளைஅடித்தோப் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது."
 
மகாநதி ஆற்றின் கரையில் அமைந்த பரபட்டி கோட்டையில் சந்திரத்வஜன் சிறை வைக்கப்பட்டான். கட்டக்கில் உள்ள இந்த பரபட்டிக் கோட்டை ஒரு காலத்தில் கலிங்க மன்னர்கள் வசித்து வந்த மாளிகையாக இருந்தது. அங்கு இருந்து தப்பிச் செல்வது மிகவும் கடினம் என்று உணர்ந்தும், சந்திரத்வஜன் அதைப் பற்றி கவலைப் படாமல் அமைதியாக இருந்தான்.
 
தன்னை சிறை வைத்திருந்த ஆங்கிலேயர்களை பகைவர்கள் என்று கருதாமல், அவர்களுடன் மிகவும் பிரியத்துடன் சந்திரத்வஜன் பழகியதைக் கண்டு, ஆங்கிலேயர்களே வியப்புற்றனர். தனக்குத் தெரிந்த மல்யுத்தக் கலைகளை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தான். நாளடைவில், ஆங்கிலேயர்கள் அவனைத் தங்கள் நண்பனாகவே நினைக்க ஆரம்பித்தனர். ஒருநாள் மாலை நேரத்தில், பரபட்டிக் கோட்டையில் இருந்த ஆங்கிலேய அதிகாரிகள் ஓர் அதிசயமான காட்சியைக் கண்டனர். மகாநதி ஆற்றில் கற்பனைக்கு எட்டாத அழகுடன் ஒரு மயில் உருவத்தில் வடிவம் அமைக்கப் பட்டு இருந்த ஓடம் சென்று கொண்டிருந்தது.
சிறிது நேரத்தில் அது கரையருகே வர, அதைச் செலுத்திக் கொண்டிருந்த இருபத்தி நான்கு ஆட்கள் தென்பட்டனர். அவர்களுக்கு நடுநாயகமாக ஒரு பெரியவர் வீற்றிருந்தார்.
 
கரையருகே வந்து அது நின்றதும், ஆங்கிலேயர்கள் அதைச் சூழ்ந்து கொண்டு அதிலிருந்த முதியவரிடம் ஓடத்தைப் பற்றிய விவரங்களைக் கேட்டனர். அதற்கு அவர் அந்த ஓடம் ஒரு செல்வருடையது என்றும், வியாபாரத்தில் அவருக்கு ஏற்பட்ட பெரும் நஷ்டத்தினால் அதை விற்க முயற்சிக்கிறார் என்றும் கூறினார். உடனே, அதை விலைக்கு வாங்கத் துடித்த ஆங்கிலேயர்கள் அதனுடைய விலையைக் கேட்டதும் திடுக்கிட்டனர்.
 
"துரைமார்களே! விலையைக் கேட்டு நீங்கள் தயங்குவது எனக்குப் புரிகிறது. ஆனால், இதன் விலை உண்மையிலேயே மிக அதிகம். உங்களுக்கு இதன் விலையை மதிப்பிடத் தெரியவில்லை. நான் அதிக விலை கூறுவதாக நீங்கள் சந்தேகப்பட்டால், எங்கள் நாட்டு ஓடங்களைப் பற்றி நன்கு தெரிந்த ஒருவரை அழைத்து வாருங்கள். அவர் இதைப் பார்த்து சரியான விலையை மதிப்பிடட்டும்!" என்றார் அந்த முதியவர்.
 
அவர் கூறிய அந்த யோசனையை ஏற்றுக் கொண்ட பின், ஆங்கிலேயர்கள் யாரை அழைத்து வருவது என்று யோசித்தனர். உடனே அவர்களுக்கு ரிஷபராஜா சந்திரத்வஜன் ஞாபகம் வர, அவனை சிறையில் இருந்து உடனே வரவழைத்தனர். விரைவில் அங்கு அழைத்து வரப்பட்ட சந்திரத்வஜன், முதியவரிடம் ஒடத்தைப் பற்றிய விவரங்களை விளக்கமாக நேடு நேரம் கேட்டான். பிறகு, ஓடத்தின் உட்பகுதியை சோதனையிட ஓடத்தில் ஏறி அமர்ந்தான். அதற்குள் மாலை மங்கி இருட்டாகி விட்டது.
 
திடீரென, கண்ணிமைக்கும் நேரத்தில், சந்திரத்வஜன் ஓடத்தின் உள்ளே அமர்ந்திருக்கும்போதே ஓடம் கிளம்பிவிட்டது. அதிலிருந்த ஆட்கள் அசுர வேகத்தில் துடுப்புப் போட்டு ஓடத்தை செலுத்த, ஆங்கிலேயர்கள் பெருத்த அதிர்ச்சிக் குள்ளாயினர். இவ்வாறு ஆங்கிலேயர்களின் கண்களில் மண்ணைத் தூவி தங்கள் மன்னரை விடுவிக்கத் திட்டமிட்ட அந்த முதியவர் வேறு யாருமில்லை. மன்னருடைய புத்திசாலி மந்திரி பட்டஜோஷிதான்!

மூன்று அபாய கனவுகள்

 
கோகர்ண ராஜ்யத்து மன்னரான மணிகண்டர் பரந்த நோக்கும், நேர்மையான குணங்களும், தர்மசிந்தனையுமுள்ளவர்! சிறந்த பக்திமான்! சாது, சன்னியாசிகளை மிகவும் மதித்துப் போற்றுபவர்! ஒருநாள், அவருடைய அரண்மனைக்கு ஜடாதரர் என்ற முனிவர் வருகை புரிந்தார். மணிகண்டர் அவரை நன்கு உபசரித்தார். அதனால் மனம் மகிழ்ந்த ஜடாதரர் மன்னரை மனதார ஆசீர்வதித்து விட்டு "மணிகண்டா! நீ இன்று இரவு தொடங்கி, தொடர்ந்து மூன்று இரவுகள் விபரீதமான கனவுகளைக் காண்பாய்! அவை உனக்கு வரப்போகும் அபாயத்தை சூசகமாக உணர்த்தும். அதற்கேற்றார்போல், நீ சமயோசித புத்தியுடன் நடந்து கொண்டால், வரப்போகும் அபாயங்களிலிருந்து தப்பலாம்!" என்று கூறிவிட்டுச் சென்றார்.
 
முனிவரின் எச்சரிக்கையைக் கேட்டு பதறிய மன்னர் தன்னுடைய மந்திரிகளை அழைத்து அவர்களிடம் அனைவற்றையும் கூறி அதைத் தடுக்கும் வழியைப் பற்றி கேட்டார். விவேகன் என்ற மந்திரி, "மகாராஜா! கனவுகளே தோன்றாமல் தவிர்த்து விட்டால், பின்னர் அபாயமே ஏற்படாது. ஆகவே, நீங்கள் இன்று முதல் மூன்று இரவுகள் உறங்காமல் விழித்திருங்கள்!" என்றார்.
 
மன்னருக்கு வேறு எதுவும் யோசனை தோன்றாததால், விவேகன் கூறியவாறே செய்யத் தீர்மானித்தார். ஆனால், முதல் நாள் இரவு, முழுவதும் சிரமப்பட்டு சதுரங்கம் விளையாடி உறங்காமலிருந்தும், விடியும் சமயத்தில் சற்றே கண்ணயர்ந்து விட்டார்.
அந்த சிறிது நேர உறக்கத்திலேயே அவருக்கு ஒரு கனவு உண்டாகி விட்டது..
தான் ஒரு காட்டினுள் இருப்பது போலவும், தன்னை நோக்கி ஒரு நாகப்பாம்பு சீறிப்பாய்வதையும் கண்டார். மறுநாள் இரவு, அவர் பாட்டுக்கேட்டுக் கொண்டே தூங்காமல் இருக்க முயற்சி செய்தார். ஆனால் அன்றும் சிறிது நேரம் தன்னை அறியாமல் உறங்கிப் போனார். கனவில், வானிலிருந்து இடியும், மின்னலுமாக அவரைத் துரத்தி வந்தது. உடனே, மன்னர் விழித்துக் கொண்டார்.
 
மூன்றாவது இரவில், அவர் ராஜகுருவை அழைத்து புராணக்கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்க, இடையில் அமர்ந்தவாறே உறங்கிப் போனார். அன்று கனவில் அவரை ஒரு சிங்கம் துரத்த, அவர் ஓடிச் சென்று ஒரு குளத்தில் குதித்தார். அந்தக் குளம் முழுவதும் இரத்தம் நிரம்பியிருந்தது. குளத்தில் மூழ்கி அவர் மூச்சுத் திணறும்போது, அவருடைய மகள் மணிமேகலை அவர் கையைப் பிடித்து மேலே தூக்கி விட்டாள்.
 
மறுநாள் காலை மந்திரிகளை அழைத்த மன்னர், அதுவரை தான் கண்ட கனவுகளைக் கூறி அவற்றின் விளக்கம் கேட்டார். நீண்டநேரம் ஆலோசனை செய்த மந்திரிகள் மன்னருக்கு பாம்பினால், அல்லது மின்னலினால் அல்லது சிங்கத்தினால் ஆபத்து நேரிடப்போகிறது என்றும், ஆகையால் மன்னர் அரண்மனையை விட்டு எங்கேயும் வெளியே செல்லக்கூடாது என்றும் அறிவுரை கூறினார்.
 
அதைப்பற்றியே யோசித்துக் குழப்பத்தில் ஆழ்ந்திருந்த மன்னரிடம் ஒருநாள் சிவா என்ற இளைஞன் வந்தான். அவன் மன்னரை வணங்கிவிட்டு, "மகாராஜா! நான் அறிவு ஆற்றல் படைத்தவன்! ஆனால் என்னுடைய திறமையை இதுவரை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. உங்களுடைய கனவுகளின் உட்பொருளைப் பற்றிய என் கருத்தை வெளியிட அனுமதித்தால், நான் ஓர் அறிவாளி என்று வெளி உலகுக்குக் காட்ட எனக்கு வாய்ப்பு கிடைக்கும்!" என்றான்.
 
மன்னனும், ஜடாதர முனிவர் தனக்கு விடுத்த எச்சரிக்கை பற்றியும், அதன் பிறகு அவர் கூறியது போலவே தனக்குத் தொடர்ச்சியாகத் தோன்றிய விபரீதக் கனவுகளையும் அவனிடம் விளக்கி கூறினார்.
அதை கவனமாகக் கேட்ட சிவா, "மகாராஜா! நீங்கள் கண்ட கனவுகளுக்கு உட்பொருள் உள்ளது. முதல் இரண்டு கனவுகளின் சூசகமான உட்பொருளை நான் விளக்குகிறேன். அவை சரியாக அமைந்தால், மூன்றாவது கனவையும் விளக்குகிறேன்" என்றான்.
 
மன்னன் சரியென்றதும் சிவா, "மகாராஜா! தங்களுடைய முதற்கனவில் தங்களை ஒரு நாகம் துரத்தியது. நாகப்பாம்பு தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு வஞ்சம் தீர்க்கும் சுபாவம் உடையது. உங்கள் கனவின் உட்பொருள், உங்களால் தண்டிக்கப்பட்ட ஒருவன் உங்களைப் பழி தீர்க்க திட்டம் வகுத்துள்ளான் நீங்கள் அவனை உடனடியாகக் கண்டு பிடித்து சிறையில் அடைக்க வேண்டும். இரண்டாவது கனவில் விண்வெளியிலிருந்து மின்னல் இறங்கி வந்து உங்களைத் தாக்க முயற்சித்தது. அதாவது, உங்களுடைய பகைவனான அயல் நாட்டு மன்னன் உங்கள் மீது படையெடுக்கத் திட்டம் தீட்டுகிறான் என்பதே உட்பொருள்!" என்றான்.
 
அதைக் கேட்ட மன்னர் பிரமித்துப் போனார். சிவா கூறுவது நூற்றுக்கு நூறு சரியாக இருக்கும் என்று அவருக்குத் தோன்றியது. யோசித்துப் பார்த்ததில், சமீபத்தில் கொள்ளையர் தலைவன் பைரவனை சவுக்கடி தந்து தண்டனை கொடுத்தது நினைவிற்கு வந்தது. உடனே, காவலர்களை அழைத்து பைரவனை மீண்டும் கைது செய்ய உத்தரவிட்டார். அவனை நையப்புடைத்து விசாரித்ததில், மன்னரைக் கொலை செய்ய சதித்திட்டமிட்டு ஒரு விஷப்பாம்பை அவருடைய படுக்கையறையில் விட்டிருந்தது தெரிய வந்தது. இதன் மூலம் அவன் சதித்திட்டம் தக்க சமயத்தில் முறியடிக்கப்பட்டது.
 
தனது இரண்டாவது கனவின் விளக்கம் உண்மையா என்று அறிய, ஒற்றர்களை அண்டை அயல் ராஜ்யங்களுக்கு அனுப்பினார்.
 
அண்டை ராஜ்யமான சிங்கபுரியின் மன்னன் விக்கிரமசேனன் தங்கள் மீது போர் தொடுக்க ரகசியமாகத் திட்டமிட்டிருப்பதை ஒற்றர்கள் மூலம் அறியப்பெற்ற மன்னர் திகைத்துப் போனார்.
ஆகையால் அவர் சிவாவிடம், "சிவா! விக்கிரமசேனன் படைபலம் பொருந்தியவன்! எனக்கு இப்போதே அவன் திட்டம் தெரிந்தாலும், என்னால் எதுவும் செய்ய இயலாதே! என்ன செய்யலாம்?" என்று கவலையுடன் கேட்டார்.
 
"அதற்கும் ஒரு வழி உண்டு! அதைத்தான் தங்கள் மூன்றாவது கனவு விளக்குகிறது. கனவில் தாங்கள் கண்ட சிங்கம் சிங்கபுரி மன்னனைக் குறிக்கிறது. அவன் விரைவிலேயே படையெடுப்பது நிச்சயம்! அப்படிப் படையெடுத்தால், தாங்கள் கண்டிப்பாக படுதோல்வி அடைவீர்கள்! ஆனால், உங்களுடைய பெண் தோல்வியில் இருந்து உங்களைக் காப்பாற்ற முடியும்!" என்றான்.
 
"எப்படி?" என்று மன்னர் ஆவலுடன் கேட்டார். "சிங்கபுரி மன்னனுக்குத் திருமண வயதில் ஒரு மகன் உண்டு. அவனுடன் உங்கள் மகளை மணமுடித்தால், சிங்கபுரி மன்னன் உங்கள் சம்மந்தி ஆகி விடுவார். பிறகு போரே நிகழாது" என்றான்.
 
அவனுடைய ஆலோசனையைக் கேட்டு மன்னர் உடனே தூதுவன் மூலம் ஒரு கடிதமும், இளவரசியின் ஓவியமும் அனுப்பினார். அதில், "நீங்கள் சம்மதித்தால், உங்கள் மகனை என் பெண்ணுக்கு மணமுடிக்க விரும்புகிறேன்" என்று எழுதி இருந்தார்.
 
கடிதத்துடன் இணைக்கப்பட்டிருந்த இளவரசியின் ஓவியத்தைக் கண்டவுடனே, சிங்கபுரி இளவரசன் தன் சம்மதத்தை தன் தந்தையிடம் தெரிவித்தான். தன் மகனின் விருப்பத்தையறிந்த விக்கிரமசேனன், மணிகண்ட மன்னருடன் போர் தொடுக்கும் திட்டத்தைக் கைவிட்டான். திருமணமும் விரைவில் இனிதே நடந்து முடிந்தது. சிவாவின் புத்திகூர்மையினால் தனக்கு வரவிருந்த அபாயங்களிலிருந்து தப்பித்த மணிகண்டர், அவனை மிகவும் பாராட்டி பரிசுகள் பல அளித்து,தன் பிரதம ஆலோசகராக நியமித்தார்.
 

அளவிலா ஆற்றல் தரும் அதிசயப்பழம்

சில ஆண்டுகளுக்குமுன், இரண்டு விஞ்ஞானிகள் கேரள மாநிலத்து அகஸ்தியமலைப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அபூர்வமான மூலிகைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்ய அவர்கள் நகரப்பகுதியில் இருந்து காட்டிற்குள் வந்திருந்தனர். காணி என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த மல்லன்காணி அவர்களுக்கு வழி காட்டியாக உதவி செய்தான்.
 
கரடு முரடான காட்டுப் பாதையில் பயணித்த விஞ்ஞானிகள் இருவரும் விரைவிலேயே களைத்துப் போயினர். ஆனால் மல்லனுக்குக் களைப்பே ஏற்படவில்லை. இடையிலேயே, மடியிலிருந்து ஏதோ ஒரு பழத்தை எடுத்துக் கடித்துத் தின்று கொண்டே களைப்பு என்பது துளிக்கூட இல்லாமல், தங்களுடன் நடந்து வந்த அவனுடைய சக்தியைக் கண்டு விஞ்ஞானிகள் வியப்பு அடைந்தனர். ‘அடிக்கடி அவன் உண்ணும் பழங்களில்தான் ஏதோ அபூர்வ சக்தி உள்ளதா?' என்று இருவரும் எண்ணினர்.
 
தங்களுடைய சந்தேகத்திற்கு விடை காண எண்ணி, அவனிடமிருந்து சில பழங்களை வாங்கி இருவரும் உண்டனர். என்ன ஆச்சரியம்? எங்குஇருந்தோ அவர்களுடைய உடல்களிலும் சக்தி பிறந்தது.
 
அதையறிந்த விஞ்ஞானிகள் பரபரப்படைந்தனர். அந்தப் பழத்தை அவர்கள் அதற்கு முன் பார்த்ததும் இல்லை. அதைப்பற்றிக் கேள்விப்பட்டதுமில்லை. அத்தகைய அபூர்வ சக்தி வாய்ந்த பழங்கள் நகரங்களில் வாழும் மனிதர்களுக்கும் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென்றும், அவற்றிலிருந்து மருந்து தயாரித்தால், அது எத்தனை நோயாளிகளுக்குப் பயன்படும் என்றும் எண்ணினர்.
 
உடனே, இருவரும் மல்லனை அந்தப் பழங்கள் உண்டாகும் மரத்தினைத் தங்களுக்குக் காட்ட வேண்டினர். ஆனால் மல்லன் அவற்றை அறிமுகமற்றவர்களுக்குக் காட்டக் கூடாது என்று கூறினான். தங்கள் சாதியில் மூத்தவர்களிடம் அதைப்பற்றி சொல்லி, அவர்கள் அனுமதித்தால் மட்டுமே அவற்றைக் காட்ட முடியும் என்றும் கூறினான். பிறகு அவர்களை தங்கள் இனத்து மூத்தவர்களிடம் அழைத்துச் சென்றான்.
 
காணியினத் தலைவர்கள் தங்கள் இன மக்கள் அனைவரையும் கூட்டி அதுபற்றி விவாதித்தனர். கூட்டத்தில் பலர் தாங்கள் பாதுகாத்து வரும் ரகசியங்களை அந்நியர்களுக்குத் தெரிவிக்கக் கூடாது என்றனர்.
 
அவர்களுடன் விஞ்ஞானிகள் நீண்ட நேரம் விவாதம் செய்தனர். சிற்சில மக்களுக்கு மட்டுமே பயன்படும் பொருட்கள் உலகத்தவர் அனைவருக்கும் கிடைத்தால் நன்மையே தவிர ஆபத்தில்லை என்பதை வலியுறுத்தினர். தவிர, அப்பழங்களை வெளியுலகிற்குப் பயன்படுத்தினால் அதனால் கிடைக்கும் வருமானம் காணியின மக்களுக்குப் பெரிதும் பயனாகும் என்றும் புரிய வைத்த பிறகே, அவர்கள் ரகசியத்தைக் கூற ஒப்புக் கொண்டனர்.
 
கடைசியில் அவர்கள் பழத்தின் பெயரைக்கூறவும், பழம் தோன்றும் மரத்தைக் காட்டவும் ஒப்புக் கொண்டு, மல்லனை அவர்களுடன் அனுப்பினர். அவ்வாறே, மல்லன் காட்டில் அவர்களை அப்பழங்கள் தோன்றும் தாவரங்கள் இருக்குமிடத்திற்குக் கூட்டிச் சென்றான். அவை செடிகள் வடிவத்திலேயே இருந்தன. அந்தப் பழத்தின் பெயர் ‘ஆரோக்கிய அப்பச்சா' என்று மல்லன் தெரிவித்தான்.
 
அந்தப் பழங்கள் சிலவற்றையும், சில செடிகளையும் விஞ்ஞானிகள் தங்களுடன் எடுத்துச் சென்று, ஆராய்ச்சி சாலையில் ஆய்வு செய்தனர். ஆரோக்கிய அப்பச்சாவில் நிறைந்திருந்த சில ரசாயனப் பொருட்கள் உடலுக்கு சுறுசுறுப்பையும், அளவில்லா ஆற்றலையும் தருகின்றன என்ற உண்மையைக் கண்டு பிடித்தனர். அதன் விஞ்ஞானப் பெயர் ‘ட்ரிக்கோபஸ் ஜீலானிகஸ் டிராவாங்கோரியஸ்' என்பதாகும்.
 
ந்தச் செடி, உலகிலேயே கேரளத்திலும் தமிழகத்தின் சில பகுதிகளில் மட்டுமே பயிராகிறது என்றும், கண்டுபிடித்தனர்.
 
பலவிதமான ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, இறுதியாக அந்தத் தாவரங்களில் இருந்து விஞ்ஞானிகள் வெற்றிகரமாக ஒரு மருந்தினைத் தயாரித்தனர். அவர்களுடைய கனவு நனவாகியது. காணிப் பழங்குடியின மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது.
 
மருந்துகளின் விற்பனையிலிருந்து கிடைத்த வருமானத்தின் ஒரு பகுதி முறையாக அவர்களுக்குச் சென்றது. பழங்குடி மக்கள் தங்களுக்குள்ளாக ஒரு குழு அமைத்துக் கொண்டு, அந்த வருமானத்தை தங்களுடைய பொதுநலத் திட்டங்களில் செலவிட்டனர்.
 
தற்போது, அந்தத் தாவரங்கள் வளரும் காட்டுப்பகுதி காட்டிலாகாவின் பொறுப்பில் உள்ளது.
 
பழங்குடி மக்கள் தங்களுடைய நிலத்தில் ஆரோக்கிய அப்பச்சாச் செடிகளைப் பயிரிட காட்டிலாகா அனுமதித்துஉள்ளது. காட்டிலேயே வசித்துவரும் காணியின மக்களுக்கு, தாங்கள் பரம்பரையாகத் தெரிந்து வைத்துள்ள தாவரங்களைப் பற்றிய தகவல்கள் எவ்வளவு தூரம் பயன்படுகின்றன என்பது புரியவந்துஉள்ளது. தங்கள் வாழ்க்கையையே மேம்படுத்த அவை உதவுகின்றன என்ற உண்மை தற்போது அவர்களுக்குத் தெரியவந்துள்ளது.

உலகிலேயே மிகவும் அழகான பெண்!

அது ஓர் அழகான கிராமம்! அந்த கிராமத்தின் பச்சைப் பசேலென்ற வயல்கள், கண்களைக் குளிரவைக்கும் தங்களுடைய வண்ண அழகை வெளிக்காட்டி, நீலவானத்தின் அழகுடன் போட்டியிட்டன. ஒருநாள் மாலை, புள்ளினங்கள் சிறகடித்து வீடு சேரும் நேரத்தில், வயல்களில் வேலை செய்து களைத்த உழவர்களும் வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர்.
 
தங்கள் மனைவிமார்களும், குழந்தைகளும் புடைசூழ மகிழ்ச்சியுடன் அனைவரும் தங்கள் வீடு நோக்கிச் சென்று கொண்டு இருக்கையில், அவர்களில் ஒரு சுட்டிப் பையன் மட்டும் பட்டுப்பூச்சிகளை விடாமல் துரத்தி ஓடிக் கொண்டு இருந்தான்.
பட்டுப்பூச்சிகள் தான் எத்தனை ரகம்? சில சிவப்பாகவும், சில பச்சையாகவும், சில வெண்மையில் சிவப்புப் புள்ளிகளுடனும் எத்தனை அழகாகத் திகழ்கின்றன? மலர்களும் ஒருவகையில் பட்டுப்பூச்சிகள் தான்.. பறக்காதப் பட்டுப்பூச்சிகள்!
 
உழவர்கள் தங்கள் வீடுகளை நோக்கி நடந்த வண்ணமிருந்தனர். வீடுகள் வயல்களிலிருந்து மிகத் தொலைவில் இருந்தன. இருந்தால்என்ன? நெடுந்தொலைவு நடப்பது அவர்களுக்குப் பழகிப்போன ஒன்றுதான்!
 
நம் கவனத்தைச் சற்றே ஒரு சிறுவனை நோக்கித் திருப்புவோமா? பட்டுப்பூச்சிகளைத் துரத்திக் கொண்டே ஓடியவன், தன் தாயிடமிருந்து பிரிந்து வெகுதூரம் சென்று விட்டான். திடீரென பாதையை நோக்கிய சிறுவன் தான் தன்னுடைய தாயிடமிருந்து விலகி வெகுதூரம் வந்துவிட்டதை உணர்ந்தான். "அம்மா! அம்மா!" என்று பெருங்குரலெடுத்து அவன் கூவினான்! அதற்குள் மாலை மங்கிவிட்டது.
 
அந்தச் சிறுவனின் ‘அம்மா! அம்மா!' என்ற தீனக்குரல் காற்றில் எங்கும் எதிரொலித்தது. ஆனால் அவனுடைய தீனக்குரலை யார் செவிகளிலும் விழவில்லை. அவனைச் சுற்றி ஒரே தனிமை!
 
அதிருஷ்டவசமாக எதிர்ப்புறம் ஒரு பருமனான உழவன் வந்து கொண்டிருந்தான். தாயைக் காணாமல் அழுது கொண்டிருந்த சிறுவனை நோக்கி, "ஏன் அழுகிறாய் மகனே?" என்று பரிவுடன் கேட்டான்.
 
"அம்மா! என் அம்மா வேண்டும்!" என்று அந்தச் சிறுவன் கேவிக்கேவி அழுதான்.
 
"உன் அம்மா எப்படி இருப்பாள்?" என்று கேட்டான் அந்த உழவன். "என் அம்மா அழகாயிருப்பாள்!" என்றான் அந்தச் சிறுவன். "கவலைப்படாதே!
 
உன்னை உன் அம்மாவிடம் சேர்க்கிறேன்" என்று சொல்லி விட்டு, அந்தச் சிறுவனைக் கைப்பிடித்து, மற்ற உழவர்கள் வீடு திரும்பி வரும் பாதைக்கு அழைத்துச் சென்றான்.
அப்போது அழகான ஒரு பெண்மணி எதிர்ப்பட, அவளைக்காட்டி, "அதோ பார்! அவள் அழகாயிருக்கிறாள். அதுதானே உன் அம்மா?" என்று உழவன் கேட்டான். "இல்லை! என் அம்மா உலகத்திலேயே மிக அழகான பெண்!" என்றான் சிறுவன். சற்று நேரத்தில், மற்றொரு பெண்மணி எதிரே வர, அவளைக்காட்டி, "அதுதான் உன் அம்மாவா?" என்று அவன் கேட்டான்.
 
"இல்லை! என் அம்மா உலகத்திலேயே மிகவும் அழகான பெண்!" என்று சிறுவன் கூறினான்.
 
எதிரே, பல பெண்மணிகள் ஒருவர் பின் ஒருவராக வந்தனர். அவர்கள் அனைவருமே அழகாயிருந்தும், அவர்களில் யாருமே அவன் தாயில்லை. சிறுவனின் பதற்றமும், கலக்கமும் வினாடிக்கு வினாடி மிகவும் அதிகரித்தது.
 
கடைசியாக, ஒரு பெண்மணி எதிரே வர, அவளைக் கண்டதும் சிறுவன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து, "அதோ என் அம்மா! அதுதான் என் அம்மா! என் அம்மா கிடைத்து விட்டாள்!" என்று கூச்சலிட்டான்.
 
அப்போது, அந்த உழவன் இடிக்குரலில் சிரித்த சிரிப்பின் ஒலி வானத்தை எட்டியது. ஏனெனில், அந்தச் சிறுவனின் தாய் மிக சாதாரணமான தோற்றத்துடன் காணப்பட்டாள். அவளை அழகு என்று சத்தியம் செய்தால்கூட நம்ப முடியாது. போதாக்குறைக்கு, அவளுக்கு ஒரு கண்ணில் பார்வையில்லை. வெயிலில் வேலை செய்ததால், கறுத்த மேனியுடன், மிக சுமாராக இருந்தாள்.
 
"இதுவா உன் அம்மா? இவளையா உலகிலேயே மிக அழகான பெண் என்றாய்?" என்று கேட்டு விட்டு உழவன் மீண்டும் சிரித்தான்.
 
"ஆமாம்! அவள் என் அம்மா! எனக்கு என் அம்மா தான் உலகத்திலேயே மிக அழகான பெண்!" என்று அடித்துக் கூறினான் சிறுவன்.

கடவுளுக்கு ஒரு வாய்ப்பு

ஒருநாள் ரத்தினசாமி தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு அவற்றை விற்க நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அப்போது, சாலையின் ஒரு திருப்பத்தில் வண்டியின் ஒரு சக்கரம் பள்ளத்தில் போய் விழ, வண்டி சாய்ந்து விட்டது. "கடவுளே! இது என்ன சோதனை? எனக்கு உதவி செய்!" என்று அவன் மனமுருக வேண்டினான். கடவுள் உதவிக்கு வரவில்லை. இரண்டாம் முறை, மூன்றாம் முறையென பலமுறை கடவுளை உதவிக்கு அழைத்தும், அவர் வரவில்லை. வேறு யாரும் உதவிக்கு வரவில்லை.
 
கடைசியில், பள்ளத்தில் விழுந்திருந்த சக்கரத்தைத் தானே தூக்கி சாலையில் நகர்த்தி வைக்க முயற்சி செய்தான். என்ன ஆச்சரியம்? தனியாக தன்னால் தூக்க முடியாது என்று அவன் நினைத்திருக்க, எளிதாக சக்கரம் பள்ளத்திலிருந்து எழுந்து விட்டது. அப்போதுதான், அவன் தன் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன் சக்கரத்தைத் தூக்குவதில் உதவி செய்தது தெரிய வந்தது. அவனை வணங்கிய ரத்தினசாமி, "மிகவும் நன்றி ஐயா! கடவுள் செய்யாத உதவியை நீ செய்து விட்டாய்!" என்றான்.
 
"கடவுளே! உதவி செய்!" என்று சொல்லியபடி கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால், கடவுள் எப்படி உதவி செய்வார்? நீயே முயற்சி செய்தால்தான், கடவுள் உனக்கு உதவி செய்வார். அதற்கு நீதான் அவருக்கு, ஒரு வாய்ப்பு தர வேண்டும்!" என்று கூறிவிட்டு அந்த ஆள் தன் வழியே நடந்தான்.
 

சாமர்த்தியசாலி பெண்

சங்கரன் பிறந்து பத்து ஆண்டுகளுக்குப்பின் அந்தக் குடும்பத்தில் சிவன் பிறந்தான். ஆனால் இரண்டாவது பிள்ளை பிறந்த சில ஆண்டுகளிலேயே, சிவனுடைய தாய் நோயுற்று உயிர் நீத்தாள்.
 
சங்கரன் வாலிபனான பிறகு, அவன் தந்தை அவனுக்கு பார்வதி என்ற பெண்ணை மணம் முடித்தார். பார்வதி நல்ல குணவதியாக மட்டுமின்றி, மிகவும் சாமர்த்தியம் கொண்டவளாகவும் இருந்தாள். சிவனை பாசத்துடன் பராமரித்து வந்தாள்.
 
சிவனுடைய படிப்பு முடிந்ததும், அவனுக்கு திருமணம் நடத்திவிட பார்வதி மிகவும் ஆசைப்பட்டாள்.
 
ஒருநாள் அவள் நேரிடையாகவே சிவனிடம் தன் விருப்பத்தை வெளியிட, அவன் வெட்கித் தலைகுனிந்து கொண்டு அண்ணியிடம் தான் ஏற்கெனவே ஒரு பெண்ணின் மீது பிரியம் வைத்திருப்பதாகத் தெரிவித்தான்.

அவள் பெயர் கௌரி என்று கூறினான். அவன் குறிப்பிட்ட பெண் கௌரியை ஏற்கெனவே பார்வதி அறிவாள். இதைக் கேட்டு மகிழ்ந்த பார்வதி சிவனிடம் அந்தப் பெண்ணை சந்தித்து அவனது விருப்பத்தைத் தெரிவிக்கச் சொன்னாள்.
 
அதன்படியே, சிவன் கௌரியை அவள் வீட்டில் சந்தித்து தன் ஆசையைத் தெரிவித்தான். ஏற்கெனவே சிவனை சந்தித்திருந்த அவள், அவன்மீது ஆசை கொண்டிருந்தாள். இப்போது அவனே தன்னைத் தேடி வந்து தன் விருப்பத்தைத் தெரிவித்ததும் நாணமும், மகிழ்ச்சியும் அவளுக்குள் பொங்கி எழுந்தன. ஆனால், உடனே தன் சம்மதத்தைத் தெரிவிக்க விரும்பாமல் உள்ளே சென்றாள்.
 
சற்று நேரத்தில் வெளியே வந்த அவள் புன்னகைத்துக் கொண்டே ஒரு ஜாடியை அவனிடம் கொடுத்தாள். "இதில் எள்ளும், கடுகும் கலந்துள்ளன. இதிலிருந்து எள்ளை மட்டும் பிரித்தெடுத்து நாளைக்குக் கொண்டு வாருங்கள்!" என்றாள். குழம்பிய சிவன் வீட்டிற்குத் திரும்பினான்.
 
தன் அண்ணியிடம் கௌரியின் வீட்டில் நடந்ததைக் கூறிய சிவன், "அவளுக்கு சம்மதம் தான் என்று தோன்றுகிறது. ஆனால் என் புத்திசாலித்தனத்தை சோதிக்க விரும்புகிறாள். இந்த ஜாடியில் கலந்துள்ள எள், கடுகிலிருந்து எள்ளை மட்டும் பிரித்தெடுத்துக் கொண்டு வர வேண்டுமாம்! இந்தக் காரியத்தை என்னால் செய்ய முடியாது!" என்றான் சிவன்.
 
கௌரி மிகவும் கெட்டிக்காரி என்று தெரிந்து கொண்ட பார்வதி, ஜாடியை கொல்லைப்புறம் எடுத்துச் சென்று செடிகளின் இலைகளில் கட்டியிருந்த எறும்புப்புற்றை அப்படியே எடுத்து ஜாடிக்குள் போட்டு வைத்தான்.
 
அடுத்தநாள் எறும்புகள் ஜாடியில் இருந்த கடுகுகள் அனைத்தையும் பொறுக்கிக் கொண்டு சென்று விட்டன.
 
அவை எள் உண்பதில்லையாதலால், எள் மட்டும் ஜாடியில் மிஞ்சியிருந்தது. பார்வதி அந்த ஜாடியை சிவனிடம் தந்து கௌரியிடம் கொடுக்கச் சொன்னாள். தன் அண்ணி அந்த கௌரியை விட கெட்டிக்காரி என்று சிவன் உணர்ந்து கொண்டான்.
 
அதை கௌரியிடம் தந்ததும், கௌரி புன்னகையுடன் அதை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றவள் மீண்டும் காலி ஜாடியுடன் வெளியே வந்தாள். "நாளைக் காலையில் இந்த ஜாடி நிறைய பனித்துளிகளை சேகரித்து வரமுடியுமா?" என்று கேட்டாள்.
 
குழப்பத்துடன் வீடு திரும்பிய சிவனைக் கண்டு பார்வதி, "இந்த முறை என்ன நடந்தது?" என்று கேட்க, அவனும் விளக்கினான்.
 
"கவலைப்படாதே! இதையும் நான் செய்து முடிக்கிறேன்" என்று கூறிய பார்வதி காலி ஜாடியை எடுத்து வைத்துக் கொண்டாள். பிறகு, அவள் கிராமத்து சலவைத் தொழிலாளி ஒருவனிடம் சென்று" நீ எனக்கு ஒரு உதவி செய்! உன்னிடமுள்ள எல்லாத் துணிகளையும் இன்று இரவில் திறந்த வெளியில் கொடிகட்டித் தொங்கவிடு! இரவில் பெய்யும் பனியினால் அவை நனையட்டும். பிறகு, காலையில் துணிகளைப் பிழிந்தெடு! அவற்றில்உள்ள பனித்துளிகளை பாத்திரத்தில் சேகரித்து என்னிடம் எடுத்துவா!" என்றாள். அப்படியே, அவனும் பாத்திரம் நிறைய பனிநீரை நிரப்பிக் கொண்டு வர, அதை ஜாடியில் விட்டு சிவனிடம் கொடுத்தனுப்பினாள்.
 
சிவன் அதை கௌரியிடம் தந்ததும், அவள் விழிகள் வியப்பினால் மலர்ந்தன. ஜாடிக்குள்ளிருந்த பளிங்கு போன்ற தெளிந்த நீரைக் கண்டதும் அது பனித்துளிகள் தான் என்று நிச்சயமாகத் தெரிந்தது. சிவனை நோக்கி ஒரு புன்னகையை வீசி விட்டு, "எனக்கு நூறு தளிர் வெற்றிலைகள் தேவை! அவை புதியவனாக இருக்க வேண்டும். கொடியிலிருந்து கையினாலோ, கத்தரிக்கோலின் உதவி கொண்டோ அவற்றைப் பறிக்கக் கூடாது" என்றாள்.
"இதைக் கேட்டு முணுமுணுத்தவாறே திரும்பிய சிவனைக் கண்டு பார்வதி திடுக்கிட்டாள். அவள் சிவனை நோக்கி, "என்ன? மீண்டும் மிகக் கடினமான சவாலா?" என்று கேட்டாள்.
 
சிவன் மூன்றாவது சோதனையை விளக்க, திடீரென அவளுக்கு ஒரு யோசனை உதயமாகியது. அவளிடம் ஒரு வளர்ப்புக் கிளி இருந்தது. அதை எடுத்துக் கொண்டு வெற்றிலைத் தோட்டத்திற்குச் சென்ற பார்வதி, வெற்றிலைகளைப் பறிக்கச் சொல்லி அதை ஏவி விட்டாள். உடனே, கிளி நூற்றுக்கணக்கான வெற்றிலைகளை மடமடவென்று மிக விரைவாகக் கொத்திப் பறித்தது. அவற்றிலிருந்து, நூறு தளிர் வெற்றிலைகளைப் பொறுக்கியெடுத்து சிவனிடம் தந்தபிறகு, தானும் அவனுடன் கிளம்பினாள்.
 
சிவனுடன், அவனுடைய அண்ணியும் வருவது கண்டு கௌரி திடுக்கிட்டாள். தன்னுடைய கொழுந்தனை அளவிற்கு மீறி சோதித்தற்காக பார்வதி தன்னுடன் சண்டை போட வருகிறாளோ என்று எண்ணினாள். அவ்வாறு பார்வதி தன்னை கோபிப்பதற்கு முன் அவளை சமாதானப் படுத்த விரும்பி அவள் முன்னே ஓடிச் சென்று, "அக்கா! என்னை மன்னித்து விடுங்கள்! விளையாட்டிற்காக உங்கள் கொழுந்தனை மீண்டும் மீண்டும் சோதனை செய்தேன். அவரைத் தவிர வேறு யாரையும் மணப்பதாக இல்லை!" என்று கெஞ்சிய கௌரியை, தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்ட பார்வதி, "கௌரி! அப்படி நீ மாட்டேன் என்று சொன்னாலும், நான் உன்னை விட்டுவிடுவேன் என்றா நினைத்தாய்?" என்றாள்.
 
விரைவிலேயே, சிவன்-கௌரி திருமணம் இனிதே நடைபெற்றது. பார்வதி தனது சாமர்த்தியத்தினால் அனைத்து சோதனைகளிலும் சிவனை வெற்றி பெறச் செய்ததை அனைவரும் பாராட்டினர்.
 

சரியான தீர்ப்பு

 
நகரக் காவலரான சங்குப்பிள்ளை, ஒருநாள் மாலையில் ராஜ்யத்தின் தலைநகரை வலம் வந்து கொண்டிருக்கையில், கடைத் தெருவில் ஒரு இளைஞனை நான்கு நபர்கள் சூழ்ந்து கொண்டு அடிப்பதைப் பார்த்தார். உடனே அவர்களை அதட்டி, மிரட்டிய சங்குப்பிள்ளை, "இவனை ஏன் அடிக்கிறீர்கள்?" என்று கேட்டார்.
 
அதற்கு அவர்கள், "இவன் பரமன் கடையிலிருந்து ஒரு மூட்டை அரிசியைத் திருடிக் கொண்டு சென்றான்" என்றனர்.
 
"அவன் திருடியதாகவே இருக்கட்டும்! ஆனால் அவனை தண்டிக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை. அதனால் திருடனுடன் சேர்த்து உங்களையும் கைது செய்கிறேன்" என்று ஐவரையும் கைது செய்த சங்குப்பிள்ளை, அவர்களை மறுநாள் நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தினார். கடைக்காரரான பரமனும் வரவழைக்கப்பட்டார்.
 
முதலில் திருடிய இளைஞனிடம் நீதிபதி, "உன் பெயர் என்ன?" என்று கேட்டதற்கு "என் பெயர் வீரன்!" என்றான் அவன்! "பரமன் கடையிலிருந்து ஒரு மூட்டை அரிசியைத் திருடியதாக உன்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அது உண்மையா?" என்று நீதிபதி கேட்டார். "நீதிபதி அவர்களே! நான் செய்தது தவறா என்று நீங்களே முடிவு செய்யுங்கள்!
 
பரமன் கடையில் ஒரு வாரம் கூலி வேலை செய்தால் ஒரு மூட்டை அரிசி தருவதாகக் கூறினார். அதற்கு ஒப்புக்கொண்ட நானும், ஒரு வாரம் அவரிடம் வேலை செய்தேன். அதற்குப் பிறகு நான் கூலி கேட்ட போது, பரமன் அவர் வீட்டுக் கிணற்று சுவர்கள் இடிந்திருப்பதாகவும், அவற்றைப் புதிதாகக் கட்டவேண்டும் என்றும் கூறினார்.
முதலில் நான் ஒரு வாரமாகச் செய்த வேலைக்கு ஒரு மூட்டை அரிசி தர வேண்டுமென்றும், அதற்குப் பிறகு அடுத்த வேலை செய்வதாகவும் நான் சொன்னேன். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. அதனால் எனக்குச் சேர வேண்டிய ஒரு மூட்டை அரிசியை நானே எடுத்துக் கொண்டேன். உடனே பரமன் "திருடன்! திருடன்!" என்று கூச்சல்போட, இந்த நால்வரும் என்னைப் பிடித்து அடிக்க ஆரம்பித்தனர்" என்றான்.
 
வீரன் சொன்னதை கேட்ட நீதிபதி பரமனிடம், "அவன் சொன்னது உண்மையா?" என்று கேட்டார்.
 
"அவன் என் கடையிலிருந்து அரிசி மூட்டையைத் திருடியது உண்மை! அதைத்தான் அவனே ஒப்புக்கொண்டு விட்டானே!" என்றான்.
 
"அதை விடு! நீ வாக்களித்தபடி அவனுக்கு ஒரு மூட்டை அரிசியை ஏன் கொடுக்க மறுத்தாய்?" என்று நீதிபதி வினவினார்.
 
"நான் கொடுக்கமாட்டேன் என்று சொல்லவில்லை. கிணற்று வேலை முடித்த பிறகு தருகிறேன் என்றுதான் சொன்னேன்" என்றான் பரமன்.
 
"பரமா! நீ செய்தது தவறுதான்! அதனால் நீ அவனுக்கு கூடுதலாகப் பணம் தர வேண்டும்" என்றார் நீதிபதி.
 
பிறகு வீரனை நோக்கி, "நீ பலவந்தமாக அரிசி மூட்டையை எடுத்தது தவறு! ஆகவே, பரமன் கொடுத்த கிணற்று வேலையை முடித்த பிறகு ஒரு மூட்டை அரிசியையும், பரமனிடமிருந்து கூடுதல் பணமாகப் பத்து பொற்காசுகளும் பெற்றுக் கொள்!" என்றார் நீதிபதி.
 
பிறகு, வீரனைப் பிடித்து அடித்த நால்வரையும் நோக்கி, "பரமன் திருடன், திருடன் என்று கூவியவுடன், நீங்கள் ஓடிப்போய் வீரனைப் பிடித்தது தவறில்லை. ஆனால் அவன் உண்மையாகத் திருடனா என்பது தெரியாமல் அவனை நீங்கள் எப்படி அடிக்கலாம்? சட்டத்தை நீங்களே கையில் எடுத்துக் கொண்டதற்காக, உங்களுக்கு ஒரு வாரம் சிறைதண்டனை அளிக்கிறேன்!" என்றார்.
 
நீதிமன்றத்தில் கூடியிருந்தவர்கள் தீர்ப்பைக் கேட்டு கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
 

திறமை தான் உண்மையான தகுதி

 
கம்போஜ ராஜ்யத்தை ஆண்டு வந்த குமாரவர்மன் மிகவும் கர்வமுள்ளவன். வாள்வலிமையிலும், ராஜதந்திரத்திலும், ஆயகலைகள் அறுபத்து நான்கிலும் தானே வல்லவன் என்று இறுமாப்புக் கொண்டிருந்தான்.
 
ஒருநாள், அவன் தனது ராணி கல்பனாவிடம் அதைப்பற்றி பெருமையுடன் பேசிக் கொண்டிருக்கையில் ராணி நகைச்சுவையாக, "கம்போஜ ராஜ்யத்தை ஆளும் பாக்கியம் உங்களுக்கு பிறப்புரிமையினால் கிடைத்தது. உங்களுடைய வாள் வலிமையினால் அல்லது தகுதியினால் ராஜ்யத்தைப் பெறவில்லை. அப்படியிருக்க, உங்களுடைய வலிமையைப் பற்றி நீங்கள் பேசுவது வெறும் தற்புகழ்ச்சியே!" என்றாள். ராணி கேலியாகத்தான் கூறினாள் எனினும், அவளுடைய சொற்கள் குமாரவர்மனுக்கு சுருக்கென தைத்தது.
 
உடனே, குமாரவர்மன் தன் ராஜ்யத்தில் பல போட்டிகளை அறிவித்து, பலரையும் பங்கேற்குமாறு தண்டோரா போடச் செய்தான். உடனே, ராஜ்யத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல இளைஞர்கள், வீரர்கள், அறிஞர்கள் திரண்டு வந்தனர். தினந்தோறும் வாட்போர், மல்யுத்தம், பட்டிமன்றம் ஆகியவை நடக்க, ஒவ்வொரு போட்டியிலும் பலர் கலந்து கொண்டனர்.
 
போட்டிகள் முடிவுற்றபின், பரிசளிக்கும் விழா வந்தது. அன்று தன்னிடம் கிண்டலாகப் பேசிய ராணியையும் சபைக்கு வரவழைத்த குமாரவர்மன் நடுவர்களை நோக்கி, "முதலில் வாட்போரில் முதலாவதாக வந்தவனை அழையுங்கள்!" என்றான்.
அதன்படியே ராமராஜன் என்ற வாலிபன் அழைக்கப்பட்டான். உடனே மன்னன், "இவன் என்னுடன் போட்டியிட்டு வெற்றி பெறட்டும், பார்க்கலாம்!" என்று சவால் விட்டு விட்டு ராமராஜனைப் போட்டிக்கு அழைத்தான். நீண்ட நேரப் போருக்குப் பின், ராமராஜன் மின்னலெனப் பாய்ந்து மன்னரின் வாளைத் தன் வாளினால் தட்ட, மன்னரது வாள் கீழே விழுந்தது. சபையோர் அனைவரும் வாயடைத்துப் போக, மன்னருக்கு அவமானம் தாங்கவில்லை.
 
உடனே நடுவர்கள் ராமராஜன் முறையாக போட்டியிடவில்லை என்று விளக்கம் தந்து, மீண்டும் போட்டியிடக் கூறினர். மறுமுறை போட்டி தொடங்குமுன் நடுவர்கள் ராமராஜனை எச்சரிக்கை செய்ய, ராமராஜன் வேண்டுமென்றே தோற்றுப் போனான். முதற்பரிசு மன்னருக்கே அளிக்கப்பட்டது.
 
அதன்பிறகு நடந்த ஒவ்வொரு போட்டியிலும் நடுவர்களின் முன்னேற்பாட்டின்படி, மன்னனுக்கே பரிசு கிடைத்தது. நாட்கள் சென்றன. ஒருநாள் திடீரென ராஜ்யத்தில் புரட்சி ஏற்பட்டது. முதன்மந்திரி பைரவர் நயவஞ்சகமாக ஆட்சியைக் கைப்பற்றி, மன்னனையும், அவரது ராணியையும் சிறையில் இட உத்தரவிட்டார். சில நண்பர்களின் உதவியினால், மன்னனும் ராணியும் தலைநகரை விட்டு தலை மறைவாயினர்.
 
ஒரு சிறு கிராமத்தில் குமாரவர்மன் மாறு வேடத்தில் தன் ராணியுடன் தங்கினார். கிராமத்து மக்களுடன் பழகும் போது அவர்கள் பலவிதத்திலும் சிரமப்படுவதைப் பார்த்து, தன் ஆட்சி நிர்வாகம் சீராக நடைபெறவில்லை என்பதை உணர்ந்தார்.
 
ஒருநாள், தலைநகரில் சென்ற ஆண்டைப் போலவே, இந்த ஆண்டுm போட்டிகள் நடைபெறும் என்றும், புதிய மன்னர் பைரவர் பரிசுகள் வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
"போட்டிகளில் கலந்து கொள்வதால் எந்தப் பயனும் இல்லை. சென்ற ஆண்டைப் போலவே, பரிசுகள் அனைத்தும் மன்னருக்கேப் போகும்!" என்று கிராமத்தினர் பேசிக் கொண்டதைக் கேட்டபிறகே, குமாரவர்மனுக்குத் தனக்கு எல்லாப் பரிசுகளும் சென்ற ஆண்டு கிடைத்ததன் உண்மை விளங்கியது. ஆயினும் போட்டிகளில் கலந்து கொண்டு தன் திறமையைக் காட்ட முடிவு செய்தார். அதனால் மாறுவேடத்திலேயே, குமாரவர்மன் தலைநகரை அடைந்தார்.
 
அந்த ஆண்டு, வெகு சிலரே போட்டியில் பங்கேற்றனர். குமாரவர்மன் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றார். பைரவரும் குமாரவர்மனைப் போலவே, தானே அனைத்துப் பரிசுகளையும் பெற விரும்பி குமாரவர்மனைத் தன்னுடன் போட்டியிட அழைத்தார். அவரை யாரோ ஒரு கிராமத்து ஆள் என்று கருதிய நடுவர்கள்போட்டியில் தோற்றுவிடுமாறு எச்சரிக்கை செய்தனர். வேறு வழிஇன்றி போட்டிகளில் பைரவரிடம் வேண்டுமென்றே தோற்றுப்போய், பைரவருக்கே எல்லாப்பரிசுகளும் கி டைக்கும்படிச் செய்துவிட்டு, குமாரவர்மன் கிராமம் திரும்பினார்.
 
அங்கு, பைரவரின் கர்வம் தலை தூக்கியது. நிர்வாகம் சீர்குலைந்தது. பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். தன்னுடைய தவறுகளை உணர்ந்து திருந்திய குமாரவர்மன், பைரவரின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தீர்மானித்தார். அன்று முதல் கிராமம், கிராமமாகச் சென்று பைரவரின் ஆட்சியின் சீர்கேடுகளை விளக்கி அவருக்கு எதிராகப் போரிட படை திரட்டினார்.
 
தான் தேர்ந்தெடுத்த இளைஞர்களுக்குள் போட்டிகள் நடத்தி, அவற்றில் தானும் பங்கேற்று, போட்டிகளை வென்று, படைத் தலைவனாக மற்றவர்களால் தேர்வு செய்யப்பட்டார். அந்த ஆண்டும் பைரவர் போட்டிகளைப் பற்றி அறிக்கை வெளியிட, குமாரவர்மன் தனது படையுடன் தலைநகருக்குச் சென்றார். அனைத்துப் போட்டிகளிலும் குமாரவர்மன் வெற்றிபெற, பைரவர் அவரைத் தன்னுடன் வாட்போருக்கு அழைத்தார்.
நடுவர்கள் முன்பு போலவே குமாரவர்மனை எச்சரித்தனர். ஆனால் அதைப் பொருட்படுத்தாத குமாரவர்மன், ஒரே வீச்சில் பைரவரின் கையிலிருந்த வாளை வீழ்த்தினார். பிறகு தனது வாளை பைரவரின் மார்பிற்கு நேராகப் பிடித்தவாறு, "சபையோர்களே! இந்த பைரவன் தனது மன்னனுக்கு எதிராக சதி செய்து ஆட்சியைப் பிடித்தவன்! மன்னனையே கொல்ல நினைத்த துரோகி! ஆனால் பாக்கியவசமாக மன்னன் தப்பி விட்டான். ஆட்சியைப் பிடித்த பிறகும், இவன் சீராக ஆட்சி செய்யாமல் அராஜகம் நிலவும்படிச் செய்தவன்! இனி இவன் ஆட்சிபுரிய தகுதியற்றவன்! அந்தத் தகுதி இப்போது என்னிடம் உள்ளது. நான்தான் குமாரவர்மன், உங்கள் மன்னன்!" என்று கூறிவிட்டு, தன் மாறுவேடத்தைக் களைந்தார்.
 
தங்களது மன்னனைக் கண்டதும், உற்சாக மிகுதியினால் சபையோர் ஆரவாரம் செய்தனர். குமாரவர்மன் மீண்டும் ஆட்சிபீடத்தில் அமர, பைரவர் சிறையிலிடப்பட்டார்.
 
அன்றிரவு, ராணி குமாரவர்மனிடம், "இப்போது நீங்கள் செய்ததை சென்ற ஆண்டே செய்திருக்கலாமே! அப்போதே நீங்கள்தான் மன்னன் என்று உங்களை அனைவரும் அங்கீகரித்திருப்பார்கள்!" என்றாள்.
 
"பிறப்புரிமையினால் மட்டுமே ஒருவன் மன்னனாவதில் பெருமையில்லை. தன் தகுதியினால் மன்னனாக வேண்டும் என்றாய். நீ சொன்னதுபோல் என்னுடைய வாள் வலிமையினால் ராஜ்யத்தைக் கைப்பற்ற நினைத்து படை திரட்டினேன். என்னை அவ்வாறு வீரமுள்ளவனாக மாற்றிய உனக்கு நன்றி!" என்றான்.
 

நூற்றுக்கு ஒன்று குறைவு!

சந்தன், நந்தன் இருவரும் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்தனர். சந்தன் ஒரு பணக்கார வியாபாரி. அவர் வசித்தது ஒரு பெரிய வீட்டில்! ஆனால் நந்தன் கூலி வேலை செய்து பிழைப்பவன். அவன் வசித்தது ஒரு குடிசையில்! இருவரும் எதிர் எதிரான துருவங்களாயிருந்தும், நண்பர்களாக இருந்தனர். அவர்களைப் போலவே, சந்தனின் மனைவி ஈஸ்வரியும், நந்தனின் மனைவி சாருமதியும் தோழிகளாக இருந்தனர்.
நந்தன் அடிக்கடி தன் வீட்டிற்கு யாராவது விருந்தாளிகளை அழைத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அறுசுவை விருந்து படைக்கத் தேவையான பண வசதி இல்லாமலிருந்தும், இருப்பதைக் கொண்டு எளிய, சுவையான உணவுகளை சமைத்து விருந்தாளிகளுக்கு சாருமதி பரிமாறி வந்தாள்.
அவ்வாறு விருந்தாளிகள் நந்தன் வீட்டில் இருக்கும்போது, அங்கு ஒரே குதூகலமும், மகிழ்ச்சியும் நிரம்பிய குரல்கள் கேட்கும். கூலி வேலை செய்து பிழைக்கும் நந்தனால் எப்படி விருந்தினர்களை அடிக்கடி வீட்டிற்கு அழைத்து வர முடிகிறது என சந்தனின் மனைவி ஈஸ்வரி குழம்பினாள். தன்னுடைய சந்தேகத்திற்கு பதில் காண ஈஸ்வரி பெரிதும் ஆர்வம் கொண்டாள். ஆனால் தன்னுடைய சந்தேகத்தை நேரிடையாக சாருமதியிடம் கேட்க அவளுக்கு கூச்சமாக இருந்தது. இருந்தாலும் ஆர்வத்தை அடக்க முடியாமல் ஒருநாள் கேட்டு விட்டாள்.

அதற்கு சாருமதி புன்னகையுடன், "நாங்கள் குறைந்த அளவில் சம்பாதிப்பதால் எதிர்காலத்திற்காக எதையும் சேமிப்பதில்லை. கிடைக்கும் பணத்தை அவ்வப்போதே செலவு செய்து விடுகிறோம். நாங்களும் சாப்பிட்டு, விருந்தினர்களுக்கும் படைக்கும் அளவிற்கு என் கணவரால் எப்படி வருமானம் ஈட்ட முடிகிறது என்பது அவருக்குத்தான் தெரியும்!" என்றாள்.
அன்றிரவு இதைப்பற்றி ஈஸ்வரி தன் கணவன் சந்தனிடம் கூறினாள். அதற்கு அவர், "அவர்களுக்கு தொண்ணூற்று ஒன்பதின் மகிமை தெரியாது. அதனால்தான் நிம்மதியுடனும், மகிழ்ச்சியாகவும் வாழ்க்கை நடத்துகின்றனர். ஒருமுறை அவர்களுக்கு அந்த அனுபவம் கிடைத்து விட்டால், அதற்குப் பிறகு அவர்களுடைய வாழ்க்கையில் நிம்மதியும், மகிழ்ச்சியும் பறந்துவிடும்" என்றார்.
"அது என்ன தொண்ணூற்று ஒன்பது?" என்று ஈஸ்வரி ஆவலுடன் கேட்டாள். "நூற்றுக்கு ஒன்று குறைவு! அவ்வளவுதான் இப்போது என்னால் சொல்ல முடியும். ஆனால் அது அவர்களை எப்படி ஆட்டி வைக்கப் போகிறது என்று நீ பொறுத்திருந்து பார்!" என்று புதிர் போட்டார் சந்தன்.
 
சில நாள்கள் சென்றன. பக்கத்து வீட்டில் சில மாறுதல்கள் ஏற்பட்டன. இரவு நேரங்களில், வீட்டின் கொல்லைப்புறத்தில் நந்தனும், சாருமதியும் மும்முரமாக பாய் பின்னுவதைப் பார்த்து வியந்தாள். விருந்தாளிகள் அவர்கள் வீட்டிற்கு வருவது நின்று விட்டது. சில நாள்களில் நந்தன் கூலி வேலை செய்து விட்டு விரைவாகவே திரும்பி வந்து பாய் முடைவதில் ஈடுபடுவதைப் பார்த்தாள்.
பக்கத்து வீட்டில் கண்கூடாக நிகழ்ந்த மாறுதல்கள் ஈஸ்வரியைக் கவலைப்படச் செய்தன. அவளுக்கு வருத்தமளித்த மற்றொரு விஷயம் இப்போதெல்லாம் சாருமதி தன்னுடன் மதிய நேரத்தில் அரட்டைஅடிக்க வருவதை நிறுத்தி விட்டதுதான்! தன் ஆர்வத்தை அடக்கவே முடியாமல், ஒருநாள் மதியநேரம் ஈஸ்வரி தானாகவே சாருமதியின் வீட்டிற்கு வலியச் சென்றாள்.
தனியாகப் பாய் முடைந்து கொண்டிந்த சாருமதி, ஈஸ்வரியைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தாள். அதற்கு மேல் பொறுக்க முடியாத ஈஸ்வரி, "சாருமதி! என்மீது உனக்குக் கோபமா? ஏன் முன் போல் என்னுடன் பேச வருவதேயில்லை? உன் கணவருக்குக் கூலிவேலை கிடைப்பது இல்லையா? அதனால்தான் இருவரும் பாய் முடைகிறீர்களா?" என்று கேட்டாள்.
தலை நிமிர்ந்து பார்த்த சாருமதி, "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை!" என்றாள். ஈஸ்வரிக்கு சாருமதி எதையோ மறைக்கிறாள் என்று தோன்றியது. "உண்மையைச் சொல்! உனக்கு ஏதாவது பணப்பற்றாக்குறை என்றால், நான் உதவி செய்யத் தயாராக இருக்கிறேன் சொல்" என்றாள்.
ஈஸ்வரியின் வார்த்தைகளைக் கேட்டு நேகிழ்ந்து போன சாருமதி, "அப்படியில்லை! நாங்கள் எங்கள் வருமானத்தைப் பெருக்குவதற்காக பாய் முடையும் வேலைச் செய்து கொண்டிருக்கிறோம்" என்றாள்.
"ஏன்? திடீரென ஏன் பணம் அதிகமாகத் தேவைப்படுகிறது?" என்று ஈஸ்வரி கேட்டாள். சிறிது நேரத்திற்குப்பின் சாருமதி "உன்னிடம் உண்மையைச் சொல்கிறேன். ஆனால் நீ உன் கணவரிடம் சொல்லக் கூடாது!" என்றாள்.
"சரி!" என்றாள் ஈஸ்வரி. "சில நாள்களுக்கு முன் நடந்த சம்பவம் இது! ஒருநாள் இரவு வேலையில் இருந்து திரும்பிய கணவர் குடிசை வாயிலில் ஒரு மூட்டை கிடப்பதைப் பார்த்தார். அது யாருடையது, எப்படி நமது குடிசைக்கு வந்தது என்று வியந்த அவர், அதைத் தூக்கிக் கொண்டு உள்ளே வருகையில் அதனுள் நாணயங்கள் குலுங்கும் ஒலியைக் கேட்டார். "மூட்டையைப் பிரித்துப் பார்த்தால் உள்ளே வெள்ளி நாணயங்கள் இருந்தன. அவற்றைத் தரையில் கொட்டிய என் கணவர், ஒவ்வொன்றாக எண்ணினார். மொத்தம் தொண்ணூற்று ஒன்பது நாணயங்கள் இருந்தன. "நான் எண்ணியதில் ஏதோ தவறு! மறுபடியும் எண்ணுகிறேன்!" என்று கூறிய என் கணவர் மீண்டும் நாணயங்களை எண்ணினார்.
நூற்றுக்கு ஒன்று குறைவாகவே இருந்தது. பின்னர், நானும் எண்ணிப்பார்த்தேன். அதே எண்ணிக்கை தான்!" "ஏன் நூற்றுக்கு ஒன்று குறைவாக இருக்கிறது?" என்று கேட்ட என் கணவருக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. திடீரென ஏதோ தோன்றியவராக அவர் "இதை இப்போது நூறாக்கி விடுகிறேன்" என்று சொல்லிவிட்டுத் தான் சம்பாதித்து வந்த பணத்திலிருந்து ஒரு வெள்ளி நாணயத்தை எடுத்து அதனுடன் சேர்த்து எண்ணிக்கையை நூறாக்கினார். பிறகு அந்த மூட்டையை கட்டி பத்திரமாகப் பதுக்கி வைத்தார்."
சற்றே நிறுத்திய சாருமதி தொடர்ந்து, "அன்று எங்கள் செலவுகளில் ஒரு வெள்ளிக்காசு குறைத்துக் கொண்டோம். அன்று முதல், திடீரென எங்களுக்குப் பணம் சேமிக்கும் ஆர்வம் உண்டாகி விட்டது. அதனால் உபரி வருமானத்திற்காகப் பாய் முடைய ஆரம்பித்தோம். அதில் கிடைக்கும் வருமானம் அனைத்தையும் அந்த மூட்டைக்குள்ளிட்டு பணம் சேமிக்கத் தொடங்கினோம்" என்றாள்.
"நல்ல காரியம் தான்! ஆனால் உங்கள் வீட்டிற்கு அடிக்கடி வரும் விருந்தாளிகள் என்ன ஆனார்கள்?" என்று ஈஸ்வரி கேட்டாள்.
"அதுவா? நாங்கள் கிடைக்கும் நேரத்தில் பாய் முடைய ஆரம்பித்து விட்டதால், முன்போல் விருந்து சமைக்க நேரம் கிடைக்கவில்லை. அதனால் விருந்தினர்களை அழைப்பதுஇல்லை" என்றாள் சாருமதி.
தொண்ணூற்று ஒன்பதின் மகத்துவத்தைப் புரிந்து கொண்ட ஈஸ்வரி, தன் வீட்டிற்குத் திரும்பினாள். பக்கத்து வீட்டில் நிகழ்ந்த மாறுதல்களை அவளுடைய கணவரும் கவனித்தார் என்றாலும் அவளிடம் அதைப்பற்றி ஒன்றும் பேசவில்லை. ஆனால் மாறுதல்களை நிகழ்த்திய தொண்ணூற்று ஒன்பதின் மகிமை அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அந்த மூட்டையை வைத்தது இவர் தானே!

Flag Counter