Showing posts with label குறள் கதை. Show all posts
Showing posts with label குறள் கதை. Show all posts

நன்றியுள்ள நண்பன்

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
                                 அன்றே மறப்பது நன்று.


விளக்கம் :ஒருவர் நமக்கு செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் செய்த தீமையை அக்கணமே மறந்து விடுவது நல்லது.

மருத நாட்டு இளவரசன் வீரசிம்மனும், ஏழைக் குடும்பத்தில் பிறந்த கலைதாசனும் ஒரே குருகுலத்தில் பயின்ற போது இணைபிரியா நண்பர்களாக இருந்தனர். வீரசிம்மன் மன்னனாக முடிசூடியதும், பழைப நட்பை மறக்காமல் கவிதைகள் புனைவதில் வல்லவனான கலைதாசனை தனது ஆஸ்தான கவிஞனாக்கினான். அன்று முதல் ஏழ்மை நிலையிலிருந்து விடுபட்டு வசதியான வாழ்க்கையை கலைதாசன் வாழ்ந்தான்.
அரசவையில் இடம் கிடைத்தாலும், கடவுள் அளித்த கவிதை எழுதும் திறமையை கடவுளுக்காக மட்டுமே பயன்படுத்துவதில் உறுதியாக இருந்த கலைதாசன், கடவுள் துதிப் பாடல்கள் எழுதுவதில் மட்டுமே ஆர்வம் காட்டினான்.

கலைதாசன் மீது பொறாமை கொண்டிருந்த மற்ற அரசவைக் கவிஞர்கள் இதனை சாதகமாக்கிக் கொண்டு, அவனைப் பற்றி மன்னனிடம் தவறாக சொல்லிக் கொடுத்தனர். அதனால் வீரசிம்மன் மனம் சஞ்சலமடைந்தது. ஒரு நாள்  கலைதாசனை அழைத்த வீரசிம்மன், தன்னைப் பற்றி புகழ்ந்து கவிதை பாடுமாறு கேட்டான். ஆனால் தான் கடவுளைத் தவிர வேறு யாரையும் புகழ்ந்து பாடுவதில்லை என கலைதாசன் மறுத்து விட்டான். ஏற்கனவே சஞ்சலத்தில் இருந்த வீரசிம்மன் இப்போது கடும் கோபம் கொண்டு கலைதாசனை பதவியிலிருந்து நீக்கியதோடு, அவனை நாடு கடத்தி காட்டில் வாழும்படி உத்தரவிட்டான்.

சில மாதங்கள் கழித்து காட்டுக்கு வேட்டையாடச் சென்ற வீரசிம்மன், பாதை மாறிச் சென்று வழி தெரியாமல் காட்டுக்குள் திண்டாடினான். அப்போது சூறைக் காற்று வீசியதால் மரம் ஒன்று முறிந்து அவன் மீது சாய்ந்தது. பலத்த காயங்களோடு மரத்திறன் அடியில் தவித்துக்கொண்டிருந்தான். காட்டில் வசித்து வந்த கலைதாசன் அவ்வழியே செல்லும் போது வீரசிம்மனைப் பார்த்து அவனைக் காப்பாற்றி தன் குடிசைக்கு தூக்கிச் சென்று சிகிச்சை அளித்தான்.

கலைதாசனின் பராமரிப்பால் உடல் நலம் தேறிய வீரசிம்மன் கண்ணீர் மல்க, " நண்பா, உனக்கு தீங்கிழைத்த போதும் நீ என் மேல் இவ்வளவு பரிவு காட்டுகிறாயே.. என் மீது கோபம் இல்லையா?" எனக் கேட்டான்.
"அரசே, ஏழையாய் இருந்த என்னை ஆஸ்தானக் கவிஞனாக்கி நல்வாழ்வு அளித்தீர்கள். அரசருடைய கட்டளையை ஏற்காதவன் தண்டனைக்கு உரியவனாவான். அதன் அடிப்படையில் நீங்கள் செய்தது தீங்கல்ல. ஆகவே தான் நீங்கள் அளித்த தண்டனையை உடனே மறந்து விட்டேன். நீங்கள் எனக்கு செய்த நன்மையை மட்டுமே நினைவில் வைத்துள்ளேன்" என கலைதாசன் பதிலளித்தான்.

இதைக் கேட்டு தன் செயலுக்காக வருந்திய வீரசிம்மன், " நண்பா! உன்னுடைய தண்டனையை இந்த வினாடியே ரத்து செய்கிறேன். உடனே அரண்மனைக்கு திரும்பு" எனக் கூறி கலைதாசனை கட்டியணைத்துக் கொண்டான்.

தீர விசாரிப்பதே மெய்!

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. 


விளக்கம்: செவிகளால் கேட்பதை அவசரப்பட்டு நம்பி செயற்படாமல் தேனே நேரில் கண்டு, தீர யோசித்து, விசாரித்து உண்மையை உணர்வது தான் அறிவுடைமையாகும்.

அன்று சனிக்கிழமை. மதியம் பள்ளி விடுமுறையாக இருந்ததால், மணியும் கிட்டுவும் ஆற்றங்கரைக்கு விளையாடச் சென்றனர். தங்களுக்குள் யார் சிறப்பாக நீச்சல் அடிப்பார்கள் என்ற வாக்குவாதம் அவர்களுக்குள் ஏற்பட, "ஆற்றில் நீர் ஓடும் திசையிலேயே நீந்திச் சென்று தொலைவில் இருக்கும் பிள்ளையார் கோயிலை அடைகிறார்களோ, அவர்களே போட்டியில் வெற்றி பெற்றவர்கள்" என இருவருக்குள் பேசி முடிவு செய்து கொண்டனர்.

உடைகளை ஓரிடத்தில் வைத்து விட்டு இருவரும் ஆற்றில் குதித்து, நீரோட்டம் உள்ள திசையிலேயே நீந்தினர். கிட்டுவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் அய்யாவு, இக்காட்சியைக் கண்டார். ஆற்றில் இருவரும் அடித்துச் செல்வதாக தவறாக நினைத்துக் கொண்டு உடனே கிட்டு மற்றும் மணியின் வீட்டிற்கு சென்று, இருவரும் ஆற்றில் அடித்துச் செல்வதாக தகவல் கொடுத்து விட்டார். உடனே அலறித் துடித்த மணி மற்றும் கிட்டுவின் பெற்றோர், ஆற்றங்கரைக்கு ஓடினர்.

இதற்குள் தகவல் ஊர் முழுவதும் பரவி விட்டதால், ஆற்றங்கரையில் ஏராளமானோர் கூடி விட்டனர். உடைகள், பாடபுத்தகங்கள் அங்கு கிடந்ததால், இருவரும் ஆற்றில் அடித்துச் சென்று விட்டதாக அய்யவு கூறியதை ஊர் மக்கள் முழுவதும் நம்பினர். இருவரும் ஆற்றில் எங்கும் தென் படாததால் சிலர் ஆற்றில் குதித்து உடல்களைத் தேர ஆரம்பித்தனர். இதற்குள் பிள்ளையார் கோயிலை அடைந்த கிட்டுவும், மணியும் போட்டியை முடித்துக் கொண்டு சற்று தொலைவில் உள்ள கரைப் பகுதிக்கு திரும்பினர்.

தங்கள் உடைகள் இருக்கும் பகுதியில் ஏராளமானோர் நிற்பதைக் கண்டு மிரண்ட இருவரும், யாருக்கும் தெரியாமல் தங்கள் உடைகளை எடுக்கச் சென்றனர். அதற்குள் மணி மற்றும் கிட்டுவை அடையளாங்கண்ட சிலர் கூச்சலிட, உண்மை அப்போது தான் எல்லோருக்கும் தெரிந்தது. ஆராயாமல் ஒருவர் கிளப்பிய வதந்தியால் ஏற்பட்ட பதட்டம் தணிவதற்கு சில நாட்கள் ஆயின. அன்று முதல் மணியையும், கிட்டுவையும் அவர்களது பெற்றோர் ஆற்றங்கரைக்கு விளையாட அனுப்புவதில்லை. உண்மையை உணராமல் அவசரப்பட்டு ஒருவர் சொல்வதை அப்படியே நம்பிய மக்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களைப் பார்த்தீர்களா!

அவசரத்தால் விளைந்த ஆபத்து

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
                           எண்ணுவம் என்பது இழுக்கு.


விளக்கம்:
எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன் யோசித்துத் திட்டமிட்டு செயல்பட வேண்டும். திட்டமிடாமல் செயல்படுவது பெரும் தவறு.
கிராமத்தில் தன் தாயுடன் எளிய வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த இளைஞன் சுதாகருக்கு வளைகுடா நடுகளில் சென்று பணியாற்றி பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. கிராமத்தில் ஓரிரு நண்பர்கள் தந்த தகவலின் படி, பக்கத்து நகரத்தில் உள்ள நிறுவனன் ஒன்றில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆள் சேர்க்கும் பணி நடைபெறுவதை அறிந்து, உடனே அந்த நிறுவனத்தினரை சென்று சந்தித்தான்.

வளைகுடா நாடுகளில் சிரமமின்றி சிறிது நேரமே வேலை செய்து விட்டு அதிகம் சம்பாதிக்கலாம் என்றும்,  விமானச் செலவு, விசா செலவு, நிறுவனத்துக்கு கமிஷன் என மொத்தமாக ஒரு தொகையை கட்டுவிட்டால் உடனே வெளிநாடு சென்றுவிடலாம் என்று அவர்கள் கூறியதைக் கேட்டு, பல கனவுகளுடன் சுதாகர் வீடு திரும்பினான்.

சுதாகர் கூறியவற்றைக் கேட்ட அவனது அம்மா, "முன் பின் தெரியாத அயல் நாட்டில் யோரோ ஒருவர் வேலை தருகிறேன் என்று சொன்னால் உடனே ஒப்புக்கொள்ளக் கூடாது. அந்த வேலை எப்படிப்பட்டது, உண்மையில் சம்பளம் எவ்வளவு, அந்த நிறுவனத்தை நம்பலாமா என்று எல்லாவற்றையும் தீர விசாரித்து விட்டு செயலில் இறங்கு" என அறிவுரை கூறினாள். ஆனால் சுதாகர் அதைக் கேட்கவில்லை. யாரிடமும் கலந்தாலோசிக்காமல் கடன் வாங்கி, பாத்திர பண்டங்களை விற்று அந்த நிறுவனத்துக்கு பணம் செலுத்தினான்.

சொன்னபடியே அவனை விமானத்தில் ஏற்றி விட்டனர். பல கனவுகளுடன் வலைகுடா நாட்டு விமான நிலையம் சென்றான். ஆனால் சுதாகரையும், அவனுடன் வேலைக்கு சென்ற மேலும் சிலரையும் பரிசோதித்த அதிகாரிகள், போலி விசாவில் அவர்கள் வந்திருப்பதாகக் கூறி கைது செய்தனர். விசாரணையின் முடிவில், உடனே அவர்களை தாய்நாடு திரும்பும் படி உத்தரவிட்டனர்.

ஆனால் கையில் பணம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு பல பேரிடம் உதவி பெற்று எப்படியோ நாடு திரும்பினான் சுதாகர்.  யாரையும் கலந்தாலோசிக்காமல் அவசரப்பட்டு எடுத்த முடிவால் பணம், மரியாதையை இழந்து, கடனை அடைக்க முடியாமல் கிராமத்தில் மிகுந்த சிரமத்துடன் வாழ்க்கையை ஓட்டினான்.


பேராசையால் பொய் பேசியதன் விளைவு!

தன் நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்
                               தன் நெஞ்சே தன்னைச் சுடும்.


விளக்கம்: மனமறிந்து பொய் பேசுவது தவறு. அப்படி பொய் பேசுபவனது மனசாட்சி அவனது வாழ்நாள் முழுதும் வாட்டி வதைக்கும்.

முனுசாமி வாடகை டாக்ஸி ஓட்டுபவன். குடும்பத்தை சிரமப்பட்டு நடத்தி வந்தான். வீட்டில் கலர் டிவி வாங்கித் தருமாறு அவன் மனைவி நச்சரித்து வந்தாள். ஆனால் போதுமான வருமானம் இல்லாததால், முனுசாமியால் டிவி வாங்க முடியவில்லை.

ஒருநாள் அவனது வண்டியில் பயணி ஒருவர் பதட்டத்துடன் ஏறினார். வண்டியை விரைவாக ஓட்டச் சொல்லி அவசரப்படுத்தியவர், வீடு வந்ததும் பணத்தைக் கொடுத்து விட்டு அவசரமாக இறங்கி உள்ளே சென்று விட்டார். சிறிது தூரம் சென்றதும் தேனீர் குடிப்பதற்காக ஓரிடத்தில் வண்டியை நிறுத்திய முனுசாமி, காருக்குள் பை ஒன்று இருப்பதைப் பார்த்தான்.


அது சற்று முன் அவசரமாக இறங்கிய பயணியின் பை என்பதை அறிந்து கொண்ட முனுசாமி, பைக்குள் சில மருந்துகளும்,  ரூபாய் நோட்டுக் கட்டு ஒன்றும் இருப்பதைப் பார்த்து, டிவி வாங்குவதற்கு பணம் கிடைத்து விட்டதாக எண்ணி மகிழ்ந்தான். உடனே அந்தப் பையை சீட்டுக்கு அடியில் மறைத்து வைத்தான்.
அடுத்த ஐந்து நிமிடத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபன், "எங்கப்பா, இந்த வண்டியில தான் வந்தார். வண்டியில இருந்து இறங்கியதும், ஒரு கருப்பு கலர் பையை காணவில்லை. அந்தப் பை ரொம்ப முக்கியமானது. வண்டியில் கொஞ்சம் பாருங்களேன்" என அவசரமாக கெஞ்சினான்.

ஆனால் பை ஏதும் இல்லை என சபொய் சொல்லி அந்த வாலிபனை திருப்பி அனுப்பிய முனுசாமி, உடனடியாக வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினான். ஆனால் தந்தை, மகன் இருவரின் பதட்டத்தைப் பார்க்கும் போது, அந்தப் பையில் இருந்த மருந்துகள் மிக முக்கியமானதாக இருக்கும் என்பதை உணர்ந்தான் முனுசாமி.

உடனே வண்டியைத் திருப்பி அந்தப் பெரியவர் இறங்கிய வீட்டுக்கு பையை எடுத்துச் சென்றான். அங்கு அந்தப் பெரியவரின் மனைவி இறந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான். "சரியான நேரத்துல மருந்தை எடுத்துட்டு வந்திருந்தா அவங்கள பிழைக்க வச்சிருக்கலாம்" என்று அந்தப் பெரியவர் மகனிடன் டாக்டர் வருத்தத்துடன் கூறுவதைக் கேட்டு நிலைகுலைந்தான்.

ஒரு நிமிடம் பேராசைப்பட்டதால், ஓர் உயிரிழப்புக்கு காரணமாகி விட்டோமே என துடிதுடித்த முனுசாமியின் நிம்மதி, அன்று முதல் நிரந்தரமாக சீர்குலைந்தது.

காலத்தால் செய்த உதவி

காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
                                      ஞாலத்தின் மாணப் பெரிது


விளக்கம் : மிகவும் தேவைப்படும் நேரத்தில் ஒருவருக்கு செய்யப்படும் உதவி சிறிதாக இருந்தாலும், அது உலகத்தை விடப் பெரிதாக மதிக்கப்படும்.

மகேந்திரன் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் பெரிய அதிகாரியாகப் பணிபுரியும் இளைஞன். அந்நகரத்தில் முக்கிய பிரமுகராகவும் மதிக்கப்ப்டுபவன். அந்நகரத்துக்கு அருகிலிருக்கும் நல்லூர் கிராமத்துக்கு ஆண்டுதோறும் சென்று, ஜீவானந்தம் எனும் முதியவரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அங்கு செல்லும் போதெல்லாம் அவருக்கு பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து, வணங்கி விட்டு வருவான்.
நகரின் பெரிய செல்வந்தரின் மகளுடன் மகேந்திரனுக்கு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து மறுநாளே தன் புது மனைவியை அழைத்துக் கொண்டு நல்லூர் புறப்பட்டான்.  காரணம் கேட்ட மனைவியிடம், வயது முதிர்ந்த ஜீவானந்தம் திருமணத்துக்கு வர இயலாததால், அவரைச் சந்தித்து ஆசி பெறுவதற்கு செல்வதாகக் கூறினான்.

"நேரில் சென்று ஆசி பெறும் அளவுக்கு அவர் உங்கள் நெருங்கிய உறவினரா? அல்லது உங்கள் தந்தையின் நெருங்கிய நண்பரா?" என அவன் மனைவி கேட்டாள். இதற்கு பதிலளித்த மகேந்திரன், "அதெல்லாம் இல்லை. சிறு வயதில் என்னை ஒருமுறை பள்ளிக்கு அழைத்துச் சென்றார்" என்றான். "இவ்வளவு தானா...இந்த சிறிய உதவிக்காகவா அவரிடம் ஆசி வாங்கச் செல்கிறீர்கள்?" எனக் கேட்டு சிரித்தாள்.

"சாதாரண உதவி என்று சொல்லாதே. என்னைப் பொருத்தவரை அது மிகப் பெரிய உதவி. அன்று எனக்கு பள்ளி இறுதியாண்டுத் தேர்வு. பள்ளிக்கு சைக்கிளில் மிக வேகமாகச் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு கல்லில் இடறி தலை கீழாக விழுந்தேன். என்னால் எழுந்து நடக்க முடியவில்லை. சைக்கிளும் பழுதாகி விட்டது. அப்போது அவ்வழியே அவசர வேலையாக சைக்கிளில் வந்த ஜீவானந்தம், என் நிலையை உணர்ந்து என்னை தன் சைக்கிளில் அமர வைத்து சரியான நேரத்தில் பள்ளியில் சேர்த்தார். தனது அவசர வேலையைக் கூட மறந்து என்னை பள்ளியில் சேர்க்கவில்லை என்றால் கண்டிப்பாக நான் தேர்வெழுதியிருக்க முடியாது. அந்தத் தேர்வில் வெற்றி பெற்று பள்ளியிலேயே முதலாவதாக வந்தேன். .நான் ஏன் அவருக்கு நன்றி பாராட்டுகிறேன் என்று இப்போது புரிகிறதா?" என்றான் மகேந்திரன்.

இதைக் கேட்டு தன் தவறை உணர்ந்த மகேந்திரனின் மனைவி, அவனிடம் மன்னிப்பு கேட்டாள். பின்னர் இருவரும் ஜீவானந்தத்தின் வீட்டிற்ஷ்கு சென்று அவரிடம் ஆசி பெற்றனர்.

உயிர்காத்த நண்பன்

        உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
                               இடுக்கண் களைவதாம் நட்பு


விளக்கம்: உடுத்திய ஆடை தளர்ந்தால் உடனே நமது கை எவ்வாறு விரைந்து செயல்பட்டு ஆடையை சரிசெய்கிறதோ, அதுபோல ஆபத்து நேரத்தில் மெய்வருத்தம் பாராமல் உடனே உதவி செய்வது தான் நட்புக்கு அழகு.

விஜயனும், சிவாவும் கல்லூரி விடுதியில் ஒரே அறையில் தங்கியிருந்து பயின்று வந்தார்கள். இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள். ஒருநாள் இரவுக் காட்சி சினிமாவுக்கு சென்று விட்டு இருவரும் பைக்கில் விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.  சிவா வண்டியை ஓட்ட, விஜயன் பின்னால் அமர்ந்திருந்தான். நெடுஞ்சாலையில் வேகமாக ஓட்டிய சிவா, திடீரென நிலை தவறி சாலையில் தவறி விழுந்தான். தரையில் தலை பலமாக மோதியதால் ரத்தம் அதிகமாக வெளியேறி சிவா நினைவிழந்தான். பலத்த காயங்களுடன் தப்பிய விஜயன், தன் நண்பன் உயிருக்குப் போராடுவதைக் கண்டு மனம் பதைத்தான்.

உடனே தன் சட்டையைக் கழற்றி சிவாவின் தலையில் வைத்து அழுத்தியவாறே, உதவிக்கு யாராவது வருவார்களா என பதட்டத்துடன் சாலையில் அங்குமிங்கும் ஓடினான் ஆனால் நள்ளிரவு என்பதால் சாலை வெறிச்சோடி இருந்தது.  அப்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த ஒரு பைக்கை நிறுத்தி, நிலைமையை அழுகையுடன் எடுத்துக்கூறி உதவுமாறு விஜயன் கெஞ்சினான்.

விஜயனுக்கும் பலத்த காயங்கள் இருப்பதைப் பார்த்த அந்த நபர், "நண்பரே, உங்களுக்கும் அதிகமாக காயம் ஏற்பட்டுள்ளது. உடனே உங்கள் இருவருக்கும் சிகிச்சை தேவை. உங்கள் நண்பரை நடுவில் அமர வைத்து, பின்புறம் நீங்கள் அமர்ந்து கொண்டு அவரைப் பிடித்துக் கொள்ளுங்கள். வண்டியில் மூன்று பேர் செல்லக்கூடாது என்றாலும், ஆபத்துக்கு பாவமில்லை," என்று கூறி, இருவரையும் பத்திரமாக மருத்துவமனையில் சேர்த்தார்.


மருத்துவமனையில் சிவாவுக்கு திவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. தனது விடுதி நண்பர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்த விஜயன், சிவாவுக்கு தேவையான அளவு ரத்தம் செலுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்தான். மறுநாள் சிவாவுக்கு நினைவு திரும்பியது.

தனக்கு ஏற்பட்ட காயங்களைப் பொருட்படுத்தாது, ஒரு மாத காலம் தொடர்ந்து சிவாவுடன் நிழல் போல இருந்து அவனை கவனித்துக் கொண்டான் முற்றிலும் குணமடைந்த சிவா தன் நண்பன் விஜயனைப் பார்த்து, "உனக்கு பலத்த காயங்கள் ஏற்பட்ட போதும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் என் உயிரைக் காப்பாற்ற கடுமையாக போராடினாய். உன்னால் தான் நான் இன்று உயிரோடு இருக்கிறேன். நீயல்லவா உண்மையான நண்பன்," எனக் கூறி ஆனந்தக் கண்ணீர் வடித்தான்

படித்தால் மட்டும் போதுமா?

கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன்
                           நற்றாள்தொழாஅர் எனின்.


விளக்கம் : "கல்வியறிவுள்ள ஒருவன், தன்னைப் படைத்த இறைவனை நன்றியறிதலுடன் வணங்க மறுப்பானேயானால், அவன் கற்றதனால் பயன் ஒன்றுமில்லை.

ராகவன் ஒரு பட்டதாரி. பள்ளியிலும், கல்லூரியிலும் சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற அறிவாளி. தர்க்க சாஸ்திரத்தில் வல்லவன். முற்போக்கு சிந்தனைகள் உடைய சீர்த்திருத்தவாதி. ஒருநாள் தன் சொந்த ஊருக்குச் செல்கையில், அவன் பயணம் செய்த பேருந்து பழுதாகி ஒரு கிராமத்துக்கு அருகே நின்று விட்டது. இரவு நேரமாகி விட்டதால் மாற்று பேருந்துகள் மறுநாள் காலையில் தான் வரும் என்றும், அதுவரை பேருந்திலேயே ஓய்வெடுத்துக் கொள்ளுமாறும் பயணிகளிடம் நடத்துனர் கூறினார்.

ராகவனுக்கு அதிகமாக பசியெடுத்ததால், உறக்கம் வரவில்லை. உணவு ஏதாவது கிடைக்குமா என அருகிலிருந்த கிராமத்தை நோக்கி நடந்த ராகவனை வழிமறித்த விவசாயி ஒருவர், விவரத்தைக் கேட்டறிந்து தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவனுக்கு அன்புடன் உணவு படைத்த விவசாயி, "சார், உணவருந்துவதற்கு முன் இறைவனுக்கு நன்றி சொல்வது எங்கள் வழக்கம். நீங்களும் நன்றி கூறி விட்டு சாப்பிடத் தொடங்குங்கள்" என்றர்.

ஆனால் முற்போக்கு சிந்தனைகள் கொண்ட ராகவன், இறைவணக்கம் செய்ய மறுத்ததுடன் "நிலத்தில் பாடுபட்டது நீ...நெல் விளைவித்தது நீ...என்னை உணவருந்த அழைத்தது நீ...அப்படியானால் நான் உனக்குத் தான் நன்றி கூற வேண்டும். இறைவனுக்கு நன்றி தேவையில்லை" என்றான்.

விவசாயி வியப்புடன் ராகவனை பார்த்துக்கொண்டே, "நெல் விளைந்த நிலம் இறைவன் படைத்தது. நெல் வளர  மழை பெய்யச் செய்தது இறைவன் தான். மலர்ந்து, காய்த்து, கனிந்து, முற்றி தானியமானது அவன் செயலே! நான் ஒரு கருவியாக மட்டுமே செயல்பட்டுள்ளேன். நீங்கள் அருந்தும் குடிநீர் அவன் தந்தது. அத்தகைய இறைவனுக்கு நன்றி கூற மறுத்தால், உங்களுக்கு மனிதநேயமே இல்லை எனப் பொருள். இதை நீங்கள் சிந்திக்கவில்லை என்றால், படித்து என்ன பயன்?? என்று கூறினார்.


இதைக் கேட்டு வெட்கித் தலைகுனிந்த ராகவனின் கைகள் தாமாகவே குவிந்து, இறைவனுக்கு நன்றி கூறின.

கல்வி கற்றால் மட்டும் போதாது

கற்க கசடறக் கற்றவை கற்றபின்
                                    நிற்க அதற்குத் தக



விளக்கம்: பள்ளியில் முறையாக கற்றுக் கொள்வது பெரிதல்ல. தான் கற்று அறிந்து கொண்டதற்கேற்ப வாழ்க்கையிலும் நடந்து காட்ட வேண்டும்.

  வகுப்பு ஆசிரியர் கனகரத்தினம் அன்று மாணவர்களுக்கு அறநெறிக் கருத்துக்களைப் பற்றி விளக்கமளித்துக் கொண்டிருந்தார். பசியென்று ஒருவன் நம்மை நாடி ஒருவன் வந்தால், நம்மால் இயன்றதை அவனுக்குக் கொடுத்து அவனைப் பசியாறச் செய்ய வேண்டியது நமது கடமை என்பதையும், விருந்தோம்புதல், என்பது தமிழர்களின் உயரிய பண்பாடுகளில் ஒன்று என்பதையும் விளக்கிக் கூறினார். பின்னர் தமிழகத்தில் வாழ்ந்து வந்த வள்ளல்களைப் பற்றி குறிப்பிட்ட அவர், முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி வள்ளலின் கதையையும் மாணவர்கள் மனதில் பதியுமாறு எடுத்துரைத்தார்.

அதற்குப் பின் மதிய உணவுக்காக வகுப்பு கலைந்தது. நாகராஜன் என்ற மாணவன் தனவந்தர் வீட்டுச் சிறுவன். தான் மதிய உணவுக்காக கொண்டு வந்த இன்சுவை உணவுகளை உண்டும் நிறைவு பெறாமல், பள்ளியின் வெளியே இருக்கும் இனிப்புக் கடையை நோக்கிச் சென்று சில உணவுப் பொருட்களை வாங்கிச் சுவைத்தான்.

அப்போது ஒரு ஏழைச் சிறுவன், நாகராஜன் உண்பதையே பார்த்துக்கொண்டிருந்தான்.சில நிமிடங்கள் கழித்து, "அண்ணா, பசியாக இருக்கிறது" என கெஞ்சினான். உடனேநாகராஜன் வேறு பக்கம் திரும்பிக் கொண்டு உண்பதைத் தொடர்ந்தான்.


அப்போதுஎதிர்பாராமல் அங்கு வந்த அவனது வகுப்பு ஆசிரியர், நாகராஜனைக் கூப்பிட்டு"உன் செய்கைகளைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். இன்று நீ வகுப்பில்என்ன கற்றுக் கொண்டாய், பசியென்று வந்தவர்களுக்கு உணவிடுவது தான் நம்தலையாய கடமை என்பதை நீ கற்கவில்லையா? பசியால் வந்து உன்னைக் கெஞ்சியவனைஉதாசினப்படுத்தும் போது, அவன் மனம் என்ன பாடுபடும் என்பதை அறிவாயா?பள்ளியில் கல்வி கற்று தேர்ச்சி பெற்றால் மட்டும் போதாது. கற்ற வழியில்நடக்க வேண்டும்" என்றார்.

தன் செயலை எண்ணி வருந்திய நாகராஜன், கடையிலிருந்து வேறு தின்பண்டம் வாங்கி அந்தச் சிறுவனுக்கு அளித்து மகிழ்ந்தான்.

முன்கோபம் இருந்தால் கெட்டவனா?

குணநாடிக் குற்றமு நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.


  ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும். 


முத்து வேறொரு பள்ளியிலிருந்து மாற்றலாகி வந்த சிறுவன். அவன் சேர்ந்த சில நாட்களிலேயே, அவனது கடுமையாகப் பேசும் குணத்தையும் அவனது முரட்டுத்தனத்தையும் கண்ட அவன் வகுப்பு மாணவர்கள் அவனிடமிருந்து விலகத் தொடங்கினர். பாடங்களில் அவனுக்கு சந்தேசம் ஏற்பட்டாலோ, நோட்டு புத்தகங்கள் தேவைப்பட்டாலோ யாரும் தருவதில்லை. 


இப்படி அனைவரும் தன்னிடமிருந்து ஒதுங்கியிருந்து தன்னை ஒரு அன்னியனைப் போல் நடத்துவதைக் கண்டு முத்துவின் மனம் புண்பட்டது. அவன் வருத்தத்துடன் இருப்பதைக் கண்ட வகுப்பு ஆசிரியை அதற்கான காரணத்தை அவனிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்டார். 


மறுநாள் வகுப்பில் ஆசிரியை மாணவர்களை நோக்கி, "நம் வகுப்பில் புதிதாகச் சேர்ந்துள்ள முத்துவிடம் யாரும் பழகுவதில்லையே...ஏன்?" என்று கேட்டதும் வகுப்பறையில் மவுனம் நிலவியது. ஒரே ஒரு மாணவன் மட்டும் எழுந்து நின்று, "முத்து ஒரு முரடன். அவனுக்கு நிறைய கோபம் வருகிறது. அதனால் எங்களுக்கு அவனைப் பிடிக்கவில்லை" என்றான். அதை அனைவரும் ஆமோதித்தனர்.



உடனே ஆசிரியர், "முத்துவைப் பற்றி உங்களைக் காட்டிலும் எனக்கு நன்றாகத் தெரியும். அவனிடமுள்ள ஒரே ஒரு குறைபாடு அவனது முன்கோபம் தான். ஆனால் அவனது உள்ளம் மிக மென்மையானது. பழைய பள்ளியில் தனது மதிய உணவை ஏழை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வது அவனது வழக்கம். யார் என்ன உதவி கேட்டாலும் தயங்காமல் செய்வான். நேர்மையானவன். பாடங்களை முறையாகப் பயின்று நல்ல மதிப்பெண்களைப் பெறுபவன். அவனது ஒரே ஒரு குறையை மட்டும் கண்ட நீங்கள், மற்ற குணங்களைப் பார்க்கவில்லை. இனியாவது அவனிடம் மனம் விட்டு பழகுங்கள்" என்று அறிவுரை கூறினார்.

இதுவரை முத்துவின் முன்கோப குணத்தை மட்டும் அறிந்த மாணவர்கள், அவனது நற்குணங்களை அறியாமல் போனதற்கு வருந்தி, அன்றிலிருந்து முத்துவிடன் நட்புடன் பழகத் தொடங்கினர்.


தகுதியானவர் யார்?

தக்கார் தகவிலர் என்பதவரவர்
எச்சத்தாற் காணப்படும்


விளக்கம்:  ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ, அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்.






குழந்தைகளுக்கான உடைகள் தயாரிக்கும் பெரிய நிறுவனம் ஒன்றின் தலைமை நிர்வாகியான கிருஷ்ணா தீவிர ஆலோசனையில் ஆழ்ந்திருந்தார். அதே நிறுவனத்தில் பொறுப்பான பதவி வகித்து வந்த அவருடைய மகள் ரம்யா, தன் தந்தை எதைப் பற்றி யோசிக்கிறார் என்று அறிந்து கொள்ளும் ஆவலுடன் அவரிடம், "என்ன யோசிக்கிறீர்கள் அப்பா?" எனக் கேட்டாள்.

"நமது நிறுவனத்தின் புதிய கிளையை பக்கத்து நகரத்தில் தொடங்க இருக்கிறோம் என்பது உனக்குத் தெரியும். நம்மிடம் பணிபுரியும் சூர்யா, திலீப் ஆகிய இருவரில் யாரை அந்தக் கிளைக்கு பொறுப்பேற்கச் செய்யலாம் என்று தான் யோசிக்கிறேன். திலீப் பெரிய குடும்பத்துப் பிள்ளை. பல்கலைக்கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்ற பட்டதாரி. நல்ல பேச்சுத் திறமை கொண்டவன். அவன் தந்தை எனக்கு நெருங்கிய நண்பர்.  அவனோடு ஒப்பிடுகையில் சூர்ய ஒரு சாதாரண பட்டதாரி. அதிகம் பேசாமல் அமைதியாக இருப்பவன். மிகச் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவன். ஆனால் நமது விற்பனையை அதிகரித்ததில் பெரும் பங்காற்றியவன். இருவரும் ஒவ்வொரு விதத்தில் தகுதியானவர்கள். அதனால் தான் கொஞ்சம் யோசிக்க வேண்டியுள்ளது" என்றார்.


"இரண்டு பேரின் திறமையையும் கவனித்துள்ளேன். சூர்யா தான் நம் புதிய கிளையை நிர்வகிக்க தகுதியானவர்" என்றாள் ரம்யா. "அது எப்படி ரம்யா?" என்று கிருஷ்ணா கேட்டார்.


"அப்பா, கல்லூரியில் பட்டம் பெறுவது என்பது வேலை கிடைக்கத் தேவையான அனுமதி பத்திரம் மட்டும் தான்! பதவி உயர்விற்கான ஒருவனது தகுதியை அவனது சாதனைகளைக் கொண்டு மதிப்பிட வேண்டுமே தவிர, அவன் முன்பு பெற்ற பட்டத்தைக் கொண்டோ, பணக்கார குடும்பப் பின்னணியைக் கொண்டோ, அல்லது பேச்சுத் திறமையைக் கொண்டோ மதிப்பிடக் கூடாது. நம் விற்பனையை பன்மடங்கு பெருகச் செய்ததில் சூர்யாவின் சாதனை திலீப்பை விடப் பெரியது. எனவே இந்தப் பதவி உயர்விற்கு சூர்யா தான் தகுதியானவர்" என்று அடித்துக் கூறினார்.
"நீ சொல்வது தான் சரி" என்று கிருஷ்ணாவும் அதை ஆமோதித்தார்.

நா... காக்க!

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு


 விளக்கம்: ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்திற்கு காரணமாகிவிடும்.”


  அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் நபர்களில் அரவிந்த் மிகக் கடுமையாகவும், திறமையாகவும் உழைப்பவன். இளைஞனான அரவிந்த் அந்த அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்து இரண்டு ஆண்டுகளே ஆகியிருந்த போதிலும், பலரும் புகழும் படியாக தன் அலுவல்களைத் திறம்படச் செய்தான். மேலாளர் துரைசாமியே மனதிற்குள் அரவிந்தை பலமுறை வியந்து பாராட்டியிருக்கிறார். அவரது பேச்சு, வார்த்தைகள் கடுமையாக இருக்குமே தவிர, இயல்பாகவே துரைசாமி நல்ல மனிதர். அரவிந்தின் திறமை, உழைப்பு ஆகியவற்றால் கவரப்பட்டு, அந்த ஆண்டு அவரே அவனுக்கு பதவி உயர்வு தருவதாகத் திட்டம் போட்டிருந்தார்.


அவர் மனதில் இருந்ததைப் பற்றி அறியாத அரவிந்த் ஒருநாள் அ  லுவலகத்தில் அவரைத் தனியே சந்தித்துப் பேசினான்.
"சார், உங்களிடம் ஒரு விஷயம் பேச அனுமதிப்பீர்களா?"
"சொல் அரவிந்த், என்ன வேண்டும்?" என்று கேட்டார் மேலாளர்.
"நான் வேலைக்குச் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன..."
"ஆகட்டும். அதற்கென்ன இப்போது?"
"நான்..... எனக்கு...... பதவி உயர்வு பற்றி...."

தான் நினைத்துக் கொண்டிருந்ததை அரவிந்த் நேரிடையாகக் கேட்டதை அறிந்து துரைசாமி ஆச்சரியப்பட்டார். இருந்தாலும் தனது சுபாவப்படி அரவிந்திடம் கடுமையாகப் பேச ஆரம்பித்தார்.

'பதவி உயர்வு தரும் அளவுக்கு நீ என்ன சாதித்து விட்டாய்?" என்று கேட்டார். அரவிந்தின் இள ரத்தம் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் சூடேறியது. சார், என்னுடைய திறமையும் உழைப்பும் உங்களுக்கே தெரியும்" என்று கூறினான் அரவிந்த்.

"அவற்றைக் குப்பையிலே போடு. அவற்றால் அலுவலகத்திற்கு என்ன லாபம்?" என்றார் துரைசாமி. இதை கேட்டதும் அரவிந்துக்கு ஏனோ அன்று சுர் எனக் கோபம் வந்தது.
"ஏன் லாபமில்லை? என்னுடைய உழைப்பை நன்றாக உறிஞ்சிவிட்டு ஏன் இப்போது இப்படிப் பேசுகிறீர்கள்?" என்று கோபத்தில் கத்தினான் அரவிந்த்.

தன்னைப் பற்றி அரவிந்த் இவ்வாறு நிதானம் தவறிக் கூறியதைக் கேட்டு துரைசாமியும் கோபம் அடைந்தார்.

"உன் போன்ற நாவடக்கம் இல்லாத ஆள் என் அலுவலகத்திற்குத் தேவையில்லை.உனக்கு பதவி உயர்வும் தர முடியாது, வேலையும்  கிடையாது. போ, வெளியே"என்று சீறி வெடித்தார்.

பாவம், அரவிந்த்! கோபத்தில் நிதானம் இழந்து, தான் பேசிய சில வார்த்தைகளால் தனக்கு வரவிருந்த அரியவாய்ப்பைத் தானே கெடுத்துக் கொண்டு தன் வேலையையும் இழந்து விட்டான்.


அதனால்தான் வள்ளுவர் அப்பொழுதே நாவை கட்டுப்படுத்தி வாழச் சொல்லியிருக்கிறார். 

Flag Counter