Showing posts with label விக்ரமாதித்தன் கதைகள். Show all posts
Showing posts with label விக்ரமாதித்தன் கதைகள். Show all posts

நவீன வேதாளக் கதை

 

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீது ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி அவன் அதைத் தூக்கிச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்து "மன்னனே! நீ இந்த பயங்கர நள்ளிரவில் விடா முயற்சியுடன் ஏதோ ஒரு வேலையைச் செய்ய முயல்வதைப் பார்த்தால் யாரோ இதைச் செய்யும் படி உனக்கு அறிவுரை கூறி இருக்கிறார் என்றே நினைக்கிறேன். அரசர்களுக்கும் அவ்வப்போது ஆலோசனைகளை
 அமைச்சர்கள் கூறி வருவார்கள். அவற்றில் சில ஏற்கத்தக்கனவாக இருக்கும் மற்றவை புறக்கணிக்கத் தக்கதாய் இருக்கும்.
எனவே அரசர்கள் அந்த அறிவுரைகள் ஏற்கத்தக்கனவா என்று சிந்தித்து செயல்பட வேண்டும். ஏனெனில் அரசன் சொல்வது தான் சட்டம். அதுபோல ஒரு கிராமத்தில் அதன் கிராம அதிகாரி கூறுவதே சட்டம். இது பற்றி விளக்க ஒரு கதையைச் சொல்கிறேன். கவனமாகக் கேள்" என்று கதையை ஆரம்பித்தது.

தகடூர் என்ற கிராமத்தில் தங்கப்பன் தான் கிராம அதிகாரி. அவன் எந்த விஷயத்திலும் அந்த ஊரின் பண்டிதரும் அறிஞருமான நீலகண்டரின் அறிவுரைகேட்டு அதன் படி நடந்து வந்தான். நீலகண்டரும் யாராவது தவறு செய்தால் அதை ஏன் செய்தார் என்று நன்கு யோசித்து தக்க தண்டனை கொடுப்பதுப் பற்றி கிராம அதிகாரியிடம் கூறுவார். கிராம அதிகாரியும் அந்த அறிவுரைப்படி நடப்பான். அது போல ஊரில் ஒருவர் ஒரு நற்செயலைச் செய்தால் அதைப் பாராட்டிப் பரிசு அளிப்பதானால் அதனால் என்ன பயன்கள் விளையும் என அவர் யோசித்த பிறகே கிராம அதிகாரிக்கு அறிவுரை கூறுவார்.

அந்த ஊரில் முருகைய்யன் என்ற கிழவன் இருந்தான். அவன் திடீரென நோய்வாய்ப் பட்டு படுத்த படுக்கையாகக் கிடந்தான். அவன் சம்பாதித்துத் தான் தன் மகன் மருதனை வளர்த்து வந்தான். மருதன் சோம்பேறி.எந்த வேலையிலும் நாட்டம் கொள்ளாத இளைஞன். தன் தந்தையின் நிலை கண்டு அவன் சாப்பாட்டிற்காக வீடு வீடாகப் போய் பிச்சை எடுக்கலானான்.

அவன் நீலகண்டரின் வீட்டிற்குப் போய் பிச்சை கேட்ட போது அவர் "நீ ஏன் ஏதாவது வேலை செய்து உன் தந்தைக்கு சாப்பாடு போடக்கூடாது? இவ்வளவு நாட்களாக அவன் வேலை செய்து உனக்குச்சாப்பாடு போட்டு வந்ததால் தானே நீ சோம்பேறியாக ஊரில் திரிந்து கொண்டு இருந்தாய்? பிச்சை எடுப்பது பெரும் குற்றம். நீயோ வேலை செய்யாமல் பிறர் உழைப்பால் கிடைப்பதைச் சாப்பிட விரும்புகிறாய். இது குற்றம். நீ முதல் தடவையாகச் செய்ததால் தண்டிக்காமல் விட்டு விடுகிறன்.

ஆனால் இன்னொரு முறை இதைச் செய்தால் கிராம அதிகாரியிடம் சொல்லி உன்னைச் சிறைக்குள் தள்ளுவேன்" என்றார். அதைக் கேட்ட மருதன் பயந்து போய் ஊரை விட்டே ஓடி விட்டான்.

அதனால் அவனது தந்தை முருகைய்யன் அநாதையாகி விட்டான். அப்போது நீலகண்டர் கிராம அதிகாரியிடம் நடந்ததைக் கூறி" கிராமத்தின் அநாதைகளையும் உடல் ஊனமுற்றவர்களையும் பராமரிக்க வேண்டியது கிராம அதிகாரியின் கடமை. எனவே முருகைய்யனை இந்த கிராமத்தவர் முறைபோட்டுக் கொண்டு கவனித்து வரவேண்டும் என்று கட்டளை இடுங்கள்" என்று கட்டளை இடுங்கள்" என்று யோசனை கூறினார் கிராம அதிகாரியும் அதுசரியே எண்ணி அவ்வாறு கட்டளையும் பிறப்பித்தான்.

அந்த ஊரில் காலன், மாலன், வேலன் என்ற மூன்று இளைஞர்கள் இருந்தார்கள். அவர்கள் போக்கிரிகள் அவர்கள் கிராம அதிகாரியிடம் "எங்களுக்கு வேலை கொடுங்கள். அப்போது தான் எங்கள் பெற்றோர்களைக் காப்பாற்ற முடியும். வேலை கொடுக்கவிட்டால் நாங்கள் ஊரை விட்டே போய் விடுவோம். அப்போது எங்கள் பெற்றோரை பராமரிக்கும் பொறுப்பு உங்கள் மீது தான்விழும்" என்றார்கள்.

இதே சமயம் அவர்கள் சொன்னதைக் கேட்டுக் கொண்டே வந்த நீலகண்டர் "இவர்களை ஊரிலிருந்து போய் விட அனுமதித்து விடு. இவர்களது பெற்றோர்களை கவனித்துக் கொள்ள ஏற்பாடு செய்வோம்" என்றார். அதைக் கேட்டு அந்த மூன்று போக்கிரிகளும் சிரித்துக் கொண்டே அந்த ஊரிலிருந்து வெளியேறினார்கள். நீலகண்டரும் கிராம அதிகாரியிடம். "கவலைப் படாதீர்கள். இவர்கள் மட்டும் அல்ல. மருதனும் விரைவில் திரும்பி வந்து தம் பெற்றோர்களை கவனித்துக் கொள்ளத்தான் போகிறான்" என்றார். இதற்குப் பிறகு யாரும் வந்து கிராம அதிகாரியிடம் எவ்விதப் புகாரும் செய்யவில்லை.

சில நாட்களுக்குப் பிறகு தகடூர் கிராம அதிகாரி தங்கப்பனுக்கு காலனும் மாலனும், வேலனும் மருதனும் கோட்டூரில் வேலை செய்து பணம்

சம்பாதித்து வருகிறார்கள் என்று தெரிந்தது. ஆனால் அவர்கள்  தங்கப்பனைப் பற்றி அவதூறாகப் பேசித் தூற்றி வருகிறார்களாம்.
அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள்ள என்று பார்க்க தங்கப்பன் ஆவல் கொண்டான்.தங்கப்பன் தன் வண்டிக்காரன் வரதனிடம் "வரதா! நம் வில் வண்டியைக் கட்டிக் கொண்டுவா. நாம் கோட்டூர் போகலாம்" என்றான். வரதனும் வண்டியைப் பூட்டிக் கொண்டு வந்து நிறுத்தவே தங்கப்பன் அதில் ஏறி உட்கார்ந்தான். வரதன் வண்டியை ஓட்டிக் கொண்டு சென்றான்.

கோட்டூர் தகடூரிலிருந்து ஐம்பதுமைல் தூரத்தில் இருந்தது. போகும் பாதையோ கரடு முரடானது. அதில் வேகமாகப் போய்க் கொண்டிருந்த வில்வண்டி ஒரு பாறாங்கல்லின் மீது ஏறி குடை சாய்ந்தது. தங்கப்பன் வண்டியில் இருந்து விழவே அவனது தலையில் பலத்த அடி பட்டது. அவன் நினைவை இழந்து விழுந்து கிடந்தான். வண்டிக்கார வரதனும் வண்டியிலிருந்து விழவே அவனது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அச்சமயத்தில் காலன் அவ்வழியே வந்து கொண்டிருந்தான்.

அவன் குடை சாய்ந்த வண்டியையும் அதன் பக்கம் நின்ற எருதையும் கண்டான். கீழே நினைவு இழந்து விழுந்து கிடந்த தங்கப்பனையும் காயம் அடைந்து துடிக்கும் வரதனையும் பார்த்தான். உடனே வண்டியைச் சரியாக நிறுத்தி அதில் எருதைப் பூட்டி தங்கப்பனையும் வரதனையும் வண்டியில் ஏற்றினான். பிறகு அவன் அருகிலுள்ள பழுதூருக்குப் போய் அங்கு ஒரு வைத்தியரிடம் சிகிச்சைக்குக் கொண்டு சென்றான்.

வண்டிக்காரன் வரதனின் காயம் இரண்டே நாட்களில் ஆறிவிட்டது. ஆனால் தங்கப்பன் நினைவை அடைந்து குணம் அடைய ஒரு வாரகாலம் பிடித்தது. தங்கப்பன் பணக்காரன் என்று அறிந்த வைத்தியரும் அவர்கள் குணம் அடைந்ததும் அவர்களிடமிருந்து பணம் வாங்கிக் கொள்வதாகக் காலனிடம் சொல்லிவிட்டே சிகிச்சை அளித்தார். காலனும் அவர்கள் இருவரும் முழுவதுமாக குணம் அடையும் வரை அவர்களோடு இருந்து அவர்களுக்கு

 வேண்டிய வேலைகளைச் செய்தான். வரதன் குணம் அடைந்ததுமே வண்டியை ஓட்டிக் கொண்டு தகடூருக்குப் போய் தங்கப்பன் பழுதூரில் இருப்பதாயும் விபத்து நடந்ததையும் கூறினான். உடனே தங்கப்பனின் மனைவியும் மக்களும் உறவினர்களும் நீலகண்டரும் மற்றும் பலரும் உடனே கிளம்பி பழுதூருக்குப் போய் தங்கப்பனை பார்த்து நலம் விசாரித்தார்கள்.

அப்போது காலன் "நான் செய்தது தவறே. என் போலத்தான் மாலனும் வேலனும், மருதனும் தவறு செய்தவர்கள். நாங்கள் திருந்த வாய்ப்பை அளிக்க வேண்டும் என்று கடவுளை தினமும் வேண்டி வருகிறோம். முதன் முதலாக அவர் எனக்கு வாய்ப்பு அளித்து இவருக்குப் பணி புரியும்படி செய்து என்னைத் திருத்தி விட்டார்" என்று களிப்புடன் கூறினான்.

தங்கப்பன் வைத்தியருக்கு நிறையப் பணத்தைக் கொடுத்தான். அதன் பின் தகடூருக்கு வந்தான். அவன் நீலகண்டரிடம் "காலன் தன் தவறை உணர்ந்து விட்டான். அவன் விபத்தில் அடிபட்டு விழுந்து கிடந்த என்னையும் வரதனையும் கண்டு இரக்கப் பட்ட தோடு எங்களை ஒரு வைத்தியரிடம் அழைத்துச் சென்று சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்தான். நாங்கள் குணம் அடையும் வரை எங்களோடு இருந்து எங்கள் தேவைகளையும் கவனித்துக் கொண்டான். இப்படி எல்லாம் அவன் நற்செயல்களைச் செய்ததால் அவன் திருந்திவிட்டான். எனவே அவனை நம் ஊருக்கு வரச் சொல்லி ஒரு வேலையும் போட்டுக் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? "என்று கேட்டான்.

நீலகண்டரும் "நீங்கள் காலன் விஷயமாக என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். அது உங்கள் இஷ்டம். இனிமேல் நீங்கள் இந்த ஊரிலிருந்து வண்டியில் வேறு எந்த ஊருக்கும் போகக் கூடாது. போக்கிரிகள் இன்னும் மூன்று பேர்கள் இருக்கிறார்கள். அவர்களும் காலனைப் போலக் கடவுளிடம் வேண்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள். காலன் திருந்திவிட்டான் என உறுதியாகக் கூறவிட முடியாது. அன்று ஏதோ


 அவனுக்கு அவ்வாறு செய்ய வேண்டும் என்று தோன்றிய தால் அவ்வாறு செய்தான். இந்த ஒரு நிகழ்ச்சியைக் கொண்டு அவன் திருந்தி விட்டான் என்ற முடிவுக்கு வந்து விடக் கூடாது. காலன் விஷயம் காக்கை உட்காரப்பனம் பழம் விழுந்த கதை போலத்தான்" என்றார்.

வேதாளம் இக்கதையைக் கூறி "நீலகண்டர் அறிவாளியாக இருந்தாலும் தயை, கனிவு, தாட்சணியம் ஆகிய இயல்புகள் கொள்ளாதவர் போலத் தோன்றுகிறதே.

காலன் சமயத்தில் செய்த உதவியால் தானே கிராம அதிகாரி தங்கப்பன் உயிர் பிழைத்தான்? அப்படிப்பட்ட காலன் பால் அவர் ஏன் இரக்கம் காட்டாமல் இருந்தார்? இதற்குச் சரியான விடை தெரிந்ததும் நீ கூறாவிட்டால் உன் தலை வெடித்துச் சுக்கு நூறாகிவிடும்" என்றது. விக்கிரமனும் "மனிதன் மிருகங்களை விட உயர்ந்தவன் என்பதற்கு அவன் அறிவு படைத்தவன் என்பதே முக்கிய காரணம். அந்த அறிவை இடம், பொருள், காலத்திற்கு ஏற்ப சரியாக அவன் பயன்படுத்த வேண்டும். காலன் தன் பிரார்த்தனையாலே தக்க வாய்ப்பை பெற்று தான் நற்செயலைச் செய்து திருந்தி விட்டதாக எண்ணி விட்டான். இது தற்செயலாக நேர்ந்தது. காலனுக்கு வேலை கொடுத்தால் மற்ற மூவரும் யாரோ ஒருவருக்கு உதவி விட்டுத்தாம் திருந்தி விட்டதாகக் கூறி கிராம அதிகாரியிடம் வேலை கேட்பார்கள். இது அவர்களை ஊக்குவிப்பது போலாகி விடும். எனவே காலனின் ஒரு செயலைக் கொண்டே அவன் திருந்தி விட்டான் என எண்ணுவது தவறு. இதனால் தான் நீலகண்டர் காலனுக்கு கிராம அதிகாரி வேலை கொடுப்பதை விரும்பவில்லை" என்றான்.

விக்கிரமனின் சரியான இந்த பதிலால் அவனது மெளனம் கலையவே அவன் சுமந்து வந்த உடலோடு வேதாளம் உயரக்கிளம்பிப் போய் மீண்டும் முருங்க மரத்தில் ஏறிவிட்டது. 


கொடுத்த வாக்கு


தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீது ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழே இறங்கி அதைத் தூக்கிச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்து "மன்னனே! இந்த பயங்கர நள்ளிரவில் இப்படி சிரமப் பட்டு விடா முயற்சியாகச் செயல்படுவதைப் பார்த்தால் உன் நல்ல குணத்தைப் பயன்படுத்திக் கொண்டு யாரோ உன்னை இதைச் செய்து தருமாறு தூண்டி இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். உன்னைப் போல சிக்கிக் கொண்ட ஆனந்தன் என்ப
வனின் கதையைக் கூறுகிறேன். கவனமாகக் கேள்" என்று கூறிக் கதையை ஆரம்பித்தது.
வெகு நாட்களுக்கு முன் சத்திய கிரியைச் சத்தியகீர்த்தி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனது ஒரே மகன் ஜெயசீலன். மன்னன் தன் மகனுக்குக் கல்வி அளிக்க அவனை கோவிந்தாச்சாரியார் என்பவரின் குருகுலத்தில் கொண்டு போய்ச் சேர்த்தான். அந்த குருகுலத்தில் பத்து மாணவர்கள் இருந்தார்கள். 


ஜெயசீலன் அரசகுமாரன் என்ற காரணத்தால் மற்ற மாணவர்கள் அவனுடன் நெருங்கிப் பழகாமல் சற்று விலகியே இருந்தார்கள். அதற்கு ஏற்ப ஜெயசீலன் தான் அரச குமாரன் என்று அகம்பாவம் கொண்டு நடந்து வந்தான். இப்படி இருந்தும் ஆனந்தன் என்பவன் மட்டும் வலியச் சென்று ஜெயசீலனிடம் பேசிப் பழகலானான். ஜெயசீலன் அவனைத் திட்டி தாழ்வாக எண்ணி முட்டாள் தனமாக நடந்து வந்தாலும் ஆனந்தன் அவற்றை எல்லாப் பொறுமையுடன் சகித்துக் கொண்டு அவனுடன் அன்பாகப் பழகவே நாளடைவில் ஜெயசீலன் அவனைத் தன் நண்பனாகக் கருதலானான். ஆசிரியர் கூறுவது அநேகமாக ஜெயசீலனுக்குப் புரியாமலே இருக்கும். ஆனந்தன் அவனுக்குப் புரியாதனவற்றை விளக்கிப் புரிய வைக்கலானான். 

ஜெயசீலன் ஆனந்தனின் உதவி பெற்று படிப்பில் முன்னேறி வருவது கண்டு அவனது குரு மகிழ்ந்து போனார். அவர் அவனை உற்சாகப் படுத்த "பேஷ், நீ நன்றாகவே படிக்கிறாய். இன்னமும் கொஞ்சம் சிரத்தையுடன் படித்தால் மாணவர்களில் முதல்வனாக வந்து விடலாம்" என்றார். முதல் முறையாக குரு தன்னைப் புகழ்ந்தது கேட்டு ஜெயசீலன் ஆனந்தனிடம் "நண்பா! உன்னால் தான் படிப்பில் முன்னேறி நம் குருவின் பாராட்டுதல்களையும் பெற்றேன். அதனால் நான் நாட்டின் மன்னனானதும் உன்னை என் முதலமைச்சராக ஆக்கிக் கொள்கிறேன். இது சத்தியம்" என்றான்.                                                                       

ஜெயசீலன் கூறியதைக் கேட்டு ஆனந்தன் மகிழ்ந்து போனான். குருவும் ஜெயசீலன் ஆனந்தனிடம் கூறியதைக் கேட்டு மகிழ்ந்து "ஜெயசீலா! ஒருவன் செய்த நன்றியை மறக்கக் கூடாது. நீ ஆனந்தனுக்குக் கடமை பட்டவன். இன்று நீ செய்த சத்தியத்தை நீ மறந்து விடாதே" என்றார். ஜெயசீலனும் "நான் அதை மறக்க மாட்டேன். நன்கு நினைவில் வைத்துக் கொண்டிருப்பேன்" என்று கூறினான்.
 
குருகுலத்தில் படிப்பு முடிந்ததும் ஜெயசீலன் தலை நகருக்குக் கிளம்பி விட்டான். அவன் ஆனந்தனிடம் தான் போய் வருவதாகக் கூறி விடை பெற்றுக் கொள்ளவில்லை. ஆனந்தன் அதைப் பெரிது படுத்த வில்லை. அவன் குருவிடம் தான் மேலும் படிக்க விரும்புவதாகக் கூறவே அவரும் "சரி. நீ விந்திய மலையிலுள்ள ஞானானந்தரின் ஆசிரமத்திற்குப் போய் உன் மேல் படிப்பைத் தொடர்" என்று கூறி ஆசிகள் அளித்து அனுப்பினார்.

ஜெய்சீலன் தலை நகருக்குப் போய்ச் சேர்ந்தான். ஆறு வருடங்கள் கழிந்த பின் அவன் நாட்டின் மன்னன் ஆனான். அவன் தான் சொல்லுகிற படி நடக்கும் துர்ஜெயன் என்பவனைத் தன் முக்கிய ஆலோசகனாக நியமித்தான். ஆட்சி பற்றி அவன் சொல்வதே ஜெயசீலனுக்கு வேதவாக்கு என்ரு ஆகிவிட்டது. துர்ஜெயனின் ஆலோசனைப் படி பல புதிய சட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இவற்றால் மக்கள் அவதியுற்றார்கள். அவற்றால் மக்கள் குழம்பி மன்னன் மீது வெறுப்பை அடைந்தார்கள். இந்த நிலையைப் பயன் படுத்திக் கொண்டு அண்டை நாட்டு மன்னன் சத்தியகிரி மீது படை எடுக்கத் திட்டமிட்டான். இதை அறிந்த ஜெயசீலன் துர்ஜெயனிடம் அதற்கு என்ன செய்வது என்ரு யோசனை கேட்டான்.


துர்ஜெயனும் "இது பற்றிக் கவலையே வேண்டாம். நம் படை பலத்தை அதிகரித்துக் கொண்டு முதலில் நாமே படை எடுத்துப் போய் அவனைத் தோற்கடித்து விடலாம்" என்றான். அப்போது ஜெயசீலன் "படையை விரிவு படுத்தப் பணம் வேண்டுமே! அதற்கு எங்கே போவது? நம் பொக்கிஷத்தில் பணமும் இல்லையே" என்றான். அப்போது துர்ஜெயன் "நம் பொக்கிஷத்தை நிரப்ப ஒரு வழி உள்ளது. யட்சபர்வதம் என்ற மலையிலுள்ள சிவன் கோவில் மண்டபத்தில் ஒரு கல்லில் சில விவரங்கள் பொறிக்கப் பட்டுள்ளன. அந்த கோவிலின் எதிரே ஓடும் நதியின் மத்தியில் ஒரு சுழல் உள்ளது. 


மந்திர தந்திரங்கள் தெரிந்து சாஸ்திரங்களைக் கற்ற துணிச்சலான இளைஞன் அந்த சுழலுக்குள் போய்  அங்குள்ள யட்சமாயாவியை வென்று விட்டால் அவனுக்கு பெரும் புதையலும் எட்டுமாபெரும் சித்திகளும் கிட்டும். ஆனால் அவன் மட்டும் தோற்றுப் போனால் நரகலோகத்திற்குத் தான் போக வேண்டி வரும். அங்கு போய் வரத் தகுதி பெற்றவனையும் நான் தேர்ந்து எடுத்து விட்டேன். அவன் பெயர் ஆனந்தன். 


அவன் குருகுலத்து கல்வியை முடித்துக் கொண்டு மூன்று நாட்களுக்கு முன்பு தான் நம் தலை நகருக்கு வந்திருக்கிறான். அவன் நன்கு படித்த இளைஞன். துணிச்சல் மிக்கவன். தற்போது நம்மூர் பிரபல வியாபாரி நவகோடி நாராயணன் வீட்டில் தான் தங்கி இருக்கிறான். நாம் அவனை வரவழைத்து யட்ச பர்வதத் திற்கு அனுப்பலாம்" என்றான். ஆனந்தன் என்ற பெயரைக் கேட்டது மே ஜெயசீலன் திடுக்கிட்டான்.

ஏனெனில் அதுவரை தன் குருகுலத்து நண்பனைப் பற்றி நினைக்கவே இல்லை. அவனது பெயரைக் கேட்டதும் தான் அவனுக்கு சத்தியம் செய்து கொடுத்ததும். தன் குரு அதைக் காக்க வேண்டும் என்று கூறியதும் நினைவிற்கு வந்தது. அதனால் அவனைக் கண்டு பேசுவது எப்படி என்று தயங்கினான். பிறகு அவன் சற்று யோசித்து விட்டு துர்ஜெயனிடம் "சரி, அந்த ஆனந்தனையே வரவழைத்து இதனைச் செய்யச் சொல்வோம். அவன் வெற்றி பெற்று வந்தால் கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பி விடுவோம்" என்று கூறினான். ஆனந்தன் வந்ததும் ஜெயசீலன் பரிவுடன் அவனது நலம் விசாரித்தான். அதன் பின் யட்சபர்வதத்தைப் பற்றிக் கூறினான். 


அப்போது ஆனந்தன் "நாம் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவர்களே. குருகுலத்தில் உனக்கு நான் எவ்வளவோ உதவிகளைச் செய்திருக்கிறேன். உனக்கு ஒரு ஒரு பிரச்சினை என்றால் அதை தீர்க்க நான் உதவாமலா இருந்து விடுவேன்? நான் யட்சபர்வதத்திற்குப் போய் அங்குள்ள செல்வத்தை அடைந்து கொண்டு வந்து கொடுக்கிறேன்" என்று கூறி விட்டுச் சென்றான்.
 

அவன் யட்ச பர்வதத்திலுள்ள சிவன் கோவிலை அடைந்து அதன் எதிரே உள்ள நதியில் குதித்து அதிலுள்ள சுழல் பகுதியை அடைந்தான். ஆனந்தனோடு சென்ற ஜெயசீலன் அவன் அந்நதியிலிருந்து எப்போது வருவான் என்று எதிர் பார்த்துக் கரையில் காத்துக் கொண்டிருந்தான். நதியிலிருந்து சற்று நேரத்தில் ஆனந்தன் முன்பிருந்ததை விட இரு மடங்கு ஒளியுடன் வந்ததை அவன் கண்டு ஆச்சரியப்பட்டான்.கரைக்கு வந்த அவனிடம் ஜெயசீலன் ஆவலுடன் "புதையல் கிடைத்ததா?" என்று கேட்டான். ஆனந்தனும் புன்னகை புரிந்தவாறே" என்னோடு சற்றும் பயப்படாமல் வா. அதைக் காட்டுகிறேன்" என்று கூறி அவனது கையைப் பற்றிக் கூட்டிக் கொண்டு போய் நதிக்குள் இறங்கினான். இருவரும் சுழலுள்ள இடத்திற்குப் போய் முங்கி அடிமட்டத்திற்குச் சென்றார்கள். அங்கு தங்கமும் நவரத்தினங்களும் குவியல் குவியலாக உள்ளதை ஜெயசீலன் கண்டான். ஆனந்தனும் ஜெயசீலனிடம் "இவற்றை எடுத்துக் கொண்டு போய் மக்கள் நலனுக்கான பணிகளைச் செய். ஆனால் இதற்குப் பரிசாக எனக்குப் பணமோ அல்லது நவரத்தினங்களோ வேண்டாம். ஆனால் நான் கேட்பதைக் கொடுக்க வேண்டும்" என்றான்.

 ஜெயசீலனும் "நீ என்ன கேட்டாலும் கொடுக்கிறேன்" எனவே ஆனந்தனும் "நீ குருகுலத்தில் படித்தபோது எனக்குக் கொடுத்த வாக்கின்படி என்னை உன் முதல் அமைச்சராக நியமிக்க வேண்டும்" என்றான். அதைக் கேட்ட ஜெயசீலன் சற்றுத் திகைத்துத் தான் போனான். பிறகு கண்களில் நீர் ததும்ப அவன் ஆனந்தனின் கால்களில் விழுந்து வணங்கி "நீ மனிதர்களின் மாணிக்கம். நீதான் இப்போது முதல் என் முதலமைச்சர். இனி நீ சொல்கிறபடி தான் நான் ஆட்சி புரிவேன்" என்று நா தழுதழுக்கக் கூறினான். 

வேதாளம் இந்தக் கதையைக் கூறி "மன்னனே! ஆனந்தன் பெரும் செல்வத்தைக் கண்டு பிடித்து அதற்குப் பரிசாகப் பணத்தைப் பெறாமல் முதல் அமைச்சர் பதவியைக் கேட்டு வாங்கிக் கொண்டானே. இது பதவி மோகத்தாலா அல்லது சுயநலத்தாலா? இதற்குச் சரியான பதில் தெரிந்திருந்தும் நீ கூறாவிட்டால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகி விடும்" என்றது.

விக்கிரமனும் "ஆனந்தன் பதவி மோகத்தாலோ அல்லது சுயநலத்தாலோ ஜெயசீலனிடம் அந்தப் பதவியைக் கேட்டு வாங்கிக் கொள்ள வில்லை. அவனது இயல்பே பிறருக்கு உதவுவதுதான். குருகுலவாசத்தில் ஜெயசீலன் நன்கு படிக்க அவன் உதவினான்.


நாட்டில் ஆட்சி சீர் குலைந்தது கண்டு அது ஜெயசீலன் துர்ஜெயனின் யோசனைகளை ஏற்பதால் அவ்வாறு ஆகி விட்டது என நம்பினான். நிலைமையைச் சீர்திருத்தி மக்களுக்கு நன்மை புரிய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அவன் ஜெயசீலனிடம் முதலமைச்சர் பதவியைக் கேட்டு வாங்கிக் கொண்டான். அவன் தனக்கு நாடு வேண்டும், என்றோ நிலபுலன்கள் மாளிகைகள் வேண்டும் என்றோ கேட்கவில்லை. எனவே இது பதவி மோகமும் அல்ல. சுயநலமும் அல்ல மக்களுக்கு நன்மை புரிய வேண்டும் என்ற உயரிய நோக்கு" என்றான்.


விக்கிரமனின் சரியான இந்த பதிலால் அவனது மெளனம் கலையவே அவன் சுமந்து வந்த உடலோடு வேதாளம் உயரக் கிளம்பிப் போய் மீண்டும் முருங்க மரத்தில் ஏறிக் கொண்டது.


 

சுயநலத்திலும் பரோபகாரம்



தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீது ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழே இறங்கி அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில் அதனுள் இருந்த வேதாளம் சிரித்துக் கொண்டே "மன்னா, இந்த பயங்கரமான சூழ்நிலையிலும் மனம் தளராமல் உன் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாய். ஆனால் நீ இவ்வளவு முயற்சிகள் எடுத்தும் எதிர் பார்த்த பலன் ஏன் கிடைக்க வில்லை என்று யோசித்துப் பார்த்தாயா? உன்னுடைய முயற்சிகளைப் பாராட்டினாலும் உன்னுடைய கண் மூடித்தனமான முயற்சிகளைக் கண்டு உன் மீது பரிதாபம் தான் உண்டாகிறது. சிலசமயம் நீ இவ்வளவு பாடுபடுவது பரோபகார சிந்தையினாலா அல்லது உனது சுயநலத்திற்காகவா என்று எனக்கு சந்தேகம் ஏற்படுகிறது. சில சமயங்களில் சுயநலத்திற்கும் பரோபகாரத்திற்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்வது கூட கடினம். இதை விளக்க உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்"என்றது.

கோண்டுபுரம் என்ற கிராமத்தில் புருஷோத்தமன் என்ற மனிதருக்கு சேகர்,கமல் என்ற இரு பிள்ளைகள் இருந்தனர். சேகர் மற்றவர்களுக்கு உதவும் தன்மை உள்ளவன். ஆனால் கமல் ஒரு சுயநலவாதி. எப்போது முதலில் தன்னைப் பற்றியே நினைப்பவன். தனது இளைய மகனின் போக்கினை மாற்ற், புருஷோத்தமன் அவனிடம் "கமல்!நீ வாழ்க்கையில் சுகமாக வாழ வேண்டும் என்று விருப்பப்பட்டால் காட்டிலுள்ள மலைக்குகையில் வசிக்கும் ஆனந்தர் என்ற ஒரு சன்னியாசியை சந்திப்பாய். இதனால் உனக்கு நன்மை உண்டாகும்" என்றார். இதைச் சொல்லி முடித்ததும், அவர் உயிர் பிரிந்தது.


தன்னை ஒரு சன்னியாசியிடம் அனுப்பிவிட்டு, தனது சொத்து முழுதும் சேகருக்குக் கொடுக்க எண்ணுகிறாரோ என்று கூட அவனுக்கு சந்தேகம் உண்டாயிற்று. ஆனால் பின்னர்தான் தன் தந்தையிடம் நல்ல குணங்களைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லை எனத் தெரிந்தது.


சேகர் தன் தம்பியிடம், "நீ என்னுடன் சேர்ந்து இருந்துவிடு. உன்னை நன்றாக கவனித்துக் கொள்கிறேன்" என்றான். சரிதான், அண்ணன் தான் தன் கூடவே இருக்கச் சொல்லி விட்டாரே, இனி நமக்கு கவலை இல்லை என்று கமல் அண்ணனின் அரவணைப்பில் நிம்மதியாக உண்டு உறங்கிக் காலம் கழிக்கலானான். 


இதைக் கண்ட கிராமத்து மக்கள் கமலின் பொறுப்பற்ற செயலை இகழ்ந்து பேசலாயினர். இதனால் கமலுக்கு கோபம் உண்டாயிற்று.
கமல் சேகரிடம், "நீ சொன்னதால் தான், நான் உன்னுடன் தங்கி உள்ளேன். ஆனால் மற்றவர்கள் என்னைப் பற்றிக் கேவலமாகப் பேசுகின்றனர் பார்த்தாயா?" என்றான். சேகர் "தம்பி! நீ பிறருக்கு உபகாரமாக நடந்து கொண்டால் யாரும் உன்னை அவ்வாறு கேவலமாகப் பேசமாட்டார்கள். மற்றவர்கள் உன்னை விரும்ப வேண்டுமெனில் நீ அவர்களுக்கு உன்னால் முடிந்த உதவி செய்" என்றான்.


"ஆமாம் மற்றவர்களுக்கு உதவி செய்து உனக்கும் அப்பாவுக்கும் பெரிதாக என்ன கிடைத்தது? எனக்கு நிறையப் பணம் சம்பாதிக்க ஆசை. அதற்கு ஏதாவது வழி தெரிந்தால் சொல்" என்றான்.
"பணம் சம்பாதிக்க வேண்டுமெனில், வியாபாரத்தில் இறங்க வேண்டும். இல்லையேல், ஏதாவது ஒரு துறையில் திறமை இருக்க வேண்டும். 


ஆகவே உனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ, அவ்வாறு செய்" என்றான் சேகர்.

யோசித்துப் பார்த்து இறுதியில் தன் தந்தை சொன்ன அந்த சன்னியாசியைப் போய்ப் பார்க்க முடிவு செய்தான் கமல். அவ்வாறு அந்த மலைக்குகையைச் சென்று அடைந்த போது தாடியும் மீசையுமாயிருந்த சன்னியாசியைப் பார்த்தான். அவரை வணங்கி விட்டு "சுவாமி என் தந்தை புருஷோத்தமன், அவர் இறக்கும்தருவாயில் உங்களை சந்திக்குமாறு சொன்னார். எனக்கு விரைவில் பணம் சம்பாதிக்க ஏதாவது வழி சொல்லிக் கொடுங்கள்" என்றான். அந்த சன்னியாசி அவனை உற்று நோக்கிவிட்டு, "என்னால் உனக்கு உத்வி செய்ய முடியும். ஆனால் நீயும் நானும் சில இன்னல்களை அனுபவிக்க வேண்டிவரும். அதை விளக்குகிறேன்" என்றார். தொடர்ந்து அவர் தன்னைப் பற்றிய முழு விவரமும் கமலுக்கு அளித்தர்.


தன் பெயர் ஆனந்தன் என்றும், புருஷோத்தமனும் தானும் நண்பர்கள் என்றும் தெரிவித்தார். பிறருக்கு உதவி செய்வதை தனது லட்சியமாகக்                             கொண்டிருந்தார் புர்ஷோத்தமன். ஆனால் ஆனந்தன் சுயநலவாதியாக இருந்தார். ஒருமுறை அவர்கள் இரு வரும் சேர்ந்து ஓரிடத்திற்கு சென்று கொண்டிருந்தபோது பாதையில் ஒரு சன்னியாசி காழே விழுந்து கிடக்கக் கண்டனர். அவரது காலில் பாம்பு கடித்ததற்கு அடையாளமாக சிறு காயம் இருந்தது. புருஷோத்தமன்
அவரது காயத்திற்குப் பச்சிலைச் சாறு பிழிந்து கட்டுப் போட்டு முதலுதவி செய்தவுடன் அந்த  சன்னியாசி எழுந்து அமர்ந்து புர்ஷோத்தமனை நோக்கி "எனக்கு உதவி செய்ததற்கு மிக்க நன்றி. இதற்குப் பிரதியாக என்னிடம் உள்ள ஒரு சக்திவாய்ந்த தாயத்தை உனக்குத் தருகிறேன். அதை வைத்துக் கொண்டால் நீ நினைத்த தெல்லாம் நடக்கும். செல்வம் உன்னைத் தேடி வந்தடையும்" என்றார்.


புர்ஷோத்தமன் அடக்கத்துடன், "சுவாமி, செல்வத்தினால் நன்மைகளை விட தீமைகளே அதிகம். நீங்கள் தாயத்தை வேறு யாருக்காவது கொடுங்கள்" என்றார். அதற்கு அந்த சன்னியாசி "தம்பி! இந்த தாயத்து உனக்குத்தான் அளிப்பேன். ஆனால் இது வேண்டாம் என்றால் நீயே யாராவது நல்ல மனிதனுக்கு இதைக் கொடுத்துவிடு. கெட்டவர்களுக்குக் கொடுத்தால் விபரீதம் விளையும்," என்றார். இத்தனை நேரம் நடக்கும் சம்பவங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஆனந்தனுக்கு அந்த தாயத்தை தான் அடைய வேண்டுமென்று ஆசை உண்டாயிற்று. அவர் சன்னியாசியிடம் "விபரீதம் என்றீர்களே, அது என்ன?" என்று கேட்க, சன்னியாசி "முதலில் இதை நீண்ட நாட்கள் தன்னிடம் வைத்துக் கொள்ளக் கூடது. 


தவிர இதைசுயநலத்திற்காக மட்டுமே பயன் படுத்துபவன், தான் விரும்பிய பொருட்களை எல்லாம் முதலில் பெற்றாலும் நாளடைவில் மனதில் உற்சாகம் இழந்து விரக்தி அடைந்து விடுவான். வாழ்க்கையைத் துறந்து ஒரு சன்னியாசி ஆகி விடுவான். ஆனால் மோட்சமும் கிடைக்காது. அதை வேறு யாருக்காவது கொடுத்து விட்டாலும் அது மீண்டும் அவனையே வந்து அடையும். இதைமுதன் முதலில் அவனுக்குத் தந்தவர்களுக்கும் மோட்சம் கிடைக்காது" என்றார்.

அனால் ஆனந்தனின் மனதைப் புரிந்து கொண்ட புர்ஷோத்தமன் "நண்பா, நீ இதை விரும்புகிறாய் எஅனத் தோன்றுகிறது. இந்த தாயத்தை நீயே எடுத்துக் கொள்" என்று கூறி ஆனந்தனுக்கேக் கொடுத்து விட்டார். அவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அதைப் பெற்ற்க் கொண்டார். ஆனந்தன் தான் விரும்பிய பொருட்களெல்லாம் தாயத்தின் உதவியால் பெற்றுக் கொண்டார். ஆனால் அதையெல்லாம் தனக்காகவே சுயநலத்துடன் பயன்படுத்திக் கொண்டார். ஓர் ஆண்டுக்குள் தான் விரும்பியதெல்லாம் பெற்றபின் ஆனந்தன் அந்த தாயத்தை வேறு யாருக்கோ அளித்துவிட்டார். ஆனால் அவருக்கு வாழ்க்கையில் உற்சாகம் சிறுது சிறிதாகக் குன்றியது. அந்த தாயத்து மீண்டும் மீண்டும் அவரிடம் திரும்பி வந்தது. ஆனால் அவருக்கு வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டு சன்னியாசி ஆகிவிட்டார்.


அவர்து நண்பர் புர்ஷோத்தமன் ஆனந்தன் நிலை கண்டு வருந்தினார். "இந்த தாயத்தை உனக்கு அளித்து உன் வாழ்க்கையை கெடுத்ததே நான்தான்! இதற்குப் பரிகாரமாக, உன்னிட மிருந்து கூடிய சீக்கிரம் தாய்த்தை நான் வாங்கிக் கொள்கிறேன்" என்றவர் திடீரென இறந்து விட்டார்.

மேற்கண்ட சம்பவங்களைக் கூறி முடித்த ஆனந்தர், "கமல் எனக்கும் இறந்து போன உன் தந்தைக்கும் மோட்சம் கிடைக்காது. இதை நீ  பெற்றுக் கொண்டு, வேண்டியவற்றைப் பெறுவாய்.ஆனால் என்னைப் போல் சுயநலக்காரனாக இருந்தால், என்னைப் போல துன்பம் அனுபவிப்பாய்" என்று கூறி அந்த தாயத்தினை கமலுக்குக் கொடுத்தார். "என் தந்தையின் நண்பரே மிக்க நன்றி" என்று கூறி தாயத்தினைப் பெற்றுக் கொண்ட கமல், "இதைப் பெற்றுக் கொள்வதன் மூலம், என் தந்தைக்கும் உங்களுக்கும் மோட்சம் கிடைக்குமெனின்ல் அதைவிட மகிழ்ச்சியான விஷயம் எதுவுமில்லை. நான் சுயநலக்காரன்தான். அது தெரிந்து தான் என் தந்தை என்னை உங்களிடம் இந்த தாயத்தைப் பெற்றுக்கொள்ள அனுப்பினார். நான் இந்த தாயத்தினை வைத்துக் கொள்வதால் எனக்கு நன்மைகளும் ஏற்படலாம் தீமைகளும் ஏற்படலாம். ஆயினும் என்னுடைய சுயநலமும் தங்களுக்காகப் பயன்படும் எனில் அது ஒரு விதத்தில் ப்ரொபகாரமே ஆகிறது வருகிறேன்," என்று கூறி தாயத்துடன் சென்றான்.


தாயத்து கமலிடம் வந்ததிலிருந்து, அவன் விரும்பிய பொருட்கள் எல்லாம் கிடைக்கத் தொடங்கின. ஆனால் ஆனந்தருடைய வார்த்தைகளைக் கேட்டதிலிருந்து கமலி மனம் சற்று மாறத் தொடங்கியது. தாயத்தின் மகிமையினால் தனக்குக் கிடைத்தப் பொருட்களை மற்றவர்களுக்கும் வழங்கத் தொடங்கினான்.


இவ்வாறாக முழு சுயநலவாதியாக இருந்த கமலின் குணம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது. இவ்வாறு ஓர் ஆண்டு கழிந்தது.
கமல் வசதியுடன் தானும் வாழ்ந்து, பிறரையும் வாழவைத்துக் கொண்டிருக்கையில், ஒருநாள் சன்னியாசி ஆனந்தன் அவனைத் தேடி வந்தார். அவனிடம் தாயத்தினைக் கேட்டார். கமலும் உடனே அந்த தாயத்தினை அவரிடம் கொடுத்து விட்டான். "கமல் உன் தந்தைக்கு மோட்சம் கிடைத்து விட்டது. எனக்கும் உன்னுடைய பரோபகாரச் செயல்களால் மோட்சம் கிடைத்டுவிடும். இனி உனக்கு இந்த தாயத்து தேவையில்லை. ஏனெனின்ல் நீ இதை அதிக நாள் வைத்திருக்கக் கூடாது" என்று சொல்லிவிட்டு, அந்த தாயத்தைக் கண்காணாமல் எங்கோதூக்கி எறிந்து விட்டார்.


இக்கதையைக் கூறி முடித்த பின் வேதாளம், "விக்கிரமா? ஒரு விதத்தில் கமலுடைய ச்யநலம் பரோபகாரத்துக்கு உதவியது. அப்படியானால் சுயநலமும் ஒரு விதத்தில் நன்மை தருவதுதானா? எந்த தாயத்து ஆனந்தனை வாழ்க்கையில் விரக்தி அடையச் செய்ததே, அதே தாயத்து கமலுக்கு எந்த தீமையும் விளைவிக்கவில்லை. இது ஏன்? இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரிந்தும், நீ மவுனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்" என்ரது.


அதறு விக்கிரமன் "சுயநலம் நல்லதல்ல. ஆனால் சுயநலமாக இருந்தும் பிறருக்கு தீங்கு விளைவிக்காமல், பலரும் பயன் அடையும்படி இருந்தால், தவறு இல்லை. கமல் சுயநலவாதிதான் ஆனால் கமலுடைய தந்தையின் இயல்பான பரோபகார குணம் கமலுக்கும் சிறிதளவு இருந்தது. ஆகவே  தாயத்து  அவனுடைய  வாழ்வின் நிம்மதியை குலைக்க வில்லை" என்றான்.


விக்கிரமனது இந்த சரியான பதிலினால் அவனது மவுனம் கலையவே, பழையபடி அவன் சுமந்து வந்த உடலோடு வேதாளம் உயரக் கிளம்பிப் போய் முருங்க மரத்தில் ஏறிக் கொண்டது. 


 

ஆனந்தனின் அமரகாவியம்


தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீது ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின் கீழே இறங்கி அவன் அதைச் சுமந்துக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்து "மன்னனே, நீ இப்படி சிரமப்படுவது ஏன்? இந்த பயங்கர இரவில் இந்த முயற்சியை யாருக்காக மேற் கொண்டிருக்கிறாய்? நீ உதவுகிறாயே. அவன் இதைப் பெறத்தகுதி பெற்றவனா? இதை எல்லாம் யோசித்துப் பார்த்தாயா? இதை எல்லாம் ஏன் கேட்கிறேன் என்றால் நீயும் அரசகுமாரன் அனங்க பாலன் ஆனந்தனுக்கு உதவியது போல யாருக்காவது வீணாக உதவுகிறாயோ என்னவோ? உனக்கு வழியில் சிரமம் தெரியாது இருக்க அந்தக் கதையைக் கூறுகிறேன். கவனமாகக் கேள்" என்று கதையைச் சொல்லத் தொடங்கியது.


ஆலந்தூரிலிருந்த ஆனந்தன் என்பவன் தான் புகழ் பெற்றவனாகத் திகழ வேண்டும் என்று எண்ணினான். அவன் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். ஆனாலும் உழைத்துச் சம்பாதித்து சிக்கனமாக இருந்து, வாழ ஒரு வீட்டை வாங்கி விட்டான். தன் மனைவிக்கும் நகைகள், பட்டுப் புடவைகள் என்று வாங்கியும் கொடுத்தான். ஒருவாறாக வாழ்க்கையில் நிலைத்து அவன் சுகமாக நாட்களைக் கழித்து வந்தான்.
கொஞ்சம் வசதி ஏற்பட்டதும் தான் புகழ் பெற ஏதாவது ஒரு அரிய செயலைச் செய்ய வேண்டும் என்று அவன் எண்ணினான். ஏனெனில் அப்போது வசதியாகப் பெரிய மனிதனைப் போல வாழ்ந்த போதும் அவன் தன்னை யாரும் புகழ் வில்லையே என்று நினைத்ததே அதற்குக் காரணம். அவன் பலரிடம் தான் வாழ்ந்து வரும் உயரிய வாழ்வைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிப் பார்த்தான். ஆனால் அவன் கூறியதை யாரும் சட்டை செய்ய வில்லை.

அந்த ஊரில் புராண கதா காலட்சேபம் செய்யப் பரமேசுவரர் என்பவர் வந்தார். அவர் ஒரு மாத காலத்திற்கு ராமாயணப் பிரசங்கம் செய்தார். அவரை ஊரில் எல்லோரும் புகழ்ந்தார்கள் தினமும் அவரை யாராவது அழைத்துப் போய் விருந்தும் வைத்தார்கள். ஆனந்தனும் ஒரு நாள் தன் வீட்டிற்கு வந்து சாப்பிடும்படி அழைத்தான். அவரும் அவனது வீட்டிற்குச் சென்றார்.
சாப்பிட்டு முடித்ததும் அவன் பரமேசுவரரிடம் "இராமாயணத்தில் ராமர் பல கஷ்டங்களைப் பட்டதாக நீங்கள் கூறி வருகிறீர்கள்.

ஆனால் ராமரின் கஷ்டங்கள் அவரது குடும்ப சம்மந்தப்பட்டவை தான். தன் தந்தை கொடுத்த வாக்கை காக்க வன வாசத்தை மேற்கொண்டார். தன் மனைவியை அபகரித்தான் என்பதற்காக அவர் ராவணனுடன் போர் புரிந்தார். இந்த மாதிரிப் பிரச்சினைகள் எல்லாக் குடும்பங்களிலும் தான் இருக்கின்றன. ஆனால் ராமரை மகாபுருஷர் என்று வர்ணித்து வால்மீகி முனிவர் ராமாயணத்தை எழுதி உலகப் புகழ் பெற்றார். அதனால் எல்லோரும் ராமரைக் கடவுளாகக் கருதி வழிபடுகிறார்கள். எனவே சாதாரணமானவர்களைப் போற்றி ஏன்  காவியங்கள் எழுதி ராமரைப் போல அவர்களையும் தெய்வப் பிறவிகளாக்கவில்லை?" என்று கேட்டான்.


பரமேசுவரரும் "நீ கேட்ட கேள்வி மிக முக்கியமானதே. ராமாயணத்தில் வரும் நிகழ்ச்சிகள் போல உலகில் எந்த நாட்டிலும் எந்தக் குடும்பத்திலும் நடைப் பெற்றே வருகின்றன. ராமர் அவதாரம் எடுத்தது நல்லவர்களைக் காக்கவும் கெடுதல் செய்பவர்களை அழிக்கவும் தான். அதனால் பகவானே ராமராக மானிட ஜென்மம் எடுத்து சாதாரண மனிதனைப் போலக் கஷ்ட நஷ்டங்களை அனுபவித்தார். எனவே அவரை அவதார புருஷர் என வால்மீகி முனிவர் எழுதினார். ராமரின் சரிதத்தை வால்மீகி எழுதியது போல வேறு யாரும் ஒருவரைப் பற்றி  எழுதியதாக எனக்குத் தெரிய வில்லை. அதனால் தான் ராமரை எல்லோரும் தெய்வமாகக் கருதுகிறார்கள்" என்றார்.

அப்போது அவன் "ஐயா! நான் என் கதையைக் கூறுகிறேன். அதை ராமாயணம் போல நீங்கள் எழுதிக் கொடுங்கள். என்னை எல்லோரும் நினைத்துக் கொண்டே இருப்பார்கள். உங்களுக்கும் வால்மீகியைப் போலப் பேர் கிடைக்கும்" என்றான். பரமேசுவரரும் "சரி, உன் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கூறு. அவை ராமருடையவை போல உள்ளனவா என்று பார்க்கலாம்" என்றார். அவனும் தன்னைப் பற்றிக் கூறவே அவரும்" நீயே உன் கதையை வால்மீகி முனிவர் எழுதியது போல எழுதி எல்லோருக்கும் சொல்லலாமே. உன் திறமை வால்மீகி முனி வரது போலவே உன்னுள் மறைந்துள்ளது" என்றார்.

அதன் பின் அவன் தன் வரலாற்றைச் செய்யுள் வடிவில் எழுதி அதைத் தன் மனைவிக்குப் படித்துக் காட்டி "எப்படி இருக்கிறது நான் எழுதிய காவியம்?" என்று கேட்டாள். அவளும்  "ராமாயணத்தை எவ்வளவு தடவை நீ கேட்டாலும் சலிப்பு அடைவது இல்லையே. அது போல இதை கேட்டால் சலிப்பு அடைவது ஏனா?" அது இனிமை யாக இருப்பதால் கேட்க முடிகிறது" என்றாள் அவள். அப்போது ஆனந்தன் "ஓ! லவனும் குசனும் ராமாயணத்தை இனிமையாகப் பாடிப் பரப்பினார்கள். நானும் என் பேரன்களிடம் இதைப் பாடச் சொல்லிப் பரப்புகிறேன்" என்று எண்ணித் தான் இயற்றியதைப் பாடச் சொன்னான்.

அவர்களோ "இந்தக் கதை நன்றாகவே இல்லை. இராமாயணத்தைப் பாடிக் காட்டுவது போல இதைப் பாட முடியாது" என்று கூறி விட்டு ஓடி விட்டார்கள்.

தான் எழுதிய தன் கதையைக் கேட்க யாராவது கேட்பார்களா என்று அவன் தன் ஊரில் இரண்டொருவரை அணுகினான். அவர்கள் அவனைக் கண்டதுமே ஓட்டம் பிடித்தார்கள் இனி அந்த ஊரில் யாரும் கேட்க மாட்டார்கள் என்று எண்ணி அவன் அடுத்த ஊரை நோக்கிச் சென்றான். சற்று தூரம் போனதுமே ஒரு மரத்தடியில் ஒரு இளைஞன் நினைவு இழந்து விழுந்து கிடப்பதைக் கண்டான். அவனைத் தூக்கி ஒரு வண்டியில் போட்டு ஆனந்தன் தன் ஊருக்குக் கொண்டு போய் ஒரு வைத்தியரிடம் காட்டினான். அவரும் அந்த  இளைஞன்  ஏதோ ஒரு விஷக்கனியைச் சாப்பிட்டிருக்க வேண்டும் என்று கூறி மூன்று நாட்கள் சிகிச்சை அளித்தார்.

நான்காவது நாள் அவன் தன் நினைவு பெற்று எழுந்து உட்கார்ந்தான். தன்னைக் காப்பாற்றியன் ஆனந்தன் என்று அறிந்த அந்த இளைஞன் அவனுக்கு நன்றி செலுத்தினான். அப்போது ஆனந்தன் "நன்றி செலுத்தியது சரி. நான் என் சரிதையைக் காவியமாக எழுதி இருக்கிறேன். அதைப் படிக்கிறேன் கேட்டு எவ்வளவு நன்றாக இருக்கிறது என்று கூறு" எனக் கூறித்தான் எழுதி வைத்துள்ளதைப் படிக்கலானான். இளைஞனும் அதைக் கேட்கலானான். ஆனால் வெகு நேரம் வரை அதைக் கேட்டுக் கொண்டிருக்கப் பொறுமை இல்லை. ஆனால் தன்னை ஆனந்தன் காப்பாற்றினானே என்பதற்காகப் பல்லைக் கடித்துக் கொண்டு பேசாமல் இருந்தான்.

அப்போது ஆனந்தன் "பேஷ்! நீ இதைக் கேட்டு ரசித்தாய். இனி இதற்கு மன்னரின் அங்கீகாரம் கிடைக்கப் பாடுபடுகிறேன்" என்றான். அப்போது அந்த இளைஞன் "நான் மன்னன் அல்ல என்றாலும் மாறுவேடத்தில் வந்த இளவரசனே நான் சொன்னால் என் தந்தை கேட்பார்" என்றான். அதைக் கேட்ட ஆனந்தன் மகிழ்ந்து போய் "ஆகா! என் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம் என் இந்தக் காவியம் ராமாயணத்தைப் போலப் போற்றிப் புகழ்ந்து பேசப் பட வேண்டும். அதை நீங்கள் செய்து விட்டால் எனக்கு நன்றி செலுத்தியது போலாகிவிடும்" என்றான்.


அதைக் கேட்ட இளவரசன் அனங்கபாலன் திகைத்துப் போனான். வால்மீகியின் ராமாயணம் எங்கே? இவன் எழுதிய இந்த குப்பை எங்கே! இவ்வாறு யோசித்த இளவரசன் அவனிடம் "சரி என்னைப் போல இதை இன்னமும் எத்தனை பேர்கள் கேட்டார்கள்?" என்று விசாரிக்கவே ஆனந்தனும் உற்சாகமாக "இது  வரை உங்களையும் சேர்த்து மொத்தம் பன்னிரண்டு பேர்கள் கேட்டிருக்கிறார்கள்" என்றான்.

அப்போது அனங்கபாலன் "நம் நாட்டின் மக்கள் தொகை பத்து லட்சம். நீ கூறிய பன்னிரண்டு பேர்கள் போக மீதம்  உள்ளவர்கள் உன் காவியத்தைப் புகழ்ந்து பேச ஏற்பாடு செய்கிறேன். ஆனால் நீ எனக்கு ஒரு வாக்குக் கொடுக்க வேண்டும் வால்மீகி முனிவர் தம் வாழ் நாளில் ராமாயணம் ஒன்றைத் தான் எழுதினார். அவரைப் போல இந்த ஒரு காவியம் எழுதியதோடு நிறுத்தி விட வேண்டும் இனிமேல் எதுவும் எழுதக் கூடாது" என்றான். ஆனந்தனும் அந்த வாக்கைக் கொடுத்தான். அனங்க பாலன் ஆனந்தனைத் தன்னோடு கூட்டிக் கொண்டு தலைநகருக்குச் சென்றான். அங்கு அவன் தன் தந்தையிடம் ஆனந்தனை அறிமுகப்படுத்தி "இவர் வால்மீகி போன்ற கவிஞர். ராமாயணத்திற்கு இணையாக இவர் ஒரு காவியம் எழுதி இருக்கிறார். அதனை நாட்டில் பிரபலப் படுத்த வேண்டும். இவருக்கு ஒரு உயரிய பதவியும் அளிக்க வேண்டும்" என்று கூறி ஆனந்தன் எழுதிய காவியத்தின் ஒரே பிரதியாக இருந்ததை மன்னனிடம் நீட்டினான்.

மன்னனும் அதன் மீது ராஜமுத்திரை போட்டு அனங்கபாலனிடம் கொடுத்தான். அவனும் அதை பத்திரமாக வைத்திருப்பதாகக் கூறி எடுத்துச் சென்றான். அன்று முதல் நாடெங்கிலும் ஆனந்தன் ராமாயணத்தைவிட உயர்ந்த காவியம் ஒன்று எழுதி இருக்கிறான் என்று பேசப் பட்டது. ஆனால் அந்தக் காவியத்தை யாரும் படித்துப் பார்த்ததாகக் கூறவில்லை. அந்தக் காவியத்தின் ஒரே பிரதி இளவரசனிடம் இருந்தது அதைப் படித்து விட்டுத் தருவதாகக் கேட்டவர்களிடம் எல்லாம் அவன் "அது நெருப்புப் பிடித்து எரிந்து போயிற்று. ஆனந்தனிடம் அதை மீண்டும் எழுதச் சொன்னால் எழுத முடியாது என்று கூறி விட்டான். எனவே அது ஒன்று இருந்தது என்று பேசிக் கொண்டு தான் இருக்க முடியுமேயொழிய அதனை யாராலும் படிக்க முடியாது என்றே கூறி வந்தான். ஆனந்தனின் அமரகாவியத்தின் கதி இப்படி ஆயிற்று.


வேதாளம் இந்தக் கதையைக் கூறி "ஆனந்தனின் காவியத்தின் புகழைப் பரப்புவதாகக் கூறிய அனங்கபாலன் அதை வாங்கி வைத்துக் கொண்டு அதை யாருக்கும் படிக்க ஏன் கொடுக்கவில்லை? அதைப் படிக்க விரும்பியவர்களிடம் அது எரிந்து போய் விட்டதாக ஏன் கூறினான்? இக்கேள்விகளுக்குச் சரியான விடைகள் தெரிந்திருந்தும் நீ கூறா விட்டால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகி விடும்" என்றது.

விக்கிரமனும் "ஆனந்தனிடம் இருந்தது அவன் எழுதிய ஒரே பிரதி. அதை அவன் பன்னிரண்டு பேர்களுக்கு மட்டுமே படித்துக் காட்டினான்.
அதைக் கேட்டவர்கள் யாருமே அதைப் பாராட்டவில்லை. அது மகாமட்டமானது என்றும் அதற்குப் போய் ராஜ முத்திரை வைக்க வேண்டிய நிலை வந்ததே என எண்ணியே அனங்கபாலன் அதனை யாரும் படித்து விடக் கூடாதே என்று எண்ணி மனம் குமறினான்.


அதற்கு வழி என்ன என்று யோசித்து பார்த்தான் முடிவில் அதனை வாங்கி வைத்துக் கொண்டு அது தீப்பிடித்து எரிந்து விட்டதாகக் கூறினான்" என்றான்.
விக்கிரமனின் சரியான இந்த பதிலால் அவனது மெளனம் கலையவே அவன் சுமந்து வந்த உடலோடு வேதாளம் உயரக் கிளம்பிப் போய் மீண்டும் முருங்க மரத்தில் ஏறிக் கொண்டது.

 

தேவயானியின் அன்பு

 
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மரத்திலேறி அதில்
தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில் அதனுள்ளிருந்த வேதாளம், "மன்னா! நீ நேர்மையானவன் என்பதும், குடிமக்களின் நலனையே பெரிதும் மதிக்கும் குணசீலன் என்பதும் நான் அறிவேன்.
 
ஆனால் உன்னைப்போன்ற உத்தமமான மன்னர்கள் கூட சில சமயங்களில் தன் சுயநலத்திற்காக நெறி தவறி தவறான பாதையில் செல்வதுண்டு. அத்தகைய மன்னர்களில் ஒருவனின் கதையை உனக்குக் கூறுகிறேன், கேள்!" என்றது.
 
விஜயபுரி ராஜ்யத்தை ஆண்டு வந்த உக்கிரசேன மன்னருக்கு, வீரசேனன் என்ற மகன் இருந்தான். சிறு வயது முதலே வீரசேனன் கல்வி கேள்வி களில் சிறந்தவனாக விளங்கினான். வாலிபன் ஆனதும் போர்க்கலைகள், ராஜதந்திரங்கள், அரசாங்க நிர்வாகம் அனைத்தையும் கற்றுக் கொண்டு, ஓர் இளவரசனுக்குரிய சகல லட்சணங்களுடன் திகழ்ந்தான். சில சமயங்களில், சிக்கலான அரசாங்க விகாரங்களில் உக்கிரசேனரே தன் மகனைக் கலந்து ஆலோசிப்பதுண்டு. தன் மகனுக்குப் பட்டம் சூட்டினால், அவன் மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்வான் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட, ஒரு நன்னாளில் வீரசேனனுக்கு முடிசூட்டி விட்டுத் தான் ஓய்வு பெற்றார்.
 
மன்னர் ஆனபின் வீரசேனன் ஓய்வின்றி உழைத்து தன் தந்தையை விட சிறப்பாக ஆட்சியை நிர்வகித்தான். நாட்டின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை வகுப்பதில் மந்திரிகளுடனும், சேனாதிபதிகளுடனும், அதிகாரிகளுடனும் பெரும்பாலான நேரத்தை செலவழித்தான். அவனுடைய அளப்பரிய திறமையினால், நாடு சில ஆண்டுகளிலேயே மகோன்னத நிலையை அடைந்தது.
 
வீரசேனனுக்குத் திருமணம் செய்து வைக்க அவன் தந்தை விரும்பினார். அதைப் பற்றிக் கேட்டதும், வீரசேனன் தனக்குரிய பெண்ணைத் தானே தேர்ந்தெடுப்பதாகக் கூறினான். குடிமக்களின் நலனுக்காகவே நாளெல்லாம் பாடுபட்ட வீரசேனனுக்கு தான் ஓர் எளிய குடும்பத்துப் பெண்ணை விவாகம் செய்வதுதான் சரியாக இருக்கும் என்று தோன்றியது. மனைவியாக வரப்போகும் பெண் கல்வியில் சிறந்தவளாகவும், புத்திசாலியாகவும், தன்னுடைய அரசாங்க வேலைகளில் தனக்கு யோசனை கூறும் அளவிற்கு அறிவு உடையவள்ஆகவும் இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்த்தான். அதற்காக, தன் ராஜ்யத்தில் உள்ள இளம் பெண்களை அழைத்து, அவர்களுக்குள் போட்டி வைத்து, தனக்குத் தகுந்த பெண்ணைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தான்.
 
 அதற்காக அறிவிப்பு பிறப்பித்ததும் ராஜ்யத்திலுள்ள ஆயிரக்கணக்கான பெண்கள் போட்டி போட்டு விண்ணப்பித்தனர்.
புத்திசாலித்தனம், சமயோசிதம், நினைவாற்றல் ஆகியவற்றை வெளிப்படுத்தும் பல கடுமையான போட்டிகளுக்கு அவர்களை உட்படுத்தி, அவர்களுள் இருவரைத் தேர்ந்தெடுத்தான். அவர்களில் ஒருத்தி தேவயானி! மற்றொருத்தி சிவரஞ்சனி! இருவரும் எல்லாப் போட்டிகளிலும் சரிசமமாக இருந்ததால், இருவரையும் மேலும் சிலப் போட்டிகளுக்கு அழைத்தான்.
 
இருவரிடமும், "உங்களில் ஒருத்தி மட்டுமே என் மனைவியாக முடியும். நான் இப்போது தரும் சவாலை யார் வெற்றிகரமாக முடிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து நான் அதை முடிவு செய்வேன். ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் சவாரி செய்யும் இளைஞன் ஒருவனை நீங்கள் என்னிடம் அழைத்து வர வேண்டும். யார் வெற்றி பெறுகிறீர்கள் என்று பார்க்கலாம்!" என்றான்.
 
சற்று நேரம் சென்றபின், அந்த இரு பெண்களும் வீரசேனன் முன் இரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி சூரிய ஒளி படும்படி மன்னன் முன் வைத்தனர். புராணத்தின்படி சூரியபகவான் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சஞ்சாரம் செய்பவர்! இருவரின் மதி நுட்பத்தையும் கண்டு வீரசேனன் வியந்து போனான். சற்று நேரம் யோசித்து விட்டு,"பெண்களே! கடைசியாக ஒரு போட்டி வைப்பதற்கு முன் உங்களைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். உங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளுங்கள்!" என்றான்.
 
உடனே சிவரஞ்சனி சற்றும் தயங்காமல், "நான் ராமாபுரத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி மாணிக்கத்தின் மகள்!" என்றாள். ஆனால், தேவயானி, "நீங்கள் என்னுடைய அறிவைத்தான் சோதிக்க வேண்டுமே தவிர, நான் யார் என்பது போன்ற ஆராய்ச்சிகளில் இறங்கக்கூடாது" என்றாள். ஆனால் வீரசேனன், "உன்னுடைய பெற்றோரைப் பற்றிக் கூற நீ ஏன் தயங்க வேண்டும்? நீ ஏதோ சொல்லக்கூடாத ரகசியத்தை மறைக்கிறாய் என்பது விளங்குகிறது" என்று வற்புறுத்தினான்.
 
வெகுநேரம் தயங்கியபின், தேவயானி, "நான் கோசல ராஜ்யத்து யுவராணி தேவயானி.
 
உங்களை எப்படியாவது திருமணம் செய்து கொண்டு விடவேண்டும் என்ற ஆசையினால், எளிய குடும்பத்துப் பெண்ணைப் போல் இதுவநடித்தேன். தயவு செய்து என்னைப் புறக்கணித்து விடாதீர்கள்!" என்று வேண்டினாள்.
 
"அப்படியானால், உண்மையை மறைத்து நீ போட்டியில் பங்கேற்று என்னை இதுவரை ஏமாற்றிஇருக்கிறாய். எளிய குடும்பத்துப் பெண்ணை மட்டுமே நான் மணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று அறிவித்துள்ள நிலையில் என் லட்சியத்திற்குப் புறம்பாக என்னால் நடக்க முடியாது!" என்றான் வீரசேனன். அதற்கு அவள், "நான் உங்களை நேசித்தேன், ஆகையால் உங்களை திருமணம் புரிந்து கொள்ள இங்கு வந்தேன். அதற்கான தகுதியையும் அடைந்தேன். என்னை நீங்கள் நிராகரிப்பதால் அதற்குக் கூடிய விரைவில் பதில் சொல்லியே ஆகவேண்டும்" என்று கூறியவாறு தேவயானி அங்கிருந்து வேகமாக வெளியேறிவிட்டாள்.
 
 வீரசேனன் சிலையென அப்படியே நின்று விட்டான். சிவரஞ்சனிக்கும் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கிருந்து சென்று விட்டாள்.
 
இதற்கு முன் வீரசேனன் தேவயானியைப் பார்த்தது கூடக் கிடையாது. ஆனால் அவளைப் பற்றி நிறையக் கேள்விப் பட்டிருக்கிறான். அவள் கோசல நாட்டின் மன்னனான அமரேந்திரனின் ஒரே மகள். அவளது தந்தைக்கு மிகவும் பிரியமானவள். அவர் முறையாக ஆட்சி செய்யாமல், எப்போதும் சதுரங்கம் விளையாடுவதில் தன் நேரத்தைக் கழிப்பவர். ஆகையால் அவர் மகள் ஆட்சிப் பொறுப்பை தன் கையில் எடுத்துக் கொண்டாள். சிறு வயதிலிருந்தே செல்லமாக வளர்ந்ததால், தேவயானி கர்வம் பிடித்தவளாக இருந்தாள். அவள் யதேச்சாதிகாரம் புரிந்ததால், கோசல மக்கள் பெரிதும் துன்புற்றனர்.
 
மிகுந்த அவமானத்திலும், கோபத்திலும் திரும்பிய தேவயானியை அவளுடைய தந்தை சமாதானப் படுத்தினார். அவர் நினைத்திருந்தால் விஜயபுரி மீது படையெடுத்து இருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யாமல் தன் மகளின் ஆசையை நிறைவேற்ற எண்ணினார். ஆகையால் வயதில் மூத்த மந்திரியை அழைத்து இது குறித்து விவாதித்தார். அதன்பிறகு, அவரிடம் வீரசேனனிடம் கொடுக்குமாறு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார்.
கோசலராஜ்ய மந்திரி வீரசேனனை அடைந்து அமரேந்திரன் எழுதிய கடிதத்தைக் கொடுத்தார். அதில் பின் வருமாறு எழுதியிருந்தது. "மதிப்பிற்குரிய வீரசேனரே! என் மகள் தேவயானி தான் யுவராணி என்ற உண்மையை மறைத்து, தாங்கள் நடத்திய போட்டிகளில் கலந்து கொண்டு, தங்களை ஏமாற்றியதற்கு அவள் சார்பாக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அவள் தங்கள் மீது கொண்டிருக்கும் அளவிடமுடியாத அன்புதான் அத்தகைய தவறை அவளை செய்யத் தூண்டியது. தயவு செய்து, அவளுடைய உணர்வுகளை மதித்து, அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமாய் நான் தங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.
 
இது வெறும் சுயநல நோக்குடன் கூடியதல்ல! தாங்கள் அவளை மணம் புரிந்தால் இந்த கோசல நாடு தங்களுக்கு உரியதாகி விடும். தங்கள் சாம்ராஜ்யம் விரிவடைந்தால், நன்மை அடையப்போவது தங்கள் ராஜ்யம்தான்! இப்போது கோசல நாட்டின் ஆட்சிப் பொறுப்பு தேவயானியிடம் இருந்தாலும், அவளை சரியாக வழி நடத்திச் செல்வோர் இல்லாததால், எங்கள் நாட்டின் நிர்வாகம் சரிவர இல்லை. ஆனால், கோசல நாடும் தங்கள் ஆதிக்கத்தில் வந்தால், மகாதிறமைசாலியான நீங்கள் எங்கள் நாட்டையும் நன்றாக ஆட்சி செய்வீர்கள்! கோசல நாட்டு மக்களும் நன்மை அடைவார்கள். ஆகையால் உங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்து, நாட்டு மக்களின் நலன் கருதி, தேவயானியை மணம் புரிய சம்மதிக்கும்படி நான் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.
 
" அந்தக் கடிதத்தைப் படித்தபின் வெகுநேரம் யோசித்த வீரசேனன் இறுதியில் கோசலநாட்டு மந்திரியிடம் தேவயாணியை மணக்க சம்மதம் தெரிவித்தான்.
 
இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம், "மன்னா! இந்த வீரசேனனின் செயலை என்னவென்று சொல்வது! தன் லட்சியமே பெரிது என்று முழங்கிக் கொண்டிருந்தவன், இறுதியில் கோசல நாடு தனக்குக் கிடைக்கும் என்ற பேராசையில் லட்சியத்தைக் காற்றில் பறக்க விட்டுவிட்டான்.
தேவயானியை மணக்க மறுத்தால் எங்கே அவர்கள்  போர் தொடுப்பார்களோ என்ற பயத்தில், தன் கொள்கையை குழிதோண்டிப் புதைத்து விட்டான். நேர்மையானவன், லட்சியவாதி என்று விஜயபுரி மக்கள் நம்பிக் கொண்டிருந்த அவர்கள் நாட்டு மன்னன், இறுதியில் பேராசையினால், தன் கொள்கையை கைவிட்டான். வீரசேனனைப் பற்றி உன் கருத்து என்ன? உனக்கு விளக்கம் தெரிந்து இருந்தும் மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்!" என்றது.
 
அதற்கு விக்கிரமன், "எளிய குடும்பத்துப் பெண்ணை மணம் புரிந்தால், குடிமக்களுடன் உள்ள பிணைப்பு அதிகமாகும் என்று தோன்றியதால், மேற்கூறிய லட்சியத்தை வீரசேனன் மேற்கொண்டான். ஆனால், தேவயானியின் தந்தை எழுதியிருந்த கடிதம் அவனுடைய கருத்துகளை மாற்றின. எந்த ஒரு நாடும் அருகிலுள்ள ராஜ்யங்களுடன் போரின்றி, நல்லிணக்கத்துடன் இருந்தால்தான் அமைதி நிலவும். தேவயானியை மணம் புரிவதால், அவன் ராஜ்யம் விரிவடைவதால் அவன் படைப்பலம் பெருகும். தவிர, கோசல நாடும் தன் ஆதிக்கத்தில் வந்தால் அதுவரை சீர்குலைந்திருந்த கோசல நாட்டு நிர்வாகம் மேன்மையடைந்து, அந்த நாட்டு மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள். நாட்டு மக்களின் நலன் கருதும் மன்னன் தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தரக்கூடாது. தனது லட்சியத்தைவிட, புதியதொரு ஒப்பந்தத்தால் நாட்டு மக்கள் மேலும் நன்மை அடைவார்கள் என்றால், மன்னன் தனது பழைய லட்சியத்தை கைவிடுவதில் தவறில்லை. ஆகையால், எந்தக் கோணத்திலிருந்து நோக்கினாலும், இரண்டு நாட்டு மக்களின் நலன் கருதி வீரசேனன் தேவயானியை மணக்க முடிவு செய்தது தவறே அல்ல!" என்றான்.
 
 விக்கிரமனது இந்த சரியான பதிலினால் அவனது மௌனம் கலையவே, அவன் சுமந்து வந்த உடலிலிருந்த வேதாளம் மீண்டும் அந்த உடலுடன் பறந்துபோய் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.
 

வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள்

 
ன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி, அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேஇறங்கி, அவன் அதைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லும் போது அதன்னுள்ளிருந்த வேதாளம், "மன்னா! இந்த நள்ளிரவில் மயானத்தை நோக்கி நீ செல்வது எனக்கு வியப்பைத் தருகிறது. உனது நோக்கம் தான் என்ன? யாருக்காவது உதவி செய்வதற்காக இவ்வாறு நீ நடு இரவில் சுற்றித் திரிகிறாயா? அல்லது யாருடைய அறிவுரையைக் கேட்டு அதன்படி உன்னை நீ இவ்வாறு வருத்திக் கொள்கிறாயா? சில சமயங்களில் மேதாவிகள் என்று சிலரை நம்பி அவர்கள் கூறும் உபதேசங்களின்படி நாம் நடந்தோமானால், நமக்குக் குழப்பமும், துன்பமும்தான் உண்டாகும். மேதாவிகள் சிலர் ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு மாதிரி யோசனை கூறி உன்னைத் தவறான வழியில் செலுத்தி விடுவார்கள்.
அத்தகைய ஞானவர்மர் என்ற குருவின் கதையைக் கூறுகிறேன், கேள்!" என்றது. ஆரவல்லி மலையடிவாரத்தில் ஞானவர்மர் ஒரு குருகுலம் நடத்தி வந்தார். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, அவர் யாத்திரை மேற்கொண்டு நாடெங்கிலும் உள்ள தன் பழைய மாணவர்களை சந்தித்துப் பேசி, அவர்களின் நலனையும், நாட்டு நடப்பையும் அறிந்து வருவார்.
 
ஒருமுறை அவர் அவ்வாறு செல்லும்போது, ஒரு கிராமத்தின் வழியே செல்ல நேர்ந்தது. கிராம எல்லையில் ஒரு மரத்தடியில் ஒரு சிறுவன் ஏதோ ஓலைச் சுவடிகளை கவனமாகப் படித்துக் கொண்டிருந்தது அவருடைய கவனத்தைக் கவர்ந்தது. மாடுகள் சுற்றிலும் மேய்ந்து கொண்டிருக்க, அப்போது அவனது தந்தை, "முத்து! இங்கே வா! வந்து கஞ்சி குடித்து விட்டுச் செல்!" என்றார்.
 
அப்போது, அவனைப் பின் தொடர்ந்து வந்த ஞானவர்மரைக் கண்டு எழுந்து நின்று மரியாதை செலுத்திய முத்துவின் தந்தை, "ஐயா! நீங்கள் யார்? சிறிது கஞ்சி குடிக்கிறீர்களா?" என்று உபசரித்ததும், ஞானவர்மர், "வேண்டாம்! மாடு மேய்க்கும் உன் பிள்ளை ஓலைச்சுவடிகளைப் பிடித்துக் கொண்டிருந்தது எனக்கு பெரும் வியப்பை அளித்ததனால், அவனைப் பின் தொடர்ந்து வந்தேன்!" என்றார். தொடர்ந்து, "உன் பிள்ளைக்குப் படிப்பு நன்றாக வரும் என்று தோன்றுகிறதே! அவனை ஏன் மாடு மேய்க்க அனுப்புகிறாய்?" என்று கேட்டார்.
 
அதற்கு அச்சிறுவனின் தந்தை, "அவன் படிக்க வேண்டும் என்று நானும் ஆசைப்படுகிறேன். ஆனால், என் பிள்ளையை யார் தங்கள் குருகுலத்தில் சேர்த்துக் கொள்வார்கள்? எங்கள் குலத்தொழில் மாடு மேய்ப்பது என்று தெரிந்தால், யாரும் அவனைச் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்!" என்றான்.
"அவனை என் குருகுலத்தில் நான் சேர்த்துக் கொள்கிறேன். உடனே அவனை என்னுடன் அனுப்பு!" என்று ஞானவர்மர் உத்தரவிட, "சாமி!" என்று கூவிக் கொண்டே அவர் காலடிகளில் சிறுவனின் தந்தை விழுந்து வணங்கினான்.
 ஞானவர்மர் உடனே முத்துவைத் தன்னோடு அழைத்துக் கொண்டு குருகுலம் திரும்பினார். அவர் எதிர்பார்த்தபடியே, முத்து மிக நன்றாகப் படித்தான். அவனுக்கு கணிதத்திலும், பொருளாதாரத்திலும் மிகுந்த ஆர்வம் இருந்தது. பத்து ஆண்டுகள் அவரிடம் பயின்றபின், முத்துவின் குருகுலவாசம் முடிவு பெற்றது.
 
அவனுக்கு விடை கொடுத்த ஞானவர்மர், "முத்து! உனக்கு இருக்கும் அறிவிற்கு நீ வியாபாரம் செய்தால் வாழ்வில் முன்னேற்றம் அடைவாய்! வியாபாரம் செய்ய புத்தியும், நல்ல உடல் உழைப்பும் தேவை! முயற்சி திருவினையாக்கும் என்பதைப் புரிந்து கொள்! அயராத உடல் உழைப்பும், விடா முயற்சியும் தான், உனக்கு மிகவும் தேவை! போ! போய் வியாபாரம் செய்! இடையிடையே என்னை வந்து பார்!" என்று அவனை வாழ்த்தியனுப்பினார்.
 
குருபக்தியில் சிறந்து விளங்கிய முத்து அவருடைய அறிவுரையை அப்படியேக் கடைப்பிடிக்கத் தீர்மானித்தான். தன்னுடைய தந்தைக்குச் சொந்தமான சிறிய நிலத்தையும், மாடுகளையும் விற்று, அதில் கிடைத்த பணத்தை மூலதனமாகக் கொண்டு நகரத்தில் ஒரு ஜவுளிக்கடை திறந்தான்.
குரு கூறியபடி தன் வியாபாரத்தின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராமல் உழைத்தான். ஆனால், அவன் எதிர்பார்த்தபடி வியாபாரத்தில் லாபம் கிட்டவில்லை.
அதனால் அவன் குருவிடம் சென்று யோசனைக் கேட்டான். "நல்ல லாபம் வேண்டுமென்றால் உழைத்தால் மட்டும் போதுமா? நீ வியாபாரத்தை விரிவாக்க வேண்டும்.
 
அதற்கு, அதிகமான மூலதனம் தேவை! அதனால், செல்வர்களாக இருக்கும் இன்னும் சிலரையும் உனது வியாபாரத்தில் கூட்டுச் சேர்த்துக் கொள்! பெரிய அளவில் வியாபாரம் நடத்து! லாபமும் அதிகமாக வரும்!" என்றார்.
 
குருவின் அறிவுரையை சிரமேற்கொண்ட முத்து, நகரத்தில் பல செல்வர்களை அணுகினான். இறுதியில் இருவர் அவனோடு கூட்டு சேர ஒப்புக்கொண்டனர். தொடக்கத்தில் செய்த முதலீட்டைப் போல் பல மடங்கு அதிகமாக முத்து முதலீடு இட்டான். தனது கடையை விரிவாக்கினான். இன்னும் சில இடங்களிலும் தன் கடைகளைத் திறந்தான். இவ்வாறு வியாபாரத்தைப் பல மடங்கு பெருக்கியதால் லாபமும் அதிகரித்தது. நகரத்தின் பெரும் புள்ளிகளில் அவன் ஒருவன் ஆனான். நகரத்து செல்வர் ஒருவர் அவனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து வைத்தார். முத்துவிற்குப் பெண் குழந்தை பிறக்க, அதற்கு அன்னபூரணி எனப் பெயரிட்டு நன்கு வளர்த்தான். பெண்ணும் பெரியவள் ஆனாள்.
 
வியாபாரத்தை மேலும் விரிவு படுத்துவதற்காக தனது கூட்டாளிகளைக் கலந்து ஆலோசித்தான். பிறகு வெளிநாடுகளுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்து லாபம் பெறலாம் என முடிவெடுத்தனர். அவ்வாறே அடுத்த மாதத்திலிருந்து வெளிநாடுகளுக்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
 
மூன்று மாதங்களுக்குப் பிறகு, தங்கத் தீவிற்கு ஆடைகள் தேவை என்பதைப் புரிந்து கொண்டு தனது பல லட்ச மதிப்புள்ள ஆடைகளுடன் நம்பிக்கைக்குப் பாத்திரமான குமாஸ்தாவையும் ஒரு கப்பலில் ஏற்றி அனுப்பி வைத்தான். தங்கத் தீவை அடைந்ததும் பூகம்பம் ஏற்பட்டதால் கப்பல் மூழ்கி விட்டது. இந்தச் செய்தியைக் கேட்டதும் முத்து மிகவும் பாதிக்கப்பட்டான்.
கூட்டாளிகள் இருவரும் கூட அவனை எதிரியைப் போல் நடத்தினர். இதனால் அவன் மிகவும் துன்பத்திற்கு ஆளானான். அந்த சமயத்தில் அவனது குரு தீர்த்த யாத்திரை மேற்கொண்டிருந்தார்.
அவர் அவனை வந்து பார்த்து, அவனது நிலைமையைக் கண்டு அவனுக்கு ஆறுதல் கூறும் வகையில், "முத்து, இந்த நேரத்தில் தான் நீ மனம் தளரக் கூடாது. வாழ்க்கையில் வெற்றி தோல்வி இயற்கைதான். ஒரு சமயம், ஒரு மரத்தில் ஒரு ஜோடிப் புறாக்கள் அமர்ந்திருந்தன.
 
அப்போது ஒரு வேடன்அவற்றை நோக்கி அம்பு எய்ய முயற்சி செய்வதைப் பார்த்த பெண்புறா ஆண்புறாவிடம் பறந்து விடலாம் என்று கூற, ஆண்புறா வானில் வட்டமிட்ட ஒரு கழுகைக் காட்டி பறந்து சென்றாலும் அபாயம் என்றும், கண்களை மூடிக் கடவுளைப் பிரார்த்தனை செய்வோம் என்றது. அவ்வாறே அவைப் பிரார்த்தனை செய்ய, வேடனைத் தற்செயலாக ஒரு பாம்பு கடித்துவிட, அவன் விட்ட அம்பு குறிதவறி கழுகின் மீது பட, கழுகு இறந்தது. புறாக்கள் தப்பித்தன! அதுபோல், ஏற்றத் தாழ்வுகள் இயற்கையின் நியதி என்று எண்ணிக் கொண்டு, கடவுளைப் பிரார்த்தனை செய்! இறுதியில் உனக்கு நன்மை உண்டாகும்!" என்றார்.
 
 இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, "மன்னா! குரு ஞானவர்மர் முத்துவிற்கு "வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு தீராத முயற்சியும் அயராத உழைப்பும் தேவை" என்று முதலில் அறிவுரை கூறினார்.
 
ஆனால் இறுதியில் ஒரு பறவையின் கதையைக் கூறிவிட்டு எல்லாம் காலத்தின் கையில் உள்ளது என்று கூறுகிறார். விதி வலியது என்று கூறி வேதாந்தத்தையும் இழுக்கிறார். இது விசித்திரமானதாகவும் முரண்பாடாகவும் தெரியவில்லையா? அவரது அனுபவம் அவருக்கு இதைத்தான் கற்றுக் கொடுத்ததா? இல்லை என்றால் வயது முதிர்ந்தால் ஏமாற்றமும் எதையும் லேசாக எடுத்துக் கொள்ளும் பக்குவமாக இருக்குமோ? அவரது இரண்டு அபிப்ராயங்களில் எது சரியானது, எது பொய்யானது? எனது இந்த சந்தேகங்களுக்கு விடை தெரிந்திருந்தும் நீ மௌனமாக இருந்தால் உனது தலை வெடித்து சுக்கு நூறாகி விடும்" என்றது.
 
அதற்கு விக்கிரமன், "குரு ஞானவர்மரின் வார்த்தைகளில் எவ்வித முரண்பாடும் இல்லை. அவர் முத்துவிற்கு ஆரம்பத்திலும், இறுதியிலும் கூறியது முற்றிலும் உண்மையே. மனிதன் முயற்சி எதுவும் எடுக்காமலும், உழைக்காமலும் இருந்தால் எவ்வித முன்னேற்றத்தையும் அடைய முடியாது. அவர் தனது முதல் அறிவுரையின் போது, இளைஞர்களுக்கு முயற்சியும் உழைப்பும் உயிர் மூச்சுக்குச் சமமாகும் என்று கூறினார்.
 
அதேபோல் வாழ்க்கையில் பல இன்னல்கள் ஏற்படலாம். அதை நம்மால் முன்பே கற்பனை செய்ய முடியாது. ஏனென்றால் சூழ்நிலைகள் மனிதர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. இவ்வாறு இருக்கையில், நாம் எப்பொழுது பொறுமையாகவும் கடவுள் மீது நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். இதைத்தான் அவர் இறுதியாகவும் கூறினார். இரண்டுமே உண்மைதான். ஆனால் அதை எவ்வாறு உபயோகப் படுத்த வேண்டும் என்பது மனிதனின் திறமை மற்றும் புத்திசாலித்தனத்தில்தான் இருக்கிறது!" என்றான்.
 
விக்கிரமனது இந்த சரியான விடையினால் அவன் மௌனம் கலையவே, வேதாளம் தான் தங்கிஇருந்த உடலுடன் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.
 

குற்றமற்ற நகரம்

 
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மரத்தில்ஏறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி, அவன் அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில் அதனுள்இருந்த வேதாளம், "மன்னா! எந்த லட்சியத்தை நிறைவேற்ற நீ அல்லும்பகலும் பாடுபடுகிறாய் என்று தெரியவில்லை. உன்னைப் போன்ற அறிவாளிகள் சிலர் தங்கள் லட்சியம் நிறைவேறப் பாடுபட்டபின், அந்த லட்சியம் கை கூடி வரும் வேளையில், மனம் குழம்பித் தவறான முடிவை எடுத்து விடுகின்றனர்.
 
மஞ்சுளா என்ற அறிவாளியான பெண் அதுபோல் தகுந்த சந்தர்ப்பத்தில் சரியான முடிவு எடுக்காமல் தவறிய கதையை உனக்குக் கூறுகிறேன், கேள்!" என்றது. ஜெயமங்கலம் என்ற கிராமத்தில் சங்கரன் என்ற ஒரு வியாபாரி இருந்தார்.
அவருக்கு மஞ்சுளா, கார்த்திகேயன், மணிகண்டன் ஆகிய மூன்று அழகிய குழந்தைகள் இருந்தனர். தன் மனைவி சுசீலாவுடன் நிம்மதியாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த அவர் வாழ்வில் விதி குறுக்கிட்டது.
 
ஜெயமங்கலத்திற்கு அருகே மணிநகர் என்ற நகரத்தின் நகராதிகாரியான சோமன் சங்கரனுக்கு தூரத்து உறவினர். அவனுக்குக் குழந்தை இல்லாததால், சங்கரனின் பிள்ளைகளில் ஒருவரை தத்து எடுத்துக் கொள்ள விரும்பினார். ஆனால் சுசீலாவும், சங்கரனும் அதற்கு இணங்கவில்லை.
 
ஒரு சமயம் மணிநகரில் ராமநவமி உற்சவம் விமரிசையாக நடந்த போது, சோமனின் வீட்டிற்கு சங்கரன் குடும்பத்தினர் விருந்தினர்களாகச் சென்றனர். அவர்களுக்கு சோமன் நன்கு விருந்து உபசாரம் செய்தான். அதன்பின் மறுபடியும் சங்கரனின் பிள்ளைகளில் ஒருவனை தத்துக் கொடுக்கும்படி கெஞ்சினான். சங்கரன் தம்பதியினர் சோமனுடைய வேண்டுகோளைத் திட்டவட்டமாக நிராகரித்தனர். கடுங்கோபம் கொண்ட சோமன், தனது பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி சங்கரன் மீது பொய் குற்றம் சாட்டி, குடும்பத்தோடு அவரை நாடு கடத்தி விட்டான்.
 
காட்டில் தஞ்சம் புகுந்த சங்கரன் அங்கே ஒரு ஆசிரமம் அமைத்து குடும்பத்தோடு வசிக்கலானார். குழந்தைகளுக்கு காட்டு வாழ்க்கை பிடிக்கவில்லை. அவர்களிடம் சங்கரன், "மகாபாரதத்தில் வரும் பாண்டவர்களுக்கு நல்ல காலம் பிறந்தது போல் நமக்கும் நல்ல காலம் வரும்!" என்று சமாதானம் கூறுவார். ஒன்பது ஆண்டுகள் கழிந்தன. குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்து விட்டனர். மூத்தப் பெண் மஞ்சுளா திருமண வயதை எட்டினாள். ஒருநாள், மாதங்க ராஜ்யத்து மன்னன் மணிவர்மன் அந்தக் காட்டிற்கு வேட்டையாட வந்தவன் திரும்பிச் செல்லும் வழி தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்ததான்.
அப்போது அவன் மஞ்சுளாவைக் கண்டான். உடனே அவளை நெருங்கி, "அழகிய பெண்ணே! நான் மாதங்க ராஜ்ய மன்னன் மணிவர்மன்! என் மனத்துக்குகந்த மங்கையை பல நாள்களாகத் தேடிக் கொண்டிருந்தேன். என் கற்பனையில் உருவான அழகி நீ தான்! உன்னுடன் இந்தக்கணமே கந்தர்வ விவாகம் செய்து கொள்ளத் துடிக்கிறேன்!" என்றான்.
 
இதைக்கேட்டு நாணத்தால் தலைகுனிந்த மஞ்சுளா, "அதற்கு என் தந்தையிடம் அனுமதி கோருங்கள்! அதோ தெரிகிறதே, அந்த ஆசிரமம் தான் எங்கள் இருப்பிடம்!" என்றாள்.
 
மஞ்சுளாவைப் பின் தொடர்ந்து சென்று ஆசிரமத்தையடைந்த மணிவர்மன் சங்கரனிடம் தன் விருப்பத்தைக் கூறினான். தன் மனைவியிடம் ஆலோசனை செய்தபின் கருத்துத் தெரிவிப்பதாகக் கூறிய சங்கரன் உள்ளே சென்று, தன் மனைவியிடம், "சுசீலா! நம் மஞ்சுளா ஒரு பட்டத்து ராணியாவாள் என்று நாம் கனவில் கூட நினைத்ததில்லை. ஆனால், நாம் நாடு கடத்தப்பட்டுள்ள விஷயத்தை இப்போது மன்னரிடம் தெரிவிக்க வேண்டாம். விவாகமாகிவிட்ட பிறகு சொல்லிக் கொள்ளலாம்" என்றார். அதற்கு சுசீலா சம்மதிக்க, உடனே அவர்கள் மஞ்சுளாவைத் தனியே உள்ளே அழைத்துத் தங்கள் முடிவைத் தெரிவித்தனர்.
 
அதற்கு மஞ்சுளா "நீங்கள் எல்லாரும் இந்தக் காட்டில் சிரமப்பட்டுக் கொண்டிருக்க, நான் மட்டும் சுகமாக அரண்மனையில் வசிக்க வேண்டுமா?" என்றாள்.
 
"வீணாகப் பிடிவாதம் பிடிக்காதே! "நாங்கள் இங்கே வசிக்கப் பழகி விட்டோம். உன்னுடைய தம்பிகளை உன்னுடன் அழைத்துப் போ! சரியான நேரத்தில் உன் கணவரின் செவிகளில் சோமனின் அக்கிரமத்தைப் பற்றிக் கூறி அவனுக்கு தண்டனை வாங்கித் தந்தபின், எங்களை உன்னிடம் அழைத்துக் கொள்" என்று மகளுக்கு புத்தி கூறினாள். மஞ்சுளாவும் அதற்கு சம்மதித்தாள்.
 
பிறகு வெளியே வந்த சங்கரன், மன்னரிடம் "மகாராஜா! இந்தத் திருமணத்திற்கு எங்கள் பூரண சம்மதம்! திருமணத்திற்குப் பிறகு மஞ்சுளாவையும், என் பிள்ளைகள் இருவரையும் அழைத்துச் செல்லுங்கள். நாங்கள் இன்னும் சிறிது காலம் காட்டுவாசம் செய்கிறோம்!" என்றார்.
மணிவர்மன் அதற்கு சம்மதிக்க, அந்த ஆசிரமத்திலேயே மஞ்சுளாவை எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டு, அவளையும் அவள் தம்பிகள் இருவரையும் அழைத்துக் கொண்டு அரண்மனை திரும்பினான்.
 
ராஜ்யத்திற்குத் திரும்பிய பிறகு, குடிமக்கள் அனைவருக்கும் தனது திருமணத்தை அறிவித்தான். பிறகு, மஞ்சுளாவை அறிமுகப் படுத்தி வைத்தான். திருமணத்தையொட்டி அரண்மனையில் நடந்த கோலாகலமான கொண்டாட்டங்களுக்குப் பிறகு, மணிவர்மன் தன் மனைவி மஞ்சுளாவிடம், "இன்று முதல் உன் சொற்படியே நான் நடப்பேன்!" என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூற, மஞ்சுளா வெட்கத்துடன், "உங்களை வழிநடத்திச் செல்லுமளவிற்கு எனக்கு அறிவுத் திறன் இல்லை" என்று சொன்னவுடன், "அதனால் என்ன! இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. இந்த வயதிலும் நீ கல்வி அறிவைப் பெறலாம்! அதற்கான ஏற்பாடுகளை உடனே செய்கிறேன்" என்று கூறிவிட்டு, மறுநாளே அறிவில் சிறந்த பண்டிதர்களை அரண்மனைக்கு வரவழைத்து மஞ்சுளா மட்டுமன்றி, அவளுடைய தம்பிகளும் கல்வி பயிலுமாறுச் செய்தான்.
 
 இயற்கையிலேயே புத்திகூர்மை உடையவர்களாயிருந்த மஞ்சுளாவும், அவளுடைய தம்பிகளும் மிகச் சிறப்பாகக் கல்வி பயின்று, பல விஷயங்களையும் கற்றுத் தேர்ந்தனர். மஞ்சுளாவிற்கு அரசியலைப் பற்றியும், ஆட்சி முறைகளைப் பற்றியும் சிறப்புப் பயிற்சியும் அளிக்கப் பட்டது. மஞ்சுளா அனைத்திலும் திறமையுடன் விளங்கினாள். தன் மனைவியைப் பெருமையுடன் நோக்கியவாறே மணிவர்மன், "மஞ்சுளா! இப்போது சொல்! நீ என்ன சொன்னாலும், அதன்படி செய்கிறேன்!" என்றான்.
 
மன்னருடைய புகழ்ச்சியால் நாணிய மஞ்சுளா, தலைகுனிந்தவாறே, "என் தம்பிகளை உங்களுடைய ஆட்சிக்குட்பட்ட நகரங்களில் நகர அதிகாரிகளாக நியமிக்க ஆசைப்படுகிறேன். அவ்வாறு அதிகாரிகளாக ஆவதற்கு முன், அவர்களுக்கு நகர அதிகாரி ஒருவரிடம் பயிற்சி பெற ஏற்பாடு செய்யுங்கள்!" என்றாள்.
அதுகேட்டு சற்று யோசித்த மன்னன், "இதுவரை என்னுடைய நகர அதிகாரிகளில் சிறப்பாக ஆட்சி செய்பவன் யார் என்ற ஆராய்ச்சியை நான் செய்ததில்லை. அப்படி ஒருவனை இனிமேல் தான் கண்டு பிடிக்க வேண்டும்! எந்த நகரில் குற்றங்கள் குறைவாக உள்ளதோ, அந்த நகராதிகாரி சிறப்பாக ஆட்சி செய்கிறான் என்று வைத்துக் கொள்ளலாம்." உடனே மஞ்சுளா, "நீங்கள் சொல்வது உண்மைதான். குற்றங்களின் எண்ணிக்கையை விடுத்து, அதிகாரிகள் வழங்கிய கடுமையான தண்டனைகளைப் பட்டியலிட்டால், அதை வைத்து எந்த நகரில் கொடிய குற்றங்கள் அதிகம் என்று கண்டு பிடிக்கலாம். அதாவது, தூக்கு, ஆயுள் தண்டனை, நாடு கடத்துதல் ஆகிய கடுமையான தண்டனைகளை மட்டும் பட்டியல் இடுங்கள். இத்தகைய தண்டனைகளை வைத்து, எந்த நகரில் கொடிய குற்றங்கள் குறைவு என்பதை கணக்கிடலாம்!" என்றாள்.
 
அவளுடைய கருத்தை ஒப்புக் கொண்ட மணிவர்மன், உடனே கடந்த பத்து ஆண்டுகளில் நகர அதிகாரிகள் வழங்கிய தண்டனைகளைப் பட்டியலிட்டு அனுப்ப உத்தரவிட்டான். மன்னரின் கட்டளையின் உள்நோக்கம் பல அதிகாரிகளுக்குத் தெரிந்து விட்டது. அதனால், அவர்களில் பலரும் தாங்கள் வழங்கிய தண்டனைகளின் பட்டியலில், கடும் தண்டனைகள் பலவற்றை நீக்கி, புதிதாகப் பட்டியல் தயாரித்தனர். சங்கரன் குடும்பத்தை நாடு கடத்திய சோமனும் அவர்களில் ஒருவன். மற்ற நகரங்களை விட தனது நகரத்தில் கடுமையான தண்டனைகள் குறைவு என்று நிரூபிக்க, கடும் தண்டனைகளை ரத்து செய்து, புதுப்பட்டியல் தயாரித்து அனுப்பினான்.
எல்லா அதிகாரிகளிடமிருந்தும் பெற்றப் பட்டியல்களை ஒப்பிட்டுப் பார்த்த மன்னன் மஞ்சுளாவிடம், "கபாலபுரத்தைச் சேர்ந்த நரேந்திரன் தான் அதிகமான தண்டனைகள் விதித்துள்ளான். சோமன் கடுமையான தண்டனை விதிக்கவில்லை! ஆகையால் அவனிடம் உனது தம்பிகளை அனுப்பலாம்" என்றான்.
 
உடனே அவள் மணிவர்மனை நோக்கி, "என் தம்பிகளை நரேந்திரனிடமே பயிற்சிக்கு அனுப்புங்கள். சோமனுக்கு, காட்டில் வசிக்கும் என் பெற்றோரை சகல மரியாதைகளுடன் நமது அரண்மனைக்கு அழைத்து வரும் பொறுப்பைக் கொடுங்கள்!"
என்றாள். இளம் மனைவியின் சொல்லைத் தட்ட விரும்பாத மன்னனும் அப்படியே செய்தான்.
 
இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம், "மன்னா! கடுமையான தண்டனைகளை மற்றவர்களை விட அதிகமாக விதித்திருந்த நரேந்திரனிடம் தன் தம்பிகளைப் பயிற்சி பெற மஞ்சுளா அனுப்பக் கூறியது ஏன்? மேலும் சோமனிடம் தன் பெற்றோரை அழைத்து வரும் பணியைத் தரச் சொன்னது ஏன்? அவ்வாறு செய்வதால் அவர்களது சுயரூபம் தெரிந்து விடாதா? இதிலிருந்தே பெண் புத்தி பின்புத்தி என்று விளங்கவில்லையா? என் சந்தேகத்திற்கு விடை தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்!" என்றது.
 
அதற்கு விக்கிரமன், "தங்கள் நகரில் நடந்த, நடக்கின்ற அனைத்துக் குற்றத்தைக் குறித்து உண்மையான பட்டியல் கொடுத்தது நரேந்திரன் மட்டும்தான். அவன் ஒருவன் மட்டும் தான் நேர்மையான நகராதிகாரியாக இருந்தான். இதை மஞ்சுளா அனைவரது பட்டியலையும் பார்த்து புரிந்து கொண்டாள். ஆகையால் தன் தம்பிகளை அவனிடம் படிக்க அனுப்புமாறு வேண்டினான். சோமனது பட்டியலில் தங்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையான நாடு கடத்தல் பற்றி குறிப்பிடப்படவில்லை. இதிலிருந்து தன் பெற்றோருக்கு அவன் தீங்கு அளித்து இருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டான். ஆகையால் அவனையே தனது பெற்றோரை அழைத்து வரச் செய்தால் அவனுக்கு அதைவிட வேறு எந்த தண்டனையும் தேவையில்லை என்று மன்னனிடம் கூறினாள். இது மற்றவர்களுக்கும் பாடமாக இருக்கும் என்று அவள் எண்ணினாள். ஆகையால் மஞ்சுளா மிகவும் புத்திசாலி என்பதில் ஐயமில்லை" என்றான்.
 
விக்கிரமனின் இந்த சரியான பதிலினால் அவனுடைய மௌனம் கலையவே, வேதாளம் மீண்டும் பறந்து சென்று முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.
 
 
 
வேதாளம் வரும்..

வீரபாகுவின் பெருந்தன்மை

 
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மரத்தில் ஏறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள் இருந்த வேதாளம், "மன்னா! இரவு பகலாக இவ்வாறு காட்டிலும், மேட்டிலும் நடு நிசியில் திரியும் உன்னைக் கண்டு பரிதாபமாக இருக்கிறது.
 
ஆனால் நீ தேடும் பொருள் உனக்குக் கிட்டும்போது, அதைக் கை நழுவ விட்டுவிடுவாயோ என்ற சந்தேகமும் எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில், வீரபாகு என்ற ஒருவன் இப்படித்தான் புத்தி தடுமாறி தவறு புரிந்தான். அவன் கதையை உனக்குச் சொல்கிறேன், கேள்!" என்றது.
 
தண்டகாரண்ய வனத்தில் முன்னொரு காலத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு காட்டுசாதியினர் வசித்து வந்தனர்.
ஒருநாள், அந்த சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களும், இளம் பெண்களும் ஒன்றுகூடி ஏரிக்கரையில் உல்லாசமாகப் பொழுது போக்கிக் கொண்டிருக்கையில், ஏரியிலிருந்த மீன்கள் துள்ளிக் குதித்து நீரிலிருந்து எழும்பி மேலே வந்து, மீண்டும் ஏரிக்குள்ளே விழுந்து விளையாடிக் கொண்டிருந்தன.
 
அப்போது, கூட்டத்திலிருந்த ஓர் இளைஞன் மற்றவர்களை நோக்கி, "மேலே எழும்பித் துள்ளிக் குதிக்கும் இந்த மீன்களின் மீது குறி பார்த்து அம்பு எய்து கொல்ல முடியுமா?" என்று கேட்டான். அதற்கு மற்றொருவன், "முடியவே முடியாது! தண்ணீருக்கு மேலே அவை ஒரு வினாடிக்கும் குறைவாக துள்ளிவிட்டு, உடனே தண்ணீரில் குதித்து விடுகின்றன. அந்த ஒரு வினாடி நேரத்தில், ஒரு மீன் கூட குறிபார்த்து அம்பு எய்த முடியாது" என்றான். மற்றவர்களில் பலர் அதை ஆமோதித்தனர். பிறகு அவர்களுக்குள்ளே விவாதம் ஏற்பட்டது.
 
அப்போது, அந்தக் கூட்டத்தில் இருந்த நீலிமா என்ற மிக அழகான இளம்பெண் தன் மனத்திற்குப் பிடித்தவனான பிரதாப் என்ற இளைஞனைப் பார்த்து "நீ மட்டும் ஒரு மீனைக் குறி பார்த்து அம்பு எய்தினால், உன்னை நான் திருமணம் செய்து கொள்வேன்!" என்றாள். அவள் அவ்வாறு கூறியதும், கூட்டத்தில் பரபரப்பு உண்டாகியது. நீலிமாவின் அழகில் அத்தனை இளைஞர்களும் மயங்கி இருந்தனர். ஆனால் நீலிமாவின் மனத்தில் இடம் பிடித்தவன் பிரதாப் மட்டுமே! அவள் கூறியதைக் கேட்டதும் அவன் வில்லை நாணேற்றி, அம்பைத் தொடுத்து, குறிபார்த்து எய்தான். ஆனால், துரதிருஷ்டவசமாக அவன் இலக்கு தவறியது.
 
உடனே, சற்று தொலைவில் அமர்ந்திருந்த வீரபாகு என்ற இளைஞன் தன் வில்லில் ஓர் அம்பினைத் தொடுத்து எய்தான். அவன் எய்திய அம்பு ஒரு மீனின் மீது பாய்ந்தது. வீரபாகுவின் நண்பர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய, அவன் நீலிமாவின் அருகில் வந்தான்.
"ஏய் அழகு சுந்தரி! நீ அறிவித்த போட்டியில் நான் வெற்றி பெற்று விட்டேன். ஆகவே என்னை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும்!" என்றான். அதற்கு நீலிமா, "திருமணமா? உன்னுடனா? ஒருக்காலும் இல்லை! முதலில் நான் இதைக் கூறியது பிரதாப்பை நோக்கித்தான்! தவிர, இதை நான் ஒரு போட்டியாக அறிவிக்கவில்லை" என்றாள்.
 
"இல்லை! நீ அப்படிச் சொல்லவில்லை!" என்று மறுத்தான். வீரபாகு, அவனது நண்பர்களும் அவன் சொல்வதையே ஆதரித்தனர். அதிலும் குறிப்பாக கங்கா என்ற வீரபாகுவின் நண்பன் நீலிமா தன் வாக்குறுதியை மீறாமல் வீரபாகுவைத்தான் மணம் புரிய வேண்டுமென்று அடித்துக் கூறினான். "முடியவே முடியாது!" என்று நீலிமா கூச்சலிட, "நீலிமா! உன்னை நான் திருமணம் செய்தேத் தீருவேன்!" என்று வீரபாகுவும் சவால் விட்டான். பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.
 
காட்டுசாதி மக்களிடையே இவ்வாறு அவ்வப்போது சண்டையும், பூசலும் ஏற்படுவதுண்டு. ஆனால் அவர்களில் ஒருவன் ஆபத்தில் சிக்கினால், மற்றவன் விரோதியாக இருந்தாலும், பகையை மறந்து அவனுக்கு உதவி செய்வான்.
 
ஒருமுறை, வீரபாகு மரத்திலேறி தேன் கூட்டைக் கலைத்து தேன் எடுக்க முயன்றபோது, திடீரென தேனீக்கள் அவனைச் சூழ்ந்து கொண்டு பயங்கரமாகத் தாக்கியபோது, அவன் நிலை தடுமாறி மரத்திலிருந்து விழுந்து விடவிருந்தான்.
 
அந்த சமயம் பிரதாப் அங்கே தற்செயலாக வந்து சேர, அவன் வீரபாகுவை தாங்கிப் பிடித்துக் கொண்டான். வீரபாகுவை ஆசுவாசப் படுத்திய பிறகு, பிரதாப் அவனிடம், "வீரபாகு! நீலிமா மீது உனக்கு மிகவும் ஆசை என்றால் அவளை நீயே மணந்து கொள்! ஆனால் அவள் உன்னை விரும்புகிறாளா என்று தெரிந்து கொள்!" என்றான்.
 
நீலிமாவின் பேச்சை எடுத்தவுடன், வீரபாகு கோபம் கொண்டான். "உன்னுடைய புத்திமதி எனக்குத் தேவையில்லை!" என்று விறைப்பாகக் கூறிவிட்டு அகன்றான். இது நடந்து சில நாள்களுக்குப் பின், இளைஞர்களும், இளம் பெண்களும் சேர்ந்து காட்டில் வேட்டையாடச் சென்றனர்.
அந்தக் கூட்டத்தில் நீலிமா, பிரதாப், வீரபாகு அனைவருமிருந்தனர். வேட்டையாடிய மிருகத்தை சமைத்து அனைவரும் சேர்ந்து விருந்துண்டனர். அப்போது திடீரென ஒரு புலி அந்தக் கூட்டத்தின் மீது பாய்ந்தது. அந்த சமயம் புலியைச் சற்றும் எதிர்பார்க்காத கூட்டத்தினர் அங்கிருந்த குன்றின் மீது தாவியேறி தப்பிக்க முயன்றனர்.
 
கடைசியில் சென்று கொண்டிருந்த நீலிமா கால் தடுக்கிக் கீழே விழ, புலி அவள் மீது பாய இருந்தது. அதைப் பார்த்த வீரபாகு அங்கிருந்த ஒரு சிறிய பாறையைத் தூக்கி புலி மீது வீச, அடிபட்ட புலி சுருண்டது. வீரபாகு நீலிமாவின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு ஓட, அடிபட்ட புலி மீண்டும் எழுந்தது. அதனிடமிருந்து தப்பிக்க வேறு வழி தெரியாமல் வீரபாகுவும், நீலிமாவும் குன்றிலிருந்து கீழே குதித்தனர். அதற்குள் அடிபட்ட புலி கீழே விழுந்து இறந்தது.
 
கீழே விழுந்த அதிர்ச்சியில், நீலிமா மயக்க மடைந்தாள். அவள் இடது முழங்கையில் அடிபட்டு ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. மயக்கத்தைத் தெளிவிப்பதற்காக வீரபாகு அருகில் உள்ள குளத்திற்கு நீர் எடுத்துவரச் சென்றான்.
 
அப்போது வீரபாகுவின் நேருங்கிய நண்பன் கங்கா குன்றின் மீது இருந்தபடியே வீரபாகுவிடம், "நண்பா! நீலிமாவின் இடது கையில் இரத்தம் கசிவதைப் பார். நீயும் உன் இடது கையில் கத்தியால் கீறி, இரத்தம் சொட்டச் செய்து அவளுடைய ரத்தத்துடன் கலந்து விடு. நம் இன வழக்கப்படி, ஓர் ஆண், ஒரு பெண் இருவரின் ரத்தமும் கலந்தால் அவர்கள் தம்பதி ஆவர்!
 
இந்த வாய்ப்பை நழுவ விடாதே!" விட்டு என்று சொல்லி ஓடிப் போனான். கங்கா மூலம் நடந்ததைக் கேள்விப் பட்ட பிரதாப் பேயறைந்தவன் போல் ஆனான். பிறகு, அவள் வீரபாகு நீலிமாவைக் கட்டாயத் திருமணம் புரிந்து கொண்டான் என்று வழக்குத் தொடுத்தான்.
பஞ்சாயத்தும் கூடியது! நீலிமா, வீரபாகு இருவரும் முன்னணியில் நிற்க, பஞ்சாயத்துத் தலைவர் அவளை நோக்கி, "பெண்ணே! உன் சம்மதத்துடன் உனது திருமணம் நடக்கவில்லையென்றும், உன்னை பலவந்தப்படுத்தி வீரபாகு அவ்வாறு செய்துள்ளான் என்றும் பிரதாப் வழக்குத் தொடுத்திருக்கிறான். அவன் சொல்வது உண்மையா என்று சொல்! அப்படியானால், வீரபாகு இந்த இடத்திலேயே கொல்லப் படுவான்! அதன் பிறகு, உனக்கு உண்மையிலேயே யார் மேல் பிரியமோ, அவனை நீ மணம் புரியலாம்!" என்றார்.
 
உடனே, அங்கே ஒரு அசாதாரண மௌனம் நிலவியது. சற்று நேரம் யோசித்த நீலிமா, "என்னுடைய முழு சம்மதத்துடன் தான் வீரபாகு அவ்வாறு செய்தார்" என்றாள். அப்போது யாரும் எதிர்பாராத ஒரு நிகழ்ச்சி நடந்தது. வீரபாகு முன் வந்து, "இல்லை! நான் உண்மையைக் கூறுகிறேன்.
 
கங்கா கூறியதும் எனக்கும் அவ்வாறு நீலிமா மயக்கமாக இருக்கும் போதே காரியத்தை முடித்துவிட ஆசை ஏற்பட்டது உண்மை! அதற்காக என் கையையும் கீறிக் கொண்டேன். ஆனால் நீலிமாவின் ரத்தத்துடன் கலக்க அவள் அருகே சென்ற போது, அவளுடைய முகத்தைப் பார்த்து என் மனம் மாறி விட்டது. ஆகவே நாங்கள் தம்பதி ஆகவில்லை. என்னுடைய குற்றத்திற்காக நான் என்னையே தண்டித்துக் கொள்கிறேன். நான் இந்த காட்டை விட்டு வெளியேறி விடுகிறேன்" என்று அங்கிருந்து வெளியேறிவிட்டான்.
 
" இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, "மன்னா, வீரபாகுவும் நீலிமாவும் ஏன் சம்மந்தமில்லாமல் நடந்து கொண்டார்கள்? தலைவரிடம் நீலிமா, உண்மையைக் கூறி இருந்தால் அவள் விரும்பிய பிரதாபனையே திருமணம் செய்து இருந்திருக்கலாம்.
தவிர யாரை முதலிலிருந்து வெறுத்தாளோ அவனுடன் மனப்பூர்வமாகத் திருமணம் நடந்ததாகப் பொய் சொல்லிவிட்டாள். இவ்வாறு பொய் சொல்வதன் அவசியம் என்ன? அதே போல் வீரபாகு முன்பு, உன்னை என்றாவது ஒருநாள் திருமணம் செய்தே தீருவேன் என்று கூறினான்.
 
அப்படி இருக்கையில் நீலிமா ஒப்புக் கொண்டபிறகும், எங்களுக்குத் திருமணம் நடக்கவில்லை என்று கூறிவிட்டு அந்தக் கிராமத்தை விட்டே சென்று விட்டான். இருவரது செயல்களும் எனக்குப் புரியவில்லை. இந்தக் கேள்விகளுக்கு விடை தெரிந்திருந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகி விடும்" என்றது.
 
அதற்கு விக்கிரமன், நீலிமா சுய நினைவில்லாமல் இருந்ததால் தனக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் இருந்தாள். அதேபோல் வீரபாகுவுடன் தனக்குத் திருமணம் நடந்து விட்டது என்று அவள் கூறியது அவளது இனத்திற்கே உரிய நன்றி உணர்வைத்தான் காட்டுகிறது. அதாவது அவர்கள் இன வழக்கின்படி எவனொருவரின் உயிர் ஆபத்தில் இருக்கிறதோ அவனை எவ்வித பாகுபாடும் இல்லாமல் காப்பாற்றுவார்கள்.
 
அவள் தனது விருப்பமின்றி இந்தத் திருமணம் நடந்தது என்று கூறினாள். வீரபாகுவைக் கொன்று விடுவார்கள். தன்னைக் காப்பாற்றிய ஒருவனுக்குத் தண்டனைக் கிடைக்கக் கூடாது என்பதற்காகத்தான் அவள் பொய் கூறினாள்.
 
ஆனால் வீரபாகு, நீலிமாவை நேசித்தானே தவிர மீறி கட்டாயத் திருமணம் புரிய நினைக்கவில்லை என்று உண்மையைக் கூறினான். இவ்வளவு நடந்த பிறகும் அவன் அந்தக் கிராமத்தில் இருந்தால் கிராமத்தில் ஒற்றுமை சீல்குலைந்து விடும். ஆகையால் அவன் அங்கிருந்து சென்று விட்டான்" என்றான்.
 
விக்கிரமனது சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே, வேதாளம் தான் தங்கியிருந்த உடலுடன் பறந்து சென்று வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.
 
 
 
வேதாளம் வரும்..

சாப விமோசனம்

 
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம், "மன்னா! இந்த உலகில் சில சோதிடர்கள் தங்களிடம் வரும் மக்களை பரிகாரம் என்ற பெயரில் பல இன்னல்களுக்கு ஆளாக்குகின்றனர்.
 
அப்படி யாரோ ஒரு சோதிடர் தான் உன்னையும் பரிகாரம் என்ற பெயரில் இவ்வாறு அலைய விட்டு இருக்கிறான் என்று தோன்றுகிறது. அத்தகைய கௌசிகன் என்ற சோதிடன் ஒருவனைப் பற்றியக் கதையை உனக்குக் கூறுகிறேன், கேள்!" என்று சொல்லிவிட்டுக் கதை சொல்லத் தொடங்கியது.
திவாகர் என்ற பெரும் செல்வர் மகாதானபுரத்தில் வசித்து வந்தார். அவருடைய ஒரே மகளான கலா திருமணப் பருவத்தை அடைந்தவுடன், அவர் மும்முரமாக வரன் தேடத் தொடங்கினார். ஆனால், ஏதாவது ஒரு காரணத்தின் பேரில், திருமணப் பேச்சு வார்த்தைகள் தடைப் பட்டுப் போயின. தன் மகளின் திருமணம் தள்ளிக் கொண்டே செல்வதைக் கண்டு திவாகர் கவலையில் ஆழ்ந்தார். அவருடைய மனைவி பிரபா தன் சகோதரன் கோபியின் உதவியை நாடினான். அவன்
 
கலாவின் ஜாதகத்தைப் பரிசீலனை செய்ய வேண்டுமென்று சோதிடத்தில் புகழ்பெற்ற தனது நண்பன் கௌசிகனிடம் அவளது ஜாதகத்தை காட்டினான். கலாவின் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்தபின், சோதிடன் கௌசிகன், "கலாவின் ஜாதகம் சாட்சாத் சீதா தேவியின் ஜாதகத்தை ஒத்திருக்கிறது. தேவிக்கு வாழ்க்கையில் இன்னல்கள் ஏற்பட்டது போல் கலாவிற்கும் பல சோதனைகள் ஏற்படவுள்ளன.
 
ஆனால் இறுதியில் எல்லாம் நல்லபடியாக முடியும். நீ ஒரு காரியம் செய்! உன் சகோதரி குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு ஜெயபுரிக்குச் செல்! அங்குள்ள ராமர் கோயிலில் தேவியையும் ராமரையும் கலா தரிசிக்க வேண்டும். அங்கு தரப்படும் பிரசாதத்தை அந்த ஊரிலுள்ள ஒரு புண்ணியவானுக்கு அதை கலா வழங்கினால் விரைவில் அவள் திருமணம் நடைபெறும்!" என்றான்.
 
"சரிதான்! ஆனால் ஜெயபுரியில் புண்ணியவான் யார் என்று நாங்கள் எப்படிக் கண்டு பிடிப்பது? நீயும் எங்களுடன் வந்து, அந்தப் புண்ணியவானை எங்களுக்கு அடையாளம் காட்டு!" என்றான் கோபி. அதற்கு கௌசிகன் சம்மதித்தான். பிறகு, கோபி அனைவரையும் அழைத்துக் கொண்டு ஜெயபுரிக்குச் சென்றான். அங்குள்ள ராமர் கோயிலுக்குச் சென்று, ராமரையும் சீதையையும் அனைவரும் வழிபட்டனர்.
பிறகு, அர்ச்சகர் தந்த பிரசாதத்தைக் கலா எடுத்துக் கொள்ள, அனைவரும் ஒரு குதிரை வண்டியில் ஜெயபுரியின் தெருக்களை வலம் வந்தனர். ஒரு பெரிய வீட்டின் வாயிலில் கௌசிகன் வண்டியை நிறுத்தச் சொன்னான். பிறகு கலாவிடம் அந்த வீட்டிலுள்ளவர்களுக்கு பிரசாதத்தை அளிக்குமாறு கூறினான். கலாவும் பிரசாதத்தை எடுத்துக் கொண்டு அந்த வீட்டினுள் நுழைந்தாள்.
 
அவள் நுழையும்போது, வீட்டுக்குள்இருந்து ஓர் அழகான வாலிபன் வெளியே வந்தான். கலாவைப் பார்த்தவுடன் அப்படியே பிரமித்துப் போய் நின்று அவளைக் கண்இமைக்காமல் பார்த்தபடியே நின்றான். அதனால் வெட்கமடைந்த கலா தலையைக் குனிந்து கொண்டு, "நாங்கள் ராமர் கோயிலில் தரிசனம் செய்ய வந்தோம். பிரசாதம் கொடுக்க வந்தேன். இதை ஏற்றுக் கொள்ளுங்கள்!" என்றாள்.
 
அவள் மீது செலுத்திய பார்வையை அகற்றாமல் அந்த வாலிபன், "என் பெற்றோரிடம் இதைக் கொடு!" என்று கூறிவிட்டு உள்ளே சென்று தன் பெற்றோரை அழைத்தான். அவர்களும் வெளியே வந்தனர். கலாவைக் கண்டு ஆச்சரியமுற்ற அவர்கள் அவளை வரவேற்று உபசரித்தனர்.
 
பிறகு அவளுடைய நோக்கமறிந்து, வண்டியிலிருந்த அனைவரையும் வீட்டிற்குள் அழைத்தனர். கலாவை மிகவும் பிடித்து விட்டதால், அவர்கள் தாங்களாகவே திருமணப் பேச்சைத் தொடங்க, கௌசிகன் அந்த வாலிபனது ஜாதகத்தைப் பரிசீலனை செய்து, பெண்ணின் ஜாதகம் அவனுடன் பொருந்துவதாக அறிவித்தான். அந்த வாலிபனும் சம்மதிக்க, திருமணம் உடனே நிச்சயிக்கப் பட்டது.
 
வாலிபன் பெயர் வீரபத்திரன் என்றும், தந்தை பெயர் சிவராமன் என்றும் தாயின் பெயர் காமினி என்றும் அறிந்தனர். திருமண நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு மறுநாள் ஊர் திரும்புகையில் இரவில் ஒரு சத்திரத்தில் தங்கினர். மறுநாள் காலை கௌசிகன் அருகிலிருந்த ஆற்றுக்கு நீராடச் சென்றபோது, திடீரென ஒரு ராட்சசன் மரத்திலிருந்து குதித்து, கௌசிகனிடம், "என் கேள்விகளுக்கு பதில் சொல்! இல்லைஎன்றால் கொன்று விடுவேன்!" என்றான்.கௌசிகன் சோதிடர் மட்டுமன்றி, உலக ஞானமும், துணிச்சலும் உடையவன். அதனால் அவன் சற்றும் பயப்படாமல் ராட்சசனை நோக்கி, "நீ ஏதோ ஒரு சாபத்தினால் இவ்வாறு ராட்சசனாக உலவுகிறாய்! உனக்கு சாப விமோசனம் தான் தேவை! அதற்கான வழியைச் சொல்லுகிறேன். வீணாகக் கேள்வி கேட்காதே!" என்றவுடன் ராட்சசன் அவனை வணங்கி, "நான் மீண்டும் மனிதனாக மாற என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான்.
அதற்கு கௌசிகன், "உனக்கு அபூர்வ சக்தி உள்ளது. அதை நல்ல காரியத்திற்குப் பயன்படுத்தினால், சாப விமோசனம் கிட்டும்!" என்றான். "ஆம்! எனக்கு ஒரு அபூர்வ மந்திரம் தெரியும். ஒரு பழத்தைக் கையில் வைத்துக் கொண்டு அதை உச்சரித்தால், அந்தப் பழம் சக்தி வாய்ந்ததாகி விடும். அதை உண்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்!" என்றான். "அந்த சக்தியை குழந்தை பாக்கியம்அற்ற ஒரு புண்ணியவதியான பெண்ணுக்குக் கொடு!" என்று கௌசிகன் சொல்ல, "எனக்குப் புண்ணியவதி யார், பாவி யார் என்று தெரியாது. நீங்கள் தான் கூற வேண்டும்" என்றான். 

சற்று நேரம் தீவிர சிந்தனையில்ஆழ்ந்த கௌசிகன், "அதற்கு இன்னும் நேரம் வரவில்லை. நீ இன்னும் சில ஆண்டுகள் காத்திரு!" என்று கூறிவிட்டுச் சென்றான். பிறகு அனைவரும் ஊர் திரும்பினர். சில நாள்களுக்குப் பிறகு கலா-வீரபத்திரன் விவாகம் இனிதாக நடந்தது. கலா கணவன் வீடு சென்று தன் இல்வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடங்கினாள். 

ஆனால், அவளது மகிழ்ச்சி அதிக நாள் நீடிக்கவில்லை. மணமாகி ஓராண்டு முடிந்தும் அவளுக்குக் குழந்தைப் பேறு உண்டாகாததால் அவளுடைய மாமியார் அவளை மிகவும் கடுமையான சொற்களால் வாட்டி வதைத்தாள். மாமனாரும் அவளுடைய உதவிக்கு வரவில்லை. கணவனும் அவளை உதாசீனம் செய்தான். இவ்வாறு, மூன்று ஆண்டுகள் கழிந்தன. வீரபத்திரனின் தூரத்து உறவினரான ராமநாதன் என்பவர் தன் பெண்ணை அவனுக்கு இரண்டாம் தாரமாகத் தர விரும்பினார்.
ஆகையால் அவர், சீதாராமன் என்ற சோதிடரை அணுகி, "நீ சிவராமன் வீட்டிற்குச் சென்று அவருடைய மருமகள் கலாவின் ஜாதகத்தைக் கேட்டு வாங்கு! அதை ஆராய்வது போல் பாசாங்கு செய்தபின் ஜாதகப்படி கலாவிற்குக் குழந்தையே பிறக்காது என்று அடித்துச் சொல்! என் பெண் சுபத்ராவை வீரபத்திரன் மணந்தால், குழந்தை பாக்கியம் கிட்டும் என்று சொல்! இதை நீ ஒழுங்காக செய்தால், உனக்கு நிறையப் பணம் தருவேன்!" என்று ஆசை காட்டினார்.
 
அவர் கூறியதுபோலவே சீதாராமன் வீரபத்திரனிடம் சென்று கூற, ஏற்கெனவே கலாவை விஷமாக வெறுத்த வீரபத்திரன் பெற்றோர் அவனுக்கு இரண்டாம் தாரமாக சுபத்ராவை மணம் முடிப்பதற்குத் தீர்மானித்தனர்.
 
விஷயமறிந்த கலாவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கௌசிகனை அணுக, அவர் வீரபத்திரனின் வீட்டை அடைந்தார். கலாவின் ஜாதகப்படி அவளுக்குக் குழந்தை பாக்கியம் உண்டு என்று கூறினார். தொடர்ந்து "அது தாமதமானதற்குக் காரணம் நீங்கள் இருவரும் புரிந்திருக்கும் பாவங்களே! ஆனால், கலாவிற்குக் குழந்தை பிறக்கும் நல்ல வேளை பிறந்து விட்டது" என்றார்.
 
உடனே சிவராமன் சோதிடர் சீதாராமனின் சோதிடக்கணிப்பை பற்றிக்கூற, கௌசிகன் உடனே சீதாராமனை வரவழைத்தார். அவர் வந்ததும் அவரை நோக்கி, "நாம் இருவரும் பந்தயம் கட்டுவோம். நான் கூறும் சோதிடம் கட்டாயம் பலிக்கும் என்கிறேன். இரண்டு மாதத்தில் அது பலிக்காவிட்டால் நான் தோல்வியை ஏற்பேன். ஆனால் கலா கருவுற்றால், உங்களுக்கு செருப்பு மாலை அணிவித்து கழுதை மேல் ஏற்றி ஊர்வலம் வரச் செய்வேன்! சம்மதமா?" என்று சவால் விட, பயந்து போன சீதாராமன் ஊரை விட்டே ஓடிப்போனார்.
 
உடனே கௌசிகன் ராட்சசனை சந்தித்து, "உனக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. அந்த மகிமை வாய்ந்த பழத்தை இப்போது தா!" என்று கேட்க, அவனும் ஒரு பழத்தை மந்திரம் உச்சரித்துக் கொடுத்தான். கொடுத்த மறுகணமே அவன் கீழே விழுந்து உயிர் நீத்தான். அந்தப் பழத்தை எடுத்துக் கொண்டு வந்த கௌசிகன் கலாவிடம் அதைத் தந்து உண்ணச் சொன்னார்.
 இரண்டே மாதத்தில் கருத்தரித்த கலா, ஓர் ஆண் மகனைப் பெற்றெடுத்தாள். இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, "மன்னா! கலாவிற்கு திருமணம் நடந்தவுடனே மகிமைவாய்ந்த பழத்தை கௌசிகன் கொடுத்து இருந்தால் அவள் துன்பப்பட்டிருக்க மாட்டாள் இல்லையா? அவளை மட்டுமா தவிக்கவிட்டான்?
 
அந்த ராட்சசனையும் மூன்று ஆண்டுகள் காக்க வைத்தான். அவனை சந்தித்த போதே அந்தப் பழத்தை அவனிடம் இருந்து வாங்கிக் கொடுத்திருந்தால் கலாவும் உடனே கருத்தரித்திருப்பாள். ராட்சசனுக்கும் சாப விமோசனம் கிட்டியிருக்கும். கௌசிகனின் இந்த தாமதத்திற்குக் காரணம் தெரிந்தும் நீ மௌமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்" என்றது.
 
அதற்கு விக்கிரமன், "கௌசிகன் சோதிடர் மட்டுமே! கடவுள் அல்ல! அவனால் விதியைப் பற்றிக் கூற முடியுமே தவிர விதியை மாற்ற முடியாது. ஒருவருடைய ஜாதக ராசிப்படி, சில நல்ல காரியங்கள் குறிப்பிட்ட நல்ல காலம் வரும் போதுதான் நடக்கும். கலாவின் ஜாதகப்படி அவளுக்கு வாழ்க்கையில் இன்னல்கள் ஏற்படும் என்றும், இறுதியில் எல்லாம் சுபமாக முடியும் என்று முன்னமே கௌசிகன் கணித்துக் கூறினான்.
 
அவளுடைய ஜாதகப்படி அவளுக்கு மூன்று ஆண்டுகள் கழித்துத்தான் குழந்தை பிறக்கும் என்றிருந்தால், அதை கௌசிகனால் மாற்றியமைக்க முடியாது. எனவே, அவன் உரிய நல்ல காலம் வரும் வரைக் காத்திருந்து, பிறகே பழத்தை அவளுக்கு அளித்தான். அதேபோல், ராட்சசனுக்கும் அவன் விதிப்படி மூன்று ஆண்டுகள் மேலும் காக்க நேரிட்டது.
 
ஆகவே கௌசிகன் தாமதம் செய்தான் என்பது தவறு. அவன் நல்ல வேளை கூடி வரும் வரை காத்திருந்தான் என்பதே சரி" என்றான். விக்கிரமனது இந்த சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே, வேதாளம் தான் சுமந்து வந்த உடலுடன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.
 
 
 
வேதாளம் வரும்..

Flag Counter