skip to main |
skip to sidebar
"சார் என்ன யோசிக்கிறீங்க"
"அடுத்தபடியா என்ன நாவல் எழுதலாம்னு யோசிக்கிறேன்"
"நீங்க தொடர்ந்து எழுதணும். நிறைய எழுதணும், எழுதிக் குவிக்கணும். அதான் என்னுடைய ஆசை!"
"எனக்கு இப்படி ஒரு விசிறியா? ரொம்ப மகிழ்ச்சி. நீங்க என்னை
புரிஞ்சிகிட்ட அளவுக்கு பதிப்பகங்கள் என்னை புரிஞ்சிக்க மாட்றாங்க. அதை
நினைச்சாத்தான் வருத்தமா இருக்கு"
"அதை பொருட்படுத்தாதீங்க சார். நீங்க பாட்டுக்கு எழுதிட்டே இருங்க! அமெரிக்க நாடக ஆசிரியர் ஒருத்தர் இப்படித்தான்...
பல நாடகங்களை எழுதினார். அவருடைய படைப்புகளை பிரசுரிக்கறதுக்கு யாரும்
முன் வரலை. பசியாலும் பட்டினியாலும் வாடினார். ஒரு நாள் அவருடைய நாடகங்கள்
அத்தனையையும் ஒரு மூட்டையா கட்டி மளிகைக் கடையில எடைக்கு போட்டு
வித்துட்டார். மளிகைக் கடைக்காரர் ஒவ்வொரு பக்கமாக் கிழிச்சி பொட்டலம்
கட்டி விக்கிறப்போ, சில பக்கங்கள் ஒரு பதிப்பக முதலாளி கையில் கிடைச்சிது.
அந்த பக்கங்கள் ரொம்ப அருமையா இருந்ததால,ஓடிப் போய் பொட்டலம் கட்டாம
இருந்த பக்கங்களை வாங்கி பிரசுரிச்சாங்க. அதுக்கப்புறம் அந்த நாடக
ஆசிரியருக்கு நல்ல கிராக்கி. ஏகப்பட்ட பணம் புகழ் எல்லாம் வந்து சேர்ந்தது
சார்"
"அவர் யாரு?"
"அவரு தான் பிரபல நாடக ஆசிரியர் இப்சன்!"
"அவரு மாதிரியே நானும் ஒரு நாள் பிரபலமாவேன்."
"அதுக்கு நேரம் வந்தாச்சி சார். அதனால தான் நான் வந்திருக்கேன். உங்க படைப்புகள் அத்தனையையும் வாங்கப் போறேன்!"
"அப்படியா... ரொம்ப நன்றி. எந்த பதிப்பகம் நீங்க?"
"பதிப்பகம் இல்ல சார். மளிகைக் கடை!"
"வக்கீல் ஐயா இருக்காங்களா?"
"நான் தான் வக்கீல். யாரப்பா நீ?"
"ஐயா, வக்கீல்கிட்டயும், டாக்டர்கிட்டயும் பொய் சொல்லக் கூடாதுன்னு
சொல்வாங்க. அதனால உண்மையைச் சொல்றேன். நான் ஒரு திருடன் சார். சமீபத்துல
ஒரு திருட்டு நடந்துருச்சி. அதுல நான் மாட்டிக்கக் கூடாது. தடயம்
எல்லாத்தையும் அழிச்சிட்டேன். ஆனாலும் பயமா இருக்கு. அதான் உங்க கிட்ட
ஐடியா கேக்க வந்தேன்"
"இந்தக் காலத்துல உன்னை மாதிரி உண்மை பேசுற திருடனைப் பாக்குறது
அபூர்வம். ஏதாவது ஒரு சின்ன தடயத்தை விட்டுட்டாலும், மாட்டிக்க வேண்டியது
தான். நியூசிலாந்துல உன்னை மாதிரி ஒரு திருடன். தான் எங்க திருடப்
போனாலும், அங்க "Have a nice day" அப்படீன்னு ஒரு நன்றி கிரீட்டிங் கார்டு
வச்சிட்டு போய்டுவான். ஆனா ஒரு தடயமும் சிக்காது., அவன கண்டுபிடிக்க போலீஸ்
ரொம்ப சிரமப்பட்டாங்க...ஆனாலும் அவன் மாட்டிக்கிட்டான்"
"எப்படி சார்?"
"எல்லா நன்றி கார்டையும் ஒரே கடைல வாங்கிருக்கான். அத வச்சி அவன
கண்டுபுடிச்சிட்டாங்க. அதே மாதிரி ஆகக் கூடாது. நீ என்ன திருடுன... எப்படி
தடயங்களை அழிச்ச?"
"நான் பக்கத்துல இருக்குற 'அறுசுவை பவன்' ஹோட்டல் வாசல்ல இருந்த வெள்ளை
கலர் காரை நேத்து திருடினேன். உடனே நம்பர் பிளேட்டை மாத்திட்டேன்."
"அப்படியா.. கார்ல வேற என்ன இருந்தது?"
"ஒரு டைரி இருந்தது. அதையும் எரிச்சிட்டேன். கார் கலரை மாத்தி பெயிண்ட்
அடிச்சிட்டேன். காரை அக்குவேறு ஆணி வேறா பிரிச்சி விக்கிறதுக்கு ஏற்பாடு
பண்ணிட்டேன். இப்போ சொல்லுங்க. ஏதாவது தடயத்தை விட்டுட்டேனா, நான்
மாட்டிக்க மாட்டேன் தானே..."
"கண்டிப்பா மாட்டிக்குவ...தடயத்தையெல்லாம் அழிச்சிட்டு, நீயே வந்து சிக்கிட்டியே!"
"என்ன சார் சொல்றீங்க?"
"அந்தக் கார் என்னோடது!"
"சார்! ரொம்ப நாளா உங்களை ஒண்ணு கேக்கணும்னு நினைச்சிட்டிருந்தேன்"
"என்ன அது.. எதுவா இருந்தாலும் கேளுங்க..."
" சமீபகாலமா நீங்க சட்டையே போடுறதில்லையே... வெறும் வேட்டியோட வெளியில திரியறீங்களே...அது ஏன்?"
"சட்டை இல்லைன்னா சங்கடம் இல்லை"
"மகான்கள் மாதிரி பேசுறீங்களே..."
"உண்மை தான்... ஒரு ராஜா எப்பவும் துன்பப்பட்டுக்கிட்டே இருந்தாராம்.
ஒரு வேதாந்திரியைக் கூப்பிட்டு, என் துன்பம் தீர என்ன வழின்னு கேட்டாராம்.
அதுக்கு அந்த வேதாந்திரி 'போதும் என்ற மனசுடைய ஒருத்தனை தேடி
கண்டுபிடிச்சி, அவனுடைய சட்டையை வாங்கி போட்டுக்க, உன் கவலை போய்டும்' னு
சொன்னாராம்"
"அட.. சுலபமான வழியா இருக்கே..."
"அப்படித்தான் அந்த ராஜாவும் நினைச்சிகிட்டு ராஜாவும் அந்த மனுஷனைத்
தேடி அலைஞ்சாராம். ஆனா யாருக்குமே போதும்ங என்ற மனசே இல்லாததால நொந்து
போனாராம். கடைசியில ஒருத்தன் கிடைச்சானாம். ஆனா அவன் சட்டையே போடலை"
"சிந்திக்க வேண்டிய விஷயம் சார். நீங்களும் அந்த மனுஷன் மாதிரி தானா?"
"நானும் 'போதும்டா சாமி' என்பதால் தான் சட்டை போடல. ஆனா என் கதை வேற மாதிரி"
"எப்படி சார்"
"ஆரம்பத்துல நானும் சட்டை போட்டுக்கிட்டு தான் இருந்தேன். என் சட்டையை
என் கையால துவைச்சி போடுவேன், அடுத்தவங்களுக்கு சிரமம் கொடுக்க மாட்டேன்.
கல்யாணம் ஆனதுக்கு பிறகு என் மனைவி துவைக்க ஆரம்பிச்சாங்க. அதுதான் எனக்கு
கஷ்டமா போச்சு! அப்புறம் தான் சட்டையே போட வேணம்னு விட்டுட்டேன்!
"மனைவிக்கு சிரமம் கொடுக்கக் கூடாதுங்கிறதுக்காகவா?"
"இல்ல..எனக்கு சங்கடம் வேணாம்னுதான்"
"என்ன சொல்றீங்க?"
" பொதுவா சட்டையை கழட்டுனதுக்கு அப்புறம் தானே துவைப்பாங்க... ஆனா என்
மனைவி நான் சட்டையை கழட்டுறதுக்கு முன்னாடியே துவைக்க ஆரம்பிச்சிடுவா!"
"சார்! ட்ரெயின்ல இருந்து நீங்க இறங்கி ரொம்ப நேரம்
ஆச்சே...பிளாட்பாரத்துல தனியா நின்னுட்டு என்ன யோசிக்கிறீங்க? பெட்டிய நான்
தூக்கறேன். 5 ரூபா கொடுங்க போதும்!"
"வேணாம்பா!"
"என்ன சார் நீங்க...பெட்டி பெருசா இருக்கு. எப்படி தூக்குவீங்க? கூலி கொஞ்சம் குறைச்சிக்கறேன் சார்"
"இப்போ வேணாம். கொஞ்ச நேரம் ஆகட்டும்"
"தனியா உங்களால தூக்க முடியாது சார். நம்மள விட அதிக எடையை சுலபமா தூக்குறதுக்கு நாம என்ன எறும்பா?"
"என்னப்பா சொல்ற"
"ஆமா சார். எறும்பு தன்னோட எடையை விட 50 மடங்கு அதிகமுள்ள எடையை
தூக்கும். அதே போல தன்னை விட 300 மடங்கு எடை அதிகமுள்ள பொருளை இழுக்கும்.
இது ஆராய்ச்சில நிரூபிக்கப்பட்டிருக்கு!"
"அடேங்கப்பா...சூப்பர் தகவல் தெரிஞ்சி வச்சிருக்கியே...நம்மள விட ஒரு மடங்கு அதிக பாரத்தை சுமக்கவே கஷ்டப்படுறோமே..."
"அதான் சார் சொன்னேன். பெட்டியை நான் தூக்கறேன்னு...நாங்க ரொம்ப சுலபமா தூக்குவோம். 5 ரூபாய்க்கு இவ்ளோ யோசிக்கிறீங்களே!"
"காசுக்காக நான் யோசிக்கல"
"பின்னே"
"பெட்டியை நீ தூக்கிட்டு வெளியே போறப்போ, இதோட சொந்தக்காரங்க பாத்துட்டா என்ன பண்றது. அதான் தயங்குறேன்!"
"வக்கீல் சார், நீங்க தான் என்னைக் காப்பாத்தணும்!"
"சொல்லுங்க, நான் என்ன செய்யணும்?"
"நான் பத்தாவது வரைக்கும் தான் படிச்சிருக்கேன். ஆனா டாக்டர்னு போர்டு
மாட்டிட்டு பொழப்பு நடத்திட்டிருந்தேன். நான் ஒரு போலி டாக்டர்னு
ஜனங்களுக்கு தெரிஞ்சிடுச்சி. இப்போ என்னை போலீஸ் தேடுறாங்க. டாக்டர் வேஷம்
போட்டு நடிச்சா பெரிய தண்டனை கொடுப்பாங்களா.. தண்டனையில இருந்து
தப்பிக்கறது எப்படி?"
"போலி டாக்டர் தானே நீங்க... போலி நீதிபதி கேள்விப்பட்டிருக்கீங்களா...?"
"இல்லையே!"
"சூடான் நாட்டுல அப்படி ஒரு ஆசாமி பிடிபட்டிருக்கார்... அந்த ஆள் ரொம்ப
சாமர்த்தியமா சூடான் நீதி அமைச்சகத்துல, நீதிபதின்னு அடையாள அட்டை
வாங்கிட்டாராம்.. அதுக்கப்புறம் ஒம்பாடா -ங்கற பகுதியில இருக்குற போலீஸ்
ஸ்டேஷன்ல அடையாள அட்டையைக் காட்டி, வழக்குகளை அங்கேயே வச்சி பைசல் பண்ணி
நல்ல காசு பார்த்திருக்கிறார். ஒருமுறை தப்பு தப்பா சட்ட பிரிவுகளை உளறி
மாட்டிக்கிட்டிருக்கார்."
"இது ரொம்ப தப்பு சார்"
"நீங்க பண்ணினதும் தப்புதானே..."
"ஆமாம் சார். அதை இப்போ உணர்கிறேன். ஏற்கனவே நான் பண்ணின தப்புக்கெல்லாம் தண்டனை அனுபவிக்காம தப்பிக்க முடியுமா?"
"ரொம்ப கஷ்டம்"
"நானும் ரொம்ப கஷ்டப்பட்டு தான் சார் இந்த வேஷத்தை போட்டுருக்கேன்.
அடுத்தவங்களுக்குத் தெரியாம போலியா நடிக்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா
சார்..."
"அப்படி ஒண்ணும் கஷ்டமா தெரியலயே.. இப்ப நான் கூடத் தான் நான் போலியா நடிக்கிறேன். உங்களால கண்டுபிடிகக் முடியலயே..."
"என்ன சொல்றீங்க வக்கீல் சார்?"
"நான் வக்கீல் இல்ல... போலீஸ்!"
ஓரளவு வசதி படைத்த ஒருவர், தம்முடைய வீட்டை விற்று விட்டு அதை விட
வசதியான ஒரு வீட்டை வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தார். உடனே தரகரிடம்
சென்று வீட்டை விற்றுத் தருமாறு கேட்டார்.
உடனே தரகர், "நானே பத்திரிகையில விளம்பரம் செய்து வித்துத் தரேன் சார்"
என்று கூறியதுடன், அழகிய வாசகங்களுடன் பத்திரிகையில் விளம்பரம் செய்தார்.
அடுத்தநாள் தரகர் சுமார் பத்து முறை வெவ்வேறு ஆட்களை அழைத்து வந்து வீட்டை
சுற்றிக் காட்டினார். வீட்டின் சொந்தக் காரருக்கு ஆச்சரியம். உடனே
பத்திரிகையில் வெளியான விளம்பரத்தைப் பார்த்தார்.
அதில் குறிப்பிட்டிருந்த தன் வீட்டின் வசதிகளைப் பார்த்த அவர், "அடடா,
நம்ம வீட்டுலயும், வீட்டைச் சுத்தியும் இவ்ளோ வசதிகள் இருக்கா...இப்பத்தானே
வீட்டோட அருமை தெரியுது" என்று ஆச்சரியப்பட்டு, உடனே தரகரிடம் சென்றார்.
"வீட்டை விக்கற யோசனையை நான் கைவிட்டுட்டேன். இனி எப்போதும் விக்கறதா இல்லை. மன்னிச்சுடுங்க" என்று சொல்லி விட்டு வந்தார்.
இன்றைக்கு நம்மில் பலரும் இதே மனநிலையில் தான் இருந்து
கொண்டிருக்கிறோம். நமது பலம் என்ன என்பது நமக்கே தெரியவில்லை. பலவீனங்களையே
நமது மனம் அதிகமாக படம் பிடித்துக் காட்டுகிறது. அதன் காரணமாகவே
வாழ்க்கையில் சோர்ந்து போகிறோம். அறிவின் வெளிச்சத்தில் நடைபோடுகிறபோது,
இப்படிப்பட்ட சிக்கல்கள் ஏதும் ஏற்படுவதில்லை.
அ மெரிக்காவில் ஒரு கணவன் - மனைவி ஒற்றுமையாகத் தான்
வாழ்ந்தார்கள். ஆனால் இடையே ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து
செய்து விட்டார்கள். வெகுநாட்கள் கழித்து, அந்தக் கணவன் ஒரு திருமணத்
தரகரை நாடிச் சென்றார்.
"நான் மறுமணம் செய்து கொள்ளப் போகிறேன். அதற்கு பெண் பார்க்க வேண்டும்"
"உங்கள் வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள்.
இந்தக் கம்ப்யூட்டரில் அதையெல்லாம் பதிவு செய்தால், தகுந்த பெண்ணைத் தேடித்
தந்து விடும்" என்று தரகர் கூற, அந்த நபர் அனைத்து தகவல்களையும் கூறத்
தொடங்கினார்.
இறுதியில் கம்ப்யூட்டர் தேர்ந்தெடுத்துக் கொடுத்தது, அவருடைய பழைய மனைவியை!
இது உண்மையில் நடந்த சம்பவம்!!
இந்த உலகில் முட்டாள்களும் ஒரு வகையில் பைத்தியக்காரர்கள் மாதிரி தான்.
அவர்கள் சொல்வது தான் சரி என்று கடைசி வரை சாதித்துக் கொண்டிருப்பார்கள்.
ஒரு ஆள் டாக்டரைத் தேடி வந்தான். அவனை உட்கார வைத்து டாக்டர் விசாரித்தார்.
"சொல்லுப்பா.. உடம்புக்கு என்ன?"
"எனக்கு வயிறு வலிக்குது டாக்டர்"
"நான் மனநோய் மருத்துவர். வயிறு வலிக்கு நீ பார்க்க வேண்டிய டாக்டர் அடுத்த தெருவுல இருக்கார்."
"அவர் அங்கயே இருக்கட்டும். எதனால எனக்கு வயிறு வலின்னு கேளுங்க டாக்டர்"
"சரி எதனால வலி?"
"நான் ஒரு குதிரையை முழுங்கிட்டேன்!"
"ஓ...அப்படீன்னா நீ இங்க வர வேண்டிய ஆள் தான். உள்ள ரூம்ல வந்து படு!"
உள்ளே அழைத்துச் சென்று, அவனுக்கு ஊசி போட்டு தூங்க வைத்தார். அவன்
வழியிலேயே சென்று அவனை குணப்படுத்த எண்ணிய டாக்டர், உயிருள்ள ஒரு குதிரையை
கொண்டு வந்து மருத்துவமனை வாசலில் கட்டச் செய்தார். தூங்கி எழுந்ததும்,
டாக்டர் அவனருகில் சென்று சொன்னார்.
"அப்பாடா! எல்லாம் நல்லபடியா முடிஞ்சது"
"நீங்க என்ன சொல்றீங்க டாக்டர்?"
"நீ நிஜமாவே ஒரு பெரிய குதிரையை முழுங்கியிருந்தே..அதை ஆபரேஷன் செய்து
வெளியே எடுத்துட்டோம். நல்ல வேளை, உடனடியா நீ என்கிட்ட வந்ததால
பிழைச்சிக்கிட்ட... அந்த குதிரையும் பிழைச்சிட்டுது"
"அப்படியா டாக்டர்...அந்தக் குதிரையை நான் பார்க்கலாமா?"
"வாசலில் கட்டிப் போட்டிருக்கேன். வந்து பார்"
அவன் மெல்ல எழுந்து, அடி மேல் அடி வைத்து வாசல் பக்கம் போனான். அங்கே
குதிரையைப் பார்த்தான். எதுவும் பேசாமல் டாக்டர் பக்கம் திரும்பினான்.
டாக்டர் பெருமிதத்துடன் அவனைப் பார்த்தார்.
"பளார்!!"
எதிர்பாராமல் அவன் அறைந்ததால் நிலைகுலைந்த டாக்டர், "எதுக்குய்யா என்னை அடிச்சே" என ஆவேசமாக கேட்டார்.
"நீங்க ஒரு போலி டாக்டர். நான் முழுங்குனது வெள்ளை குதிரை. ஆனா நீங்க கறுப்பு குதிரையை காட்டி ஏமாத்தப் பாக்குறீங்க!"
டாக்டர் மயங்கி விழுந்தார்.
அமெரிக்காவில் புகழ் பெற்ற வழக்கறிஞர் ஒருவர் இருந்தார். அவர் பெயர்
ஜோசப் சோட். அவரை எதிர்த்து வாதாட ஆளில்லை எனும் அளவுக்கு, தனது வாதத்
திறமையால் நீதிமன்றங்களைக் கலக்குவார். பத்திரிகைகளில் அவரை பேட்டியெடுக்க
போட்டா போட்டி நடக்கும். ஒரு பத்திரிகையாளர் வித்தியாசமாக ஜோசப்பின் தாயாரை
பேட்டியெடுத்தார்.
"உங்கள் பிள்ளை இந்தளவுக்கு புகழ் பெறுவார் என்று நினைத்தீர்களா?"
"ஜோசப் சிறுவனாக இருந்த போதே, சில நிகழ்ச்சிகள் மூலம் அவனது
சொல்லாற்றலைப் பார்த்து வியந்திருக்கிறேன். அவன் தனது வாய்த் திறமையால்
பெரியாளாக வருவான் என யூகித்து விட்டேன்."
"என்ன அது... சொல்லுங்களேன்!"
"ஒரு நாள் சமையலறையில் வேலையாக இருந்தேன். இவன் அப்பா வெளியே
செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஜோசப்பின் அறையில்
பூனை அலறும் சத்தம் கேட்டது. எப்போதும் பூனையில் வாலை இழுத்து விளையாடுவது
ஜோசப்பின் வழக்கம். உடனே நான் அவனை அதட்டினேன்"
"டேய் ஜோசப்.. பூனை வாலை பிடிச்சி இழுக்காதே..அது பாவம்" என்றேன்.
அதற்கு அவன் "பூனை வாலை நான் இழுக்கலை. அதோட வாலை அதுவே இழுத்துகிட்டு கத்துது. நான் சும்மா நிக்கறேன்" என்றான்.
எனக்கு குழப்பமாகி விட்டது. உடனே அந்த அறையை எட்டிப் பார்த்தேன். அங்கு
பூனை வாலை ஜோசப் மிதித்துக் கொண்டிருந்தான். பூனை வலி தாங்காமல் தன் வாலை
இழுத்துக் கொண்டிருந்தது. நடந்த நிகழ்ச்சியை அப்படியே மாற்றிச் சொல்லி
ஏற்றுக் கொள்ள வைக்கும் திறமை அவனுக்கு அப்போதே இருந்தது.
-இது அந்த தாயாரின் மலரும் நினைவுகள்.
வார்த்தைகளை தனக்கு சாதகமாக்கி, அடுத்தவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்வது
ஒரு கலை. அது வழக்கின் திசையை மட்டுமல்ல, வாழ்க்கையின் திசையைக் கூட
மாற்றவல்லது.
மனஇயல் நிபுணர்கள் என்ன சொல்வது என்ன தெரியுமா?
"எவன் ஒருவன் தன் வீசப்படும் கற்களைக் கொண்டே வலிமையான அடித்தளம் அமைத்து முன்னேறுகிறானோ, அவனே சாதனையாளன் ஆகிறான்"
அது ஒரு சிற்றூர். அதை ஒட்டி ஒரு காடு. அந்த சிற்றூரில் முத்து என்பவன்
வசித்து வந்தான். அவன் ஒரு நாள் காட்டுக்கு விறகு வெட்டச் செல்லும்போது,
அழகான மான்குட்டியைக் கண்டு, அதை தூக்கிக் கொண்டுவந்து வளர்த்தான். அதற்கு
வேண்டியதெல்லாம் செய்துகொடுத்து பராமரித்தான்.
ஒருநாள் திடீரென அந்த மான் காணாமல் போனது. பிரியமாக வளர்த்து வந்த
மானைக் காணாமல் அங்குமிங்கும் தேடி அலைந்தான். எங்கு தேடியும்
கிடைக்காததால், கடும் கோபம் கொண்டான். "மானைக் கடத்தியவன் யாராக
இருந்தாலும் அவனை சும்மா விட மாட்டேன்" என சபதம் போட்டான். கடத்தியவனைக்
கண்ணில் காட்டும் படி கடவுளிடம் உருகி வேண்டினான்.
அடுத்த நிமிடமே கடவுள் அவனுக்கு காட்சியளித்தார். "பக்தா.. உன் மான்
காணாமல் போனதற்கு வருந்துகிறேன். உனக்கு என்ன வேண்டும்?" என்றார்.
"எனது மான் காணாமல் போக யார் காரணமோ, அவர்களை என் கண் முன்னால்
காட்டுங்கள். அவனுக்கு என் கையால் தண்டனை அளிக்க வேண்டும்" என ஆவேசமாகக்
கூறினான்.
"பாசத்தை விட கோபம் அதிகமாக இருக்கக் கூடாது பக்தா. உன் மானைக் கேள்,
அல்லது பொன் பொருள் என எது வேண்டுமானாலும் கேள், தருகிறேன். உன் கோபத்தால்
சிக்கலில் மாட்டுவாய்" என்றார்.
ஆனால் அவன் கேட்பதாக இல்லை. "என்ன ஆனாலும் சரி, அவனை என் கண்முன்னே
நிறுத்துங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன். பக்தர்களின் வேண்டுதலை
நிறைவேற்றுவது உங்கள் கடமையல்லவா.." என கத்தினான்.
சிறிது நேரத் தயக்கத்துக்குப் பின், "சரி, இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நீ தான் பொறுப்பு" எனக் கூறினார்.
உற்சாகமான அவன் "இது போதும்.. அவனைக் கொண்டுவாருங்கள்" என்றான்.
உடனே கடவுள் கையை நீட்ட, அங்கு நின்றிருந்தது மிகப் பெரிய சிங்கம்!
அதைப் பார்த்த்து உறைந்து போன முத்து, கடவுளே காப்பாற்று என அலறிக்
கொண்டே அங்குமிங்கும் ஓடினான். ஆனால் சிங்கத்திடமிருந்து தப்பிக்க முடியுமா
என்ன!
இன்றைய மனிதர்கள் பலரும் இப்படித்தான். ஆத்திரத்தால் அறிவிழக்கிறார்கள்.
பழிவாங்கும் எண்ணம் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தி விடும் என்பது பலருக்கும்
தெரிவதில்லை. ஆத்திரம் வரும் நேரத்தில் ஒரு நிமிடம் அறிவுக்கு வேலை
கொடுத்தால் போதும். எந்தப் பிரச்சனையும் நெருங்காது.
"டேய்...! கையைக் கொடுடா, வாழ்த்துக்கள்!"
"எதுக்கு?"
"வேலை கிடைச்சிடுச்சின்னு கேள்விப்பட்டேன்"
"ஓ.. ஆமாம். நன்றி!"
"இப்படி ஒருத்தரை ஒருத்தர் கையைப் பிடிச்சிக் குலுக்குற பழக்கம் எப்படி வந்தது தெரியுமா உனக்கு?"
"தெரியாதே.."
"அந்தக் காலத்துல வீரர்கள் எப்பவும் வாள் அல்லது துப்பாக்கியைக் கையிலே
வச்சிருப்பாங்களாம், ரெண்டு பேர் சந்திக்கும் போது, 'என் கையிலே ஆயுதம்
இல்லை. தாக்குவேன்னு பயம் வேண்டாம். நாம் நட்புறவுடன் இருப்போம்...'
அப்படீங்கறதைத் தெரிவிக்கறதுக்காக கை கொடுத்துக்குவாங்களாம். அந்த வழக்கம்
அப்படியே நிலைச்சி போச்சு"
"இது ஒரு நல்ல பழக்கம் தான்.
மனிதர்கள் ஒருத்தரைப் பார்த்து ஒருத்தர் பயப்பட வேண்டிய அவசியமில்லை.
எல்லோரும் அன்பா இருக்கணும்...ஆதரவா இருக்கணும். சண்டை போடுறது ரொம்பத்
தப்பு. அன்பைக் காட்டறதும் கைதான், அடிக்க ஓங்குறதும் கை தன்!"
"ஆனா சில சமயங்களில் அடி, உதை உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவுறது இல்லை தெரியுமா?"
"எதை வச்சி சொல்ற"
"ஆமாம். நேத்திக்கு கூட கடைத் தெருவுல எனக்கும் இன்னொருத்தனுக்கும் பெரிய சண்டை. கடைசியில கையை ஓங்கினதும் தான் சண்டை நின்னுது"
"அப்படியா.."
"ஆமாம். ஒரே அடி, அவ்வளவு தான்."
"யாருக்கு, அவனுக்கா?"
"இல்லை...எனக்கு!"
"என்ன சார், உங்க பையன் முன்னாடி நின்னு அபிநயம் பிடிச்சிட்டு இருக்கீங்க?"
"இது அபிநயம் இல்லை சார். சைகை மொழி"
"ஏன், பையனுக்கு காது கேக்காதா?"
"கேட்கும். இருந்தாலும் சில விஷயங்கள் அவன் அம்மாவுக்குத் தெரியாம இருக்குறதுக்காக இப்படி சைகை மொழியில பேசிக்குவோம்"
"அது சரி. 'சைகை மொழி'ன்னு சொல்றது சரியா?"
"சைகைகள் மூலமாக பேசுறதும் ஒரு மொழிதான் அப்படீங்கறதை மொழியியல்
வல்லுநர்கள் ஒப்புக்கொள்றாங்க. அர்த்தமுள்ள தனித்தனி ஒலிகளை ஒன்றாக்கி,
அர்த்தமுள்ள சொற்களை ஒரு மொழியில உருவாக்குறது மாதிரியே, அர்த்தமுள்ள
தனித்தனி சைகைகளை ஒன்றாக்கி,அத்தமுள்ள சொற்களை சைகை மொழியில
உருவாக்குகிறோம். சைகை மொழிங்கறது ஆற்றலும், மென்மையும், நுட்பமும் நிறைஞ்ச
ஒரு மொழிதான்!"
"அப்படியா?"
"ஆமாம். சைகை மொழியில கவிதை
பாடுறதும் சாத்தியம் தான். சைகைகளை மாத்தி, மாத்தி காட்டுறது மூலமா சிலேடை
மொழிகளும் பரிமாறிக்கலாம்! கால்லெடெட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த
கிளேட்டன்லல்லி என்கிற ஆய்வாளர் இது தொடர்பா நெறைய ஆராய்ச்சிகள்
பண்ணியிருக்கார்"
"அது சரி...இப்போ உங்க பையன் கிட்ட சைகை மொழியில என்னமோ சொல்லிட்டு இருந்தீங்களே?"
"புதுசா ஒரு ஓட்டல் திறந்திருக்காங்க. அம்மாவுக்குத் தெரியாம போய் சாப்பிடலம். வர்றியான்னு கேட்டேன்."
"அதுக்கு அவன் என்ன சொன்னான்?"
"உங்களுக்குத் தெரியாம நேத்தே நானும் அம்மாவும் அந்த ஓட்டலுக்கு போய்ட்டு வந்துட்டோம்னு சொல்றான்!
"இந்த பஸ்ல எத்தனை வருஷமா நீங்க கண்டக்டரா இருக்கீங்க?"
"ஐந்து வருஷமா இருக்கேங்க!"
"நானும் பலகாலமா இந்த பஸ்ல பயணம் பண்ணிக்கிட்டிருக்கேன். எவ்ளோ
நெருக்கடியான நேரங்களில் கூட பதட்டப்படாம, சிரிச்ச முகத்தோட பயணிகள் கிட்ட
நடந்துக்கிற உங்கள மாதிரி கண்டக்டரை பார்த்ததே இல்லை"
"தொழில்ல
எவ்வளவு டென்ஷன் இருந்தாலும், மனசை லேசா வச்சிக்கணும் சார். அமெரிக்காவுல
உள்ள 'நியூரோசைக்யட்ரிக்' நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?"
"என்ன சார் சொல்றாங்க?"
"மனுஷன் புன்னகைக்கும் போது, சிரிக்கும் போது, மகிழ்ச்சிகரமா இருக்கும்
போது உடம்புல ஒருவித அலைகளை உண்டாக்கி, நியூரோ பெப்டைடுகளை உண்டாக்குமாம்.
இது உடம்புல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இப்படிப்பட்டவங்க தான்
அதிக நாள் ஆரோக்கியமா வாழுறாங்களாம். அதுமட்டுமில்ல...பொறாமை, ஆசை, கோபம்
எல்லாத்தையும் கட்டுப்படுத்தினா, ஆயுள் இன்னும் கூடும்னு ஆய்வுகள்
சொல்லுது. உயிர் போற நேரத்துல கூட பதட்டப்படக் கூடாது சார்"
"அடேங்கப்பா...இவ்ளோ தெரிஞ்சி வச்சிருக்கறதால தான் நீங்க எப்பவும் பதட்டப்படாம சிரிச்ச முகத்தோட வேலை செய்யிறீங்க போல!"
"ஆமாங்க!"
"ஆனா உங்க கிட்ட இருக்குற இந்த நிதானம் உங்க டிரைவர் கிட்ட இல்லைன்னு நினைக்கிறேன்"
"ஏன் அப்படி சொல்றீங்க?"
"இப்ப இந்த பஸ் எப்படி போய்க்கிட்டு இருக்குன்னு பாருங்களேன். தாறுமாறா
தறிகெட்டு ஓடுற மாதிரி தெரியுது. நீங்களாவது முன் பக்கம் போய்
பிரேக்-கிரேக் கழண்டு விழுந்துடுச்சான்னு பாத்துட்டு வாங்களேன், ப்ளீஸ்!"
"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அங்கே போய் பாத்துட்டு வந்து தான் உங்ககிட்ட
பேசிக்கிட்டிருக்கேன். வர்ற வழியில தான் எங்கயோ விழுந்திருக்கணும்னு
நினைக்கிறேன்!"
"எது...பிரேக்கா?"
"இல்ல...டிரைவர்!"