மரணத்தின் தலைவாயிலில்...

பல நூற்றாண்டுகளுக்குமுன் ஒருநாள் ஔரங்கசீப் மார்வார் மன்னராக (தற்போது ஜோத்பூர்) ஜஸ்வந்த் சிங்கை தன் மாளிகைக்கு விருந்தினராக அழைத்து திருந்தார். இருவரும் அரண்மனை நந்தவனத்தில் உலவிக் கொண்டுஇருந்தபோது, அங்கே ஒரு கூண்டில் அடைக்கப்பட்டிருந்த பயங்கரமான ஒரு புலியைக் காட்டி, "ஜஸ்வந்த்! இதுபோன்ற ஒரு புலியை நீங்கள் பார்த்ததுண்டா?" என்று ஔரங்கசீப் கேட்டார்.
 
அதற்கு ஜஸ்வந்த் சிங், "எங்கள் ராஜபுத்திர வமிசத்தில், சிறுவர்கள், புலிகளுடன் விளையாடுவது வழக்கம்!" என்று கிண்டலாகக் கூறியதோடு நிற்காமல், தன்னுடன் இருந்த தனது மகன் பிருத்விசிங்கைக் கூண்டினுள் நுழைந்து புலியுடன் சண்டையிடச் சொன்னார். பதினாறே வயதான அந்தச் சிறுவன் மிகவும் தைரியமாகக் கூண்டினுள் நுழைந்து, புலியுடன் சண்டையிடத் தொடங்கினான். புலிக்கு சரிக்குச் சரியாக மல்யுத்தம் புரிய, புலியும், பிருத்விசிங்கும் கட்டிப் புரண்டனர். இறுதியில், தன் இடையில்இருந்த கத்தியை உருவி, அவன் புலியின் மார்பில் பாய்ச்ச, புலி துடிதுடித்து சுருண்டு விழுந்து இறந்தது. அதைக்கண்ட ஔரங்கசீப்பினால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. இந்தச் சிறுவனே புலியைக் கொல்லும்அளவிற்கு வீரன் எனில், அவனுடைய தந்தை எத்தகைய மகாவீரனாக இருப்பார் என்று நினைத்து பயந்தார்.
 
ஜஸ்வந்த் சிங்க் ஆண்டு வந்த மார்வார் ராஜ்யம் ராஜஸ்தானில் தார் பாலைவனத்திற்கு அருகிலிருந்தது. மிகவும் வறண்ட பூமியான அங்கு எப்போதும் தண்ணீருக்குப் பஞ்சம், ஆதலால் வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் மார்வார் நாட்டு ராஜபுத்திரர்கள் வீரத்திற்குப் புகழ் பெற்றவர்கள். தங்கள் தாய் நாட்டினை உயிருக்கும் மேலாக நேசிப்பவர்கள்! தங்கள் தாய் மண்ணைக் காக்க உயிரையும் திரணமாக மதிப்பவர்கள்!
 
அந்த வமிசத்தில் உதித்த ஜஸ்வந்த் சிங் வலிமையிலும், வீரத்திலும் சிறந்து விளங்கியதில் வியப்புஇல்லை. தனக்கு எதிர்காலத்தில் ஜஸ்வந்த்சிங் போட்டியாக வரக்கூடும் என்று எண்ணிய ஔரங்கசீப் அவரை முளையிலேயே கிள்ளியெறிய விரும்பினார்.
 
ஆனால் அவருடைய எண்ணம் நிறைவேறவில்லை. ஜஸ்வந்த் சிங்கை போரில் தோற்கடிக்க ஔரங்கசீப் எடுத்த முயற்சிகள் யாவும் தோல்வியுற்றன. அதற்கு முக்கிய காரணமாயிருந்தவன் முகுந்த தாஸ்! மன்னரின் நம்பிக்கைக்கு மிக்க பாத்திரமாக இருந்த அவனுடைய சாமர்த்தியத்தினால், ஔரங்கசீப் ஜஸ்வந்த் சிங்கைக் கொல்ல எடுத்த முயற்சிகள் எதுவும் வெற்றி பெறவில்லை.
 
ஆகவே, முதலில் முகுந்த தாசை ஒழித்துக் கட்ட விரும்பிய ஔரங்கசீப் ஒருமுறை அவனை தன் தர்பாருக்கு வரவழைத்தார். ஜஸ்வந்த் சிங்கைக் கொல்ல அவர் முகுந்த தாசைத் தன்னுடன் ஒத்துழைக்கக் கோரினார். அதற்கு ஒப்புக் கொள்ள மறுத்த தாசை கடுமையாக தண்டிக்க எண்ணிய ஔரங்கசீப் அவனை ஒரு புலியின் கூண்டினுள் பிடித்துத் தள்ளி விட்டார். பசியுடனிருந்த புலி அவன் மீது பாய முயன்ற போது முகுந்ததாஸ் அதன் கண்களை உற்று நோக்கி, "ஔரங்கசீப்பின் புலியே! ஜஸ்வந்த் சிங்கின் வளர்ப்புப் புலியுடன் மோதிப்பார்! வா!" என்று சவால்விட, முகுந்த தாசின் பார்வையின் தீவிரத்தைப் பொறுக்க முடியாமல், புலி பின் வாங்கிவிட்டது.
 
ஔரங்கசீப் அவனுடைய வீரத்தைக் கண்டு வியந்து போனார். முகுந்ததாசின் துணிச்சலைப் பாராட்டி அவனுக்குப் பரிசுகள் அளித்து அனுப்பி வைத்தார். ஜஸ்வந்த் சிங்கின் நண்பர்களைத் தன் பக்கம் சேர்த்துக் கொண்டு அவரை அழிக்க முயல்வது வீண் என்று அறிந்த ஔரங்கசீப், நட்புக்கரம் நீட்டி அவரை அழிக்க முயன்றார். அதனால், ஜஸ்வந்தசிங்குடன் சமரசப் பேச்சுவார்த்தைகள் நடத்தி, அவரைத் தன் நண்பராக்கிக் கொண்டதுடன், அவரைத் தன் தளபதிகளில் ஒருவராக ஆக்கினார்.
 
பிறகு, ஆப்கானிஸ்தான் நாட்டுப் புரட்சியாளர்களை ஒடுக்க, ஜஸ்வந்த்சிங் தலைமையில் ஒரு பெரும் முகலாயப் படையை காபூலுக்கு அனுப்பினார். ஔரங்கசீப்பின் நயவஞ்சகத் திட்டங்களில் அதுவும் ஒன்று என்ற அறியாத ஜஸ்வந்த் சிங் தனது மனைவியுடனும், இரு புதல்வர்களுடனும், நூற்றுக்கணக்கான ராஜபுத்திர வீரர்களுடனும் காபூலூக்குச் சென்றார்.
 
தனது வலிமை மிக்க எதிரியை நட்பின் போர்வையில் வஞ்சகமாக காபூல் அனுப்பிய பிறகு, ஔரங்கசீப் ஜஸ்வந்த் சிங்கின் மூத்த மகன் பிருத்விசிங்கை தனது தர்பாருக்கு வரவழைத்து, விருந்தினனாக சில நாள்கள் உபசரித்தபின், அவனுக்கு ஒரு பொன்னாடையைப் பரிசளித்துப் போர்த்தினார்.
அதைப் போர்த்திக் கொண்ட சில நிமிடங்களிலேயே, உடலெங்கும் தீப்பிடித்ததுபோல் பற்றி எரிந்து கொப்புளங்கள் உண்டாகி, பிருத்விசிங் துடிதுடித்து இறந்து போனான். அந்தப் பொன்னாடையில் கடுமையான விஷம் பூசப்பட்டிருந்தது.
 
தன் மூத்த மகன் இறந்த செய்தி கேட்டு, காபூலிலிருந்த ஜஸ்வந்த் சிங் துடித்துப் போனார். காபூலில் புரட்சியாளர்களுடன் நிகழ்ந்த போரில், அவருடைய மற்ற இரு புதல்வர்களும் கொல்லப்பட்டனர். இவ்வாறு தன் பிள்ளைகள் அனைவரையும் இழந்த சோகத்தில், ஜஸ்வந்த் சிங் காபூலிலேயே இறந்தார். ஔரங்கசீப்பின் திட்டம் முழுமையாக நிறைவேறியது. மார்வார் மீது ஔரங்கசீப் படையெடுத்து, அதைத் தன் வசம் கொண்டு வந்து விட்டார்.
 
ஆனால், அவருடைய நிம்மதியைக் குலைக்கும் வண்ணம் ஒரு தகவல் அவர் செவிகளை எட்டியது. ஜஸ்வந்த் சிங் காபூலில் இறந்த சமயம், அவரது மனைவி கர்ப்பமாயிருந்தாள். சில மாதங்களுக்குப்பின் அவளுக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது. ராணி தன் குழந்தை அஜீத் சிங்குடன் மார்வார் திரும்பி வருவதாகத் தகவல் கிடைத்தது. ஜஸ்வந்த் சிங்குடன் சென்ற ஆயிரக்கணக்கான ராஜபுத்திர வீரர்களும் நாடு திரும்புவதாக செய்தி கிடைத்தது. ஜஸ்வந்த் குடும்பத்தை ஆண் வாரிசே இல்லாமல் அழித்து விட்டதாக எண்ணிய ஔரங்கசீப்பிற்கு இந்தச் செய்தி கவலையளித்தது. பிறந்த குழந்தை அஜீத் சிங்கையும் கொன்று விடத் திட்டம் தீட்டினார்.
 
காபூலிலிருந்து திரும்பியவர்களை தன் தர்பாருக்கு அழைத்து அவர்களுக்கு நட்புக்கரம் நீட்டிய ஔரங்கசீப் அவர்களை விருந்தினர் மாளிகையில் தங்க வைத்து உபசரித்தார். போர்வீரர்களுக்குத் தலைமை தாங்கிய ராஜபுத்திர தளபதி துர்காதாசை தன்னிடம் அழைத்து ஔரங்சீப், அவர்களுக்கு மார்வார் ராஜ்யத்தைத் திருப்பித் தருவதாக வாக்களித்தார். பதிலுக்கு, அவர்கள் குழந்தை அஜீத்சிங்கைத் தன்னிடம் ஒப்படைத்து விடவேண்டுமென்று நிபந்தனை விதித்தார். ஔரங்கசீப்பின் வஞ்சகத்தை அறிந்த துர்காதாஸ் அதற்கு ஒப்பவில்லை.
 
இனி அங்கு விருந்தாளியாகத் தங்கினால், குழந்தை அஜீத் சிங்கின் உயிருக்கு ஆபத்து என்று அறிந்து கொண்ட துர்காதாஸ், இளவரசனை அங்கிருந்து வெளியேற்றத் திட்டம் தீட்டினார்.
அதன்படி கோராதாயி என்ற ஆயா குழந்தை அஜீத் சிங்கை எடுத்துக் கொண்டு ரகசியமாக வெளியேறினாள். அதற்குப் பதில் தன் குழந்தையை விட்டுவிட்டுச் சென்று விட்டாள். இதை அறிந்து கடுங்கோபம் கொண்ட ஔரங்கசீப் அவர்களைப் பிடிக்கத் தன் படைவீரர்களை ஏவினார். முகலாய வீரர்கள் இளவரசன் அஜீத் சிங்கை கைப்பற்றுவதைத் தடுக்க, துர்காதாஸ் எஞ்சிய முந்நூறு ராஜபுத்திர வீரர்களுடன் அவர்களை எதிர்த்து சண்டையிட்டார். அவர்களுடைய மனைவிமார்கள் முகலாய வீரர்களிடம் சிக்காமல் தங்கள் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள தீக்குளித்தனர்.
 
கடல் அலைபோல் திரண்டு வந்த முகலாய வீரர்களை, எண்ணிக்கையில் மிகவும் குறைவாக இருந்த ராஜபுத்திர வீரர்களினால் சமாளிக்க முடியவில்லை. அப்படியிருந்தும், தங்கள் இளவரசர் அவர்களிடம் சிக்கக் கூடாது என்ற ஒரே நோக்கத்துடன், இரத்தம் சிந்திப் போரிட்டனர். அவ்வாறு எதிர்த்து சண்டையிட்டவர்களில் ராணியும் ஒருத்தி. ஆனால், நாற்புறமும் முகலாய வீரர்கள் ராஜபுத்திரர்களை சூழ்ந்து கொள்ள, அவர்களிடம் சிக்க விரும்பாத ராணி தன் மார்பில் வாளைப் பாய்ச்சிக் கொண்டு போர்க்களத்தில் இறந்தாள்.
 
ராஜபுத்திரர்கள் அனைவரும் போரில் கொல்லப்பட்டனர். உயிருடன் மிஞ்சியது ஏழு பேர் மட்டுமே! ஆனால் அவர்களுடைய அரும்முயற்சியினால், கோராதாயி இளவரசரை பத்திரமாக எடுத்துச் சென்று தப்பி விட்டாள்.
 
கோராதாயி கண்காணாத ஒரு மலைப் பிரதேசத்திற்கு இளவரசன் அஜீத்சிங்கை எடுத்துச் சென்று வளர்த்தாள். பல ஆண்டுகள் தான் யார் என்பதே தெரியாமல் வளர்ந்த அஜீத் சிங், பெரியவனான பிறகே தன்னைப் பற்றி அறிந்து கொண்டான். அதற்குள் மார்வார் நாட்டு மக்களுக்குத் தங்கள் இளவரசரைப் பற்றிய தகவல் தெரிந்து விட, அவனை ராஜமரியாதையுடன் அழைத்து வந்தனர். வளர்ந்து வாலிபனான பிறகு, அஜீத் சிங் ராஜபுத்திர வீரர்களைத் திரட்டி, இழந்த தன் ராஜ்யத்தை முகலாயர்களிடமிருந்து மீட்க ஏற்பாடுகள் செய்தான்.
 
வயோதிகத்தை அடைந்த ஔரங்கசீப் இறுதியில் 1707ஆம் ஆண்டில் உயிர் நீத்தார். அதன்பின், முகலாயர்களின் சேனையும் வீரர்களும் பலவீனம் அடைந்தனர். இதை அறிந்த அஜீத் சிங் அவர்களுடன் போராடி, தன்னுடைய முன்னோர்கள் இழந்த தன் மார்வார் ராஜ்யத்தைத் திரும்பப் பெற்றான்.

0 comments:

Post a Comment

Flag Counter