நிலாவில் தெரியும் முயல்

பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன், மிருகங்களால் மனிதர்களைப் போல் பேச முடிந்தது. அப்படிப்பட்ட அந்தக் காலத்தில், ஒரு காட்டில் ஒரு முயல், ஓர் ஓநாய், ஒரு கீரிப்பிள்ளை, ஒரு குரங்கு ஆகிய நான்கும் நேருங்கிய நண்பர்களாக இருந்தன.
 
ஒவ்வொரு மாலைப் பொழுதிலும், நான்கு மிருகங்களும் சேர்ந்து உட்கார்ந்து, அன்று நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி உரையாடுவதுண்டு. நால்வருள் முயல் மிகவும் அறிவாளியாகவும், குணசாலியாகவும் விளங்கியது. மனிதர்களின் அறிவுத்திறனைப் பற்றி நன்கு அறிந்திருந்த முயல், மனிதர்களைப் பற்றிய விஷயங்களைத் தன் நண்பர்களிடம் விவரமாக எடுத்துச் சொல்வது வழக்கம்!
 
ஒருநாள் இரவு நேரத்தில் வானில் பிரகாசித்த நிலவை முயல் உற்றுப் பார்த்தது. நிலவைக் கூர்ந்து கவனித்த முயல், "நாளைக்கு மனித குலத்தினர் விரதம் இருப்பார்கள். சூரியன் அஸ்தமனம் ஆகியபிறகே உணவு உண்பார்கள். பகற்பொழுதில் ஏழை, எளியவர்களுக்கு தான, தருமங்கள் செய்வார்கள். நாமும் மனிதர்களைப் போல் நாளை விரதம் இருப்போம்! தானதருமம் செய்வோம்!" என்றது.
 
மற்ற நண்பர்களும் சம்மதித்தனர். மறுநாள் பொழுது புலர்ந்ததும், கண் விழித்த கீரிப்பிள்ளை காலை ஆகாரத்தை உண்ண முயற்சிக்கையில், விரதத்தைப் பற்றி ஞாபகம் வந்தது. "பகல் முழுவதும் உண்ணாமல் இருந்தால், இரவு மிகவும் பசிக்கும்.
 
அதனால், இரவுக்கான உணவை இப்போதே தேடிக் கொள்கிறேன்" என்று எண்ணிக் கொண்டே, நதியை நோக்கிச் சென்றது. அங்கு, ஒரு மீனவன் தான் அதிகாலையில் பிடித்த மீன்களை மணலில் புதைத்து வைப்பதைப் பார்த்தது. விரதநாளன்று திருடக்கூடாது என்பதனால், அவற்றைத் திருட்டுத் தனமாகத் தின்ன முயலவில்லை.
அதற்குப் பதிலாக, மீனவன் அந்த இடத்தை விட்டு அகலும் வரை காத்திருந்தது. அவன் சென்ற பிறகு, "இந்த மீன்களை இங்கே வைத்து இருப்பது யார்?" என்று உரக்கக் கூவியது. யாருமே அதற்குப் பதில் அளிக்காததால், அவை தனக்கே சொந்தம் என்று சாமர்த்தியமாக முடிவு செய்து, அந்த மீன்களை தன் விட்டிற்கு எடுத்துச் சென்று பதுக்கி ஒளித்தது. பிறகு தான, தருமம் பற்றி மறந்து விட்டு, நாள் முழுவதும் தூங்கிக் கழித்தது.
 
குரங்கும், ஓநாயும் கீரிப்பிள்ளை போலவே நினைத்தன. இரவு மிகவும் பசிக்கும் என்பதால், அதற்குத் தேவையான உணவைத் தேடுவதில் முனைந்தன. ஓநாய் ஓரிடத்திலிருந்து சிறிது மாமிசத்தைத் திருடி மறைவிடத்தில் பதுக்கி வைத்துக் கொண்டது. குரங்கு ஒரு மாமரத்திலேறி, மாம்பழங்களைப் பறித்து ஓரிடத்தில் ஒளித்து வைத்தது. பிறகு, ஓநாயும் குரங்கும் நாள்முழுவதும் சோம்பேறித்தனமாகப் படுத்துத் தூங்கின.
 
அதிகாலையில் விழித்துக் கொண்ட முயல் முதன்முதலில் பனியில் நனைந்து, சூரிய ஒளியில் மின்னிக் கொண்டிருந்த புற்களைப் பார்த்தது. "இரவு நேரமான பிறகு புல் தின்னுவோம்! பகற்பொழுதில் விரதம் காப்போம்!" என்று சொல்லிக் கொண்டது.
 
"ஆனால், விரதமுறைப்படி யாராவது எளியவர்களுக்கு தானம் அளிக்க வேண்டுமே! என்னைத் தேடி யாராவது மனிதன் வந்தால், அவனுக்கு தானம் அளிக்க என்னிடம் புல்லைத் தவிர ஒன்றுமேயில்லையே! என்ன செய்வது?" என்று சிந்தனையில் ஆழ்ந்தது.
பிறகு, "யாராவது என்னிடம் வந்தால், அவனுக்கு என்னையே உணவாகத் தந்து விடுகிறேன். மனிதர்களுக்கு முயல் மாமிசம் மிகவும் பிடிக்கும் என்று கேள்விப் பட்டுஇருக்கிறேன்!" என்று தீர்மானித்த பிறகு, மற்ற வேலைகளை கவனிக்கச் சென்றது.
 
முயல் மனத்தில் நினைத்ததை சாக்கா என்ற தேவதை அறிந்து கொண்டது. அந்த தேவதை வசிக்கும்இடம் மேகங்கள்! "முயல் உண்மையாகத் தான் கூறுகிறதா? சோதித்துப் பார்க்கலாம்!" என்று தேவதை தனக்குள் சொல்லிக் கொண்டது.
 
மாலையில், முயலை நாடிவந்த தேவதை, ஒரு முனிவரைப் போல் உருவம் எடுத்துக் கொண்டது. "முயலே! நான் இன்று முழுவதும் விரதம் இருந்ததால் மிகப் பசியாக இருக்கிறேன். எனக்கு ஏதாவது தின்னத் தருவாயா?" என்று கேட்டது. "கட்டாயம் தருகிறேன். உங்களுக்கு முயலின் மாமிசம் பிடிக்கும் என்று நான் கேள்விப் பட்டிருக்கிறேன். அது உண்மையா?" என்றது. "ஆமாம்!" என்றார் முனிவர்.
 
"அப்படியானால், என்னையே கொன்று தின்று பசியாறி விடுங்கள். உங்களுக்குத் தர வேறு எதுவும் என்னிடத்தில் இல்லை!" என்றது முயல். "நான் ஒரு முனிவர்! விரதநாளன்று, ஓர் உயிரைக் கொலை செய்யமாட்டேன்" என்று முனிவர் கூறினார்.
 
"அப்படியானால், உலர்ந்த குச்சிகளை சேகரித்துத் தீ மூட்டுங்கள். தீயினுள் நான் குதிக்கிறேன். பிறகு வறுபட்ட என் உடலை நீங்கள் தின்னலாம்!" என்றது முயல். முயலின் சொற்களைக் கேட்டு பிரமித்தார் முனிவர்! ஆனால், அவருக்கு அப்போதும் அதன் சொற்களில் முழுநம்பிக்கை உண்டாகவில்லை.
அதனால் அதை சோதிக்க, காய்ந்த சருகுகளில் தீ மூட்டினார். அவர் சற்றும் எதிர்பாராதபடி, எந்தவிதத் தயக்கமுமின்றி முயல் தீக்குள் பாய்ந்து விட்டது. ஆனால், உடலைச் சுற்றி தீ எரிந்த போதிலும், அதனுடைய தோல் கருகவில்லை. சொல்லப்போனால், குளிர்ச்சியாக இருந்தது. சற்றுநேரத்தில் தீ அணைந்துவிட, முயல் தான் பச்சைப் பசேல் என்ற புல்தரையில் உட்கார்ந்து இருப்பதைக் கண்டு வியப்படைந்தது. அதன் முன்னால் முனிவரைக் காணவில்லை. அவர் இருந்த இடத்தில், சாக்கா தேவதை நின்று கொண்டு இருந்தது.
 
"நான்தான் சாக்கா தேவதை! நீ சொன்னபடியே மிக சிரத்தையுடன் விரதம் காத்தாய்! மற்றவர் பசி தீர்க்க, உன்னையே பலியிடவும் நீ தயங்கவில்லை. ஆகவே, நீ ஒரு தெய்வப்பிறவி! உன்னுடைய தியாகத்தை மெச்சி உனக்கு சாகாவரம் அளிக்கிறேன்" என்று அறிவித்த தேவதை தான் கையை நீட்டி மலையைத் தொட்டு அதிலிருந்து ஏதோ ஒரு மர்மப் பொருளையெடுத்து நிலவை நோக்கி வீசியெறிய, அது நிலவின் பரப்பில் ஒரு முயலாகத் தோற்றம்அளித்தது.
 
"இன்று முதல் உன் உருவம் நிலாவில் தெரியும். நிலாவைப் பார்க்கும் மனிதர்கள் அதில் ‘மற்றவர்களுக்கு மனமார அளித்தால், கடவுள் அதை உனக்குத் திருப்பித் தருவார்' என்ற நீதியை உன் உருவம் அவர்களுக்கு நினைவூட்டும்" என்று சாக்கா தேவதை கூறியது.

0 comments:

Post a Comment