வடிகட்டிய முட்டாள்!

சத்தியானந்தர் நடத்தி வந்த குருகுலம் மிகப் புகழ் பெற்றிருந்தது. அதில் பயில பல ராஜ்யங்களில்
இருந்தும் மாணவர்கள் வருவதுண்டு. குருகுலத்தில் பயிலும் மாணவர்களில் ஏழைகளும் உண்டு! இளவரசர்களும் உண்டு! பொதுவாக, குருகுலத்தில் மாணவர்கள் ஐந்து ஆண்டுகள் பயில்வது வழக்கம்! கற்க வேண்டியதை எல்லாம் அந்த ஐந்து ஆண்டுகளில் கற்றுக் கொண்டபின், அவர்கள் வீடு திரும்புவர்! அப்போது சத்தியானந்தர் யாராவது ஒரு மாணவனை தன்னுடன் அழைத்துக் கொண்டு நீண்ட யாத்திரை செய்வது வழக்கம்!
 
ஒருமுறை, சத்தியானந்தர் பிரதாபன் என்ற இளவரசனைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு யாத்திரையைத் தொடங்கினார். பயணத்தில் கால்நடையாகச் செல்லும்போது, குரு பேசுவதில்லை. வழியில் தென்படும் காட்சிகளையும், மனிதர்களையும் பிரதாபன் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றும், இடையிடையே ஓய்வெடுக்கும்போது அவன் தன் சந்தேகங்களை குருவிடம் கேட்டு விளக்கம் பெறலாம் என்றும் சத்தியானந்தர் அவனிடம் ஏற்கெனவே சொல்லியிருந்தார்.
 
ஏதாவது ஒரு கோயிலுக்குச் சென்று இறைவனை தரிசித்தப் பிறகு, அவர்கள் இருவரும் அந்த கிராமத்தில் ஓரிரு நாள்கள் தங்கி, கிராமத்தினர் அளிக்கும் உபசரிப்பை ஏற்றுக் கொள்வர். ராஜ்யமாளும் மன்னரை சந்திக்க நேர்ந்தால், சத்தியானந்தர் மன்னரோடு நாட்டு நடப்புகளைப் பற்றி உரையாடி விட்டு, ஆட்சி செவ்வனே நடைபெற ஆலோசனைகளைக் கூறுவார்.
 
இவ்வாறு, பல ஊர்களையும், கோயில்களையும் தாண்டிச் சென்ற பிறகு, ஒருநாள் இருவரும் போதபுரி என்ற ராஜ்யத்தின் தலைநகரை அடைந்தனர்.
போதபுரியை ஆண்டுவந்த மன்னனைப் பற்றி அவர்கள் கேள்விப்பட்ட விவரங்கள் அவர்களை கவலைக்குள்ளாக்கின. அவன் ஒரு மதியற்ற மன்னன் என்றும், தாறுமாறாக ஆட்சி புரிந்து குடிமக்களை மிகவும் அல்லலுக்குள்ளாக்குவதாகவும் கேள்விப்பட்டனர். அவனுடைய அமைச்சர்கள் அவனைப் போலவே முட்டாள்களாக இருந்தனர். மன்னனுடைய கட்டளையின்படி, வியாபாரிகள் தானியங்களிலிருந்து விலையுயர்ந்த தங்கம், வைரம் வரை அனைத்துப் பொருட்களையும் ஒரே விலையில் விற்குமாறு கட்டாயப் படுத்தப் பட்டனர். அதனால் அத்தியாவசியமான பொருட்களும் அதிக விலைக்கு விற்றன. வேலை செய்ய முடியாத கிழவர்கள், நோயாளிகள் ஆகியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
 
இவ்வாறு போதபுரி ராஜ்யத்தில் எல்லாமே தலைகீழாக முறைகேடான வழிகளில் நடப்பதைக் கேட்ட பிரதாபன் தன் குருவிடம் அந்த மதியற்ற மன்னனைச் சந்திக்கவே வேண்டாம் என்று கூறினான்.
 
ஆனால் சத்தியானந்தர் "நாம் காதால் கேட்பதை மட்டும் வைத்து மன்னனை முட்டாள் என்று மதிப்பிடக் கூடாது. நேரில் சென்று சந்தித்தால் உண்மை தெரியும்!" என்றார்.
 
பிறகு, இருவரும் அரண்மனையை அடைந்து, வாயிற்காவலர்களிடம் மன்னனை சந்திக்க அனுமதி வேண்டினர். மன்னர் சபையில் இருப்பதாகத் தெரிவித்த காவலர்கள் அவர்களை சபைக்குச் செல்ல அனுமதித்தனர். சபைக்குள் இருவரும் நுழைந்தபோது, மன்னன் ஒரு விசாரனையில் ஈடுபட்டு இருந்தான்.
 
மன்னன் முன் இரு பெண்கள் தலைவிரி கோலமாக நின்று கொண்டு அழுது புலம்பிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருத்தி, "மன்னா! எங்கள் இருவரின் கணவர்களும் திருடர்கள்! வீடுகளில் புகுந்து, சுவரில் கன்னம் வைத்து உள்ளே நுழைந்து திருடுவது அவர்கள் தொழில்! நேற்றிரவு, அவர்கள் வியாபாரி தனபாலரின் கடைச் சுவரில் ஓட்டை போட்டு உள்ளே புக முயன்றபோது, சுவர் இடிந்து அவர்கள் மீது விழுந்தது. இருவரும் இறந்து விட்டனர்...!" என்று சொல்லிக் கொண்டே ‘ஓ' என்று கதறினாள். மற்றொருத்தி, "வியாபாரி கடையை ஒழுங்காகக் கட்டவில்லை.
அதனால்தான் ஓட்டை போட்டவுடன் சுவர் இடிந்து விழுந்து எங்கள் கணவர்களின் உயிரைப் பறித்தது. வியாபாரி தன் கடையின் கட்டட வேலையை சரியாக செய்யாததால் இந்த விபத்து நிகழ்ந்தது. அதனால் அவர் எங்களுக்கு நஷ்டஈடு தர வேண்டும்!" என்று ஆவேசத்துடன் கூறினாள். உடனே, மன்னன் குற்றவாளியான வியாபாரியை அழைத்து வரச்சொன்னான்.
 
உடனே, வியாபாரி தனபாலன் மன்னன் முன் இழுத்தவரப்பட, அவன், "மன்னா! சுவர் இடிந்து விழுந்தது என் தவறல்ல! கொத்தனாரின் தவறு! ஆகவே அவரைத் தண்டிக்க வேண்டும்!" என்று வாதாட, உடனே, "குற்றவாளியான கொத்தனார் எங்கே? அவனை உடனடியாக அழைத்து வாருங்கள்" என்று மன்னன் கூறினான். கொத்தனார் சபைக்கு இழுத்து வரப்பட்டான். அவன் மன்னரை வணங்கிவிட்டு, "மன்னா! நான் இல்லாதபோது சித்தாள் தண்ணீரை அதிகமாக சுண்ணாம்பில் கொட்டி விட்டாள். அதனால் அவளைத்தான் தண்டிக்க வேண்டும்!" என்றான்.
 
"நீ சொல்வது சரி! சித்தாள் தான் குற்றவாளி! அவளை அழைத்து வாருங்கள்!" என்று மன்னன் கட்டளை இட்டான். உடனே சித்தாள் அழைத்துவரப்பட, அவள் ‘ஓ' எனக் கதறிக் கொண்டே "ஐயோ! நான் தண்ணீரைக் கொட்டவில்லை!" என்று அழுதனர்.
 
"இப்படி ஒவ்வொருவரும் சமாதானம் கூறினால், நான் யாரைத்தான் தண்டிப்பது? சித்தாளான நீதான் குற்றவாளி! உன்னைத் தூக்கிலிட உத்தரவிடுகிறேன்!" என்று மன்னன் தீர்ப்பு வழங்கினான்.
 
மன்னனுடைய கிறுக்குத்தனமான தீர்ப்பைக் கேட்டவுடன் பிரதாபன், "குருதேவா! இந்த மன்னனின் முட்டாள்தனத்திற்கு எல்லையே இல்லை! இத்தகைய முட்டாளுக்கு நீங்கள் என்ன புத்திமதி கூற முடியும்? பேசாமல் திரும்பிச் சென்றுவிடலாம்!" என்று கிசுகிசுத்தான். ஆனால் சத்தியானந்தர் அதைக் கேட்காமல் மன்னனை அணுகினார். "மன்னா! இந்த வழக்கு விசாரணையை நானும் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். நீங்கள் வழங்கிய தீர்ப்பு முற்றிலும் தவறானது.
சித்தாள் குற்றமற்றவள்!" என்று குரு கூறியதும், மன்னனுக்குப் பயங்கர கோபம் ஏற்பட்டது. "நீ யார் எனக்கு புத்தி சொல்ல! என்ன தைரியம் உனக்கிருந்தால் என் தீர்ப்பு தவறு என்று சொல்லுவாய்? சித்தாளுக்கு பதிலாக உன்னைத் தூக்கிலிடுகிறேன் என்று சீறி விழுந்த மன்னன் சத்தியானந்தரை உடனே தூக்கிலிட உத்தரவு பிறப்பித்தான்.
 
உடனே, மன்னனின் காவலர்கள் சத்தியானந்தரைத் தூக்கிலிட தூக்குமேடைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். பிரதாபன் தன் குருவின் செவிகளில் ரகசியமாக ஒரு யோசனை கூறினான். உடனே, மன்னனை நோக்கித் திரும்பிய சத்தியானந்தர், "மன்னா, இறக்குமுன் என் கடைசி ஆசையை நிறைவேற்றுவீர்களா?" என்று கேட்டார்.
 
"என்ன அது?" என்று மன்னன் கேட்க, "என் சிஷ்யனுக்கு ஞானதிருஷ்டியில் கடவுள் சற்றுமுன் தோன்றினார். உன்னுடைய குரு நிரபராதி! ஆகவே, அவரை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல நானே நேரில் தங்கத் தேரில் வருகிறேன்' என்று சொன்னாராம்! அதனால் சீக்கிரமே என்னைத் தூக்கிலிடுங்கள்" என்றார் சத்தியானந்தர்.
 
"மன்னன் நான் இருக்கும்போது, கடவுள் உன்னை ஏன், சொர்க்கத்திற்கு அழைத்துப் போக வர வேண்டும்? நானே தூக்கில் தொங்குகிறேன்! என்னை அவர் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லட்டும்!" என்று கூறிய மன்னன் தானே தூக்கு மேடைக்குச் சென்றான்.
 
தூக்கு மேடையில் மன்னன் ஏறியவுடன், தூக்கிலிடுபவன் வெலவெலத்துப் போனான். "மகாராஜா! தூக்குக் கயிறின் சுருக்கு மிகவும் சிறியதாக இருப்பதால் உங்கள் தலை இதற்குள் நுழையாதே!" என்றான். "அடடா! சொர்க்கத்திற்குச் செல்லும் வாய்ப்பு வீணாகி விட்டது!" என்று மன்னன் திரும்ப அரண்மனைக்குச் சென்றான்.
 
தன் சிஷ்யனின் பக்கம் திரும்பிய குரு, "நீ சரியாகச் சொன்னாய்! இந்த மன்னன் ஒரு வடிகட்டிய முட்டாள்! இவனைத் திருத்த யாராலும் முடியாது. முதலில் இந்த ராஜ்யத்தை விட்டு தப்பியோடுவோம்!" என்று சொல்ல, இருவரும் அங்கிருந்து அகன்றனர்.

0 comments:

Post a Comment