தேவையற்றக் கேள்விகள்

 
வேங்கடபுரியில் வசித்து வந்த பிரசாத் புத்திசாலியான இளைஞன்! ஆனால் வடிகட்டிய சோம்பேறி! அதுமட்டும் இல்லாமல் பார்ப்பவர்களைத் தேவையற்றக் கேள்விகளைக் கேட்டுத் துளைத்து விடுவான். அதனால் அவன் தலையைக் கண்டதுமே, கிராமத்து ஆட்கள் ஓடி ஒளிந்தனர். அவனது தந்தையும் அவனுக்குப் பலமுறை புத்தி சொல்லி அலுத்து விட்டார்.
 
ஒருநாள் அவன் தன் வேலைக்காரன் லட்சுமணனை அழைத்துக் கொண்டு பக்கத்து கிராமத்து சந்தைக்குச் சென்றான். சந்தையில் இருந்து ஊர் திரும்ப நேரமாகிவிட்டது. நன்கு இருட்டிய பிறகும், அவர்களால் தங்கள் கிராமத்திற்குத் திரும்ப முடியவில்லை. போதாக் குறைக்கு, இருட்டில் கிராமத்திற்குச் செல்லும் வழியும் தெரியவில்லை.
 
இரவில் எங்கு தங்குவது என்று குழம்பிய அவர்களுக்கு நேடுஞ்சாலையிலிருந்து தொலைவில் ஒரு குடிசை தென்பட்டது. இருவரும் அங்கு சென்றனர். குடிசையில் ஒரு சாமியார் தனியாக உட்கார்ந்திருந்தார். அவரை சந்தித்து அன்று இரவு அவருடைய குடிசையில் தங்க முடியுமா என்று வேலைக்காரன் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, பிரசாத் "சாமியாரே! தன்னந்தனியாக இந்தக் குடிசையில் ஏன் வசிக்கிறீர்கள்? சாப்பாட்டிற்கு என்ன செய்வீர்கள்? சமைத்து சாப்பிடுகிறீர்களா அல்லது பிச்சையெடுத்து சாப்பிடுகிறீர்களா?
 
நீங்கள் உண்மையான சாமியாரா அல்லது போலிச்சாமியாரா?" என்று ஏடாகூடமாகக் கேள்விகள் கேட்டான். வேறு ஒருவராக இருந்தால், அவனுடைய கேள்விகளினால் மிகவும் கோபமடைந்து இருப்பார்கள்.
ஆனால், சாந்தமே உருவான சாமியார் புன்னகைத்துக் கொண்டே, "தம்பி! நீ களைத்துப் போய் வந்திருக்கிறாய் என்று தோன்றுகிறது. முதலில் நான் தரும் பழங்களைச் சாப்பிட்டு படுத்துத் தூங்கு! விடிவதற்குள் உன் கேள்விகளுக்குத் தானாகவே பதில் கிடைத்து விடும்!" என்றார்.
 
உண்மையிலேயே பிரசாதுக்குப் பசியாக இருந்ததால், அத்துடன் தன் கேள்விகளை நிறுத்திவிட்டு, சாமியார் கொடுத்தப் பழங்களைத் தின்றான். அவனுடைய வேலைக்காரனும் பழங்கள் சாப்பிட்டான். பிறகு இருவரும் குடிசையின் ஒரு மூலையில் படுத்து உறங்கினர்.
 
சிறிது நேரத்தில், பிரசாத் எங்கோ பறப்பது போல் உணர்ந்தான். திடுக்கிட்டுக் கண் விழித்ததும், அவன் ஒரு பெரிய தோப்பினுள் இருப்பதைக் கண்டான். திடீரென, இரவு போய், பகலாகிவிட்டது. தோப்பிலிருந்த மரங்கள் மிகவும் உயரமாகவும், அடர்த்தியாகவும் இருந்தன. அவன் அந்த மரங்களை அண்ணாந்துப் பார்த்துக் கொண்டுடிருக்கையில், திடீரென அந்த மரங்களிலிருந்து மனிதர்கள் குதித்தனர்.
 
அந்த மனிதர்களும் மிக உயரமாக இருந்தனர். அவர்களில் ஒருவன் பிரசாத் முன் வந்து, "ஐயா! இந்தக் கிராமத்திற்கு விசித்திரபுரி என்று பெயர்! என் பெயர் மாரி! நான்தான் கிராமத்தலைவன்! எங்கள் கிராமத்திற்கு விருந்தாளியாக வந்துள்ள உங்களை நான் மனமார வரவேற்கிறேன்" என்றான்.
 
உடனே பிரசாத், "நீங்கள் ஏன் மரங்களிலிருந்து கீழே இறங்கி வந்தீர்கள்? நீங்கள் மரங்களிலேயே வசிப்பவர்களா?" என்றான். "ஐயா! எங்கள் விடுகள் மரங்களின் உச்சியில் உள்ளன!" என்றான் மாரி. "அதிருக்கட்டும்! சற்றுமுன் தான் இரவாக இருந்தது. இங்கு நான் வந்ததும் திடீரென பகற்பொழுது எப்படி உண்டாயிற்று?" என்று கேட்டான் பிரசாத்.
 
"எங்கள் கிராமத்தில் சூரியன் அஸ்தமனம் ஆவதில்லை. நாங்கள் விருந்தாளிகளை நன்கு உபசரித்து விருந்தளிக்க வேண்டும். இல்லையேல், இங்கு நிரந்தரமாக இருட்டாகிவிடும். விருந்தாளிகளுக்கான வீடும் மரத்தின் உச்சியில்தான் இருக்கிறது. வாருங்கள்!" என்றான் மாரி.

"எனக்கு மரமேறத் தெரியாதே!" என்றான் பிரசாத். இரு சக்கரங்களை மாரி அவன் கால்களில் கட்டி விட்டு, "இந்த சக்கரங்களின் உதவியினால் நீங்கள் பறக்க முடியும்! உங்கள் மாளிகைக்குப் பறந்து வாருங்கள்!" என்றான் மாரி.
 
உடனே, பிரசாத்தும் பறந்து சென்று விருந்தினர் மாளிகையை அடைந்தான். கூடவே, மாரியும் அவனுடைய ஆட்களும் வந்தனர். மரத்தின் உச்சியில் கட்டப்பட்டிருந்த அந்த வீடு விசாலமாக இருந்தது. ஆனால் அந்த வீட்டிற்குள் சில கறுப்புப் பூனைகள் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்தன.
 
"இந்தப் பூனைகளும் உங்கள் விருந்தாளிகளா?" என்று பிரசாத் கிண்டலாகக் கேட்டான். "இவர்கள் ஒரு காலத்தில் விருந்தாளிகளாக இருந்தார்கள். ஆனால் விருந்தும், மருந்தும் சில நாள்களுக்குத்தான்! பிறகு இங்கே வருபவர்கள் கடினமாக உழைத்து வேலை செய்ய வேண்டும். இல்லை என்றால் பூனைகளாக மாற்றி விடுவோம்" என்றான் மாரி! அதைக் கேட்டதும் பிரசாத் திடுக்கிட்டான்.
 
அப்போது கீழே ஒரு பெரிய நடனக் குழுவினர் பாட்டுப் பாடிக் கொண்டே நடனமாடத் தொடங்கினர். "உங்களை மகிழ்விப்பதற்காகத்தான் இவர்கள் கேளிக்கை நிகழ்த்துகின்றனர்!" என்றான் மாரி. "அப்படியானால், நான் கீழே இறங்கி நின்று பார்க்கிறேன்!" என்று சொல்லிவிட்டு பிரசாத் பறந்து சென்று கீழே போனான். மாரியும், அவனுடைய ஆட்களும் அவனைத் தொடர்ந்து கீழே இறங்கினர். கீழே நடனமாடிக் கொண்டிருந்தவர்கள் தங்கள் கைகளில் கோப்பையேந்தி இடைஇடையே ரசித்துக் குடித்தனர். கோப்பை காலியானதும், அங்கு ஓரத்தில் நின்று கெண்டிருந்த ஒரு ஆள் அவர்களுடைய கோப்பையை நிரப்பிக் கொண்டிருந்தான்.
 
"ஐயோ பாவம்! அவன் மட்டும் ஏன் நடனம் ஆடாமல் மற்றவர்களின் கோப்பைகளை நிரப்புகிறான்? அவன் யார்? அவர்கள் என்ன குடிக்கின்றனர்?" என்று கேட்டான் பிரசாத். "அவர்கள் குடிப்பது சோமபானம் என்ற மது! அதை நிரப்புபவன்தான் மதுவைத் தயாரித்தவன்! அவன் உன்னைப்போல் ஒரு காலத்தில் விருந்தாளியாக வந்தவன்! மற்றவர்களை ஓயாமல் தொணதொண என்று கேள்விகள் கேட்டுக் கொண்டேஇருந்ததால், அவனுக்கு இந்த தண்டனை கொடுத்து விட்டோம்" என்றான் மாரி!"ஐயையோ!" என்று அலறினான் பிரசாத். தன் கதியும் அப்படித்தான் ஆகப்போகிறது என்று புரிந்து கொண்டு, அங்கிருந்து ஓட முயற்சித்தான். உடனே, அந்தப் பிரதேசம்எங்கும் நேருப்பு மழைக் கொட்டத் தொடங்கியது. "எங்களுக்கு நேருப்பு மழை பிடிக்கும். உன்னால்தான் இந்த பாக்கியம் கிடைத்தது. விருந்தாளியான உனக்குப் பரிசு தர விரும்புகிறோம்! சொல்! என்ன வேண்டும்?" என்று கேட்டான் மாரி.
 
"ஆளை விடு சாமி! என்னை என் ஊருக்கேத் திருப்பி அனுப்பி விடுங்கள்!" என்று பிரசாத் கூற, மாரி "தாராளமாகப் போ!" என்று கூறிவிட்டு அவனை அலாக்காகத் தூக்கி எறிய, பிரசாத் "ஐயோ!" என்று அலறினான். "என்ன ஆயிற்று எசமான்?" என்று வேலைக்காரன் தூக்கத்திலிருந்து பதறியெழ, அப்போதுதான் தான் இதுவரை கண்டதெல்லாம் கனவு என்ற உண்மை பிரசாத்திற்குப் புலப்பட்டது.
 
அதற்குள் பொழுது விடிந்து இருந்தது. குடிசையை விட்டு வெளியே வந்த பிரசாத், அங்கு சாமியார் தியானத்தில் ஆழ்ந்து இருப்பதைக் கண்டான். சாமியார் கண்களைத் திறந்து அவனை நோக்க, அவன் அவர் கால்களில் வீழ்ந்து வணங்கினான்.
 
"என்னப்பா? உன் கேள்விகளுக்கு விடை கிடைத்தா?" என்று கேட்டார். "ஆம்!" என்று பிரசாத் தலையை ஆட்டினான். "மகனே! தேவையற்றக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டு இனியாவது உன் நேரத்தை வீணாக்காமல் இரு!" என்றார். அவரிடம் விடைபெற்றுக் கொண்டு வீடு திரும்பிய பிரசாத் அன்றுமுதல் தேவையற்றக் கேள்விகளைக் கேட்காமல் தந்தையுடன் வயலுக்குச் சென்று அவருடைய வேலைகளில் உதவி செய்யத் தொடங்கினான்.
 

0 comments:

Post a Comment

Flag Counter