நன்றியுள்ள நண்பன்

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
                                 அன்றே மறப்பது நன்று.


விளக்கம் :ஒருவர் நமக்கு செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் செய்த தீமையை அக்கணமே மறந்து விடுவது நல்லது.

மருத நாட்டு இளவரசன் வீரசிம்மனும், ஏழைக் குடும்பத்தில் பிறந்த கலைதாசனும் ஒரே குருகுலத்தில் பயின்ற போது இணைபிரியா நண்பர்களாக இருந்தனர். வீரசிம்மன் மன்னனாக முடிசூடியதும், பழைப நட்பை மறக்காமல் கவிதைகள் புனைவதில் வல்லவனான கலைதாசனை தனது ஆஸ்தான கவிஞனாக்கினான். அன்று முதல் ஏழ்மை நிலையிலிருந்து விடுபட்டு வசதியான வாழ்க்கையை கலைதாசன் வாழ்ந்தான்.
அரசவையில் இடம் கிடைத்தாலும், கடவுள் அளித்த கவிதை எழுதும் திறமையை கடவுளுக்காக மட்டுமே பயன்படுத்துவதில் உறுதியாக இருந்த கலைதாசன், கடவுள் துதிப் பாடல்கள் எழுதுவதில் மட்டுமே ஆர்வம் காட்டினான்.

கலைதாசன் மீது பொறாமை கொண்டிருந்த மற்ற அரசவைக் கவிஞர்கள் இதனை சாதகமாக்கிக் கொண்டு, அவனைப் பற்றி மன்னனிடம் தவறாக சொல்லிக் கொடுத்தனர். அதனால் வீரசிம்மன் மனம் சஞ்சலமடைந்தது. ஒரு நாள்  கலைதாசனை அழைத்த வீரசிம்மன், தன்னைப் பற்றி புகழ்ந்து கவிதை பாடுமாறு கேட்டான். ஆனால் தான் கடவுளைத் தவிர வேறு யாரையும் புகழ்ந்து பாடுவதில்லை என கலைதாசன் மறுத்து விட்டான். ஏற்கனவே சஞ்சலத்தில் இருந்த வீரசிம்மன் இப்போது கடும் கோபம் கொண்டு கலைதாசனை பதவியிலிருந்து நீக்கியதோடு, அவனை நாடு கடத்தி காட்டில் வாழும்படி உத்தரவிட்டான்.

சில மாதங்கள் கழித்து காட்டுக்கு வேட்டையாடச் சென்ற வீரசிம்மன், பாதை மாறிச் சென்று வழி தெரியாமல் காட்டுக்குள் திண்டாடினான். அப்போது சூறைக் காற்று வீசியதால் மரம் ஒன்று முறிந்து அவன் மீது சாய்ந்தது. பலத்த காயங்களோடு மரத்திறன் அடியில் தவித்துக்கொண்டிருந்தான். காட்டில் வசித்து வந்த கலைதாசன் அவ்வழியே செல்லும் போது வீரசிம்மனைப் பார்த்து அவனைக் காப்பாற்றி தன் குடிசைக்கு தூக்கிச் சென்று சிகிச்சை அளித்தான்.

கலைதாசனின் பராமரிப்பால் உடல் நலம் தேறிய வீரசிம்மன் கண்ணீர் மல்க, " நண்பா, உனக்கு தீங்கிழைத்த போதும் நீ என் மேல் இவ்வளவு பரிவு காட்டுகிறாயே.. என் மீது கோபம் இல்லையா?" எனக் கேட்டான்.
"அரசே, ஏழையாய் இருந்த என்னை ஆஸ்தானக் கவிஞனாக்கி நல்வாழ்வு அளித்தீர்கள். அரசருடைய கட்டளையை ஏற்காதவன் தண்டனைக்கு உரியவனாவான். அதன் அடிப்படையில் நீங்கள் செய்தது தீங்கல்ல. ஆகவே தான் நீங்கள் அளித்த தண்டனையை உடனே மறந்து விட்டேன். நீங்கள் எனக்கு செய்த நன்மையை மட்டுமே நினைவில் வைத்துள்ளேன்" என கலைதாசன் பதிலளித்தான்.

இதைக் கேட்டு தன் செயலுக்காக வருந்திய வீரசிம்மன், " நண்பா! உன்னுடைய தண்டனையை இந்த வினாடியே ரத்து செய்கிறேன். உடனே அரண்மனைக்கு திரும்பு" எனக் கூறி கலைதாசனை கட்டியணைத்துக் கொண்டான்.

தீர விசாரிப்பதே மெய்!

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. 


விளக்கம்: செவிகளால் கேட்பதை அவசரப்பட்டு நம்பி செயற்படாமல் தேனே நேரில் கண்டு, தீர யோசித்து, விசாரித்து உண்மையை உணர்வது தான் அறிவுடைமையாகும்.

அன்று சனிக்கிழமை. மதியம் பள்ளி விடுமுறையாக இருந்ததால், மணியும் கிட்டுவும் ஆற்றங்கரைக்கு விளையாடச் சென்றனர். தங்களுக்குள் யார் சிறப்பாக நீச்சல் அடிப்பார்கள் என்ற வாக்குவாதம் அவர்களுக்குள் ஏற்பட, "ஆற்றில் நீர் ஓடும் திசையிலேயே நீந்திச் சென்று தொலைவில் இருக்கும் பிள்ளையார் கோயிலை அடைகிறார்களோ, அவர்களே போட்டியில் வெற்றி பெற்றவர்கள்" என இருவருக்குள் பேசி முடிவு செய்து கொண்டனர்.

உடைகளை ஓரிடத்தில் வைத்து விட்டு இருவரும் ஆற்றில் குதித்து, நீரோட்டம் உள்ள திசையிலேயே நீந்தினர். கிட்டுவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் அய்யாவு, இக்காட்சியைக் கண்டார். ஆற்றில் இருவரும் அடித்துச் செல்வதாக தவறாக நினைத்துக் கொண்டு உடனே கிட்டு மற்றும் மணியின் வீட்டிற்கு சென்று, இருவரும் ஆற்றில் அடித்துச் செல்வதாக தகவல் கொடுத்து விட்டார். உடனே அலறித் துடித்த மணி மற்றும் கிட்டுவின் பெற்றோர், ஆற்றங்கரைக்கு ஓடினர்.

இதற்குள் தகவல் ஊர் முழுவதும் பரவி விட்டதால், ஆற்றங்கரையில் ஏராளமானோர் கூடி விட்டனர். உடைகள், பாடபுத்தகங்கள் அங்கு கிடந்ததால், இருவரும் ஆற்றில் அடித்துச் சென்று விட்டதாக அய்யவு கூறியதை ஊர் மக்கள் முழுவதும் நம்பினர். இருவரும் ஆற்றில் எங்கும் தென் படாததால் சிலர் ஆற்றில் குதித்து உடல்களைத் தேர ஆரம்பித்தனர். இதற்குள் பிள்ளையார் கோயிலை அடைந்த கிட்டுவும், மணியும் போட்டியை முடித்துக் கொண்டு சற்று தொலைவில் உள்ள கரைப் பகுதிக்கு திரும்பினர்.

தங்கள் உடைகள் இருக்கும் பகுதியில் ஏராளமானோர் நிற்பதைக் கண்டு மிரண்ட இருவரும், யாருக்கும் தெரியாமல் தங்கள் உடைகளை எடுக்கச் சென்றனர். அதற்குள் மணி மற்றும் கிட்டுவை அடையளாங்கண்ட சிலர் கூச்சலிட, உண்மை அப்போது தான் எல்லோருக்கும் தெரிந்தது. ஆராயாமல் ஒருவர் கிளப்பிய வதந்தியால் ஏற்பட்ட பதட்டம் தணிவதற்கு சில நாட்கள் ஆயின. அன்று முதல் மணியையும், கிட்டுவையும் அவர்களது பெற்றோர் ஆற்றங்கரைக்கு விளையாட அனுப்புவதில்லை. உண்மையை உணராமல் அவசரப்பட்டு ஒருவர் சொல்வதை அப்படியே நம்பிய மக்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களைப் பார்த்தீர்களா!

அவசரத்தால் விளைந்த ஆபத்து

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
                           எண்ணுவம் என்பது இழுக்கு.


விளக்கம்:
எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன் யோசித்துத் திட்டமிட்டு செயல்பட வேண்டும். திட்டமிடாமல் செயல்படுவது பெரும் தவறு.
கிராமத்தில் தன் தாயுடன் எளிய வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த இளைஞன் சுதாகருக்கு வளைகுடா நடுகளில் சென்று பணியாற்றி பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. கிராமத்தில் ஓரிரு நண்பர்கள் தந்த தகவலின் படி, பக்கத்து நகரத்தில் உள்ள நிறுவனன் ஒன்றில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆள் சேர்க்கும் பணி நடைபெறுவதை அறிந்து, உடனே அந்த நிறுவனத்தினரை சென்று சந்தித்தான்.

வளைகுடா நாடுகளில் சிரமமின்றி சிறிது நேரமே வேலை செய்து விட்டு அதிகம் சம்பாதிக்கலாம் என்றும்,  விமானச் செலவு, விசா செலவு, நிறுவனத்துக்கு கமிஷன் என மொத்தமாக ஒரு தொகையை கட்டுவிட்டால் உடனே வெளிநாடு சென்றுவிடலாம் என்று அவர்கள் கூறியதைக் கேட்டு, பல கனவுகளுடன் சுதாகர் வீடு திரும்பினான்.

சுதாகர் கூறியவற்றைக் கேட்ட அவனது அம்மா, "முன் பின் தெரியாத அயல் நாட்டில் யோரோ ஒருவர் வேலை தருகிறேன் என்று சொன்னால் உடனே ஒப்புக்கொள்ளக் கூடாது. அந்த வேலை எப்படிப்பட்டது, உண்மையில் சம்பளம் எவ்வளவு, அந்த நிறுவனத்தை நம்பலாமா என்று எல்லாவற்றையும் தீர விசாரித்து விட்டு செயலில் இறங்கு" என அறிவுரை கூறினாள். ஆனால் சுதாகர் அதைக் கேட்கவில்லை. யாரிடமும் கலந்தாலோசிக்காமல் கடன் வாங்கி, பாத்திர பண்டங்களை விற்று அந்த நிறுவனத்துக்கு பணம் செலுத்தினான்.

சொன்னபடியே அவனை விமானத்தில் ஏற்றி விட்டனர். பல கனவுகளுடன் வலைகுடா நாட்டு விமான நிலையம் சென்றான். ஆனால் சுதாகரையும், அவனுடன் வேலைக்கு சென்ற மேலும் சிலரையும் பரிசோதித்த அதிகாரிகள், போலி விசாவில் அவர்கள் வந்திருப்பதாகக் கூறி கைது செய்தனர். விசாரணையின் முடிவில், உடனே அவர்களை தாய்நாடு திரும்பும் படி உத்தரவிட்டனர்.

ஆனால் கையில் பணம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு பல பேரிடம் உதவி பெற்று எப்படியோ நாடு திரும்பினான் சுதாகர்.  யாரையும் கலந்தாலோசிக்காமல் அவசரப்பட்டு எடுத்த முடிவால் பணம், மரியாதையை இழந்து, கடனை அடைக்க முடியாமல் கிராமத்தில் மிகுந்த சிரமத்துடன் வாழ்க்கையை ஓட்டினான்.


பேராசையால் பொய் பேசியதன் விளைவு!

தன் நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்
                               தன் நெஞ்சே தன்னைச் சுடும்.


விளக்கம்: மனமறிந்து பொய் பேசுவது தவறு. அப்படி பொய் பேசுபவனது மனசாட்சி அவனது வாழ்நாள் முழுதும் வாட்டி வதைக்கும்.

முனுசாமி வாடகை டாக்ஸி ஓட்டுபவன். குடும்பத்தை சிரமப்பட்டு நடத்தி வந்தான். வீட்டில் கலர் டிவி வாங்கித் தருமாறு அவன் மனைவி நச்சரித்து வந்தாள். ஆனால் போதுமான வருமானம் இல்லாததால், முனுசாமியால் டிவி வாங்க முடியவில்லை.

ஒருநாள் அவனது வண்டியில் பயணி ஒருவர் பதட்டத்துடன் ஏறினார். வண்டியை விரைவாக ஓட்டச் சொல்லி அவசரப்படுத்தியவர், வீடு வந்ததும் பணத்தைக் கொடுத்து விட்டு அவசரமாக இறங்கி உள்ளே சென்று விட்டார். சிறிது தூரம் சென்றதும் தேனீர் குடிப்பதற்காக ஓரிடத்தில் வண்டியை நிறுத்திய முனுசாமி, காருக்குள் பை ஒன்று இருப்பதைப் பார்த்தான்.


அது சற்று முன் அவசரமாக இறங்கிய பயணியின் பை என்பதை அறிந்து கொண்ட முனுசாமி, பைக்குள் சில மருந்துகளும்,  ரூபாய் நோட்டுக் கட்டு ஒன்றும் இருப்பதைப் பார்த்து, டிவி வாங்குவதற்கு பணம் கிடைத்து விட்டதாக எண்ணி மகிழ்ந்தான். உடனே அந்தப் பையை சீட்டுக்கு அடியில் மறைத்து வைத்தான்.
அடுத்த ஐந்து நிமிடத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபன், "எங்கப்பா, இந்த வண்டியில தான் வந்தார். வண்டியில இருந்து இறங்கியதும், ஒரு கருப்பு கலர் பையை காணவில்லை. அந்தப் பை ரொம்ப முக்கியமானது. வண்டியில் கொஞ்சம் பாருங்களேன்" என அவசரமாக கெஞ்சினான்.

ஆனால் பை ஏதும் இல்லை என சபொய் சொல்லி அந்த வாலிபனை திருப்பி அனுப்பிய முனுசாமி, உடனடியாக வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினான். ஆனால் தந்தை, மகன் இருவரின் பதட்டத்தைப் பார்க்கும் போது, அந்தப் பையில் இருந்த மருந்துகள் மிக முக்கியமானதாக இருக்கும் என்பதை உணர்ந்தான் முனுசாமி.

உடனே வண்டியைத் திருப்பி அந்தப் பெரியவர் இறங்கிய வீட்டுக்கு பையை எடுத்துச் சென்றான். அங்கு அந்தப் பெரியவரின் மனைவி இறந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான். "சரியான நேரத்துல மருந்தை எடுத்துட்டு வந்திருந்தா அவங்கள பிழைக்க வச்சிருக்கலாம்" என்று அந்தப் பெரியவர் மகனிடன் டாக்டர் வருத்தத்துடன் கூறுவதைக் கேட்டு நிலைகுலைந்தான்.

ஒரு நிமிடம் பேராசைப்பட்டதால், ஓர் உயிரிழப்புக்கு காரணமாகி விட்டோமே என துடிதுடித்த முனுசாமியின் நிம்மதி, அன்று முதல் நிரந்தரமாக சீர்குலைந்தது.

காலத்தால் செய்த உதவி

காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
                                      ஞாலத்தின் மாணப் பெரிது


விளக்கம் : மிகவும் தேவைப்படும் நேரத்தில் ஒருவருக்கு செய்யப்படும் உதவி சிறிதாக இருந்தாலும், அது உலகத்தை விடப் பெரிதாக மதிக்கப்படும்.

மகேந்திரன் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் பெரிய அதிகாரியாகப் பணிபுரியும் இளைஞன். அந்நகரத்தில் முக்கிய பிரமுகராகவும் மதிக்கப்ப்டுபவன். அந்நகரத்துக்கு அருகிலிருக்கும் நல்லூர் கிராமத்துக்கு ஆண்டுதோறும் சென்று, ஜீவானந்தம் எனும் முதியவரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அங்கு செல்லும் போதெல்லாம் அவருக்கு பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து, வணங்கி விட்டு வருவான்.
நகரின் பெரிய செல்வந்தரின் மகளுடன் மகேந்திரனுக்கு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து மறுநாளே தன் புது மனைவியை அழைத்துக் கொண்டு நல்லூர் புறப்பட்டான்.  காரணம் கேட்ட மனைவியிடம், வயது முதிர்ந்த ஜீவானந்தம் திருமணத்துக்கு வர இயலாததால், அவரைச் சந்தித்து ஆசி பெறுவதற்கு செல்வதாகக் கூறினான்.

"நேரில் சென்று ஆசி பெறும் அளவுக்கு அவர் உங்கள் நெருங்கிய உறவினரா? அல்லது உங்கள் தந்தையின் நெருங்கிய நண்பரா?" என அவன் மனைவி கேட்டாள். இதற்கு பதிலளித்த மகேந்திரன், "அதெல்லாம் இல்லை. சிறு வயதில் என்னை ஒருமுறை பள்ளிக்கு அழைத்துச் சென்றார்" என்றான். "இவ்வளவு தானா...இந்த சிறிய உதவிக்காகவா அவரிடம் ஆசி வாங்கச் செல்கிறீர்கள்?" எனக் கேட்டு சிரித்தாள்.

"சாதாரண உதவி என்று சொல்லாதே. என்னைப் பொருத்தவரை அது மிகப் பெரிய உதவி. அன்று எனக்கு பள்ளி இறுதியாண்டுத் தேர்வு. பள்ளிக்கு சைக்கிளில் மிக வேகமாகச் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு கல்லில் இடறி தலை கீழாக விழுந்தேன். என்னால் எழுந்து நடக்க முடியவில்லை. சைக்கிளும் பழுதாகி விட்டது. அப்போது அவ்வழியே அவசர வேலையாக சைக்கிளில் வந்த ஜீவானந்தம், என் நிலையை உணர்ந்து என்னை தன் சைக்கிளில் அமர வைத்து சரியான நேரத்தில் பள்ளியில் சேர்த்தார். தனது அவசர வேலையைக் கூட மறந்து என்னை பள்ளியில் சேர்க்கவில்லை என்றால் கண்டிப்பாக நான் தேர்வெழுதியிருக்க முடியாது. அந்தத் தேர்வில் வெற்றி பெற்று பள்ளியிலேயே முதலாவதாக வந்தேன். .நான் ஏன் அவருக்கு நன்றி பாராட்டுகிறேன் என்று இப்போது புரிகிறதா?" என்றான் மகேந்திரன்.

இதைக் கேட்டு தன் தவறை உணர்ந்த மகேந்திரனின் மனைவி, அவனிடம் மன்னிப்பு கேட்டாள். பின்னர் இருவரும் ஜீவானந்தத்தின் வீட்டிற்ஷ்கு சென்று அவரிடம் ஆசி பெற்றனர்.

அதிசயமான நோய்

 
சாரங்கபுரியில், அண்ணாமலையின் நகைக்கடை மிகப் பிரபலமானதாக இருந்தது. அவர் பரம்பரை வியாபாரி அல்ல! சிறு வயதிலேயே தாய் தந்தையரை இழந்த அண்ணாமலை ஒரு நகைக் கடையில் பணியாளராக வேலைக்குச் சேர்ந்தார். தனது கடின உழைப்பினாலும், ஆர்வத்தினாலும் அவர் நகை வியாபாரத்தின் சகல நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டார்.
 
சில ஆண்டுகளுக்குப் பின்னர், அவர் வேலையை விட்டுவிட்டு, சாரங்கபுரிக்கு வந்து ஒரு நகைக்கடையைத் தொடங்கினார். அந்த நகரிலிருந்த சில கை தேர்ந்த தொழிலாளிகளை வலை வீசிக் கண்டு பிடித்துத் தன்னிடம் வேலைக்கு அமர்த்திக் கொண்டார். விரைவிலேயே, அவருடைய கடை மிகவும் உகந்ததாகக் கருதப்பட வியாபாரம் பிரமாதமாக நடந்தது.
 
அவருடைய திறமையைக் கண்டு வியந்த நகரத்தின் செல்வர் ஒருவர் தன் புதல்வி நாகேஸ்வரியை அவருக்குத் திருமணம் செய்து வைத்தார். திருமணத்தின் மூலம் அவருக்கு ஏராளமான சீர் கிடைத்தது. ஆனால், இயல்பாகவே பொருளில் ஆசை கொண்டிருந்த நாகேஸ்வரிக்கு ஏற்கெனவே இருந்த செல்வம் போதவில்லை. அதனால், அவள் மேலும் மேலும் செல்வத்தைப் பெருக்க முயன்றாள்.
 
தன் கணவர் தன்னுடன் இருப்பதைவிட, முழுநேரமும் கடையிலே தங்கி வியாபாரம் செய்து வருமானத்தைப் பெருக்க வேண்டும் என்று விரும்பினாள். அவருக்கு வேண்டிய உணவு, தேநீர் ஆகிய அனைத்தையும் கடைக்கு அனுப்பி விடுவாள். தவிர, அவள் கணவர் பணியாளர்களை நம்பி வேலையை ஒப்படைப்பதை அறவே விரும்பவில்லை.
ஆகையால் அது குறித்து அடிக்கடி அறிவுரை கூறுவாள். முதலில், தன்னிடமும், வியாபாரத்தின் மீதும் உள்ள அக்கறையினால்தான் அவள் இவ்வாறு கூறுகிறாள் என்று அண்ணாமலை கருதினார். ஆனால் காலப்போக்கில் அவள் பணம், பணம் என்று பேயாய் அலைவதையும், யாரையும் நம்பாமல் தூற்றுவதையும் கண்டு அவருக்கு சலிப்பு ஏற்பட்டது. ஆனால் அவளைக் கண்டித்து பேச அவருக்கு மனம் இல்லை. நாளடைவில் அண்ணாமலைக்கு மன உளைச்சலில் உடலிலும் தளர்ச்சி ஏற்பட்டது. அதைப்பற்றி அவர் நாகேஸ்வரியிடம் குறிப்பிட்டபோது, அவள், அதைப் பொருட்படுத்தவில்லை.
 
இவ்வாறு அண்ணாமலை அவதிப்படும் போது, சாரங்கபுரிக்கு ஒரு யோகி விஜயம் செய்தார். அண்ணாமலை அவரை தனிமையில் சந்தித்து, "சுவாமி! என் மனத்தில் நிம்மதி இல்லை. அதனால் என் உடலும் தளர்ந்து விட்டது. நான் என் வாழ்வில் இழந்த நிம்மதியை திரும்பப் பெறுவது எவ்வாறு?" என்று வினவினார்.
 
"மகனே! இளவயதில் உன் மனத்தில் வியாபாரத்தைப் பெருக்க வேண்டும் என்ற லட்சியம் இருந்தது. அதை நீ எட்டிப் பிடித்து விட்டாய். அதனால், இப்போது உன்னிடம் குறிக்கோள் என்று ஒன்றும்இல்லாததால் வாழ்க்கை சூனியமாகக் காட்சிஅளிக்கிறது. இனி, மற்றவர்களுக்கு உதவி செய்து அதில் ஆனந்தம் காண முயற்சிப்பாய்!" என்றார்.
 
"சுவாமி! மற்றவர்களுக்கு உதவி செய்வது என்றுமே எனக்குப் பிடித்த விஷயம்! ஆனால் அதைச் செய்யவிடாமல் என் மனைவி என்னைத் தடுக்கிறாள். மேலும் மேலும் செல்வம் திரட்டச் சொல்லி அவள் நச்சரிப்பதால்தான் என் வாழ்வின் நிம்மதி பறி போய்விட்டது!" என்று அண்ணாமலை புலம்பினார்.
 
அதைக் கேட்ட யோகி புன்னகைத்துக் கொண்டே, "செல்வம் ஒன்றுதான் வாழ்வில் மகிழ்ச்சியைத் தரும் என்று உன் மனைவி தவறான கருத்து கொண்டிருக்கிறாள். நன்கு யோசனை செய்தால், அவள் மனத்தை மாற்ற ஏதாவது வழி பிறக்கும். அவளுடைய மனத்தை மாற்றினால், நீ இழந்த நிம்மதி உன்னை மீண்டும் தானே தேடி வரும்!" என்றார்.
"அப்படியே முயற்சிக்கிறேன்!" என்று சொல்லி அண்ணாமலை வீடு திரும்பினார். அன்றிரவு தூக்கம் பிடிக்காமல் அண்ணாமலை தீவிரமாக யோசித்துக் கொண்டேயிருந்தார். மறுநாள் அவர் படுக்கையிலிருந்து எழுந்து இருக்கவில்லை. தன் மனைவியை அழைத்து, தான் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், எழுந்திருக்கவே முடியவில்லைஎன்றும் கூறினார்.
 
கலவரமடைந்த நாகேஸ்வரி உடனே மருத்துவரை வரவழைத்தாள். அண்ணாமலையை சோதித்த மருத்துவர் அவரை ஏதோ ஒரு நோய் பற்றிஇருக்கிறதென்றும், ஆனால் அது என்ன நோய் என்று தன்னால் கண்டு பிடிக்க முடியவில்லை என்றும் கூறினார். எந்த ஒரு மருத்துவராலும் அவரைப் பீடித்துள்ள நோய் என்னவென்றே கண்டு பிடிக்க முடியவில்லை என்று கூறினர். அண்ணாமலை கடைக்குச் செல்வதையே நிறுத்தி விட்டு, எந்தநேரமும் படுக்கையிலேயே கிடந்தார்.
 
சில மாதங்கள் கழித்து வீட்டிற்கு வருகை தந்த நாகேஸ்வரியின் உறவினர் ஒருவர் அவர்கள் இருவரையும் தம்பதி சமேதராக தல யாத்திரை செல்லும்படி அறிவுரை வழங்கினார். உடல் சரிஇல்லாத கணவரால் எப்படி பயணம் மேற்கொள்ள முடியும் என்று நாகேஸ்வரி கவலையில் ஆழ்ந்தாள்.
 
ஆனால் அண்ணாமலை அவளுக்கு தைரியம் கூறினார். ஆகையால் ஒரு வேலைக்காரனைத் துணைக்குஅழைத்துக் கொண்டு இருவரும் புனிதப் பயணம் மேற்கொண்டனர். அவ்வாறு செல்வதற்குமுன் அண்ணா மலையின் யோசனைப்படி வியாபாரப் பொறுப்பை நரசிம்மன் என்னும் பணியாளரிடம் ஒப்படைத்தாள்.
மூன்று மாதங்களாக, பல தலங்களையும் தன் கணவருடன் சேர்ந்து தரிசித்த நாகேஸ்வரியின் மனத்தில் மாற்றம் உண்டாகியது. அவள் மனத்தை முழுமையாக ஆக்கிரமத்திருந்த பண ஆசையை அகற்றி சக்தியை உண்டாக்கியது. தனது கணவரின் உடல்நிலையும் படிப்படியாகத் தேறுவதைக் கண்டு, தனது செல்வத்தால் அடைய முடியாதது இறைவன்அருளினால் கைகூடுவதைக் கண்டு செல்வத்தை விடச் சிறந்தது இறையருளே என்று உணர்ந்தாள்.
 
பயணம் முடிந்து வீடு திரும்பிய பின், தங்களுடைய வியாபாரம் முன்போலவே சிறப்பாக நடை பெறுவதைக் கண்டு வியந்தாள். பணியாளர்களை திருடர்கள் என்றும், அவர்களுக்கு உதவி செய்யக்கூடாது என்றும் தான் முன்பு கணவனிடம் கூறியது நினைத்து வெட்கினாள். "நான் இதுவரை செல்வம்தான் வாழ்வில் மிக முக்கியம் என்று நினைத்தது தவறு! வாழ்க்கையின் உண்மையான ஆனந்தம் இறைவன் வழிபாட்டிலும், மற்றவர்களுக்கு செய்யும் பரோபகாரத்திலும் தான் இருக்கிறது என்று உணர்ந்து கொண்டேன்!" என்று தன்னிடம் கூறிய நாகேஸ்வரியின் சொற்களைக் கேட்டு அண்ணாமலை வியப்பிலும், மகிழ்ச்சியிலும் மூழ்கினார்.
 
தொடர்ந்து நாகேஸ்வரி அவரிடம், "ஏதோ ஒரு அதிசய நோய் உங்களை மட்டும் பீடித்திருக்கிறது என்று நான் இன்று வரை தவறாக எண்ணிஇருந்தேன். ஆனால், உண்மையில் என்னையும் பண ஆசை என்ற நோய் இத்தனை நாள் வாட்டி வதைத்தது. தலயாத்திரை சென்று வந்த பின் என்னுடைய நோயும் அகன்று விட்டது!" என்றாள்.
 
மனைவியின் மன மாற்றத்தைக் கண்டு மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினார் அண்ணாமலை. தான் நோயாளி போல் நடித்ததை அவளிடம் சொல்லாமல் மறைத்து விட்டார்.
 

பொன்னாக்கும் வித்தை

 
சந்திரன் அவனுடைய பெற்றோருக்கு ஒரே பிள்ளை! அவனுடைய தந்தை ராமராஜன் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். வியாபாரத்தில் ஒரு முறை பெரிய நஷ்டம் ஏற்பட, அந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் ராமராஜன் இறந்து போனார். அவனுடைய தாய் பார்கவி தங்கள் வீடு, நிலபுலன்கள் யாவையும் விற்றுக் கடனை அடைத்தாள். அதன்பின் ஒரு குடிசையமைத்து அதில் தன் பிள்ளையுடன் வசிக்கத் தொடங்கினாள். பார்கவி, வயிற்றுப் பிழைப்புக்காகப் பல வீடுகளில் வேலை செய்யத் தொடங்கினாள்.
 
அந்த நிலையிலும் தன் பிள்ளையை ஒழுங்காக வளர்க்க எண்ணிய அவள் சந்திரனை ஓர் அரசுப் பள்ளியில் சேர்த்தாள். தொடக்கத்தில் சந்திரனும் ஒழுங்காகப் படித்தான். ஆனால் அவன் பெரியவனாகி பதினைந்து பிராயத்தை எட்டியபோது, தங்கள் குடும்பத்தின் ஏழைமை அவன் மனத்தை உறுத்த ஆரம்பித்தது. கிராமத்தில் மற்ற பணக்காரர்களைக் காணும்போது, தானும் அவர்களைப் போல் ஆக ஆசைப்பட்டான். ஆனால் பள்ளியில் படித்து முடித்து ஒரு சாதாரண வேலையில் சேர்ந்தால் தன் ஆசை நிறைவேறாது என்றும் உணர்ந்தான்.
 
ஒருநாள், இரும்பைத் தங்கமாக்க முடியும் என்றும், அந்த ரகசிய வித்தை சாமியார்களுக்குத் தெரியும் என்றும் சிலர் பேசிக்கொண்டுஇருப்பதைத் தற்செயலாகக் கேட்டபின், சந்திரனுக்குப் படிப்பில் ஆர்வம் குன்றி விட்டது. தொட்டதெல்லாம் பொன்னாக்கும் வித்தையை உடனேக் கற்றுக் கொள்ளத் துடித்தான். ஊரில் எந்த சாமியார் தென்பட்டாலும், அவர்களைச் சுற்றியலைந்து அந்த வித்தையைத் தனக்குக் கற்றுத்தரச் சொல்லி வற்புறுத்தினான்.
ஆனால் அவன் சந்தித்த சாமியார்களில் சிலர் தாங்கள் பொருள் ஆசையை அறவே துறந்து விட்டதனால் பொன்னாக்கும் வித்தையைப் பற்றி தெரியாது என்றனர். ஆனால் சந்திரன் மனம் தளரவில்லை. தொட்டதெல்லாம் பொன்னாக்கும் வித்தை தெரிந்த சாமியார் ஒருவரை என்றாவது சந்திப்போம் என்று உறுதியாக நம்பினான். தன் பிள்ளையின் போக்கைக் கண்டு பதறிப்போன பார்கவி அவனுக்கு அறிவுரை கூறித் திருத்த முயன்று தோல்வியுற்றாள்.
 
ஒருநாள் இரவு அவனுக்கு உணவு பரிமாறுகையில் பார்கவி, "நீ இப்போதெல்லாம் அடிக்கடி பள்ளிக்கு வருவதில்லை என்று உன் ஆசிரியர் என்னிடம் சொன்னார். நீ பள்ளிக்குச் செல்லாமல் வேறு எங்கே போகிறாய்?" என்று கேட்க, சந்திரன் அவளிடம் உண்மை சொல்ல மறுத்தான். தாயார் அவனை வற்புறுத்தவும், கோபங்கொண்ட சந்திரன் பாதி சாப்பாட்டிலேயே வீட்டை விட்டுச் சென்று விட்டான். கால் போன போக்கில் வெகு நேரம் சுற்றிய பிறகு, களைத்துப் போய் அம்மன் கோயிலை அடைந்து அங்கு சென்று அமர்ந்து ஓய்வெடுக்க ஆரம்பித்தான்.
 
நடு இரவில் விழித்துக் கொண்டவன், தனக்கருகில் ஒரு சாமியார் பத்மாசனம் போட்டு அமர்ந்து ஏதோ மந்திரம் உச்சரித்துக் கொண்டிருந்ததைக் கண்டான். உடனே அவனுடைய ஆர்வம் மீண்டும் கொழுந்து விட்டெரிய, அவன் அவரை அணுகினான்.
 
கண் விழித்து அவனை நோக்கிய சாமியார் "உன் பெயர் சந்திரன் தானே!" என்று கேட்டதும் வியப்புற்றான். "சாமி! என் பெயர் உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று அவன் ஆவலுடன் கேட்க, அவர், "எனக்கு எல்லா வித்தைகளும் தெரியும். அதனால் உன் பெயரைக் கண்டு பிடிப்பது அவ்வளவு ஒன்றும் சிரமமில்லை!" என்றார்.
 
"அப்படியானால் உங்களுக்குத் தொட்டதையெல்லாம் பொன்ஆக்கும் வித்தை தெரியுமா?" என்று சந்திரன் ஆவலுடன் கேட்க, அவர் தெரியுமென்றார். உடனே, அவருடைய பாதங்களில் விழுந்து வணங்கிய சந்திரன், "சாமி! தயவு செய்து அந்த வித்தையை எனக்குக் கற்றுத் தாருங்கள்!" என்று கெஞ்சினான். "மகனே! அந்த வித்தையை உனக்குக் கற்றுத்தர வேண்டுமானால், அதற்குரிய தகுதிகளை நீ பெற வேண்டும்! உன்னால் முடியுமா?" என்றார் சாமியார்.
எதுவானாலும் சொல்லுங்கள்! நான் செய்வேன்!" என்றான் சந்திரன். "முதலில், உன் பள்ளிப் படிப்பை ஒழுங்காக முடிக்க வேண்டும். உன் தாய் சொல்கிறபடி கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். உன்னால் வாழ்க்கையில் உயர முடியும் என்ற தன்னம்பிக்கை உன்னுள் வளர வேண்டும். இவ்வாறு கல்வி, நற்குணம், தன்னம்பிக்கை ஆகிய மூன்றிலும் சிறந்து விளங்கினால்தான், அந்த வித்தையை கற்க முடியும். நாளை முதல் நீ அவ்வாறு நடக்க முயற்சி செய்! ஓராண்டிற்குப்பின் உன்னை சந்திப்பேன். நீ உண்மையாகவே மாறியிருந்தால், அந்த வித்தையை உனக்குக் கற்றுத் தருவேன்!" என்றார்.
 
"அப்படியே செய்வேன். ஓராண்டினில் நீங்களே வியக்கும்படி நான் மாறிக் காட்டுகிறேன்!" என்று சூளுரைத்து விட்டு, சந்திரன் பொழுது விடிந்ததும் வீடு சென்றான். கோபத்தில் வெளியேறிய மகன் வீடு திரும்பியது கண்டு பார்கவி நிம்மதியடைந்தாள்.
 
அன்று முதல், அவள் தன் மகனிடம் வியக்கத்தகு மாறுதலைக் கண்டாள். முன்பெல்லாம் படிக்காமல் கனவுஉலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவன், அன்றுமுதல் படிப்பில் மிகுந்த அக்கறை காட்டத் தொடங்கினான். அவளுக்கு உதவி செய்ய ஆரம்பித்தான். பள்ளிக்கு ஒழுங்காகச் செல்ல ஆரம்பித்தான். படிப்பில் அவனுடைய ஆர்வம் வளர்ந்தது.
 
நல்ல மதிப்பெண்கள் பெறத் தொடங்கினான். அவனுடைய தன்னம்பிக்கை அதிகரித்தது. அவனுடைய மாறுதலைக் கண்டு பார்கவி மிகவும் மகிழ்ந்தாள். இவ்வாறு ஓராண்டு சென்றது. ஒருநாள் திடீரென அதே சாமியார் சந்திரன் வீடு தேடி வந்தார். "மகனே! என்னை நினைவிருக்கிறதா? நீ கேட்ட வித்தையைக் கற்றுத்தர நான் வந்துஉள்ளேன்!" என்றார்.
 
"சாமி! மன்னிக்க வேண்டும்! எனக்கு இப்போது அந்த வித்தையைக் கற்றுக் கொள்வதில் ஆர்வமில்லை!" என்று சந்திரன் கூறியதும், சாமியார் ஆச்சரியப்பட்டார். "என்னப்பா? ஏன் இந்த திடீர் மாறுதல்?" என்று கேட்டார்.
 
"இப்போது எனக்கு அதில் ஆசை போய் விட்டது! என்று நான் படிப்பில் அக்கறை காட்ட ஆரம்பித்தேனோ, அன்றுமுதல் இதில் ஆர்வம் குன்றிவிட்டது!" என்றான். அவன் கேட்டதைக் கேட்டுப் புன்னகைத்த சாமியார், "மகனே! இந்த பதிலைத்தான் நான் உன்னிடம்இருந்து எதிர்பார்த்தேன். கல்விதான் உண்மையான செல்வம் என்பதை நீ இப்போது புரிந்து கொண்டு விட்டாய். உன்னுடைய தன்னம்பிக்கையும், அறிவும் வளர வளர செல்வத்தைப் பற்றி நீ கொண்டிருந்த தவறான கருத்துகள் உன்னிடமிருந்து விலகி விட்டன. உழைத்து சம்பாதிக்கும் செல்வம்தான் நிலைக்கும். குறுக்கு வழியில் வரும் செல்வம் வந்தது போலவே மறைந்து விடும். இதுதான் எனக்குத் தெரிந்த தொட்டதெல்லாம் பொன்னாக்கும் வித்தை!" என்றார்.
 
தொடர்ந்து, "நான் உன் தந்தையின் நண்பன் நாராயணன். உன்னை மாற்றுவதற்காக சாமியார் வேடம் போட்டு நடித்தேன்!" என்று கூறியவாறே, தன் போலி தாடியைக் களைத்தார்.
 
அவரை சந்திரன் வியப்புடன் நோக்கியபோது, அங்கு வந்த பார்கவி தன்னுடைய கணவரின் நண்பரை வரவேற்று தன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தாள். சந்திரனும் அவருக்குத் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டான்.
 

Flag Counter