
தனது கணவன் ராமனை இழந்து விதவையான துளசிக்கு வயதான காலத்தில் உழைத்து
சம்பாதிக்க நேரிட்டது. தனது கிராமத்தை விட்டுப் பக்கத்து கிராமமான
ராமாபுரத்தை அடைந்த துளசி, அங்கு பள்ளிக்கூடத்தின் முன்னால் சிறிய கடையை
அமைத்துக் கொண்டாள்.
அந்தக் கிராமத்திற்கு அவள் வந்து மூன்றே மாதங்கள் ஆகியிருந்த போது,
திடீரென அங்கு காலரா பரவியது. பள்ளிக் குழந்தைகளின் இடையே மிக அதிகமாகப்
பரவியதால், பள்ளியையே மூடவேண்டிய நிலை ஏற்பட்டது. பெரியவர்களும் அந்த
நோயால் பீடிக்கப் பட்டனர். இது மாரியம்மனின் கோபத்தினால்தான் நடக்கிறது
என்று மக்கள் நம்பினர்.
பள்ளிக்கருகில், முத்தம்மா என்பவளும் ஒரு கடை நடத்தி வந்தாள்.
துளசியின் கடையில் கிடைக்கும் தின்பண்டங்கள் மிகச் சுவையாக இருந்ததால்,
பள்ளி மாணவர்கள் முத்தம்மாவின் கடையை விட்டுவிட்டு துளசியின் கடையிலேயே
தின்பண்டங்கள் வாங்கத் தொடங்கினர். இதனால் கோபம் அடைந்த முத்தம்மா துளசியை
எப்படியாவது ஊரை விட்டு விரட்டிவிட எண்ணினாள். அதற்கான ஒரு திட்டமும்
தயாரித்தாள்.
கிராமத்தினர் அனைவரும் மாரியம்மனுக்கு விசேஷ பூஜை செய்து பிரார்த்தனை
செய்தனர். அப்போது, கோயில் பூசாரியின் மீது சாமி வந்து, மக்களிடம், "கிராம
மக்களே! நான் மாரியாத்தா பேசுகிறேன்! எனக்கு உங்கள் மீது கோபமில்லை. காலரா
நோய் வர நான் காரணமில்லை. இந்தக் கிராமத்தில் பள்ளிக்கருகே புதிதாக
வியாபாரம் தொடங்கி இருக்கிறாளே ஒரு கிழவி! அவள்தான் காரணம்!
அவள் கடையிலுள்ளதின்பண்டங்களைத் தின்றதால்தான் குழந்தைகளுக்குக் காலரா
ஏற்பட்டு ஊர் முழுவதும் பரவியது" என்று கூறினான். உடனே, ஆவேசமடைந்த கிராம
மக்கள் திரண்டு வந்து துளசியின் கடையை சூறையாடினர். அத்தோடு நில்லாமல் அவள்
மீது கல்வீசி எறிந்து அவளைக் கிராமத்தை விட்டுத் துரத்த முயன்றனர்.
துளசியின் தலையில் கல்பட்டு இரத்தம் வழியத் தொடங்கியது. இதைக் கண்டு மனம்
பொறுக்காத, பள்ளி ஆசிரியர் ஒருவர் அவர்களைத் தடுத்து "அட முட்டாள் மக்களே!
இந்த கிழவி மீது ஏன் கல் வீசி எறிகிறீர்கள்?" என்றார்.
"குறுக்கே பேசாதே! இவள்தான் காலரா உண்டாகக் காரணம் என்று கோயில்
பூசாரியே சொல்லிவிட்டார்!" என்றனர் அவர்கள். "பூசாரி சொன்னால் அதை உடனே
உண்மையென்று நம்புவதா? பூசாரியை அவ்வாறு சொல்லத் தூண்டியவள் முத்தம்மா!
பூசாரிக்கு அவள் பணம் கொடுத்துத் தூண்டிவிட்டதை நான் என் கண்ணால்
பார்த்தேன். காலரா நோய் உண்டாக மக்களாகிய நீங்கள் அனைவரும் தான் காரணம்!
ஊரில் உள்ளது ஒரேயொரு ஏரி! அதிலிருந்து
தான் தண்ணீர் எடுத்துக்குடிக்கிறோம். ஆனால், சமீப காலமாக அதில்
மாடுகளைக்குளுப்பாட்டியும், துணிகளைத் துவைத்தும், ஏரியை அசுத்தப் படுத்தி
விட்டீர்கள். அசுத்த நீரினால்தான் காலரா உண்டாகியிருக்கிறது. அதற்கு இந்தக்
கிழவி மீது ஏன் பழி சுமத்துகிறீர்கள்? காலராவைக் குணப்படுத்துவதற்கு நாம்
நகரத்திலிருந்து மருந்துகள் வரவழைக்க வேண்டும். எதிர்காலத்தில் அது வராமல்
தடுக்க, நமது ஏரியை சுத்தப்படுத்துவதுடன், அதை என்றும் சுத்தமாக
வைத்திருக்க வேண்டும்" என்று ஆசிரியர் கூறி முடித்தார். அவர் சொன்னது
முற்றிலும் சரியென உணர்ந்த கிராமத்தினர் துளசியிடம் மன்னிப்புக் கேட்டனர்.
பிறகு காலராவை குணமாக்கவும், எதிர்காலத்தில் வராமல் தடுக்கவும் எல்லாரும்
முனைந்து செயற்பட்டனர்.

0 comments:
Post a Comment