பொன்னாக்கும் வித்தை

 
சந்திரன் அவனுடைய பெற்றோருக்கு ஒரே பிள்ளை! அவனுடைய தந்தை ராமராஜன் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். வியாபாரத்தில் ஒரு முறை பெரிய நஷ்டம் ஏற்பட, அந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் ராமராஜன் இறந்து போனார். அவனுடைய தாய் பார்கவி தங்கள் வீடு, நிலபுலன்கள் யாவையும் விற்றுக் கடனை அடைத்தாள். அதன்பின் ஒரு குடிசையமைத்து அதில் தன் பிள்ளையுடன் வசிக்கத் தொடங்கினாள். பார்கவி, வயிற்றுப் பிழைப்புக்காகப் பல வீடுகளில் வேலை செய்யத் தொடங்கினாள்.
 
அந்த நிலையிலும் தன் பிள்ளையை ஒழுங்காக வளர்க்க எண்ணிய அவள் சந்திரனை ஓர் அரசுப் பள்ளியில் சேர்த்தாள். தொடக்கத்தில் சந்திரனும் ஒழுங்காகப் படித்தான். ஆனால் அவன் பெரியவனாகி பதினைந்து பிராயத்தை எட்டியபோது, தங்கள் குடும்பத்தின் ஏழைமை அவன் மனத்தை உறுத்த ஆரம்பித்தது. கிராமத்தில் மற்ற பணக்காரர்களைக் காணும்போது, தானும் அவர்களைப் போல் ஆக ஆசைப்பட்டான். ஆனால் பள்ளியில் படித்து முடித்து ஒரு சாதாரண வேலையில் சேர்ந்தால் தன் ஆசை நிறைவேறாது என்றும் உணர்ந்தான்.
 
ஒருநாள், இரும்பைத் தங்கமாக்க முடியும் என்றும், அந்த ரகசிய வித்தை சாமியார்களுக்குத் தெரியும் என்றும் சிலர் பேசிக்கொண்டுஇருப்பதைத் தற்செயலாகக் கேட்டபின், சந்திரனுக்குப் படிப்பில் ஆர்வம் குன்றி விட்டது. தொட்டதெல்லாம் பொன்னாக்கும் வித்தையை உடனேக் கற்றுக் கொள்ளத் துடித்தான். ஊரில் எந்த சாமியார் தென்பட்டாலும், அவர்களைச் சுற்றியலைந்து அந்த வித்தையைத் தனக்குக் கற்றுத்தரச் சொல்லி வற்புறுத்தினான்.
ஆனால் அவன் சந்தித்த சாமியார்களில் சிலர் தாங்கள் பொருள் ஆசையை அறவே துறந்து விட்டதனால் பொன்னாக்கும் வித்தையைப் பற்றி தெரியாது என்றனர். ஆனால் சந்திரன் மனம் தளரவில்லை. தொட்டதெல்லாம் பொன்னாக்கும் வித்தை தெரிந்த சாமியார் ஒருவரை என்றாவது சந்திப்போம் என்று உறுதியாக நம்பினான். தன் பிள்ளையின் போக்கைக் கண்டு பதறிப்போன பார்கவி அவனுக்கு அறிவுரை கூறித் திருத்த முயன்று தோல்வியுற்றாள்.
 
ஒருநாள் இரவு அவனுக்கு உணவு பரிமாறுகையில் பார்கவி, "நீ இப்போதெல்லாம் அடிக்கடி பள்ளிக்கு வருவதில்லை என்று உன் ஆசிரியர் என்னிடம் சொன்னார். நீ பள்ளிக்குச் செல்லாமல் வேறு எங்கே போகிறாய்?" என்று கேட்க, சந்திரன் அவளிடம் உண்மை சொல்ல மறுத்தான். தாயார் அவனை வற்புறுத்தவும், கோபங்கொண்ட சந்திரன் பாதி சாப்பாட்டிலேயே வீட்டை விட்டுச் சென்று விட்டான். கால் போன போக்கில் வெகு நேரம் சுற்றிய பிறகு, களைத்துப் போய் அம்மன் கோயிலை அடைந்து அங்கு சென்று அமர்ந்து ஓய்வெடுக்க ஆரம்பித்தான்.
 
நடு இரவில் விழித்துக் கொண்டவன், தனக்கருகில் ஒரு சாமியார் பத்மாசனம் போட்டு அமர்ந்து ஏதோ மந்திரம் உச்சரித்துக் கொண்டிருந்ததைக் கண்டான். உடனே அவனுடைய ஆர்வம் மீண்டும் கொழுந்து விட்டெரிய, அவன் அவரை அணுகினான்.
 
கண் விழித்து அவனை நோக்கிய சாமியார் "உன் பெயர் சந்திரன் தானே!" என்று கேட்டதும் வியப்புற்றான். "சாமி! என் பெயர் உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று அவன் ஆவலுடன் கேட்க, அவர், "எனக்கு எல்லா வித்தைகளும் தெரியும். அதனால் உன் பெயரைக் கண்டு பிடிப்பது அவ்வளவு ஒன்றும் சிரமமில்லை!" என்றார்.
 
"அப்படியானால் உங்களுக்குத் தொட்டதையெல்லாம் பொன்ஆக்கும் வித்தை தெரியுமா?" என்று சந்திரன் ஆவலுடன் கேட்க, அவர் தெரியுமென்றார். உடனே, அவருடைய பாதங்களில் விழுந்து வணங்கிய சந்திரன், "சாமி! தயவு செய்து அந்த வித்தையை எனக்குக் கற்றுத் தாருங்கள்!" என்று கெஞ்சினான். "மகனே! அந்த வித்தையை உனக்குக் கற்றுத்தர வேண்டுமானால், அதற்குரிய தகுதிகளை நீ பெற வேண்டும்! உன்னால் முடியுமா?" என்றார் சாமியார்.
எதுவானாலும் சொல்லுங்கள்! நான் செய்வேன்!" என்றான் சந்திரன். "முதலில், உன் பள்ளிப் படிப்பை ஒழுங்காக முடிக்க வேண்டும். உன் தாய் சொல்கிறபடி கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். உன்னால் வாழ்க்கையில் உயர முடியும் என்ற தன்னம்பிக்கை உன்னுள் வளர வேண்டும். இவ்வாறு கல்வி, நற்குணம், தன்னம்பிக்கை ஆகிய மூன்றிலும் சிறந்து விளங்கினால்தான், அந்த வித்தையை கற்க முடியும். நாளை முதல் நீ அவ்வாறு நடக்க முயற்சி செய்! ஓராண்டிற்குப்பின் உன்னை சந்திப்பேன். நீ உண்மையாகவே மாறியிருந்தால், அந்த வித்தையை உனக்குக் கற்றுத் தருவேன்!" என்றார்.
 
"அப்படியே செய்வேன். ஓராண்டினில் நீங்களே வியக்கும்படி நான் மாறிக் காட்டுகிறேன்!" என்று சூளுரைத்து விட்டு, சந்திரன் பொழுது விடிந்ததும் வீடு சென்றான். கோபத்தில் வெளியேறிய மகன் வீடு திரும்பியது கண்டு பார்கவி நிம்மதியடைந்தாள்.
 
அன்று முதல், அவள் தன் மகனிடம் வியக்கத்தகு மாறுதலைக் கண்டாள். முன்பெல்லாம் படிக்காமல் கனவுஉலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவன், அன்றுமுதல் படிப்பில் மிகுந்த அக்கறை காட்டத் தொடங்கினான். அவளுக்கு உதவி செய்ய ஆரம்பித்தான். பள்ளிக்கு ஒழுங்காகச் செல்ல ஆரம்பித்தான். படிப்பில் அவனுடைய ஆர்வம் வளர்ந்தது.
 
நல்ல மதிப்பெண்கள் பெறத் தொடங்கினான். அவனுடைய தன்னம்பிக்கை அதிகரித்தது. அவனுடைய மாறுதலைக் கண்டு பார்கவி மிகவும் மகிழ்ந்தாள். இவ்வாறு ஓராண்டு சென்றது. ஒருநாள் திடீரென அதே சாமியார் சந்திரன் வீடு தேடி வந்தார். "மகனே! என்னை நினைவிருக்கிறதா? நீ கேட்ட வித்தையைக் கற்றுத்தர நான் வந்துஉள்ளேன்!" என்றார்.
 
"சாமி! மன்னிக்க வேண்டும்! எனக்கு இப்போது அந்த வித்தையைக் கற்றுக் கொள்வதில் ஆர்வமில்லை!" என்று சந்திரன் கூறியதும், சாமியார் ஆச்சரியப்பட்டார். "என்னப்பா? ஏன் இந்த திடீர் மாறுதல்?" என்று கேட்டார்.
 
"இப்போது எனக்கு அதில் ஆசை போய் விட்டது! என்று நான் படிப்பில் அக்கறை காட்ட ஆரம்பித்தேனோ, அன்றுமுதல் இதில் ஆர்வம் குன்றிவிட்டது!" என்றான். அவன் கேட்டதைக் கேட்டுப் புன்னகைத்த சாமியார், "மகனே! இந்த பதிலைத்தான் நான் உன்னிடம்இருந்து எதிர்பார்த்தேன். கல்விதான் உண்மையான செல்வம் என்பதை நீ இப்போது புரிந்து கொண்டு விட்டாய். உன்னுடைய தன்னம்பிக்கையும், அறிவும் வளர வளர செல்வத்தைப் பற்றி நீ கொண்டிருந்த தவறான கருத்துகள் உன்னிடமிருந்து விலகி விட்டன. உழைத்து சம்பாதிக்கும் செல்வம்தான் நிலைக்கும். குறுக்கு வழியில் வரும் செல்வம் வந்தது போலவே மறைந்து விடும். இதுதான் எனக்குத் தெரிந்த தொட்டதெல்லாம் பொன்னாக்கும் வித்தை!" என்றார்.
 
தொடர்ந்து, "நான் உன் தந்தையின் நண்பன் நாராயணன். உன்னை மாற்றுவதற்காக சாமியார் வேடம் போட்டு நடித்தேன்!" என்று கூறியவாறே, தன் போலி தாடியைக் களைத்தார்.
 
அவரை சந்திரன் வியப்புடன் நோக்கியபோது, அங்கு வந்த பார்கவி தன்னுடைய கணவரின் நண்பரை வரவேற்று தன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தாள். சந்திரனும் அவருக்குத் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டான்.
 

0 comments:

Post a Comment

Flag Counter