மூன்று அபாய கனவுகள்

 
கோகர்ண ராஜ்யத்து மன்னரான மணிகண்டர் பரந்த நோக்கும், நேர்மையான குணங்களும், தர்மசிந்தனையுமுள்ளவர்! சிறந்த பக்திமான்! சாது, சன்னியாசிகளை மிகவும் மதித்துப் போற்றுபவர்! ஒருநாள், அவருடைய அரண்மனைக்கு ஜடாதரர் என்ற முனிவர் வருகை புரிந்தார். மணிகண்டர் அவரை நன்கு உபசரித்தார். அதனால் மனம் மகிழ்ந்த ஜடாதரர் மன்னரை மனதார ஆசீர்வதித்து விட்டு "மணிகண்டா! நீ இன்று இரவு தொடங்கி, தொடர்ந்து மூன்று இரவுகள் விபரீதமான கனவுகளைக் காண்பாய்! அவை உனக்கு வரப்போகும் அபாயத்தை சூசகமாக உணர்த்தும். அதற்கேற்றார்போல், நீ சமயோசித புத்தியுடன் நடந்து கொண்டால், வரப்போகும் அபாயங்களிலிருந்து தப்பலாம்!" என்று கூறிவிட்டுச் சென்றார்.
 
முனிவரின் எச்சரிக்கையைக் கேட்டு பதறிய மன்னர் தன்னுடைய மந்திரிகளை அழைத்து அவர்களிடம் அனைவற்றையும் கூறி அதைத் தடுக்கும் வழியைப் பற்றி கேட்டார். விவேகன் என்ற மந்திரி, "மகாராஜா! கனவுகளே தோன்றாமல் தவிர்த்து விட்டால், பின்னர் அபாயமே ஏற்படாது. ஆகவே, நீங்கள் இன்று முதல் மூன்று இரவுகள் உறங்காமல் விழித்திருங்கள்!" என்றார்.
 
மன்னருக்கு வேறு எதுவும் யோசனை தோன்றாததால், விவேகன் கூறியவாறே செய்யத் தீர்மானித்தார். ஆனால், முதல் நாள் இரவு, முழுவதும் சிரமப்பட்டு சதுரங்கம் விளையாடி உறங்காமலிருந்தும், விடியும் சமயத்தில் சற்றே கண்ணயர்ந்து விட்டார்.
அந்த சிறிது நேர உறக்கத்திலேயே அவருக்கு ஒரு கனவு உண்டாகி விட்டது..
தான் ஒரு காட்டினுள் இருப்பது போலவும், தன்னை நோக்கி ஒரு நாகப்பாம்பு சீறிப்பாய்வதையும் கண்டார். மறுநாள் இரவு, அவர் பாட்டுக்கேட்டுக் கொண்டே தூங்காமல் இருக்க முயற்சி செய்தார். ஆனால் அன்றும் சிறிது நேரம் தன்னை அறியாமல் உறங்கிப் போனார். கனவில், வானிலிருந்து இடியும், மின்னலுமாக அவரைத் துரத்தி வந்தது. உடனே, மன்னர் விழித்துக் கொண்டார்.
 
மூன்றாவது இரவில், அவர் ராஜகுருவை அழைத்து புராணக்கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்க, இடையில் அமர்ந்தவாறே உறங்கிப் போனார். அன்று கனவில் அவரை ஒரு சிங்கம் துரத்த, அவர் ஓடிச் சென்று ஒரு குளத்தில் குதித்தார். அந்தக் குளம் முழுவதும் இரத்தம் நிரம்பியிருந்தது. குளத்தில் மூழ்கி அவர் மூச்சுத் திணறும்போது, அவருடைய மகள் மணிமேகலை அவர் கையைப் பிடித்து மேலே தூக்கி விட்டாள்.
 
மறுநாள் காலை மந்திரிகளை அழைத்த மன்னர், அதுவரை தான் கண்ட கனவுகளைக் கூறி அவற்றின் விளக்கம் கேட்டார். நீண்டநேரம் ஆலோசனை செய்த மந்திரிகள் மன்னருக்கு பாம்பினால், அல்லது மின்னலினால் அல்லது சிங்கத்தினால் ஆபத்து நேரிடப்போகிறது என்றும், ஆகையால் மன்னர் அரண்மனையை விட்டு எங்கேயும் வெளியே செல்லக்கூடாது என்றும் அறிவுரை கூறினார்.
 
அதைப்பற்றியே யோசித்துக் குழப்பத்தில் ஆழ்ந்திருந்த மன்னரிடம் ஒருநாள் சிவா என்ற இளைஞன் வந்தான். அவன் மன்னரை வணங்கிவிட்டு, "மகாராஜா! நான் அறிவு ஆற்றல் படைத்தவன்! ஆனால் என்னுடைய திறமையை இதுவரை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. உங்களுடைய கனவுகளின் உட்பொருளைப் பற்றிய என் கருத்தை வெளியிட அனுமதித்தால், நான் ஓர் அறிவாளி என்று வெளி உலகுக்குக் காட்ட எனக்கு வாய்ப்பு கிடைக்கும்!" என்றான்.
 
மன்னனும், ஜடாதர முனிவர் தனக்கு விடுத்த எச்சரிக்கை பற்றியும், அதன் பிறகு அவர் கூறியது போலவே தனக்குத் தொடர்ச்சியாகத் தோன்றிய விபரீதக் கனவுகளையும் அவனிடம் விளக்கி கூறினார்.
அதை கவனமாகக் கேட்ட சிவா, "மகாராஜா! நீங்கள் கண்ட கனவுகளுக்கு உட்பொருள் உள்ளது. முதல் இரண்டு கனவுகளின் சூசகமான உட்பொருளை நான் விளக்குகிறேன். அவை சரியாக அமைந்தால், மூன்றாவது கனவையும் விளக்குகிறேன்" என்றான்.
 
மன்னன் சரியென்றதும் சிவா, "மகாராஜா! தங்களுடைய முதற்கனவில் தங்களை ஒரு நாகம் துரத்தியது. நாகப்பாம்பு தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு வஞ்சம் தீர்க்கும் சுபாவம் உடையது. உங்கள் கனவின் உட்பொருள், உங்களால் தண்டிக்கப்பட்ட ஒருவன் உங்களைப் பழி தீர்க்க திட்டம் வகுத்துள்ளான் நீங்கள் அவனை உடனடியாகக் கண்டு பிடித்து சிறையில் அடைக்க வேண்டும். இரண்டாவது கனவில் விண்வெளியிலிருந்து மின்னல் இறங்கி வந்து உங்களைத் தாக்க முயற்சித்தது. அதாவது, உங்களுடைய பகைவனான அயல் நாட்டு மன்னன் உங்கள் மீது படையெடுக்கத் திட்டம் தீட்டுகிறான் என்பதே உட்பொருள்!" என்றான்.
 
அதைக் கேட்ட மன்னர் பிரமித்துப் போனார். சிவா கூறுவது நூற்றுக்கு நூறு சரியாக இருக்கும் என்று அவருக்குத் தோன்றியது. யோசித்துப் பார்த்ததில், சமீபத்தில் கொள்ளையர் தலைவன் பைரவனை சவுக்கடி தந்து தண்டனை கொடுத்தது நினைவிற்கு வந்தது. உடனே, காவலர்களை அழைத்து பைரவனை மீண்டும் கைது செய்ய உத்தரவிட்டார். அவனை நையப்புடைத்து விசாரித்ததில், மன்னரைக் கொலை செய்ய சதித்திட்டமிட்டு ஒரு விஷப்பாம்பை அவருடைய படுக்கையறையில் விட்டிருந்தது தெரிய வந்தது. இதன் மூலம் அவன் சதித்திட்டம் தக்க சமயத்தில் முறியடிக்கப்பட்டது.
 
தனது இரண்டாவது கனவின் விளக்கம் உண்மையா என்று அறிய, ஒற்றர்களை அண்டை அயல் ராஜ்யங்களுக்கு அனுப்பினார்.
 
அண்டை ராஜ்யமான சிங்கபுரியின் மன்னன் விக்கிரமசேனன் தங்கள் மீது போர் தொடுக்க ரகசியமாகத் திட்டமிட்டிருப்பதை ஒற்றர்கள் மூலம் அறியப்பெற்ற மன்னர் திகைத்துப் போனார்.
ஆகையால் அவர் சிவாவிடம், "சிவா! விக்கிரமசேனன் படைபலம் பொருந்தியவன்! எனக்கு இப்போதே அவன் திட்டம் தெரிந்தாலும், என்னால் எதுவும் செய்ய இயலாதே! என்ன செய்யலாம்?" என்று கவலையுடன் கேட்டார்.
 
"அதற்கும் ஒரு வழி உண்டு! அதைத்தான் தங்கள் மூன்றாவது கனவு விளக்குகிறது. கனவில் தாங்கள் கண்ட சிங்கம் சிங்கபுரி மன்னனைக் குறிக்கிறது. அவன் விரைவிலேயே படையெடுப்பது நிச்சயம்! அப்படிப் படையெடுத்தால், தாங்கள் கண்டிப்பாக படுதோல்வி அடைவீர்கள்! ஆனால், உங்களுடைய பெண் தோல்வியில் இருந்து உங்களைக் காப்பாற்ற முடியும்!" என்றான்.
 
"எப்படி?" என்று மன்னர் ஆவலுடன் கேட்டார். "சிங்கபுரி மன்னனுக்குத் திருமண வயதில் ஒரு மகன் உண்டு. அவனுடன் உங்கள் மகளை மணமுடித்தால், சிங்கபுரி மன்னன் உங்கள் சம்மந்தி ஆகி விடுவார். பிறகு போரே நிகழாது" என்றான்.
 
அவனுடைய ஆலோசனையைக் கேட்டு மன்னர் உடனே தூதுவன் மூலம் ஒரு கடிதமும், இளவரசியின் ஓவியமும் அனுப்பினார். அதில், "நீங்கள் சம்மதித்தால், உங்கள் மகனை என் பெண்ணுக்கு மணமுடிக்க விரும்புகிறேன்" என்று எழுதி இருந்தார்.
 
கடிதத்துடன் இணைக்கப்பட்டிருந்த இளவரசியின் ஓவியத்தைக் கண்டவுடனே, சிங்கபுரி இளவரசன் தன் சம்மதத்தை தன் தந்தையிடம் தெரிவித்தான். தன் மகனின் விருப்பத்தையறிந்த விக்கிரமசேனன், மணிகண்ட மன்னருடன் போர் தொடுக்கும் திட்டத்தைக் கைவிட்டான். திருமணமும் விரைவில் இனிதே நடந்து முடிந்தது. சிவாவின் புத்திகூர்மையினால் தனக்கு வரவிருந்த அபாயங்களிலிருந்து தப்பித்த மணிகண்டர், அவனை மிகவும் பாராட்டி பரிசுகள் பல அளித்து,தன் பிரதம ஆலோசகராக நியமித்தார்.
 

0 comments:

Post a Comment