திறமை தான் உண்மையான தகுதி

 
கம்போஜ ராஜ்யத்தை ஆண்டு வந்த குமாரவர்மன் மிகவும் கர்வமுள்ளவன். வாள்வலிமையிலும், ராஜதந்திரத்திலும், ஆயகலைகள் அறுபத்து நான்கிலும் தானே வல்லவன் என்று இறுமாப்புக் கொண்டிருந்தான்.
 
ஒருநாள், அவன் தனது ராணி கல்பனாவிடம் அதைப்பற்றி பெருமையுடன் பேசிக் கொண்டிருக்கையில் ராணி நகைச்சுவையாக, "கம்போஜ ராஜ்யத்தை ஆளும் பாக்கியம் உங்களுக்கு பிறப்புரிமையினால் கிடைத்தது. உங்களுடைய வாள் வலிமையினால் அல்லது தகுதியினால் ராஜ்யத்தைப் பெறவில்லை. அப்படியிருக்க, உங்களுடைய வலிமையைப் பற்றி நீங்கள் பேசுவது வெறும் தற்புகழ்ச்சியே!" என்றாள். ராணி கேலியாகத்தான் கூறினாள் எனினும், அவளுடைய சொற்கள் குமாரவர்மனுக்கு சுருக்கென தைத்தது.
 
உடனே, குமாரவர்மன் தன் ராஜ்யத்தில் பல போட்டிகளை அறிவித்து, பலரையும் பங்கேற்குமாறு தண்டோரா போடச் செய்தான். உடனே, ராஜ்யத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல இளைஞர்கள், வீரர்கள், அறிஞர்கள் திரண்டு வந்தனர். தினந்தோறும் வாட்போர், மல்யுத்தம், பட்டிமன்றம் ஆகியவை நடக்க, ஒவ்வொரு போட்டியிலும் பலர் கலந்து கொண்டனர்.
 
போட்டிகள் முடிவுற்றபின், பரிசளிக்கும் விழா வந்தது. அன்று தன்னிடம் கிண்டலாகப் பேசிய ராணியையும் சபைக்கு வரவழைத்த குமாரவர்மன் நடுவர்களை நோக்கி, "முதலில் வாட்போரில் முதலாவதாக வந்தவனை அழையுங்கள்!" என்றான்.
அதன்படியே ராமராஜன் என்ற வாலிபன் அழைக்கப்பட்டான். உடனே மன்னன், "இவன் என்னுடன் போட்டியிட்டு வெற்றி பெறட்டும், பார்க்கலாம்!" என்று சவால் விட்டு விட்டு ராமராஜனைப் போட்டிக்கு அழைத்தான். நீண்ட நேரப் போருக்குப் பின், ராமராஜன் மின்னலெனப் பாய்ந்து மன்னரின் வாளைத் தன் வாளினால் தட்ட, மன்னரது வாள் கீழே விழுந்தது. சபையோர் அனைவரும் வாயடைத்துப் போக, மன்னருக்கு அவமானம் தாங்கவில்லை.
 
உடனே நடுவர்கள் ராமராஜன் முறையாக போட்டியிடவில்லை என்று விளக்கம் தந்து, மீண்டும் போட்டியிடக் கூறினர். மறுமுறை போட்டி தொடங்குமுன் நடுவர்கள் ராமராஜனை எச்சரிக்கை செய்ய, ராமராஜன் வேண்டுமென்றே தோற்றுப் போனான். முதற்பரிசு மன்னருக்கே அளிக்கப்பட்டது.
 
அதன்பிறகு நடந்த ஒவ்வொரு போட்டியிலும் நடுவர்களின் முன்னேற்பாட்டின்படி, மன்னனுக்கே பரிசு கிடைத்தது. நாட்கள் சென்றன. ஒருநாள் திடீரென ராஜ்யத்தில் புரட்சி ஏற்பட்டது. முதன்மந்திரி பைரவர் நயவஞ்சகமாக ஆட்சியைக் கைப்பற்றி, மன்னனையும், அவரது ராணியையும் சிறையில் இட உத்தரவிட்டார். சில நண்பர்களின் உதவியினால், மன்னனும் ராணியும் தலைநகரை விட்டு தலை மறைவாயினர்.
 
ஒரு சிறு கிராமத்தில் குமாரவர்மன் மாறு வேடத்தில் தன் ராணியுடன் தங்கினார். கிராமத்து மக்களுடன் பழகும் போது அவர்கள் பலவிதத்திலும் சிரமப்படுவதைப் பார்த்து, தன் ஆட்சி நிர்வாகம் சீராக நடைபெறவில்லை என்பதை உணர்ந்தார்.
 
ஒருநாள், தலைநகரில் சென்ற ஆண்டைப் போலவே, இந்த ஆண்டுm போட்டிகள் நடைபெறும் என்றும், புதிய மன்னர் பைரவர் பரிசுகள் வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
"போட்டிகளில் கலந்து கொள்வதால் எந்தப் பயனும் இல்லை. சென்ற ஆண்டைப் போலவே, பரிசுகள் அனைத்தும் மன்னருக்கேப் போகும்!" என்று கிராமத்தினர் பேசிக் கொண்டதைக் கேட்டபிறகே, குமாரவர்மனுக்குத் தனக்கு எல்லாப் பரிசுகளும் சென்ற ஆண்டு கிடைத்ததன் உண்மை விளங்கியது. ஆயினும் போட்டிகளில் கலந்து கொண்டு தன் திறமையைக் காட்ட முடிவு செய்தார். அதனால் மாறுவேடத்திலேயே, குமாரவர்மன் தலைநகரை அடைந்தார்.
 
அந்த ஆண்டு, வெகு சிலரே போட்டியில் பங்கேற்றனர். குமாரவர்மன் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றார். பைரவரும் குமாரவர்மனைப் போலவே, தானே அனைத்துப் பரிசுகளையும் பெற விரும்பி குமாரவர்மனைத் தன்னுடன் போட்டியிட அழைத்தார். அவரை யாரோ ஒரு கிராமத்து ஆள் என்று கருதிய நடுவர்கள்போட்டியில் தோற்றுவிடுமாறு எச்சரிக்கை செய்தனர். வேறு வழிஇன்றி போட்டிகளில் பைரவரிடம் வேண்டுமென்றே தோற்றுப்போய், பைரவருக்கே எல்லாப்பரிசுகளும் கி டைக்கும்படிச் செய்துவிட்டு, குமாரவர்மன் கிராமம் திரும்பினார்.
 
அங்கு, பைரவரின் கர்வம் தலை தூக்கியது. நிர்வாகம் சீர்குலைந்தது. பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். தன்னுடைய தவறுகளை உணர்ந்து திருந்திய குமாரவர்மன், பைரவரின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தீர்மானித்தார். அன்று முதல் கிராமம், கிராமமாகச் சென்று பைரவரின் ஆட்சியின் சீர்கேடுகளை விளக்கி அவருக்கு எதிராகப் போரிட படை திரட்டினார்.
 
தான் தேர்ந்தெடுத்த இளைஞர்களுக்குள் போட்டிகள் நடத்தி, அவற்றில் தானும் பங்கேற்று, போட்டிகளை வென்று, படைத் தலைவனாக மற்றவர்களால் தேர்வு செய்யப்பட்டார். அந்த ஆண்டும் பைரவர் போட்டிகளைப் பற்றி அறிக்கை வெளியிட, குமாரவர்மன் தனது படையுடன் தலைநகருக்குச் சென்றார். அனைத்துப் போட்டிகளிலும் குமாரவர்மன் வெற்றிபெற, பைரவர் அவரைத் தன்னுடன் வாட்போருக்கு அழைத்தார்.
நடுவர்கள் முன்பு போலவே குமாரவர்மனை எச்சரித்தனர். ஆனால் அதைப் பொருட்படுத்தாத குமாரவர்மன், ஒரே வீச்சில் பைரவரின் கையிலிருந்த வாளை வீழ்த்தினார். பிறகு தனது வாளை பைரவரின் மார்பிற்கு நேராகப் பிடித்தவாறு, "சபையோர்களே! இந்த பைரவன் தனது மன்னனுக்கு எதிராக சதி செய்து ஆட்சியைப் பிடித்தவன்! மன்னனையே கொல்ல நினைத்த துரோகி! ஆனால் பாக்கியவசமாக மன்னன் தப்பி விட்டான். ஆட்சியைப் பிடித்த பிறகும், இவன் சீராக ஆட்சி செய்யாமல் அராஜகம் நிலவும்படிச் செய்தவன்! இனி இவன் ஆட்சிபுரிய தகுதியற்றவன்! அந்தத் தகுதி இப்போது என்னிடம் உள்ளது. நான்தான் குமாரவர்மன், உங்கள் மன்னன்!" என்று கூறிவிட்டு, தன் மாறுவேடத்தைக் களைந்தார்.
 
தங்களது மன்னனைக் கண்டதும், உற்சாக மிகுதியினால் சபையோர் ஆரவாரம் செய்தனர். குமாரவர்மன் மீண்டும் ஆட்சிபீடத்தில் அமர, பைரவர் சிறையிலிடப்பட்டார்.
 
அன்றிரவு, ராணி குமாரவர்மனிடம், "இப்போது நீங்கள் செய்ததை சென்ற ஆண்டே செய்திருக்கலாமே! அப்போதே நீங்கள்தான் மன்னன் என்று உங்களை அனைவரும் அங்கீகரித்திருப்பார்கள்!" என்றாள்.
 
"பிறப்புரிமையினால் மட்டுமே ஒருவன் மன்னனாவதில் பெருமையில்லை. தன் தகுதியினால் மன்னனாக வேண்டும் என்றாய். நீ சொன்னதுபோல் என்னுடைய வாள் வலிமையினால் ராஜ்யத்தைக் கைப்பற்ற நினைத்து படை திரட்டினேன். என்னை அவ்வாறு வீரமுள்ளவனாக மாற்றிய உனக்கு நன்றி!" என்றான்.
 

0 comments:

Post a Comment

Flag Counter