நூற்றுக்கு ஒன்று குறைவு!

சந்தன், நந்தன் இருவரும் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்தனர். சந்தன் ஒரு பணக்கார வியாபாரி. அவர் வசித்தது ஒரு பெரிய வீட்டில்! ஆனால் நந்தன் கூலி வேலை செய்து பிழைப்பவன். அவன் வசித்தது ஒரு குடிசையில்! இருவரும் எதிர் எதிரான துருவங்களாயிருந்தும், நண்பர்களாக இருந்தனர். அவர்களைப் போலவே, சந்தனின் மனைவி ஈஸ்வரியும், நந்தனின் மனைவி சாருமதியும் தோழிகளாக இருந்தனர்.
நந்தன் அடிக்கடி தன் வீட்டிற்கு யாராவது விருந்தாளிகளை அழைத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அறுசுவை விருந்து படைக்கத் தேவையான பண வசதி இல்லாமலிருந்தும், இருப்பதைக் கொண்டு எளிய, சுவையான உணவுகளை சமைத்து விருந்தாளிகளுக்கு சாருமதி பரிமாறி வந்தாள்.
அவ்வாறு விருந்தாளிகள் நந்தன் வீட்டில் இருக்கும்போது, அங்கு ஒரே குதூகலமும், மகிழ்ச்சியும் நிரம்பிய குரல்கள் கேட்கும். கூலி வேலை செய்து பிழைக்கும் நந்தனால் எப்படி விருந்தினர்களை அடிக்கடி வீட்டிற்கு அழைத்து வர முடிகிறது என சந்தனின் மனைவி ஈஸ்வரி குழம்பினாள். தன்னுடைய சந்தேகத்திற்கு பதில் காண ஈஸ்வரி பெரிதும் ஆர்வம் கொண்டாள். ஆனால் தன்னுடைய சந்தேகத்தை நேரிடையாக சாருமதியிடம் கேட்க அவளுக்கு கூச்சமாக இருந்தது. இருந்தாலும் ஆர்வத்தை அடக்க முடியாமல் ஒருநாள் கேட்டு விட்டாள்.

அதற்கு சாருமதி புன்னகையுடன், "நாங்கள் குறைந்த அளவில் சம்பாதிப்பதால் எதிர்காலத்திற்காக எதையும் சேமிப்பதில்லை. கிடைக்கும் பணத்தை அவ்வப்போதே செலவு செய்து விடுகிறோம். நாங்களும் சாப்பிட்டு, விருந்தினர்களுக்கும் படைக்கும் அளவிற்கு என் கணவரால் எப்படி வருமானம் ஈட்ட முடிகிறது என்பது அவருக்குத்தான் தெரியும்!" என்றாள்.
அன்றிரவு இதைப்பற்றி ஈஸ்வரி தன் கணவன் சந்தனிடம் கூறினாள். அதற்கு அவர், "அவர்களுக்கு தொண்ணூற்று ஒன்பதின் மகிமை தெரியாது. அதனால்தான் நிம்மதியுடனும், மகிழ்ச்சியாகவும் வாழ்க்கை நடத்துகின்றனர். ஒருமுறை அவர்களுக்கு அந்த அனுபவம் கிடைத்து விட்டால், அதற்குப் பிறகு அவர்களுடைய வாழ்க்கையில் நிம்மதியும், மகிழ்ச்சியும் பறந்துவிடும்" என்றார்.
"அது என்ன தொண்ணூற்று ஒன்பது?" என்று ஈஸ்வரி ஆவலுடன் கேட்டாள். "நூற்றுக்கு ஒன்று குறைவு! அவ்வளவுதான் இப்போது என்னால் சொல்ல முடியும். ஆனால் அது அவர்களை எப்படி ஆட்டி வைக்கப் போகிறது என்று நீ பொறுத்திருந்து பார்!" என்று புதிர் போட்டார் சந்தன்.
 
சில நாள்கள் சென்றன. பக்கத்து வீட்டில் சில மாறுதல்கள் ஏற்பட்டன. இரவு நேரங்களில், வீட்டின் கொல்லைப்புறத்தில் நந்தனும், சாருமதியும் மும்முரமாக பாய் பின்னுவதைப் பார்த்து வியந்தாள். விருந்தாளிகள் அவர்கள் வீட்டிற்கு வருவது நின்று விட்டது. சில நாள்களில் நந்தன் கூலி வேலை செய்து விட்டு விரைவாகவே திரும்பி வந்து பாய் முடைவதில் ஈடுபடுவதைப் பார்த்தாள்.
பக்கத்து வீட்டில் கண்கூடாக நிகழ்ந்த மாறுதல்கள் ஈஸ்வரியைக் கவலைப்படச் செய்தன. அவளுக்கு வருத்தமளித்த மற்றொரு விஷயம் இப்போதெல்லாம் சாருமதி தன்னுடன் மதிய நேரத்தில் அரட்டைஅடிக்க வருவதை நிறுத்தி விட்டதுதான்! தன் ஆர்வத்தை அடக்கவே முடியாமல், ஒருநாள் மதியநேரம் ஈஸ்வரி தானாகவே சாருமதியின் வீட்டிற்கு வலியச் சென்றாள்.
தனியாகப் பாய் முடைந்து கொண்டிந்த சாருமதி, ஈஸ்வரியைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தாள். அதற்கு மேல் பொறுக்க முடியாத ஈஸ்வரி, "சாருமதி! என்மீது உனக்குக் கோபமா? ஏன் முன் போல் என்னுடன் பேச வருவதேயில்லை? உன் கணவருக்குக் கூலிவேலை கிடைப்பது இல்லையா? அதனால்தான் இருவரும் பாய் முடைகிறீர்களா?" என்று கேட்டாள்.
தலை நிமிர்ந்து பார்த்த சாருமதி, "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை!" என்றாள். ஈஸ்வரிக்கு சாருமதி எதையோ மறைக்கிறாள் என்று தோன்றியது. "உண்மையைச் சொல்! உனக்கு ஏதாவது பணப்பற்றாக்குறை என்றால், நான் உதவி செய்யத் தயாராக இருக்கிறேன் சொல்" என்றாள்.
ஈஸ்வரியின் வார்த்தைகளைக் கேட்டு நேகிழ்ந்து போன சாருமதி, "அப்படியில்லை! நாங்கள் எங்கள் வருமானத்தைப் பெருக்குவதற்காக பாய் முடையும் வேலைச் செய்து கொண்டிருக்கிறோம்" என்றாள்.
"ஏன்? திடீரென ஏன் பணம் அதிகமாகத் தேவைப்படுகிறது?" என்று ஈஸ்வரி கேட்டாள். சிறிது நேரத்திற்குப்பின் சாருமதி "உன்னிடம் உண்மையைச் சொல்கிறேன். ஆனால் நீ உன் கணவரிடம் சொல்லக் கூடாது!" என்றாள்.
"சரி!" என்றாள் ஈஸ்வரி. "சில நாள்களுக்கு முன் நடந்த சம்பவம் இது! ஒருநாள் இரவு வேலையில் இருந்து திரும்பிய கணவர் குடிசை வாயிலில் ஒரு மூட்டை கிடப்பதைப் பார்த்தார். அது யாருடையது, எப்படி நமது குடிசைக்கு வந்தது என்று வியந்த அவர், அதைத் தூக்கிக் கொண்டு உள்ளே வருகையில் அதனுள் நாணயங்கள் குலுங்கும் ஒலியைக் கேட்டார். "மூட்டையைப் பிரித்துப் பார்த்தால் உள்ளே வெள்ளி நாணயங்கள் இருந்தன. அவற்றைத் தரையில் கொட்டிய என் கணவர், ஒவ்வொன்றாக எண்ணினார். மொத்தம் தொண்ணூற்று ஒன்பது நாணயங்கள் இருந்தன. "நான் எண்ணியதில் ஏதோ தவறு! மறுபடியும் எண்ணுகிறேன்!" என்று கூறிய என் கணவர் மீண்டும் நாணயங்களை எண்ணினார்.
நூற்றுக்கு ஒன்று குறைவாகவே இருந்தது. பின்னர், நானும் எண்ணிப்பார்த்தேன். அதே எண்ணிக்கை தான்!" "ஏன் நூற்றுக்கு ஒன்று குறைவாக இருக்கிறது?" என்று கேட்ட என் கணவருக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. திடீரென ஏதோ தோன்றியவராக அவர் "இதை இப்போது நூறாக்கி விடுகிறேன்" என்று சொல்லிவிட்டுத் தான் சம்பாதித்து வந்த பணத்திலிருந்து ஒரு வெள்ளி நாணயத்தை எடுத்து அதனுடன் சேர்த்து எண்ணிக்கையை நூறாக்கினார். பிறகு அந்த மூட்டையை கட்டி பத்திரமாகப் பதுக்கி வைத்தார்."
சற்றே நிறுத்திய சாருமதி தொடர்ந்து, "அன்று எங்கள் செலவுகளில் ஒரு வெள்ளிக்காசு குறைத்துக் கொண்டோம். அன்று முதல், திடீரென எங்களுக்குப் பணம் சேமிக்கும் ஆர்வம் உண்டாகி விட்டது. அதனால் உபரி வருமானத்திற்காகப் பாய் முடைய ஆரம்பித்தோம். அதில் கிடைக்கும் வருமானம் அனைத்தையும் அந்த மூட்டைக்குள்ளிட்டு பணம் சேமிக்கத் தொடங்கினோம்" என்றாள்.
"நல்ல காரியம் தான்! ஆனால் உங்கள் வீட்டிற்கு அடிக்கடி வரும் விருந்தாளிகள் என்ன ஆனார்கள்?" என்று ஈஸ்வரி கேட்டாள்.
"அதுவா? நாங்கள் கிடைக்கும் நேரத்தில் பாய் முடைய ஆரம்பித்து விட்டதால், முன்போல் விருந்து சமைக்க நேரம் கிடைக்கவில்லை. அதனால் விருந்தினர்களை அழைப்பதுஇல்லை" என்றாள் சாருமதி.
தொண்ணூற்று ஒன்பதின் மகத்துவத்தைப் புரிந்து கொண்ட ஈஸ்வரி, தன் வீட்டிற்குத் திரும்பினாள். பக்கத்து வீட்டில் நிகழ்ந்த மாறுதல்களை அவளுடைய கணவரும் கவனித்தார் என்றாலும் அவளிடம் அதைப்பற்றி ஒன்றும் பேசவில்லை. ஆனால் மாறுதல்களை நிகழ்த்திய தொண்ணூற்று ஒன்பதின் மகிமை அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அந்த மூட்டையை வைத்தது இவர் தானே!

0 comments:

Post a Comment

Flag Counter