தண்ணீர் ஊற்று

                                  தண்ணீர் ஊற்று
பிரம்மதத்தன் முன்பு காசியை ஆண்ட போது போதிசத்வர் சாதவாகன வம்சத்தில் பிறந்து வளர்ந்து பெரியவராகி ஐநூறு வண்டிகளை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்து வந்தார்.

ஒரு முறை அவரது குழு ஒரு பாலைவனப் பகுதியை அடைந்தது. அது அறுபது மைல் நீளமானது. பொடிமணல் சூடேறினால் காலைப் பொசுக்கி விடும். பகல் வேளையில் நெருப்பாய் கொதிக்கும் அந்தப் பாலைவனம் இரவில் சட்டெனக் குளிர்ந்துவிடும். நடுப்பகலின் போது அந்தப் பாலைவனத்தில் செல்லவே முடியாது.

எனவே அங்கு செல்லும் பயணிகள் தமக்கு வேண்டிய உணவுப் பொருள்களையும் குடி நீரையும் உடன் எடுத்துச் செல்வார்கள். கூடியவரையில் இரவில் பயணம் செய்து அந்தப் பாலை வனத்தைக் கடக்க முயல்வார்கள். இரவில் திசை காட்ட நட்சத்திரங்களே அவர்களுக்கு உதவும்.

ஒரே இரவில் அந்தப் பாலை வனத்தைக் கடக்க முடியாவிட்டால் மறுநாள் காலையில் வண்டிகளை வட்ட வடிவில் நிறுத்தி மேலே கெட்டித் துணிகளைக் கட்டி அதன் நிழலில் பயணிகளும் மாடுகளும் தங்க ஏற்பாடு செய்து கொள்வார்கள். அங்கேயே நீர் குடித்தும் சாப்பிட்டும் அன்றையப் பகல் பொழுதைப் போக்கிவிட்டு மாலையானதும் மீண்டும் பயணத்தைத் துவக்குவார்கள்.

அவர்கள் தம்மோடு போதிய அளவு நீரை எடுத்துப் போய் வந்ததால் அவர்களுக்கு எவ்வித சிரமமும் தோன்றாமல் இருந்து வந்தது.

போதிசத்வரும் இம்மாதிரியே பயணம் செய்து ஐம்பது மைல்.தூரத்தைக் கடந்து விட்டார். இன்னும் கொஞ்ச தூரமே இருந்ததால் ஒரு இரவில் கடந்து போய் விடலாமென எண்ணி தம்மிடம் மிகுந்த உணவையும் நீரையும் கொட்டி விட்டு பயணத்தைத் தம் குழுவுடன் துவக்கினார்.

முதலில் செல்லும் வண்டியில் இருப்பவன் தான் நட்சத்திரங்களைப் பார்த்து திசை அறிந்து செல்லக் கூடியவன். மற்ற வண்டிகள் அவனது வண்டியின் பின்னால் செல்லும். மாலையில் கிளம்பிய அவன் சற்று நேரத்தில் தன்னையும் அறியாமல் தூங்கிவிட்டான்.

அதனால் அவனது வண்டி சற்று வளைந்து போய் பாதையை விட்டுத் திரும்பி மீண்டும் பாலைவனத்திற்குள்ளாகவே போகலாயிற்று. அதைப் பின் பற்றி மற்ற வண்டிகளும் சென்றன. முதல் வண்டிக்காரன் விடியும் வேளைக்குத்தான் கண்விழித்தான். அப்போது நட்சத்திரங்களைப் பார்த்து விட்டு தன் வண்டி போக வேண்டிய திசையில் போகாமல் நேர் எதிராக வந்த வழியே பாலை வனத்திற்குள் போய்க் கொண்டிருப் பதைக் கவனித்தான்.

உடனே அவன் தன் வண்டியைத் திருப்பி "எல்லோரும் வண்டிகளைத் திருப்புங்கள். நாம் மறுபடியும் பாலைவனத்திற்குள்ளே வந்து விட்டோம்" என்றான். வண்டிகளை எவ்வளவு வேகமாக ஓட்டியும் அவர்களால் பாலைவனத்தைக் கடக்க முடியாமல் முதல் நாள் காலையில் தங்கிய இடத்திற்குத் தான் போய்ச் சேர முடிந்தது. அங்கேயே தங்கி விடலாம். ஆனால் குடிக்க நீர் வேண்டுமே.


வண்டிகளை வட்ட வடிவில் நிறுத்தி கூடாரம் போடப்பட்டது. ஆனால் அன்று பகல் முழுவதும் எல்லோரும் அங்கே தங்கி இருக்க வேண்டும். வண்டி மாடுகளும் இருக்க வேண்டும். இவர்களுக்கு குடிக்க நீரும் உணவு தயாரிக்க நீரும் தேவை. என்ன செய்வது? எனவே கவலையுடன் இளம் வெயிலில் போதிசத்வர் சுற்றிப் பார்க்க சற்று தூரத்தில் தர்ப்பைப்புல் அடர்ந்து வளர்ந்து இருந்ததைக் கண்டார். நிலத்துக்குள் ஈரப்பசை இருந்தால் தானே அந்தப் பாலைவனத்தில் புல்வளர முடியும் என எண்ணி அந்த இடத்தைத் தோண்டச் சொன்னார். எல்லோருமாகச் சேர்ந்து தோண்டினார்கள். இருபது அடி தோண்டியதும் பாறை தென்பட்டது.

இனி தண்ணீர் எங்கே இருக்கும் என எல்லோரும் சந்தேகப்பட்டார்கள். போதிசத்வரோ பாறை மீது காது வைத்துக் கேட்டு விட்டு "இதன் அடியே நீர் இருக்கிறது. இதனைப் புரட்டி நகர்த்துங்கள்"என்றார். பலருக்கும் அங்கே தண்ணீர் இருக்குமா என்ற சந்தேகமே ஏற்பட்டது. பாறை மிகப் பெரியதாக இருந்து அசைந்து கொடுக்கா விட்டால் என்ன செய்வது என்றும் கூறினார். ஆனால் போதிசத்வரோ "முயன்றால் முடியாதது எதுவும் இல்லை" என்று கூறி பாறையை நகர்த்தச் சொன்னார்.

அந்தக் கல்லைப் பெயர்த்து ஒருவன் நகர்த்தவே அந்த இடத்திலிருந்து தண்ணீர் பீறிட்டு பனை உயரத்திற்குப் போய் கீழே விழுந்தது. எல்லோரும் மகிழ்ந்து போய் முதலில் தம் தாகத்தைத் தணித்துக் கொண்டு நீரைப் பாத்திரங்களில் எடுத்துப் போனார்கள். அதன் பின் கூடாரத்தில் சமையல் தயாராகியது. எல்லோரும் சாப்பிட்டு விட்டு மாலையானதும் அங்கிருந்து கிளம்பி நேர் வழியில் சென்றனர். தண்ணீர் வந்த இடத்தில் போதிசத்வர் ஒரு கம்பத்தை நாட்டினார்.

அயல் நாட்டில் தம் சரக்குகளை இலாபத்திற்கு விற்று போதிசத்வர் ஊர்திரும்பி வந்து தானதர்மங்களைச் செய்து சுகமாக வாழ்ந்தார்.

0 comments:

Post a Comment