முன் யோசனை

                                       முன் யோசனை!
பிரம்மதத்தன் காசியை ஆண்ட போது போதிசத்தவர். ஒரு வணிகரின் குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே அவர் வியாபாரத்தின் நெளிவு சுளிவுகளை அனுபவம் மிக்க வியாபாரிகளிடமிருந்து கற்று அறிந்து கொண்டார். எந்த விஷயத்தையும் நன்கு ஆராய்ந்து அவசரப் படாமல் அவர் முடுவு எடுத்து வந்தார். அவரது வியாபாரம் பெருத்த அளவில் நான்கு திக்குகளிலும் நன்கு நடந்து வந்தது.

காசியில் மந்தமதி என்ற வியாபாரி இருந்தான். அவன் எதையும் அவசரப்பட்டு செய்பவன். ஒரு முறை போதிசத்வர் வண்டிகளில் வியாபாரச் சரக்குகளை ஏற்றிக் கொண்டு புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது மந்தமதி வந்து அவரிடம் தானும் அவர் போகும் வழியில் செல்லப் போவதால் அவரோடு சேர்ந்து தன் வண்டிகளை ஓட்டிக் கொண்டு வருவதாகக் கூறினான்.

அதைக் கேட்ட போதிசத்வர் 'மந்தமதி! நம் இருவர் சரக்கு வண்டிகளும் ஒரே பாதையில் செல்லும் போது சாலை அடைபட்டு மற்றவர்களின் போக்குவரத்திற்கு இடைஞ்சலே ஏற்படும். இதைத் தவிர்க்க நம்மில் யாராவது ஒருவர் முதலில் புறப்பட வேண்டும். மற்றவர் அதற்கு நாலைந்து நாட்கள் கழித்துப் புறப்பட்டால் மற்றவர்களுக்கு நம்மால் இடைஞ்சல் இருக்காது"என்றார்.

அப்போது மந்தமதி தன் மனதில் "நான் முதலில் புறப்பட்டுச் சென்றால் என் சரக்குகளை விற்று லாபம் அடைவேன். முதலில் நான் சாலையில் செல்வதால் அதில் செளகரியமாகப் பயணம் செய்ய முடியும். வழி நெடுக உள்ள புல்லை என் மாடுகள் மேய்த்து கொண்டே செல்லும். அதனால் அவற்றிற்காக நான் செய்ய வேண்டிய செலவு மிச்சம். வழியிலுள்ள மரங்களின் காய்களும் கனிகளும் எனக்கே
முதலில் பறித்துக் கொள்ளக் கிடைக்கும். தண்ணீரும் நன்கு கிடைக்கும். என் சரக்கு முதலில் செல்வதால் அந்தந்த ஊர்களில் நான் சொல்லும் விலைக்கே வாங்கிக் கொள்வார்கள்" என்று எண்ணினான்.

மந்தமதி அவரிடம் தான் முதலில் சரக்குகளுடன் செல்வதாயும் பிறகு அவர் சில நாட்கள் கழித்துப் புறப்படலாம் என்று கூறவே போதிசத்வரும் அப்படியே செய்வதாக ஒப்புக் கொண்டார். மந்தமதியும் அதற்காக மகிழ்ந்து போனான்.

மந்தமதி செல்ல வேண்டிய இடம் வெகு தூரத்தில் இருந்தது. வழியில் ஒரு பாலைவனம் வேறு இருந்தது. அதனால் பயணத்தில் அதைக் கடக்கப் போதிய நீரைப் பீப்பாய்களிலும், உணவையும் எடுத்துக் கொண்டு தன் சரக்கு வண்டிகளுடன் புறப்பட்டான். வியாபாரத்தில் தான் போதிசத்வரை முந்திவிட்டதாக எண்ணித் திருப்தி அடைந்தான். அவன் சில நாட்கள் பயணம் செய்தபின் பாலைவனப்பகுதியை அடைந்தான்.

அப்போது அவன் எதிரே ஒரு அழகிய வண்டி வந்தது. அதில் உயர் ஜாதி எருதுகள் பூட்டப்பட்டிருந்தன. அதில் ராஜா போன்ற ஒருவன் கம்பீரமாக உட்கார்ந்திருந்தான். அந்த வண்டியின் முன்னும் பின்னும் காவல்காரர்கள் வாள்கள், கத்திகள், ஈட்டிகள் என்று கைகளில் ஏந்திக் கொண்டு வந்தார்கள். வண்டியின் சக்கரங்களில் சேறு அப்பி இருந்தது. எல்லோருடைய தலைகள் மீது தாமரை காம்புகளும் கைகளில் தாமரை மலர்களும் இருந்தன.

வண்டியில் அமர்ந்திருந்த கனவான் போலிருந்தவன் "அடேயப்பா! ஒரே மழை. அதோ தென்படும் காட்டில் நீர் நிறைந்துள்ளது. ஏரிகளில் நீர் நிறைந்து கிராமங்களுக்குள் புகுந்து விட்டது. நீங்கள் அங்கே போவதால் உங்கள் பீப்பாய்களிலுள்ள நீரைக் கொட்டிவிட்டு புதிதாக நீரை நிரப்பிக் கொள்ளுங்கள்." என்று கூறினான். அந்த வண்டியில் இருந்தவனும் அவனோடு வந்த ஆட்களும் மனிதர்களைக் கொன்று தின்னும் ராட்சஸர்கள். அவ்வழியே வருபவர்களைப் பேச்சால் மயக்கி
அவர்களைத் தாகத்தாலும் பசியாலும் தவிக்கவிட்டு இறந்து போகச் செய்து அந்த உடல்களைத் தின்று விடுவார்கள்.

இதை அறியாத மந்திமதி தன் வண்டிகளில் இருந்த பீப்பாய்களில் இருந்த தண்ணீரைக் கொட்டிக் காலி செய்தான். பிறகு பயணத்தைத் தொடரவே அந்த கனவான் காட்டிய காட்டை அடைய முடியவில்லை. அவன் போகப் போக அந்தக் காடும் நகர்ந்து போய்க் கொண்டே இருந்தது. எங்கும் மழை பெய்த தடயமும் இருக்கவில்லை. மந்தமதியும் அவனது ஆட்களும் தண்ணீருக்குத் தவித்து நாவறண்டு இறந்து போனார்கள். அவர்களது வண்டிகளை இழுத்து வந்த எருதுகளும் இறந்துபோயின. இறந்துபோன மனிதர்களையும் எருதுகளையும் ராட்சஸர்கள் தின்றனர். மிகுந்த எலும்புகளை அந்தப் பாலைவனத்திலேயே விட்டு விட்டுப் போனார்கள்.

மந்தமதி கிளம்பிப் போய் பதினைந்து நாட்களான பிறகே போதி சத்வர் தம் வண்டிகளில் சரக்குகளில் நீரையும் உணவையும் எடுத்துக் கொண்டு சென்றார். எல்லோரும் பாலைவனப் பகுதியை அடைந்த போது போதி சத்வர் தம் ஆட்களிடம் "இந்தப் பகுதி அபாயகரமானது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். இங்கு மனிதமாமிசத்தை விரும்பி உண்ணும் ராட்சஸர்களின் நடமாட்டம் உள்ளது எனவும் கேள்வி பட்டிருக்கிறேன். அவர்கள் பயணிகளிடம் நயமாகப் பேசி ஏமாற்றி அவர்களைத் தம் வலையில் சிக்க

வைப்பார்களாம். எனவே நீங்கள் என்னிடம் கேட்காமல் எதையும் செய்யக் கூடாது" என்று எச்சரித்தார். அவர்கள் கொஞ்ச துரத்தில் அழகிய வண்டியில் வரும் கனவான் போன்ற வனையும் அவனது ஆட்களையும் பார்த்தார்கள்.

அந்த கனவான் போலிருந்தவன் மந்தமதியிடம் கூறியது போலவே போதிசத்வரிடம் சொன்னான். போதிசத்தவரோ "நீங்கள் சொல்லி முடித்தாகிவிட்டதல்லவா? உங்கள் வழியே போங்கள். தண்ணீரைக் கண்ட பிறகே எங்கள் பீப்பாய்களிலுள்ள நீரைக் கொட்டிவிட்டுப் புதிதாக நிரப்பிக் கொள்வோம்" என்றார். அதைக் கேட்ட அந்த ராட்சஸர்கள் "உங்கள் சிரமத்தைக் குறைக்கலாம் என்று எண்ணியே இதைக் கூறினோம். இதன்படி நடப்பதும் நடக்காததும் உங்கள் இஷ்டம்" என்று சலிப்புடன் கூறினார்கள். போதி சத்வரோ அவர்கள் கூறியதை ஏற்காததால் எதுவும் பேச முடியாமல் மெளனமாகச் சென்றார்கள். போதிசத்வரும் "பார்த்தீர்களா? நாம் வந்த இவ்வளவு தூரத்தில் மழை பெய்யவே இல்லை. ஈரக் காற்றும் வீசவில்லை. ஆகாயத்தில் ஒரு மேகம் கூடத் தெண்படவில்லை.எனவே இவர்கள் சொன்னது எல்லாம் பொய் என்றும் இவர்கள் மனிதர்களைக் கொன்று தின்னும் ராட்சஸர்கள் என்றும் புரிந்து கொண்டேன். நம்மை ஏமாற்றப் பார்த்தார்கள். முடிய வில்லை. நமக்கு முன் இங்கு வந்த மந்தமதியையும் அவனது ஆட்களையும் ஏமாற்றிக் கொன்று விட்டார்கள் போலிருக்கிறது" என்றார்.

அவர்கள் கொஞ்சதூரம் போனதும் மனித எலும்புக் கூடுகளையும் எருதுகளின் எலும்புகளையும் கண்டார்கள். மந்தமதி கொண்டு சென்ற சரக்குகளைக் கண்டு அவர்கள் அவற்றையும் தம்மோடு எடுத்துப் போய் விற்று லாபம் அடைந்தார்கள். போதிசத்வரின் முன் யோசனையால் ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை

.

0 comments:

Post a Comment