மரியாதையைக் கெடுக்கும் தொழில்


வைசாலி நிகரத்தில் சோமகுப்தன் என்ற வணிகன் வசித்து வந்தான். குறுகிய காலத்தில் அதிக முதலீடு எதுவுமின்றி ஏராளமான பொருள் சம்பாதித்து கோடீஸ்வரனாக ஆசை கொண்டான். ஆனால் எத்தகைய தொழிலில் அவ்வாறு முதலீடே இல்லாமல் நிறையப் பணம் சம்பாதிக்கலாம் என்று அவன் யோசித்து வந்தான். ஒருநாள் நகரத்தில்
ஒரு பெரிய செல்வரின் வீட்டில் லட்சக்கணக்கானப் பணத்தைத் திருடர்கள் வீடு புகுந்து திருடிச் சென்றனர்.

திருட்டுத் தொழிலில் முதலீடு எதுவுமின்றி ஏராளமாகப் பணம் சம்பாதிக்க முடியும் என்ற உண்மை அவனுக்கு அப்போதுதான் விளங்கியது. உடனே அவன் தன்னுடைய வியாபாரத்தை விட்டு விட்டு, திருட்டுத் தொழிலில் எவ்வாறு ஈடுபடுவது என்று யோசிக்கத் தொடங்கினான். சில நாள்களுக்குப் பிறகு நகர எல்லையில் உள்ள ஒரு பாழடைந்த கோயிலில் சில திருடர்கள் வசிக்கின்றனர் என்று தெரிந்து கொண்டு, அவர்களுடன் பரிச்சயம் செய்து கொள்ள இரவு நேரங்களில் அங்கு சென்று உறங்க ஆரம்பித்தான்.

திடீரென அந்நியன் ஒருவன் இரவு நேரங்களில் தங்கள் மறைவிடத்தில் தூங்குவது கண்ட திருடர்கள் சோமகுப்தனை ஒரு அநாதை என்றும், தமது திருட்டுத் தொழிலுக்கு அவனையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் எண்ணினர். ஒருநாள் இரவில், திருடர்கள் இருவர் சாமான்கள் சுமக்கும் காவடிகள் கொண்டு வந்தனர். அவர்களில் குட்டையாக இருந்தவன் தூங்கிக் கொண்டிருந்த சோமனை எழுப்பி, “தம்பி! எங்களுடைய சகா ஒருவன் இன்று வரவில்லை. அவனுக்கு பதிலாக நீ எங்களுடன் திருட வருவாயா?” என்று கேட்டான்.

திருட்டுத் தொழிலில் அனுபவம் பெறுவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த சோமன் உடனே மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டான். உடனே இரு திருடர்களும் சோமனை ஒரு விவசாயி போல் வேடம் தரிக்கச் செய்தனர். பிறகு அவன் தலையில் வெல்லம் அடங்கிய ஒரு மூட்டையை ஏற்றி, கையில் ஒரு கழியையும் கொடுத்தனர்.

 திருட்டுத் தொழிலுக்கு இத்தனை ஒப்பனை தேவையா என்று சோமன் ஆச்சரியப்பட்டான். பிறகு அவர்கள் இருவரும் சோமனைத் தன்னுடன் அழைத்துச் சென்றனர். அவர்கள் நகரத்தின் பிரதானத் தெருக்களில் சென்றனர். செல்லும் வழியில் இருட்டில் படுத்திருந்த ஒரு நாயின் வாலைத் தெரியாமல் சோமன் மிதித்துவிட, நாய் பயங்கரமாகக் குரைத்தது. குரைப்பு சத்தத்தைக் கேட்டதுமே, சோமன் மிகவும் பயந்து போனான். அவன் தலையிலிருந்த மூட்டையிலிருந்து சிறிது வெல்லம் தரையில் விழுந்து சிதற, அதை நாய் பாய்ந்து சென்று தின்னத் தொடங்கி, தான் குரைப்பதை நிறுத்தியது.

“தம்பி! நீ திருடப் போகிறாய் என்பதை நினைவுபடுத்திக் கொண்டு எச்சரிக்கையாக நடந்து செல்ல வேண்டும். இப்போது இந்த சத்தத்தைக் கேட்டு யாராவது காவலன் வந்தால் ஏதாவது உளறி விடாதே! வாயை மூடிக் கொண்டிரு!” என்று உயரமான திருடன் எச்சரித்தான். அவன் சொல்லி முடிப்பதற்குள், அங்கு குதிரை மீது சவாரி செய்தவாறு ஒரு காவலன் தோன்றினான். அவர்களைக் கண்டதும், “யாரடா நீங்கள்? இந்த இரவு நேரத்தில் எதற்கு தெருக்களில் திரிந்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று உறுமினான்.

அவனைக் கண்டதுமே சோமனின் சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. பயத்தில் கை, கால்கள் நடுங்கின. உடனே, குட்டையான திருடன், “ஐயா! நாங்கள் பக்கத்து கிராமத்து வியாபாரிகள். வெல்லம் விற்பதற்காக நகரத்திற்கு வந்தோம். வியாபாரம் முடிந்து இரவு தங்குவதற்காக விடுதியை நோக்கிச் செல்லுகையில், வழி தவறிவிட்டோம். சத்திரத்திற்குச் செல்லும் வழியை தயவு செய்து காட்டுவீர்களா?” என்று அப்பாவி போல் நடித்தான்.

“ஓகோ! நீங்கள் கிராமத்து ஆசாமிகளா? பாவம்! நாள் முழுதும் மூட்டையைத் தலையில் ஏற்றித் தெருத் தெருவாக அலைந்து களைத்துஇருப்பீர்கள். அதிருக்கட்டும்! இப்படி நாள் முழுதும் உழைத்து, இவன் எப்படி தொந்தியும், தொப்பையுமாக இருக்கிறான்?” என்று சோமனைக் காட்டிக் கேட்டான். சோமனுக்கு பயத்தில் உயிரே போய் விடும் போலிருந்தது. தான் இன்று சிக்கிக் கொள்வோம் என்று நடுங்கினான்.

அதற்குள் உயரமான திருடன் சாமர்த்தியமாக, “ஐயா! நாங்கள் சகோதரர்கள். இவன் என் தம்பி பீமன்! சரியான சோம்பேறி! உழைக்காமல் உண்டு பெருச்சாளி போல் இருக்கிறான். இன்றுதான் முதன் முதலாக மூட்டை தூக்கி வியாபாரம் செய்ய வந்திருக்கிறான்!” என்றான். அதைக் கேட்டு பலமாகச் சிரித்த காவலன், அவர்களுக்கு சத்திரம் செல்லும் வழியைக் காட்டி விட்டு, “சரி! நீங்கள் நேராக அங்கு சென்று விடுங்கள்! ஒரு மணி நேரம் சென்றபின், நான் அங்கு வந்து நீங்கள் இருக்கிறீர்களா என்று சோதனை செய்வேன்!” என்று எச்சரித்துவிட்டுக் கிளம்பினான்.

சோமனுக்குச் சென்ற உயிர் மீண்டது. ஆயினும், திருட்டுத் தொழில் மீது அக்கணமே வெறுப்பு ஏற்பட்டு விட்டது. ‘சே! ஒவ்வொரு நொடியும் பயப்பட வேண்டி இருக்கிறது. கண்டவரிடமெல்லாம் பொய் பேச வேண்டியிருக்கிறது. காவலர்கள் கையில் மட்டும் அகப்பட்டால், நம்மைப் பின்னி எடுத்து விடுவார்கள். இப்படி பயந்து பயந்து அடி, உதை வாங்கிக் கொண்டு இந்தத் தொழிலை செய்ய வேண்டுமா?’ என்று அவனுக்குத் தோன்றியது.

மற்ற இருவரும் அவனை ஒரு மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். அது ஒரு வைர வியாபாரியின் வீடு. சோமனை வாயிலில் காவலுக்கு நிறுத்தி விட்டு, அவர்கள் இருவரும் உள்ளே புகுந்தனர். உடனே, தப்பித்தோம் பிழைத்தோம் என்று சோமன் தன் வீட்டை நோக்கிப் புறப்பட்டான். சிறிது தூரம் சென்றதும், தான் விட்டு வந்த மாளிகை அருகே ஒரே கலவரமும், ஆரவாரமும் கேட்டு, திடுக்கிட்டுத் திரும்பினான்.

தன்னுடன் வந்த திருடர்களில் ஒருவன் மாட்டிக் கொண்டதையும், தப்பியோடும் மற்றவனை காவலர்கள் துரத்துவதையும் கண்டு, இருட்டான ஒரு சந்தில் ஓடி ஒளிந்து கொண்டான். சற்று நேரத்தில், காவலர்கள் இரண்டு பேரையும் கைகளைக் கயிற்றினால் கட்டித் தெருவில் இழுத்துச் சென்றனர். ‘கடவுளே! இந்நேரம் நான் சிக்கியிருந்தால், என்னையும் அல்லவா சவுக்கால் அடித்து இழுத்துச் சென்றிருப்பார்கள்! என்ன தவறு செய்ய இருந்தேன்! இனி, திருடுவதைப் பற்றி கனவில் கூட நினைக்கக் கூடாது!’ என்று எண்ணியவாறு வீட்டை அடைந்தான்.

மறுநாள் அவன் மனைவி, “நேற்றிரவு, இரண்டு திருடர்களைக் காவலர்கள் துரத்திப் பிடித்து இழுத்துச் சென்றார்கள். தப்பித்து ஓட முயற்சித்த இருவரையும் காவலர்கள் கொன்று விட்டார்கள்!” என்றாள். சோமன் மனத்திற்குள் கடவுளுக்கு நன்றி கூறிவிட்டு, “கடவுளே! இனி, நான் அந்த மோசமான தொழிலைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்க மாட்டேன். கிடைத்தது போதும் என்று இப்போது செய்யும் வியாபாரத்தையே தொடர்ந்து செய்வேன்!” என்று பிரார்த்தனை செய்து கொண்டான்.

0 comments:

Post a Comment