நண்பனுக்கு உதவி


விஷ்ணுபுரத்தில் வசித்து வந்த செல்வரான சுந்தரம் தனக்கென்று சில கொள்கைகள் வைத்திருந்தார். அவற்றில் ஒன்று வெள்ளிக்கிழமைகளில் அவர் யாருக்கும் ஒரு பைசாகூட தானமாகவோ, கடனாகவோ தரமாட்டார். யாரிடமிருந்தும் அன்று தானமாகவோ, கடனாகவோ அல்லது காசோ வாங்கமாட்டார்.

அவருடைய நெடுநாளைய நண்பரான நடேசனுக்கு ஒருமுறை வியாபாரத்தில் பெரிய நஷ்டம் ஏற்பட்டு விட்டது. தனது நண்பரான சுந்தரத்திடம் கூட கை நீட்டிப் பண உதவி பெறுவதைக் கேவலமாக நினைத்ததால், அவர் சுந்தரத்தை அணுகவேயில்லை. ஒருநாள், அந்த கிராமத்திற்கு சுதர்சனம் என்ற யோகி வருகை தந்தார். தன்னுடைய தெய்வீக சக்தியால், பலருடைய வாழ்க்கைப் பிரச்சினைகளை சீர்செய்யும் பரிகாரங்களைக் கூறி வந்தார்.

கிராமத்து மக்கள் பலரும் அவரிடம் அணிஅணியாகச் சென்று தங்கள் குறைகளைக் கூறி அவற்றுக்குப் பரிகாரம் வேண்டினர். நடேசனும் அவரைக் காண தன் நண்பரான சுந்தரத்தையும் அழைத்துச் சென்றார். அவருடைய வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தையும், மீண்டும் வியாபாரத்தை நிலைநிறுத்தத் தேவையான பரிகாரத்தைப் பற்றியும் நடேசன் யோகியிடம் கேட்டார்.

அதற்கு யோகி, “உன்னுடைய கஷ்டங்கள் நீங்கி, மீண்டும் உன் வியாபாரம் செழிக்க வேண்டுமானால், அதற்கு ஓர் எளிய பரிகாரம் உண்டு. நூறு பொற்காசுகள் செலவழித்து, நீ உன் இஷ்ட தெய்வத்தின் வெண்கலச் சிலை ஒன்றை வெள்ளிக் கிழமைஅன்று வாங்கி, ஒருநாள் உன் பூஜை அறையில் அதை வைத்துப் பூஜை செய்ய வேண்டும். மறுநாள் அதை வேறு யாருக்காவது வாங்கின விலையை விட அதிக விலையில் விற்று விட வேண்டும். அப்படிச் செய்தால், எதிர்காலத்தில் உன் வியாபாரத்தில் வாங்கிய பொருட்களை அதிக விலைக்கு விற்று லாபம் பெறுவாய்!” என்றார்.

அதற்கு சுந்தரம், “சுவாமிகளே! நீங்கள் சொல்லும் பரிகாரம் நடைமுறைக்கு ஒத்து வராது. வெண்கலச் சிலையின் விலை இரண்டு பொற்காசுகள் மட்டுமே! அதை நூறு பொற்காசு கொடுத்து வாங்கச் சொல்கிறீர்கள். அப்படியே என் நண்பர் மிக அதிக விலை கொடுத்து வாங்கினாலும், அதை யாரிடம் அவர் லாபத்திற்கு விற்க முடியும்?” என்றார்.

“ஏன் வாங்க மாட்டார்கள்? ஒருவேளை நீங்களே கூட அதை வாங்கலாம்” என்றார் யோகி.
 
 “அது என்னால் முடியாது! வேண்டுமானால் அவருக்கு தானமாகவோ, கடனாகவோ பண உதவி செய்வேன். ஆனால், ஒரு வெண்கலச் சிலைக்கு என்னால் அத்தனை விலை தர முடியாது!” என்றார் சுந்தரம். நண்பனின் பேச்சைக் கேட்டு நம்பிக்கையிழந்த நடேசன் அங்கிருந்து மௌனமாகச் சென்றுவிட்டார்.

ஒருநாள், சுந்தரமும், அவர் மனைவி சாருமதியும் நண்பகல் வேளையில் தன் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டுஇருந்தனர். அப்போது சுந்தரத்தைப் பார்க்க ஒருவன் வந்தான். தன்னை ஒரு வியாபாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு, அவன், “ஊர் ஊராகச் சென்று அற்புதமான கலைப்பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருகிறேன். இன்றுதான் ஒரு வண்டி நிறைய பொருட்களை வாங்கி இந்தக் கிராமத்திற்கு வந்தேன். பல பொருட்களை விற்று விட்டேன். விற்பனையில் மும்முரமாக இருந்ததால் இதுவரை ஒன்றும் சாப்பிடவில்லை. இங்கு ஏதாவது சிற்றுண்டிச் சாலை உள்ளதா?” என்றான்.

அதற்கு சுந்தரம். “நீ வெளி ஊர்க்காரன்! இன்று எங்கள் கிராமத்திற்கு என் வீடு தேடி வந்திருக்கிறாய். உன்னை என் விருந்தாளியாக பாவித்து, உனக்கு நானே உணவு அளிக்கிறேன்”  என்றார். சாருமதி அவனுக்கு உணவளித்தாள். உணவு உண்டபின் அவளுக்கு நன்றி கூறிய அந்த வியாபாரி, தன் விற்பனைப் பொருட்களை அவளிடம் காட்டினான். அவற்றுள், புல்லாங்குழல் இசைக்கும் கிருஷ்ணரின் வெண்கலச் சிலை அவளை மிகவும் கவர்ந்தது. ஆனால் அதன் விலை நூற்றுப் பத்து வராகன் என்றதும் அவள் திடுக்கிட்டாள்.

“என்ன இந்த விலை சொல்கிறாய்? இதன் விலை இரண்டு வராகனுக்கு மேல் இருக்காதே!” என்றாள். “அம்மா! இது சாட்சாத் மீரா பூஜை செய்த கிருஷ்ணர் சிலை. இதை அவள் யாருக்கோ தானமாகக் கொடுத்து விட்டாள். அன்று முதல் வாங்கியவர் குடும்பத்திலேயே இருந்து வந்தது. இதை அந்தக் குடும்பத்தினரிடமிருந்து வாங்கி இருக்கிறேன். ராஜஸ்தானில் இருந்து இதைக் கொண்டு வந்து இருக்கிறேன். அதனால்தான் இதன் மதிப்பும், விலையும் அதிகம்!” என்றான்.

“இத்தனை விலை கொடுத்து வாங்க என் கணவர் சம்மதிக்க மாட்டார். தவிர, இன்று வெள்ளிக்கிழமை! அவர் ஒரு பைசா கூட இன்று செலவழிக்கவும் மாட்டார். யாரிடமிருந்து கை நீட்டி வாங்கவும் மாட்டார்!” என்றாள். அதற்குள் சுந்தரம், பக்கத்து வீட்டில் இருந்து தன்னுடைய வீடு திரும்பினார். கிருஷ்ணருடைய வெண்கலச் சிலையை கண்டதும் அவர் முகம் பிரகாசமடைந்தது.

“அடடா! இன்று வெள்ளிக்கிழமை! அதனால் நான் பணம் கொடுத்து எதையும் வாங்க மாட்டேன்!” என்ற சுந்தரம் ஒரு கணம் யோசித்துவிட்டு, பக்கத்து வீட்டு அருணாசலத்திடம் சென்று நூறு வராகன் கடன் வாங்கினார். திரும்பி வந்து அந்த விக்கிரகத்தை விலைக்கு வாங்கி, நடேசனிடம் கொடுத்து, “நீ இதை உன் பூஜை அறையில் இப்போதே வைத்து பூஜை செய்வாய்! நாளைக்கு இதை லாபத்திற்கு விற்று விடலாம்!” என்றார்.

“நாளைக்கு யார் வாங்குவார்கள்?” என்று கேட்ட நடேசனை, “நீ இப்போது இதை எடுத்துச் செல்! நாளை பற்றி பிறகு பேசலாம்!” என்று அனுப்பி வைத்தார். மறுநாள் சுந்தரம் தானே நடேசன் வீட்டிற்குச் சென்று நூற்றுப் பத்து வராகன் கொடுத்து, கிருஷ்ணர் சிலையை விலைக்கு வாங்கிக் கொண்டார்.

அன்றிரவு சாருமதி தன் கணவரிடம், “நீங்கள் உங்கள் கொள்கையில் மிக உறுதியானவர் என்று நினைத்தேன். நண்பருக்காக உங்கள் கொள்கையை காற்றில் பறக்க விட்டீர்களே! வெள்ளிக் கிழமையன்று, பக்கத்து வீட்டுக்காரரிடம் கடன் வாங்கி விட்டீர்கள்” என்றாள்.

“இல்லை, சாருமதி! என் கொள்கையிலிருந்து நான் தவறவில்லை. எனக்காகத்தான் நான் பிறரிடம் வெள்ளிக்கிழமையன்று கடன் வாங்கக் கூடாதே தவிர, மற்றவர்களுக்காக வாங்கியதில் தவறில்லை.  ஆகையால் நான் கொள்கையை விடவில்லை என்றே சொல்லலாம்” என்றார்.

இதைக் கேட்ட சாருமதியும், “ஆமாம் நீங்கள் கூறுவது சரிதான். உங்களைப் போன்ற நல்லவரிடம் இருந்து நடேசனுக்குப் பணம் கிடைத்ததால் கண்டிப்பாக அவனது செல்வம் பெருகும். அவரது நிலைமையிலும் மாற்றம் ஏற்படும்” என்று கூறினாள். சாருமதி கூறியபடியே, நடேசனின் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. வியாபாரம் மீண்டும் செழித்து ஏராளமான லாபம் சம்பாதித்தார்.

0 comments:

Post a Comment