யார் செய்த குற்றம்?


செல்வரான தர்மராஜனின் மூன்றாவது மகனான முரளி, சிறு வயதிலிருந்தே படிக்காமல் ஊரைச் சுற்றித் திரிந்தான். தவறான நண்பர்களின் சேர்க்கையால் பள்ளியிலிருந்து விலகி எப்போதும் நேரத்தை வீணாகக் கழித்தான். பணத்தைத் தண்ணீராக வாரியிறைத்துச் செலவு செய்தான். அவன் பத்தாயிரம் ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கி இருந்ததால் கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பித் தருமாறு நச்சரித்தனர். ஆனால் முரளியிடமிருந்து சல்லிக்காசு கூட பெயரவில்லை.

ஒருநாள் கடன் கொடுத்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தர்மராஜனின் வீட்டிற்கே வந்து, அவரிடம் பணம் கேட்டனர். முரளியின் அண்ணன்மார்கள் தங்கள் தம்பியின் நடத்தையால் அவமானமும் கோபமும் அடைந்து, கடன்காரர்களிடம் “இன்று முதல், இவனுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. அவனிடம் கடனை வசூலிப்பது உங்கள் சாமர்த்தியம்!” என்று கூறிவிட்டனர். “அப்படியா? உங்கள் தம்பி இன்னும் இரண்டு நாட்களுக்குள் கடனைத் திருப்பித் தராவிட்டால் அவனைப் பஞ்சாயத்தில் ஒப்படைத்து சிறையில் அடைக்கச் செய்வோம்!” என்று எச்சரித்து விட்டுச் சென்றனர்.

விஷயம் இந்த அளவிற்கு விபரீதமாகும் என்று எதிர்பாராத முரளி தன் தந்தையிடமும், சகோதரர்களிடமும், “இந்த முறை மட்டும் பணம் கொடுத்து எனக்கு உதவுங்கள். இனி, நான் கடன் வாங்க மாட்டேன். உழைத்துப் பிழைப்பேன்!” என்று கெஞ்சினான். ஆனால் அவன் தந்தை தர்மராஜன் கூட மனம் இளகவில்லை. “நீ வீட்டை விட்டு வெளியேறு! உழைத்து சம்பாதித்து கடனைத் தீர்!” என்று சொல்லிவிட்டார்.

மனமுடைந்த முரளி தனது நண்பன் கேசவனைத் தேடிச் சென்றான். அவனிடம் பண உதவி கேட்டுக் கெஞ்சிய போது, கேசவன், “முரளி! இப்போது என்னிடம் பணம் இல்லை. ஆனால் பணம் சம்பாதிக்க ஒரு சுலபமான வழி சொல்லித் தருகிறேன். இந்த ஊரிலேயே பெரியநகை வியாபாரி ராமநாதனின் வீட்டிற்கு இன்று இரவு சென்று கொள்ளையடிப்போம். கிடைக்கும் பணத்தில், உன் கடனை அடைத்து விடலாம்” என்றான்.
 அவன் யோசனையைக் கேட்டு திடுக்கிட்ட முரளி, “போதுமப்பா! நான் இதுநாள் வரை தவறான வழிகளில் ஈடுபட்டிருந்தேன். இனி உழைத்து சம்பாதிப்பது என்ற முடிவிற்கு வந்து விட்டேன்” என்றான். அதைக் கேட்டு சிரித்த கேசவன், “நாள் முழுதும் உழைத்தாலும் உனக்கு ஐம்பது ரூபாய் கூடக் கிடைக்காது. அதை வைத்து நீ எந்தக் காலத்தில் கடன் அடைப்பாய்? பேசாமல் நான் சொல்வதைக் கேள்! இன்றிரவு, அம்மன் கோயிலில் தங்கு! அர்ச்சகர் தரும் பிரசாதத்தை சாப்பிடு! பிறகு, அவர் உபந்நியாசம் நிகழ்த்துவார். அதைக் கேட்டுக் கொண்டிரு. நான் உன்னை அங்கு சந்தித்து, அழைத்துப் போகிறேன். பிறகு இருவருமாகத் திருடப் போகலாம்!” என்றான்.

“சரிதான்! அகப்பட்டுக் கொண்டால் என்ன ஆகும்?” என்று முரளி கேட்டான். “சிறைவாசம் கிடைக்கும்! நீ இன்னும் இரண்டு நாள்களில் கடனை அடைக்காவிட்டாலும் சிறைக்குச் செல்ல நேரிடும். அதை நாளையில் இருந்தே நீ அனுபவிக்கப் போகிறாய். தவிர, திருடினால் அகப்பட்டுக் கொள்வோம் என்று ஏன் நினைக்கிறாய்? நான் இதுவரை நான்கு முறை திருடியிருக்கிறேன். ஒரு முறையும் சிக்கிக் கொள்ளவில்லை. பயப்படாமல் வா!” என்று சொல்லி அனுப்பி விட்டான்.

முரளிக்கு கேசவனின் யோசனை சிறிதும் கூடப் பிடிக்கவில்லை. ஆனால் வேறு வழியின்றி அம்மன் கோயிலில்  தங்கினான். இரவில், அர்ச்சகர் தந்த பிரசாதத்தைத் தின்று பசியாறினான். பிறகு, அர்ச்சகர் ஜெகன்னாத சாஸ்திரி உபந்நியாசம் செய்யத் தொடங்கினார். அன்று அவர் கிருஷ்ணரின் கீதையிலிருந்து சில பகுதிகளை பொருள்பட உபதேசம் செய்தார். நமக்குள் உறையும் கடவுள் தான் நம்மை இயக்குகிறார் என்றார். அதைக் கேட்டதும் முரளிக்குத் தெளிவு பிறந்தது.

 மேற்கொண்டு அவருடைய விளக்கத்தைக் கேட்காமல், ‘ஆகா... எல்லாம் இறைவன் செயலே. எனது நண்பன் என்னைத் திருடச் சொன்னதும் இறைவன் செயல்தான்! ஆகவே, திருடுவதில் தவறில்லை’ என நினைத்தான். இவ்வாறு சிந்தித்து மனம் தெளிந்த முரளி, கேசவன் கோயிலுக்கு வந்ததும் அவனுடன் எந்த விதத் தயக்கமுமின்றி உடனே திருடக் கிளம்பினான். இருவரும் திருட்டுத்தனமாக மரத்திலேறி, மாடியில் இறங்கி ராமநாதனின் பங்களாவில் நுழைந்து அவருடைய படுக்கையறையை அடைந்தனர். தலையணையின் கீழிருந்து பீரோவின் சாவிக் கொத்தை எடுத்த கேசவன் பீரோவைத் திறந்தான். இருவரும் ரூபாய் நோட்டுகளை அள்ளிக் கொண்டனர்.

திடீரென அந்த சமயம் கேசவன் தும்மவும், அந்த சத்தம் கேட்டு எழுந்த ராமநாதன் அவர்கள் இருவரையும் பார்த்து விட்டுத் ‘திருடன், திருடன்!’ என்று கத்தினார். உடனே, காவல்காரன் ஓடி வந்து இருவரையும் கையும், களவுமாகப் பிடித்து புரட்டிப் புரட்டி அடித்தான். உடனே ராமநாதனின் காலில் விழுந்த கேசவன் தான் பெரிய இடத்துப் பிள்ளையென்றும், தெரியாமல் தவறு செய்து விட்டதாகவும், தன்னை மன்னிக்கும்படியும் கெஞ்சினான்.

அவர்கள் இருவரையும் விசாரித்ததில் அவர்கள் கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்து கொண்ட ராமநாதன்அவர்களை மன்னித்து விட விரும்பினார். ஆனால் முரளி மட்டும் வீராப்புடன் “ஐயா! திருடுவது தவறு என்று எனக்குத் தெரியும். ஆனால் சற்றுமுன் கோயிலில் சாஸ்திரி கீதையைப் பற்றி உரை நிகழ்த்தினார். எல்லாம் இறைவன் செயல் என்றும், அவனே யாவற்றையும் செய்கிறான், செய்விக்கிறான் என்றும் கூறினார். தவிர, அனைத்து மனிதர்களுக்குள்ளும் இறைவன் உறைகிறார் என்றார்.

அப்படியானால், கேசவன் என்னைத் திருட அழைத்தது, அவனுள் இருக்கும் இறைவனின் கட்டளையே என்று நினைத்தேன். இது குற்றம் எனில், அது இறைவன் செய்த குற்றமாகும். ஆகவே என்னை அடித்தது தவறு. இறைவனை நீங்கள் அடித்திருக்க வேண்டும்!” என்றான். அவனுடைய விளக்கத்தைக் கேட்ட ராமநாதன் திகைத்துப் போனார்.

மறுநாள் காலை, இருவருடைய பெற்றோரையும், கோயில் அர்ச்சகர் சாஸ்திரியையும் தன் வீட்டிற்கு வரவழைத்தார். அவர்களுடைய அடாத செயலை தான் மன்னித்து விட்டதாக பெற்றோர்களிடம் கூறிய பிறகு சாஸ்திரியை நோக்கி, “உங்களுடைய கீதை சொற்பொழிவால் நிகழ்ந்த விபரீதத்தைப் பார்த்தீர்களா?” என்று நடந்தவற்றை சுருக்கமாகக் கூறினார்.  அதற்கு சாஸ்திரி, “ஐயா! கீதையின் விளக்கத்தை இவன் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இறைவன் நம்முள் உறைகிறான் என்று நான் சொன்னதை முரளி அப்படியே நம்பினான். கேசவன் திருட அழைத்த போது கேசவனுள் உறையும் இறைவன் கட்டளை அது என்று நம்பினான். திருட முயன்றபோதும், இறைவனே திருடுகிறார் என்றும், தான் திருடவில்லை என்றும் நினைத்தான்.

இதுவரை அவன் நினைத்தது எல்லாம் சரிதான்! ஆனால், உங்கள் காவல்காரன் அவனை அடித்தபோது அவன் தன்னை அடிக்கவில்லை; தன்னுள்ளிருக்கும் இறைவனேயே அவன் அடித்தான் என்றல்லவா எண்ணியிருக்க வேண்டும்? இப்போது அவன் ஏன் இறைவனைப் பிரித்துப் பேச வேண்டும்? அவன் தன்னுள் இருந்த இறைவனை அடித்ததாக நினைத்துத் தன்னுள் உறையும் இறைவனையே சிறையில் அடைத்திருக்கிறார்கள் என்று சும்மாயிருக்கட்டும்!” என்றார்.

“என்னப்பா? சிறைக்குச் செல்லத் தயாரா?” என்று ராமநாதன் அவனிடம் கேட்டதும், முரளிக்குத் தன் தவறு புரிந்தது. தான் கீதையின் விளக்கத்தை அரைகுறையாகப் புரிந்து கொண்டு தவறு செய்ததற்காக அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டான்.

தர்மராஜனுக்கும் தன் மகன் முரளியை கண்டு மனம் இளகியது. இந்த அனுபவத்திற்குப் பின் அவன் மனம் திருந்தி விடுவான் என்று தோன்றியது. அதனால் அவனை மீண்டும் வீட்டிற்குள் சேர்த்துக் கொண்டு, அவன் பட்ட கடனையும் அடைத்து விட்டார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, முரளியும் மனம் திருந்தி நேர்மையாக உழைத்து நன்றாகச் சம்பாதிக்கத் தொடங்கினான்.

0 comments:

Post a Comment

Flag Counter