அவரவர் கஷ்டம் அவரவருக்குத்தான் தெரியும்!

சுகுமாரனும், மனோகரனும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தனர். இருவரும் இடைவேளைகளில் பக்கத்திலுள்ள சிற்றுண்டிச் சாலைக்குச் செல்வது வழக்கம். அங்கே மனோகரன் விரும்பியதெல்லாம் வாங்கி உண்ண, சுகுமாரன் மட்டும் சாப்பிடாமல் உட்கார்ந்திருப்பான். “நீ ஏன் எதுவுமே சாப்பிடுவதில்லை?” என்று மனோகரன் கேட்டால், “நான்தான் வீட்டில் நன்றாக சாப்பிட்டு விட்டு வருகிறேனே!” என்பான்.

அதற்கு மனோகரன், “பரவாயில்லை! நீ மிக அதிருஷ்டசாலி! உன் மனைவி நன்றாக சமைத்துப் போடுகிறாள். என்னைப் பார்! என் மனைவி வீட்டில் ஒன்றுமே சமைப்பதில்லை!” என்று மனோகரன் கூறுவது வழக்கம். ஆனால் மனோகரன் சுகுமாரனைப் பார்த்து தினமும் அதிருஷ்டசாலி என்று புகழும்போது, சுகுமாரன் “அவரவர்கள் கஷ்டம் அவரவர்களுக்குத்தான் தெரியும்!” என்பான். இது மனோகரனுக்குப் புதிராக இருந்தது.

ஒருநாள் சுகுமாரன் தன் நண்பனை தன் பிறந்த தினத்தையொட்டி வீட்டிற்கு சாப்பிட அழைத்தான். மனோகரனை உபசரித்த சுகுமாரனின் மனைவி, இருவருக்கும் சுடச்சுட வடைகள் பறிமாறினாள். அந்த வடையைப் பிய்க்கவே மனோகரன் மிகவும் சிரமப்பட்டான். வடை பாறாங்கல் போல் கடினமாக இருந்தது. எப்படியோ, ஒருவாறு அவன் வடைகளை விழுங்கினான்.

கடல் தண்ணீரில் செய்தது போல, வடை முழுவதும் ஒரே உப்பு. அவள் செய்த லட்டு இனிப்பே இல்லாமல், களிமண் போல் இருந்தது. பழக்கப்பட்ட சுகுமரான் அவற்றை எளிதாகவே விழுங்கினான். இருவரும் வெளியில் வந்தவுடன், சுகுமாரன் தன் நண்பனை வடைகள் எப்படியிருந்தன என்று கேட்க, மனோகரன், “அடிக்கடி நீ சொல்வாயே! அவரவர்கள் கஷ்டம் அவரவர்களுக்குத்தான் தெரியும் என்று...அதன் அர்த்தம் இன்றுதான் புரிந்தது!” என்றான்.

0 comments:

Post a Comment

Flag Counter