அவசர புத்தியால் ஏற்பட்ட இழப்பு!

 
ராமுவும், சுப்புவும் நண்பர்கள். ஒரே தெருவில் அடுத்தடுத்த வீடுகளில் வசிப்பவர்கள். கிராமத்தில் வசித்த அவர்கள் இருவரும் தினமும் நகரத்திற்குச் சென்று வற்றல் விற்று வந்தார்கள். இருவருக்கும் மிகவும் சொற்பமான பணமே கிடைத்து வந்தது. ஆகையால் அவர்களுடைய மனைவிமார்கள் அவர்களை நச்சரித்து வந்தனர்.

ஒருநாள், ராமுவின் மனைவி லட்சுமி, சுப்புவின் மனைவி வள்ளியைப் பார்த்து “எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. என் வீட்டுக்காரர் சம்பாதிப்பது அரை வயிற்றுக் கஞ்சிக்குக் கூடப் போதவில்லை” என்றாள்.
அதற்கு வள்ளி, “என்ன செய்வது? நம் இருவரின் தலையெழுத்து, கையாலாகாத கணவன்களாக நமக்கு வந்து வாய்த்தார்கள்” என்று ஒத்து ஊதினாள். இருவரும் அடிக்கடி இவ்வாறு தங்கள் கணவன்மார்களின் தலைகளை உருட்டுவதுண்டு.

ஒருநாள், பக்கத்து கிராமத்து ஜமீன்தார் அவர்களுடைய கிராமத்துக் கோயிலுக்கு வருகை தரப்போகிறார் என்றும், அன்றிரவு கிராமத்தில் மணியக்காரரின் வீட்டில் தங்கப் போகிறார் என்றும் ஒரு செய்தி தெரிய வந்தது.
‘ஆகா! என் வீட்டுக்காரர் மட்டும் ஜமீன்தாரைச் சென்று பார்த்தால் அவருக்கு ஒரு வேலை கிடைத்து விடும்,’ என்று லட்சுமியும் வள்ளியும் நினைத்தனர். இருவரும் மறுநாள் இரவு மணியக்காரர் வீட்டிற்குச் சென்று ஜமீன்தாரை சந்திக்கும்படி தங்களுடைய கணவன்மார்களிடம் வேண்டினர்.

ராமு, “லட்சுமி! வற்றல் விற்றுவிட்டு வீடு திரும்ப இரவு ஆகி விடும். பிறகு ஜமீன்தாரை சந்திக்க முடியாது. அதனால், நான் நாளைக்கு நகரத்திற்குச் செல்லப் போவதில்லை!” என்றான்.  சுப்பு தன் மனைவி வள்ளியிடம், “நான் சிறிது விற்று விட்டு, மாலையில் திரும்பி விடுவேன். இரவில் ஜமீன்தாரை சந்திப்பேன்!” என்றான். மறுநாள் சுப்பு மட்டும் விற்பனைக்குச் செல்ல, ராமு வீட்டிலேயே தங்கி விட்டான். மதிய நேரத்திற்குள் தன் விற்பனையை முடித்து விட்டு, சுப்பு விரைவாக வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென மழை பிடித்துக் கொண்டது. ஆகையால் ஒரு பாழடைந்த அம்மன் கோயிலுக்குள் சுப்பு புகுந்தான். அங்கிருந்த அம்மனை பக்தியுடன் கும்பிட்ட சுப்புவை திடீரென ஒரு இனிமையான குரல், “சுப்பு! நலமாக இருக்கிறாயா?” என்று கேட்டது.

திடுக்கிட்ட சுப்பு “தாயே! நீ யார்? இந்தக் கோயிலின் அம்மனா?” என்று கேட்டான். அதற்கு அந்தக் குரல், “நீண்ட நாள்களாக இந்தக் கோயிலில் அம்மனே இல்லை. நான் பல கோயில்களைப் பார்வையிடும் அம்மன். உனது பக்தி எனக்குப் பிடித்திருந்தது. உனக்கு ஒரு வரம் தர விரும்புகிறேன். என்ன வேண்டும்என்று கேள்!” என்றது.
“தாயே! நீ இவ்வாறு என்னைக் கேட்டதே போதும்! நான் இன்று இரவு ஜமீன்தாரை சந்திக்க வேண்டும். இந்த மழையில், காட்டுப்பாதையில் என்னால் செல்ல முடியவில்லை. நான் நேரத்தில் சென்றடைய நீதான் அருள் புரியவேண்டும்!” என்றான்.

“உனக்கு ஒரு இடைஞ்சலும் ஏற்படாது. நீ வீட்டிற்குப் போ!” என்று குரல் ஒலித்தது. என்ன அதிசயம்! சற்று நேரத்தில் மழை நின்று விட, சுப்பு அவசர அவசரமாக தன் கிராமத்தை நோக்கி விரைந்தான். “என்ன சுப்பு? ஏன் இத்தனை தாமதம்?” என்று ராமு கேட்க, சுப்பு நடந்தவற்றைக் கூறினான்.

அவர்கள் இருவருடைய உரையாடலை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்த ராமுவின் மனைவிக்கு மனத்தில் திடீரென ஒரு யோசனை தோன்றியது. அந்த யோசனைப்படி நடந்தால் தான் வாழ்வில் ஏற்படப் போகும் மலர்ச்சியை கற்பனை செய்து ஒருக்கணம் மௌனமாக இருந்தாள்.

பிறகு, திடீரென  பெரிதாக கத்தி தன் கணவனை அழைத்து, “ஐயோ! என்னை உடனே நகரத்து மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்!” என்று நெஞ்சுவலியால் துடிதுடித்துக் கதறினாள். பதறிப்போன ராமு உடனே ஒரு வண்டியை ஏற்பாடு செய்து லட்சுமியை அதில் படுக்க வைத்து, நகரம் நோக்கிச் செல்லத் தயார் ஆனான். சுப்புவும், வள்ளியும் அவர்களை அணுகி, “நாங்களும் துணையாக வருகிறோம்!” என்றனர்.

ஆனால் லட்சுமி, “வேண்டாம் நீங்கள் ஜமீன்தாரை சந்தித்து வேலை கேளுங்கள்! நான் தனியாக சமாளித்துக் கொள்வேன்!” என்று கூறி விட்டாள். சுப்பு மட்டும் தனியாக ஜமீன்தாரை சந்திக்கச் செல்ல, ராமு லட்சுமியுடன் மருத்துவரை நோக்கி விரைந்தான். வண்டி பாழடைந்த கோயிலின் அருகே சென்று கொண்டிருக்கும் போது, திடீரென லட்சுமி வண்டியை நிறுத்தச் சொன்னாள். வண்டிக்காரனுக்குப் பேசிய தொகை முழுதும் கொடுத்து, அங்கேயே இறங்கி விட்டாள். ராமு மிகவும் ஆச்சரியப்பட்டவாறு “ஏன் லட்சுமி இங்கே இறங்கிவிட்டாய்? உன் நெஞ்சு வலி எப்படி இருக்கிறது?” என்று கேட்டான்.
 “எனக்கு நெஞ்சு வலியுமில்லை, ஒன்றுமில்லை. சும்மா அவர்கள் முன் நாடகம் போட்டேன். அவ்வளவுதான்! வாருங்கள்! நாம் கோயிலுக்குள் செல்வோம். நான் எப்படி வரம் கேட்கிறேன் என்று பாருங்கள்!” என்று ராமுவையும் அழைத்துக் கொண்டு அவள் கோயிலுக்குள் நுழைந்தாள்.
கோயிலுக்குள் நுழைந்த இருவரும் அம்மனை பயபக்தியுடன் விழுந்து வணங்கினர். பிறகு லட்சுமி, “தாயே! என் கணவரின் நண்பருக்கு வரம் தந்ததுபோல், எனக்கும் ஒரு வரம் தந்தருள்வாய்!” என்று வேண்டினாள். உடனே அம்மன் குரல் கருவறையில் இருந்து ஒலித்தது. “லட்சுமி! உனக்கும் கட்டாயம் வரம் தருவேன்! ஒரேயொரு வரம் கேள்!” என்றது அக்குரல்.

“தேவி! நான் மனத்தில் நினைப்பது நடக்க வேண்டும்!” என்றாள். "சரி, இந்த வரம் உனக்கு ஒரு முறை பலன் தரும்!” என்று அந்தக் குரல் ஒலித்து ஓய்ந்தது.

மட்டிலா மகிழ்ச்சியுடன் லட்சுமி கோயிலிலிருந்து வெளியே வந்தாள். “இந்தக் கும்மிருட்டில் யாரேனும் நடந்து செல்வார்களா?” என்று தன் கணவனிடம் கூறிவிட்டு, கண் இமைக்கும் நேரத்தில் அலுங்காமல் குலுங்காமல் வீடு போய்ச் சேர வேண்டும்!’ என்று மனத்தில் நினைத்துக் கொண்டாள்.

அடுத்தகணமே இருவரும் அவர்களுடைய வீட்டில் இருந்தனர். அவர்களை எதிர்பார்த்துக் கவலையுடன் சுப்புவும், வள்ளியும் காத்துக் கொண்டிருந்தனர். “லட்சுமி! உனக்கு உடம்பு இப்போது எப்படி இருக்கிறது? மருத்துவர் என்ன சொன்னார்?” என்று வள்ளி அக்கறையுடன் கேட்டாள்.

அதற்கு லட்சுமி, “என்னைப் பற்றி அப்புறம் கேட்கலாம்! உன் கணவருக்கு வேலை கிடைத்ததா?” என்று கேட்டாள்.
“கிடைத்தது! ஜமீன்தார் வேலை தர சம்மதித்து விட்டார். உன் கணவருக்கு அந்த பாக்கியம் இல்லாமல் போயிற்றே!” என்று வள்ளி ஆதங்கத்துடன் கூறினாள்.

0 comments:

Post a Comment

Flag Counter