தங்க நிலா!

 ஒரு பணக்கார வியாபாரிக்கு ஏழு மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். கடல் கடந்து வியாபாரம் செய்து வந்த அந்த வியாபாரியிடம் பல சொந்தக் கப்பல்கள் இருந்தன. மகன்கள் அனைவருக்கும் திருமணம் நடந்தபின், மருமகள்கள் அனைவரும் சேர்ந்து ஒரே குடும்பமாக இருந்தனர். வியாபாரியின் கடைக்குட்டியான டபோயி வீட்டிற்குச் செல்லப் பெண்ணாகத் திகழ்ந்தாள். பணக்காரரின் செல்லப் பெண்ணாக இருந்த போதிலும், மிகவும் எளிமையான மண் பொம்மைகளை மட்டுமே வைத்து விளையாடி வந்தாள்.

ஒருநாள் அவள் தன் பொம்மைகளை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கையில், அங்கு ஒரு கிழவி வந்தாள். அவள் மண் பொம்மைகளை வைத்து விளையாடுவதைக் கண்ட கிழவி “அடிப்பெண்ணே! நீ விரும்பினால் உன் தந்தை உனக்காக தங்க நிலாவையே வாங்கித் தந்து விடுவாரே! நீ என்னடாவென்றால் மண் பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறாய்” என்று கேலி செய்து விட்டுச் சென்றாள்.

அவளுடைய பரிகாசச் சொற்கள் டபோயியின் நெஞ்சில் சுருக்கென தைத்தது. மண்பொம்மைகளை வைத்து விளையாடினால் என்ன இருக்கிறது என்று யோசித்தாள். அதற்கு மேல் விளையாட்டில் மனம் செல்லாமல், வீட்டின் ஒரு மூலையில் மௌனமாக அமர்ந்து கொண்டாள்.

அவளுடைய அண்ணிகள் எப்போதும் போலன்றி டபோயி மௌனமாக இருப்பதைப் பார்த்து அவளிடம் காரணம் கேட்டனர். ஆனால் அவள் யாருக்கும் பதில்சொல்லவில்லை. ஆனால் அண்ணிகளிலேயே வயதில் சிறிய நீலேந்தி அவளை விடவில்லை. அவளைத் தன் மடியில் அமர்த்தி, “குட்டிப் பெண்ணே! உன் அண்ணியிடம் மனதில் இருப்பதை நீ சொல்லக் கூடாதா? எதுவாக இருந்தாலும் சொல்” என்றாள்.

 டபோயிக்கு நீலேந்தியை மிகவும் பிடிக்கும். அதனால் அவளிடம் மட்டும் மனத்திலிருப்பதைச் சொல்லத் தோன்றியது. “பார் அண்ணி! அந்த மாசிக் கிழவி என்னைப் பார்த்து கேலி செய்தாள். அண்ணி! நான் மண் பொம்மைகளுடன் விளையாடக் கூடாதா? அப்பாவைக் கேட்டால் உனக்கு தங்க நிலாவே வாங்கித் தருவாரே! ஏன் மண் பொம்மைகளுடன் விளையாடுகிறாய் என்று பரிகாசம் செய்தாள்” என்றாள்.

“பூ! இவ்வளவுதானா! தங்க நிலா என்ன, தங்கத்தில் கப்பலே செய்து தருவார் உன் அப்பா! நான் அம்மாவிடம் சொல்லி அப்பாவிடம் கேட்கச் சொல்கிறேன்! நீ கவலைப்படாதே!” என்று கூறி அவளை முத்தமிட்டு விளையாட அனுப்பினாள். பிறகு நீலேந்தி அதை டபோயியின் தாயிடம் கூற, தாய் அவளுடைய தந்தையிடம் கூறினாள். உடனே, டபோயியைத் தன்னிடம் அழைத்த வியாபாரி, “டபோயி! என் செல்லப் பெண்ணே! தங்க நிலா வேண்டுமா என் ராஜாத்தி! எவ்வளவு பெரிது வேண்டுமென்று சொல்! உனக்கு இல்லாததா! உடனே அதை நான் வாங்கித் தருகிறேன்!” என்று அவளைக் கொஞ்சினார்.

உடனே, அவர் கடையில் ஒரு பெரிய தங்கத்தினால் ஆன தட்டு ஒன்றைத் தயாரிக்க ஏற்பாடு செய்தார். ஆனால் என்ன துர்பாக்கியம்! அந்தத்தட்டு தயாராகுமுன், திடீரென அவர் மாரடைப்பில் காலமானார். அந்தத் தங்க நலா டபோயியின் கையில் கிடைத்த சமயம், அவளுடைய தாயும் உயிருடன் இல்லை. அடுத்தடுத்து நடந்த இந்தத் துயர நிகழ்ச்சிகளினால் டபோயிக்கு தங்க நிலாவின் மீது ஆசையே போய் விட்டது. ஒருவேளை, அது வந்த நேரம்தான் தன் பெற்றோர் தவறினரோ என்று அவளுக்குத் தோன்ற, அந்த தங்க நிலாவை அவள் வெறுக்கவே ஆரம்பித்து விட்டாள்.

சிறிது சிறிதாக அந்தக் குடும்பம் துயர நினைவுகளிலிருந்து மீண்டது. டபோயியின் அண்ணன்கள் சில நாள்களாக முடங்கியிருந்த வியாபாரத்தை மீண்டும் தொடங்கினர். ஒரு பெரிய கப்பலில் விற்பனைப் பொருட்களை நிரப்பி, அவர்கள் அனைவரும் கடல் கடந்து வியாபாரம் செய்யக் கிளம்பினர். கிளம்புவதற்கு முன் அண்ணன்கள் தங்கள் மனைவிமார்களை அழைத்து பெற்றோர் இல்லாத டபோயியை கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டும் என்றுக்  கட்டளையிட்டனர்.

அதற்கு டபோயியின் அண்ணிகள் “இதை நீங்கள் சொல்லவும் வேண்டுமா? பெற்றோரும், அண்ணன்கள் நீங்களும் இல்லாத குறையை, நாங்கள் தீர்த்து வைப்போம். முன்னைவிட அவளிடம் மிகவும் பாசத்துடனும், நேசத்துடனும் இருப்போம். நீங்கள் அவளைப் பற்றி கவலையே பட வேண்டாம்!” என்று விடை கூறினர்.
 சில மாதங்கள் வரை, அண்ணிமார்கள் டபோயியிடம் பாசமாக இருந்தனர். அவர்கள் காட்டிய அன்பில் டபோயி தன் பெற்றோரை இழந்த துக்கத்தையும், அண்ணன்களின் பிரிவையும் மறந்தாள். ஆனால் இது வெகு நாள்கள் நீடிக்கவில்லை. ஒருநாள் அவர்கள் வீட்டிற்கு ஒரு வயதான பிச்சைக்காரி வந்தாள். வீட்டிலுள்ள மூத்தவள் வெளியில் வர கால தாமதம் ஆனதும், “ஒரு கவளம் சோற்றிற்காக எவ்வளவு நேரம் கத்துவது” என்று கூறினாள்.

அதற்கு மூத்தவள், “வீட்டினுள்ள அனைவரும் நாத்தனாரைக் கவனிப்பதில் மும்முரமாக இருந்தோம்” என்றாள்.
“அந்தச் சின்னப் பெண்ணையா? அவளைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறீர்களே! அதனால் உங்களுக்கு என்ன லாபம்? பெரியவாளனதும் அவள் உங்களை அடிமைகளாக நடத்துவாள்!” என்று தூபம் போட்டாள். தொடர்ந்து, “அவளிடம் நன்றாக வேலை வாங்கு! அவளை ஆடு மேய்க்க காட்டிற்கு அனுப்பு. அங்கு சிங்கம், புலி ஏதாவது அவளை அடித்துத் தின்னட்டும்” என்றாள். பெரிய அண்ணி மற்றவர்களிடம் இதைப் பற்றி கூற அனைவரும் கூடி முடிவு செய்தனர்.

ஆனால் சிறிய அண்ணியான நீலேந்தி இதற்கு ஒப்பவில்லை. அவள் உண்மையாகவே டபோயியிடம் மிகவும் பிரியம் வைத்திருந்தாள். ஆனால் வயதில் மூத்த மற்ற அண்ணிமார்களை எதிர்த்து அவளால் செயற்பட முடியவில்லை. டபோயியின் வாழ்க்கை மாறத் தொடங்கியது. சொகுசாக வாழ்ந்த அவள்மீது வீட்டு வேலைகள் சுமத்தப்பட்டன. பாலும், பழமும், அறுசுவை உண்டது போக, அரை வயிற்றுக்கு சாப்பிட நேர்ந்தது.

அவளை பிரியத்துடன் நடத்திய அண்ணிகள் இப்போது அவள் மீது ஏதாவது குறை சொல்லி திட்டிக் கொண்டேயிருந்தனர். டபோயி இரவு நேரங்களில் அழுது கொண்டே அவர்களுடைய குலதெய்வமான மங்களா தேவியை நினைத்து, “தாயே! என்னுடைய அண்ணன்கள் சீக்கிரமே ஊர் திரும்ப வேண்டும்!” என்று பிரார்த்தனை செய்யத் தொடங்கினான்.

ஒருநாள் பெரிய அண்ணி அவளை அழைத்து, “காட்டிற்குச் சென்று ஆடு மேய்த்து வா! இந்தா, உன் சாப்பாடு!” என்று கட்டளையிட்டாள். முதலில் தயங்கிய டபோயி வேறு வழியின்றி கட்டளைக்குக் கீழ்ப்படிந்தாள். நண்பகல் தனக்கு அளிக்கப்பட்ட சோற்று மூட்டையைப் பிரித்துப் பார்த்தால் அதில் கையளவு சாதம் வேண்டுமென்றே மரத்தூளுடன் கலந்து வைக்கப்பட்டிருந்தது.  அதை சாப்பிட முடியாததால், டபோயி அப்படியே தூக்கியெறிந்தாள். பிறகு மாலை நேரம் பசியுடன் வீட்டிற்குத் திரும்பினாள்.

 அடுத்த ஐந்து நாள்களும் மற்ற அண்ணிகளும் அதையே செய்தார்கள். ஆகவே, ஆறு நாள்களும் அவளுக்குப் பட்டினி கிடக்க நேரிட்டது. ஏழாவது நாள், நீலேந்தி மட்டும் சுவையான உணவு அனுப்பியிருந்தாள். இந்த வழக்கம் தொடர்ந்தது. ஏழு நாள்களில், நீலேந்தி உணவு கொடுத்து அனுப்பும் நாள்களில் மட்டும் டபோயியால் வயிராற உண்ண முடிந்தது. மற்ற நாள்கள் எல்லாம் அவள் பட்டினி கிடக்க நேரிட்டது.

ஒருநாள் மாலை, மேய்ந்து திரும்பிய ஆடுகளில் ஒன்றைக் காணவில்லை. ஆடுகளில் ஒன்றைத் தவறவிட்ட டபோயி மீது பெரிய அண்ணி கடுங்கோபம் கொண்டு, அவளை அடிக்க வந்தாள். ஆகையால் டபோயி வீட்டை விட்டு ஓடி காட்டிற்குப் போனாள். இரவு நேரமாகியது. பசியினாலும், பயத்தினாலும் தவித்த டபோயி “மங்களாதேவி! தாயே! என்னைக் காப்பாற்று!” என்று பலமுறை கூவி அழுதாள்.

அதிருஷ்டவசமாக, அவளுடைய அண்ணன்கள் திரும்பி வந்து கொண்டு இருந்த கப்பல் காட்டிற்கு அருகில் கடற்கரையில் சென்று கொண்டிருந்தது. காட்டிலிருந்து ஒரு சிறுமியின் அழுகுரலைக் கேட்ட அண்ணன்கள் கப்பலை நிறுத்தினர். இருவர் கப்பலிலிருந்து இறங்கி காட்டிற்குள் சென்றபோது, தங்கள் அருமைத் தங்கை அனாதரவாக அழுது புலம்பிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவளை சமாதானப்படுத்தித் தங்களுடன் கப்பலுக்கு அழைத்துச் சென்றனர்.

நடந்தவற்றை டபோயி மூலம் கேட்டதும், அவர்களின் ரத்தம் கொதித்தது. தங்கள் மனைவிமார்களுக்கு சரியான பாடம் புகட்ட அனைவரும் தீர்மானித்தனர். கப்பல் கரையை அடைந்ததும், தங்கள் கணவன்மார்களை வரவேற்க வந்திருந்த அண்ணிமார்கள்  ராஜகுமாரிபோல் ஒய்யாரமாக தங்கள் கணவன்மார்களுடன் டபோயி கப்பலிலிருந்து இறங்குவதைக் கண்டதும் திடுக்கிட்டனர்.

வீட்டை அடைந்ததும், டபோயியைக் கொடுமைப்படுத்திய தங்கள் மனைவிகளை அவர்கள் நையப் புடைத்தனர். அவர்களுக்காகக் கொண்டுவந்த பரிசுப் பொருள்கள் அனைத்தையும் தங்கைக்குக் கொடுத்தனர். நீலேந்தி ஒருத்தி மட்டுமே தண்டனையிலிருந்து தப்பினாள். அதுமட்டுமன்றி, அவளுக்கு பரிசுப் பொருட்களும் கிடைத்தன. அதன்பிறகு டபோயி தன் அண்ணன்களுடன் சுகமாக வாழ்ந்தாள்.

ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாகக் கருதப்படும் டபோயியின் நினைவாக இன்றும் ஒரிசாவில் பெண்கள் விழா எடுத்துக் கொண்டாடுகின்றனர்.

0 comments:

Post a Comment

Flag Counter