கஞ்சத்தனம் ஆபத்தானது!

 வாசுவும், மணியும் நெருங்கிய நண்பர்கள். வாசுவின் தந்தை அந்த ஊரில் பெரிய பணக்காரர். சுத்தக் கருமி. ஆனால் வாசு அவனுக்கு நேர் எதிர். அவன் நண்பன் மணி ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். சிறு வயது முதல் பெற்றோர் இல்லாமல் தனியாக வளர்ந்தான்.

உயர்நிலைப்பள்ளியில் படித்து முடித்த பிறகு, வாசு பக்கத்து நகரத்தில் இருந்த கல்லூரிக்குப் படிக்கச் சென்றான். ஒருமுறை விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தபோது, தன் நண்பனைப் பார்க்கச் சென்றான். மணி வீட்டினுள் காய்ச்சலுடன் படுத்த படுக்கையாக இருந்தான். நான்கு நாட்களாக உள்ளுர் வைத்தியர் மருந்து கொடுத்தும் குணமாகவில்லை.

அவனின் நிலையைக் கண்டு வாசுவின் மனம் நெகிழ்ந்தது. தன் நண்பனை நகரத்திலுள்ள பெரிய வைத்தியரிடம் காட்டத் தீர்மானித்த வாசு, உடனே தன் தந்தையை அணுகிப் பண உதவி கேட்டான். அதைக் கேட்டதும், வாசுவின் தந்தைக்குக் கோபம் வந்து விட்டது.

உடனே அவர் வாசுவை நோக்கி, “போடா, பைத்தியக்காரா! இப்படி எல்லாம் பிறருக்கு இரக்கம் காட்டினால், நாம் தெருத்தெருவாகப் பிச்சை எடுக்க வேண்டியதுதான்” என்று கூறிப் பிடிவாதமாக மறுத்து விட்டார். உடனே வாசு, வட்டிக்குக் கடன் கொடுக்கும் சேட்டிடம் சென்று பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கினான். தன் நண்பனை ஒரு டாக்ஸியில் அமர்த்தி நகரத்திற்கு அழைத்துச் சென்று பெரிய மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கச் செய்தான்.
 மணி வெகுசில நாட்களிலேயே பூரண குணம் அடைந்தான். இது நடந்து பத்து நாட்களாகி விட்டன. சேட் பாக்கியை வசூல் செய்ய வாசுவின் வீட்டிற்கே வந்து விட்டான். வாசு அப்போது வீட்டில் இல்லாததால் சேட் அவன் தந்தையிடம், “உங்கள் பையன் நம்ம கையிலே பத்து நாள் முன்னே பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கிச்சு. அதை இன்னும் திருப்பித் தரான் இல்லே!” என்றான்.

தன் மகன் சேட்டிடம் கை நீட்டி கடன் வாங்கினான் என்று கேட்டவுடனே வாசுவின் தந்தை கோபத்தில் கொதித்துப் போனார். உடனே, தன்னிடமிருந்து பணம் கொடுத்து சேட்டை அனுப்பி வைத்தார். அப்போது சாவகாசமாக வீட்டிற்குள் நுழைந்த வாசுவிடம் பாய்ந்து சென்று அவன் சட்டையைப் பற்றி உலுக்கிக் கொண்டே, “சேட்டிடம் கை நீட்டி கடன் வாங்கினாயா? உன்னால் என் மானமே போய் விட்டதடா!” என்று வீடு அதிரக் கத்தினார்.

அதற்கு வாசு அமைதியாக “ஆம், அப்பா! நீங்கள் பணம் தரமுடியாது என்று சொன்னதால் சேட்டிடம் கடன் வாங்கினேன்! இதற்கு ஏன் இப்படி கோபப்படுகிறீர்கள்? மற்றவர்களுடைய ஆபத்து சமயத்திற்கு உதவாத பணம் இருந்துதான் என்ன பயன்? இப்படி கஞ்சத்தனம் செய்து தான் அம்மாவிற்கு சரியாக வைத்தியம் செய்யாமல் சாகடித்தீர்கள். உயிர் போகும் போது உங்கள் சொத்துகளை தலையிலா வைத்துக் கொண்டு போவீர்கள்?” என்று கேள்விக்கணை தொடுத்த சமயம் மணி நுழைந்தான்.

0 comments:

Post a Comment