பணக்கார மாப்பிள்ளை!

 
 மனோகரன் பெயருக்கேற்ப மிக மனோகரமான, வசீகரமான தோற்றமுடையவன். நன்றாகப் படித்துமிருந்தான். திருமண வயதை அவன் அடைந்த போது, அவனுடைய பெற்றோர் அதே கிராமத்திலிருந்த மாதவி என்ற பெண்ணுடன் விவாகம் செய்து வைக்க எண்ணினர். இருவருடைய திருமணத்திற்கு நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கையில், ஒருநாள் மனோகரன் சோதிடர் ஒருவரிடம் செல்ல, அவர் அவனைப் பார்த்து “நீ பணக்கார வீட்டு மாப்பிள்ளை ஆவாய்!” என்று சொல்லி அவன் மனத்தில் பேராசையை மூட்டி விட்டார்.

சிறு வயது முதலே பணக்காரனாக ஆவது பற்றி கனவு கண்டு கொண்டிருந்த மனோகரனின் மனத்தில், சோதிடரின் சொற்கள் ஒரு புயலைக் கிளப்பின. மனோகரன் தன் பெற்றோரிடம் மாதவியை மணம் செய்ய விருப்பமில்லை என்று கூறிவிட்டான். இது நடந்து சில நாள்களில், அந்த ஊர் ஜமீன்தார் மனோகரன் வீடு தேடி வந்தார்.

அவருடைய மகன் கல்பனா மனோகரனை விரும்பியதால், அது பற்றிப் பேச மனோகரனின் பெற்றோரை அணுகியவர், தன் மகளை மண முடித்தால் ஐந்து ஏக்கர் நிலம் வரதட்சிணையாகத் தருவதாகக் கூறினார். அதைக் கேட்ட மனோகரனின் மனம் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தது. சோதிடரின் வாக்கு இத்தனை சீக்கிரம் பலிக்கும் என்று அவன் நினைக்கவில்லை. உடனே, அவன் அதற்குச் சம்மதித்தான்.

மாதவிக்கு அது தெரிந்ததும் வருத்தம் உண்டாகியது. ஒருநாள் கோயிலில் அவனை சந்தித்ததும், அவள் “ஐந்து ஏக்கர் நிலம் வரதட்சிணையாகக் கிடைக்கிறது என்பதால், என்னை நீ ஒதுக்குவது என்ன நியாயம்?” என்று கேட்டாள்.
“உனக்குப் பூனைக்கண்! உன்னை விட கல்பனா நல்ல அழகி! அதற்காகத்தான் அவளை திருமணம் செய்ய சம்மதித்தேன்!” என்றான் மனோகரன்.
அதைக் கேட்டு மாதவி, “அடுத்த பிறவியில் நீ பூனையாகப் பிறப்பாய்!” என்று சாபமிட்டுச் சென்றாள். இது நடந்த மறுநாள், அவன் வீட்டிற்கு மாதவன் என்ற தூரத்து உறவினர் குடும்பத்துடன் வருகை தந்தார். அவர் பல ஆண்டுகளாக மன்னரிடம் பணிபுரிந்து வந்த பணக்காரர்! மாதவனின் அழகு அவரைக் கவர்ந்ததால், அவனைத் தன் மாப்பிள்ளையாகத் திட்டமிட்டார்.

அவனுக்கு ஏற்கெனவே ஜமீன்தாரின் மகளுடன் திருமண ஒப்பந்தம் நடைபெறவிருக்கிறது என்று அறிந்தும், மாதவன் “திருமண நிச்சயதார்த்தம் இன்னும் நடக்கவே இல்லையே! பேசாமல் ஜமீன்தார் மகளை மறந்து விடுங்கள். என் பெண் வந்தனாவை மணம் புரிந்தால், அவனுக்கு அரசாங்க வேலை வாங்கித் தருவேன்” என்றார்.

மனோகரனின் பெற்றோர் தர்ம சங்கடத்திற்கு உள்ளாயினர். ஆனால் மனோகரன் மட்டும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினான். கிராமத்தில் விவசாயம் செய்வதைவிட அரசாங்க வேலையில் சேர்ந்து பெரிய பணக்காரனாவது பெரிய அதிருஷ்டம் என்று நினைத்தான். ஆகையால் அவன் உடனே வந்தனாவை மணக்க சம்மதம் தெரிவித்து விட்டான். விஷயமறிந்த கல்பனா மனோகரனைத் தேடி வந்தாள். அப்போது, மாதவனின் மகள் வந்தனாவும் உடனிருந்தாள்.
மனோகரனிடம் பேசாமல் நேராக வந்தனாவை நோக்கி அவள், “ஏற்கெனவே, அவர் மாதவியை மணப்பதாக இருந்தார். ஆனால் என் அழகில் மயங்கி என்னை மணக்க சம்மதித்திருக்கிறார். நீ இப்போது அவர் மனத்தை ஏன் கலைக்கிறாய்? அவர் உன்னை மணக்க விரும்புவது உன் மூலம் கிடைக்கப் போகும் அரசாங்க வேலைக்காகத்தான்!” என்றாள் கல்பனா.

மனோகரனை சுட்டெரிக்கும் கண்களால் முறைத்துப் பார்த்த வந்தனா, “இவள் சொல்வது உண்மையா?” என்று கேட்டாள். “சீச்சீ! யார் சொன்னது? கல்பனா அழகாக இருப்பதால் அவளைத் திருமணம் செய்து கொள்ள முதலில் சம்மதித்தேன். ஆனால் அவள் மிகவும் கர்வம் பிடித்தவள். அடிபட்ட நாயைப் போல குரைப்பவள். ஆனால் நீ நல்லவள்! அதனால்தான் உன்னைத் திருமணம் செய்து கொள்ளத் தீர்மானித்தேன்” என்றான் மனோகரன்.
 அதைக் கேட்ட கல்பனா, “என்ன? நான் நாயைப் போல் குலைக்கிறேனா? நீங்கள் அடுத்த பிறவியில் நாயாய் பிறப்பீர்கள்!” என்று வசைபாடி விட்டு அகன்றாள்.

நடந்ததைக் கேட்டு மனோகரனின் பெற்றோர் கவலையுற்றனர். அவன் தாய், “வீணாகப் பெண்களின் சாபத்திற்கு ஏன் ஆளாகிறாய்?” என்று வருத்தத்துடன் கேட்க, “இவர்களின் சாபம் என்னை என்ன செய்து விடும்?” என்று திமிராக பதிலளித்தான். பிறகு மனோகரனின் பெற்றோர் வந்தனாவின் தகப்பன் மாதவனிடம், முதலில் மனோகரனுக்கு வேலை வாங்கித் தரும்படி கூறினர்.

அதற்கு சம்மதித்த மாதவன் மனோகரனைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். அரசாங்க வேலையில் மனோகரனை சேர்ப்பதற்கு அதிகாரிகளில் ஒருவரான தேவநாதனை அணுகி சிபாரிசு செய்யுமாறு வேண்டினார். மனோகரனின் அழகிய தோற்றத்தையும், மதிநுட்பத்தையும் கண்ட தேவநாதன் அவனைத் தன் மாப்பிள்ளையாக ஆக்கிக் கொள்ளத் திட்டம் போட்டார். அவனைத் தனியாக அழைத்த தேவநாதன், அவனிடம் தன் மகள் ஜலஜாவை மணம் செய்து கொள்ள வேண்டினார். அவன் அதற்கு ஒப்புக்கொண்டால் அவனுக்கு அரசாங்கத்தில் பெரிய வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டினார். உடனே, பேராசை பிடித்த மனோகரன் ஒப்புக் கொண்டான்.

விஷயம் தெரிந்ததும் வந்தனா அடிபட்டப் பெண்புலியைப் போல் சீறிக் கொண்டே தன்னுடன் மனோகரனையும் அழைத்துக் கொண்டு ஜலஜாவிடம் சென்றாள். வந்தனா அவளிடம், “ஜலஜா! எத்தனை சிரமப்பட்டு இவரை திருமணம் செய்வதாய் இருந்தேன் தெரியுமா? நீ ஏன் அவரை ஆசை காட்டி மனத்தைக் கலைக்கிறாய்? இவர் உன் மேலுள்ள பிரியத்தால் சம்மதிக்கவில்லை. உன்னால் அரசாங்க வேலை கிடைக்கும் என்பதால் இவர் உன்னை மணக்க சம்மதித்துள்ளார்” என்றாள்.

உடனே, மனோகரனைக் கோபத்துடன் பார்த்த ஜலஜா “இவள் சொல்வது உண்மையா!” என்று கேட்க, “இல்லையில்லை! எனக்கு சங்கீதம் என்றால் மிகவும் பிடிக்கும். நீ நன்றாகப் பாடுகிறாய்! உன் இசையில் மயங்கிப் போய் நான் உன்னைத் திருமணம் செய்ய சம்மதித்தேன். வந்தனாவின் குரலோ கழுதைக்குரல்! அதை என்னால் சகிக்க முடியவில்லை!” என்றான்.

“என்ன? என் குரல் கழுதைக் குரலா?” என்று நாகத்தைப் போல் சீறிய வந்தனா, “நீ அடுத்த பிறவியில் கழுதையாகத்தான் பிறப்பாய்!” என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்றாள். ஒரு நல்ல நாளில் மனோகரனுக்கும், செல்வரான அரண்மனை அதிகாரி தேவநாதனின் மகள் ஜலஜாவிற்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்த மறுநாள், மனோகரன் தன் மாமனாரை ஏதோ கேட்க அவர் அறைக்குள் நுழைந்தவன், அவர் மற்றொரு அதிகாரியுடன் பேசிக் கொண்டு இருந்ததால் வெளியிலேயே நின்று அவர்களுடைய உரையாடலைக் கேட்டான்.

“தேவநாதா! உனக்கு நல்ல பிள்ளையாகக் கிடைக்கவில்லையா? இந்த ஏழைப் பையன்தானா உனக்குக் கிடைத்தான்?” என்று அந்த அதிகாரி அவரிடம் கேட்க, அதற்கு தேவநாதன், “என்னுடைய பெண் அகம்பாவம் பிடித்தவள்! கோபக்காரி! ஏழை வீட்டுப் பையனை மாப்பிள்ளை ஆக்கினால், அவன் பூனையைப் போல் என் பெண்ணிடம் அடங்கி நடப்பான். என்னிடம் உள்ள சொத்துகளை நாயைப் போல் காவல் காப்பான். என் பெண் ஏவும் வேலைகளை கழுதையைப் போல் பேசாமல் கீழ்ப்படிந்து செய்வான்!” என்றார்.

அதைக் கேட்ட மனோகரனுக்கு ஆயிரம் தேள்கள் கொட்டியது போலிருந்தது. தனது நிலை இப்படியாகும் என்று அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. சோதிடர் சொன்னது மட்டுமன்றி, அந்த மூன்று பெண்கள் இட்ட சாபங்களும் இந்த ஜென்மத்திலேயே பலித்து விட்டதை எண்ணி நிலைகுலைந்து போனான்.

0 comments:

Post a Comment

Flag Counter