கடோத்கஜன்!


கடோத்கஜன் பீமனுக்கும், இடும்பி எனும் ராட்சசிக்கும் பிறந்தவன். தன் தந்தையைப்போல் பலமும், தாயைப்போல் மாய வித்தைகளில் தேர்ச்சியும் பெற்று இருந்தான். மகாபாரத யுத்தத்தில் பாண்டவர்களுக்குப் பேருதவி புரிந்த அவனின் வாழ்க்கை வரலாறு சுவாரசியமானது. பாண்டவர்கள் தங்கியிருந்த அரக்கு மாளிகை துரியோதனால் தீக்கிரையாக்கப்பட்டது. தெய்வாதீனமாகப் பாண்டவர்கள் தீயில் சிக்காமல் தப்பியோடி விட்டனர்.

கங்கை நதியைக் கடந்து தென் திசையில் வெகுதூரம் நடந்து சென்ற அவர்கள், இறுதியில் களைத்துப்போய் ஓர் ஆலமரத்தினடியில் படுத்து உறங்கி விட்டனர். பீமன் மட்டும் உறங்காமல் காவல் காத்துக் கொண்டிருந்தான். அவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பிரதேசத்தில் இடும்பன் என்ற ஒரு பயங்கர ராட்சசன் வசித்து வந்தான். அவன் கண்களில் மரத்தடியில் இருந்த பாண்டவர்கள் புலப்பட்டனர். உடனே அவன் தன் தங்கையான இடும்பியை அழைத்து, பாண்டவர்களைக் காட்டி “நீ அவர்களைக் கொன்று சமைத்து வை!” எனக் கூறி விட்டுச் சென்றான்.

இடும்பி உடனே அவர்களை அணுகினாள். காவல் காத்துக் கொண்டிருந்த பீமனைக் கண்டதும், அவள் தன் மனத்தைப் பறிகொடுத்தாள். உடனே தன் ராட்சச உருவத்தை மாற்றிக் கொண்டு, ஒரு அழகான மானிடப் பெண் போல் உருவமெடுத்து பீமனை நெருங்கினாள். “ஐயா! நீங்கள் யார்? உங்கள் பெயர் என்ன? இங்கு உறங்குபவர்கள் உங்களுடைய சகோதரர்களா?” என்று விசாரித்த இடும்பி, தொடர்ந்து, “உங்களைப் பார்த்தவுடன் என் மனதில் உங்களையே கணவராக அடைய வேண்டும் என்று ஆசை தோன்றி விட்டது. உண்மையில், உங்களைக் கொல்வதற்காக என் அண்ணன் இடும்பன் இங்கு என்னை அனுப்பினான். ஆனால், உங்கள் அழகில் மயங்கி அந்த எண்ணத்தைக் கைவிட்டேன்” என்றாள்.

அதற்குள் தொலைவிலிருந்து இடும்பியின் செயலை கவனித்த இடும்பன், அவள் மீது கோபம் கொண்டு கத்தினான். பிறகு பீமன் மீது பாய்ந்து அவனைத் தாக்க, பீமன் இடும்பனை அப்படியே தூக்கிக் கொண்டு தொலைதூரம் சென்று கீழே போட்டான். பிறகு இருவருக்கும் இடையே யுத்தம் மூண்டது. பீமன் இடும்பனை கால்களினால் மிதித்துத் துவைத்துக் கொன்று விட்டான்.

பீமனிடம் மனத்தைப் பறிகொடுத்த இடும்பி, குந்தியிடமும் யுதிஷ்டிரரிடமும் தன் உள்ளக் கிடக்கையை வெளியிட்டாள். குந்தியும் அவள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாள். தாய் சொல்லைத் தட்டாத பீமன் இடும்பியை மணம்புரிய சம்மதித்தான். ஆனால் தங்களுக்கு ஒரு பிள்ளை பிறக்கும் வரை மட்டுமே இடும்பியோடு சேர்ந்து வாழ்வேன் என்று ஒரு நிபந்தனை போட்டான். பிறகு தாயின் ஆசியுடன் பீமன் இடும்பியை மணம் புரிந்தான். இடும்பி பீமனை அழைத்துக் கொண்டு ஆகாய மார்க்கமாகப் பறந்து சென்றாள்.

காலக்கிரமத்தில் இடும்பிக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை பிறந்தவுடனேயே பெரிதாகி விட்டது. அவ்வாறு விரைவாக வளர்ந்த அந்த இளைஞனின் தலையில் முடியே இல்லை. அதனால் அவனுக்குக் கடோத்கஜன் (தலையில் முடியற்றவன்) என்று பெயரிட்டனர். தன் பெற்றோரை வணங்கிய கடோத்கஜன்  “நான் தனியாக வசிக்க விரும்புகிறேன். தேவைப்பட்டால் என்னை மனதில் நினைத்தால் போதும்! நான் எங்கிருந்தாலும் உடனே உங்களிடம் வந்து விடுவேன்” என்று சொல்லிவிட்டுப் பிரிந்தான். 
பிறகு அவன் வடக்குத் திசையில் சென்று, அங்கிருந்த ராட்சசர்களுக்குத் தலைவன் ஆனான். காலப்போக்கில் கடோத்கஜனுக்கு மேகவர்ணன், அஞ்சன்பர்வன் என்ற ஆண்பிள்ளைகள் பிறந்தனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு மகாபாரத யுத்தம் மூண்டபோது, பீமன் தன் மகனை மனதில் நினைக்க, உடனே கடோத்கஜன் அங்கு பறந்து வந்து விட்டான். கௌரவர்களைச் சேர்ந்த பகதத்தன் ஒரு பெரிய யானைப்படைக்குத் தலைமை தாங்கி பாண்டவர்களின் படைக்கு பயங்கர சேதத்தை உண்டாக்கினான்.

ஓர் உயரமான யானையின் மீது அமர்ந்து அவன் நடத்திய பயங்கரத் தாக்குதலில், பாண்டவர்களின் படை வீரர்கள் சிதறியோடத் தொடங்கினர். அப்போது போர்க்களத்தில் நுழைந்த கடோத்கஜன் பகதத்தனை தைரியமாக எதிர்த்துப் போராடினான். இறுதியில் பகதத்தன் வீழ்ந்தான். அர்ஜுனனுடைய பிள்ளை ஐராவதன் போர்க்களத்தில் காயமுற்று மயக்கமானான். அப்போது அர்ஷபிருங்கன் எனும் பகைவன் அவன் மீது வாளைப் பாய்ச்சிக் கொன்றான். அதைக் கண்டுக் கொதித்தெழுந்த கடோத்கஜன் பூதாகாரமாகத் தன் உருவத்தைப் பெரிதாக்கிக் கொண்டு கௌரவர்கள் மீது சீறிப் பாய்ந்தான்.


எதிர்ப்பட்ட துரியோதனனையே கடோத்கஜன் தாக்கத் தொடங்கினான்.இருவருக்குமிடையே கதை யுத்தம் தொடங்கியது. துரியோதனனை தனது சக்திவாய்ந்த கதையினால் கடோத்கஜன் அடிக்க, துரியோதனுடைய நண்பனான வங்க மன்னன்குறுக்கே வர, துரியோதனன் தப்பினான். கடோத்கஜனை சமாளிக்க முடியாமல்துரியோதனன் திணறுவதைக் கண்ட பீஷ்மர் உடனே சோமதத்தர், சைந்தவர், துரோணர்ஆகியோரை அங்கு அனுப்பினார். அவர்கள் அனைவரும் சேர்ந்து கடோத்கஜனைசூழ்ந்து கொண்டனர்.
தன் மகனைப் பல பகைவர்கள் சூழ்ந்து கொண்டதைக் கண்ட பீமன் உடனே உதவிக்கு விரைந்தான். பீமனும், கடோத்கஜனும் அனைவரின் ஒருங்கிணைந்தத் தாக்குதலைத் தவிடு பொடியாக்கினர். துரியோதனன் கடோத்கஜனைத் தவிர்த்து பீமனை தாக்கினான். இருவருக்குமிடையே பயங்கர யுத்தம் மூண்டது. அதில் பீமன் காயமடைய, அவனுக்கு உதவி செய்ய அபிமன்யு அங்கே வர, மீண்டும் போர் தொடங்கியது. ஆனால் கடோத்கஜன் தன்னுடைய மாய வித்தைகளினால், கௌரவர்களைப் பின் வாங்கச் செய்தான்.

அதற்குள் பீஷ்மரின் ஆலோசனைப் படி, காயமுற்று வீழ்ந்த பகதத்தன் சுப்ரதீக் எனும் தனது யானையின் மீது அமர்ந்துப் போர்க்களத்தில் புகுந்து, கடோத்கஜனை எதிர் கொண்டான். பகதத்தனாலும் அவனை சமாளிக்க இயலவில்லை. ஆகையால் பீஷ்மர் தானே கடோத்கஜனுடன் போரிட முன் வந்தார். இதைக் கண்ட அர்ஜுனன் சிகண்டியுடன் அந்த இடத்திற்கு விரைந்தான். அர்ஜுனனைத் தாக்க முயன்ற பீஷ்மர் அவனருகில் சிகண்டி இருப்பதால் தனது ஆயுதங்களைப் பிரயோகிக்க விரும்பாமல் குழம்பினார். உடனே, கர்ணனை அந்த இடத்திற்கு அனுப்பினார். ஆனால், கர்ணனால் கடோத்கஜனின் சாகசங்களுக்கு ஈடு செய்ய முடியவில்லை. கர்ணனிடம் இந்திரனுடைய சக்தி வாய்ந்த அம்புகள் இருந்தன.

அவற்றை அர்ஜுனன் மீது மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்று கர்ணன் முன்னமே தீர்மானித்திருந்தான். ஆனால் கடோத்கஜனை உயிரோடு விட்டால், அவன் கௌரவ சேனையையே அழித்து விடுவான் என்று தோன்றியது. அதனால் வேறு வழியின்றி, கர்ணன் இந்திரனுடைய ஆயுதத்தை கடோத்கஜன் மீது ஏவ, கடோத்கஜன் உயிர் நீத்தான். இவ்வாறு, கடோத்கஜன் தன் முடிவை சந்தித்தான்.


0 comments:

Post a Comment