திருடனை தண்டித்த அதிசய பசுக்கள்

 
முத்து ஒரு அநாதை வாலிபன். மாடு மேய்ப்பது ஒன்றுதான் அவனுக்குத் தெரிந்த தொழில். நான்கு பசுமாடுகளைத் தவிர வேறு எதுவும் அவனுக்குக் கிடையாது. தினமும் தன் கிராமத்தின் எல்லையில்இருந்த காட்டிற்குத் தன் மாடுகளை அழைத்துச் சென்றபின், அவற்றை மேய விட்டு விட்டு, முத்து ஒரு மரத்தடியில் அமர்ந்து குழல் ஊதிக் கொண்டே பொழுது போக்குவான்.

ஒருநாள் முத்து அவ்வாறு குழல் ஊதிக் கொண்டிருக்கையில், திடீரென ஒரு புலியின் உறுமல் சத்தம் கேட்டது. தன் மாடுகளைப் புலி கொன்று விடுமே என்று பதறிக் கொண்டே எழுந்த போது, அவன் கண்களில் ஓர் அதிசயக் காட்சி தென்பட்டது. புலியைக் கண்டு பயந்து போய் தலைதெறிக்க ஓடாமல், அவனுடைய நான்கு மாடுகளும் புலியைச் சூழ்ந்து கொண்டு அதைத் தன் கொம்புகளால் தாக்கின. வாழ்வில் முதன்முறையாக தன்னைப் பசுமாடுகள் தாக்குவதைக் கண்டு அதிர்ச்சியுற்ற புலி தப்பித்து ஓட முயற்சித்தது. ஆனால் மாடுகள் அதைத் தப்பிக்க விடாமல் தன் கொம்புகளால் குத்திக் கிழித்துக் கொன்று விட்டன.

அன்று முதல், தன் மாடுகளின் மீது முத்துவிற்குப் பெரு மதிப்பு ஏற்பட்டு விட்டது. அவற்றைப் பொக்கிஷம்போல், பத்திரமாகப் பாதுகாத்தான். அந்த ஆண்டு வானம் பொய்த்ததால், அவனுடைய மாடுகளுக்கு சரியானபடி தீவனம் கிடைக்கவில்லை. தன்னுடைய மாடுகள் அரை வயிற்றுக்கு உண்டு பட்டினி கிடப்பதைக் காண சகிக்கவில்லை. அதனால் அந்த கிராமத்தை விட்டுத் தன் பசுக்களுடன் வெகுதூரம் சென்று ஒரு மலைப்பிரதேசத்தை அடைந்தான்.
 குன்றுகள் நிறைந்த அப்பகுதியில் புல் செழிப்பாக வளர்ந்திருந்தும், அவற்றை மேய மாடுகளே தென்படவில்லையென்பதைக் கண்டு முத்து வியப்படைந்தான். அப்பகுதியில் இருந்து சற்றுத் தொலைவிலிருந்த ஒரு கிராமத்தை அடைந்து அங்கு தன் குடிசையை அமைத்துக் கொண்டான்.

அந்தக் கிராமத்திலுள்ள ஏராளமான கால்நடைகள் எலும்பும், தோலுமாய் காணப்பட்டன. அருகிலேயே, குன்றுகளுக்கிடையே செழிப்பான புல்வெளி இருந்தும், கிராமத்தினர் தங்கள் மாடுகளை மேய்க்க அந்த இடத்திற்கு செல்லாமல் இருப்பது முத்துவிற்கு ஆச்சரியத்தை அளித்தது.

உடனே அவன் கிராமத்து மக்களிடம் அதற்கான காரணத்தை கேட்க, அவர்கள், "குன்றுகள் நிறைந்த அப்பகுதியில் பல புலிகளும், சிங்கங்களும் எங்கிருந்தோ வந்து சேர்ந்து விட்டன. அங்கு மேயச் செல்லும் எங்கள் மாடுகள் காணாமற் போய் விட்டன. புலிகளும், சிங்கங்களும் எங்கள் மாடுகளை அடித்துத் தின்றுவிடுவதால், அங்கு நாங்கள் மாடுகளை அனுப்புவதே இல்லை. எல்லா மாடுகளும் கிராமத்திலேயே மேய்வதால், நாளடைவில் இங்கு புல் குறைந்து விட்டது. அதனால்தான் எங்களுடைய மாடுகள் வற்றிப் போய் காணப்படுகின்றன" என்றனர்.

ஆனால் உண்மை விஷயம் என்னவென்றால், அந்தக் குன்றுப் பிரதேசத்தில் கஜராஜன் என்ற திருடன் வசித்து வந்தான். அங்கு மேய வரும் பசுக்களைக் கண்டதும் அவற்றைத் திருடுவதற்கு ஒரு யோசனையைக் கையாண்டான். அதன்படி புதரில் மறைந்து கொண்டு, புலியைப் போலவோ, அல்லது சிங்கத்தைப் போலவோ ஒலி எழுப்புவான். மாடு மேய்ப்பவர்கள் அதைக்கேட்டு ஓடி விடுவார்கள். பிறகு பயந்து போனப் பசுக்களும் அப்பகுதியை விட்டு ஓடிச் சென்று, எதிர் திசையை அடையும். பிறகு, வழிதவறிப்போன பசுக்களை அவன் அழைத்துச் சென்று வேறு கிராமங்களில் விற்று விடுவான். இப்படியே சில ஆண்டுகளில் அவன் நிறையப் பணம் சம்பாதித்து விட்டான்.

இவ்வாறு ஏகப்பட்ட மாடுகளைத் திருடி விற்றுவிட்ட கஜராஜனுக்கு சில மாதங்களாக திருடுவதற்கு மாடுகளே கிடைக்கவில்லை. அதனால் அவன் தொழில் மிக அப்படியிருக்கையில் ஒருநாள் நான்கு கொழுத்த மாடுகளை அங்கே கண்டதும் அவனுக்குப் பயங்கர மகிழ்ச்சி உண்டாகியது.
அப்படியிருக்கையில் ஒருநாள் நான்கு கொழுத்த மாடுகளை அங்கே கண்டதும் அவனுக்குப் பயங்கர மகிழ்ச்சி உண்டாகியது.  கூடவே, மாடுகளை மேய்க்க வந்த முத்துவையும் பார்த்தான். விஷயம் தெரியாத புதிய ஆள் ஒருவன் மாடுகளை மேய்க்க வந்திருக்கிறான் என்று கஜராஜன் புரிந்து கொண்டான். அந்த மாடுகள் நான்கையும் கடத்தித் திருடத் தீர்மானித்து, ஒரு புதரினுள் பதுங்கிக் கொண்டான். முத்து தன் மாடுகளை கவனிக்காமல் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து குழல் ஊதத் தொடங்கியது அவனுக்கு வசதியாகப் போயிற்று.

புதரில் பதுங்கிய கஜராஜன் புலியைப் போல் உறுமினான். உடனே, அவன் எதிர் பார்த்ததுபோல் மாடுகள் பயந்து ஓடவில்லை. அவன் பதுங்கியிருந்த புதரை சூழ்ந்து கொண்டு, புலி வெளியே வந்தால் தாக்கத் தயாராயின. புலியின் உறுமலைக் கேட்ட முத்து, தன் மாடுகள் புதரைச் சூழ்ந்து கொண்டு தாக்கத் தயாராயிருப்பதைக் கண்டு வேடிக்கை பார்க்க எழுந்து நின்றான்.

முதன் முறையாக தன் சூழ்ச்சி பலிக்கவில்லை என்று அறிந்த கஜராஜன் உடனே சிங்கத்தைப் போல் கர்ஜித்தான். என்ன ஆச்சரியம்? அந்த மாடுகள் அப்போதும் பயப்படாமல் புதரைச் சுற்றி நின்றன. தங்கள் கொம்புகளை ஆக்ரோஷத்துடன் ஆட்டிக் கொண்டே சீறின. கஜராஜன் நடுநடுங்கிப் போனான். அவன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

மாடுகளைக் கடத்தித் திருடும் எண்ணத்தை விட்டு, தான் உயிர் பிழைத்தால் போதும் என்று நினைத்தான். எப்படியாவது முயற்சி செய்து மாடுகளை பயமுறுத்த எண்ணி, புலியின் குரலிலும், சிங்கத்தின் குரலிலும் மாறி மாறி ஒலிஎழுப்பினான். ஆனால் அந்த மாடுகள் சிறிதும் பயப்படவில்லை. ஆனால் கஜராஜனின் உரத்த கர்ஜனையைக் கேட்டு கிராமத்திலிருந்த ஆடு, மாடுகள் பயத்தில் சிதறி ஓடலாயின.
அதற்குள், முத்து கிராமத்திற்குச் சென்று அங்கிருந்த மக்களிடம் "என் மாடுகள் புலியையும், சிங்கத்தையும் புதருக்குள் முற்றுகையிட்டு விட்டன. இன்னும் சற்று நேரத்தில் அவை புதரில் புகுந்து அவற்றை கொம்புகளினால் குத்திக் கிளறும் காட்சியைப் பார்க்க வாருங்கள்" என்று கூவி அழைத்தான். ஆனால் பலரும் அவன் சொல்வதை நம்பவில்லை. தைரியமுள்ள சிலர் மட்டுமே அந்த அதிசயக் காட்சியைக் காண வந்தனர்.

அங்கு அவர்கள் ஒரு புதரைச் சுற்றி முத்துவின் மாடுகள் முற்றுகையிட்டுச் சூழ்ந்திருப்பதைக் கண்டனர். "முத்து, புலியும் சிங்கமும் எங்கே?" என்று அவர்கள் கேட்டனர்.  "என் மாடுகளுக்குப் பயந்து அவை புதரினுள் பதுங்கியுள்ளன. அவற்றை வெளியே வரச் செய்தால் போதும்! அப்புறம் பாருங்கள் நடப்பதை!" என்றான் முத்து.

உடனே அங்கு இருந்தவர்கள் கற்களைப் பொறுக்கிப் புதருக்குள் வீசினர். கல்லடி தாங்க முடியாத கஜராஜன் வெளியே வர, அவன் மீது மாடுகள் பாய்ந்து கொம்புகளால் குத்திப் புரட்டிப் போட்டு விட்டன. குற்றுயிரும், கொலையுயிருமாய் வெளியே வந்த கஜராஜனைக் கண்டு மக்கள் திகைத்துப் போயினர்.

அனைவர் முன்னிலையிலும் கஜராஜன் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டான். கிராமத்தினரின் கோபம் எல்லைமீறி, கஜராஜனை அடித்துத் துவைத்தனர். அன்றுமுதல், முத்து அந்த கிராமத்திற்குத் தலைவன் ஆகிவிட்டான். கிராமத்தினரும் பயமின்றி தங்கள் கால்நடைகளை அங்கு மேய்க்க அனுப்பினர்.

0 comments:

Post a Comment