ராமுவின் ஆசை

 
லட்சுமிபுரம் என்ற குக்கிராமத்தில் வசித்து வந்த ராமு மிகவும் கஷ்ட ஜீவனம் நடத்தி வந்தான். தினசரி கூலி வேலை செய்து அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து காலம் கழிப்பது மிகவும் கடினமாக இருந்தது. அவனுடைய மனைவி அவனிடம் பட்டணத்திற்குச் செல்லுமாறு பலமுறை கூறியும் அவனுக்கு அதில் விருப்பமில்லை.
 
ஓரிரவு உறக்கத்தில் வடை சாப்பிடுவதுபோல் கனவு கண்ட ராமு, மறுநாள் அதைப் பற்றித் தன் மனைவியிடம் சொன்னான். அதற்கு அவள், "குடிப்பதற்கு கஞ்சிக்குக்கூட வக்கில்லை. இதில் வடை சாப்பிடும் ஆசை தேவைதானா?" என்று இளக்காரமாகக் கேட்டாள்.
 
தொடர்ந்து, "எத்தனை நாள்களாக உன்னைப் பட்டணம் சென்று சம்பாதிக்கச் சொல்லி கொண்டு இருக்கிறேன்! கேட்கிறாயா? இங்கு இவ்வாறு உட்கார்ந்து இருந்தால், நாம் வாழ்நாளெல்லாம் வேதனைப்படவேண்டியதுதான்!" என்று மிகவும் அலுத்துக் கொண்டாள்.
 
பிறந்ததிலிருந்து தன் கிராமத்தை விட்டு வெளியே சென்றறியாத ராமுவிற்கு முன்பின் தெரியாத பட்டணம் செல்வது இனமறியாத பயத்தை உண்டாக்கியது.
 
"சரிசரி! வா, வந்து கஞ்சியைக் குடித்து விட்டுப்போ!" என்று அவன் மனைவி அழைக்க, அவன் கஞ்சிக் கலயத்தை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தான். அப்போது, பக்கத்து வீட்டுக் குழந்தை தள்ளாடித் தள்ளாடி அவர்களுடைய வீட்டிற்குள் மெல்ல நுழைந்தது. அவ்வாறு அது நடந்து வரும்போது, அதனுடைய கால் பட்டு இடறி, கஞ்சிக்கலயம் கவிழ்ந்து, கஞ்சி தரையில் கொட்டியது. அன்று முழுப்பட்டினியுடன் ராமு கூலி வேலை தேடிச் சென்றான். கிராமத்து கணக்குப்பிள்ளை வீட்டைஅடைந்து அவரிடம் ஏதாவது வேலை இருக்கிறதா என்று கேட்டான்.
அப்போது அவர் வீட்டிலிருந்து வடை சுடும் வாசனை வீசியது. "இன்று எங்கள் வீட்டில் என் தந்தைக்கு சிரார்த்தம் நடக்கிறது. நீ கிணற்றிலிருந்து நீர் இரைத்துத் தொட்டியை நிரப்பு!" என்று வேலை கொடுத்தார். ராமு மிக உற்சாகமாக வேலையில் இறங்கினான். வேலை செய்து முடித்தவுடன், கணக்குப் பிள்ளையின் மனைவி அவனுக்குக் கூலி கொடுத்தாள். ஆனால் கூலியுடன் வடையையும் எதிர் பார்த்த ராமு வெட்கத்தை விட்டு, "அம்மா! எனக்கு இரண்டு வடை கொடுங்களேன்!" என்று கெஞ்சினான். "வடையா? எனக்கே வடை கிடைக்கவில்லை! போய்வா!" என்று அவள் அனுப்பி விட்டாள்.
 
ஏமாற்றத்துடன் ராமு செட்டியார் கடையை நோக்கி நடந்தான். அவனைக் கண்டதும் செட்டியார் உற்சாகத்துடன், "வா ராமு! எங்கள் வீட்டில் வடை சுடப் போகிறார்கள்! இருந்து, சாப்பிட்டுப் போ! அதுவரையில், அரிசி மூட்டைகளை எடுத்து வை!" என்றார்.
 
உடனே ராமு உற்சாகத்துடன் வேலை செய்ய ஆரம்பித்தான். அப்போது, செட்டியார் வீட்டுப் பையன் ஓடி வந்து, வடைசுடும் போது அம்மாவின் கையில் கொதிக்கும் எண்ணெய் கொட்டி விட்டது!" என்று கூற, செட்டியார் கடையை மூடி விட்டு விரைந்து சென்று விட்டார். போகுமுன், அவனுக்குக் கூலியாக சிறிது அரிசிக் குருணை தந்து விட்டுச் சென்றார்.
 
தன் அதிருஷ்டத்தை நொந்து கொண்டே, ராமு வீட்டை அடைந்தான். அவன் மனைவி அவனை அன்புடன் அழைத்து, "இதோபார்! நீ கண்ட கனவு பலிக்கப் போகிறது! இந்தா, வடை சாப்பிடு!" என்று ஆறு வடைகளை அவன் முன் வைத்தாள். மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த ராமு "ஆகா! பிரமாதம்! வடை யார் கொடுத்தார்கள்?" என்று கேட்டான்.
 
"பக்கத்து வீட்டுக் குழந்தைக்கு இன்று ஆண்டு நிறைவு கொண்டாடினார்கள். அவர்கள் நமக்கும் கொடுத்து இருக்கிறார்கள்!" என்றாள்.
 
மகிழ்ச்சியுடன் வடையை சாப்பிட முனைந்தவன் ஏதோ நினைவிற்கு வந்தவனாக, "நீயும், குழந்தைகளும் சாப்பிட்டீர்களா?" என்று கேட்க, "உனக்கு வடை என்றால் ஆசை என்பதால் நாங்கள் யாரும் தின்னவில்லை. எல்லாம் உனக்குத் தான்!" என்றாள் அவன் மனைவி. அதைக் கேட்ட ராமு நெகிழ்ந்து போய், "நீங்கள் சாப்பிடவில்லைஎன்றால் எனக்கும் வேண்டாம்! சாப்பிடுவதனால் எல்லாரும் பகிர்ந்து கொள்வோம்!" என்றான்.
 
அப்போது, பக்கத்து வீட்டுக் குழந்தை மீண்டும் தளர்நடை போட்டு அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தது. குழந்தையை அன்புடன் அணைத்துக் கொண்டான். ராமு, திடீரென அவனுக்குள் ஒரு சிந்தனை உதித்தது.
 
`இந்தப் பச்சிளம் குழந்தை நடக்கப் பயின்றவுடன் வீட்டில் கால் தரிக்காமல் வெளியேறி நம் வீட்டிற்குள் அடிக்கடி நுழைகிறது. ஆனால், நான் பட்டிக்காட்டை விட்டு வேலை தேடிப் பட்டணம் செல்ல பயப்படுகிறேன். என் குழந்தைகள் நன்கு வயிராற சாப்பிடவேண்டுமானால், இங்கேயே முடங்கிக் கிடந்தால் நடக்காது' என்று எண்ணிய ராமு, தன் மனைவியை நோக்கி, "நான் பட்டணம் சென்று வேலை செய்யத் தீர்மானித்து விட்டேன். நன்கு சம்பாதித்து, உங்களுக்குப் பசிதீர உணவளிப்பேன்!" என்றான் ராமு. இதைக் கேட்ட அவனது மனைவி மிகவும் மகிழ்ச்சியுடன் கடவுளுக்கு நன்றி கூறினாள்.
 

0 comments:

Post a Comment