புத்திசாலியான மருமகள்

 
ராமதாசர் ஒரு பெரிய வியாபாரி. அவருடைய ஒரே மகன் விஜயன். அந்த ஊரிலே வசித்து வந்த மற்றொரு பெரிய வியாபாரியின் மகளான சீலவதி மிகவும் அழகாகவும், மிக புத்திசாலியாக இருப்பதாகவும் அறிந்த ராமதாசர் அவளை தன் ஒரே மகனுக்கு மணமுடித்து வைத்தார். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

ஒருநாள் நள்ளிரவில் தனது மருமகள் கையில் ஒரு குடத்துடன் வீட்டை விட்டு சத்தமின்றி இரகசியமாக வெளியேறியதையும் வெகு நேரம் கழித்து மீண்டும் திரும்பியதையும் கண்ட ராமதாசர் திடுக்கிட்டார். இது போன்ற மர்மமான மருமகள் தனக்குத் தேவையில்லை என்று முடிவு செய்த அவர், மறுநாளே தன் மகனிடம் அவளைப் பிறந்த வீட்டில் விட்டு விடும்படிக் கூறினார்.

தந்தையின் உத்தரவு மகனுக்குப் பிடிக்காததால் அவன் அவளைப் பிறந்த வீட்டிற்கு அனுப்பவில்லை.  இதனால் ராமதாசர் அவளைத் தானே அவள் பிறந்த வீட்டிற்குக் கொண்டு விட முடிவு செய்தார்.
மறுநாளே சீலவதியை அழைத்துக் கொண்டு ராமதாசர் கிளம்பி விட்டார். செல்லும் வழியில் ஒரு ஓடையைக் கடக்க வேண்டி வந்தது. அவர் சீலவதியிடம், "செருப்புகளை  கழற்றி கையில் எடுத்துக் கொண்டு நட!" என்று உத்தரவிட்டு தானும் அதுபோலவே செய்தார். ஆனால் சீலவதி செருப்புக்காலுடனே ஓடையைக் கடந்தது, ராமதாசருக்கு அதிருப்தியை உண்டாக்கியது.

சிறிது தூரம் சென்ற பிறகு, ஒரு வயல் நன்கு விளைந்திருந்ததைக் கண்ட ராமதாசர், "நிலச் சொந்தக்காரனுக்கு நல்ல லாபம் கிடைக்கும்!" என்றார். உடனே சீலவதி, "லாபம் கிடைத்தால் மட்டும் போதுமா? வந்த பணம் எதுவும் தங்காமல் பாழாகப் போகிறது!" விமரிசனம் செய்தாள். அவள் பேசியது ராமதாசருக்குபிடிக்கவில்லை.
 அவர்கள் மேற்கொண்டு பயணம் செய்து கொண்டே ஒரு நகரத்தின் வழியே சென்றனர். அழகாக இருந்த அந்த நகரத்தைக் கண்ட ராமதாசர், "என்ன அழகான நகரம்!" என்றார். உடனே சீலவதி, "அழகாயிருந்து என்ன பயன்? எதிரிகளின் தாக்குதலுக்குட்பட்டு நாசமாகும்!" என்று கூறினாள்.

சில நேரத்திற்குப் பிறகு, நண்பகல் வேளையில் ஓய்வெடுக்க ராமதாசர் ஒரு ஆலமரத்தடியில் அமர்ந்தார். சீலவதி மரத்தில்இருந்து சற்று தொலைவில் சென்று அமர்ந்தாள். இதனால் சீலவதியின் மீது வெறுப்பு அதிகரித்தது.அதன்பிறகு ஒரு மாட்டு வண்டியை அமர்த்திக் கொண்டு இருவரும் பயணம் செய்தனர்.

செல்லும் வழியில் தனது நண்பர் வீட்டில் சிறிது நேரம் தங்கி விட்டு உணவருந்தியபின் ராமதாசர் மாட்டு வண்டியில் படுத்துக் கொண்டார். சீலவதி வண்டியின் நிழலில் அமர்ந்து கொண்டாள். அப்போது வீட்டருகில் இருந்த ஒரு மரத்தில் ஒரு காக்கா "கா.... கா" என்று கரைய ஆரம்பித்தது.

சீலாவதி அதை நோக்கி, "நீ சொல்வது என் காதில் விழுகிறது. ஆனால் என்ன பிரயோசனம்? ஒருமுறை தவறு செய்ததால், என் புருஷன் வீட்டை விட்டு வெளியேற நேர்ந்தது. மறுமுறையும் தவறு செய்தால் என் புருஷனை நிரந்தரமாக நான் பிரிய வேண்டி வரும்!" என்றாள்.

மருமகள் காக்காவுடன் பேசியதைக் கேட்ட ராமதாசர் அளவற்ற வியப்படைந்தார். உடனே வண்டியில்இருந்து வெளிவந்து, "மருமகளே! நீ இப்போது கூறியதன் அர்த்தம் என்ன?" என்று கேட்டார்."என்னெவென்று சொல்வேன், தந்தையே! எனக்குள்ள விசேஷ சக்திகள் எனக்கு துன்பத்தைத் தான் கொடுக்கின்றன.

எனக்கு மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் மொழி தெரியும்!" என்றாள். தொடர்ந்து, "ஒருநாள் நள்ளிரவு வீட்டை விட்டு நான் தனியே குடத்துடன் சென்றதைப் பார்த்திருப்பீர்கள். அன்று நான் ஏன் அவ்வாறு செய்தேன் தெரியுமா? ஒரு குள்ளநரி அப்போது ஊளையிட்டுக் கொண்டே, "ஆற்றில் ஒரு பெண்ணின் பிணம் மிதக்கிறது.
 அதன் உடலில் ஏராளமான நகைகள் உள்ளன!" என்று தெரிவித்தது. அதைக் கேட்டவுடன் நான் யாருக்கும் சொல்லாமல் குடத்தை எடுத்துக் கொண்டு ஆற்றிற்குச் சென்றேன். ஆற்றில் நீந்திச் சென்று பிணத்தின் உடலிலிருந்து நகைகளைக் கழற்றி குடத்தில் இட்டு, குடத்தை நம் வீட்டுத் தோட்டத்தில் புதைத்து வைத்து விட்டேன்.

ஆனால் என் செய்கையைத் தவறாகப் புரிந்து கொண்ட நீங்கள் என்னை வீட்டை விட்டே வெளியேற்றி விட்டீர்கள். இப்போது அந்த காக்கா இதோ, இந்த மரத்தினடியில் ஒரு புதையல் இருக்கிறதாம்!" என்று சொல்லி முடித்தாள்.உடனே ராமதாசர் மரத்தினடியில் தோண்ட, அங்கு புதையல் கிடைத்தது.

உடனே அவர், "மருமகளே! உன்னைத் தவறாகப் புரிந்து கொண்டேன். வா, நம் வீட்டிற்குச் செல்வோம்!" என்று கூறி சீலவதியை அழைத்துக் கொண்டு தன் வீடு திரும்பலானார்.திரும்பும் வழியில் அதே ஆலமரம் தென்பட்டவுடன், அவர் அவளை நோக்கி, "சீலவதி! வரும்போது நான் இதனடியில் ஓய்வெடுக்க, நீ விலகி அமர்ந்ததன் காரணம் என்ன?" என்று வினவினார்.

"அப்பா! மரத்தடியிலுள்ள பொந்துகளில் பாம்புகள் இருக்கலாம். தவிர மரத்தில் அமரும் பறவைகள் நம் மீது எச்சமிடும்" என்றாள். மேற்கொண்டு பயணம் செய்கையில், அதே நகரம் மீண்டும் வந்தது. உடனே சீலவதி, "பாதுகாப்பில்லாத இந்த நகரத்தின் மீது எதிரிகள் படையெடுத்தால், இதை அவர்கள் எளிதாகக் கைப்பற்றி விடுவார்!" என்றாள்.
பிறகு நன்கு விளைந்த வயல் தென்பட்டது. அவள் அதைப் பார்த்ததும், "இந்த நிலச் சொந்தக்காரன் விளைச்சலை விற்று அதை நல்வழிக்காகப் பயன்படுத்தினால் தான் அவனுக்கு லாபம் கிடைக்கும்" என்று விளக்கம் கொடுத்தாள்.

மேற்கொண்டு திரும்பும் வழியில் அந்த ஆறு குறுக்கிட்டது. ஆற்றைக் கண்டதும் சீலவதி, "ஆற்றில் சரளைக் கற்கள் உள்ளன. தவிர ஆற்றில் சிறிய ஜீவராசிகள் உள்ளன. ஆகையால் தண்ணீரில் நடக்கும் போது கண்டிப்பாக செருப்பு அணிய வேண்டும்" என்று விளக்கம் தந்தாள். வீட்டை அடைந்தவுடன் முதல் காரியமாக, பணப் பெட்டியின் சாவியை அவளிடம் கொடுத்ததுடன், நிர்வாகப் பொறுப்பையும் அவளிடமே கொடுத்து விட்டார்.


அந்த சமயம், ராஜா ஒரு புது மந்திரியை நியமிக்க விரும்பினார். அதற்காக நாட்டிலுள்ள பலரை தேர்வு செய்ய அழைத்தார். சீலவதியின் கணவன் விஜயனும் சீலவதியுடன் தலைநகரை அடைந்து மன்னனின் தர்மசாலையில் தங்கினான். அன்று தேர்விற்கு வந்தவர்களிடம் ராஜா, "மன்னனை காலால் உதைப்பவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?" என்று கேட்டார். ஒருவன், "அவனை நன்கு சவுக்காலடிக்க வேண்டும்" என்று ஆளுக்கு ஆள் தங்களுக்குத் தோன்றியதையெல்லாம் கூறிக் கொண்டிருந்தனர்.

உடனே விஜயன் ஓடோடி வந்து, தன் மனைவி சீலவதியிடம் அதற்கு சரியான பதில் என்ன என்று கேட்டான். அதற்கு சீலவதி, "ராஜாவை யாராவது காலால் உதைக்க முடியுமா? அவ்வாறு யாராவது செய்தார்கள் என்றால் அது அவருடைய குழந்தையாக இருக்க வேண்டும்!" என்று கூறினாள். உடனே விஜயன் மன்னரிடம் சென்று, "மகாராஜா! காலால் உதைத்தவர் மீது அதிக அன்பு செலுத்த வேண்டும்!" என்றான். இதைக் கேட்ட ராஜா அவனையே மந்திரியாகத் தேர்வு செய்தார்.

0 comments:

Post a Comment

Flag Counter