உப்பைப் போன்ற பாசம்!

 ஒரு கர்வம் பிடித்த ராஜாவிற்கு ஏழு பெண்கள் இருந்தனர். அவர்கள் திருமணப் பருவத்தை எட்டியவுடன் மணமகன்களைத் தேடுவதற்குமுன், தன் பெண்கள் தன்னை எந்த அளவிற்கு நேசிக்கின்றனர் என்று சோதிக்க ஆசைப்பட்டார். உடனே அவர்கள் அனைவரையும் தன் முன் அழைத்த ராஜா, “என் அருமைப் பெண்களே! நீங்கள் என் மீது எத்தனை பாசம் வைத்திருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்” என்றார்.

உடனே முதல் ஆறு பெண்களும் தங்களுடைய பாசத்தைப் பற்றி வானளாவ உயர்த்திக் கூறினர். ஒருத்தி “அப்பா! உங்களைத் தேனைப் போல் நேசிக்கிறேன்” என்று சொல்ல, ஒருத்தி “உங்களைக் கரும்பைப்போல் நேசிக்கிறேன்” என்று சொல்ல, மற்றொருத்தி, “உங்களைப் பாயசம் போல் நேசிக்கிறேன்” என்று சொல்ல, ஒரே புகழ் மாலைகளாகக் குவிந்தன. ஆனால் கடைக்குட்டி மட்டும்,  “அப்பா, உங்களை உப்பைப் போல் நேசிக்கிறேன்!” என்றாள்.

அவளுடைய பதிலைக் கேட்டு ராஜா திடுக்கிட்டுப் போனார். “என்ன? என் மேல் உனக்குப் பிரியம் அவ்வளவுதானா? நான் உப்பைப் போல் கரிக்கிறேனா? இதுதானா உன் பாசமா?” என்று கோபத்துடன் கேட்க, அவள், “அப்பா! நான் உண்மையைத்தான் கூறுகிறேன். உங்கள் மீது எனக்குள்ள அன்பு அளவிட முடியாதது” என்றாள்.

ஆனால் அவள் மீது  ராஜாவிற்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கியது. அவளைப் பழி வாங்க முடிவு செய்த ராஜா, தனது முதல் ஆறு பெண்களுக்கு நல்ல இளவசர்களாகத் தேர்வு செய்த பிறகு, கடைசிப் பெண்ணுக்கு  ஓர் ஏழை விறகு வெட்டியுடன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார். தன் தந்தையின் முடிவைக் கண்டு அதிர்ந்து போன கடைசிப் பெண் குமுறிக் குமுறி அழுதாள். என்றாவது ஒருநாள் அவருக்கு உண்மை தெரியும் என்று நம்பிய அவள் மவுனமாகத் திருமணத்திற்கு உடன்பட்டாள்.  திருமணத்திற்குப் பின் கணவனுடன் காட்டில் குடிசை அமைத்து வாழத் தொடங்கினாள். திருமணம் முடிந்த மறுநாளே விறகுவெட்டி தன் தொழிலைத் தொடங்க கிளம்பியபோது, இளவரசி “வேலை முடிந்து திரும்புகையில், ஒவ்வொரு நாளும் எனக்கு ஏதாவது பரிசு கொண்டு வாருங்கள். அதன் மூலம் நமக்கு நல்ல காலம் பிறக்கும்” என்றாள்.

இளவரசியே தன்னை மணந்தது குறித்து பெருமிதத்திலிருந்த விறகு வெட்டி, அவளுக்காக எது செய்யவும் தயாராக இருந்தான். ஆனால் வேலை மும்முரத்தில் பரிசைப் பற்றி மறந்து போக, இருட்டி வீடு திரும்பும் போது தான் அவனுக்கு ஞாபகம் வந்தது. பரிசாக எடுத்துச் செல்லுமளவிற்கு அவனுக்கு எதுவும் தென்படவில்லை. கடைசியில் ஏதோ நீளமான ஒன்று காலில் தட்டுப்பட, அது கயிறாக இருக்கும் என்று நினைத்து அதையே வீட்டிக்குக் கொண்டு சென்றான். அவன் குடிசையை அடைந்தபின் அந்த கயிறை இளவரசியிடம் தந்தான். அதைக் கண்டதும் அவளுக்குத் தூக்கி வாரிப்போட்டது.

“ஐயோ! இது செத்த பாம்பு!” என்று கத்தினாள். “ஐயோ! போயும் போயும் இதையா என் மனைவிக்குப் பரிசாகக் கொண்டு வந்தேன்!” என்று விறகு வெட்டி வருந்த, இளவரசி, “கவலைப்படாதே! அதைத்தூக்கி இப்போதைக்கு கூரைமேல் வீசியெறி! நாளைக் காலை அதை என்ன செய்வதென்று யோசிக்கலாம்!” என்றாள்.

அதே தினத்தன்று, அரண்மனையில் பட்டத்து ராணி மிகவும் சோகமாக இருந்தாள். தனது கடைசிப்பெண்ணின் தலைவிதியை நினைத்து நினைத்து அரண்மனை நந்தவனத்தில் உலவிக் கொண்டே மருகிக் கொண்டிருந்தவள், தன் கழுத்திலிருந்து வைர அட்டிகை அவிழ்ந்து விழுந்ததைப் பார்க்கவில்லை. விண்ணில் பறந்து கொண்டுஇருந்த கழுகு ஒன்று, அட்டிகையைத் தன் அலகில் கவ்விக் கொண்டு பறந்து விட்டது.

உயரே பறந்து கொண்டு இருந்த கழுகின் கண்களில் விறகு வெட்டியின் குடிசையின் கூரை மீதிருந்த செத்த பாம்பு தென்பட, உடனே வைர அட்டிகையைக் கூரையில் போட்டுவிட்டு, பாம்பை எடுத்துச் சென்றது. அதற்குள் அரண்மனையில் ராணியின் அட்டிகை காணாமல் போனதால் ஒரே பரபரப்பு ஏற்பட்டது. அட்டிகையைக் கண்டு பிடிப்பவர்களுக்கு, அவர்கள் விரும்புவது எதுவானாலும் தரப்படும் என்று ராஜா தண்டோராப் போடச் செய்தார்.

 அடுத்தநாள் காலை, விறகு வெட்டி தன் வேலைக்குக் கிளம்பியபோது, தன் குடிசையின் கூரையில் ஏதோ பளபளவென மின்னுவதைக் கண்டு தன் மனைவியான இளவரசியைக் அழைத்தான். வெளியே ஓடி வந்த அவள் கூரையின் மேல் விழுந்திருந்த வைர அட்டிகையைக் கண்டுத் திகைத்துப் போனாள். அதை விறகு வெட்டி கூரையிலிருந்து எடுத்து அவள் கையில் தர, “அடடே! இது என் தாயின் அட்டிகை அல்லவா? இது எப்படி இங்கே வந்தது?” என்று ஆச்சரியத்துடன் குழம்பியவள், “என்னுடைய தந்தை என்னைப் புரிந்து கொள்ளும் காலம் இத்தனை சீக்கிரம் வரும் என்று நான் நினைக்கவில்லை” என்றாள்.

அப்போது தூரத்தில் அரண்மனை ஆள் ஒருவன் தண்டோராப் போட்டு வைர அட்டிகையைப் பற்றி அறிவிப்பது கேட்டது. அதைக் கேட்டதும் இளவரசியின் முகம் மலர்ந்தது. அவள் தன் கணவனை நோக்கி, “அரண்மனைக்குச் சென்று என் தந்தையை சந்தித்து இந்த அட்டிகையைக் கொடுங்கள். நீங்கள் யாரென்று அவருக்குத் தெரியாமல் மாறுவேடத்தில் செல்லுங்கள். அவரிடம் பரிசு எதையும் கேட்காதீர்கள். நாளைக்கு நம் வீட்டில் விருந்துண்ண வருமாறு அழையுங்கள். அதுவே போதும்” என்றாள்.

அதன்படியே, விறகு வெட்டி அரண்மனையை அடைந்து, ராஜாவை சந்தித்து அட்டிகையைக் கொடுத்தான். “மகாராஜா! பாக்கியவசமாக, மகாராணியின் அட்டிகையைக் கண்டு பிடித்தேன். இதைப் பெற்றுக் கொள்ளுங்கள்!” என்று சொன்னதும், ராஜா அதைக் கையில் வாங்கிப் பரிசோதித்தார். அது ராணியின் நகைதான் என்று தெரிந்ததும் மிக்க மகிழ்ச்சியுடன், “நீ யார்? உனக்கு என்ன பரிசு வேண்டும்? நான் முன்னமே அறிவித்தபடி நீ எது கேட்டாலும் அதைப் பெறலாம்” என்றார். “மகாராஜா! நான் ஒரு ஏழை விறகு வெட்டி! ஆனால் உங்களிடமிருந்து பரிசு எதையும் நான் விரும்பவில்லை. ஆனால் நீங்கள் நாளைக்குத் தனியாக என் குடிசைக்கு வருகை தந்து விருந்துண்ண வேண்டும்!” என்று வேண்டினான்.

அதைக் கேட்ட ராஜா தர்ம சங்கடத்திற்கு உள்ளானார். ஆனாலும் தான் முன்னமே அறிவித்தப்படி அவன் வேண்டுகோளை மறுக்க முடியவில்லை. மறுநாள் ராஜா மட்டும் விறகு வெட்டியின் குடிசைக்குச் சென்றார். இளவரசி தன் முகத்தை ஒரு திரையினால் மறைத்துக் கொண்டு ராஜா முன் வந்து அவரை வணங்கினாள். ராஜாவினால் தன் பெண்ணை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் ராஜா விருந்துண்ண அமர்ந்தார். அவருக்கு இளவரசி இனிப்புப் பண்டங்களாகப் பரிமாறினாள்.
 அவற்றை அவர் உண்டபிறகு, மீண்டும் இனிப்புகளையே பரிமாற, அவருக்குத் திகட்டி விட்டது. “எனக்கு இனிமேல் இனிப்பு வேண்டாம்! உப்புள்ள பண்டங்களை உண்ண என் நாக்கு துடிக்கிறது. அவற்றில் ஏதாவது இருந்தால் கொண்டுவா!” என்றார் ராஜா! உடனே உப்பே இல்லாத உணவை அவர் முன் வைத்தாள். அதை உண்ட அவர், முகம் சுளித்து தட்டைத் தள்ளி விட்டார்.

இதற்காகவே காத்திருந்த இளவரசி, அவர் முன் வந்து நின்று தன் முகத்திரையை அகற்றி, “அப்பா! அன்று ஒருநாள் உங்களை உப்பைப் போல் நேசிக்கிறேன் என்று சொன்னதற்காக என் மேல் கோபம் கொண்டீர்கள். இப்போதாவது இனிப்பை எப்போதும் உண்ண முடியாது என்பதையும், உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பதையும் புரிந்து கொண்டீர்களா?” என்றாள்.

ராஜா தன் தவறை உணர்ந்தார். இளவரசியை நோக்கி, “மகளே! உப்பின் அருமையை இன்று புரிந்து கொண்டேன். நீதான் அனைவரையும் விட என் மீது பாசம் உள்ளவள் என்பதைப் புரிந்து கொண்டேன். நான் சொன்னேன் என்பதற்காக வசதியைப் பற்றி கவலைப்படாமல் ஒரு ஏழையை மணந்து வறுமையில் வாடுகிறாய். என்னை மன்னித்து விடு!” என்று கூறி கண்ணீர் வடித்தார்.

தன் பெண்ணின் பாசத்தை சரியாக உணர்ந்த ராஜா, அவள் கணவனுக்கு தன் ராஜ்யத்தின் ஒரு பகுதியை அளித்து ஆட்சி புரியச் செய்து, அவனையும் மன்னனாக்கி அழகு பார்த்தார்.

0 comments:

Post a Comment

Flag Counter