லட்சுமணனின் யோகம்

 
ஒரு கிராமத்தில் லட்சுமணன் என்ற விவசாயி தன் மனைவியுடனும் மகளுடனும் வசித்து வந்தான். பூர்வீகச் சொத்தான ஐந்து ஏக்கர் நிலத்தில், அவன் பாடுபட்டு விவசாயம் செய்து வந்தான். கிராமத்தின் எல்லையிலிருந்த மலைகளிலிருந்து, ஒரு வாய்க்கால் லட்சுமணனுடைய நிலத்திற்கருகே பாய்ந்து கொண்டிருந்தது. அவன் மட்டுமன்றி அந்த கிராமத்திலிருந்த அத்தனை விவசாயிகளும் அந்த வாய்க்காலையே நீர்ப்பாசனத்திற்கு நம்பியிருந்தனர்.
ஆனால் நான்கு ஆண்டுகளாக மழை சரிவரப் பெய்யாததால், வாய்க்கால் நீரோட்டமின்றி வற்றிப் போயிற்று. கிராமத்திலிருந்து பலர் பிழைப்பைத் தேடி அந்த கிராமத்தை விட்டு அயலூர் சென்று விட்டனர்.

ஆனால் லட்சுமணனுக்கு அயலூர் சென்று கூலி வேலை செய்வதில் நாட்டமில்லை. அருகிலிருந்த நகரத்திற்கு ஏதோ வேலையாகச் சென்ற லட்சுமணன் ஒரு நாளிரவு நகரத்துச் சத்திரத்தில் தங்கினான். அப்போது அங்கு தங்கியிருந்த சிலர் "தண்டகாரண்ய காட்டில் வைரங்களும், ரத்தினங்களும் கிடைக்கின்றனவாம்! ஆனால் அவற்றைத் தேடிச் செல்லும் எல்லாருக்கும் பாக்கியம் கிட்டுவதில்லை. என்னுடைய மூன்று உறவினர்கள் வைரக்கற்களைத் தேடி தண்டகாரண்யம் சென்றனர். ஒருவனுக்கு மட்டும் வைரமும், ரத்தினமும் கிடைத்தன. மற்ற இருவரும் தேடஇலைந்து நோய் வாய்ப்பட்டதுதான் மிச்சம்," என்றான் ஒருவன்.

அதற்கு மற்றொருவன், "ஒருவனுக்கு யோகம் உள்ளதா இல்லையா என்று அறிய வேண்டுமானால், அவன் தண்டகாரண்யம் சென்று முயற்சி செய்ய வேண்டும்!" என்று விமரிசனம் செய்தான். மற்றவர்கள் அதை ஆமோதித்தனர்.

அவர்கள் சொல்வதைக் கேட்டவுடன்தான் லட்சுமணனுக்கு தானும் ஏன் தண்டகாரண்யம் சென்று இரத்தினம் எடுத்து வர முயற்சி செய்யக்கூடாது என்ற யோசனை பிறந்தது. வீட்டை அடைவதற்குள் அவனுடைய அந்த யோசனை தீர்மானமாக மாறியது. அவன் தன் மனைவியிடம் தான் சத்திரத்தில் கேட்டறிந்த தகவலைக் கூறிவிட்டு, "நான் தண்டகாரண்யம் செல்வதாக முடிவு செய்து விட்டேன். நீ உன் அண்ணன் வீட்டிற்குப் போய்விடு!" என்றான்.

தன் கணவனின் பிடிவாத குணத்தையறிந்த அவன் மனைவி உடனே தன் அண்ணனை வரவழைத்தாள். அவனும் லட்சுமணனிடம், "தண்டகாரண்யம் செல்லும் முடிவை மாற்றிக்கொள். நூற்றில் ஒருவருக்குத்தான் வைரமும், இரத்தினமும் கிடைக்கும். அதனால் உன் முடிவை மாற்றிக் கொள்" என்று கூறினான்.

ஆனால் அதையெல்லாம் கேட்காமல் லட்சுமணன் தண்டகாரண்யத்திற்குச் சென்று ஆறு மாதங்களாக தன் அதிருஷ்டத்தைத் தேடி அலைந்தான். வைரம் ஒன்றும் கிடைக்கவில்லை. இறுதியில் நோய்வாய்ப் பட்டு வீடு திரும்பி வந்தான்.

அந்த ஆண்டு பலமாக மழைபெய்து, வாய்க்காலில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி லட்சுமணனின் வயலை மூழ்கடித்து விட்டது. தவிர மலைகளிலிருந்து வெள்ளத்தில் அடித்து வந்த ஏராளமான கற்கள் அவன் வயலில் தங்கி விட்டன. லட்சுமணன் தேங்கியிருந்த நீரை வெளியேற்றி, வயலில் நிரம்பியிருந்த கற்களை அப்புறப்படுத்தினான். அவ்வாறு செய்யும்போது, அந்தக் கற்களில் இரண்டு பளபளவென்று மின்னுவதைக் கவனித்தான். உடனே எடுத்துப் போய் தன் மைத்துனனிடம் காட்டினான். அதைப் பார்த்த  அவன், "லட்சுமணா! இவை அசல் வைரக்கற்கள்! பார்த்தாயா உன் அதிருஷ்டம் உன் வயலிலேயே இருந்திருக்கிறது" என்றான்.

 

0 comments:

Post a Comment