சுயமாக முடிவெடுக்க வேண்டும்!

 
லட்சுமிபுரியில் ராமன், சோமன், கரண் என்ற மூன்று நண்பர்கள் வசித்து வந்தனர். மூவரும் விவசாயிகள். அவர்களுள் ராமனும், சோமனும் புத்திசாலிகள். தங்களுடைய பிரச்சினைகளை தாங்களே சமாளித்துக் கொள்வார்கள். ஆனால் கரண் எந்த ஒரு விஷயத்திலும் தன் நண்பர்களின் அபிப்பிராயப்படியே நடப்பான்.

ஓராண்டு வயல்களில் நல்ல விளைச்சல் உண்டாயிற்று. அந்த ஆண்டு தலைநகரத்தில் நடைபெறும் வசந்தோற்சவத்தில் பங்கேற்க வேண்டுமென்ற ஆசை ராமனுக்கும், சோமனுக்கும் உண்டாயிற்று. உடனே கரணுக்கும் அவர்களுடன் உடன் செல்ல ஆசை உண்டாயிற்று. ஆனால் நண்பர்கள் இருவரும் கரணிடம், "இது நீண்ட பயணம் செல்லும் வழியில் எத்தனையோ இடைஞ்சல்கள் உண்டாகலாம். உன்னால் அவற்றை சமாளிக்க இயலாது. நீ வர வேண்டாம்!" என்று சொல்லிப் பார்த்தனர். ஆனால் கரண் தானும் வந்துதான் ஆக வேண்டுமெனப் பிடிவாதம் செய்தான். ஆக, மூவருமாக தலைநகரத்தை நோக்கிக் கிளம்பினர்.

மூன்று நாள்கள் தொடர்ந்து பயணம் செய்த பின், ஒரு காட்டு வழியாகச் செல்ல நேர்ந்தது. இரண்டு மலைகளுக்கிடையே ஒரு நதி பாய்ந்தோடிக் கொண்டிருந்தது. மூவருக்கும் அந்த நதியில் படகில் பயணம் செய்ய வேண்டி வந்தது. திடீரென நதியில் வெள்ளப் பெருக்கு அதிகரித்து, படகை நதி தன் போக்கில் எங்கேயோ இழுத்துச் செல்ல ஆரம்பித்தது. மூருவரையொருவர் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். இறுதியில் படகு ஒரு தீவில் ஒதுங்கியது. இந்த மட்டும் உயிர் தப்பிப் பிழைத்தோமே என்று மகிழ்ந்தாலும், பசி அவர்களை வாட்டி வதைத்தது. அப்போது அத்தீவில் ஒரு பெரிய மாமரம் தென்பட, ராமன் மரத்திலேறத் தொடங்கினான்.
 அப்போது மரத்தில்இருந்து ஒரு பெரிய பூதம் அவர்கள் முன் குதித்தது, "யாரடா நீங்கள்? என்னுடைய மாமரத்தில் உங்களுக்கு என்ன வேலை?" என்று கர்ஜித்தது. பூதத்தைக் கண்டவுடன், மூவரும் பயத்தில் ஓட, பூதம் அவர்களைக் கூப்பிட்டு, "பயப்படாதீர்கள்! நான் உங்களை ஒன்றும் செய்ய மாட்டேன்! இங்கே வாருங்கள்!" என்று அழைத்தது. மூவரும் தயங்கிக் கொண்டே பூதத்தை அணுகினர்.

"நீங்கள் இத்தீவிற்கு எப்படி வந்தீர்கள்?" என்று பூதம் கேட்கவும், நண்பர்கள் தங்கள் சோகக் கதையைக் கூறினார்கள். அவர்களைக் கண்டு இரங்கிய பூதம் அவர்களுக்குத் தின்ன பல மாம்பழங்களைப் பறித்துத் தந்தது. மூவரும் பூதத்திற்கு நன்றி கூறினர். அவர்களிடம் பூதம், "இங்கிருந்து உங்களால் எங்குமே செல்ல முடியாது. ஆதலால் நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரேயொரு வரம் தருகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. மூவரும் ஒரே மாதிரியான வரம் கேட்கக் கூடாது. இப்போது கேளுங்கள்!" என்றது.

உடனே ராமன், "எனக்கு என் வீடு சேர்ந்தால் போதும்!" என்றான். அடுத்த கணமே அவன் தன் வீட்டை அடைந்தான்.
"நான் தலைநகரத்திற்குச் சென்று வசந்தோற்சவம் பார்க்க விரும்புகிறேன்!" என்று சோமன் கூற, பூதம் அவனை அங்கே அனுப்பி விட்டது.  கடைசியில் மிஞ்சியது கரண்தான்! ஆனால் புதிதாக இப்போது என்ன வரம் கேட்பது என்றே கரணுக்குத் தோன்றவில்லை.
அவரவர்கள் தங்களுக்கு வேண்டிய வரத்தை கேட்டு விட்டு மறைந்து விட்டனர். குழம்பிப்போன கரண் பூதத்திடம், "என்ன வரம் கேட்பதென்றே எனக்குத் தோன்றவில்லை. எனக்கு என் நண்பர்களைக் கலந்து ஆலோசிக்க வேண்டும். அவர்களை இங்கே வரவழைத்து விடு!" என்று உளறிக் கொட்ட, அடுத்த கணமே ராமனும், சோமனும் திரும்பி வந்து விட்டனர். வரம் கொடுத்த பூதம் மறைந்து விட்டது.

மற்ற இருவருக்கும் கரண் மீது கடுங்கோபம் ஏற்பட்டது. "இதற்காகத்தான் நீ எங்களுடன் வர வேண்டாம் என்று அப்போதே சொன்னோம்! கேட்டாயா? உன்னால், இப்போது நாங்களும் மாட்டிக் கொண்டோம். இனி இங்கிருந்து வீட்டிற்கு எப்படிச் செல்வது?" என்று புலம்பித் தீர்த்தனர்.

ஆனால் பூதம் மறுபடியும் அவர்கள் முன் தோன்றியது. கரணை நோக்கி, "என்னப்பா? நண்பர்களைக் கலந்து ஆலோசித்தாயா?" என்று கேட்டது. உடனே மற்ற இருவரும் பூதத்தின் கால்களில் விழுந்து, "எங்களைக் கலந்து ஆலோசிக்காமல் எந்தக் காரியத்திலும் இவனால் சுயமாக முடிவு எடுக்க முடியாது. இவனால் நாங்களும் இப்போது சிக்கிக் கொண்டோம். இவனை எங்கள் கிராமத்தில் அம்மன் கோயிலுக்கு அனுப்பிவிடு. அதேபோல், நாங்கள் முன்னமே கேட்டபடி அதேயிடங்களுக்கு எங்களை அனுப்பி வை!" என்று கெஞ்சினர்.

பூதம் பலமாக சிரித்துக் கொண்டே, "மற்றவர்களைக் கலந்து ஆலோசிப்பது தவறில்லை. ஆனால் இறுதியில்
முடிவு எடுப்பதை நாம்தான் செய்ய வேண்டும்" என்று சொல்லிய பிறகு அவர்கள் மூவரையும் அவர்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு அனுப்பி வைத்தது. மற்றவர்களின் யோசனைப் படியே எப்போதும் செயற்படுவது விவேகமில்லை என்பதைக் கரனும் புரிந்து கொண்டான். இனி தானே நன்கு யோசித்து முடிவெடுப்பது தான் சாலச்சிறந்தது என்று தெரிந்து கொண்டான்.

0 comments:

Post a Comment