ஒரு நிமிடம் பொறுமை காத்திருந்தால்...

அருண் ஒரு வேலையில்லாப் பட்டதாரி. ஆனால் வாய்த்துடுக்கு அதிகம். எத்தனையோ நேர்முகத் தேர்வுகளுக்குச் சென்றும், அவனது எடுத்தெறிந்து பேசும் குணத்தால் பல நல்ல வேலைகள் கிடைக்காமல் போயிற்று. அவன் தந்தை பல முறை அறிவுரை கூறியும், அவனால் வாயை அடக்க முடியவில்லை. இப்படியே ஒரு வருடம் ஓடி விட்டது. இப்படியே போனால் தனக்கு வேலையே கிடைக்காது என்பதை உணர்ந்த அருண், தனது குணத்தை மாற்றிக்கொள்ள முடிவெடுத்தான்.

அதன் பின் பெரிய நிறுவனமொன்றில் இருந்து நேர்காணலுக்கான அழைப்பு வந்தது. தான் பொறுமையாக இருந்தாலும், கேள்வி கேட்பவர் தாறுமாறாகக் கேட்கக் கூடாது என அருண் வேண்டிக் கொண்டான். அவன் பயந்தது போலவே, நேர்காணல் நடத்திய அதிகாரி அவனை வெறுப்பேற்றும் விதத்தில் "என்ன அருண், படிப்பு முடித்து ஒரு வருடம் ஆகியுமா வேலை கிடைக்கவில்லை?" என கேள்வி கேட்டார். அதற்கு ஒரே வார்த்தையில் "ஆமாம் சார்" என பதிலளித்தான் அருண்.

"இதற்கு முன் வேலை செய்த அனுபவம் உண்டா" எனக் கேட்டார் அதிகாரி. அதற்கு, "வேலையே இன்னும் கிடைக்கவில்லை. அதனால் அனுபவத்த்திற்கு வாய்ப்பில்லை சார்" என பவ்யமாக பதிலளித்தான். "அனுபவம் இல்லாத உன்னை எப்படி வேலைக்கு சேர்த்துக் கொள்ள முடியும்?" என கொஞ்சம் அதிகாரத் தொனியில் கேட்டார் அதிகாரி.

"தயவு செய்து ஒரு வாய்ப்பு கொடுங்கள் சார்.. என் திறமை, உழைப்பை நிரூபிக்க ஒரு வாய்ப்பு தாருங்கள்"
" சரிதான்! நீ அனுபவம் பெறவே ஆறு மாசமாகும். அதுவரை உனக்கு தண்டச் சம்பளம் கொடுக்க முடியுமா?" என நக்கலாகக் கேட்ட அதிகாரி மீது கோபப்பட்டான் அருண். ஆனாலும், வாயை அடக்கிக் கொண்டு பொறுமை காத்தான்." உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால், ஆறு மாதங்கள் சம்பளமில்லாமல் வேலை செய்கிறேன். அதன் பிறகு என் திறமையைப் பார்த்து சம்பளம் கொடுங்கள்" என அடக்கத்துடன் கூறினான். அருணின் இந்த அடக்கமான தன்னம்பிக்கை தரும் பதில்களால், அதிகாரி திருப்தியடைந்தார். நல்ல சம்பளத்துடன் அருணுக்கு வேலை தர முடிவு செய்தார்.


ஆனாலும் இன்னும் ஒரு கேள்வி கேட்டு அருணை சோதிக்க விரும்பி, "உன் திறமை மீது நம்பிக்கை வைக்க முடியாது. நீ சொல்வதை நம்பி எப்படி பொறுப்புகளை உன்னிடம் ஒப்படைப்பது?" என, அவனது வேலைக்கான ஆர்டரை கம்ப்யூட்டரில் தயார் செய்து கொண்டே கேட்டார். அதுவரை பொறுமையாக பதிலளித்த அருண், ஒரு வினாடி தன்னிலை மறந்து "உங்களை மாதிரி கேள்வி கேட்கத் தெரியாதவர்களே நல்ல வேலையில் இருக்கும் போது, என்னை மாதிரி திறமையானவர்கள் நிச்சயமாக பொறுப்புகளை கவனித்துக் கொள்ள முடியும்" என எடுத்தெறிந்து பதிலளித்தான்.

அருணின் இந்த பதிலால் அதிர்ச்சியடைந்த அதிகாரி, அந்த ஆர்டரை அப்படியே அழித்து விட்டு, அருணை வெளியேற்றி விட்டார். ஒரு நிமிடம் நிதானிக்காமல் பேசி, பெரிய வாய்ப்பை இழந்த அருண், அதன் பின் பல மாதங்கள் வேலையின்றி அலைந்து கொண்டிருந்தான்.

0 comments:

Post a Comment

Flag Counter