பிரதாபவர்மன்


 பிரதாப்கர் என்ற நாட்டை மகேந்திர பிரதாப் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவருக்கு பிரதாபவர்மன் என்றொரு புதல்வன் இருந்தான். நற்குணங்கள் நிரம்பப் பெற்ற இளவரசன் பிரதாப வர்மனை குடிமக்கள் அனைவரும் மிகவும் நேசித்தனர். வில்வித்தையில் மிகத் தேர்ச்சி பெற்றிருந்தாலும், அவன் மிருகங்களையும், பறவைகளையும் ஒரு போதும் வேட்டையாட விரும்பியதேயில்லை.

ஒருநாள், அயலூரிலிருந்து வந்த மூன்று நபர்கள் மன்னரின் சபைக்கு வந்து, மன்னரை சந்தித்துத் தங்களுடைய அபூர்வ சக்திகளைப் பற்றி மன்னருக்குத் தெரிவித்தனர். ஒருவன் வில்வித்தையில் மிகவும் தேர்ந்தவன் என்றும், மற்றொருவன் காற்றினும் விரைவாக ஓட வல்லவன் என்றும், மூன்றாமவன் வெகு தொலைவில் நடக்கும் விஷயங்களைக்கூட தன் ஞானக்கண்களால் பார்க்க வல்லவன் என்றும் தெரிய வந்தது.

அவர்களுடன் தோழமை பூண்ட இளவரசன், அவர்களோடு அயல் நாடுகளுக்குப் பயணம் செய்யும் ஆசை கொண்டான். மன்னர் அனுமதித்த அடுத்த நாளே, பிரதாபன் அந்த மூன்று நபர்களுடன் பயணத்தைத் தொடங்கினான். அவர்கள் செல்லும் வழியிலே, சாலையில் இருந்த ஒரு பொந்தினுள் மழை நீர் நிரம்பியிருந்தது. அதனுள் சிக்கிக்கொண்ட ஒரு எலி வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டுஇருந்தது. அதைக் கண்ட பிரதாபன் எலியின் பொந்தின் அருகில் ஓர் அம்பினைச் செருக, நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த எலி அம்பைப் பிடித்துக் கொண்டு, வெளியே வந்து விட்டது.

 பிரதாபனைப் பார்த்து, "இளவரசே! என்னுடைய உயிரைக் காப்பாற்றியதற்கு மிகவும் நன்றி! நான் எலிராஜா! எங்கள் உதவி தேவைப்பட்டால், தரையில் படுத்துக் கொண்டு என்னைக் கூவி அழைத்தால் போதும்! உடனே நாங்கள் அணி திரண்டு வருவோம்!" என்று கூறி விடை பெற்றுச் சென்றது.

பிறகு நால்வரும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். மற்றோருஇடத்தில், ஒரு தெருவின் ஓரமாக எறும்புகள் சாரிசாரியாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தன. அப்போது அருகிலிருந்த வீட்டில்இருந்து யாரோ ஒருவன் ஒரு பெரிய தவலையிலிருந்து தண்ணீரைத் தெருவினில் கொட்ட, அனைத்து எறும்புகளும் அதில் மூழ்கித் தத்தளிக்கத் தொடங்கின.

அதை கவனித்த பிரதாபன், ஒரு மரத்தில்இருந்து பல இலைகளைப் பறித்து அவற்றை நீரில் மிதக்க விட்டான். நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த எறும்புகள் அனைத்தும் இலைகள் மீது ஏறிக் கொண்டு நீரில் மூழ்காமல் தப்பின. பிறகு எறும்புகள் பிரதாபனை நோக்கி, "இளவரசே! எங்கள் வாழ்நாள் முழுவதும் உனக்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். உனக்கு எங்கள் உதவி தேவைப்பட்டால்கைதட்டி எங்களை அழைத்தால் போதும். உடனே உன்னுதவிக்கு நாங்கள் ஓடோடி வருவோம்!" என்று கூறி விடைபெற்றன.

மீண்டும் பயணத்தைத் தொடர்ந்த நால்வரும் மறுநாள் சந்திராப்பூர் நாட்டினை அடைந்தனர். அந்நாட்டை ஆண்டு வந்த சந்திரேசன் மிகவும் குரூர புத்தி உடையவன் என்று அறிந்து கொண்டனர். தன் ஒரே மகள் சந்திரமதியின் திருமணத்திற்காக பல நாடுகளிலிருந்தும் இளவரசர்களை வரவழைத்து அவர்களை மூன்று கடினமான சாதனைகள் புரிந்த பின்னரே, தன் மகளைத் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று அறிவித்து விடுவான்.
 சந்திரமதியின் அழகினால் கவரப்பட்டு மன்னன் கூறும் நிபந்தனைக்கு பலரும் சம்மதித்து விடுவர். ஆனால் கடினமான அந்த செயல்களை அவர்களால் செய்ய முடியாது. அவ்வாறு செய்யத் தவறியவர்களை, சந்திரேசன் சிறையில் அடைத்து விடுவான். சிறைப்பட்ட இளவரசர்களின் பெற்றோர் எவ்வளவு கெஞ்சினாலும், அவர்களை மன்னன் விடுதலை செய்வதில்லை. இதைஅறிந்த பிரதாபவர்மன் அவர்களை விடுவிக்கத் தீர்மானித்தான்.

பிரதாபன் உடனே சந்திரேசனிடம் சென்று தான் சந்திரமதியை மணம் புரிய விரும்புவதாகக் கூறினான். தன்னுடைய நிபந்தனைகளுக்கு சம்மதித்த பிரதாபனிடம் சந்திரேசன், "இமயமலையில் வாசனைஉள்ள மிகப் பெரிய தங்க நிற மலர்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை என் பெண்ணின் கூந்தலில் சூடிக்கொள்ள நீ பறித்துக் கொண்டு வர வேண்டும். நீ பொழுது விடிவதற்குள் மலர்களைக் கொண்டு வர வேண்டும். ஏனெனில், பறித்த பிறகு அவற்றின் மீது சூரிய ஒளி பட்டால் அவற்றின் தங்க நிறம் மாறி வெண்மையாகி விடும்!" என்றான்.

இது மிகக் கடினமான செயல் என்று பிரதாபனுக்குத் தோன்றியது. இமயமலை வரைச் சென்று, மலர்களைத் தேடஇலைந்து கண்டு பிடித்து, அவற்றை இரவோடு இரவாகக் கொண்டு வருவது மனித முயற்சிக்கு அப்பாற்பட்டது என்று தெளிவாகப் புரிந்தது. உடனே பிரதாபன் தன் தோழர்களைக் கலந்து ஆலோசித்தான். உடனே அவர்களில் ஒருவன் தன் ஞானதிருஷ்டியால் இமயமலையில் எந்த இடத்தில் அந்த மலர்கள் உள்ளன என்று கண்டு பிடித்து விட்டான். காற்றினும் விரைவாக ஓடக்கூடிய மற்றொருவன் அக்கணமே புயலென இமயமலைக்குச் சென்று மலர்களுடன் திரும்பிவந்தான். பிரதாபன் அரண்மனையை அடைந்து சந்திரேசனிடம் மலர்களை கொடுத்து விட்டான்.
 வியப்பும், எரிச்சலும் அடைந்த சந்திரேசன், தனது இரண்டாவது நிபந்தனையை பிரதாபனிடம் விளக்கினான். அன்றிரவு மூன்று மூட்டை அரிசியுடன், மண் கலக்கப்படும் என்றும், இரவோடு இரவாக பிரதாபன் அரிசியை மட்டும் பிரித்தெடுக்க வேண்டும் என்றான். பிரதாபனும் அதற்கு சம்மதித்தான்.

அன்றிரவு, சந்திரேசனின் பணி ஆட்கள் மூன்று மூட்டை அரிசியைத் தரையில் கொட்டி மண்ணுடன் கலந்தனர். பிறகு அனைவரும் பிரதாபனைத் தனியே விட்டுச் சென்று விட்டனர். பிரதாபனுக்கு எறும்புகள் கொடுத்த வாக்குறுதி நினைவிற்கு வந்தது. உடனே அவற்றை கைதட்டி அழைக்க, எறும்புகளின் அணி உடனே வந்து விட்டது. தன் முன் குவிக்க வைக்கப்பட்டிருந்த அரிசி, மண் கலவையைக் காட்டி அரிசியை மட்டும் தனியே பிரித்தெடுக்கக் கோரி வேண்டினான். ஆயிரக்கணக்கான எறும்புகள் சுறுசுறுப்பாக வேலை செய்து அன்றிரவே மூன்று மூட்டை அரிசியையும் தனியாகப் பிரித்து எடுத்து விட்டன.

அவற்றிற்கு நன்றி கூறிவிட்டு, பிரதாபன் சந்திரேசனிடம் சென்று தகவல் கூறியவுடன், மன்னனால் நம்பவே முடியவில்லை. ஏமாற்றமும், வெறுப்பும் அடைந்த சந்திரேசன் பிரதாபனை நோக்கி, "மூன்றாவது சோதனையில் தேற முடியுமா என்று பார்! அதோபார்! அரண்மனையின் முகப்பு வாயிலில் காய்ந்த மரம் ஒன்று நிற்கிறதல்லவா? இன்று இரவு நீ அந்த மரத்தைப் பொடியாக ஆக்கித் தரையில் குவிக்க வேண்டும். கோடரி, அரிவாள், ரம்பம் போன்ற எந்தக் கருவியுமே நான் தரமாட்டேன்!" என்று சொல்லிச் சென்று விட்டாள்.

பிரதாபன் இம்முறை தரையில் படுத்துக் கொண்டு எலிராஜாவை அழைத்து, தனக்கு உதவுமாறு கேட்டான். உடனே எலி தன் பட்டாளத்துடன் வேலையைத் தொடங்கியது. ஆயிரக்கணக்கான எலிகள் தங்கள் கூர்மையான பற்களால் முழு மரத்தையும் துண்டு துண்டாகக் கடித்து, பொடித்து, தூளாக்கின. மறுநாள் காலை அதைக் கண்டு மகிழ்ந்த பிரதாபன் சந்திரேசனிடம் சென்று வேலை முடிந்ததை அறிவித்தான்.
 சந்திரேசனின் முகம் தொங்கி விட்டது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, "பிரதாபா! நான் வைத்த மூன்று சோதனைகளிலும் நீ தேறி விட்டாய். நாளைக்கே திருமணத்தை நடத்தி விடுகிறேன்!" என்றான். உடனே பிரதாபன், சிறையில் அடைத்து வைத்துள்ள அத்தனை இளவரசர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டான். இதை எதிர்பாராத சந்திரேசன் வேறு வழியின்றி சிறைப்பட்ட இளவரசர்களையும் விடுதலை செய்தான்.

பிரதாபனுக்கும், சந்திரமதிக்கும் விமரிசையாகத் திருமணம் நடந்தது. பிறகு சந்திரமதியை அழைத்துக் கொண்டு, தன் மூன்று தோழர்களுடன் பிரதாபன் நாடு திரும்பினான். தன் மகளைத் திருமணம் செய்து கொண்டாலும் பிரதாபன் மீது சந்திரேசனுக்கு ஆத்திரம் பொங்கி வந்தது. தனது படை வீரர்களை அவன் பின்னால் அனுப்பி பிரதாபனையும் அவன் தோழர்களையும் சிறைப்பிடித்து வரச் சொன்னான்.

சந்திரமதியுடன் நாடு திரும்பிக் கொண்டிருந்த பிரதாபன் சந்திரேசனுடைய வீரர்களைக் கண்டு திகைத்தான். அவனுடைய தோழர்களில் அபார வில்வித்தை தெரிந்த ஒருவன் திரும்பி நின்று தன்னுடைய வில்லிலிருந்து சரமாரியாக அம்புகளைத் தொடுத்து எய்தினான். பிரதாபனும், மற்றவர்களும் கூடச் சேர்ந்து தங்கள் கை வரிசையைக் காட்ட, சந்திரேசனுடைய வீரர்கள் பின் வாங்கி ஓடி விட்டனர். அதன்பிறகு பிரதாபன் தன் மனைவியுடனும், தோழர்களுடனும் பத்திரமாக நாட்டைச் சென்றடைந்தான். பிரதாபன் அழகான ராஜ குமாரியுடன் திரும்பி வந்ததைக்கண்ட அவன் பெற்றோர் மகிழ்ச்சஇடைந்தனர்.

0 comments:

Post a Comment

Flag Counter