தங்க முட்டையிடும் வாத்து

 
ஒரு கிராமத்தில் ஷியாம் என்ற அனாதைச் சிறுவன் இருந்தான். நாள் முழுவதும் கூலி வேலை செய்து அதில் கிடைத்த சொற்ப வருமானத்தில் அரை வயிற்றுக்கு சாப்பிட்டுக் காலத்தை ஓட்டினான். தனக்கென்று வசிக்க ஒரு சிறிய குடிசை அமைத்துக் கொண்டான். வீட்டிலேயே ஒரு பெட்டைக் கோழியையும் வளர்த்து வந்தான். கோழியிடும் முட்டைகளை விற்று விடுவான். என்றாவது கூலி வேலை கிடைக்கவில்லையெனில், முட்டைகளை விற்காமல் அவற்றை அவித்து உண்டு விடுவான்.
 
அவனுக்குப் பக்கத்து வீட்டில் தனராஜ் என்ற பணக்காரன் வசித்து வந்தான். அவன் மிகவும் பொறாமை பிடித்தவன். மற்றவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதைக் காணப் பொறுக்காது அவனுக்கு! ஷியாம் வளர்த்து வந்த கோழி மதமதவென்று இருந்ததைக் கண்டு ஒருநாள் அந்தக் கோழியைப் பிடித்துக் கொன்று தின்று விட்டான்.
 
மாலையில் ஷியாம் கோழியைக் காணாமல் திடுக்கிட்டான். கோழியின் இறகுகள் தனராஜ் வீட்டின் கொல்லைப்புறம் சிதறியிருந்ததைக் கண்டதும், நேராக அவனிடம் சென்று அதைப் பற்றிக் கேட்டான்.
 
தனராஜ் கையும் களவுமாக அகப்பட்டக் கொண்டதும், "அது உன் கோழியா? எனக்குத் தெரியாது! என் பூனை ஏதோ ஒரு கோழியை கவ்விக் கொண்டு வந்தது. அது உன்னுடையது என்று தெரியாமல் தின்று விட்டேன்" என்றான்.
 
அதற்கு ஷியாம், "தனராஜ்! பூனை கடித்த கோழியை நீ தின்னமாட்டாய்! என் கோழியைத் திருப்பிக் கொடு அல்லது நான் ராஜாவிடம் சென்று முறையிடுவேன்" என்றான்.
ராஜாவின் பெயரைக் கேட்டதும் பயந்து போனான் தனராஜ்! ஏனெனில் அந்த ஊர் ராஜா ஏழை, பணக்காரன் என்று வித்தியாசம் பார்க்காமல் நியாயமான தீர்ப்பு வழங்குபவர்! அதனால், வீட்டுக்குள்ளிலிருந்து ஒரு வாத்தை எடுத்து வந்த அவன், "இந்தாப்பா ஷியாம்! உன் கோழிக்குப் பதிலாக இந்த வாத்தை வைத்துக் கொள். தயவு செய்து ராஜாவிடம் போகாதே!" என்று கெஞ்சினான்.
 
ஷியாமும் வீண் சண்டை வேண்டாம் என்று வாத்தைப் பெற்றுக்கொண்டான். அதை கண்ணுங்கருத்துமாகத் தீனிஇட்டு வளர்க்க, அதுவும் முட்டைகள் இடத் தொடங்கியது.
 
ஒருநாள் இரவு கனத்த மழை பெய்ய, ஒரு சாமியார் தனராஜின் வீட்டுக் கதவைத் தட்ட, அவரை தனராஜ் திட்டியனுப்பினான். அடுத்ததாக அவர் ஷியாமின் வீட்டுக் கதவைத் தட்ட, அவன் உடனே கதவைத் திறந்து அவரை குடிசையினுள்ளே அனுமதித்தான்.
 
மழையில் நனைந்திருந்த அவருக்கு மாற்றுடை தந்தான். பசியாகஇருந்த அவருக்கு, அன்று வாத்து இட்டிருந்த முட்டைகளை வேக வைத்து உணவளித்தான். இதைக் கண்டு மகிழ்ந்த சாமியார், "மகனே! எனக்குப் புகலிடம் அளித்து உணவுமளித்த உனக்கு நன்றி! நீ தந்த முட்டைகள் சுவையாயிருந்தன. இந்த முட்டைகளையிட்ட வாத்தைக் காட்டு!" என்றார். உடனே, அவன் வாத்தைஎடுத்து அவரிடம் தர, அவர் வாத்தை அன்புடன் தடவிக் கொடுத்தார்.
"மகனே! கடவுள் உனக்கு அருள் புரிவார்!" என்று வாத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டார். அப்போது மழை நின்று விட்டதால், சாமியார் அவனிடம் விடை பெற்றுக் கொண்டு வெளிஏறினார்.
 
மறுநாள் ஷியாமுக்கு ஒரு பேரதிசயம் காத்திருந்தது. அவனுடைய வாத்து தங்க முட்டையிட்டிருந்தது. ஷியாமினால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. இது அந்த சாமியாரின் மகிமைதான் என்று புரிந்து கொண்டான். அது மட்டுமல்ல! அந்த வாத்து தினமும் தங்க முட்டைகள் இட ஆரம்பித்தது. ஷியாமின் வறுமையும் நீங்கியது. செல்வம் குவியத் தொடங்கியது.
 
ஒருநாள், ஷியாமின் வாத்து தங்க முட்டையிடுவதை பக்கத்து வீட்டு தனராஜ் ஒளிந்திருந்து பார்த்து விட்டான். அதனால் பொறாமை அடைந்து அந்த வாத்தை எப்படியாவது தான் கைப்பற்ற நினைத்தான்.
 
உடனே, தனது இரு வேலைக்காரர்களுடன் ராஜாவிடம் சென்றான். "மகாராஜா! என் பக்கத்து வீட்டு ஷியாம் என் வாத்தைத் திருடி விட்டான். வாத்தைத் திருடும் போது எனது இந்த இரு வேலைக்காரர்களும் பார்த்து விட்டனர். மகாராஜா அவனை விசாரித்து என் வாத்தை தயவு செய்து திருப்பிக் கொடுக்கச் சொல்லுங்கள்!" என்றான்.
 
உடனே, ராஜா ஷியாமை வாத்துடன் சபையில் ஆஜராகும்படிக் கட்டளைஇட்டார். அவ்வாறே ஷியாம் வாத்துடன் வர, "என்னப்பா? தனராஜின் வீட்டு வாத்தை நீ திருடி விட்டாயாமே! நேற்று நீ திருடியதைப் பார்த்த இரு வேலைக்காரர்கள் இங்கே சாட்சி சொல்ல இருக்கின்றனர்" என்றார்.
 
உடனே ஷியாமுக்கு தனராஜின் வஞ்சகம் புரிந்து விட்டது. அவன் மன்னனிடம் "ராஜா! இந்த வாத்து தனராஜுடையது தான்! ஆனால் நான் இதைத் திருடவில்லை. என் கோழியைத் திருட்டுத்தனமாக ஒருநாள் கொன்று தின்றவன் இந்த தனராஜ்! அதற்குப் பதிலாக இந்த வாத்தை அவன்தான் எனக்குக் கொடுத்தான்!" என்றான்.
 
"இல்லை மன்னா! ஷியாம் பொய் சொல்கிறான்!" என்று தனராஜ் எதிர்வாதம் செய்தான். தனராஜ் கூறுவது உண்மையில்லை என்று ராஜாவிற்குத் தெரிந்து விட்டது.
ஆயினும் "இந்த வாத்து இன்றிரவு அரண்மனையிலேயே இருக்கட்டும்! நாளைக் காலை இருவரும் வாருங்கள்!" என்று சொல்லி அவர்களை அனுப்பி விட்டார். மறுநாள் காலை, அந்த வாத்து வழக்கம்போல் தங்க முட்டையிட்டது. செய்தியறிந்த ராஜா வியந்து போனார்.
 
மறுநாள், தனராஜும், ஷியாமும் சபைக்கு வந்தனர். ஒரு சாதாரண வாத்து முட்டையை தனராஜிடம் காட்டிய ராஜா, "தனராஜ்! உன் வாத்து இந்த மாதிரி முட்டையிடுமா அல்லது இதை விடச் சிறியதாக முட்டையிடுமா?" என்று கேட்டார். சற்று யோசித்த பின், "இதைவிடப் பெரியதாக இடும்!" என்றான் தனராஜ். பிறகு ராஜா அதே கேள்வியை ஷியாமிடம் கேட்க, "மகாராஜா! என்னுடைய வாத்து மகிமை வாய்ந்தது. அது தங்க முட்டையிடும்!" என்று உண்மையைக் கூறினான்.
 
உடனே தனராஜ், "பாருங்கள் ராஜா! ஷியாம் பொய் சொல்கிறான். வாத்து எங்காவது தங்க முட்டைஇடுமா? இதிலிருந்தே அவன் பேசுவது பொய் என்று தெரிகிறது!" என்றான் உற்சாகத்துடன். உடனே ராஜா, "தனராஜ்! நீ சொல்வதுதான் சரி! இந்த வாத்து உன்னுடையதுதான்! நீ எடுத்துப் போ!" என்றார். தனராஜ் மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் வாத்தை எடுத்துச் சென்று விட்டான்.
 
பிறகு மன்னர் ஷியாமிடம், "ஷியாம்! தனராஜ் எடுத்துச் சென்றது வேறு ஒரு வாத்து! உன்னுடைய தங்க முட்டையிடும் வாத்து வேறிடத்தில் பத்திரமாக உள்ளது!" என்ற ராஜா, "அதிருக்கட்டும்! உன் வாத்து தங்க முட்டையிடும் ரகசியம் என்ன?" என்று கேட்டதும், ஷியாம் தனது குடிசைக்கு ஒருநாள் இரவு தங்க வந்த சாமியாரின் அருள் அது என்று அவருக்கு விளக்கினான்.
 
அதைக் கேட்டு வியந்த மன்னர் ஷியாமிடம் அவனுடைய வாத்தை ஒப்படைத்ததுடன், அவனுக்கு அரண்மனையிலேயே ஒரு நல்ல வேலையும் போட்டுக் கொடுத்தார்.
 

0 comments:

Post a Comment