ஆற்றில் கிடைத்த மூவர்


 வெகு நாட்களுக்கு முன் ஒரு மன்னன் தன் குடி மக்களைப் பேணி நன்கு ஆட்சி புரிந்து வந்தான். மக்களின் குறை நிறைகளைப் பற்றி அமைச்சர்கள் வாயிலாகவும் ஒற்றர்கள் வாயிலாகவும் அவன் அறிந்து கொண்டான். ஆயினும் மன்னன் மாறு வேடத்தில் நாட்டின் பல பகுதிகளுக்குப் போய் மக்களை நேரில் கண்டும் அவர்களுடன் பேசியும் அவர்கள் பேசிக் கொள்வதைக் கேட்டும் நிலைமையை அறிந்து வந்தான்.

ஒரு நள்ளிரவில் மன்னன் மாறு வேடத்தில் ஒரு அரசாங்க அதிகாரியின் வீட்டின் பக்கமாகச் சென்று கொண்டிருந்தான். அங்கு பெண் குரல்களைக் கேட்டு அவன் நின்று அவ்வீட்டு சன்னல் வழியாகப் பார்த்தான். மூன்று பெண்கள் தாம் எப்படிப் பட்டவரை மணக்க விரும்புவதாகக் கூறிக் கொண்டிருப்பதை அவன் கேட்டான்.

ஒருத்தி "எனக்கு சுவையான உணவு பிடிக்கும். அதனால் அரண்மனை சமையல் காரரை மணக்க விரும்புகிறேன். அவர் மன்னனுக்கும் அரசிக்கும்  தயாரிக்கும் உணவை எனக்கும் கொடுப்பாரே" என்றாள். மற்றொருத்தி "நான் ஒரு அமைச்சரை மணந்து கொண்டு நாடு முழுவதும் அவருடன் போய்ப் பார்ப்பேன். புதுப்புது இடங்களைக் காணவே நான் ஆசைப்படுகிறேன்" என்றாள்.

அவனது மூன்றாவது பெண்ணோ "என்னை ஒரு மன்னர் மணந்து கொண்டால் அவருக்கு அழகிய குழந்தைகளைப் பெற்றுத் தருவேன்" என்றாள். அதைக்கேட்ட மற்ற இரு பெண்களும் பலமாகச் சிரித்தார்கள். அவர்கள் மூவரும் சகோதரிகள் என்பதை மன்னன் அறிந்து கொண்டு அங்கிருந்து தன் அரண்மனைக்குச் சென்றான்.
 அந்த மன்னனுக்கு இரு மனைவிகள் இருந்தும் குழந்தை எதுவும் பிறக்கவில்லை. அதனால் அவன் தான் அதிகாரியின் வீட்டில் பார்த்த மூன்றாவது பெண்ணை மணந்து கொள்ள எண்ணினான். மறு நாள் காலையில் மன்னன் அந்த அரசாங்க அதிகாரியை அழைத்து "நேற்றிரவு உன் பெண்கள் மூவரும் தம் திருமணம் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். ஒருத்தி என் சமையல் காரனை மணக்க விரும்புகிறாள். மற்றவள் ஒரு அமைச்சரையும் மூன்றாமவள் என்னையும் மணக்க விரும்புகிறாள். அவர்களது விருப்பப்படியே நீ மூன்று திருமணங்களையும் நடத்துகிறாயா?" என்று கேட்டான்.

அந்த அதிகாரியும் அதைக் கேட்டு மகிழ்ந்து போய் "ஆகா! தாராளமாகச் செய்து விடலாம்" என்றான். மன்னனே மூன்று திருமணங்கள் நடக்க விமரிசையாக ஏற்பாடுகளைச் செய்ய அவை இனிது நடந்தேறின. மூத்தவள் அரண்மனைச் சமையல்காரனையும் இரண்டாவது பெண் அமைச்சரையும் மூன்றாவது பெண் மன்னனையும் மணந்து கொண்டார்கள்.

தம் தங்கைக்கு ராஜபோக வாழ்வு கிடைத்து விட்டதே என இரு சகோதரிகளும் மிகவும் பொறாமைப் பட்டார்கள். ஆனால் ராணியான தங்கையோ தன் இரு தமக்கைகளிடம் அன்பு காட்டியே வந்தாள். இளையராணி விரைவில் கர்ப்பமுற்றாள். தனக்கு உதவத் தன் தமக்கைகள் தன்னுடன் இருக்க வேண்டும் என்று அவள் மன்னனிடம் கூறவே அவனும் அதற்கு அனுமதி அளித்தான். அந்த இரு சகோதரிகளும் அரண்மனைக்கு வந்து ராணியுடன் இருக்கலானார்கள்.

ஒரு நாளிரவு இளையராணி ஒரு அழகான ஆண் குழந்தையைப் பெற்றாள். பொறாமைக்காரிகளான அவளது சகோதரிகள் அந்தகுழந்தையை ஒரு கூடையில் வைத்து ஆற்றில் விட்டு விட்டார்கள். அக்குழந்தைக்கு பதிலாக ஒரு நாய்க்குட்டியை அவர்கள் பிடித்து வந்து மயங்கிக் கிடந்த இளைய ராணியின் பக்கத்தில் படுக்க வைத்தார்கள். கண் விழித்ததும் தான் பெற்றது நாய்க்குட்டி என்பதைக் கண்டு இளையராணி" எல்லாம் என் தலை விதி" என்று கூறி ஆறுதல் அடைந்தாள்.
 ஒரு வருடம் கழிந்தது. இளையராணி கர்ப்பமுற்று உரிய காலத்தில் மறுபடியும் ஒரு ஆண் குழந்தையை பெற்றபோது அவளது பொறாமைக்கார சகோதரிகள் அவளருகே தான் இருந்தார்கள். அக்குழந்தையையும் அவர்கள் ஒரு கூடையில் வைத்து அதே ஆற்றில் விட்டு விட்டு ஒரு பூனைக்குட்டியைப் பிடித்துக் கொண்டு வந்து இளையராணியருகே படுக்க வைத்தார்கள். இம்முறை தான் பெற்றது பூனைக்குட்டி என்று கண்டு இளையராணி தன் விதியை நோந்து கொண்டாள்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இளையராணி கர்ப்பமுற்று உரிய காலத்தில் ஒரு பெண் குழந்தையைப் பெறவே அந்த பொறாமைக்கார சகேதரிகள் அக்குழந்தையையும் ஒரு கூடையில் வைத்து ஆற்றில் விட்டு ராணியின் பக்கத்தில் ஒரு மண் பொம்மையை வைத்து விட்டார்கள். ராணியோ கண்ணீர் வடித்து "இப்படி எல்லாமா நான் பெற்றெடுக்க வேண்டும்?" என்று கதறினாள்.

மன்னனும் கவலை கொண்டு ஆஸ்தான ஜோசியரிடம் அது பற்றிக் விசாரித்தார். அவரும் "இளையராணி பெற்றெடுத்தவை மனிதப் பிறவிகளே அல்ல. அவள் உங்களோடு இருப்பது ஆபத்து. எங்கேயாவது அனுப்பி விடுங்கள்" என்றார். மன்னனும் அவளை அரண்மனையிலிருந்து வெளியேற்றி விட்டான்.

பொறாமைக்கார சகோதரிகள் குழந்தைகளை விட்ட ஆற்றின் கரையில் ஒரு அந்தணர் வசித்து வந்தார். ஆற்றில் வந்த மூன்று குழந்தைகளையும் அவரே கண்டு எடுத்துக் கொண்டு போய்த் தம் குழந்தைகளைப் போல வளர்த்து வந்தார். அந்த மூன்று குழந்தைகளின் முகச்சாயல்களும் ஒன்று போல இருப்பது கண்டு அவர் ஆச்சரியப்பட்டார். அக்குழந்தைகளுக்கு அவர் மதன், மோகன், மோகினி என்ற பெயர்களை வைத்தார்.

கொஞ்ச நாட்களில் அந்த அந்தணர் நோய் வாய்ப்பட்டு இறந்து விட்டார். அக்குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி விட்டதால் இனி தம்மைத்தாமே பார்த்துக் கொள்ள வேண்டியது தான் என்பதை உணர்ந்தார்கள். அதனால் அவர்கள் சம்பாதித்து வாழ்ந்து வந்தார்கள். ஒரு நாளிரவு அவர்களது வீட்டிற்கு ஒருவன் வந்தான். தனக்குப் பசியாக இருக்கிறது என்று அவன் கூறவே, மூவரும் அவனுக்கு உணவு அளித்து இரவில் படுத்துத் தூங்க வசதியும் செய்து கொடுத்தார்கள்.

 மறுநாள் காலையில் எழுந்ததும் அவன் அம்மூவரிடமும் "நான் இந்நாட்டு மன்னன். மாறுவேடத்தில் நாட்டின் நிலையை நேரில் காண இப்படி வந்தேன். உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் என்னை அணுகலாம்" என்று கூறிவிட்டு அங்கிருந்து அரண்மனைக்குச் சென்றான். பிறகு மன்னன் ஒரு வீரன் வாயிலாக ஒரு பைநிறையத் தங்க நாணயங்களை அம்மூவருக்குக் கொடுத்து அனுப்பினான்.

மோகினி தங்க நாணயங்களைக் கண்டதும் எல்லோரும் ஒரு பெரிய வீட்டில் வாழ வேண்டும் என்று நினைத்தாள். மதனும் மோகனும் அவனது விருப்பத்தை நிறைவேற்றி விடவே வாங்கிய பெரிய வீட்டை மோகினி அழகு படுத்தலானாள். ஒருநாள் அவ்வழியே வந்த ஒரு யோகி நதிக்கரையில் ஒரு அழகிய மாளிகை இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். மோகினி அவரைக் கண்டு வணங்கி தன் வீட்டில் ஏதாவது குறை இருக்கிறதா என்று கேட்டாள். அவரும் "இங்கு ஒரு தங்க மரமும் தங்கக் கூண்டில் தங்கக் குருவியும் ஒரு தங்க வில்லும் இருந்தால் இன்னமும் அழகாக இருக்கும். இவை யாவும் ஒரு மலை மீது உள்ள அரண்மனையில் உள்ளன என்று கூறி அரண்மனைக்குப் போகும் வழியையும் சொல்லி விட்டுச் சென்றார்.

யோகி சொன்னது பற்றி மூவரும் யோசித்து மதன் அங்கு போய் அவற்றைக் கொண்டு வரவேண்டும் என்று தீர்மானித்தார்கள். மதனும் கிளம்பும் முன் தன் வாளை மோகினியிடம் கொடுத்து "எனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் இதன் ஒளி மங்கிவிடும்" என்று கூறி விட்டுச் சென்றான். அவன் சென்ற சில மாதங்கள் வரை அந்த வாளின் ஒளி மங்காது இருப்பதை மோகினி கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தாள். ஒருநாள் திடீரென அதன் ஒளி மங்கி விட்டது.

அதற்குக் காரணம் இது தான். மதன் மலையை அடைந்து அரண் மனைக்குப் போக மலையின் படிகளில் ஏறலானான். அப்போது ஒரு குரல் "மதன்! இனிமேல் போகாதே" என்றது. அப்போது மலை மீது ஏறும்போது திரும்பிப் பார்க்கக்  கூடாது என்று யோகி எச்சரித்திருந்தது அவன் நினைவிற்கு வந்தது. எனவே அவன் திரும்பிப் பாராமல் மேலே அடி எடுத்து வைக்கவே அதே குரல் "மதன்! உன்னோடு நானும் வருகிறேன்" என்றது. அது தன்னை வளர்த்த அந்தணரின் குரல் போல இருந்தது கண்டு அவன் திரும்பிப் பார்த்தான். மறு வினாடியே அவன் கற்சிலையாகி விழுந்து விட்டான்.
 மதனுக்கு ஏதோ ஆபத்து என மோகினி கூறவே மோகன் தான் போய்ப் பார்ப்பதாகக் கூறி அவளிடம் ஒரு புல்லாங்குழலைக் கொடுத்து "எனக்கு ஏதாவது ஆபத்து என்றால் இது இரண்டாக உடைந்து விடும்" என்ற கூறிவிட்டுச் சென்றான். அவனும் மலையை அடைந்து அரண்மனைக்குச் செல்லப்படியில் ஏறினான். அப்போது மதன் பேசுவது போல ஒரு குரல் "தம்பி! உன் பின்னால் தான் இருக்கிறேன், பார்" என்று கேட்கவே மோகன் திரும்பிப் பார்த்தான். உடனே அவனும் கற்சிலையாகி விழுந்து விட்டான்.

புல்லாங்குழல் இரண்டாக உடைந்தது கண்டு மோகினி கண்ணீர் வடித்தாள். பிறகு தன்னைத் தேற்றிக் கொண்டு இனி தானே அங்கு போவது என்று அவள் தீர்மானித்துக் கொண்டாள். வழியில் விசாரித்ததில் தன் தமயன்கள் இருவரும் அந்த வழியில் தான் சென்றார்கள் என்று அவளுக்குத் தெரிந்தது. அவள் மலையை அடைந்து அரண்மனைக்குப் போகப் படியில் காலை வைத்த போது ஒரே கூச்சல் கேட்டது. அவள் அதைப் பொருட்படுத்தாமல் படிகளில் ஏறிப்போய் அரண்மனையை அடைந்தாள்.

அங்கே அவள் தங்க மரத்தையும் தங்கக் கூண்டையும் அதனுள் தங்கக்குருவியையும் பார்த்தாள். அந்தக் குருவி அவளைப் பார்த்து "நான் உன் கட்டளைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். உள்ளே ஒரு முரசின் மீது தங்க வில் உள்ளது. அந்த வில்லை எடுத்து முரசை அடித்தால் கற்சிலைகளாகக் கிடக்கும் உன் சகோதரர்கள் உயிர் பெற்று எழுவார்கள்" என்றது. மோகினியும் அது கூறியபடியே செய்தாள். பிறகு அதனிடம் "கூண்டையும் வில்லையும் எடுத்துப் போய் விட முடியும். ஆனால் தங்க மரத்தை எப்படி எடுத்துச் செல்வது?" என்று கேட்டாள்.
 குருவியும் "தங்கவில்லால் மரத்தை அடித்தால் உன் சகோதரனால் தன் கையால் அதைத் தூக்கிக் கொண்டு போக முடியும்" என்றது. இதற்குள் மதனும் மோகனும் வந்து விட்டார்கள். மோகினி குருவி சொன்னதை அவர்களிடம்  சொல்ல, மதன் வில்லால் அடித்து தங்க மரத்தைத் தன்கையில் தூக்கிக் கொண்டான். மற்றவற்றை இருவரும் எடுத்துக் கொள்ள மூவரும் நதிக் கரையிலுள்ள தம் மாளிகைக்கு வந்தார்கள்.

சில நாட்கள் கழித்து அவர்கள் மன்னனைத் தம் மாளிகைக்கு அழைத்தார்கள். மன்னனுக்கு விருந்து வைத்தார்கள். சாப்பிடும் தட்டில் முத்துக்களும் வைரங்களும் வைக்கப் பட்டிருக்கவே மன்னனும் "இதையா சாப்பிடுவது? இது எங்காவது நடக்குமா?" என்று கேட்டான். அப்போது கூண்டிலிருந்த தங்கக் குருவி" ஏன் நடக்காது? ஒரு பெண் நாய்க்குட்டியையும் பூனைக்குட்டியையும் மண் பொம்மையையும் பெற்றெடுக்க முடியும் என்றால் இதுவும் முடியுமே" என்றது. அப்போது மன்னனுக்கு அது சாதாரணக்குருவி அல்ல என்பது தெரிந்தது. அதனிடம் "அப்படியானால் என் குழந்தைகள் எங்கே? உனக்குத் தெரியுமா?" என்று கேட்டான்.

தங்கக் குருவியும் "தெரியுமே. அவர்கள் உங்கள் எதிரில் தான் இருக்கிறார்கள். நாய்க்குட்டி, பூனைக்குட்டி, மண் பொம்மை என்றெல்லாம் இவர்களுக்கு பதிலாக பொறாமைக்காரச் சகோதரிகளால் உங்கள் மனைவியின் பக்கம் வைக்கப்பட்டு இவர்கள் ஆற்றில் விடப் பட்டார்கள். இப்போது உங்கள் மனைவி காட்டில் இருக்கிறாள். தேடி அழைத்து வாருங்கள்" என்றது. மன்னன் தன் இளையராணியைத் தேடி அழைத்து வந்தான். அதன் பின் மதன், மோகன், மோகினி ஆகியோரையும் ராணியையும் அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு போய் சுகமாக வாழ்ந்தான்.

0 comments:

Post a Comment