பாத்திரமறிந்து பிச்சையிடு


 ஒரு கிராமத்தில் அமரன், குமரன் என்ற இரண்டு அரிசி வியாபாரிகள் வசித்து வந்தனர். அவர்கள் இருவரும்  பல ஆண்டுகளாக கூட்டு வியாபாரம் செய்த போதிலும், ஒரு முறைகூட  கருத்து வேறுபாடு ஏற்பட்டதே இல்லை. கிராமத்தில் ஏதாவது இரு நபர்களுக்குள் சண்டை, சச்சரவு நடந்தாலும், "அமரன், குமரனைப் போல் ஒற்றுமையாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்!" என்று மக்கள் சொல்வதுண்டு.
ஒவ்வோர் ஆண்டும் சங்கராந்தி தினத்தன்று இருவரும் கணக்கு வழக்குகளைப் பார்த்து லாபத்தை சமமாகப் பிரித்துக் கொள்வதுண்டு. அமரன் தனது லாபத்தில் முன்னூற்று அறுபத்தைந்து ரூபாயை தனியாக எடுத்து ஒரு பொட்டலம் கட்டிக் கொள்வது வழக்கம். ஆனால் குமரன் எதற்காக அமரன் அவ்வாறு செய்கிறார் என்பதைப்பற்றி ஒருமுறைகூடக் கேட்டதில்லை. அதைப் பற்றி குமரன் ஏன் கண்டும் காணாதது போல் இருக்கிறார் என்று அமரனும் தனக்குள் ஆச்சரியப்படுவதுண்டு.

ஒவ்வோர் ஆண்டும் சங்கராந்தி தினத்தன்று அந்தக் கிராமத்தில் சந்தை கூடுவதுண்டு. சந்தைக்கு வருபவர்களில் பலர் அங்குள்ள கிணற்றில்இருந்து தாகத்திற்கு தண்ணீர் எடுத்து குடித்து விட்டு, மர நிழலில் அமர்ந்து இளைப்பாறுவதுமுண்டு. அமரன் ஒவ்வோர் ஆண்டும் சங்கராந்தி தினத்தன்று தான் பொட்டலமாகக் கொண்டு வரும் பணத்தை கிணற்றின்அடியில் சத்தமின்றி விட்டுச் செல்வது வழக்கம். அதை யார் எடுத்துச் செல்கிறார்கள் என்பதை கவனிப்பது இல்லை.

ஆனால் ஒருமுறை அமரனுக்கு தன் பொட்டலத்தை யார் எடுத்துச் செல்கிறார்கள் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அதனால் அந்த முறை பொட்டலத்தை வைத்து விட்டு சற்று தொலைவில் ஒளிந்து கொண்டு கவனிக்கலானார். அப்போது திடீரென ஓர் உருவம் அந்தப் பொட்டலத்தை எடுத்துக் கொண்டு சென்றதை கவனித்தார். அந்த உருவத்தை மிக விரைவாகப் பின் தொடர்ந்த அமரன் கடைசியில் அது தனது நண்பர் குமரன்தான் என்று அறிந்து அதிர்ச்சிக்குஉள்ளானார்.

 நண்பனே! யாராவது ஏழை பயன் அடையட்டும் என்று நான் வைத்து விட்டுப் போன பொட்டலத்தை நீ ஏன் எடுத்துக் கொண்டாய்?" என்று ஆச்சரியத்துடன் வினவினார். "அமரா! நீ பொட்டலத்தை வைத்து விட்டுப் போனபின், யார் எடுத்துக் கொண்டால் என்ன? அதைப் பற்றி உனக்கேன் கவலை?" என்று குமரன் கேட்டார். "நான் இவ்வாறு செய்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது!" என்று அமரன் பேசத் தொடங்கினார்.

"சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த நான் வாழ்க்கையில் மிகவும் துன்பப்பட்டேன். ஒரு முறை என் கிராமத்தில் பஞ்சம் ஏற்பட்டது. அந்த ஆண்டு சங்கராந்தியின் போது இதே போல் சந்தை கூடியிருக்க, நான் என் கிராமத்திலிருந்து இங்கு வந்திருந்தேன். பிச்சை கேட்டாலும் யாரும் எதுவும் தராததால் ஒரு கடையிலிருந்து லட்டுவைத் திருடித் தின்று, பிடிபட்டு, செம்மையாக உதை வாங்கினேன். அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்ள எண்ணி இந்தக் கிணற்றை அடைந்தேன். அப்போது கிணற்றின்அருகில் ஒரு தங்க மோதிரம் விழுந்திருக்கக் கண்டேன். அக்கணமே நான் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை கைவிட்டு விட்டேன்.

மோதிரத்தை விற்றுப் பணமாக்கி,  ஒரு பசுமாடு வாங்கி பால் வியாபாரம் செய்யத் தொடங்கினேன். வியாபாரம் நன்றாக நடந்து லாபம் உண்டாக, மாட்டு வண்டி ஒன்று வாங்கினேன். என் வாழ்க்கைத் தரம் மெதுவாக உயர்ந்தது. அந்த நேரத்தில் தான் உனது நட்பு எனக்குக் கிடைத்தது. நாமிருவரும் சேர்ந்து வியாபாரம் செய்யத் தொடங்கினோம். எந்த கிணற்றடியில் எனக்கு மோதிரம் கிடைத்ததால் என் வாழ்க்கை திசை திரும்பியதோ, அங்கே ஒவ்வொரு சங்கராந்தி தினத்தன்றும் யாராவது ஏழைக்கு உதவட்டும் என்று முன்னூற்று அறுபத்தைந்து  ரூபாய் உள்ள ஒரு பொட்டலத்தை வைத்து விட்டு வருகிறேன்" என்றார்.

 அதற்கு குமரன், "உன்னுடைய நோக்கம் மேன்மையானதுதான். ஆனால் நீயளிக்கும் தானம் யார் கையில் சென்று எவ்வாறு பயன்படுகிறது என்று பார்க்க வேண்டாமா? அதை இப்போது உனக்குக் காட்டுகிறேன்!" என்றார்.

பிறகு குமரன் சிறிது பணத்தை ஒரு சிறிய பையில் போட்டு கிணற்றடியில் வைத்து விட்டு, அமரனையும் அழைத்துக் கொண்டு ஒளிந்து கொண்டார். சிறிது நேரத்தில் அங்கே வந்த ஒரு சன்னியாசியின் கண்களில் பட்டது. உடனே அதைப் பாய்ந்து எடுத்துக் கொண்ட சன்னியாசி சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, இத்தனை நாள் பிரம்மச்சாரியாக வாழ்ந்தது போதும். இனி கல்யாணம் செய்து சுகமாக இருக்கலாம்!" என்றார்.

"பார்த்தாயா அமரா? முற்றும் துறந்த சன்னியாசிக்கு பணத்தினால் இந்த வயதில் கல்யாணம் பண்ணிக் கொள்ள ஆசை வந்து விட்டது?" என்ற குமரன், ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை கிணற்றடியில் வைத்தார். சிறிது நேரத்தில், அந்த திசையில் இருவர் பேசிக் கொண்டே நடந்து வந்தனர். ஒருவன், "அடப்பாவி! எருமை வாங்குவதற்காக கொண்டு வந்த பணத்தையெல்லாம் உன் பேச்சைக் கேட்டு சூது விளையாடி இழந்து விட்டேன்.  இனி நல்லது கிணற்றுக்குள் விழுந்து உயிரை விடுவதே!" என்று கிணற்றில் குதிக்கப் போனான். மற்றொருவன் அவனைத் தடுக்க முயற்சித்தான்.
அப்போது தற்கொலை செய்ய முயன்றவனுடைய கண்களில் அந்த ஒரு ரூபாய் நாணயம் தென்பட்டது.

உடனே அதை எடுத்துக் கொண்ட அவன், "நல்ல சமயத்தில் இந்த ஒரு ரூபாய் நாணயம் கிடைத்தது. இதை வைத்துக் கொண்டு மறுபடியும் சூது விளையாடினால், அதில் நான் தோற்றுப்போன பணத்தையெல்லாம் புரட்டி விடுவேன்," என்று அவன் மீண்டும் சூதாடச் செல்ல, மற்றவன், "தனக்கும் அதில் ஒரு பங்கு உண்டு என்று அவன் பின்னால் ஓடினான்.

சற்று தொலைவில் ஒரு விறகு வெட்டி அந்தப் பக்கம் வந்து கொண்டிருந்தான். உடனே குமரன் இன்னும் சிறிது பணம் எடுத்து ஒரு பையில் போட்டு அவன் வரும் பாதையில் அதை வீசியெறிந்தான். ஆனால் விறகு வெட்டி அதைப் பார்த்தும் எடுக்காமல் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் குடித்துவிட்டு, அங்கிருந்து சென்று விட்டான்.

"அட! பணப்பையைப் பார்த்தும் அதை எடுத்துக் கொள்ளாமல் செல்கிறானே இவன்! எப்படிப்பட்ட மனிதன் இவன்!" என்று அமரன் ஆச்சரியப்பட்டான். "பார்த்தாயா அமரா! தகுதியற்ற மனிதர்களின் கையில் உன் பணம் கிடைத்தால் என்ன ஆகும் என்று இப்போது புரிகிறதா? உடல் உழைப்பினால் கிடைக்காத பணம் தீயவர்களின் கையில் சேர்ந்தால், தீமைகளே அதிகம். முற்றும் துறந்த சன்னியாசியைக் கூட பணம் கெடுத்து விடுகிறது. சூதாடிகள் கையில் உன் பணம் கிடைத்திருந்தால், அது முற்றிலும் பயனற்றதாகப் போய்இருக்கும். உடலை வருத்தி உழைத்து உண்ணும் விறகு வெட்டி போன்றவர்கள் குறுக்கு வழியில் கிடைக்கும் பணத்தை விரும்பமாட்டார்கள்" என்று குமரன் விளக்கினார்.

"அப்படியானால் நான் இதுவரை செய்த தானமெல்லாம் வீணாகி விட்டதா?" என்று வருத்தத்துடன் அமரன் கேட்க, "கவலைப்படாதே! ஒவ்வொரு முறையும் நீ இவ்வாறு விட்டுச் செல்லும் பணத்தை, நான் எடுத்து பாதுகாத்து வந்திருக்கிறேன். அதைக் கொண்டு நாம் ஒரு பள்ளிக்கூடத்தைத் தொடங்குவோம்!" என்று குமரன் பதிலளித்தார்.

0 comments:

Post a Comment

Flag Counter