துடுக்கானப் பிச்சைக்காரன்



ஒரு நகரத்தில் நாராயணன் என்ற பெயர் கொண்ட வாய்த்துடுக்கான பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான். அவன் வழக்கமாகப் பிச்சையெடுக்கும் தெருக்களில், ஒரு தெருவில் கஸ்தூரி என்ற ஒரு வட்டிக் கடைக்காரன் இருந்தான். வட்டிக்குப் பணம் கடன் கொடுத்தே பெரிய தனவந்தனாக மாறியவன் அவன். அவனிடம் ஒரு பெரிய தொகையைப் பிச்சையாகப் பெற வேண்டும் என்று பல நாள்களாய் நாராயணன் ஆசைப்பட்டான்.

ஆனால் கஸ்தூரியின் பங்களா வாசலில் காவல் காக்கும் ஆள், நாராயணனை உள்ளே நுழையவே அனுமதிப்பதில்லை. ஒருநாள் காவல்காரன் வேறு யாருடனோ அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் சமயம் பார்த்து, நாராயணன் சாமர்த்தியமாக உள்ளே நுழைந்து, "எசமானரே! பிச்சை போடுங்கள்!" என்று உரக்கக் கூவி பிச்சையெடுத்தான்.

நாராயணனுடைய கூக்குரலைக் கேட்டு, பங்களாவிற்குள்ளிருந்து வேலைக்காரர்கள் வெளியே ஓடி வந்து அவனை அடித்துத் துரத்த முயன்றனர். அதற்குள் வட்டிக்கடைக்காரனான கஸ்தூரியே வெளியே வந்து விட்டான். தன் வேலைக்காரர்களைத் தடுத்து நிறுத்திவிட்டு, நாராயணனுக்கு ஐந்து ரூபாய் கொடுத்தான். பிறகு அவனிடம், "பிச்சையெடுப்பவன் பணிவாக இருக்க வேண்டும். நீ மட்டும் பணிவுடன் அமைதியாகப் பிச்சை கேட்டிருந்தால், உனக்கு பத்து ரூபாய் பிச்சை போட்டிருப்பேன்!" என்றான்.

அவன் கொடுத்த ஐந்து ரூபாயை பத்திரமாக இடுப்பில் செருகிக் கொண்ட நாராயணன், "ஐயா! உங்கள் தொழில் கடன் கொடுத்து வசூல் செய்வது! அதை நீங்கள் முறையாகச் செய்யுங்கள், போதும்! எப்படிப் பிச்சையெடுக்க வேண்டுமென்று நீங்கள் எனக்கு புத்திமதி சொல்ல வேண்டாம்!" என்று இடக்காகப் பதில் அளித்து விட்டு நகன்றான்.

0 comments:

Post a Comment

Flag Counter