விநாயகர் -18

 
சத்துருஞ்ஜயன் எலியோடு சளுக வர்மனை தூரத்திலுள்ள சிறிய வீட்டிற்கு விரட்டி "நீ எங்களோடு இருக்க வேண்டியவன் அல்ல. எலியை வாகனமாகக் கொண்ட விநாயகர் மீது அளவு கடந்த பக்தி கொண்டதால் அந்த எலியின் இனத்தைச் சேர்ந்தவள் தான் உனக்கு மனைவியாகத் தகுந்தவள். உன் மனைவியும் அவள் தோழிகளும் யார் கண்ணிலும் படாமல் அந்தப்புரத்தில் வளைகளுள் இருப்பார்கள்," எனக் கூறி ஏளனம் செய்தான்.

சளுகன் உயரிய நூல்களைப் படிக்கும்போது சளுக்கி அவனுடன் இருந்து கேட்பாள். அவன் பூஜைகள் செய்யும்போது வாயில் மலர்களைக் கவ்வி எடுத்துக் கொண்டு வந்து கொடுப்பாள். சளுகன் உண்ட பிறகே மீதமானதை அவள் உண்பாள். இப்படியாக நாட்கள் கழிந்து விநாயக சதுர்த்தியும் வந்தது.

எல்லோர் வீட்டிலும் தானியங்கள் புடைக்கப்பட்டு குவிக்கப்பட்டன. அப்போது சளுக்கி இரவோடு இரவாக எலிகளை கூப்பிட்டு தன் வீட்டையும் வெள்ளை அடித்து அவற்றைக் கொண்டு தானியத்தையும் புடைத்து வைத்தாள்.

விநாயக சதுர்த்தியன்று சளுக்கியின் அண்ணிகள் நதியில் நீராடி விட்டுக் குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து கொண்டிருந்தனர். அதுகண்டு சளுகனின் முகம் கறுத்தது. உடனே சளுக்கி சட்டென ஒரு குடத்துள் புகுந்து அதை உருட்டிக் கொண்டே ஆற்றிற்குச் சென்றாள். அங்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது, கண்டு சளுக்கி "எப்படிக் குடத்தில் நீர் நிரப்பமுடியும்? அதனை எப்படித் தூக்கிச் செல்வது? குடத்தை எப்படியோ இதுவரை கொண்டு வந்துவிட்டேன்," என்று கவலைப்பட்டாள்.
 அப்போது விநாயகர் அவள்முன் தோன்றி அந்த எலியைத் தடவிக் கொடுத்தார். எலி உருவில் இருந்த கல்யாண கிங்கிணி பழைய தேவ கன்னிகையின் உருவை அடைந்தாள். அவள் விநாயகரை வணங்கித் துதிக்க அவரும் அவளை ஆசீர்வதித்துவிட்டு மறைந்தார்.

கல்யாண கிங்கிணி தலையில் குடத்தை வைத்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்புகையில் அவளைக் கண்டவர்கள் எல்லாம், "யார் இந்த தேவகன்னிகை? யார் வீட்டிற்குப் போகிறாள்?" என்று அதிசயப்பட்டு பார்க்கலாயினர். கல்யாண கிங்கிணியின் அண்ணிகள் அவள் சளுகனின் வீட்டில் நுழைவது கண்டு பிரமித்துப் போனார்கள். சத்துருஞ்ஜயன் தன் செய்கைக்காகத் தலைகுனிந்து பச்சாதாபப்பட்டு சளுகனையும் அவன் மனைவியையும் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான்.

சளுகனின் அண்ணன்மார்கள் சத்துருஞ்ஜயனிடம் தமக்கும் ஏன் அதுமாதிரி எலியை கல்யாணம் செய்து வைத்து தேவ கன்னிகையான மனைவிகள் கிடைக்கச் செய்யவில்லை என்று சண்டை போடலானார்கள். சத்துருஞ்ஜயனோ இப்படிப் பட்டவர்களுக்காகவா நான் இந்த நாட்டை வைத்திருக்கிறேன் என எண்ணி மனம் உடைந்து தவம் செய்யக் காட்டிற்குச் சென்றுவிட்டான்.

சளுகனின் தமையன்மார்கள் ஒருவருக்கொருவர் பொறாமையால் அடித்துக் கொண்டனர். அதில் அனைவரும் மடிய சளுகவர்மனையே மக்கள் தம் மன்னனாகத் தேர்ந்து எடுத்தார்கள். அவனது ஆட்சியில் மக்கள் சுகமாக வாழ்ந்தனர்.

சளுகன் கல்யாண கிங்கிணியின் பெயரில் இன்னொரு நகரை நிர்மாணித்து அதற்கு கல்யாணி என்ற பெயரை வைத்தான். அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன. அவர்கள் சாளுக்கியர்கள் என அழைக்கப்பட்டார்கள். இப்படியாக சளுகவர்மன் சாளுக்கவர்மனாகி சாளுக்கிய வம்ச மன்னர்களின் மூல புருஷனானான்.

அவன் காலத்தில் வாதாபி நகரம் பல கோயில்களோடு அழகுடன் விளங்கியது.


 கலைகளின் இருப்பிடமாயும் பண்டிதர்கள் வாழும் பட்டணமாயும் பூலோக சொர்க்கமாக அது திகழ்ந்தது. நகரின் பிரதான தெய்வமாக விநாயகரே வழிபடப்பட்டார். அவர் கோயில் கொண்ட ஆலயச் சிற்ப வேலைப்பாட்டைக் காணப் பல நாடுகளிலிருந்தும் அரசர்கள் முதல் சாமானியர்கள் வரை வந்தனர்.

சாளுக்கியர்களின் நாடு பரவிக் கிடந்தது. அந்த வம்ச மன்னர்கள் நாட்டின் பல பகுதிகளுக்குப் போய் பல நாடுகளை நிறுவினார்கள். வாதாபியை ஆண்டவர்கள் வாதாபி சாளுக்கியர்கள். கல்யாணியை ஆண்டவர்கள் கல்யாணி சாளுக்கியர்கள். வெங்கி நாட்டை ஆண்டவர்கள் வெங்கி சாளுக்கியர்கள். கீழச் சாளுக்கியர்கள், சௌராஷ்டிரச் சாளுக்கியர்கள் எனவும் பல சாளுக்கியர்கள் இருந்தனர். வாதாபி நகரம் பாதாமி எனவும் அழைக்கப்பட்டது.

வாதாபி கணபதி என்ற பெயர் பெற்ற விநாயகரின் புகழ் பல நாடுகளில் பரவியது. அப்போது பாவன மிசிரர் என்ற பண்டிதர் மாலை வேளைகளில் வாதாபி கணபதி ஆலய மண்டபத்தில் அமர்ந்து குழந்தைகளுக்கு விநாயகரைப் பற்றிய பல கதைகளைக் கூறி வந்தார். சிறுவர்களோடு சேர்ந்து பெரியவர்களும் அக்கதைகளைக் கேட்டு மகிழ்ந்து வந்தார்கள்.

அந்த ஆலயச் சுவர்களில் விநாயகரின் கதைகள் சித்திர வடிவில் பொறிக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு விசித்திரமான படத்தை ஒரு சிறுவன் பாவனமிசிரரிடம் காட்டி அதைப் பற்றிய கதையைக் கூறும்படி வேண்டினான். அவரும் கதை கூறலானார்.

ஒரு நகரில் சத்தியசர்மனும் லோப குப்தனும் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்தார்கள். சத்திய சர்மன் விநாயகர் ஆலயத்துள் போய் முத லில் அவரை தரிசித்துவிட்டுப் பிறகு சிவனை தரிசிக்கச் செல்வார். லோப குப்தனோ நேராக சிவலிங்கத்தின் முன் விழுந்து தனக்கு நிறைய லாபம் கிடைக்கச் செய்யுமாறு வேண்டி வந்தான்.

ஒருநாள் சத்தியசர்மன் சிவனை தரிசிக்கப் போனார். அப்போது லோபகுப்தனும் வந்து கொண்டிருந்தான். அப்போது நந்தி விநாயகரிடம், "விநாயகரே! உமது பக்தன் சத்திய சர்மன் பணமுடையில் இருக்கிறானே.

 உம்மிடம் எதுவும் கேட்கவில்லையா?" எனக் கேட்டது. அதற்கு விநாயகர், "ஆமாம். இன்று மாலை அவனுக்கு ஆயிரம் வராகன் கிடைக்கச் செய்கிறேன்," என்றார். நந்தியும் விநாயகரும் பேசியதை லோபகுப்தன் கேட்டு விட்டான். உடனே அவன் சத்திய சர்மனின் வீட்டிற்குப் போய், "சர்மா! உங்களுக்குப் பணம் தேவையாமே. ஐநூறு வராகன்கள் கொடுக்கிறேன்," எனக் கூறிவிட்டு வீட்டிற்குப் போய் பணம் கொண்டு வந்தான்.

அப்போது சத்தியசர்மா "நேற்று தானே நான் உங்கள் கடனைத் தீர்க்கவில்லை என்று வீட்டைக் காலி செய்து கொடுக்கும்படிச் சொன்னீர்களே. இப்போது கொடுக்கப் போகும் கடனையும் சேர்த்து முழுக் கடனை எப்படி என்னால் தீர்க்க முடியும்?" என்று கேட்டான்.

அதற்கு லோபகுப்தன், "இந்தப் பணத்தை நீ இப்போது வாங்கிக் கொள். இன்று மாலையில் உனக்குக் கிடைக்கும் பணம் முழுவதையும் கொடுத்துவிடு. நீ எனக்குக் கொடுக்க வேண்டிய முழுக் கடனும் தீர்ந்து விட்டதாக நினைத்துக் கொள்கிறேன்," என்றான்.

சர்மா திகைத்துப் போகவே அவரது மனைவி லோபகுப்தன் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டாள். அப்போது சர்மாவின் பெண்ணைக் கேட்க மாப்பிள்ளை வீட்டார் வந்திருந்தார்கள். அந்தக் கல்யாணமும் நிச்சயமாகியது. பிள்ளை வீட்டார் ஐநூறு வராகன்கள் பெறுமான நகைகளைப் பெண்ணுக்குப்போட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்க அவரும் ஒப்புக் கொண்டார்.

லோபகுப்தன் எப்போது மாலைப் பொழுது வரும், யார் பணப் பையோடு வரப் போகிறான் என்று காத்திருந்தான். வெகுநேரமாகியும் யாரும் வராததால் அவன் மனம் கலங்கி கோயிலுக்குப் போய் விநாயக விக்கிரகத்தின் துதிக்கையைப் பிடித்து இழுத்து "என்னய்யா விநாயகா! சத்தியசர்மாவுக்கு ஆயிரம் வராகன்கள் இன்று மாலைக்குள் கிடைக்கச் செய்வதாகச் சொன்னாயே. அதை அனுப்பு!" என்று கூறியபோதே அவனது கை விநாயக சிலையின் துதிக்கையில் சிக்கிக் கொண்டுவிட்டது. அவனால் கையை எடுக்க முடியவில்லை.

விநாயகரின் துதிக்கை அவனது கையை மேலும் அழுத்த அவனது கை வலிக்கலாயிற்று.


லோபகுப்தன் வலி பொறுக்காமல் ‘ஓ’வெனக் கதறினான். அப்போது விநாயகர், "நீ எவ்வளவு விரைவில் சத்தியசர்மாவுக்கு ஆயிரம் வராகன்கள் அனுப்பி வைக்கிறாயோ அப்போதுதான் உனக்கு விடுதலை," என்றார்.
அதுகேட்டு லோபகுப்தன் தன் தலையில் அடித்துக் கொண்டு "இது அநியாயம். நான் ஏற்கனவே அவருக்கு ஐநூறு வராகன்கள் வேறு கொடுத்திருக்கிறேனே!" என்றான்.

அப்போது விநாயகர் "ஓ! ஐநூறு வராகன்களைக் கொடுத்துவிட்டு ஆயிரம் வராகன்களை அவரிடம் இருந்து தட்டிக் கொண்டு போய் விடலாம் என்று தானே திட்டம் போட்டாய்? இந்தப் பேராசைக்காக நீ இன்னும் ஐநூறு வராகன்களை சர்மாவுக்குக் கொடுத்தே தீர வேண்டும். அது மட்டுமல்ல. உனக்கு அவர் கொடுக்க வேண்டிய கடன் தீர்ந்து விட்டதாகக் கூறி அவரது மகளின் திருமணச் செலவு முழுவதையும் நீதான் ஏற்க வேண்டும். தெரிந்ததா!

 இப்படிச் செய்வதானால் தான் உனக்கு விடுதலை," என்றார். லோபகுப்தன் உடனே தன் வீட்டாருக்குத் தகவல் சொல்லி அனுப்பினான். அவர்கள் வந்ததும் ஐநூறு வராகன்களை உடனே சர்மாவிடம் சேர்ப்பிக்கும்படி கூறி, அவரது எல்லாக் கடனும் தீர்ந்து விட்டதாயும் அவரது மகளின் கல்யாணத்திற்கு ஆகும் செலவைத்தானே ஏற்கப் போவதாயும் சொல்லும்படி ஆளை அனுப்பிச் சொன்னான்.தன் பிறகே அவனது கை விநாயகர் விக்கிரகத்திலிருந்து விடுபட்டது. லோபகுப்தனும் சர்மாவின் மகளின் கல்யாணத்தைத் தன் சொந்த மகளின் திருமணம் போல நடத்திக் கொடுத்து, மிகவும் நல்லவன் என்ற பெயரும் புகழும் பெற்றான். இந்தக் கதையைக் கேட்ட சிறுவர்களும் பெரியவர்களும் மகிழ்ந்து போனார்கள். அடுத்து இன்னொரு கதையை அவர் கூறினார்.

கல்யாணி நகரில் கலககண்டி என்பவள் தன் மருமகள் பிறந்த வீட்டிலிருந்து நிறைய நகைகள் கொண்டு வராத காரணத்தால் கொடுமைப் படுத்தி அவளை வீட்டை விட்டே துரத்திவிட்டாள். அவளது மருமகள் சௌதாமினி தன் பிறந்த வீட்டிற்குக் கிளம்பி ஒரு காட்டு வழியே போய் ஒரு விளாமரத்தடியே களைப்பால் விழுந்துவிட்டாள்.
தன் பிறந்த வீட்டிற்குப் போயும் பயனில்லையே என எண்ணிய போது அந்த மரத்திலிருந்து விளாம்பழம் விழுந்து உருண்டு அவள் பக்கம் வந்தது. அவள் அதை எடுத்த போது ஒரு யானை வேகமாக ஓடி வருவதை அவள் கண்டாள்.

சௌதாமினி சிறுவயது முதல் விநாயகரை வழிபடுபவள். எனவே அந்த யானையின் காலடியில் விழுந்து மிதிபட்டுத் தன் உயிரைப் போக்கித் தன் பிரச்சினைக்கு முடிவு காண்பது என்ற தீர்மானத்தோடு அதனருகே சென்றாள். யானையோ உடனே நின்றுவிட்டது.

அது சௌதாமினியின் கையில் இருந்த விளாம்பழத்தை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு அவளை ஆசீர்வதிப்பதுபோல துதிக்கையை உயர்த்தி விட்டு, பின்னர் அவளது கைகளைப் பற்றி அழைத்துக் கொண்டு ஒரு பெரிய குகையின் பக்கம் சென்றது. அதுகண்டு சௌதாமினி ஆச்சரியப்பட்டாள். ஆனால் சற்றும் பயப்படவில்லை. யானை விநாயகர் தாம் என அவள் எண்ணி அதனோடு நடந்து சென்றாள்.

  

0 comments:

Post a Comment