விநாயகர் - 17

  


விநாயகர் சிலையைக் கண்டு மெய்மறந்து துதிபாடி நின்ற அகத்தியர், "வாதாபி கணபதியே, நீ தானே இப்பாறையிலிருந்து வெளி வந்தாய்... இந்த மாதிரி உருவச் சிலையை யாராலும் வடிக்க முடியாது" எனக் கூறி ஆனந்த கண்ணீர் வடித்தார்.

அப்போது சிலையிலிருந்து, "அகத்தியரே! இதை நான் எனக்காக சிருஷ்டித்துக் கொள்ளவில்லை. நீர் திருப்திப்பட வேண்டும் என்பதற்காக உமது விருப்பத்தை நிறைவேற்றினேன். எனவே இந்த மாபெரும் சிலை கொஞ்ச காலத்திற்கே இருக்கும். பின்னர் மறைந்துவிடும். துவாபர யுகத்தில் தருமர் அசுவமேத யாகம் செய்யும்போது மற்றொரு சிலை தோன்றும்," என விநாயகரின் குரல் ஒலித்தது. இவ்வாறு தௌம்யர் அர்ஜுனனிடம் கூறி, "அந்தச் சிலையைத் தான் நாம் இப்போது காண்கிறோம்," என்றார். அர்ஜுனனும் அந்தச் சிலையை பயபக்தியுடன் வணங்கினான்.

அவன் தௌம்யரிடம், "ஆசார்யரே! இவ்வளவு அழகான சிலைகளைப் பெற்று மிகவும் உயர்ந்து விளங்கிய வாதாபி நகரம், இப்போது ஏன் இந்த நிலையை அடைந்துள்ளது?" என்றான். தௌம்யரும் விவரமாகக் கூறலானார்: அகத்தியர் லோபாமுத்திரை கூறியபடி தமது செல்வத்தை எல்லாம் தானம் செய்தார். எல்லாம் கொடுத்த பின் கானக வாழ்க்கையை மேற்கொள்ள அவர் லோபா முத்திரையுடன் தம் ஆசிரமத்திற்குப் போய்ச் சேர்ந்தார்.
 வாதாபி நகர மக்களும் விநாயகரையே தம் மன்னர் போலக் கருதி ஆட்சி நடத்தி சுக வாழ்வு வாழலானார்கள். நாட்கள் கழியலாயின. வாதாபி நகரைப் பற்றியும் அதன் ஆட்சி முறை பற்றியும் எங்கும் யாவரும் புகழத் தொடங்கினார்கள். அதன் புகழ் பல நாடுகளிலும் பரவியது.
அகத்தியர் தன்னைக் கொன்று விடுவாரோ எனப் பயந்து ஓடிய இல்வலன் விந்தியமலைக் காடுகளில் திரிந்தான். அப்போது வாதாபியின் புகழைக் கேட்டு அந்நகருக்குப் போகத் தீர்மானித்துக் கொண்டான். அகத்தியர் அந்நகரில் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டு அவன் மக்களின் பணியிலேயே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மகான் போல உருமாறி, வாதாபி நகருக்கும் போய் மக்களோடு சேர்ந்து வாழ ஆரம்பித்தான்.

வாதாபி மக்கள் முதலில் நல்ல எண்ணத்தோடு சமஉரிமை பெற்று வாழ்ந்தார்கள் என்றாலும் நாளா வட்டத்தில் அவர்களைச் சுயநலம் பற்றிக் கொண்டது. இதனால் போட்டியும் பொறாமையும் ஏற்பட்டு சண்டை, சச்சரவு, பூசல்கள் என்று ஏற்படலாயின. அறிவு படைத்தவர்கள் அறிவற்றவர்களை ஏமாற்றிப் பிழைக்கலானார்கள்.

இப்படிப்பட்ட நிலை இல்வலனுக்கு மிகவும் அனுகூலமாகியது. அவன் ஒரு தலைவனாகிவிட்டான். தன் மந்திர தந்திர இந்திரஜால வித்தைகளால் பலரது மனதைக் கவர்ந்துவிட்டான்.

அந்நகரின் நடுவே அகத்தியர் நிறுவிய விநாயக விக்கிரகம் இருக்கும் வரையில் மக்கள் அகத்தியரையும் அவரது நற்போதனைகளையும் மறக்க மாட்டார்கள் என்பது அவனுக்கு நன்கு தெரியும். எனவே தன் வித்தைகளைக் காட்டியவாறே அவன் மக்களிடையே மதுவை அருந்தும் பழக்கம் ஏற்படும்படிச் செய்தான்.

அகத்தியர் வகுத்த ஆட்சிமுறை மெதுவாக ஆட்டம் காணலாயிற்று. அகத்தியர் கூறியதெல்லாம் சரியல்ல என இல்வலன் கூறி மக்கள் ஒருவரையொருவர் எப்படி ஏமாற்றி வாழலாம் எனக் கூறலானான். யோகி போல வாழ்வது வாழ்க்கைக்கு ஏற்றது அல்ல என்றும் சகல போகங்களையும் அனுபவிப்பதே வாழ்க்கை என்றும் அவன் கூறி மக்களின் மனதை மயக்கலானான்.



 அவனது சீடர்களாகப் பல ராட்சஸர்களும் மனிதர்களைப் போல உருமாறி அவன் கூறியதை நகரின் பல பகுதி களிலும் கூறி வந்தார்கள். இப்போது இல்வலன் மாபெரும் தலைவனாகிவிட்டான். மக்கள் அவனைக் கண்டு பயந்து அவன் கூறியபடி நடக்க வேண்டியதாயிற்று.

இல்வலன் நகரின் நடுவே உள்ள மாபெரும் விநாயக விக்கிரகத்தை இடித்துத் தள்ளித் தரைமட்டமாக்கி விட வேண்டும் எனத் துடித்தான். அதற்கான ஏற்பாடுகளையும் செய் தான். அந்தச் சிலையை அடியோடு பெயர்த்துத் தள்ள முயன்றபோது ஓர் அற்புதம் நிகழ்ந்தது. திடீரென நெருப்புக் கட்டிகள் அதனைச் சுற்றி நின்றவர்கள் மீது விழுந்த வண்ணம் இருந்தன. அந்தத் தீப்பிழம்பில் அம்முயற்சியில் ஈடுபட்ட அனைவரும் அழிந்தனர்.

இல்வலனுக்கோ உடலில் பல இடங்களில் தீப்புண்கள் ஏற்பட்டன. ஒரு காலையும் கையை யும் இழந்து அவன் கீழே விழுந்து துடிதுடித்த போது, சிலையிலிருந்து ஒரு குரல் கூறியது. "அடே இல்வலா! இப்படியே கையையும் காலையும் இழந்தவனாய் உன் வாழ்நாள் முழு வதும் கஷ்டப்படு, போ. இதுதான் உனக்கு ஏற்ற தண்டனை."

அது விநாயகரின் சாபமே. ஆனால் வாதாபி நகரம் களை இழந்து போயிற்று. அங்கு ஒரு சில மக்களே நகரை விட்டு இன்னமும் போகாமல் இருந்தனர். இப்படியாக இந்த நகரம் பாழடைந்தது. இவ்வாறு தௌம்யர் கூறியதை கேட்ட அர்ஜுனனின் ஆச்சரியத்திற்கு எல்லையே இல்லை. அவன் அங்கு சுற்றிலும் பார்த்தான். விநாயக விக்கிரகம் தென்படவில்லை.

அப்போது தௌம்யர், "அர்ஜுனா! ஏன் இப்படி திகைத்துப் போய் நிற்கிறாய்?" என்றார். அப்போது ஒரு முட்புதரில் இருந்து ஒரு கிழவன் வெளியே வந்தான். அவனுக்கு ஒரு கையும் ஒரு காலும் இருக்கவில்லை. நடக்க முடியாததால் உடலால் தரையில் ஊர்ந்தவாறே அவன் அந்த மாபெரும் சிலை இருந்த இடத்திற்கு வந்தான்.
 
  அவன் அங்கு வணங்கிய போது அவனது உடல் கிடுகிடுவென ஆட்டம் கண்டது. மறுவிநாடி அப்படியே விழுந்து இறந்து போனான். இக்காட்சியைக் கண்ட அர்ஜுனன் தௌம்யரிடம், "குரு தேவரே! இவன் தானே இல்வலன்?" எனக் கேட்டான். அவரும், "ஆமாம். துஷ்டர்களுக்கும் போக்கிரிகளுக் கும் இந்த மாதிரி தான் முடிவு ஏற்படும்," என்றார். அர்ஜுனனும் உடனே சிலரை அனுப்பி தருமரை வாதாபி நகருக்கு வரும்படி தகவல் அனுப்பினான்.

தருமரும் பீமன், நகுலன், சகா தேவன் ஆகியோருடன் விரைவிலேயே வாதாபி நகருக்கு வந்து சேர்ந்தார். அன்றிரவு அவர் விநாயகர் சிலை திடீரென மறைந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டு "என் தம்பி தங்களது மாபெரும் விக்கிரகத்தை தரிசிக்கும் பாக்கியம் பெற்றான். எனக்கு அது கிடையாதா? இப்படிப்பட்ட மாபெரும் விக்கிரகத்தை இனி யாரால் அமைக்க முடியுமா? ஆயினும் தங்களது சிலை ஒன்றைப் பிரதிஷ்டை செய்யும் பாக்கியத்தை எனக்கு அளியுங்கள்," என விநாயகரை வேண்டியவாறே தியானத்தில் அமர்ந்துவிட்டார்.

அப்போது அவரது காதில், "தருமா! தேவ சிற்பியான விசுவகர்மாவும், மயனும் சேர்ந்து விக்கிரகத்தை உருவாக்கப் போகிறார்கள். அந்த விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டதும் உன் அசுவமேத யாகக் குதிரை இங்கிருந்து செல்லும். உன் அசுவமேத யாகமும் வெற்றிகரமாக முடியும். வாதாபி நகரை நீ மீண்டும் நன்கு அமைத்து விடு. உனது சந்திர வம்சத்து மன்னர்கள் இதை நீண்ட காலத்திற்கு ஆண்டு வருவார்கள்," என்ற குரல் ஒலித்தது. தருமர் கண் திறந்து பார்த்தார். ஒரு கணம் அவர் முன் விநாயகரின் மாபெரும் விக்கிரகம் தோன்றிப் பின்னர் சட்டென மறைந்தது.

மறுநாள் காலை இருவர் அந்த வழியில் உள்ள ஒரு வெள்ளை நிறக் கல்லைப் பார்த்து ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் யார் என்பதை ஊகித்து தருமர் அவர்களை வணங்கித் தக்க மரியாதைகளையும் செய்தார். அந்த கல்லைப் பெயர்த்து எடுக்கும்போது அதனடியிலிருந்து பெரும் புதையல் கிடைத்தது. ஆம்!

அதை இல்வலன் தான் புதைத்து வைத்திருந்தான். தருமர் அந்தப் பணத்தை வாதாபி நகரப் புனரமைப்பிற்காகச் செலவு செய்தார்.
இரு சிற்பிகளும் அழகான விநாயக விக்கிரகத்தைச் செய்து முடித்தார்கள். பிறகு முன்பு மாபெரும் விக்கிரகம் இருந்து மறைந்து போன இடத்தில் ஒரு பெரிய கோயிலைக் கட்டினார்கள். அதில் ஒரு பெரிய மண்டபமும் தயாராகியது.

விசுவகர்மாவும் மயனும் சேர்ந்து அமைத்த விக்கிரகத்தின் வாயிலாக ஒரு புதிய பாணி சிற்பக் கலையில் ஆரம்பமாகியது. தம் வேலை முடிந்ததும் அந்த இரு சிற்பிகளும் தாம் எப்படி வந்தார்களோ அப்படியே மாயமாய் மறைந்தும் போனார்கள்.

அந்த ஆலயத்தில் தருமர் அந்த விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்தார். அதன் பின்னர் அங்கே வந்து நின்ற அசுவமேத யாகக் குதிரை அங்கிருந்து வேகமாக ஓடலாயிற்று. பீமனும் அர்ஜுனனும் அதன் பின்னால் சென்றனர். அர்ஜுனன் அசுவமேதக் குதிரையோடு பல நாடுகளுக்குப் போய் வெற்றிக் கொடி நாட்டிவிட்டு ஹஸ்தினாபுரத்திற்கு திரும்பிச் சென்றான்.

அசுவமேத யாகத்தையும் அதன் பின்னர் தருமர் சிறப்பாகச் செய்தார். வாதாபியை ஆண்ட சந்திர வம்ச மன்னர்களுள் சத்துருஞ்ஜயன் என்பவன் நாடுகளைக் கைப்பற்றி ஆள ஆசை கொண்டவன். அவன் வாதாபி சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தான். தன் ராணுவத்தைப் பெரிதாக்கிக் கொள்ள மக்கள் மீது கடுமையான வரிகளை விதித்தான். அவனை மக்கள் மற்றொரு இல்வலன் என்றே குறிப்பிட ஆரம்பித்தனர்.

அவனது புதல்வர்களில் கடைசி மகனான சளுகவர்மன் மிகவும் நல்லவன். அகத்தியரின் ஆட்சிமுறைகளே சிறந்தது எனக் கருதியவன். விநாயகரை பயபக்தியுடன் வழிபடுபவன். அதனால் மக்களின் அன்பை அவன் அடைந்தான். சத்துருஞ்ஜயன் நாடுகளை வெல்லத் தன் புதல்வர்களை அழைத்தபோது சளுகவர்மன், "வீணாக மக்களை ஏன் கொல்ல வேண்டும்? இப்படிக் கொன்றா நாட்டைப் பெரிதாக்கிக் கொள்ள வேண்டும்?" என ஆட்சேபித்துத் தன் தந்தையோடு போக மறுத்துவிட்டான்.

அதனால் கோபம் கொண்ட சத்துருஞ்ஜயன் ஓர் எலியைப் பிடித்து அதற்கு சளுகை எனப்பெயரிட்டு அதற்கும் சளுகவர்மனுக்கும் கல்யாணம் நடக்கப் போவதாக அறிவித் தான். இப்படியாகத் தன் மகனை அவமானப்படுத்த முயன்றான்.

சளுகன் இதனால் மனம் தளர்ந்து விடவில்லை. தன் தந்தை செய்வது அக்கிரமமான செயல் என்பது அவனுக்குத் தெரியும். அக்கிரமம் புரிபவர்கள் முடிவில் அழிந்துதான் போவார்கள் என்பதும் அவன் நன்கு அறிந்ததே. அதனால் சத்துருஞ்ஜயனின் அடாத செயல்களைப் பற்றிக் கவலைப்படாமல் தனக்கு விநாயகர் எப்போதும் துணை இருப்பார் என உறுதியாக நம்பினான்.
சளுகையின் உண்மைப் பெயர் கல்யாண கிங்கிணி. இந்திரனின் சாபத்தால் ஓர் அப்ஸரப் பெண் அம்மாதிரி எலியாகப் பிறந்திருந்தாள். திருமணத்திற்கு வந்திருந்த எல்லோரும் மணப் பந்தலில் சளுக வர்மனைக் கேலியும் கிண்டலும் செய்வார்கள் என சத்துருஞ்ஜயன் நினைத்தான்.

அப்போது சளுகன், "இந்த மன்னன் ஓர் எலியைத் தன் மருமகள் ஆக்கிக் கொள்ள வேண்டும் என விநாயகர் நினைத்திருக்கிறார். ஆனால் அதே விநாயகர் இதனை ஓர் அழகிய பெண்ணாக மாற்றிவிடுவார். நீங்கள் எல்லோரும் பார்த்துப் பரவசம் அடையத்தான் போகிறீர்கள் பாருங்களேன்," என்றான். 

(தொடரும்)

0 comments:

Post a Comment

Flag Counter