விநாயகர் - 16

 
வாதாபி நகரின் நடுவே உள்ள பாறை விநாயகர் உருவத்தை அடைய வேண்டும் என அகஸ்தியர் விரும்பினார். லோபாமுத்திரை சித்திரக் கலையில் தேர்ந்தவள். அவள் அங்கு வந்து அந்தப் பாறையைப் பார்த்தாள். பிறகு அந்தப் பாறையில் எப்படி விநாயகரின் திருவடிவத்தை வடிக்க வேண்டும் என்பதற்கான படத்தையும் வரைந்தாள்.
 
ஆனால் அந்தப் படத்தின்படி விநாயகரின் திருவுருவத்தை அக்கல்லில் செதுக்கத்தக்க சிற்பி கிடைக்கவில்லை. பலர் வந்து முயன்றும் முடியவும் இல்லை. அகஸ்தியரோ அந்தப் பாறையின் முன் உட்கார்ந்து அதனையும் லோபாமுத்திரை வரைந்த விநாயகர் படத்தையும் மாறிமாறிப் பார்த்தவாறே இருக்கலானார்.
 
வந்த சிற்பிகள் எல்லோரும் "இப்படிப்பட்ட உருவத்தை எங்களால் வடித்துத் தர முடியாது. இதை தேவ சிற்பியான விசுவகர்மாவோ அல்லது மயனோ தான் வந்து செதுக்க வேண்டும்," எனக் கூறினார்கள். வேறு சிலர், "இந்தப் பாறையில் செதுக்க சாதாரண உளியால் முடியாது. தெய்வீக சக்தி வாய்ந்த உளி தேவை," என்றார்கள்.
 
இந்த சமயம் பார்த்து தேவ சிற்பியான விசுவகர்மாவும் மயனும் எங்கேயோ சென்றுவிட்டனர். இதனால் அகஸ்தியருக்கு அந்த விநாயகர் சிலை வடிக்கச் செய்வது ஒரு பெரும் பிரச்னையாக ஆகிவிட்டது.
அவர் அன்ன ஆகாரம் இன்றி அந்த பாறை முன் அமர்ந்து "விநாயகரே! என் விருப்பம் என்றாவது நிறை வேறுமா? இதனை நிறைவேற்றி வைப்பது உன் பொறுப்பு!" எனக் கூறியவாறே இருக்கலானார். ஒருநாள் மாலை ஒரு மலைச் சாதி சிறுவன் அவர் இருந்த இடத்திற்கு வந்தான். அவன் கையில் ஒரு உளி இருந்தது. அவனைப் பார்த்ததும் ஒரு சிற்பியோ என்ற சந்தேகம் அகஸ்தியருக்கு ஏற்பட்டது.
 
அவர் அவனது கையிலுள்ள உளியைப் பார்த்தவாறே இருந்தார். அச்சிறுவனோ, "முனிவர் போலுள்ள தாங்கள் இந்த பாறையின் முன் உட்கார்ந்திருக்கிறீர்களே! இங்கே ஏதாவது கல் வேலை கிடைக்குமா என்றே வந்தேன்," என்றான்.
 
அகஸ்தியரும், "வாப்பா வா. இந்தப் பாறையை விநாயகர் வடிவமாக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால் இதுவரை சரியான சிற்பி கிடைக்கவில்லை," என்றார்.
 
சிறுவனும், "எனக்கு இரண்டு வேலைகள் மட்டுமே தெரியும். ஒன்று நன்றாக வயிறு நிறையச் சாப்பிடுவது. மற்றது சிற்பவேலை," என்றான். அது கேட்டு அகஸ்தியர் சிரித்து, "இந்த மாபெரும் பாறையை மாபெரும் விநாயகர் வடிவமாக்கித் தரும் மாபெரும் சிற்பி யாராவது வருவார்களா என்றுதான் நான் காத்துக் கிடக்கிறேன். நீயோ சிற்பி எனக் கூறிக் கொள்கிறாய். மிகச் சிறியவனாகவும் இருக்கிறாய். இது உயரமான கடினமான பாறை. இதில் உன்னால் எங்கே விநாயகரின் வடிவைச் செதுக்க முடியும்?" என்று கூறினார்.
 
சிறுவனான சிற்பி சிரித்துக் கொண்டே, "நான் வயதிலும் உருவத்திலும் சிறிய சிற்பி என்பதால் என் வேலையின் தரம் குறைந்து இருக்கும் என எண்ணிவிட்டீர்களா? உருவம் பெரிதாக இருந்துவிட்டால் மட்டும் போதுமா? திறமை வேண்டாமா?" எனக் கூறியவாறே தந்தப்பிடி போடப்பட்ட தன் உளியை அவர் முன் ஆட்டிக் காட்டினான்.
 
அகஸ்தியர் அதனைக் கண்கொட்டாமல் பார்த்தார். அப்போது அச்சிறுவன் அதனை எடுத்து அப்பாறையின் மீது விட்டெறிந்தான். உளியின் முனை பாறை மீது பட்டதும் மின்னல் போலப் பளிச்சென வெளிச்சம் ஏற்பட்டது. இடிஇடிப்பதுபோன்ற சத்தமும் கேட்டது. அந்தப் பாறையில் ஒரு துவாரம் ஏற்பட்டது.
சிறுவன் "இதுதான் விநாயகரின் தொப்புள். இனி பாருங்கள் விநாயகரின் வடிவம் விரைவில் அமைந்து விடும்" என்று கூறி ‘ஸ்ரீகணநாத' எனப் பாட ஆரம்பித்தான். பிறகு அவன் "இந்தப் பாறையில் காந்த சக்தி உள்ளது. அதனால் உளி இதன் மீது படும்போது ஒளி ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அதனால் இந்த வேலை முடியும் வரை இந்தப் பகுதிக்கு யாரும் வரக் கூடாது. இடி இடிப்பது போன்ற சத்தம் ஏற்படும். அதனால் யாரும் பயந்துவிடவும் வேண்டாம். அகஸ்திய மாமுனிவரே! இனி கவலையைவிட்டு நீங்கள் செல்லுங்கள். நாளை காலையில் வந்து பாருங்கள். நீங்கள் விரும்பியபடி விக்கிரகம் தயாராக இருக்கும்," என்றான்.
 
அகஸ்தியரின் ஆச்சரியத்திற்கு அளவே இல்லை. அவர் லோபா முத்திரை வரைந்த படத்தை எடுத்து அச்சிறுவனிடம் கொடுக்கப் போனார். அச்சிறுவனும், "இதை தான் நீங்கள் நான் இங்கே வந்த போதே காட்டினீர்களே! நான் ஒரு முறை பார்த்து விட்டால் போதும், பிறகு மறக்கவே மாட்டேன். அடிக்கடி அதைப் பார்க்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. நான் என் வேலையை முடித்துவிடு கிறேன். பிறகு படம் எழுதியவர் வந்து பார்த்து ஏதாவது குறை இருந்தால் சொல்லட்டும். நீங்கள் இந்தப் படம் வரைய எவ்வளவு கொடுத்தீர்கள் என்பது தெரியாது. ஆனால் என் வேலை முடிந்ததும் எனக்கு எவ்வளவு கொடுக்கப் போகிறீர்கள் என்று பார்க்கிறேன்," என்றான்.
 
அதைக் கேட்ட அகஸ்தியர் திகைத்தார். அவர் லோபாமுத்திரகை்குக் கொடுக்க வேண்டிய பணத்தைத் தனியாக எடுத்து வைத்திருந்ததால் அவரிடம் வேறு பணம் எதுவும் இருக்கவில்லை. ஏதோ இருக்கும் கொஞ்சம் பணத்தைத்தான் கொடுக்க முடியும். இப்படி யோசித்தவாறே அகஸ்தியர் அங்கிருந்து சென்றார்.
 
அப்போது எதிரே வந்த லோபா முத்திரையின் முகம் சந்தோஷத்துடன் இருப்பது கண்டு அவர் "என்ன விஷயம்?" என்று கேட்டார்.
 
அவளும் "நான் உங்களிடம் நல்ல ஆடைகளும் தங்க நகைகளும் வேண்டும் என்று ஏன் கேட்டேன் என்று நினைத்து இப்போது வெட்கப்படுகிறேன். ரிஷிபத்தினி ரிஷியின் வாழ்க்கைக்கு ஏற்ப இருக்க வேண்டும்.
நான் உங்களை அதை எல்லாம் கேட்டது ஏதோ ஒரு கைங்கரியத்திற்காக உதவத் தான் போலும். ஏதோ ஒரு சக்திதான் என்னை அப்படிக் கேட்கச் சொல்லி இருக்கிறது. அதெல்லாம் எனக்கு வேண்டவே வேண்டாம்," என்றாள்.
 
அதுகேட்டு அகஸ்தியர் உள்ளூர மகிழ்ந்து போனார். அவர் "ஒரு சிற்பி கிடைத்துவிட்டான். விடிவதற்குள் சிலையைச் செய்துவிடுவானாம்!" என்றார். அத்துடன், அச்சிறுவனுக்கு என்ன கொடுப்பது என்பது தெரியாமல் விழிப்பதாகவும் கவலை தெரிவித்தார்.
 
அவளும், "எனக்காக நீங்கள் சேர்த்து வைத்த பணம் மற்றும் நகைகள் எல்லாம் உள்ளனவே. அவை போதாதா?" என்று கேட்டாள். அகஸ்தியரும் "அதுபற்றி காலையில் யோசிக்கலாம்," எனக் கூறினார். இரவுப் பொழுது கழியலாயிற்று. ஆனால் அவருக்குத் தூக்கமே வரவில்லை. பாறையருகே என்ன நடக்கிறது என்ற ஆவல் அவர் மனதில் ஏற்படவே எழுந்து அங்கு சென்றார்.
 
அவர் பாறை அருகே சென்றபோது ஆயிரக்கணக்கான உளிகள் பாறை மீது ‘டங்' ‘டங்'கென மோதும் சத்தத்தைக் கேட்டார். மின் பொறிகள் பாறையிலிருந்து தெரித்து வெளி வந்தன. அது கனவா நனவா என அவர் தம் கண்களை ஒருமுறை கசக்கிக் கொண்டு பார்த்தார். அவருக்குத் தலையே சுற்றுவது போல் இருந்தது. அப்படியே மயங்கி கீழே விழுந்துவிட்டார்.
 
யாரோ தன்னைத் தட்டி எழுப்புவது உணர்ந்து அகஸ்தியர் கண் விழித்துப் பார்த்தார்.
அப்போது நன்கு விடிந்து விட்டது. அச்சிறுவனான சிற்பிதான் அவரை தட்டி எழுப்பியவன். "விக்கிரகம் தயாராகி விட்டது. படம் வரைந்து கொடுத்த வரை அழைத்து வாருங்கள். அவர் வரைந்தது போல இது இருக்கிறதா என்று பார்க்கட்டும்!" என்றான்.
 
அன்று விநாயகர் சதுர்த்தி என்பதால், லோபாமுத்திரை ஓர் பாத்திரம் நிறைய மோதகங்களையும் இட்டிலிகளையும், மற்றொரு குடத்தில் நீரும் புஷ்பங்களும் எடுத்து கொண்டு அங்கே வந்து சேர்ந்தாள்.
 
அகஸ்தியரோ படிகம் போலப் ‘பளபள'வென மின்னும் விநாயக விக்கிரகத்தைக் கண்டு திகைத்து நின்று கொண்டிருந்தார். சிறுவனோ, "இதற்குக் கூலியாக என்ன கொடுக்கப் போகிறீர்கள்?" என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.
 
அகஸ்தியரோ, "சிற்ப சிரோண்மணியே! உனக்கு என்ன கொடுத்தாலும் தகும். ஆனால் என்னிடம் ஏதோ கொஞ்சம் பணம் உள்ளது. அதை எல்லாம் உனக்கே கொடுத்துவிடுகிறேன். ஏற்றுக் கொள்!" என்றார்.
 
அப்போது அச்சிறுவன், "அது சரி. அந்தப் படம் வரைய என்ன கொடுத்தீர்கள் என்று இன்னமும் சொல்லவில்லையே. அது அருமையான கலைத்திறன் நிரம்பிய படம். அதைப் போல விக்கிரகம் செய்வது மிகவும் கடினமான வேலையே!" என்றான்.அப்போது அகஸ்தியர், "ஐயா சிற்பி யாரே! அந்தப் படத்தை வரைந்தவருக்கு நான் எதுவுமே கொடுக்கவில்லை. ஏனெனில் அந்த படத்தை வரைந்தது என் மனைவியேதான்," எனக் கூறினார். லோபாமுத்திரையோ தியானத்தில் நின்றாள்.
 
அப்போது அந்த சிறுவன், "மகரிஷியே! நான் மட்டும் அந்தப் படத்தை வரையச் சொல்லி இருந்தால் இப்படி அழகாக வரைந்தவருக்கு ஒரு மாபெரும் நகரத்தை நிர்மாணிக்க எவ்வளவு பணம் பிடிக்குமோ அதனைக் கொடுத்து அந்த ஓவியரை கௌரவிப்பேன். அவ்வளவு பணம் இந்தப் பெண்மணிக்கு சேர வேண்டும்," என்றான்.
 
அகஸ்தியரும் "ஆமாம். நானும் அவ்வளவு பணம் அவளுக்காகச் சேர்த்து வைத்திருக்கிறேன்" என்றார்.
 
சிறுவனும், "ஓ! அப்படியா? உங்கள் மனைவிக்காக எடுத்து வைத்த பணத்தையா எனக்குக் கொடுக்கப்போகிறீர்கள்? அதை நான் வாங்கிக் கொள்வது மாபெரும் பாவம். அதில் இருந்து ஒரு செப்புக் காசு கூட எனக்கு வேண்டாம்," என்று கூறினான். பிறகு அவன் லோபாமுத்திரையை பார்த்து "அம்மா! தங்கள் கையால் எனக்கு ஒரு விள்ளல் இட்லி கொடுங்கள். அதுதான் நான் உங்களிடம் கேட்கும் கூலி," என்றான்.
 
அதைக் கேட்ட லோபாமுத்திரை இட்லிப் பாத்திரத்தையே எடுத்து அந்தச் சிறுவனின் முன் வைத்து அவன் கால்களில் விழுந்து வணங்கி, "விநாயகரே! உங்களைக் கண்டு இந்த ஜென்மம் சாபல்யம் அடைந்தது," எனக் கூறினாள். அப்போதே அந்த சிறுவனும் அங்கிருந்து மாயமாய் மறைந்து போனான்.
 
அப்போது தான் அகஸ்தியரின் கண்களை மறைத்திருந்த மாயை அகன்றது. அவர் அந்த விநாயக விக்கிரகத்தின் முன் நின்று வணங்கி "மூஷிக வாகனனே, விநாயகா! நான் தவவலிமை பெற்றவன், மாபெரும் யோகி என்றெல்லாம் கர்வப்பட்டு கொண்டிருந்தேன். ஆனால் உன் முன் நான் எம்மாத்திரம்?" என்று கூறினார். விநாயகத் தோத்திரம் அப்போது அவரது காதில் ஒலிக்க, அகஸ்தியரும் லோபா முத்திரையும் விழுந்து வணங்கினர்.
 
 
 

0 comments:

Post a Comment