விநாயகர் - 15

 
பாண்டவர்கள் நாரதர் கூறியபடி கணேச விரதத்தைத் தம் புரோகிதரான தௌம்யரைக் கொண்டு நடத்தி, தம் அஞ்ஞாத வாசத்தை விராட மன்னனின் நாட்டில் வெற்றிகரமாக முடித்தார்கள். பின்னர் அவர்கள் கௌரவர்களோடு போர் புரிந்து வெற்றி பெற்றுத் தம் நாட்டை திரும்பப் பெற்றார்கள். தருமரின் பட்டாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
 
பிறகு தருமர் அசுவமேதயாகம் செய்ய ஏற்பாடுகளைச் செய்யலானார். அர்ஜுனன் யாகக் குதிரையின் பின்னால் பெருத்த படையோடு பல நாடுகளுக்குச் சென்றான். தௌம்யரும் அவனோடு சென்றார். யாகக் குதிரை சென்ற நாடுகளில் இருந்த மன்னர்கள் எல்லாம் தருமரின் கீழ் சிற்றரசர்களாக இருக்கச் சம்மதித்தார்கள். யாகக் குதிரை இப்படியே போய் ஓரிடத்தில் நின்று விட்டது. அங்கிருந்து அது நகரவே இல்லை.
 
அதுகண்டு அர்ஜுனன் ஆச்சரியப்பட்டு தௌம்யரிடம் அதற்கு என்ன காரணம் என்று கேட்டான். அவரும் அருகிலிருந்த நகருக்கு அழைத்துப் போய் ஒரு விநாயகரின் சிலையைக் காட்டினார். அது ஒரு பாறையில் இருந்து உருவாகி இருந்தது. பார்க்க மிகவும் அழகாக இருந்தது.
 
தௌம்யர் அர்ஜுனனிடம், "அர்ஜுனா! இந்த விநாயகரை வணங்கிப் பூஜை செய். இவருக்கு வாதாபி கணபதி என்ற பெயர்.
இவரைப் பற்றியும் இந்த வாதாபி நகரம் பற்றியும் விவரமாகக் கூறுகிறேன்," என்றார். அர்ஜுனனும் பூஜையை முடித்துவிட்டு அந்த நகரைச் சுற்றிப் பார்த்தான்.
 
ஒரு காலத்தில் அந்நகர் அழகாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்போதோ பாழடைந்து கிடந்தது. ஏதோ பெயரளவில் ஒரு சிலர் சில வீடுகளில் வசித்தனர். அவர்கள் அர்ஜுனனைக் கண்டு மகிழ்ந்து வரவேற்றுப் பழங்களை அளித்து தம் நகரை மீண்டும் நிர்மாணித்துத் தருமாறு வேண்டினார்கள்.
 
தௌம்யரும் "அர்ஜுனா! இது வாதாபி நகரம். அகஸ்தியர் இந்த விநாயகர் சிலையை உருவாக்கி இங்கு வைத்தார். கங்காதேவி கவேரர் என்ற ராஜரிஷியின் கமண்டலத்தில் விழுந்து காவேரியாகி அவரது ஆசிரமத்தில் வளர்ந்து வந்தாள். அகஸ்தியர் அந்தப் பெண்ணைப் பார்த்ததும் தாம் அவளை விவாகம் செய்து கொள்வதாக கவேரரிடம் கூறினார்.
 
கவேரரும் "எனக்கு சம்மதமே. ஆனால் காவேரியின் அபிப்பிராயத்தையும் தெரிந்து கொள்வது நல்லது," என்றார். அகஸ்தியரும் ‘சரி' எனக் கூறிக் காவேரியிடம் சுமுகமாகப் பேசிப் பழகலானார். ஒருநாள் அவள் அகஸ்தியரிடம் "நாம் சஹ்ய மலைமீதுள்ள காடுகளைப் பார்த்து வருவோம்," எனவே அவரும் அவளை அழைத்துக் கொண்டு அங்கு சென்றார்.
 
அப்பகுதியில் சுற்றி வரும்போது ஒரு நீர் மடுவில் அழகான தாமரை மலர் இருப்பதைக் காவேரி கண்டு அதனைப் பறிக்க அதனுள் இறங்கினாள். ஆனால் அந்த மடுவின் நீர் அவள் மீது பட்டதுமே அவள் தண்ணீராக மாறிப் பெருக்கெடுத்து சஹ்யமலை உச்சியிலிருந்து கீழ் நோக்கிப் பாய்ந்து செல்லலானாள். அவள் காவேரி நதியாக மாறி விட்டாள்.
 
அகஸ்தியர் காவேரியை வெகு நாட்கள் வரை நினைத்துக் கொண்டே இருந்தார். பின்னர் விரக்தி அடைந்து அவர் கடுந்தவம் புரிந்து மனதை அடக்கி மாபெரும் முனிவர் என்ற பெயரும் பெற்றார். ஒருநாள் அவர் ஒரு மரக்கிளையில் தொங்கும் பித்ரு தேவதைகளைக் கண்டு, "நீங்கள் யார்? ஏன் இப்படித் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்.
அவர்களும் "எங்கள் வம்சத்தில் தோன்றிய அகஸ்தியன் குடும்பஸ்தனாக ஆகிவிட்டால் எங்களுக்கு விமோசனம் ஏற்பட்டு இந்த நிலை மாறிவிடும். அவன் அப்படிச் செய்யும்வரை நாங்கள் இப்படித்தான் இருந்தாக வேண்டும்," என்றார்கள்.
 
அப்போது அகஸ்தியர் ஞான திருஷ்டியால் பார்த்தார். தாம் விரும்பிய காவேரி மறுபிறப்பில் விதர்ப்ப மன்னனின் புதல்வி லோபாமுத்திரையாகப் பிறந்திருப்பது தெரிந்தது. அவர் விதர்ப்ப மன்னனிடம் போய் லோபாமுத்திரையைத் தனக்கு மணம் செய்து வைக்கும்படிக் கேட்டார்.
 
காய் கனி கிழங்குகளைச் சாப்பிட்டு காஷாயம் அணிந்து கானகத்தில் திரியும் ஒருவனுக்கு அரச குமாரியை யாராவது கொடுக்க இசைவார்களா? ஆனால் அப்படிக் கொடுக்காவிட்டால் முனிவர் தன்னை சபித்து விடுவாரோ என்ற பயம் விதர்ப்ப மன்னனுக்கு ஏற்பட்டது. அதனால் அவன் கவலையில் மூழ்கி விட்டான். அதைக் கண்ட லோபா முத்திரை விஷயத்தைத் தெரிந்து கொண்டு தன் தந்தையிடம் தன்னை அகஸ்தியருக்கே மணம் செய்து வைக்கும்படிக் கூறினாள். விதர்ப்ப மன்னனும் லோபாமுத்திரையை அகஸ்தியருக்கு திருமணம் செய்து வைத்து அனுப்பி வைத்தான்.
 
அகஸ்தியர் லோபாமுத்திரையுடன் தம் ஆசிரமத்திற்கு வந்தார். அவர் அவளிடம் "என் பித்ருக்கள் நரக வேதனையிலிருந்து விடுபட நமக்குக் குழந்தைகள் பிறக்க வேண்டும். அதற்காகவே நான் உன்னைத் திருமணம் செய்து கொண்டேன்," என்றார்.
 
அப்போது லோபாமுத்திரை தன் அழுக்கடைந்து நைந்து போன புடவையைக் காட்டி, "நான் அரச குமாரியாகப் பிறந்தவள். எனக்கு இந்த மாதிரிப் புடவை இல்லாமல் நல்ல பட்டுப் புடவைகளாயும் நகைகளாகவும் கொண்டு வந்து கொடுக்க வேண்டியது உங்கள் கடமை. அதற்கு வேண்டிய பணம் சம்பாதித்துக் கொண்டு வாருங்கள்!" என்று கூறினாள். அகஸ்தியர் அவள் கூறுவதில் உண்மை உள்ளது என நினைத்து பணம் சம்பாதித்து வரக் கிளம்பினார். அவர் பல அரசர்களைக் கண்டு அவர்களிடம் உபரியாக உள்ள பணத்தை தமக்குக் கொடுக்கும்படிக் கேட்டார்.ஆனால் எல்லா அரசர்களும் தம்மிடம் உபரியாகப் பணம் இல்லை என்று கூறி அனுப்பிவிட்டார்கள்.
 
அகஸ்தியர் மனம் ஒடிந்து போய் போய்க் கொண்டிருக்கையில் ஓரிடத்தில் ஒரு பாறையைக் கண்டார். அந்தப் பாறை விநாயகர் வடிவில் உள்ளது கண்டு அவர் அதனை வணங்கி "விநாயகரே! தவத்தை தவிர, வேறு எதைப் பற்றியும் நினையாத நான் பணம் சம்பாதிக்கக் கிளம்பினேன். ஆனால் அதை அடைய வழி தெரியவில்லை. எனக்குப் பணம் எப்படிக் கிடைக்கும் என்று வழி காட்டுங்கள்," என வேண்டினார்.
 
அப்போது விநாயகரே அவர் முன் தோன்றி, "சற்று நேரத்தில் இல்வலன் என்பவன் வந்து உங்களைத் தன் வீட்டில் சாப்பிடக் கூப்பிடுவான். நீங்கள் போய் அவனிடம் இருக்கும் கணக்கில் அடங்காத பணத்தை அடையுங்கள். அங்கு உங்களால் ஒரு முக்கியமான வேலையும் ஆக வேண்டியது இருக்கிறது," என்றார்.
 
அப்போது அகஸ்தியர் "விநாயகரே! இந்தப் பாறை உங்களது விக்கிரகம் போல இருந்தது. எனவே இது தானே முளைத்து வந்தது போலத் தோன்றச் செய்ய வேண்டுகிறேன்,"
 
என்றார். விநாயகரும் அப்படியே ஆகட்டும் என கூறி மறைந்தார். அகஸ்தியர் மிகவும் களைத்துப் போயிருந்தார். அந்தப் பாறையருகிலேயே உட்கார்ந்து விட்டார். அப்போது இல்வலன் சிலரை அழைத்துக் கொண்டு வருவதை அவர் கண்டார். அகஸ்தியருக்கு அவனை பற்றிய விவரம் உடனே தெரிந்தது.
 
அப்பகுதியில் வாதாபி, இல்வலன் என்ற இரு ராட்சஸர்களும், அவ்வழியே வரும் முனிவர்களையும், பயணிகளையும் கொன்று சாப்பிட்டுவிட்டு அவர்கள் வைத்திருக்கும் பணத்தைச் சேர்த்துவைப்பதை அறிந்தார். அத்துடன், இல்வலன் தான தர்மம் செய்யும் மன்னன் போல வேஷம் போட்டு அவ்வழியே வருபவர்களைத் தன் வீட்டிற்குச் சாப்பிட வருமாறு கூறி அழைத்துச் செல்வான்.
 
அங்கு வாதாபியை கொழுத்த ஆடாக மாற்றி அதனை வெட்டி சமைத்து, அந்த மாமிசடுத்தை விருந்துண்பவர்களுக்குக் கொடுத்து, அதன் பின் "வாதாபி, வா வெளியே!" என்பான். மறுநிமிடமே வாதாபி விருந்து சாப்பிட்டவர்களின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வருவான். பிறகு அந்த நர மாமிசத்தை இல்வலனும் வாதாபியும் சாப்பிட்டுவிடுவார்கள். இந்த ரகசியத்தை அகஸ்தியர் தெரிந்துகொண்டார்.
 
இல்வலன் அகஸ்தியரை அணுகி அவரைத் தன் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுப் போகுமாறு வேண்டினான். அகஸ்தியரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தவர் போல அவனோடு சென்றார்.
 
அவர் இல்வலனிடம் "எனக்கு ரொம்பப் பசி. ஆட்டு மாமிசம் சாப்பிட்டு பழக்கப்படுத்திக் கொண்டுவிட்டேன். எனவே எனக்கு முதலில் விருந்து போட்டு அனுப்பு!" என்றார். இல்வலனும் வாதாபியான ஆட்டை வெட்டி, நெருப்பில் வாட்டி அகஸ்தியருக்கு உண்ணக் கொடுத்தான்
அகஸ்தியர் அந்த ஆட்டு மாமிசத்தை நன்கு அரைத்துச் சாப்பிட்டார். அதன் பின் பானை நிறைய மது கேட்டார்.
 
 இல்வலனும், "சரி, அதை இப்பொழுதே கொண்டுவரச் சொல்கிறேன். வாதாபி, வா இங்கே!" என்று உரக்கக் கூவினான். அகஸ்தியர் மெதுவாகத் தன் வயிற்றைத் தடவிக் கொண்டே, "வாதாபியா? இனிமேல் அவன் எங்கே வரப் போகிறான்? அவன்தான் ஜீரணமாகிவிட்டானே. வாதாபி ஜீர்ணம்! வாதாபி ஜீர்ணம்!! வாதாபி ஜீர்ணம்!!!" என்று மூன்று முறை கூறினார்.
 
இல்வலன் அதுகேட்டு திடுக்கிட்டான். வாதாபியும் வழக்கம் போல் விருந்தாளியின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வராமல் போகவே அவன் பயந்து ஓடியே போய்விட்டான். இப்படியாக அந்த இரு அரக்கர்கள் வழிப்போக்கர்களுக்குக் கொடுத்து வந்த தொல்லை ஒழிந்தது.
 
அகஸ்தியர் அங்கு இல்வலனும் வாதாபியும் பயணிகளிடமிருந்து பறித்து வைத்திருந்த பணத்தையும் பொருள்களையும் தனக்கு வேண்டிய அளவிற்கு எடுத்துக் கொண்டார். மீதம் இருந்ததைக் கொண்டு ஒரு பெரிய நகரத்தை அவர் அங்கே நிர்மாணித்தார். அதில் ஆயிரக்கணக்கான மக்களைக் குடிபுகச் செய்தார்.
 
அகஸ்தியர் கண்ட பாறையைச் சுற்றித்தான் இந்த நகரம் அமைந்தது. வாதாபி இறந்ததால் ஏற்பட்ட நகரமாதலால் அகஸ்தியர் அதற்கு வாதாபி எனப் பெயரிட்டார். ஆட்சி முறை பற்றி அவர் அந்தப் பாறையிலேயே செதுக்கி வைத்தார். மக்களே அந்த நகரை அவர் வகுத்துக் கொடுத்த முறையைப் பின்பற்றி ஆண்டு வந்தார்கள்.
 

0 comments:

Post a Comment

Flag Counter