விநாயகர் - 14

 
கிருஷ்ணரது ஆச்சரியத்தைக் கண்டு ருக்மிணி சிரித்தவாறே, "ஆமாம். அந்தப் பெண்ணிற்குத் தான் உங்கள் மீது எவ்வளவு ஆசை! அவளைக் கண்டால் நீங்கள் எங்கே என் கைவிட்டு நழுவிப் போய்விடப் போகிறீர்களோ எனப் பயப்படுகிறேன். உங்களை ஜாக்கிரதையாகவே கண்காணிக்கத்தான் வேண்டும். நீங்கள் யாரிடம் சிக்கிக் கொண்டாலும் என்னைவிட்டுப் பிரிய மாட்டீர்கள் என்பது எனக்கு நன்கு தெரியும். நானும் என் பக்தியால் உங்களைக் கட்டி வைக்க முடியும்," என்றாள்.
 
கிருஷ்ணரும் "பேஷ், பேஷ். பக்தி சாகரத்தில் ஒரேயடியாக என்னை மூழ்கடித்துவிடப் போகி றாய். நான் மூச்சுத் திணறித் திக்கு முக்காடப் போகிறேன்!" என்றார் வேடிக்கையாக. இப்படியாகச் சில நாட்கள் கழிந்தன. இதற்குள் கிருஷ்ணர் தான் சியமந்தகமணியைக் கவர்ந்து சென்றுவிட்டார் என்ற வதந்தி எங்கும் பரவியது. இதனைப் பரப்பியவன் சத்திராஜித்தே.
 
தன் மீது சுமத்தப்பட்ட அபாண்டம் பற்றி யோசித்துக் கொண்டிருப் பதில் பயனில்லை எனக் கிருஷ்ணர் எண்ணி "விநாயகரே! இப்படி ஓர் ஆட்டம் ஆடி முடிவில் கருணை காட்டுகிறாயா? செய், செய்!" என்று எண்ணித் துதித்துவிட்டு சியமந்தகமணியைத் தேடிக் கொண்டு காட்டிற்குச் சென்றார்.
 
ஆனால் உண்மையில் என்ன நடந்தது? சத்திராஜித் தன் மகளான சத்தியபாமாவை தன் மருமகனான சதத்துவனன் என்பவனுக்கு விவாகம் செய்து வைக்க நினைத்தான்.
எனவே அவன் தன் தம்பியான பிரசேனஜித் தனை சதத்துவனனுடன் பேசி முடிவு செய்ய அனுப்பினான். பிரசேனஜித் தன் சியமந்தகமணியை அணிந்து கொண்டு காட்டு வழியாகச் சென்ற போது ஒரு சிங்கம் அவனது கழுத்தில் மின்னும் மணியைக் கண்டது. அதன் ஒளி அதனைக் கவரவே சிங்கம் பிரசேனஜித்தன் மீது பாய்ந்து கொன்றது. அந்த சிங்கத்தை ஜாம்ப வான் கொன்று அதனிடமிருந்து மணியை எடுத்துப்போய்த் தன் புதல்வியான ஜாம்பவதியிடம் கொடுத்தான்.
 
கிருஷ்ணர் சியமந்தகமணியைத் தேடலானார். காட்டில் இறந்து கிடக் கும் பிரசேனஜித்தனையும் சிங்கத்தை யும் அவர் கண்டார். அவர்களருகே பதிந்த ஜாம்பவானின் கால் சுவடுகளைப் பின்பற்றி அவர் அவனது குகையை அடைந்தார்.
 
குகைக்குள் ஜாம்பவதி சியமந்தகமணியைப் பந்து போலத் தூக்கிப் போட்டு விளையாடிக் கொண்டிருப்பதை அவர் கண்டார். காட்டில் ஆதரவற்றுக் கிடந்த குழந்தையாக இருந்த ஜாம்பவதியை ஜாம்பவான் எடுத்து வளர்த்து வந்தான்.
 
அந்த மணியை எடுக்க கிருஷ்ணர் ஜாம்பவதியின் கைகளைப் பிடித்தார். ஜாம்பவதி தன் கைகளைப் பிடிப்பிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியாமல் கிருஷ்ணரையே பார்த்துக் கொண்டு நின்றாள்.
 
அப்போது ஜாம்பவான் குகைக்குள் வந்தான். அவன் கிருஷ்ணரைத் தாக்கினான். இருவருக்கும் பல நாட்கள் சண்டை நடந்தது. முடிவில் கிருஷ்ணர் தம் முஷ்டியால் ஜாம்பவானின் மார்பில் ஓங்கி ஒரு குத்து விட்டார்.
 
அப்போது தான் ஜாம்பவானுக்கு இராமபிரானே கிருஷ்ணராக அவதாரம் எடுத்திருக்கிறார் என்பது தெரிந்தது. அவன் கிருஷ்ணரை வணங்கி "கிருஷ்ணா! நீ ஜாம்பவதியின் கைகளை பிடித்ததால் நீயே அவள் கணவன்," எனக் கூறி சியமந்தக மணியையும் ஜாம்பவதியையும கிருஷ்ணரிடம் ஒப்படைத்தான். ஜாம்பவானையும் ஜாம்பவதியையும் அழைத்துக் கொண்டு துவார கையை அடைந்த கிருஷ்ணர் சியமந்தகமணியை சத்திராஜித்திடம் சேர்ப்பித்தார்.
சத்திராஜித்திடம் ஜாம் பவான் நடந்ததை எல்லாம் கூறவே அவன் மனம் வருந்தி, "கிருஷ்ணா! சியமந்தகமணி போய் விட்டதே என்று உன் மீது அபவாதம் சுமத் தினேன். நான் செய்த இந்தக் குற்றத்திற்கு அபராதம் போல இந்த சிய மந்தகமணியை உனக்குக் கொடுப்பதோடு என் மகள் சத்தியபாமாவையும் அளிக்கிறேன். ஏற்றுக் கொள்!" என வேண்டினான்.
 
கிருஷ்ணரும் சியமந்தகமணியை யும் சத்தியபாமாவையும் ஏற்றுக் கொண்டு பின்னர் அந்த மணியை சத்திராஜித்திற்கே கொடுத்துவிட் டார். அப்போது சத்தியபாமா தன் தந்தையிடம் "பார்த்தீர்களா அப்பா! எனக்கு சியமந்தகமணியைவிட உயர்ந்த மணி கிடைத்து விட்டது. நான் விநாயகரை வழிபட்டு வந்தேன். அவர் என் விருப்பத்தை நிறை வேற்றி வைத்தார்," என்று கூறி விநாயகரையும் மனதில் தியானித்தாள்.
 
விநாயகரும் அப்போது ஆகாயத் தில் தோன்றி "ஆகா! சத்தியம் சேர வேண்டிய இடத்தில் தான் இருக்கிறது. இந்த சியமந்தகமணியின் கதையை கேட்டவர்களுக்கு வீண் அபவாதமும் பழியும் வராது," எனக் கூறி மறைந்தார்.
 
சத்திராஜித்தும் கிருஷ்ணருக்கு சத்தியபாமாவை முறைப்படிக் கல்யாணம் செய்து கொடுத்தான். அந்த விவாகம் சிறப்பாக நடந்தது. அதன் பிறகு கிருஷ்ணர் ஜாம்பவதியையும் மணந்து கொண்டார்.
 
அப்பொழுது ஜாம்பவான், "கிருஷ்ணா! நீங்கள் இராமாவதாரம் எடுத்தபோது உங்களுடன் சண்டை போட்டுப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டு வந்தது. இப்போது என் நேடுநாளைய விருப்பம் நிறைவேறிவிட்டது. இனி தவம் செய்யக் காட்டிற்குச் செல்கிறேன்," எனக் கூறி விடை பெற்றுக் கொண்டு கிளம்பினான்.
 
கொஞ்ச காலத்திற்குப் பின் சத தன்யன் சத்திராஜித்தைக் கொன்று சியமந்தக மணியை எடுத்துக் கொண்டு கிருதவர்மனுடன் ஓடி னான். கிருஷ்ணர் விடவில்லை. அவர்களைத் துரத்திப் பிடித்து அவர்களிடமிருந்து மணியைக் கைப்பற்றி னார். அது தந்தையின் நினைவாக சத்தியபாமாவிடம் இருக்கட்டும் என அவர் அதனை சத்தியபாமாவிடம் கொடுத்தார்.
கிருஷ்ணர் ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தியை விமரிசையாகக் கொண்டாடி வந்தார். சியமந்தகமணி இருந்த காரணத்தால் சத்தியபாமா வின் அந்தப்புரம் தங்கத்தால் நிரம்பி விட்டது. அதனால் பட்டாடைகளையும் வைரங்களையும் நவரத்தினங்களையும் ஆபரணங்களையும் அவள் வாங்கிக் குவித்துக் கொண்டாள். தன்னை மிஞ்சிய பணக்காரி யாருமே இல்லை என்ற எண்ணம் தலை தூக்கியது. கிருஷ்ணரும் தன்னைத் தவிர, மற்ற மனைவிகளிடம் பிரியமாக இருக்க மாட்டார் என்றே அவள் நினைத்தாள்.
 
கிருஷ்ணரின் மனைவி ஜாம்பவதி நன்கு வீணை வாசிப்பவள். ஒரு நாள் நாரதர் ஆகாய வழியாக தன் வீணையை மீட்டி இசைத்துக் கொண்டு சென்றபோது திடீரென ஓர் அசரீரி வாக்கு "நாரதா! வீணை இசைப்பதில் நீ உனக்கு நிகர் யாருமே இல்லை என எண்ணி உன் வாசிப்பில் நீயே மகிழ்ந்து கொள்கிறாயே!" என்றது.
 
நாரதரும் "ஓ! நான் யாரிடம் கற் றுக் கொள்ள வேண்டுமாம்?" என நினைக்கையில் அவர் முன் விநாயகர் தோன்றி "ஜாம்பவதி வீணை வாசிப் பதில் நல்ல தேர்ச்சி பெற்றவள் என்பது தெரியுமா?" என்று கேட்டார். உடனே நாரதர் கிருஷ்ணரை அணுகி ஜாம்பவதியிடம் வீணை வாசிப்பில் பயிற்சி பெற அனுமதி பெற்றுக் கொண்டார்.
 
ஒருமுறை கிருஷ்ணர் ருக்மிணி யின் அந்தப்புரத்தில் இருக்கும்போது நாரதர் தேவலோகத்திலிருந்து பாரி ஜாத மலரைக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்தார். கிருஷ்ணரும் அதை ருக்மிணியிடம் கொடுத்தார். அந்த சங்கதி கேட்டு சத்தியபாமா மனம் புழுங்கினாள்.
 
கிருஷ்ணர் சத்தியபாமாவிற்கு இந்திரலோகத்திலிருந்து பாரிஜாத மரத்தையே வரவழைத்து கொடுத்து அதனை அவளது பூங்காவில் நடவும் நட்டார். சத்தியபாமா அப்போது முதல் கிருஷ்ணரைத் தன் பிடிப் பிலிருந்து நழுவிவிடாமல் இருக்கப் பார்த்துக் கொண்டாள். ஒருமுறை சத்தியபாமா புண் ணியக விரதம் மேற்கொண்டபோது நாரதர் வந்து கிருஷ்ணரை அவளிட மிருந்து தானமாகப் பெற்றுவிட்டார்.
சத்தியபாமா கிருஷ்ணரை விடுவிக்க அவரது எடைக்குத் தங்கம் கொடுப்பதாக நாரதரிடம் கூறவே அவரும் அதற்குச் சம்மதித்தார். தராசு கொண்டு வரப்பட்டது. ஒரு தட்டில் கிருஷ்ணர் உட்கார வைக்கப்பட்டார். மற்ற தட்டில் சத்தியபாமா தன்னிடமுள்ள தங்கத்தை எல்லாம் கொண்டு வந்து வைத்தாள். அது தாழவில்லை. வைரங்கள், நகைகள் என்றெல்லாம் வைத்தும் தட்டு கீழே வரவில்லை.
 
சத்தியபாமாவின் கர்வம் அடங்கியது. அவள் கிருஷ்ணரை விடுவிப்பதற்காக அப்போது ருக்மிணியின் உதவியை நாடினாள். ருக்மிணியும் அவளிடம் "அட பைத்தியமே! கிருஷ்ணரை பணத்தால் வாங்க முடியுமா? பக்தியால்தான் பெற முடி யும். இதோ பார். பக்தியுடன் ஒரு துளசி இலையை சமர்ப்பிக்கிறேன்," எனக் கூறி ஒரு துளசியை எடுத்துக் கிருஷ்ணரை வணங்கி தியானித்தவாறே தராசுத் தட்டில் வைத்தாள். மறுநிமிடம் கிருஷ்ணர் அமர்ந்திருந்த தட்டு உயர, ருக்மிணி துளசி இலையை வைத்த தட்டு பாரத்தால் கீழே இறங்கித் தாழ்ந்தது.
 
நாரதர் அப்போது "இந்தத் துளசி இலை தான் கிருஷ்ணருக்குச் சமம். எனக்கு இதுதான் வேண்டும்," எனக் கூறி அதனை எடுத்துக் கொண்டு கிருஷ்ணரை ருக்மிணி சத்தியபாமாவிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார். இந்த மாதிரி கிருஷ்ணரை எடை போட்டதில் சத்தியபாமாவின் அகக்கண்கள் திறந்து கொண்டன.
பணத்தின் மீதிருந்த ஆசை ஒழிந்தது. 
 
அவள் கிருஷ்ணரைப் பக்தி சிரத்தையுடன் வழிபட்டு வரலானாள். சியமந்தகமணியால் கிடைத்த தங்கத்தை கிருஷ்ணர் கூறியபடி தான தர்ம காரியங்களில் சத்தியபாமா செலவிட்டாள். தந்தையின் நினைவில் அவள் பல இடங்களில் தீர்த்த யாத்திரை செய்வோர் தங்கிச் செல்ல சத்திரங்களைக் கட்டினாள். அவர்கள் சாப்பிட அங்கு ஏற்பாடும் செய்தாள். அவை சத்திராஜித்தன் நினைவில் கட்டப்பட்டதாலேயே ‘சத்திரம்' என்ற பெயரும் பெற்றன. கொஞ்ச நாட்களுக்குப் பின் பலராமரும் கிருஷ்ணரும் தம் தங்கையான சுபத் திராவை அர்ஜுனனுக்குக் கல்யாணம் செய்து வைத்தார்கள். அப்போது சத்தியபாமா சியமந்தக மணியை சுபத்திராவுக்கு சீதனமாகக்கொடுத்தாள். இப்படியாக சியமந்தகமணி பாண்டவர்களிடம் போய்ச் சேர்ந்தது.
 
சியமந்தக மணியால் கிடைத்த தங்கத்தை தருமர் தம் ராஜசூய யாகத்தில் தானம் செய்யப் பயன்படுத்திக் கொண்டார். பின்பு அவர் துரியோ தனனுடன் சதுரங்கம் ஆடி அதில் தமது உடமைகளோடு துரௌபதியையும் பந்தயம் வைத்துத் தோற்றார்.
 
பாண்டவர்களின் புரோகிதரான தௌமியர் அவர்களிடம் "உங்களுக்கு இந்த சியமந்தகமணியால் தான் இவ்வளவு கெடுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. அதனால் இதனைத் தூர எறிந்து விடுங்கள்," என்று யோசனை கூறினார்.
 
அர்ஜுனனும் சியமந்தக மணியை எடுத்து தரை மீது ஓங்கி அடித்தான். அந்த மணி பூமியைத் துளைத்துக் கொண்டு உள்ளே போய் மறைந்தது. பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்றதால் துரியோதனன் விதித்த நிபந்தனைகளின்படி வனவாசத்தை மேற்கொண்டு காட்டில் வசிக்கலானார்கள்.
 
அப்போது நாரதர் தருமரிடம் வந்து அவர் மீண்டும் இழந்த நாட்டைப் பெற விநாயகரைப் பூசித்து கணேச விரதத்தை மேற்கொள்ளுமாறு சொன்னார். அவரும் அவ்வாறே செய்து அஞ்ஞாத வாசகாலத்தைக் கழிப்பதாகக் கூறினார்.
 

0 comments:

Post a Comment

Flag Counter