விநாயகர் - 13

 
கிருஷ்ணர் கூறியது கேட்டு மிருதங்ககேசரி, "அப்படி எல்லாம் சொல்லித்தப்ப முடியாது. உன் குழலோசை உயர்ந்ததா அல்லது என் மிருதங்க வாசிப்பு சிறந்ததா என்று பார்த்துவிட வேண்டும்," என்றான்.
 
கிருஷ்ணரும் தன் குழலை இசைப்பதற்காக எடுத்தார். கேசரியும் மிருதங்கத்தைச் சுருதி கூட்டினான். கிருஷ்ணர் யமுனாகல்யாணி ராகத்தை ஆலாபனம் செய்து கீர்த்தனம் வாசிக்கலானார். கேசரி அதற்கு ஏற்ப மிருதங்கம் வாசிக்க முடியாமல் திணறலானான். அது மட்டுமல்ல, குழலின் இனிமையை ரசித்தவாறே மெய்மறந்த அவன் மிருதங்கம் தட்டுவதைக் கூட நிறுத்திவிட்டான். பின்னர் அந்த உருவை கேசரி விட்டு விநாயகராகி நாட்டியம் புரியலா னான். அப்படி ஆடி ஆடிக் களைத்தும் போய்விட்டான். அப்போது திடீரென்று கிருஷ்ணர் குழல் ஊதுவதை நிறுத்திவிட்டார். நாட்டியம் ஆடிய விநாயகரோ சட்டென நிற்க முடியாமல் தட்டுத் தடுமாறினார்.
 
அப்போது கிருஷ்ணர் சட்டென விநாயகரைப் பிடித்து நிறுத்தி "விநாயகா! நீ கீழே விழுந்து விட்டால் உன் தாயார் இனிமேல் குழலோசையை நீ கேட்கக் கூடாது எனத் தடை செய்துவிடுவாள். அதனால் தான் உன்னைப் பிடித்து நிறுத்தினேன்," என்றார். விநாயகரும், "கிருஷ்ணா! உன் குழலோசையைக் கேட்டு ரசிக்க வேண்டும் என்று தான் கேசரி உருவில் வந்தேன்," என்றார்.
கிருஷ்ணரும் "விநாயகா! உன் மிரு தங்க சத்தத்தில் உன் வாகனமாகிய மூஞ்சூறு துள்ளிக் குதித்து விழுந்து விட்டதே. பாவம்!" எனக் கூறி கீழே கிடந்த மூஞ்சூறைத் தடவிக் கொடுத்தார்.
 
விநாயகரும் "கிருஷ்ணா! கம்சனுக்கு முடிவுகாலம் நேருங்கிவிட் டது. தனுர்யாகம் செய்து உன்னை அழைத்துவர அக்ரூரரை அனுப்புவான். நீ போய் அவனைக் கொன்று நன்மை புரி," என்றார். கிருஷ்ணரும் "எல்லாம் உன் தயவால் நல்ல விதமாகவே முடியும்," எனக் கூறிக் கைகூப்பி நின்றார்.
 
விநாயகரோ, "நீ விஷ்ணுவின் அவதாரம். என் தயவு என்ன! எல்லாம் உன் லீலைகளே. அர்க்கை கூட கூனி வடிவில் உன்னை எதிர்நோக்கி இருக்கிறாள். அவளுக்குக் கருணை காட்டு" எனக் கூறித் தன் வாகனத்தின் மீது ஏறி அமர்ந்து ஆகாயத்தில் கிளம்பி மறைந்து போனார்.
 
அக்ரூரர் கிருஷ்ணரையும் பல ராமனையும் தேரில் அமர்த்தி மதுராபுரிக்கு அழைத்துச் சென்றார். எட்டு கோணல்கள் கொண்ட உட லோடு அர்க்கை கூனியாக வந்து கிருஷ்ணரை வணங்கி அவருக்குச் சந்தனம் பூசி விழுந்து வணங்கினாள். கிருஷ்ணர் அவளைத் தம் இரு கைகளாலும் தூக்கவே அவள் அழகிய அப்சரப் பெண்ணாக மாறி தேவலோகம் போய்ச் சேர்ந்தாள்.
 
கம்சன் கிருஷ்ணரைக் கொல்லப் பலவிதத்திலும் முயன்றான். ஆனால் கிருஷ்ணர் அவற்றை எல்லாம் முறியடித்து அவனையே சிம்மாசனத்தின் மீதிருந்து இழுத்துக் கீழே தள்ளினார். கம்சனும் விழுந்து இறந்தான்.
 
கிருஷ்ணர் தேவகியையும் வசு தேவரையும் சிறையிலிருந்து விடுவித்தார். உக்கிரசேனனையும் விடு தலை செய்து சிம்மாசனத்தில் அமர்த்தினார். இதன் பிறகு ஆட்சி நன்கு நடந்தது.
 
கிருஷ்ணரும் பலராமரும் வளர்ந்து பெரியவர்கள் ஆனார்கள். பல ராட்சஸர்களையும் கொடியவர் களையும் கிருஷ்ணர் ஒழித்தார். கடலின் நடுவே துவாரகாபுரியை அமைத்து கிருஷ்ணர் தன் தமையன் பலராமனை யாதவர்களின் தலை வனாக்கி ஆட்சி புரிந்து வந்தார்.
ருக்மிணியை கிருஷ்ணர் கவர்ந்து வந்து மணம் புரிந்து கொண்டார். சகல ஐஸ்வரியங்களை அடைந்தும் கிருஷ்ணர் எப்போதும் போல மாடு களை மேய்த்து கோபாலகிருஷ்ண னாக துவாரகையிலேயே இருந்து வந்தார்.
 
துவாரகைக்குச் சமீபத்தில் சத்திராஜித் என்பவன் தன் நாட்டை ஆண்டு வந்தான். அவனுக்குத் தான் சூரிய வம்சத்தில் பிறந்தவன் என்ற கர்வம் ஓங்கி இருந்தது. அவன் சூரியனைக் குறித்து தவம் செய்து அவரிடமிருந்து சியமந்தகமணி என்ற விலைமதிப்பற்ற வைரத்தைப் பெற்றான். அந்த மணியிலிருந்து வெளி வரும் கிரணங்கள் தங்கக் கட்டிகளாகி சத்திராஜித்தைப் பெரும் பணக் காரனாக ஆக்கிவிட்டது.
 
சத்திராஜித் பல பிரமுகர்களை அழைத்துத் தன் சியமந்தகமணி யைக் காட்டிப் பெருமைப்பட்டுக் கொண்டு வந்தான். கிருஷ்ணரையும் அவன் அழைத்தான். ஆனால் கிருஷ்ணர் செல்லவில்லை. தனக்கு ஓய்வு கிடைக்கும்போது வருவதாக அவர் சத்திராஜித்திற்குத் தகவல் சொல்லி அனுப்பினார்.
 
தன்னைக் கிருஷ்ணர் மதிக்க வில்லை என்று சத்திராஜித் கோபம் கொண்டான். அவரைத் தன் எதிரியாகக் கருதினான். அதனால் கிருஷ்ணருக்கு அவன் சிறப்பு மரியாதைகள் எதையும் செய்யாது இருந்தான். சத்திராஜித்திற்கு சத்தியபாமா என்ற அழகான மகள் இருந்தாள். இதனால் சத்திராஜித்தின் பெயர் மேலும் பிரபலமாகியது. பல மன்னர்கள் சத்தியபாமாவை மணக்கப் போட்டி போடலாயினர். அவர்களில் ஜராசந்தனும் ஒருவன்.
 
சத்தியபாமாவிற்கு விநாயகரின் மீது அளவு கடந்த பக்தி. அவள் ஒவ்வொரு ஆண்டிலும் விநாயக சதுர்த்தியின்போதும் சிறந்த முறையில் பூஜித்து ஸ்ரீ கிருஷ்ணரே தனக்குக் கணவராகக் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்தித்து வந்தாள்.
 
சத்திராஜித் தன் மகளின் விருப்பத்தை அறிந்து கொண்டும் ஒன்றும் தெரியாதவன் போல இருந்தான். ஒருநாள் வழக்கம்போல சத்தியபாமா விநாயகரிடம் வேண்டிக் கொண்டிருக்கும்போது அவன் வந்து "இந்த விநாயகரால் என்ன செய்ய முடியும்? நம் வம்சதேவனாகிய சூரிய பகவானை வழிபடு," என்றான்.
அதற்கு சத்தியபாமா "இல்லை, இல்லை. நம் விருப்பங்களை எல் லாம் நிறைவேற்றி வைப்பவர் விநா யகர்தாம். என் விருப்பம் நிறைவேற அவர் அருள் புரிவார். நான் விரும் புகிறபடி கிருஷ்ணரையே என் கணவராகச் செய்வார்," என்றாள். சத்திராஜித்தோ கோபத்தால் முகம் சிவக்க பதில் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து சென்றான்.
 
இந்த சம்பவம் நிகழ்ந்த மறுநாளே கிருஷ்ணர் சத்திராஜித்தைக் காணவந்தார். சத்திராஜித்தும் தன் வீடு தேடி வந்த கிருஷ்ணரைத் தன் தர் பாரில் காண ஏற்பாடு செய்து அங்கு சென்றான். அப்போது கிருஷ்ணர் திடீரென்று அங்கிருந்து மாயமாகி மறைந்துவிட்டார்.
 
சத்திராஜித் கோபத்தோடு தன் சியமந்தகமணியை இறுகப் பற்றிக் கொண்டு பல்லைக் கடித்தவாறே நின்றான். அப்போது சத்தியபாமா தன் தந்தையிடம் "அப்பா! ஏன் இப்படித் திகைத்து நிற்கிறீர்கள்? கிருஷ்ணர் உங்களிடம் என்னைத் தனக்குத் திருமணம் செய்து கொடுக்குமாறு வேண்டினாரா?" என்று கேட்டாள். சத்திரஜித்தோ "அவன் உன்னை விரும்பவில்லை. என் சிய மந்தகமணியைத் தான் விரும்பு கிறான், தெரியுமா?" என்றான்.
 
அப்போது சத்தியபாமா, "உங்களுக்கு என்னைவிட அந்த சிய மந்தகமணிதான் உயர்ந்ததாகப் படு கிறதா?" எனக் கூறியவாறே அங்கிருந்து செல்லலானாள். அப்போது சத்திராஜித் "இல்லையம்மா. அந்தக் கிருஷ்ணனின் பேராசை எவ்வளவு என்பதைத் தான் சுட்டிக் காட்டி னேன்," என்றான்.
 
அதற்கு சத்தியபாமா "அவர் ஒன்றும் இதுபோன்ற மணி தன்னிடமே தான் இருக்க வேண்டும் என்று நினைத்து பத்திரப்படுத்தி வைக்க வில்லையே. அவர் இந்த மணியை விரும்பி இருந்தால் நீங்கள் பெரிய மனிதத் தன்மையோடு அவருக்கே கொடுத்திருக்கலாமே!" என்றாள். சத்திராஜித்தோ "இந்த சியமந்தக மணியைக் கொடுப்பதா? ஊஹும். ஒருக்காலும் முடியாது. இதை யாரும் என்னிடமிருந்து பெறவும் முடியாது. எடுத்துச் செல்லவும் விடமாட் டேன்," என்றான். சில நாட்களுக்குப் பின் விநாயக சதுர்த்தி வந்தது.
மேகம் சூழ்ந்து இருள் கவ்வியது. கிருஷ்ணர் அப் போது பாலைக் கறந்து பார்க்க அவருக்கு அதில் நாலாம் பிறை தென்பட்டது. அப்போது அவர் "அடாடா! நாலாம் பிறையைப் பார்த்தால் நாய்படும் பாடு பட வேண்டும் என்பார்களே!" என எண்ணி பூஜை அறைக்குப் போய் விநாயகர் முன் நின்று "விநாயகா! உன் பரிபூரண அருள் எனக்கு வேண்டும்," என வேண்டினார்.
 
அப்போது விநாயகர் "கிருஷ்ணா! நீ நாலாம் பிறையை நேரடியாக வேண்டுமென்றே பார்க்கவில் லையே. அதன் பிரதி பிம்பத்தையே பார்த்தாய். எல்லாம் நல்லபடியா கவே முடியும்," என்று கூறினார். அதுகேட்டு கிருஷ்ணர் "எல்லாம் உன் தயை தான்," எனக் கூறி வணங்கினார்.
 
அதே சமயம் பூஜை அறைக்குள் வந்த ருக்மிணி கிருஷ்ணர் விநாயகரின் முன் கைகூப்பி நிற்பது கண்டு ஆச்சரியப்பட்டு "இதென்ன நீங்கள் விநாயகர் முன் நின்று ஏதோ வேண்டிக் கொள்கிறீர்களே!" என்று கேட்டாள்.
 
கிருஷ்ணரும் "இன்று விநாயக சதுர்த்தி. என் தாயார் யசோதை ஒரு விநாயக சதுர்த்தியன்று கூறிய விஷயம் நினைவிற்கு வந்தது. அதனால் தான் இப்படிச் செய்தேன்," என்றார்.
 
ருக்மிணியும் "அப்படியா? உங் கள் தாயார் என்ன சொன்னார்கள்? நானும் கேட்டுப் பயன் அடை கிறேன்," என்றாள். "என் தாயார் என்னைப் போலப் பாலைக் கறந்தபோது அதில் விநாயக சதுர்த்தி நாளின் சந்திர பிம்பத்தைப் பார்த்தேன். அப்போது சதுர்த்தி சந்திரனைப் பார்த்ததால் பலவித வசவுகளுக்கு ஆளாக வேண்டி வருமே என்று கூறி அவள் வருத்தப்படலானாள்.
 
அப்போது நான் இனிமேல் விநாயக சதுர்த்தி யன்று சந்திரனைப் பார்க்கமாட்டேன் என்று கூறி அவளைத் தேற்றினேன்," என்றார்.
 
ருக்மிணியும் "ஓகோ! அப்படி யானால் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியவில்லையா? ஆனால் இப்போது சந்திரனை மேகம் சூழ்ந் திருக்கிறதே. எப்படிப் பார்க்க முடியும்?" என்றாள்.
 
கிருஷ்ணரும் "இது கிடக்கட்டும். நீ இங்கே வந்த காரணத்தைச் சொல்லவில்லையே. என்னிடம் என்ன சொல்ல வந்தாய்? அதை முதலில் சொல்!" என்று கேட்டார். ருக்மிணியும் "சத்திராஜித்திடம் இருந்த மணி நம் வீட்டிற்கு வந்து விட்டது," என்றாள்.
 
கிருஷ்ணரும் "சியமந்தகமணி இங்கே வந்துவிட்டதா? எப்படி வந்தது?" என்று கேட்டார் ஆச்சரியப்பட்டவாறே. ருக்மிணி சிரித்தவாறே "சியமந்தகமணி வரவில்லை. சத்திராஜித்திடமுள்ள மற்றொரு மணியான சத்தியபாமா என்ற மணி வந்திருக்கிறது. அவளும் நானும் வெகுநேரம் வரை பேசிக் கொண்டிருந்தோம். இப்போதுதான் கிளம்பிப் போனாள். அவளை வழி அனுப்பிவிட்டு நேராக இங்கே வந்திருக்கிறேன்," என்றாள்.
 
கிருஷ்ணனும் "ஓ! அப்படியா! இங்கு அவள் நம் விநாயகரைப் பார்க்கலாம் என்று வந்திருந்தாள் போலிருக்கிறது. விநாயகரைப் பார்த்தாளா?" என்று கேட்டார்.
 
ருக்மிணியும் "அவர் விநாயகரைப் பார்க்க வந்தாளா என்று எனக்குத் தெரியாது. அவள் கண்கள் சுழன்றதைப் பார்த்தால் உங்களைத் தான் தேடினாள் என்பது தெரிந்தது," என்றாள்.
 
கிருஷ்ணரும் "ஆ! எவ்வளவு கெட்டிக்காரி நீ! எப்படி எல்லாம் பேசுகிறாய்!" என்று சிரித்துக் கொண்டே அவளிடம் கூறினார்.                                        (தொடரும்)
 

0 comments:

Post a Comment