விநாயகர் - 12

 
அன்று சதுர்த்தி. இரவில் விநாயகர் வயிறு புடைக்க சாப்பிட்டுவிட்டு தொந்தியை அசைத்தவாறே தன் வாகனமாகிய மூஞ்சூறுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
 
ஆடி அசைந்து சென்று கொண்டிருந்த விநாயகர் சிறு கல் தடுக்கிப்பொத்தென விழுந்தார். அவருடைய தொந்தி வெடித்தது. அதிலிருந்து கொழுக்கட்டை, அப்பம் போன்றவை வெளியே சிதறின. அவரது வாகனமாக மூஞ்சூறு அவற்றைத் தின்னலாயிற்று.
 
வானில் சந்திரன் வேடிக்கையான இக்காட்சியை கண்டு பலமாகச் சிரித்தான். அப்போது தேவர்கள் ஓடி வந்து கிழிந்துபோன விநாயகரின் வயிற்றைத் தைத்தார்கள்.
 
தன் மகனைக் கண்டு சிரித்த சந் திரன் மீது பார்வதி தேவி கோபம் கொண்டு "விநாய சதுர்த்தியன்று சந்திரனைப் பார்ப்பவர்கள் வீண் அபவாதத்திற்கு ஆளாகட்டும்," எனச் சபித்தாள். அப்போது முதல் விநாயக சதுர்த்தியன்று சந்திரனைப் பார்க்கக் கூடாது என முதியவர்கள் மற்றவர் களிடம் சொல்லி வரலாயினர்.
 
துவாபர யுகத்தில் விஷ்ணு பகவான் தேவகிக்கும் வசுதேவருக்கும் கிருஷ்ணன் என்ற பெயரில் மகனாகப் பிறந்து கோகுலத்தில் யசோதையிடம் வளர்ந்து வந்தார்.
 
அந்த ஆண்டு விநாயக சதுர்த்தி யன்று மாலை வேளையில் யசோதை பால் கறந்து கொண்டிருக்க, கிருஷ் ணர் யசோதையின் முதுகைக் கட்டிக் கொண்டு பால் கிண்ணத்தில் பிரதி பலித்த நான்காம்பிறைச் சந்திரனைப் பார்த்து, "ஆகா! அம்புலிமாமா! பாலில் அம்புலி!" என்று உரக்கக் கூறிச் சிரித்தார்.
யசோதை சட்டென "ஐயோ! நீ இனி எப்படிப்பட்ட வீண் அபவாதங்களுக்கு ஆளாகப் போகிறாயோ?" என்று கவலைப்பட்டாள். கிருஷ்ணரோ "கவலைப்படாதே, அம்மா! நான் அவ்வப்போது வெண்ணெய், பால், தயிர் போன்றவற்றைத் திருடிச் சாப்பிடுகிறேன், அல்லவா? அதற்காக எல்லோரும் என்னைத் திருடன் என்று கூறி அபவாதம் சுமத்துவார்கள். அவ்வளவுதான்," என்றார்.
 
யசோதை, "அடேயப்பா! என்ன வாய் உனக்கு! எதைச் சொன்னாலும் ஏதோ ஒரு சமாதானம் சொல்லிவிடுகிறாய். உலகமே உன் வாய்க்குள் அடக்கம் போலிருக்கிறதே!" என்றாள். அதற்குக் கிருஷ்ணர் "இந்த உலகம் என்ன, அண்ட சராசரங்கள் எல்லாமே உள்ளன. இல்லாததும் பொல்லாததும் நல்லவர்களைப் பற்றிக் கூட சொல்வார்கள். அதைப்பொருட்படுத்த வேண்டாம்," என்றார்.
 
மறுநாள் யசோதை ஏதோ வேலையாக இருக்கும்போது பலராமன் ஓடிவந்து, "அம்மா! அம்மா!! கிருஷ்ணன் மண்ணைத் தின்கிறான். போய்ப் பார்!" என்றான் கோள் மூட்டியவாறே.
 
யசோதை சென்று பார்த்தபோது கிருஷ்ணரின் முன் மண் உருண்டைகள் இருந்தன. உடனே அவள், "ஏய் கிருஷ்ணா! மண்ணைத் தின்கிறாயா? எங்கே வாயைத் திறந்து காட்டு பார்க்கலாம்!" எனக் கூறி அவனை இலேசாகக் கிள்ளினாள்.
 
அவரோ, "அம்மா! நீ விநாயக சதுர்த்தியன்று விநாயகரைப் போல களிமண்ணால் உருவம் செய்து பூஜை செய்கிறாய். களிமண் பிள்ளையார் கடவுள் என்றால் நான் பிடித்த இந்த மண் உருண்டைகள் லட்டும் மோதகமும் தானே?" என்று கேட்டார்.
 
யசோதையும் "தப்பு! தப்பு!! கடவுளைக் களிமண் என்றெல்லாம் சொல்லக் கூடாது. அபசாரம்," என்றாள். கிருஷ்ணரோ "அம்மா! உருவத்தில் என்ன இருக்கிறது? கல்லாயிருந்தாலும் மண்ணாக இருந்தாலும் மனதில் நாம் எதைக்கடவுள் என நினைத்துப் பூசிக்கிறோமோ அது தான் கடவுள். அந்தரங்க சுத்தியுடன் அவரை நினைத்தால் போதும். அவர் தான் எந்தப்பொருளிலும் இருக்கிறாரே!" என்றார்.
யசோதையும் "அதெல்லாம் கிடக்கட்டும். முதலில் உன் வாயைத் திற! மண்ணா சாப்பிட்டாய்?" என்று கோபத்தோடு கேட்டாள். கிருஷ்ணரும் "சரி, நீயே பார்!" என்று கூறி வாயைத்திறந்து காட்டினார்.
 
யசோதை கிருஷ்ணரின் வாயில் எல்லா ஜீவராசிகளையும் எல்லா உலகங்களையும் கண்டு திகைத்துப் போனாள். அதில் தானும் கிருஷ்ணரும் கூட இருப்பது கண்டு ‘இதென்ன ஆச்சரியம்?' என்று திகைத்தாள். அதில் கிருஷ்ணர் தன் குழலை எடுத்து ஊத விநாயகரே அதற்கு ஏற்ப நடனம் புரிவதைக் கண்டு மயக்கமே போட்டு விழுந்துவிட்டாள்.
 
மீண்டும் அவள் மயக்கம் தெளிந்து எழுந்தபோது தன்னைச் சுற்றிலும் ஆயர்குலப்பெண்களும் முதியோர் களும் சூழ்ந்து இருக்கக் கண்டாள். அவர்கள் "இதென்ன அநியாயம்? உன் மகன் கிருஷ்ணன் எங்கள் வீடுகளில் புகுந்து வெண்ணெய், தயிரெல்லாம் எடுத்து தானும் உண்டு தன் சிநேகிதர்களுக்கும் குரங்குகளுக்கும் கொடுத்துவிட்டானே. நீ கண்டிக்கக்கூடாதா அவனை?" என்று சொல்லி அவர்களை அனுப்பினாள். கிருஷ்ணர் மெதுவாக வந்து "என்னம்மா விஷயம்? இவர்கள் எல்லாம் என்ன சொல்லிவிட்டுப் போகிறார்கள்?" என்று கேட்டார்.
 
யசோதையும் "உன் மீது ஒரே குற்றச்சாட்டுகள். நீ அவர்கள் வீட்டு வெண்ணெய், தயிர், பால் எல்லாம் திருடினாயாம். வீண் அபவாதத்திற்கு நீ ஆளாகிறாய், பார்!" என்றாள்.
 
கிருஷ்ணரும் "வீண் அபவாதம் இல்லையம்மா. அவர்கள் சொன்னது எல்லாம் உண்மையே," என்றார். அதுகேட்டு யசோதை கோபம் கொண்டு கிருஷ்ணரை ஓர் உரலில் கயிறால் கட்டிப் போட்டுவிட்டுப் போய்விட்டாள்.
 
கிருஷ்ணரோ தவழ்ந்தவாறே அந்த உரலை உருட்டி இழுத்துக் கொண்டே போனார். அந்த உரல் அடுத்த வீட்டு வாசலில் இருந்த இரு மரங்களுக்கு இடையே அகப்பட்டுக் கொண்டது. கிருஷ்ணர் பலமாக இழுக்கவே அந்த மரங்கள் ஒடிந்து விழுந்தன. அதிலிருந்து இரு கந்தர்வர்கள் வெளிவந்து கிருஷ்ணரை வணங்கித் தாம் சாபவிமோசனம் பெற்றதாகக் கூறி வணங்கி, பிறகு ஆகாயத்தில் சென்று மறைந்தார்கள்.
ஓராண்டு கழிந்தது. மீண்டும் விநாயக சதுர்த்தி வந்தது. யசோதை மோதகங்களையும் கொழுக்கட்டை களையும் அப்பங்களையும் வார்த்து எடுத்துத் தட்டுகளில் வைத்து பூஜை அறையில் விநாயகரின் விக்கிரகத்தின் முன் வைத்துவிட்டு அறைக்கதவை மூடிக்கொண்டு வேறு ஏதோ வேலையை கவனிக்கச் சென்றாள்.
 
கிருஷ்ணர் மெதுவாகப் போய் பூஜை அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றார். கதவை மூடிக் கொண்டு விநாயகரின் விக் கிரகத்தின் முன் உட்கார்ந்து அவர் தட்டில் இருந்தவற்றை ஒவ்வொன்றாக எடுத்து விநாயகரிடம் கொடுத்து "சாப்பிடுங்கள்" என்று அந்த விக்கிரகத்தின் தொந்தியைத் தடவிக் கொடுத்தார்.
 
விக்கிரகத்தின் விநாயகர் வெளி வந்து "கிருஷ்ணா! நான் கொடுப் பதையும் நீ சாப்பிட வேண்டும், தெரியுமா?" என்றார். கிருஷ்ணரும் தலையை ஆட்டவே, இருவருமாக அங்கிருந்த தட்டுகளில் இருந்தவற்றை எல்லாம் எடுத்துச் சாப்பிட்டு விட்டார்கள்.
 
இதற்குள் பூஜை அறைக்கு வந்த யசோதை ஜன்னல் வழியாக உள்ளே நடப்பதைப் பார்த்துத் திகைத்துப் போனாள். அவள் தான் காண்பது கனவோ எனச் சந்தேகப்பட்டு பூஜை அறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.
 
விநாயக விக்கிரகம் ஆடாமல் அசையாமல் இருந்தது. ஆனால் தட்டில் வைக்கப்பட்ட மோதகங்கள், கொழுக்கட்டைகள், அப்பங்கள் ஆகியவற்றைத்தான் காணவில்லை. கிருஷ்ணர் மட்டும் திருட்டு முழி முழித்துக் கொண்டிருந்தார். யசோதை கோபத்தோடு "என்ன இது? சுவாமிக்கு நைவேத்தியம் செய்ய வைத்திருந்ததை எல்லாம் எடுத்துச் சாப்பிட்டுவிட்டாயா?" என்று கூறி முதுகில் நான்கு அடிகளைக் கொடுத்து விரட்டினாள்.
 
கிருஷ்ணர் நேராகக் காளிந்தி மடுவிற்கு ஓடினார். கிருஷ்ணர் ஓடு வதைக் கண்ட கோகுலவாசிகள் எல்லோரும் அவர் பின்னாலேயே ஓடினார்கள். யசோதையும் அவர் களோடு சென்றாள். காளிந்தி மடுவில் தன் குடும்பத்தோடு இருந்த காளிந்தன் என்ற விஷப்பாம்பு கோகுலவாசிகளையே அதிர அடித்து வந்தான்.
யாருமே காளிந்தி மடுவின் பக்கம் போக மாட்டார்கள். கிருஷ்ணர் சட்டென அந்த மடுவில் குதிக்கவே காளிந்தன் கோபத்தோடு சீறி தன் ஐந்து தலைகளையும் படமாக எடுத்தான். கிருஷ்ணரோ அத்தலைகளின் மீது நின்று நடனம் ஆடி அவனது விஷத்தை எல்லாம் கக்க வைத்தார். காளிந்தனும் சாபம் நீங்கியவனாகத் தன் குடும்பத்தவரோடு பாதாள லோகத்திற்குப் போய் விட்டான். இவ்வாறாக கோகுலவாசிகளுக்கு காளிந்தனால் ஏற்பட்ட பயம் ஒழிந்தது.
 
யசோதை மடுவிலிருந்து வீடு திரும்பி வந்து பூஜை அறைக்குள் சென்றபோது தட்டுகளில் மோதகம், கொழுக்கட்டை, அப்பம் முதலியன நிறைய இருப்பது கண்டு திகைத்துப்போனாள். அவள் "அடடா! நான் வீணாகக் கிருஷ்ணனைக் கோபித்துக் கொண்டு கண்மூடித்தனமாக அடித்து விட்டேனே!" என மிகவும் மனம் வருந்தினாள்.
 
அப்போது கிருஷ்ணர் "அம்மா! பூஜையைச் செய்துமுடி. எனக்கு மோதகமும் கொழுக்கட்டையையும் பிரசாதமாகக் கொடு" என்றார். யசோதையும் அவ்வாறே செய்து கிருஷ்ணனுக்கும் கோகுலவாசிகளுக்கும் அந்தப் பிரசாதத்தைக் கொடுத்தாள்.
அது எல்லோருக்கும் அமிர்தம் போல இருந்தது. கிருஷ்ணர் வளர்ந்து பலசாலியாக விளங்கினார். கோவர்த்தன மலையையே தன் கை விரலால் தூக்கி கோகுலவாசிகளையும் ஆடு மாடு களையும் கடும் மழையிலிருந்து காப்பாற்றினார். இந்திரன் வேண்டு மென்றே பெய்வித்த மழை அது. ஆனால் அவன் எதுவும் செய்ய முடியாது போய் அவமானப்பட்டான். ஒருநாள் கிருஷ்ணர் ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு பெரியவர் ஒரு மத்தளத்தோடு அங்கு வந்தார்.
 
அவர் "கிருஷ்ணர் என்று ஒருவர் இருக்கிறாராமே! வெகுநன்றாகப் புல்லாங்குழல் வாசிப்பாராமே. அவர் குழல் ஊதி இசைக்க நான் கேட்க வேண்டும். அவரை எங்கே பார்க்கலாம்?" என்று கேட்டார்.
 
கிருஷ்ணரும் "நான்தான் அந்தக் கிருஷ்ணன். உங்களைப் பார்த்தால் ஒரு மிருதங்க வித்வான் போலத் தெரிகிறதே!" எனப் பணிவுடன் விசாரித் தார். வந்த பெரியவரும் "ஆமாம். என் ஊர் மதுரைக்கும் தெற்கே உள் ளது. இப்போது மதுராபுரியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறேன். அங்கு கம்சன் தனுர்யாகம் செய்கிறானாம். அங்கு என் மிருதங்க வாசிப்பைக் காட்டலாம் என எண்ணியே செல்கிறேன்," என்று கூறினார். அவருடைய உடலில் காது, கை, கழுத்து, இடுப்பு ஆகியவற்றில் ஒரே தங்க ஆபரணங்களாக இருந்தன. அவரது மிருதங்கத்திலும் கூட நவரத் தினங்கள் பதிக்கப்பட்டிருந்தன.
 
கிருஷ்ணர் அப்போது "ஐயா பெரியவரே! நான் ஏதோ மாடு மேய்க்கும்போது குழலை ஊதுவேன். முறையாக சங்கீதம் பயின்றவன் அல்ல. நீங்கள் எல்லாம் தாளம் தவறாமல் இசையை அனுபவிப் பவர்கள் என்பது பிரசித்தமாயிற்றே. நான் ஏதோ ஒரு ராகத்தை என் இஷ்டத்திற்குக் குழலில் இசைக்கிறேன். இந்த இசையையா நீங்கள் கேட்க வேண்டும் என்று ஆசைப்பட்டு என்னைத் தேடி இங்கு வந்திருக்கிறீர்கள்?" என்றார்.          
 

0 comments:

Post a Comment

Flag Counter