விநாயகர் - 11

ஒருமுறை லட்சுமிதேவி மான சரோவரில் நீராடிக் கொண்டிருக் கையில் பார்வதி விஷ்ணுவின் உரு வில் அவளை அணுகினாள். மிகமிக அழகாக விளங்கிய மகாவிஷ்ணு வைக் கண்ட லட்சுமிதேவியின் மனம் புல்லரித்தது.

 

மகாவிஷ்ணுவின் வேடத்தில் வந்த பார்வதியும் லட்சுமியின் அழகில் லயித்துப் போனாள். இருவரும் கனிவுடன் ஒருவரை மற்றவர் பார்த்துக் கொண்டு அளவளாவினர். அந்த இரு பார்வைகளின் சக்தி ஒன்று சேர்ந்து மானசரோவரில் ஒரு தங்கத் தாமரையைத் தோற்றுவித்தது. அந்த மலரில் அழகான பச்சிளம் குழந்தை ஒன்று இருந்தது. லட்சுமிதேவி ஆனந்த வெள்ளத் தில் மூழ்கி விஷ்ணுவைக் கட்டித் தழுவினாள்.

 

அப்போது விஷ்ணுவாக இருந்த பார்வதி கலகலவெனச் சிரித்து, "நான் உண்மையில் விஷ்ணு அல்ல பார்வதி. உன் கணவன் உரு வில் வந்தவள்," என்றாள். அப்போது விநாயகர் அவர்களின் முன் வந்து "உங்கள் இருவரின் அம் சங்கள் கொண்ட அக்குழந்தையின் பெயர் ஜெயஸ்ரீ என்று இருக்கட்டும். பார்வதியின் ஜெயத்தையும் லட்சுமி யின் செல்வத்தையும் இது குறிக்கும். இக்குழந்தையின் கணவனும் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்துள்ளவனே ஆவான்," எனக் கூறினார்.

 

பிறகு வாயு தேவனிடம அந்தத் தங்கத் தாமரையோடு அக்குழந்தையை காவிரி நதியில் விட்டு வருமாறு கூறினார்.
வாயுதேவனும் விநாயகரின் கட்டளைப்படி அக் குழந்தையைத் தாமரை மலரோடு காவிரி நதியில் விட்டு விட்டார். தங்கத் தாமரை குழந்தையுடன் காவிரியில் மிதந்து சென்றது. காவிரி பாயும் பகுதியை ஆண்ட மன்னன் ஆற்றில் வந்த குழந்தையை எடுத்து தனக்கு கிடைத்த அரிய செல்வம் எனக் கருதி வளர்க்கலானான்.
அதற்கு அவன் என்ன பெயர் வைக்கலாம் என யோசித்தபோது அசரீர வாக்கு ஒன்று "இதற்கு ஜெயஸ்ரீ எனப் பெயரிடுங்கள்!" என்று கூறியது. ஜெயஸ்ரீயும் வளர்ந்து பெரியவளாகி மிக அழகுடன் விளங்கினாள். அவளுக்கு அரண்மனை வாழ்வைவிடக் காட்டில் போய் இயற்கை அன்னையின் மடியில் வாழவே விருப்பம் இருந்தது. அவள் வில்லையும் அம்பையும் எடுத்துக் கொண்டு அவ்வப்போது காட்டில் திரிந்து வரலானாள்.
ஹரிஹரனாகப் பிறந்த ஈசுவரன் கைலாயத்திற்குப் போய் விநாயகரோடும் குமரனோடும் கைலாசத்தில் சுகமாக இருக்கலானார். ஒருநாள் மானசரோவரில் அவர்கள் நீராடிக் கொண்டிருக்கையில் விநாயகர், "இந்த மானசரோவரில் தான் ஈசுவரருக்கு மனைவியாகப் போகும் ஜெயஸ்ரீ லட்சுமிதேவியின் சக்தியாலும் பார்வதிதேவியின் சக்தியாலும் பிறந்தாள்," என்றார்.
நீராடிக் கரையேறிய பின் விநாயகர் ஈசுவரரிடம், "சுவாமி! எங்களை விடப் பெரியவரான நீங்கள் இப்படி பிரம்மச்சாரியாக இருப்பது சரியா! விரைவிலேயே கல்யாணம் செய்து கொண்டுவிடுங்கள்!" என்றார்.
குமரனும் அதனை ஆமோதித்துக் கூறவே, ஈசுவரனும் தலை அசைத்து, "ஆகட்டும், அப்படியே செய்ய லாம்!" எனக் கூறித் தன் இருப்பிட மான கைலாசம் போய்ச் சேர்ந்தார்.
ஒருநாள் ஈசுவரர் ஒரு பெரிய புலி மீது அமர்ந்து காட்டில் திரிந்து கொண்டிருந்தார். அப்போது அம்பு கள் ‘விர் விர்'ரென்று வந்து அந்தப் புலியின் நாலா பக்கத்திலும் தரை மீது குத்தி புலியை நகரவிடாமல் சிறையில் அடைத்தது போல நிற்கச் செய்தன. ஈசுவரர் அம்புகள் வந்த திசையை அனல் கக்கும் கண்களோடு பார்த்தார். ஆனால் மறுநிமிடமே அந்தக் கோபம் மறைந்துவிட்டது.
ஏனெனில் அம்பும் கையுமாக அழகி ஜெயஸ்ரீ அவர் முன் நின்றாள். மன்மத பாணம் அவர் மனதைத் தாக்கியது. ஈசுவரர் சட்டென அங்கிருந்து மறைந்துவிட்டார். விநாயகர் அதற்கு முன்பாகவே ஜெயஸ்ரீயின் கனவில் தோன்றி ஈசுவரரைப் பற்றிக் கூறி இருந்தார். அவரைத் தேடி ஜெயஸ்ரீ காட்டில் அலைந்து வந்தபோது தான் இவ் வாறு நிகழ்ந்தது. நாரதர் ஜெயஸ்ரீயின் தந்தையைக் கண்டு அவளது சுயம் வரத்திற்கான ஏற்பாட்டை செய்யச் சொன்னார். மன்னனும் அவ்வாறே செய்தான்.
சுயம்வரத்திற்கு மன்னர்களும், தேவர்களும் வந்தார்கள். ஈசுவரரும், சாதாரண வேட வாலிபனாக கையில் வில்லும் அம்பும் கொண்டு ஒரு கருப்பு வேட்டை நாயைப் பிடித்துக் கொண்டு சுயம்வர மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். யாரும் அவரை மண்டபத்துள் உட்கார அனுமதிக்கவில்லை. அத னால் அவர் தலைவாசலில் நின்று உள்ளே இருப்பவர்களை எல்லாம் சிறையில் அடைத்தது போலச் செய்துவிட்டார். அவர் தம் நாயின் மீது உட்காரவே அது புலியாக மாறி பயங்கரமாக உறுமியது.
இதைக் கண்ட ஜெயஸ்ரீ வந்திருப் பது ஈசுவரரே எனத் தெரிந்து கொண்டாள். எனவே மாலையுடன் அவள் நேராக வாசலுக்குப் போய் அங்கிருந்த ஈசுவரரின் கழுத்தில் மாலையைப் போட்டு அவரைத் தன் கணவராகத் தேர்ந்து எடுத்தாள்.
தம்மை எல்லாம் விட்டு ஜெயஸ்ரீ ஒரு சாதாரண வேடனைத் தேர்ந்து எடுத்தாளே என வந்திருந்த மன் னர்களும் தேவர்களும் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் அந்த வேட வாலிபன் மீது பாய்ந்து தாக்க முயன் றார்கள். ஈசுவரர் தம் வில்லாலும் அம்புகளாலும் எல்லோரையும் எதிர்த்தார். தேவர்களும் மன்னர்களும் பிரயோகித்த அஸ்திரங்கள் எதுவும் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. அதுகண்டு யாவரும் "யார் அவர்?" எனத்திகைத்து நின்றனர்.
அப்போது ஈசுவரர் தன் சுய உருவை எடுத்துக் காட்சி அளிக்கவே, யாவரும் "ஹரஹர மகாதேவா!" என வணங்கிக் கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள். ஜெயஸ்ரீக்கும் ஈசுவரருக்கும் விமரிசையாக விவாகம்  நடைபெற்றது.
அவர் ஜெயஸ்ரீயுடன் தன் இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தார். திரேதாயுகத்தில் ஆர்யவர்த்தத்தில் கோசலன், கேகயன், வசுமித்திரன் என்ற மூன்று மன்னர்கள் இருந்தனர். மூவரும் ஆருயிர் நண்பர்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் மகள் ஒருத்தி இருந்தாள். கோசலை, கைகேயி, சுமித்திரை என்பது அவர் களது பெயர்களாகும். அவர்கள் மூவரும் தம் புதல்விகளை அயோத்தி மன்னனான தசரதனுக்கு மணமுடித்து வைப்பது எனத் தீர்மானித்து தசரத னின் அபிப்பிராயம் கேட்க, அவனும் அதற்கு இணங்கினான்.
மூன்று மன்னர்களும் ஜைமினி முனிவரை அழைத்து விவாக நாளைக் குறிக்கச் சொன்னார்கள். அவரும் முகூர்த்த நாளையும் வேளையையும் குறிப்பிட்டு "இப்பெண்களின் திரு மணம் விநாயகரின் முன் நடை பெறும். ஆனால் திருமணத்திற்கு முன் இப்பெண்களுக்கு ராட்சஸனால் ஆபத்து வரலாம். எனவே எச்சரிக்கையாக இருங்கள்!" எனக் கூறினார்.
மூன்று மன்னர்களும் தம் புதல்விகளை ஒரு பெரிய பெட்டியில் வைத்துப் பத்திரமாக ஓரிடத்தில் வைத்தார்கள். இந்த சமயம் நாரதர் இராவணனிடம் போய், "இராவணா! தசரத னின் திருமணம் நடக்கப் போகிறது. இந்த தசரதனுக்குப் பிறக்கப் போகும் ராமன் தான் உன்னைக் கொல்லப் போகிறான், தெரியுமா?" என்று கலகம் மூட்டினார்.
உடனே இராவணன் அந்த மூன்று அரசகுமாரிகளையும் கவர்ந்து வந்து விடும்படி மகோதரன் என்ற அரக்கனிடம் கூறி அனுப்பினான். மகோதரனும் அந்த அரசகுமாரிகள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அந்தப் பெரிய பெட்டியையே அவர்களோடு சேர்த்து விழுங்கினான். அவன் ஆகாய வழியாகக் கடலைக் கடந்து இலங்கைக்கும் செல்லலானான்.
அப்போது திடீரென அவனுக்கு வயிற்றைப் புரட்டியது. அவன் தான் விழுங்கிய பெட்டியை உடனே கக்கி விட்டான். அது கடலில் விழுந்து அலைகளால் அடித்து ஒரு கரை ஓரம் தள்ளப்பட்டது. அப்போது தசரதன் கடல் யாத்திரை மேற்கொண்டு கப் பலில் அவ்வழியே வந்து கொண்டிருந்தான். கரையோரமாக ஒரு பெட்டி இருப்பது கண்டு அவன் அதனைத் திறந்து பார்க்கவே, அதில் தான் மணக்க இருக்கும் மூன்று அரசகுமாரிகளும் இருப்பது கண்டு ஆச்சரியப்பட்டான்.
அந்த நாளும் வேளையும் தான் ஜைமினி முனிவர் அவர்களது திருமணம் நடக்கக் குறித்துக் கொடுத்தது. விநாயகர் அப்போது தசரதன் முன் தோன்றி அவனுக்கும் அந்த மூன்று அரசகுமாரிகளுக்கும் விவாகத்தை நடத்தி வைத்துவிட்டு மறைந்தார். தசரதன் தன் மூன்று மனைவிகளுடன் அயோத்திக்குத் திரும்பினான்.
வெகுகாலத்திற்குப் பின் தசரதனுக்கு ராமன், லட்சுமணன், பரதன், சத்துருக்கனன் என்ற நான்கு புதல்வர்கள் பிறந்து வளர்ந்து பெரியவர் களானார்கள். கைகேயியின் வரத்தால் இராமர், லட்சுமணனுடனும் தன் மனைவி சீதையுடனும் காட்டிற்குச் சென்றார். இராவணன் சீதையைக் கவர்ந்து இலங்கைக்கு எடுத்துச் சென்றான்.
இராமர், அனுமார், சுக்கிரீவன் ஆகியோரின் உதவியுடன் இலங்கைக்குப் போய் இராவணனைக் கொன்று சீதையை மீட்டு புஷ்பக விமானத்தில் ஏறி சமுத்திரக்கரை ஓரம் தங்கினார். அங்கு சிவபூஜை நடத்த எண்ணி அனுமாரிடம் ஒரு சிவலிங்கம் எடுத்து வருமாறு கூறினார். அனுமாரும் கைலாசத்திலிருந்து கொண்டு வரு வதாகக் கூறிப்போனார். அனுமார் கைலாயத்தில் பல லிங்கங்களைக் கண்டு அவற்றில் ஒன்றை எடுக்க முயன்றார்.
ஆனால் அவரால் அங்கிருந்த மிகச் சிறிய லிங்கத்தைக் கூடத் தூக்க முடியவில்லை. அவர் திகைத்து நின்று கொண்டு இருக்கையில் ஒரு சிறுவன் அவர் முன் வந்து "என்னய்யா, யார் நீ? அனுமானைப் போல குரங்கு சேஷ் டைகள் எல்லாம் செய்கிறாயே!" எனக் கேட்டான்.

அனுமாரும் சிரித்தவாறே "நீ யார் தம்பி? நான் அனுமான் தான். இங்கிருந்து ஒரு லிங்கத்தை எடுத்துப்போக வந்தேன்," என்றார். அச்சிறுவனும் "அனுமானா? பஞ்சமுக அனுமான் என்பார்களே! அது நீ தானா? எங்கே உன் மற்ற முகங்களையும் காட்டு! உனக்கு ஒரு லிங்கத்தைக் கொடுக்கிறேன். நான் இந்த லிங்கங்களுக்குக் காவல் இருப்பவன்," என்றான்.
அனுமாரும் கருடன், வராகம், சிங்கம், குதிரை ஆகிய தனது மற்ற முகங்களையும் காட்டினார். விநாயகரும் அனுமாருக்கு ஒரு லிங்கத்தை எடுத்துக் கொடுத்து அனுப்பினார். அனுமாரும் தன் சுயஉருவை அடைந்து லிங்கத்தை எடுத்துக் கொண்டு வேகவேகமாக இராமர் இருக்கும் இடத்திற்கு வந்தார். அப்போது இராமரும் சற்றுத் தாமத மாகிவிட்டதால் மணலால் லிங்கத்தை அமைத்துப் பூஜை செய்ய ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார். அதுகண்டு அனுமார் தன் வாலால் அந்த மணலால் ஆன லிங்கத்தைக் கலைக்க முயன்றார். ஆனால் அம்மணல் லிங்கம் கரையவில்லை.
அப்போது இராமர், "அனுமாரே! அறிவாளிகள் கூட சில சமயங்களில் மதி மயங்கிச் செயல்பட்டு விடுகிறார்கள். லிங்கம் மணலால் ஆனது என்றாலும் அதுவும் சிவபிரான் தானே. அதனை அழிக்க முடியுமா? நீர் கொண்டு வந்த லிங்கத்தையும் இங்கு வைத்து இரண்டையும் ஒன்றாக்கி பூஜை செய்யலாம்.
கவலைப்படாதீர்!" எனக் கூறி அனுமார் கொண்டு வந்த லிங்கத்தை வாங்கி மணல் லிங்கத்தோடு வைத்தார். இரண்டு லிங்கங்களும் ஒன்று சேர்ந்து ஒரே லிங்கமாகியது.யாவரும் அதனைப் பூஜித்தனர். பின்னர் இராமர் சீதையுடனும் மற்ற வர்களோடும் புஷ்பக விமானத்தில் அமர்ந்து அயோத்திக்குச் சென்றார்.

0 comments:

Post a Comment