உத்தரகாண்டம் - 5


 இராமர் சம்புகனைக் கொன்றுவிட்டு அயோத்திக்குத் திரும்பினார். வந்ததும் பரதனையும், இலட்சுமணனையும் வரவழைத்து அவர்களிடம் "தம்பிகளே, எல்லாப் பாவங்களையும் போக்கும் இராஜசூயமென்ற யாகத்தை நான் செய்ய எண்ணியுள்ளேன். உங்கள் அபிப்பிராயம் என்ன?" எனக்கேட்டார்.

அப்போது பரதன் "அண்ணா, உங்களது நீதிக்கும், நேர்மைக்கும் இணை ஏது? இந்த யாகத்தைச் செய்வதால் பல அரசர்கள் தாம் மடிய நேரிடும். சிலர் வீண் பிடிவாதத்தால் உங்களை எதிர்த்து தோற்று உயிரை இழப்பார்கள். எனவே, பல உயிர்களைப் போக்கும் இந்த யாகத்தைச் செய்ய வேண்டாம்" என்றான்.
அதைக் கேட்டு இராமர் மகிழ்ந்து போனார். அப்போது இலட்சுமணன் "அண்ணா, எல்லாப் பாவங்களையும் போக்கிக் கொள்ளச் செய்யப்படும் யாகம் அசுவமேதம். முன்பு இந்திரன்கூட தன் பாவங்களை போக்கிக் கொள்ள பிரகஸ்பதியின் உதவியால் அசுவமேத யாகம் செய்தான்" எனக் கூறி அது பற்றி சொல்லலானான்.


பிருத்திரன் என்றொரு அரக்கன் இருந்தான். அவன் மிகவும் நேர்மையாக நடப்பவன். சிறந்த அறிவாளி. மூன்று உலகங்களையும் சரி சமமாகக் கருதி நீதி வழுவாமல் ஆட்சி செய்தான். அவனது ஆட்சியில் பூமாதேவி எல்லாற்றையும் தாராளமாக வழங்கினாள்.


இப்படியெல்லாம் இருந்தும் அவனுக்குத் தவம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எனவே, நாட்டின் ஆட்சியைத் தன் மகனிடம் ஒப்படைத்து விட்டு காட்டிற்குப் போய் கடுந்தவம் புரியலானான்.


 
அத்தவத்தைக் கண்டு இந்திரன் பயந்து விட்டான். அவன் விஷ்ணுவிடம் போய் "பிருத்திரன் இப்போதே மூவுலகங்களையும் ஆண்டு வருகிறான். இப்போது கடுந்தவம் செய்து அதனை முடித்தும் விட்டால் அவனை யாராலும் வெல்ல முடியாது. எனவே, அவனை எப்படி ஒழிப்பது?" எனக் கேட்டான்.

அதுகேட்டு விஷ்ணு "பிருத்திரன் எனக்கு மிகவும் வேண்டியவன். நான் அவனைக் கொல்ல முடியாது. நீயோ தேவர்களின் பொருட்டு அவனது அழிவை விரும்புகிறாய் அது நியாயமாகவே தானிருக்கிறது. இதற்கு ஒரு வழி செய்கிறேன். எனது சக்தியை மூன்று பாகங்களாக்கி ஒரு பாகத்தை உன்னிலும் மற்றொரு பாகத்தை உன் வச்சிராயுதத்திலும் எஞ்சிய பாகத்தை பூமியிலும் இருக்கச் செய்கிறேன். அப்போது நீ பிருத்திரனை எளிதில் கொல்ல முடியும்" என்றார்.

இதைக் கேட்டு இந்திரன் மகிழ்ந்து போனான். அவன் தேவர்களுடன் பிருத்திரன் தவம் புரியும் காட்டை அடைந்தான். தவ வலிமையால் ஜோதி போல் விளங்கும் பிருத்திரனை அவர்கள் யாவரும் கண்டனர். இந்திரன் தன் வச்சிராயுதத்தைத் தன் இருகைகளாலும் பிடித்து உயரத் தூக்கி அதனை பிருத்திரனின் தலைமீது ஓங்கி அடித்தான்.

பிருத்திரனின் தலை துண்டிக்கப்பட்டது. ஆனால், இந்திரனை பிரம்மஹத்தி என்ற பாவம் சூழ்ந்து கொண்டது. இந்திரன் இதனால் மிகவும் வருத்தப்பட்டான். அப்போது தேவர்கள் விஷ்ணுவிடம் போய் "பிரபுவே, உங்கள் சக்தியால் இந்திரன் பிருத்திரனைக் கொன்றாலும் உண்மையில் நீங்கள்தாம் அவனைக் கொன்றீர்கள். ஆனால், பாவமோ இந்திரனைப் பற்றிக் கொண்டது. இதைப் போக்க ஒரு வழி கூறுங்கள்" என்றனர்.

விஷ்ணுவும் "அசுவமேதயாகம் செய்தால் அவனது பாவம் போய்விடும். எப்போதும் போல இந்திரன் விளங்குவான்" என்றார். இதைக்கேட்டு தேவர்கள் பிரகஸ்பதியையும் மற்ற மாபெரும் முனிவர்களையும் அழைத்துக் கொண்டு இந்திரன் இருக்குமிடத்திற்குச் சென்றனர். அங்கு  இந்திரனைக் கொண்டு அசுவமேதயாகம் செய்ய வைத்து அவனது பாவம் போகும்படிச் செய்தனர்.

இலட்சுமணன் இதைக் கூற இராமரும் முழுவதையும் கேட்டுவிட்டு, அவனிடம் அசுவமேதயாகத்தின் மேன்மையைப் பற்றிய கதை கூறலானார். முன்பு கர்தம பிரஜாபதியின் மகனான இலன் என்பவன் பாஹுலிக நாட்டை ஆண்டு வந்தான். அவன் பெயரைக் கேட்டாலே தேவர்களும், அரக்கர்களும், நாகர்களும், யட்சர்களும் மிகவும் மரியாதையுடன் நடந்து கொள்வார்கள்.

ஒருமுறை சித்திரை மாதத்தில் இலன் வேட்டையாடத் தன் ஆட்களோடு காட்டிற்குச் சென்றான். பல மிருகங்களைக் கொன்று குவித்த போதிலும் வேட்டையாடும் வேட்கை தணியவில்லை. எனவே, மிருகங்களை அடித்து வீழ்த்தியவாறே குமரக் கடவுளின் பிறப்பிடத்தை அடைத்தான். அங்கு பார்வதியும், பரமசிவனும் அவரது கணங்களும் இருந்தனர். அங்கு மரம், செடி, கொடிகள் மிருகங்கள் எல்லாமே பெண் தன்மை கொண்டவை. அப்பகுதியின் தனிச்சிறப்பும் அதுவே.

இலனும் அவனது ஆட்களும் அப்பகுதியில் அடி எடுத்து வைத்ததும் பெண்களாக மாறி விட்டனர். இது கண்டு இலன் பயந்து போய் பரமசிவனின் கால்களில் வீழ்ந்தான். அப்போது சிவன் "இந்தப் பெண்மையை போக்கிக் கொள்வதைத் தவிர வேறு எது வேண்டுமானாலும் கேள்" என்றார்.
இலன் சிவனிடம் எதுவும் கேளாமல் பார்வதியை வேண்டலானான். அப்போது பார்வதி தேவி "நீ ஒரு மாதம் ஆணாக இருந்தால், மறுமாதம் பெண்ணாக இருப்பாய். இப்படியே மாறி, மாறி இருந்து கொண்டே வா. பெண்ணாக இருந்தபோது, நடந்தது எல்லாம் நீ ஆணாக இருக்கும்போது உன் நினைவில் இருக்காது. அது போலவே ஆணாக நீ இருந்த போது, நடந்ததெல்லாம் பெண்ணாக மாறிய பின் உன் நினைவில் இராது" எனக் கூறினாள்.

இலன் அப்போது இலையம்மை ஆனான். அவனது ஆட்கள் கூட பெண்களாகி இருந்தனர். அவர்கள் யாவரும் அக்காட்டுப் பகுதியிலேயே அலைந்து திரியலாயினர். அக்காட்டுப் பகுதிக்கு அருகிலுள்ள மலையடிவாரத்தில் ஒரு குளம் இருந்தது. அங்கே புதன் ஒரு ஆசிரமத்தைக் கட்டிக் கொண்டு தவம் செய்து வந்தான்.  
இலையம்மையும் பெண்ணாக மாறிய மற்றவர்களும் அக்குளத்தில் குளித்து நீரைக் கலக்கலாயினர். சத்தம் கேட்டு வந்த  புதன் இலையம்மையைக் கண்டு அவள் மீது மோகம் கொண்டான். எனவே, அங்கிருந்த சில பெண்களை கூப்பிட்டு இலையம்மையைப் பற்றி விசாரித்தான்.
அவர்களும் "அவர் எம் தலைவி. அவருக்கு கணவன் இல்லை. எங்களை அழைத்துக் கொண்டு இந்தக் காடு எல்லாம் சுற்றி வருகிறார்" என்றனர். அப்போது "நீங்கள் இந்த ஆசிரமத்தில் உள்ள காய்கனிகளைப் புசித்து இங்குள்ள ஆடவர்களை மணந்து கொள்ளுங்கள்" என்று கூறி அனுப்பினார்.

அதன் பிறகு அவர் இலையம்மை இடம் "நான் சந்திரனின் மகன் புதன். நீ என்னோடு இதே ஆசிரமத்தில் இரு" என்றார். அவளும் அதற்குச் சம்மதித்தாள். இருவரும் மிகவும் சந்தோஷமாக இருக்கலாயினர்.

ஒரு மாதமாயிற்று. இலையம்மை இலனாக மாறி விட்டான். அவனுக்கு அதற்கு முன் நடந்ததெல்லாம் நினைவில் இல்லை. அப்போது புதன் குளக்கரையில் தவம் செய்து கொண்டு இருந்தார். அவரிடம் அவன் "ஐயா, நானும் என் ஆட்களும் வேட்டை ஆடிவாறே இங்கே வந்தோம். அவர்களைக் காணவில்லை. நீங்கள் யாரையாவது அங்கு பார்த்தீர்களா?" என்று கேட்டான். அதற்கு புதன் "உன் ஆட்கள் அழிந்து போயினர். நீ கவலைப்படாதே இங்கே என் ஆசிரமத்தில் சுகமாக இரு" என்றார். அது கேட்டு அவன் "ஐயா, என் ஆட்கள் அழிந்து போனபின் நான் நாட்டை ஆள விரும்பவில்ல. என் மகனுக்கே பட்டம் கட்டிவிட்டு இங்கே திரும்பி வந்து விடுகிறேன்" என்றான்.
அதற்கு புதன் "மன்னா, நீ இங்கே ஒரு வருடக்காலம் இரு உனக்கு நன்மையே ஏற்படும்" என்றார். இலனும் அதற்கு சம்மதித்தான். ஒரு மாதகாலம் பெண்ணாகி புதனோடு வாழ்ந்து விட்டு மறுமாதம் ஆணாகி இலன் முன் மாதம் நடந்ததையெல்லாம் மறந்து விடுவான். இப்படியாக ஒரு வருடகாலம் கழிந்தது.

இலன் இலையம்மையாக இருக்கையில் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தான். அப்போது புதன் சியவனர், பிரமோதர், துர்வாசர், சம்வர்த்தனர் போன்ற முனிவர்களை அழைத்து அவர்களிடம் இலனின் கதையைக் கூறினார். இதேசமயம் இலனின் தந்தையும் வேறு சிலரும் அங்கு வந்தனர்.

யார், யாரோ என்னென்னவோ சொன்னார்கள். ஆனால், கர்தமன் தன் மகனின் சாப விமோசத்திற்கு அசுவமேதயாகம் செய்வதே சரியெனக் கூறினான். அதன்படி யாவரும் அசுவமேதயாகம் செய்தனர். இலனுக்கு மாறி, மாறி கிடைத்து வந்த பெண்மை போயிற்று. யாகம் முடிவுற்ற போது பரமசிவனே வந்து இலன் எப்போதும் உள்ளது போல இருக்க அருள் புரிந்து விட்டுப் போனார்.

இலன் பாஹுலிக நாட்டிற்குச் செல்லாது மத்திய தேசத்திற்குப் போய் அதனை ஆண்டு வரலானான். அவனது மகன் சசிபிந்தன் பாஹுலிக நாட்டை ஆண்டு வந்தான். இலனுக்கும், புதனுக்கும் பிறந்தவன் புரூருவன். இலவனுக்குப் பிறகு மத்திய தேசத்தை அவன் ஆண்டு வரலானான். இராமர் இதனைக் கூறிவிட்டு அசுவமேத யாகத்திற்கு ஏற்பாடு செய்யக் கூறினார்.

நைமிச வனத்தில் கோமதி நதிக்கரையில் பெரிய யாகசாலை அமைக்கப்பட்டது. நவதானியங்கள் குவியலாயின. தங்கம் பல இடங்களிலிருந்து வந்து சேரலாயிற்று. உணவு தயாரிக்கப் பலர் வந்தனர். மக்களைக் களிப்பிக்க இசைக் கலைஞர்களும் வந்து சேர்ந்தனர்.
இராமர் தன் தாய்மார்களுடன் யாகசாலையை அடைந்தார். சீதைக்கு பதிலாக பொன்னால் செய்யப்பட்ட சீதையின் உருவம் இராமரருகே வைக்கப்பட்டது. யாகத்திற்கு வந்தவர்களுக்கெல்லாம் எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. இராமர் ஒரு கருப்புக் குதிரையை நாடெங்கும் சுற்றிவர அனுப்பி அதன் பின்னால் இலட்சுமணனை அனுப்பி வைத்தார். வந்த அரசர்களையெல்லாம் பரதனும், சத்துருக்கனனும் நன்கு கவனித்து உபசரித்தனர். அவர்களும் இராமர் முன் பல பொருள்களைக் காணிக்கையாகச் சமர்ப்பித்தனர். ரிஷிகளை விபீஷணும், அந்தணர்களை சுக்கிரீவனும் கவனித்துக் கொண்டனர்.

யாகம் நன்றாக நடக்கலாயிற்று. யாருக்கும் எவ்விதக் குறையும் இருக்கவில்லை. அந்தமாதிரி யாகம் இந்திரன்கூட செய்ததில்லையென எல்லோரும் ஒன்று போலக் கூறினர். இப்படியாக ஒரு குறையுமின்றி அந்த யாகம் ஒரு வருடகாலம் நடந்தது. 

 

0 comments:

Post a Comment