உத்தரகாண்டம் - 4

மறுநாள் பொழுது விடிந்ததும் லவணன் தன் உணவிற்காக மதுபுரத்திற்கும் அப்பால் சென்றான். அப்போது சத்துருக்கனன் யமுனை நதியைக் கடந்து மதுபுரத்தலை வாயிலை அடைந்தான்.

உச்சிவேளைக்கு லவணன் தான் வேட்டையாடிய மிருகங்களோடு மதுபுரத்திற்குத் திரும்பி வந்தான். அங்கு தலைவாசலில் சத்துருக்கனன் இருப்பதைக் கண்டு "அடே மானிடனே. எனக்கு இரையாகவா இங்கே வந்தாய்?" என்றான்.

அது கேட்டு சத்துருக்கனன் "அடே, உன்னோடு போர் புரிந்து உன்னைக் கொல்லவே நான் வந்திருக்கிறேன். நான் இராமனின் தம்பி சத்துருக்கனன்" என்றான். அதைக் கேட்டு லவணன் பலமாகச் சிரித்து "அப்படியா? சரி. உன்னைக் கொன்று விடுகிறேன். இதோ போய் என் ஆயுதங்களை எடுத்து வருகிறேன்" எனக் கிளம்ப முயன்றான்.


அப்போது சத்துருக்கனன் "என் கையில் அகப்பட்ட உன்னை நான் எங்கும் போக விடமாட்டேன். இப்படியே சண்டையிடு" என்றான். அரக்கனும், ஆத்திரத்தோடு மரங்களைப் பிடுங்கி சத்துருக்கனனை அடிக்கலானான். அதனையெல்லாம் சமாளித்த போதிலும் ஒரு அடியால் சத்துருக்கனன் சற்று நினைவிழந்து விழுந்தான். சத்துருக்கனன் இறந்து விட்டானென லவணன் எண்ணி சந்தோஷப்பட்டான். 
 
இதனால் தன் சக்தி வாய்ந்த சூலத்தை எடுத்து வர எண்ணவே இல்லை. அவன்தான் வேட்டையாடிய மிருகங்களோடு கிளம்பலானான். அப்போது சத்துருக்கனன் மூர்ச்சை தெளிந்து எழுந்து வாசலில் நின்று வழிமறித்தான். பின்னர், இராமர் தனக்குக் கொடுத்த பாணத்தை அந்த அரக்கன்மீது விடவே அது நெருப்பைக் கக்கிக்கொண்டு லவணனின் மார்பைத் துளைத்தது. அவனிடமிருந்து திரிசூலம் பரமசிவனிடம் போய்ச் சேர்ந்து விட்டது.


அதன்பிறகு, சத்துருக்கனன் தன் சேனையை வரவழைத்து மதுபுரத்தை ஆக்கிரமித்துக்கொண்டு அதன் அரசனானான். பனிரெண்டு வருடங்கள் கழிந்தன. அப்போது அவனுக்கு இராமரைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. எனவே, ஒரு சிறிய சேனையோடு கிளம்பி அயோத்திக்குச் செல்லும் வழியில் வால்மீகி ஆசிரமத்தை வந்தடைந்தான்.
வால்மீகி அவனையும் அவனது படையினரையும் தக்கபடி உபசரித்து உணவளித்தார். சாப்பிட்ட பிறகு வால்மீகி முனிவர் இயற்றி இராம கதையை இசையோடு பாடக்கேட்டு அவர்கள் யாவரும் இன்புற்றனர். மறுநாள் சத்துருக்கனன் வால்மீகி முனிவரிடம் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பி அயோத்தியை அடைந்தான்.

அவன் இராமரைக் கண்டு "அண்ணா, உங்களை இந்தப் பனிரெண்டு ஆண்டுகளாக விட்டுப்பிரிந்திருந்ததால் மிகவும் ஏக்கம் ஏற்பட்டு விட்டது. எனவே, தங்களை காணவே வந்தேன்" என்றான். அப்போது இராமர் "அரசன் நாட்டை ஆள்வதில்தானே கவனம் செலுத்த வேண்டும். எனவே, நீ உன் நாட்டை ஆள முழுகவனமும் செலுத்தினாய்" எனக் கூறினார்.
பின்னர், சத்துருக்கனன் இராமரது உபதேசப்படி தன் நாட்டிற்குக் கிளம்பவே பரதனும், இலட்சுமணனும் அவனை வழியனுப்பிவிட்டு வந்தனர்.

சில நாட்களுக்குப் பிறகு ஒரு கிராமத்திலிருந்து ஒரு அந்தணன் தன் இறந்துபோன குழந்தையை எடுத்துக் கொண்டு வந்து அரண்மனை வாசலில் நின்று அழலானான். தன் ஒரே மகன் திடீரென இறந்ததால் அரசனின் ஆட்சி சரியில்லை. என்றுதானே பொருளென அவன் கூறி இராமரது ஆட்சியைப் பற்றி குறை கூறினான்.

இதுகேட்டு இராமர் தன் மந்திரிகளையும், வசிஷ்டரையும் மற்றும் பல அந்தணர்களையும் அழைத்து அந்த பிராம்மணனின் துயரத்தைக் கூறினர். அப்போது நாரதர் "யாரோ தவம் செய்ய உரிமை பெற்றிராத ஒருவன் செய்து கொண்டு இருப்பதாலேயே இப்படி அகால மரணம் ஏற்பட்டுள்ளது" என இராமரிடம் கூறினார்.
 
இராமர் இலட்சுமணனை அழைத்து "நீ போய் அந்த பிராம்மணனுக்கு ஆறுதல் கூறு. அந்தக் குழந்தையின் உடலை எண்ணெயிலிட்டு பத்திரமாக வைத்திரு" எனக்கூறிவிட்டு புஷ்பக விமானம் ஏறி நாலபக்கமும் சென்று பார்க்கலானார்.

அப்போது தென் திசையில் ஒருவன் தவம் செய்வது கண்டு அவர் விமானத்தோடு கீழே இறங்கி அவனிடம் சென்றார். அவனிடம் அவர் "நான் இராமன். நீ யார்? ஏன் இப்படித் தவம் புரிகிறாய்? நீ தவம் செய்ய உரிமை பெற்றவனா?" எனக் கேட்டார்.


அப்போது தலைகீழாக நின்று தவம் செய்யும் அவன் "நான் பிறப்பால் தவம் செய்ய உரிமை பெற்றவனல்லன். என் பெயர் சம்பூகன். இந்த பூதஉடலோடு சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதற்காக தவம் செய்கிறேன்" என்றான். அப்போது இராமர் தன் வாளை உருவி அவன் தலையை வெட்டினார்.
உடனே, இராமர் மீது மலர்மாரி பொழியலாயிற்று. தேவர்கள் துந்துபி முழக்கம் செய்தனர். அவர்கள் "இப்படிச் செய்ததற்கு பிரதியாக நாங்கள் ஏதாவது வரம் கொடுக்கிறோம்" என்றனர்.

அப்போது இராமர் "என் நாட்டில் இறந்துபோன அந்தணனின் குழந்தை உயிர் பெறுமாறு செய்யுங்கள்" என்றார். தேவர்களும் "சம்பூகனின் தலை துண்டிக்கப்பட்டதுமே அக்குழந்தைக்கு உயிர் வந்து விட்டது" எனக்கூறி விட்டுச் சென்றனர்.

இராமர் அங்கிருந்து அகத்திய முனிவரது ஆசிரமத்திற்குச் சென்றார். அங்கு முனிவரும் அவரை உபசரித்து ஒரு அழகிய ஆபரணத்தைக் கொடுத்து அது தனக்கு கிடைத்த விதத்தைக் கூறலானார்.


ஒரு பெரிய காட்டில் ஒரு பெரிய குளம் இருந்தது. ஆனால், அக்காட்டில் ஒரு மிருகமோ அல்லது பறவையோ வசிக்கவில்லை. அக்குளக்கரையில் ஒரு ஆசிரமம் இருக்கவே அகத்தியர் அங்கு சென்றார். அன்றைய இரவுப் பொழுதை அதில் கழித்துவிட்டு மறுநாள் காலையில் அவர் குளத்தில் குளிக்கச் சென்றார். அப்போது அதன் கரையில் உயிரற்ற உடல் ஒன்று கிடந்தது.

அந்த மனினின் உயிர் எப்படிப் போயிற்றென அகத்தியர் யோசித்துக் கொண்டிருக்கையில் ஆகாயத்திலிருந்த ஒரு விமானம் அங்கு வந்து இறங்கியது. அதில் ஒரு தேவனும் அவனோடு பல அப்சரஸ்திரீகளும் இருந்தனர். சிலர் பாட, வேறு சிலர் ஆடிக்கொண்டு இருந்தனர்.

அந்த தேவன் விமானத்திலிருந்து வந்து கரையில் கிடந்த பிணத்தைச் சாப்பிட்டுவிட்டு குளத்தில் கைகால்களை அலம்பிக் கொண்ட திரும்பினான். அப்போது அகத்தியர் "யாரப்பா நீ? நீ ஏன் பிணத்தைத் தின்கிறாய்? பார்த்தால் உயர் குலத்தைச் சேர்ந்தவன் போலக் காணப்படுகிறாய்" எனக் கேட்டார்.

அதற்கு அவனும் "நான் விதர்ப்ப மன்னனான சுதேவனின் மகன். என் பெயர் சுவேதன். சுதேவனுக்கு இரண்டு மனைவிமார்கள். அவர்களில் மூத்த ராணிக்குப் பிறந்தவன் நான். இளைய ராணிக்குப் பிறந்தவன் சுரதன். நான் என் தந்தைக்குப் பிறகு வெகு காலம் நாட்டை ஆண்டு என் தம்பிக்குப் பட்டாபிஷேகம் செய்துவிட்டு தவம் செய்யக் காட்டிற்கு வந்தேன். கடுந்தவம் புரிந்து பிரம்மலோகத்தையும் அடைந்தேன். ஆனால், அங்கு எனக்குப் பசி ஏற்பட்டது. பிரம்மாவிடம் போய் என் பசியைக் கூறி "இங்கு வந்தும் எனக்குப் பசி எடுக்க நான் ஏதாவது தப்பிதம் செய்தேனா?" எனக் கேட்டேன்" என்று கூறி மேலும் தன் கதையைத் தொடர்ந்தான்.

பிரம்மாவும் "பிராணிகளே இல்லாத காட்டில் இருந்தும் அதிதிகளுக்கு நீ உணவிடாமலும் கடுந்தவம் செய்தாய். யாருக்குமே பசி தீர்க்க உணவு கொடாததால் உனக்கு இந்தத் தீராப்பசி ஏற்பட்டுள்ளது. காட்டில் உன் பூத உடல் உள்ளது. நீ தினமும் அதனைத் தின்று உன் பசியைத் தீர்த்துக்கொள். அப்போது அகத்திய முனிவர் வந்து தம் மகிமையால் உன் பசியை முழுவதுமாக போக்குவார்" எனக் கூறினார்.

சுவேதன் தன் கதையைக் கூறிவிட்டு தன் முன் வந்திருப்பவர் அகத்தியரென அறிந்து கொண்டு, "சுவாமி, என் பசியைப் போக்குங்கள். அதற்குப் பிரதியாக நான் இந்த திவ்விய ஆபரணத்தைத் தங்களுக்குக் காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன். இதை வைத்திருப்போருக்கு தினமும் தங்கமும், நவரத்தினங்களும், ஆடைகளும், உணவுப் பொருள்களும், ஆபரணங்களுமாகக் கொடுத்துக் கொண்டே இருக்கும்" என்றான். 

அகத்தியரும் அதனை ஏற்றுக்கொண்டு அவனது தீராப் பசியைத் தீர்த்து வைத்தார். சுவேதனும் பசி தீர்ந்தவனாக சொர்க்கலோகத்திற்குச் சென்றான்.

அப்போது இராமர் "சுவேதன் தவம் செய்த காட்டில் ஏன் ஒரு ஜீவராசி கூட இருக்கவில்லை?" என அகத்தியரிடம் கேட்க அவரும் கூறலானார்.


கிருதயுகத்தில் மனுசக்கரவர்த்தி இக்ஷ்வாகுவிற்கு பட்டம் கட்டிவிட்டு அரசியல் பற்றி விளக்கிக் கூறிவிட்டு பிரம்மலோகத்திற்குச் சென்றுவிட்டார். இக்ஷ்வாகுவிற்கு நூறு புதல்வர்கள் பிறந்தனர். அவர்களில் கடைசி மகன் தண்டன். அவன் சற்று மந்த புத்தி உடையவன். அவனுக்கு இக்ஷ்வகு விந்திய மலைப்பகுதியில் ஒரு நாட்டைக் கொடுத்திருந்தார். அவன் அங்கு மதுமந்தம் என்னும் நகரை அமைத்து சுக்கிராச்சாரியாரைத் தன் குருவாக இருக்கச் செய்தான்


 அந்த சுக்கிரருக்கு அரஜை என்னும் அழகிய பெண்ணொருத்தி இருந்தாள். ஒருநாள் காட்டில் தண்டன் அரஜையைக் கண்டு அவளைத் தான் அடைய விரும்புவதாக அவன் கூறவே அரஜையும் "நான் சுக்கிரரின் புதல்வி. நீங்கள் என் தந்தையின் கோபத்திற்கு ஆளாகி சாபம் பெற வேண்டாம்" என எச்சரித்தாள்.

ஆனால், தண்டன் அவளை மீண்டும் வற்புறுத்தலானான். அவளது விருப்பத்திற்கு மாறாக அவளை கட்டித் தழுவினான். இது சுக்கிரருக்குத் தெரிந்து விட்டது. தண்டன் மதுமந்த நகரை அடைந்தபோது ஏழுநாட்கள் இடைவிடாது புழுதிமாரி வீசி அங்கு எதுவுமே இல்லாமல் நாசமாகி விட்டது. இது சுக்கிரரின் சாபம். இந்த சாபத்தைப் பற்றி கேட்டதுமே ஜீவராசிகள் மதுமந்தத்தைச் சுற்றி நூறு யோசனை தூரம் விலகியே இருந்தன. யாரும் அப்பட்டணத்திற்குப் போக துணியவில்லை. இதுதான் அப்பகுதியில் ஜீவராசி இல்லாது போனதற்குக் காரணம்.


அகத்தியர் கூறிய இக்கதைகளை எல்லாம் கேட்ட பிறகு இராமர் அவரிடம் விடை பெற்றக் கொண்டு அயோத்திற்குத் திரும்பிச் சென்றார்.



0 comments:

Post a Comment

Flag Counter